Daily Archives: நவம்பர் 22nd, 2009

தூர தேசத்து துயரங்கள் : உரத்த சிந்தனை

உலகின் 180 நாடுகளில் மூன்று கோடிக்கு மேல் இந்தியர்கள் உள்ளனர். இதில், ஒரு கோடியே 70 லட்சம் பேர் அந்தந்த நாடுகளில் குடியுரிமை பெற்றுள்ளனர். வெளிநாடுகளுக்கு வேலை தேடி செல்பவர்கள் போலி ஏஜன்டுகளிடம் சிக்கி தவிக்கும் நிலையும், படிக்கச் செல்லும் மாணவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதும், குடியுரிமை பெற்றுள்ள இந்தியர்களுக்கு கல்வி வேலைவாய்ப்புகளில் முக்கியத்துவம் கிடைக்க போராட வேண்டிய நிலையும் தற்போது தலை தூக்கி வருகிறது.

இந்தியாவிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, கனடாவுக்கும், சவுதி அரேபியா, துபாய், குவைத் உட்பட வளைகுடா நாடுகளுக்கும் வேலைக்காக செல்பவர்கள், போலி ஏஜன்டுகளால் ஏமாற்றப்படுவது அதிகரித்துள்ளது. வளைகுடா நாடுகளில், பல்வேறு நகரங்களில், 2500 தமிழர்கள் வேலையின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டு, இந்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகங்கள் மூலம் அவர்களின் நிலை விசாரிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் உள்ளன. இதில், சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் போலி ஏஜன்டுகளால் ஏமாற்றப்பட்ட 400 இந்தியர்கள் வேலையின்றி தவித்து வருவது குறித்து கனிமொழி எம்.பி., சமீபத்தில் ராஜ்யசபாவில் குரல் எழுப்பியதால், மத்திய அரசு அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மும்பை போலி ஏஜன்டுகளை நம்பி மலேசியாவுக்கு வேலைக்கு சென்ற 80 பேர் அங்கு கொத்தடிமைகள் போல் நடத்தப்பட்டு, உயிர் பிழைத்தால் போதும் என்ற நிலையில் கடந்த மாதம் தமிழகம் வந்தடைந்தனர். பஞ்சாபிலிருந்து, இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கு வேலைக்கு சென்ற 63 பேர் ஏமாற்றப்பட்டு தாயகம் திரும்ப வழியின்றி, ஆறு வருடங்களாக வீதிகளில் தவித்து வருவதாகவும், இதில் ஐந்து பேர் அங்கு இறந்து போனதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளிநாடுகளுக்கு அரசு மூலம் அனுப்பப்படுபவர்கள் மற்றும் படித்தவர்களுக்கு அவ்வளவாக பிரச்னையில் சிக்குவதில்லை. “எல்லாரும் வெளிநாடு போய் சம்பாதிக்கின்றனர்; நாமும் போவோம்’ என்று, படிக்காதவர்கள் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையால் அங்கு என்ன சம்பளம், என்ன வேலை, பாதுகாப்பு உத்தரவாதம் பற்றிய அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல், போலி ஏஜன்டுகளின் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, அவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கொடுத்து வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். போலி ஏஜன்டுகளிடம் ஏமாறாமல் இருக்கவும், வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் உள்ள கஷ்ட, நஷ்டங்கள் குறித்தும், நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் மூலம் மக்கள் மத்தியில் குறிப்பாக கிராமப்புறங்களில் விழிப்புணர்வு பிரசாரம் செய்ய வேண்டும்.

துபாய், சவுதி அரேபியா உட்பட 17 வெளிநாடுகளில் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்படுபவர்களை மீட்க, “இந்தியர்கள் நல நிதி’க்காக மத்திய அரசு நான்கு கோடியே 80 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது. இத்துடன் விழிப்புணர்வு பிரசாரத்திற்கும் சேர்த்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். விழிப்புணர்வு பிரசாரத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், சமூக சேவை அமைப்புகளும் உறுதுணையாக இருக்க வேண்டும். ஏமாற்றும் ஏஜன்டுகளை தண்டிக்க போதுமான அளவில் தற்போதைய சட்டத்தில் இடமில்லை. ஏமாற்றும் ஏஜன்டுகளைத் தண்டிக்க, அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகளைத் தண்டிக்க, குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கு இனவெறி தாக்குதலுக்கு உள்ளாவதும் தொடர்கிறது.

முன்னர் வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய மாணவர்களில் 71 சதவீதம் பேர் அமெரிக்காவுக்கும், 8 சதவீதம் பேர் பிரிட்டனுக்கும், 7.6 சதவீதம் பேர் ஆஸ்திரேலியாவுக்கும் சென்றனர். அமெரிக்கா செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது 56 சதவீதமாகக் குறைந்து, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நியூசிலாந்து மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் செல்வது அதிகரித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் படிப்பு உதவி வசதி, படிக்கும் போதே வேலையும் தேடிக்கொள்ளும் நிலையும் உள்ளதால், இந்தியாவைச் சேர்ந்த 95 ஆயிரம் மாணவர்கள் தற்போது அங்கு படித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக, இந்திய மாணவர்கள் மீது, 1400 தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. பல இடங்களில் இனவெறி தாக்குதலும் நடத்தப்பட்ட போதும் கூட, அந்நாட்டு போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை இனவெறி தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இந்திய மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. பிரிட்டனில் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பதற்காக வழங்கப்பட்ட விசாக்களுக்கான விதிமுறைகளை அந்நாடு, கடந்த மார்ச் மாதம் முதல் மிகவும் கடுமையாக்கியுள்ளதால், கடந்த மூன்று மாதங்களில் 41.9 சதவீதம் இந்திய மாணவர்களின் விசா நிராகரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இந்தியர்களுக்கு, இந்தியர்களாலேயே பிரச்னை ஏற்படும் நிலையும் தலை தூக்கியுள்ளது. மலேசியாவில் இந்துக்களுக்கு சம உரிமை கோரியும், இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை தடுக்கவும் அங்குள்ள இந்தியர்கள் ஒன்றிணைந்து, “இன்ட்ராப்’ என்ற அமைப்பு மூலம் இரண்டாண்டுகளுக்கு முன் கோலாலம்பூரில் போராட்டம் நடத்தினர். இதில், 15 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். 17 மாதங்கள் சிறையிலிருந்து வெளியே வந்த இன்ட்ராப் தலைவர்களின் ஒருவரான உதயகுமார், “மனித உரிமை கட்சி’யை கடந்த மே மாதம் துவங்கினார். “ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் இந்தியர்களின் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு குறைகளை தீர்த்து வைக்க முயற்சிக்கவில்லை. மலேசியாவில் உள்ள இந்தியர்களின் உரிமைக்காக போராடுவதே கட்சியின் வேலையாக இருக்கும்’ என்று, உதயகுமார் அறிவித்துள்ளார். இது, வரவேற்கப்படக் கூடிய முடிவு என்றாலும் ஆளும் கட்சி அதிருப்தியில் உள்ளதால், இந்தியர்களின் ஒற்றுமை பலத்தை மறைமுகமாகக் குறைக்கும் நோக்கில் தனேந்திரன் தலைமையில், “மலேசிய மக்கள் சக்தி’ என்ற பெயரில் புதிய கட்சியை அந்நாட்டு பிரதமர் துவங்கி வைத்துள்ளதாகவும் மக்கள் குறைபட்டுக் கொள்கின்றனர்.

பல கட்சி கூட்டணி ஆட்சி நடக்கும் மலேசியாவில், இந்தியர்கள் 20 லட்சம் பேர் உள்ளனர். இது, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8 சதவீதம். அரசியல் மூலம் தனித்து ஆட்சியைப் பிடிப்பதற்கான சாத்தியக் கூறுகள் இந்திய வம்சாவளியினருக்கு இல்லை. ஆளும் அரசை அனுசரித்தே காரியம் சாதித்துக் கொள்ள வேண்டிய நிலையே உள்ளது. எனவே, வெளிநாடுகளுக்கு பிழைக்கச் செல்பவர்கள் எப்போதும் உஷாராக இருப்பது நல்லது.

– வீ.சக்கரபாணி, பத்திரிகையாளர்

முதுகுவலிக்கு சிறந்த மருந்து

முதுகு வலிக்கு சிறந்த மருந்து என்று தேடிப்போக வேண்டாம். ரொம்பவும் சுலபமாக நாமே செய்யக்கூடிய யோகாவை கற்றாலே போதும். அமெரிக்காவில், இதுபோன்ற குறைபாடுகளை தீர்க்க யோகாவை கற்போர் எண் ணிக்கை தான் அதிகரித்து வருகிறதாம்.
தரையில் குழந்தை போல காலை உள்மடக்கி உட்கார வேண்டும்; அப்படியே தலையை முன்பக்கமாக தரையில் பதிக்க வேண்டும்; இப்போது இரு கைகளையும் முன்பக்க நீட்டி பதிக்க வேண் டும். இப்படி சில சாதா யோகாவை கற்றால் போதும், எந்த வலியும் வராது. அப்புறம் எதுக்கு, “ஆ… ஊ… வலியா போயே போச்சு’ என்று விளம்பரம் பண்ணும் வலி நிவாரணி எல்லாம்.
75 ஆயிரம் புது கேஸ் வருது
பெண்கள், 40 வயதை தாண்டி விட்டால் சற்று உஷாராக இருப்பது நல்லது. அதிலும், மாதவிடாய் நிற்கும் போது கண்டிப்பாக உடலை பரிசோதித்துக்கொள்வது மிக முக்கியம். குறிப்பாக, மார்பக புற்றுநோய் பாதிப்பு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளும் மமோகிராம் பரிசோதனை செய்து கொண்டே ஆக வேண்டும். மார்பக புற்றுநோய் பாதிப்பு ஓசைப் படாமல் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இப்போது ஆண்டுக்கு 75 ஆயிரம் புது நோயாளிகள் வருவதாக கணக்கெடுப்பு கூறுகிறது.
60 டெசிபல் தாண்டினா
சத்தமாக சினிமா பாட்டு கேட்க, இளம் வயதில் பிடிக்கும்; அதுவே, 40 வயதை தாண்டிவிட்டால், எரிச்சலாக வரும். காரணம், காதுக்கு பாதிப்பை தருவதால் தான். காதை மட்டும் பாதிப்பதில்லை, சத்தம் அதிகமானால், ரத்த அழுத்தமும் அதிகரிக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இளம் வயதினருக்கு ரத்த அழுத்தம் வருவதற்கு சத்தம் அதிகமான இடங்களில் இருப்பதும் ஒரு முக்கிய காரணம். அதனால், சத்தமில்லா இடங்களில் இருப்போருக்கு பி.பி., வராதாம்.
நெடிய மனிதரா, குஷி தான்
ஆரோக்கியம், கல்வி, வருமானம் , வசதி உள்ளவர்கள் பெரும்பாலோர் உயரமாக இருப்பது, சர்வதேச அளவில் எடுக் கப்பட்ட அளவை ஆய்வில் உறுதி செய் யப்பட்ட ஒன்று தான். மனித தோற்றத் துக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய் வாளர்கள் சமீபத்தில் கூட கூறியுள்ளனர்.
அதிகபட்சம் ஆறடி வரை உள்ளவர்கள் நிலையை விட, ஏழடி உள்ளவர்கள் நிலை சிறப்பாக இருக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சத்துணவு இல்லாமல் பரம்பரையாக இருந்தால், அவர்கள் வாரிசுகள் குட்டையாகத்தான் இருப்பர் என்பதும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.
டீன் ஏஜினரே உஷார்
கருத்தடை சாதனங்கள் ஏகப்பட் டது வந்துவிட்டதால், கருக்கலைப்பு செய்வது குறைந்து விட் டது; 197 நாடுகளில் எடுத்த கணக்கில், பத்தாண்டுக்கு முன் நாலரை கோடியாக இருந்த கருக்கலைப்பு, நான்கு கோடியாக இறங்கியுள்ளது. அதேசமயம், ஓசைப்படாமல் கருக்கலைப்பு செய்ய முயற்சிக்கும் பெண்கள் எண்ணிக்கை உலகம் முழுவதும் இரண்டு கோடியாக உயர்ந்துள்ளது. திருமணத்துக்கு முன் உறவு, தவறான உறவு போன்றவை அதிகரிப்பதையே இது காட்டுகிறது.
ரிடையரா… முடங்காதீங்க
நீங்க ரிடையர் ஆகப்போறீங்களா? அப்படி என்றால், வீட்டில் சும்மா இருக் காதீங்க. ஏதாவது ஒரு பகுதிநேர வேலையிலாவது சேர்ந்து விடுங்க; அப் போது தான் உடல், உள்ளத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. இல்லாவிட்டால், வீட்டில் “டிவி’ பார்த்து முடங்கி விட்டால், ஆரம்பித்துவிடும் தொல்லை. அப்படியே வேலை கிடைக்காவிட்டாலும், சேவை பணியில் இறங்கி விடுங்கள். “அறுபது வயதை கடந்தவர்கள் பலருக்கும் உடல் பிரச்னை வரக்காரணம், அவர்கள் முடங்கி விடுவதால் தான். வழக்கமாக அவர்கள் செய்யும் பணிகளை செய்து கொண்டே இருந்தால், உடலில் ஆரோக்கியம் குறையாது’ என்று பிரிட்டன் ஆய்வு தெரிவிக்கிறது.
படிச்சா ஆயுள் அதிகமாம்
சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் சில லட்சம் பேரிடம் ஆன்-லைனில் எடுத்த சர்வே அடிப்படையில் வெளியிட்ட ஆய்வுத் தகவல்கள் இதோ:
கணவனுக்கு ஈடாக இல்லாவிட்டாலும், படித்த மனைவிக்கு எப்போதும் ஆயுள் அதிகமாக இருக்கும். படித்தவரை திருமணம் செய்தவரை விட, படிக்காத மனைவி ஆயுள் ஒன்றரை மடங்கு குறைவாகவே உள்ளது. அதுபோல, படிக்காத கணவனை “டும்டும்’ கட்டிய படித்த மனைவியால் குடும்பத்தில் அந்தஸ்து உயர்கிறது. சுகாதாரமும் அதிகரிக்கிறது. காரணம், படித்ததால்தான். அதனால், வேலைக்கு போகாவிட்டாலும், பெண்கள் கல்வி கற்க வேண்டும் என்று சொல்வதன் நோக்கம் இதுதான்.

ஒழுக்கமான வாழ்க்கை! (ஆன்மிகம்)- நவ., 23- சாய்பாபா பிறந்த நாள்


மனிதனாக பிறப்பவன், ஒழுக்கமான வாழ்க்கை வாழ வேண்டும்; நேரத்துக்கு எதையும் செய்து முடிக்க வேண்டும். ஒழுக்கமான வாழ்க்கைக்கு அடிப்படை ஆன்மிகம். ஆன்மிகத்தை நம்பிக்கையுடன் கற்பவர்கள், ஒழுக்கத்தை தங்கள் வாழ்க்கையின் அணிகலனாக்கிக் கொள்கின்றனர்.
சாய்பாபா வசிக்கும் புட்டபர்த்திக்கு சென்று ஒரு வாரம் தங்கினால், போதும்… நேரம் தவறாமை, சரியான நேரத்துக்கு சாப்பிடுதல், இறை வணக்கம் செய்தல் ஆகிய அடிப்படை குணங்கள் நம்மோடு ஒட்டிக்கொண்டு விடும்; அது, நமது அன்றாட வாழ்க்கைக்கு பெரிதும் பயன்படும். புட்டபர்த்தியில் சாய்பாபா அருளாசி செய்யும் இடத்திற்கு, “பிரசாந்தி நிலையம்’ என்று பெயர். அதிகாலை 4.00 மணிக்கே எழுந்து, நீராடி, பிரார்த்தனை அறைக்குச் செல்ல தயாராகி விடுகின்றனர் பக்தர்கள். 4.40 மணிக்கு 12 முறை பெரிய மணி அடிக்கிறது. அறைகளில் தங்கியிருக்கும் பக்தர்கள், வரிசையாக அங்கு செல்கின்றனர். 4.50 மணிக்கு ஐந்து முறை மீண்டும் மணி ஒலிக்கிறது. அப்போது, பிரார்த்தனை அறைக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். ஐந்து மணிக்கு பிரார்த்தனை அறை மூடப்பட, உடனே, “ஓம்’ என்னும் பிரணவமந்திரத்தை, ராகமாக 21 முறை உச்சரிக்கின்றனர்.

ஓம்காரத்தை உச்சரிப்பதன் மூலம் வெளிப்படும் ஆன்மிக அதிர்வுகள், அதிகாலையில் வீசும் காற்றில் பரவி, உலகம் முழுவதிலும் ஆன்மிகத்துடிப்பை உண்டாக்கும் என்கின்றனர் பக்தர்கள். இதையடுத்து, இறைவனைத் துயிலெழுப்பும் சுப்ரபாதம் தாளத்துடன் பாடப்படுகிறது. பக்தர்கள் பஜனை வாத்தியங்களுடன் பிரசாந்தி நிலைய நுழைவு வாயிலில் உள்ள விநாயகர் கோவிலுக்குச் செல்வர். அங்கிருந்து புறப்படும் பஜனை, பிரசாந்தி நிலையத்தைச் சுற்றி வந்து மீண்டும் விநாயகர் கோவிலையே அடைகிறது.
விநாயகருக்கும், அருகிலுள்ள முருகப்பெருமானுக்கும் பூஜை செய்யப்படுகிறது. இதையடுத்து, மக்களுக்கு சாய்பாபா தரிசனம் தரும் நேரம். பணக்காரர், ஏழை, படித்தவர், பாமரர் என்ற வித்தியாசம் இல்லாமல் முந்தியவர்களுக்கு முந்திய இடம் என்ற அடிப்படையில், அவரவர் இடங்களில் அமர்ந்து, எவ்வித சப்தமும் இல்லாமல் சாய்பாபா வருகை தரும் போது அவரை வணங்குகின்றனர்.
இனிய வாத்திய இசையுடன், பஜனைப் பாடல்கள் தொடர்ந்து ஒலித்து, மனதை பரவசப்படுத்துகிறது. இறைவனின் நினைவைத் தவிர, வீடு, வாசல். மனைவி, மக்கள், உற்றார், உறவினர் என்ற பந்தமெல்லாம் மறந்த நிலையில் மனதில் சாந்தி நிலவுகிறது.
காலை 9 மணி வரை, இப்படியே வரிசையாக நிகழ்ச்சிகள். கடைசியாக, மங்கள ஆரத்தி எடுக்கப்பட்டதும், அவரது இருப்பிடத்திற்கு திரும்புகிறார் சாய்பாபா. பக்தர்கள் வரிசையாக வெளியேறி, உணவருந்த செல்வர். உணவருந்தும் இடத்திலும் எவ்வித குழப்பமும் கிடையாது. “நான் முந்தி, நீ முந்தி’ என்பதெல்லாம் இங்கு இல்லை. எல்லாருமே வரிசையில் நிற்கின்றனர். வந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் உணவு கிடைக்கிறது. குறிப்பாக, விழா நாட்களில் சிறப்பு பந்தல் அமைக்கப்பட்டு, அங்கேயே அன்னதானம் அளிக்கப்படுகிறது.
புட்டபர்த்திக்கு வருபவர்கள், ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்கின்றனர். பொறுமையும், அன்புமே, பாபா, மக்களுக்கு அறிவித்துள்ள இரண்டு பொக்கிஷங்கள். புட்டபர்த்தி வரும் பக்தர்கள், இவற்றைப் பெற்று திரும்புவதை அவர்களின் முகமலர்ச்சியில் இருந்தே காணலாம்.

அமெரிக்க மேயரான முதல் சீக்கியர் :’பாங்க்ரா’ நடனத்துடன் கோலாகலம்

யுபா சிட்டி : அமெரிக்காவில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஒரு நகரத்தின் மேயராக பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட சீக்கியர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவரது பதவியேற்பு விழா, “பாங்க்ரா’ நடனத்துடன் கோலாகலமாக நடந்தது.

அமெரிக்காவின், கலிபோர்னியா மாகாணத்தில் யுபா சிட்டி என்ற நகரம் உள்ளது. இங்கு இந்தியர்கள் அதிகம் வசிக்கின்றனர். அமெரிக்காவில் முதல் முதலாக இந்தியர்கள் இந்த நகரத்தில் தான் குடியேறியதாக கூறப்படுகிறது. சீக்கியர், இந்து, முஸ்லிம் உள்ளிட்ட பல்வேறு மதங்களை சேர்ந்த, 15 ஆயிரம் இந்தியர்கள் இங்கு வசிக்கின்றனர். இவர்களில், பெரும்பான்மையானோர் பஞ்சாபை பூர்வீகமாக கொண்டவர்கள்.இந்த நகரத்தில் மொத்த மக்கள் தொகை 65 ஆயிரம் தான். இந்த நகரத்தின் மேயராக, பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட சீக்கியர் காஷ்மீர் கில் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இவரது பதவியேற்பு விழா, யுபா சிட்டியில் சமீபத்தில் நடந்தது. யுபா சிட்டியை தவிர, அமெரிக்காவின் மற்ற நகரங்களில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரும், பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். விருந்தினர்களுக்கு, சமோசா, சென்னா மசாலா, சப்பாத்தி போன்ற இந்திய உணவு வகைகள் சுடச் சுட பரிமாறப்பட்டன. பஞ்சாபின் பிரபலமான “பாங்க்ரா’ நடனத்துடன், இசை நிகழ்ச்சியும் அங்கு நடந்தது.

இதுகுறித்து காஷ்மீர் கில் கூறியதாவது:யுபா சிட்டியின் மேயராக பதவியேற்றுள்ளதன் மூலம், புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. இந்த பதவியை மிகப் பெரிய கவுரவமாக கருதுகிறேன். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து, 100 ஆண்டுகளுக்கு முன்பு என் முன்னோர்கள் இங்கு குடியேறினர். இங்கு வசிப்பதற்காக பெருமைப்படுகிறேன். வாழ்நாளின் எஞ்சியுள்ள காலத்தையும் இங்கு கழிக்க திட்டமிட்டுள்ளேன்.இவ்வாறு கில் கூறினார்.அமெரிக்க நகரத்தின் முதல் சீக்கிய மேயர் என்ற பெருமையும், கில்லுக்கு கிடைத்துள்ளது.

இ – மெயில்’ ஆயுசு இன்னும் பத்தாண்டு தான்!

அகண்ட அலைவரிசை வழங்கும் பிரிட்டனில் உள்ள “டாக்டாக்’ நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது.அந்த ஆய்வில் கூறப் பட்டுள்ளதாவது:இப்போது பிரிட்டனில் 15-24 வயதினர் 86 சதவீதமும், 65 வயதுக்கு மேற் பட்டோர் 98 சதவீதமும், 45-64 வயதுக்குட் பட்டோர் 96 சதவீதமும் இ-மெயிலைப் பயன்படுத்துகின்றனர். இ-மெயில் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக பரிணாமம் அடைந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது.

இருப்பினும் குறைந்த வேகம், அதிக வசதிகள் இன்மை, எளிமை மற் றும் புதுமையின்மை இவற்றால் இளைய தலைமுறை இ-மெயிலை விட்டு விலக ஆரம்பித்துவிட்டனர்.அதற்குப் பதிலாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த வலைத்தளங் களில் ஒரே செய்தியை தங்களது நண்பர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடிகிறது. அதிக நேரம், செய்தியை தட்டச்சு செய்வது, பலருக்கு அடுத்தடுத்து அனுப்புவது போன்ற தொந்தரவுகள் கிடையாது.இ-மெயிலை வயதானோர்தான் இப்போது அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அது மூப்படைந்துவிட்டது எனலாம். இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் இ-மெயில் காணாமல் போய்விடும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

லண்டன் : அகண்ட அலைவரிசை வழங்கும் பிரிட்டனில் உள்ள “டாக்டாக்’ நிறுவனம் சமீபத்தில் ஓர் ஆய்வு நடத்தியது.அந்த ஆய்வில் கூறப் பட்டுள்ளதாவது:இப்போது பிரிட்டனில் 15-24 வயதினர் 86 சதவீதமும், 65 வயதுக்கு மேற் பட்டோர் 98 சதவீதமும், 45-64 வயதுக்குட் பட்டோர் 96 சதவீதமும் இ-மெயிலைப் பயன்படுத்துகின்றனர். இ-மெயில் கடந்த 20 ஆண்டுகளில் படிப்படியாக பரிணாமம் அடைந்து இன்றைய நிலைக்கு வந்துள்ளது.

இருப்பினும் குறைந்த வேகம், அதிக வசதிகள் இன்மை, எளிமை மற் றும் புதுமையின்மை இவற்றால் இளைய தலைமுறை இ-மெயிலை விட்டு விலக ஆரம்பித்துவிட்டனர்.அதற்குப் பதிலாக ட்விட்டர், பேஸ்புக் போன்ற சோஷியல் நெட்வொர்க் என்ற சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்த வலைத்தளங் களில் ஒரே செய்தியை தங்களது நண்பர்கள் பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்ப முடிகிறது. அதிக நேரம், செய்தியை தட்டச்சு செய்வது, பலருக்கு அடுத்தடுத்து அனுப்புவது போன்ற தொந்தரவுகள் கிடையாது.இ-மெயிலை வயதானோர்தான் இப்போது அதிகமாகப் பயன்படுத்துகின்றனர். அது மூப்படைந்துவிட்டது எனலாம். இப்படியே போனால் இன்னும் 10 ஆண்டுகளில் இ-மெயில் காணாமல் போய்விடும். இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அக்னி – 2 ஏவுகணை -( 23 ம் தேதி ) விண்ணில் செலுத்தி சோதனை


அணு ஆயுதம் சுமந்து சென்று எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் அக்னி – 2 ஏவுகணையை இந்தியா நாளை ( 23 ம் தேதி ) விண்ணில் செலுத்தி சோதனை செய்கிறது . சமீப கால தளவாட உலகில் பாதுகாப்பு , முக்கிய விஷயமாக கருதப்படுகிறது. இதற்கென உலக அளவில் வல்லரசு நாடுகள் ஆயிரம் கோடிக்கணக்கில் செலவழித்து வருகிறது. கடந்த சில நாடகளுக்கு முன்னதாக சீனா 60 ம் ஆண்டு விழா கொண்டாடிய தருணத்தில் ராணுவ அணிவகுப்பு மற்றும் ஆயுதங்கள் குவிப்பை உலகிற்கு காட்டி பெருமை கொண்டது.

இந்நேரத்தில் இந்தியாவும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளை விண்ணில் செலுத்தி தங்களது படைக்கு பலம் சேர்த்து வருகின்றனர். மத்திய ரக அக்னி -2 ஏவுகணை உள்நாட்டில் தயாரிக்கப்பட்டது. இது 3 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள எதிரிகளின் இலக்கை தாக்கும்.

முதல் முறையாக இரவு நேர சோதனை : இது 17 டன் எடை கொண்டதாகும். 20 மீட்டர் நீளம் கொண்டதாகும். தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும். இந்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சி (டி.ஆர்.டி.ஓ.,) துறையினரும் இணைந்து இந்த ஏவுகணையை தயாரித்துள்ளனர். நாளை ஒரிசா மாநிலம் பாலசோர் கடல் பகுதியில் இருந்து இந்த சோதனை நடத்தப்படுகிறது. இதில் ஒரு விசேஷம் என்னவெனில் இந்த முறை இரவில் சோதனை நடத்தப்படுகிறது என்பது முக்கிய விஷயம் ஆகும். இது முதல் முறையாக முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.

கிருபானந்த வாரியார்- குடும்பம் ஒரு மரம்

* ஒரு மனிதனோடு பழகும் போது அளந்து பழக வேண்டும். பால் வாங்கும்போதும், துணி எடுக்கும் போதும் அளந்து தானே வாங்குகிறோம். அதுபோல், யாரிடம் பழகி னாலும் அளந்து பழகாவிட்டால் துன்பம் வந்து சேரும்.
* நம் உடம்பின் அளவுகோல் கண். கண்ணின் தன்மையைக் கொண்டே அவன் எப்படிப் பட்டவன் என்பதை கணக்கிட்டு விடலாம். மனிதனின் மனநிலையைக் கண்களே காட்டிக் கொடுத்து விடும்.
* இரவில் முறையாக தூங்கி ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. தூக்கம் வந்தால் ஒழிய படுக்கையில் படுப்பது கூடாது. தூக்கம் வராவிட்டால் மனதை உயர்நிலைக்கு இட்டுச் செல்லும் அறநூல்களையும், தர்மசாஸ்திரங்களையும் படியுங்கள்.
* குடும்பம் பசுமரத்தைப் போன்றது. அதில் மனைவி வேர். கணவன் அடிமரம். பிள்ளைகள் கிளைகள். அன்பு இலைகள். கருணை மலர்கள். அம்மரத்தில் விளையும் பழங்கள் தான் அறச்செயல்கள். மரங்கள் பலவிதமான உயிர்களுக்கும், பறவைகளுக்கும், மனிதர்களுக்கும் நிழலும், கனிகளும் தருவது போல, நமது குடும்பம் என்னும் மரத்தால் மற்றவர்கள் பயன்பெற வேண்டும்.