மின் கம்பியை பிடித்த பாகனை காப்பாற்றிய பாசக்கார யானை

ஓசூர் அருகே மின் கம்பியில் தொங்கிய யானைப் பாகனை யானை காப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருச்சியை சேர்ந்தவர் சேகர். இவருக்கு சொந்தமாக 50 வயது மதிக்கத்தக்க “சுமா’ என்ற யானை உள்ளது. இந்த யானையை திருமணம், அரசியல் தலைவர்கள் வரவேற்பு, திருவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு வாடகைக்கு அனுப்பி வைப்பார். யானையை பாதுகாக்கவும், நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லவும் யானைப் பாகன்கள் தேனியை சேர்ந்த விக்னேஷ் (23), சீர்காழியை சேர்ந்த நாகப்பன் (35), சேலம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்த அசோக் (20) ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.நேற்று முன் தினம் ஓசூர் சிப்காட்டில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு, யானையை விக்னேஷ், நாகப்பன், அசோக் ஆகியோர் அழைத்து வந்தனர். இரவு மாப்பிள்ளை வரவேற்பு முடிந்தது. நேற்று காலை யானையை பாகன்கள் மூவரும், ஓசூரில் இருந்து சேலத்தில் நடக்கும் மற்றொரு நிகழ்ச்சிக்கு கால்நடையாக அழைத்து வந்தனர்.

ஓசூரை அடுத்த காளேகுண்டம் கிராமத்தில் செல்லும் போது, யானைக்கு தீனி போட முடிவு செய்தனர். அசோக் யானை மீது அமர்ந்து கொண்டு சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் இருந்த மட்டைகளை வெட்டி கீழே போட்டுக் கொண்டிருந்தார். விக்னேஷ் மற்றும் நாகப்பன் ஆகியோர் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்க சென்றனர்.தென்னை மட்டையை வெட்டிய போது, மட்டைக்கு இடையில் மின் கம்பி சென்றதை அறியாத அசோக், தெரியாமல் அதைப் பிடித்து விட்டார். உடன் மின்சாரம் பாய்ந்து அலறினார்.யானைக்கும் லேசாக மின்சாரம் பாய்ந்ததால், அதிர்ச்சியும், பீதியும் அடைந்த யானை, மின் கம்பியில் தொங்கிய பாகன் அசோக்கை தும்பிக்கையால் இழுத்ததில், கம்பியின் பிடியில் இருந்து தப்பிய அசோக் யானையின் தும்பிக்கையின் பிடியில் தலைகீழாக தொங்கினார்.

யானை அசோக்கை தூக்கியபடி ஓடியதால், அந்த பகுதியில் உள்ளவர்கள் உண்மை நிலவரம் அறியாமல் யானைக்கு மதம் பிடித்து விட்டது என மிரண்டு, பீதியில் ஓட்டம் பிடித்தனர். சிறிது தூரம் கட்டுப்பாடு இல்லாமல் ஓடிய யானை, பின்னர் அமைதியாகி பாகனை கீழே இறக்கி விட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அங்கு குவிந்தனர். டீ குடிக்க சென்ற மற்ற பாகனங்களும் பதறியடித்து அங்கு வந்தனர். யானையால் காப்பாற்றப்பட்ட பாகன் அசோக்கின் கை மின்சாரம் பாய்ந்ததில் கருகியது; பலத்த காயம் ஏற்பட்டது. மின்சாரம் பாய்ந்த பாகன் அசோக்கை யானை காப்பாற்றியதோடு, மின்சாரம் பாய்ந்த அதிர்ச்சியில் யானை மிரண்டு ஓடிய உண்மை தெரிந்து, பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.யானையால் உயிர் தப்பிய அசோக் யானையை அன்போடு, தட்டிக் கொடுத்து ஆனந்த கண்ணீர் வடித்தார். வேடிக்கை பார்க்க கூடிய பொதுமக்களும் யானையின் அதிவேக செயலால் பாகன் தப்பியதை அறிந்து, யானையை வணங்கிச் சென்றனர்.

%d bloggers like this: