Advertisements

Daily Archives: நவம்பர் 24th, 2009

விண்டோஸ் 7-ல் கூடுதல் வசதியும் பாதுகாப்பும்


புத்தம் புதிய விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இன்னும் என்ன கூடுதல் வசதிகள் தர முடியும் என்று இந்த தலைப்பைப் பார்த்தவுடன் எண்ணலாம். விண்டோஸ் 7 செட்டிங்ஸ் அமைப்பினைச் சீர்படுத்தி, அதன் செயல்பாட்டினை மேம்படுத்த பல புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை இலவச புரோகிராம்களே. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். நீங்கள் இன்னும் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறவில்லை என்றாலும், இவற்றைக் குறித்து வைத்துக் கொள்வது, அல்லது டவுண்லோட் செய்து வைத்துக் கொள்வது நல்லது.

1. மைக்ரோசாப்ட் செக்யூரிட்டி எசன்ஷியல்ஸ் (http://www. crosoft.com/Security_Essentials)

விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு முன் வந்தவை போல, இந்த புதிய சிஸ்டத்திலும் மால்வேர், வைரஸ் மற்றும் ஸ்பைவேர் போன்ற கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு எதிரான பாதுகாப்பினை வழங்கும் வசதிகள் எதுவும் விண்டோஸ் 7 சிஸ்டத்துடன் தரப்படவில்லை. பயர்வால் ஒன்று இணைத்துத் தரப்பட்டிருந்தாலும், வைரஸ் புரோகிராம்களுக்கு எதிரான நடவடிக்கையை அதனால் எடுக்க முடியாது. எனவே தான் நாம் கட்டணம் செலுத்தி மெக் அபி அல்லது சைமாண்டெக் போன்ற வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை வாங்கிப் பயன்படுத்துகிறோம். ஆனால் இதே வேலையை மேற்கொள்ள மைக்ரோசாப்ட் தனியாக செக்யூரிட்ட் எசன்ஷியல்ஸ் என்ற புரோகிராமினைத் தருகிறது. வீடுகளில் வைத்துப் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களுக்கு இது மிகச் சரியான பாதுகாப்பினைத் தருகிறது. இதுவும் இலவசமாகக் கிடைக்கிறது. இதனை டவுண்ட்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். அல்லது எனக்கு தர்ட் பார்ட்டி ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தான் வேண்டும் என எண்ணுபவர்கள் ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை இலவசமாகப் பெற்று பயன்படுத்தலாம்.

2. நினைட் (Ninite):

எக்ஸ்பி சிஸ்டத்திலிருந்து விண்டோஸ் 7 க்கு மாறுபவர்கள், கிளீன் இன்ஸ்டால் செய்திட வேண்டியுள்ளது. அதாவது ஏற்கனவே இருந்த அனைத்து புரோகிராம்களையும் மீண்டும் ஒரு முறை,புதியதாக இன்ஸ்டால் செய்திட வேண்டும். இது ஒரு அநாவசியமான நேரம் எடுக்கும் வேலை ஆகும். இதற்குப் பதிலாக அனைத்து இலவச புரோகிராம் களையும் தானாக ஒரே வேலையாக இன்ஸ்டால் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இதனைத் தான் நினைட் தளம் மேற்கொள்கிறது. முதலில் http://www.ninite.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்று, உங்களுக்குத் தேவையான புரோகிராம்களைத் தேர்வு செய்திடுங்கள் (எ.கா. பயர்பாக்ஸ், ஸ்கைப், ஐட்யூன்ஸ் போல) அடுத்து நினைட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்கவும். பின் அனைத்து புரோகிராம்களும் உங்கள் கம்ப்யூட்டரில் எந்தவித கூடுதல் வேலையும் இல்லாமல் இன்ஸ்டால் செய்யப்படும். நினைட் பெர்சனல் பயன்பாட்டிற்கு இலவசமாகக் கிடைக்கும்.

3.விண்டோஸ் போட்டோ காலரி (Windows Photo Gallery)

விஸ்டாவினால் நாம் சந்தித்த ஒரு பெரும் பிரச்னை, அதன் இயக்க வேகம் ஆகும். ஏகப்பட்ட துணை புரோகிராம்கள் உள்ளிணைந்து வடிவமைக்கப் பட்டதால், அதனை உருவாக்கிய கோடிங் வரிகள் அதிகமாகி, விஸ்டா பெரிய அளவில் அமைந்தது. அதனால் அதன் இயக்க வேகம் தடைபட்டது. அதே போல விண்டோஸ் 7 சிஸ்டம் அநாவசியத்திற்குப் பெரிதாக அமைந்து விடாமல் இருக்க, மைக்ரோசாப்ட் சில புரோகிராம்களை விட்டுவிட்டது. அப்படி ஒரு புரோகிராம் தான் லைவ் போட்டோ காலரி. இது ஒரு போட்டோ மற்றும் வீடியோ பைல் மேனேஜர் மற்றும் போட்டோ எடிட்டர். இதனை http://download. live.com/photogallery என்ற முகவரியில் இருந்து டவுண்லோட் செய்து பதிந்து இயக்கலாம்.

4. விண்டோஸ் ஈஸி ட்ரான்ஸ்பர் (windows easy transfer) :

நீங்கள் எக்ஸ்பி அல்லது விஸ்டாவிலிருந்து, விண்டோஸ் 7க்கு மாறுபவர்களாக இருந்தால், விண்டோஸ் ஈஸி ட்ரான்ஸ்பர் என்னும் மைக்ரோசாப்ட் இலவசமாகத் தரும் புரோகிராமினை, நிச்சயம் இயக்கிப் பார்க்க வேண்டும். இந்த புரோகிராம் http://windows.microsoft.com/enus/windows7/products/ features/windowseasytransfer என்ற முகவரியில் கிடைக்கிறது. பைல்களை ஒரு கம்ப்யூட்டரிலிருந்து மற்றொன்றுக்கு மாறுவதற்கு உதவிடுகிறது. இதில் ஒரு பைல் எக்ஸ்புளோரர் தரப்படுகிறது. நாம் காப்பி செய்திடக் கொடுக்கும் பைல், அதன் டைரக்டரியிலிருந்து எடுக்கப்பட முடியாமல், மாற்றப்பட முடியாமல் இருந்தால், உடனே இந்த எக்ஸ்புளோரர் முடங்காது. அதற்குப் பதிலாக பைல் மாற்றத்தை முடித்து, இறுதியில் எந்த பைலை ஏன் மாற்ற முடியவில்லை என்ற அறிக்கையைத் தரும். இந்த புரோகிராம் பைல்களைக் காப்பி செய்வதில்லை. ஒரு கம்ப்யூட்டரிலிருந்து இன்னொன்றுக்கு, அவற்றை இணைக்கும் கேபிள் வழியே மாற்றுகிறது. கம்ப்யூட்டர் இணைக்கப்படவில்லை என்றால் பைல்களை எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் டிரைவிற்கு மாற்றலாம். இந்த புரோகிராமை இயக்க கேபிள் அல்லது மேலே சொல்லப்பட்ட இந்த டிரைவ்கள் தேவை.

5. அல்ட்டிமேட் விண்டோஸ் ட்வீக்கர் வி2 (Ultimate Windows Tweaker v2)

விண்டோஸ் 7 தொகுப்பின் இயக்கத்தினை, உங்கள் விருப்பப்படி அமைக்க வேண்டுமா? யூசர் இன்டர்பேஸ், நெட்வொர்க், செக்யூரிட்டி, சிஸ்டம் செட்டிங்ஸ் போன்றவை உங்கள் விருப்பத்தின்படி இயங்க வேண்டுமா! இந்த தொகுப்பைப் பயன்படுத்துங்கள். விஸ்டாவிலும் இதனைப் பயன்படுத்தலாம். இந்த புரோகிராம் உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எது என்பதை உணர்ந்து, அதற்கேற்ப உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும் வழிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம் பல செட்டிங்குகளை அமைக்கலாம். விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்களில் அல்ட்டிமேட் எடிஷன் பயன்படுத்துபவர்களுக்கு இது கூடுதல் வசதிகளைத் தருகிறது. இதனை http://www.thewindowsclub.com /ultimatewindowstweakerv2atweakuiforwindows 7vista#more1957 என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இறக்கிக் கொள்ளலாம்.

6.விண்ஸிப் 14 (WinZip):

விண்டோஸ் தொகுப்பிலேயே பைல்களைச் சுருக்கி விரிக்கும் வசதி இருக்கையில் விண்ஸிப் எதற்கு என்று நீங்கள் எண்ணலாம். இதே இதழில் விண்ஸிப் பதிப்பு 14 குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையைப் படிக்கவும். விண்டோஸ் இயக்கம் தரும் வசதிகளுடன் கூடுதல் வசதிகளை இந்த பதிப்பு தருகிறது. எனவே இதனையும் கூடுதலாகப் பதிந்து இயக்கிக் கொள்ளலாம். கிடைக்கும் தள முகவரி www.winzip.com

7. என்ஹேன்ஸ் மை 7 (EnhanceMySeven)

விண்டோஸ் விஸ்டா மற்றும் எக்ஸ்பியைக் காட்டிலும் விண்டோஸ் 7 பயன்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கலாம். ஆனால் அதனைத் தொடர்ந்து நிர்வகித்தல் என்பது சற்று சிரமமான காரியம் என்பது போகப் போகத் தெரியும். இந்த வகையில் உதவுவதற்கு என என்ஹேன்ஸ் மை 7 தயாரிக்கப்பட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. http://www.seriousbit.com/tweak_ windows_7/ என்ற தளத்தில் இது கிடைக்கிறது. இதன் மூலம் எந்த பைல்கள் ஸ்டார்ட் அப் போல்டரில் இருக்க வேண்டும் என்பதனைத் தீர்மானிக்கலாம். ஹார்ட் டிரைவ் செயல்படும் விதம், வெப்ப நிலை ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். ரிஜிஸ்ட்ரியில் மாற்றங்களை ஏற்படுத்தும் வேலையையும் மேற்கொள்ளலாம்.

8. இமேஸ் ரீசைஸர் (Image Resizer Powertoy Clone):

விண்டோஸ் 7 இயக்கத்தில் படங்களின் அளவை மாற்றி அமைக்க வேண்டுமா! இந்த இமேஜ் ரீசைஸர் புரோகிராம் இதற்கு உதவி வேலையை எளிதாக்குகிறது. இதனை இன்ஸ்டால் செய்த பின், பட பைல் ஒன்றின் ஐகான் மீது ரைட் கிளிக் செய்தால், அதில் நான்குவித அளவுகளுக்கான (small (640 by 480); medium (800 by 600); large (1024 by 768); மற்றும் handheld PC (240 by 320)) மெனு கிடைக்கும். இதில் தேவையானதைத் தேர்ந்தெடுத்தவுடன் அந்த அளவில் படம் கிடைக்கும். இவை தவிர நீங்கள் செட் செய்திடும் அளவிலும் படங்களை அமைக்கலாம். இந்த புரோகிராமினை http://imageresizer.codeplex.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து இலவசமாகப் பெறலாம்.

9. சிஸ்ட்ராக் டூல்ஸ் (Systerac Tools):

விண்டோஸ் 7 சிஸ்டம் எந்தவித பிரச்னையும் இன்றி இயங்க சிஸ்ட்ராக் டூல்ஸ் 16 டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் இயக்கம், தோற்றம், மெமரி பயன்பாடு, சிஸ்டம் கிளீன், பைல் ஷ்ரெடிங் எனப் பல வசதிகளைத் தரும் டூல்ஸ்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த புரோகிராமின் முகப்பும் யூசர் இன்டர்பேஸும் அழகாகவும் பயன்படுத்தக் கூடிய வகையிலும் உள்ளன. இதனை http://systerac.com/seven/overview.htm என்ற முகவரி யில் பெறலாம்.

10. விண்டோஸ் 7 அப்கிரேட் அட்வைஸர் (Windows7 Upgrade Advisor):

உங்கள் சிஸ்டத்தை விஸ்டா அல்லது எக்ஸ்பியிலிருந்து விண்டோஸ் 7க்கு அப்கிரேட் செய்திட திட்டமா? அப்படியானால் விண்டோஸ் 7 அப்கிரேட் அட்வைஸர் புரோகிராம் இயக்கிப் பார்க்காமல் செய்திட வேண்டாம். மைக்ரோசாப்ட் இணைய தளத்தில் (http://www.microsoft.com/ windows/windows7/get/upgradeadvisor.aspx) இந்த புரோகிராம் இலவசமாகக் கிடைக்கிறது. உங்கள் கம்ப்யூட்டரின் அனைத்து பிரிவுகளையும் சோதனை செய்து அவை அனைத்தும் விண்டோஸ் 7 சிஸ்டம் ஏற்றுக் கொள்ள போதுமானவையா என்று காட்டுகிறது.

Advertisements

பக்தர்கள் இறை சிந்தனையுடன் வழிபட திருவண்ணாமலையில் ‘ஓம்’ இசை


திருவண்ணாமலையில் பாரம்பரிய வழக்கப்படி, இன்று, வெள்ளி உண்டியலை கொடிமரம் அருகே வைக்க, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. திருவண்ணாமலையில் நடக்கும் 10 நாள் கார்த்திகை தீப திருவிழாவில், தினமும் சுவாமி வீதி உலா நடந்து வருகிறது. அப்போது, பக்தர்கள் இறைச் சிந்தனையுடன் வழிபடுவதற்காக, மாட வீதி முழுவதும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு, “ஓம்’ என்ற மந்திர இசை மற்றும் அருணாச்சலேஸ்வரர் சுப்ரபாதம் ஒலிக்கும் வகையில், முதன் முதலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகைத் திருவிழாவின் மூன்றாம் நாள், கோவில் வளாகத்தில் உள்ள கொடிமரம் முன், வெள்ளி உண்டியல் வைக்கப்படும். இந்த வெள்ளி உண்டியல் வைக்கும் முன், ஊரில் உள்ள முக்கிய பிரமுகர்களை அழைத்து, உண்டியல் காணிக்கை செலுத்தச் செய்வர். இந்த காணிக்கையை வைத்தே, கடந்த காலங்களில் கார்த்திகை தீபத் திருவிழா நடத்தப்பட்டது. தற்போது, கோவில் வருமானம் பெருகி இருந்தாலும், பாரம்பரியம் மாறாமல் இருக்க, இன்றும், கோவில் கொடி மரத்தின் அருகே வெள்ளி உண்டியல் வைக்கப்படுகிறது. இன்று, வெள்ளி உண்டியலை, கொடிமரம் அருகே வைக்க, கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

மின் கம்பியை பிடித்த பாகனை காப்பாற்றிய பாசக்கார யானை

ஓசூர் அருகே மின் கம்பியில் தொங்கிய யானைப் பாகனை யானை காப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமாக 50 வயது மதிக்கத்தக்க “சுமா’ என்ற யானை உள்ளது. இந்த யானையை திருமணம், அரசியல் தலைவர்கள் வரவேற்பு, திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அனுப்பி வைப்பார். யானையை பாதுகாக்கவும், நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லவும் யானைப் பாகன்கள் தேனியை சேர்ந்த விக்னேஷ் (23), சீர்காழியை சேர்ந்த நாகப்பன் (35), சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த அசோக் (20) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று முன் தினம் ஓசூர் சிப்காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு, யானையை விக்னேஷ், நாகப்பன், அசோக் ஆகியோர் அழைத்து வந்தனர். இரவு மாப்பிள்ளை வரவேற்பு முடிந்தது. நேற்று காலை யானையை பாகன்கள் மூவரும், ஓசூரில் இருந்து சேலத்தில் நடக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கு கால்நடையாக அழைத்து வந்தனர்.

ஓசூரை அடுத்த காளேகுண்டம் கிராமத்தில் செல்லும் போது, யானைக்கு தீனி போட முடிவு செய்தனர். அசோக் யானை மீது அமர்ந்து கொண்டு சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் இருந்த மட்டைகளை வெட்டி கீழே போட்டுக் கொண்டிருந்தார். விக்னேஷ் மற்றும் நாகப்பன் ஆகியோர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றனர்.தென்னை மட்டையை வெட்டிய போது, மட்டைக்கு இடையில் மின் கம்பி சென்றதை அறியாத அசோக், தெரியாமல் அதைப் பிடித்து விட்டார். உடன் மின்சாரம் பாய்ந்து அலறினார்.யானைக்கும் லேசாக மின்சாரம் பாய்ந்ததால், அதிர்ச்சியும், பீதியும் அடைந்த யானை, மின் கம்பியில் தொங்கிய பாகன் அசோக்கை தும்பிக்கையால் இழுத்ததில், கம்பியின் பிடியில் இருந்து தப்பிய அசோக் யானையின் தும்பிக்கையின் பிடியில் தலைகீழாக தொங்கினார்.

யானை அசோக்கை தூக்கியபடி ஓடியதால், அந்த பகுதியில் உள்ளவர்கள் உண்மை நிலவரம் அறியாமல் யானைக்கு மதம் பிடித்து விட்டது என மிரண்டு, பீதியில் ஓட்டம் பிடித்தனர். சிறிது தூரம் கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய யானை, பின்னர் அமைதியாகி பாகனை கீழே இறக்கி விட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். டீ குடிக்க சென்ற மற்ற பாகனங்களும் பதறியடித்து அங்கு வந்தனர். யானையால் காப்பாற்றப்பட்ட பாகன் அசோக்கின் கை மின்சாரம் பாய்ந்ததில் கருகியது; பலத்த காயம் ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்த பாகன் அசோக்கை யானை காப்பாற்றியதோடு, மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் யானை மிரண்டு ஓடிய உண்மை தெரிந்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.யானையால் உயிர் தப்பிய அசோக் யானையை அன்போடு, தட்டிக் கொடுத்து ஆனந்த கண்ணீர் வடித்தார். வேடிக்கை பார்க்க கூடிய பொதுமக்களும் யானையின் அதிவேக செயலால் பாகன் தப்பியதை அறிந்து, யானையை வணங்கிச் சென்றனர்.

கூகுள் பிரைவசி


நாம் கூகுள் தரும் எந்த வசதியைப் பயன்படுத்தத் தொடங்கினாலும், நம்மைப் பற்றிய அனைத்து தகவல்களையும் கூகுள் வைத்துப் பயன்படுத்தத் தொடங்கிவிடும் என்று நாம் அறிவோம். ஜிமெயில், யு–ட்யூப், கூகுள் செக் அவுட், கூகுள் டாக்ஸ், கூகுள் காலண்டர், ஐகூகுள், பிகாசா வெப் ஆல்பம்ஸ், கூகுள் டாக் என எத்தனையோ இணைய வசதிகளைக் கூகுள் நமக்குத் தருகிறது. அப்போது நம்மைப் பற்றிய தகவல்களையும் பெறுகிறது. அது மட்டுமின்றி நாம் இவற்றைப் பயன்படுத்தும்போது, அது பற்றிய புள்ளி விபரங்களையும் தன்னிடம் வைத்துக் கொள்கிறது.
ஒரு சிலர் கூகுள் நம்மைப் பற்றிய அளவுக்கதிகமான தகவல்களைப் பெற்று வைத்துக் கொள்கிறது என்று கருதுகின்றனர். ஒரு சிலர் இது நம் தனி உரிமையைக்குள் தலையை விடும் செயல் என்றும் எண்ணுகின்றனர்.
இதனை எண்ணிப் பார்த்தோ என்னவோ, கூகுள் சென்ற மாதம் தன்னிடத்தில் தன் வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்தில் ஓர் ஏற்பாட்டினைச் செய்து தந்துள்ளது. தான் வைத்துள்ள தகவல்களை பயனாளர்கள் எடிட் செய்திடவும் வழி தருகிறது. இத்தகைய தகவல்கள் தங்கவைத்திடும் இடத்திற்கு கூகுள் பிரைவசி டேஷ்போர்டு எனப் பெயர் கொடுத்துள்ளது. இதில் நுழைந்து நாம் கூகுள் வைத்துக் கொள்ளக்கூடாத தகவல்களை எடிட் செய்திடலாம்.
http://www.google.com/dashboard என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றவுடன் நம்முடைய கூகுள் இமெயில் முகவரி கொடுக்கப்பட்டு பாஸ்வேர்ட் கேட்கப்படுகிறது. பின் நம்மைப் பற்றிய தகவல்கள் கூகுளின் பல்வேறு சாதனங்கள் வாரியாகத் தரப்படுகின்றன. நம் மின்னஞ்சல் கடிதங்கள் எண்ணிக்கை, தொடர்பு கொள்ளும் முகவரிகள் எண்ணிக்கை, படங்கள், காலண்டர், வெப் ஹிஸ்டரி என அனைத்தும் பகுதி பகுதியாகத் தரப்படுகின்றன. ஆனால் அனைத்துமே ஒருவர் ஏற்கனவே தான் அறிந்து தந்த தகவல்களாகத்தான் இருக்கின்றன. இதில் என்ன நல்ல செய்தி என்றால், மற்ற இணைய சேவைத் தளங்கள் போல் அல்லாமல், கூகுள் இவற்றையும் எடிட் செய்திட நமக்கு உரிமை தருகிறது. எந்த தகவலையாவது கூகுள் கொண்டிருக்கக்கூடாது என நாம் எண்ணினால், அதனை நீக்கவும் இடம் உள்ளது.

சிவந்த கண்ணுக்கு செண்பகம் -மூலிகை கட்டுரை


கண்களில் உள்ள வெண்விழிக்குச் செல்லும் நுண்ணிய ரத்தக்குழாய்களில் ரத்தம் தேங்கும் போதும், ரத்தக்கசிவு ஏற்படும் போதும், வெண்படலம் சிவப்பு நிறமாகத் தெரியும். பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்ற நுண்கிருமிகள் தாக்குதலாலும், “கஞ்சக்டிவா’ எனும் விழியடுக்கில் ஒவ்வாமை ஏற்பட்டு, உறுத்தலின் காரணமாக சிவப்பு நிறம் ஏற்படும். இதனால் கண்ணில் நீர்வடிதல், கண்வலி, கண் எரிச்சல், இமைகள் ஒட்டிக் கொள்ளுதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். இது காற்றின் மூலமாகவும், கிருமித்தொற்றாலும், பாதிக்கப்பட்டவர்களின் உடமைகளைத் தொடுவதாலும் மற்றவர்களுக்கு பரவுகிறது. வெயில் காலம் முடிந்து, குளிர் ஆரம்பிக்கும் போதும், கடும் மழை ஓய்ந்த பின்னும் இந்த கண்நோய் வேகமாக பரவுகிறது. சித்த மருத்துவத்தில் அதிமந்த நயனரோகம், அக்கரரோகம் என்றழைக்கப்படுகிறது. அக்கரரோகத்தில், நோய் வந்த சிலநாட்களில் தானாகவே குணமாகிவிடும் என்பதால் கண்களுக்கு ஓய்வும், சுத்தமான நீரில் கழுவுவதே ஆரம்ப சிகிச்சையாகும். நீரில் கிருமிநாசினி, ஆண்டிபயாடிக் மருந்துகளைச் சேர்த்து கண்களைக் கழுவலாம்.
ஒவ்வாமையை நீக்கி, நுண்கிருமிகளை வெளியேற்றும் அற்புத பணியைச் செய்கிறது செண்பக பூக்கள். மைக்கேலியா செம்பகா என்ற தாவரவியல் பெயர்கொண்ட பெரிய செண்பக மரங்களின் பூக்களிலிருந்து, நுண்கிருமிகளை கொல்லும் கண்நோய் மருந்து தயாரிக்கப் பயன்படுகிறது. இப்பூக்களில் உள்ள பீட்டா சைட்டோஸ்டீரால், லிரியோடினின், மோனோசெஸ்குட்டிர்பின்கள் கிருமிநாசினியாக பயன்படுகின்றன.
செண்பகப்பூ, அதிமதுரம், ஏலக்காய், குங்குமப்பூ ஆகியவற்றை நீர்விட்டு நன்கு அரைத்து, கலவையை கண் இமைகளின் மேலும், கீழும் பற்றுப்போட்டு ஒருமணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவவேண்டும். செண்பகப்பூவை ஒரு கைப்பிடியளவு எடுத்து நீரில் ஊறவைத்து, 3 மணி நேரம் கழித்து, அந்தத் தண்ணீரில் கண்களைக் கழுவலாம். இதனுடன் திரிபலா சூரணத்தை சேர்த்தும் நீரில் கலக்கி கண்களை கழுவினால் சிவப்பு மாறும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், 98421-67567

நாக முனிவர் என்னும் சித்தர் கண்ணோய் தோன்றுவதற்கான காரணங்களை தன் நூலில் குறிப்பிட்டுள்ளதை அறியும்போது வியப்பு தோன்றலாம். ஆனால், அந்த கருத்துக்களின் உண்மைகள் தற்போது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு வருகின்றன. நமது உடலில் தோன்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மிகுகொழுப்பு, மிகுஉப்பு போன்றவை ரத்தத்தில் மிகுந்த இந்த உபாதைகளை கண்களுக்கும் சென்று கண்களின் ரத்தக்குழாய்களில் தங்கி, கண்களின் பாகங்களை கொஞ்சம், கொஞ்சமாக பாதிக்கின்றன. கண்களில் தோன்றும் கூச்சம், வலி, சிவப்பு, உறுத்தல், கலக்கம், வீக்கம், பீளை, கனம், எரிச்சல், பார்வைகுறைவு போன்றவை மட்டுமின்றி குதிகால் வலி, வயிற்றுவலி மற்றும் தலைவலியும் கண்ணோய்களுக்கு பல காரணங்களாக நாகமுனிவர் குறிப்பிடுகின்றார்.

எனது மகளுக்கு வயது 12 ஆகிறது. சிறு வயதிலிருந்தே நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. நகம் கடிக்கும் பொழுது தோலிலுள்ள சதையுடன் சேர்த்து கடிப்பதால் அந்த இடத்தில் ரத்தம் உண்டாகி புண்கள் ஏற்படுகிறது. இதை தவிர்க்கவும், புண்கள் ஆறவும் சித்த மருத்துவம் கூறவும்.
சிலர் வேலைப்பளுவின் போதும், சும்மாயிருக்கும் போதும், சிந்திக்கும் போதும் நகத்தை கடித்து பழக்கப்படுத்துகின்றனர். பின் நாளடைவில் இந்த பழக்கத்தை விடமுடியாமல் சிரமப்படுகின்றனர். சுண்ணாம்புச்சத்து மற்றும் இரும்பு சத்து குறைபாட்டினாலும் இந்தப் பழக்கம் தொடரலாம். நெல்லிக்காய், விளாம்பழம், மாதுளம்பழம் போன்றவற்றை அடிக்கடி மென்று சாப்பிட்டு பழக்கப்படுத்திக் கொண்டால் நகம் கடிக்கும் பழக்கம் நீங்கும். நகத்தைச் சுற்றி புண்ணுள்ள பகுதிகளில் வெங்காரம் என்னும் நாட்டு மருந்தை சட்டியில் போட்டு பொரித்து, பொடித்து, தேங்காய் எண்ணெயுடன் கலந்து தடவி வரலாம் அல்லது கஸ்தூரி மஞ்சளை விளக்கெண்ணையுடன் கலந்து தடவலாம்.

கிருபானந்த வாரியார்- பேசுவதால் பயனேதும் இல்லை

<img src="” alt=”” />

* வயலில் தூவப்படும் சில விதைகளே, பல ஆயிரம் மடங்காக பயிர்களை திருப்பித்தரும். அதைப்போலவே ஒருவர் செய்யும் நன்மையும், தீமையும் பல மடங்காக பெருகி அவரிடமே வந்து சேரும். ஆகவே, எப்போதும் நன்மை செய்பவர்களாகவே இருங்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக இல்லாவிட்டாலும்கூட, நன்மை செய்வதிலிருந்து தவறாதீர்கள். இவ்வாறு செயல்படுபவர்களுக்கே விரைவில் இறைவன் அருள் கிடைக்கும்.

* சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள்.

* நெருப்பு எரியும் இடத்தில் இருந்து புகை கிளம்பிக் கொண்டிருக்கும். நெருப்பினால் நமக்கு தேவையானவற்றை சூடுபடுத்திக் கொள்ளாலாம் அல்லது பிற தேவைகளுக்கு பயன்படுத்தலாம். ஆனால், புகையால் பயன் ஏதும் இல்லை. புகையை நிறுத்த வேண்டுமானால் நெருப்பை அணைக்க வேண்டும். நெருப்பு என்ற பற்றினை அணைத்து விட்டால், புகை என்ற காரியமானது தாமாகவே அழிந்து விடுகிறது.

* ஆசை அழிக்கும் குணமுடையது. அன்பு வளர்க்கும் குணத்தை உடையது. நீங்கள் வளர்க்கும் குணமுடையவர்களாக இருங்கள். வீணான ஆசைகளால் துன்பம் நேருமே தவிர நன்மை எதுவும் உண்டாகிவிடாது என்பதால் ஆசையை அழித்து விடுங்கள்.

கிருபானந்த வாரியார்- ஏக்கத்துடன் காத்திருப்போம்

* திருநாவுக்கரசு சுவாமிகள் சைவ சமயத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தது நான்கே ஆண்டுகள் தான். அப்போது அவருக்கு வயது 77 இருக்கும். ஆறுநாட்கள் மட்டுமே பக்தனாக முழு அடியவராக வாழ்ந்து இறைவனை அடைந்தவர் கண்ணப்ப நாயனார். சுந்தரமூர்த்தி நாயனார் இரண்டே இரண்டு ஆண்டுகள் மட்டுமே சிவசிந்தனையோடு வாழ்ந்தார். இறைவன் சுந்தரரை தடுத்தாட்கொண்டது பதினாறு வயதில் தான். அவர் கயிலாயம் போனது பதினெட்டாவது வயதில். ஆகையால், பக்திக்கு வயது முக்கியம் இல்லை.
* பக்தி இளமையில் வரவில்லையெனில், அதற்குரிய மனப்பக்குவம் வரட்டும் என்ற ஏக்கத்துடன் நல்லவனாக காத்திருப்பது தான் வழி. பக்குவ காலம் எப்படியும் தானாகவே வந்து சேரும். அப்படி மனப்பக்குவம் வந்ததும், உண்மையான பக்தி செய்து இறைவனை சிந்தித்து வாழ்ந்தாலே முழுபலனும் கிடைத்து விடும்.
* செம்பு என்ற என்ற ஒன்று இருந்தால், அதனுள் களிம்பும் ஒட்டியிருக்கும். அதை துலக்கிப் பயன்படுத்த வேண்டும். நெல் என்று இருந்தால் உமியும் சேர்ந்திருக்கும். அதை நாம் விலக்கிச் சமைக்க வேண்டும். அதுபோல நம்மிடம் உள்ள தீமைகளை விடுத்து நல்லவற்றை மட்டும் சிந்தித்து நல்லவனாக வாழ்ந்தால் மனப்பக்குவம் கிடைத்து விடும்.