மிரட்டும் தங்கம்!


தங்கம்தான் இன்று நடுத்தரக் குடும்பங்களைக் கவலைப்படுத்தும் பிரதான விஷயமாகிவிட்டது. அதிலும் பெண் குழந்தைகளைப் பெற்றவர்கள் எல்லாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருக்க வேண்டிய நிலை. `எங்கே செல்லும் இந்தப் பாதை?’ என்கிற மாதிரி, எங்கே போய் நிற்கும் இந்த விலையேற்றம் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் அலைபாய்கிறது.

புதிய உயர்வாக, 10 கிராம் 16 ஆயிரத்து 900 என்ற எவரெஸ்ட் உச்சத்தை எட்டியிருக்கும் தங்கம், மேலும் உயர்வதற்கான வாய்ப்புகளே அதிகம் என்கிறார்கள் நிபுணர்கள். திருமண சீசன், வலுவான உலக அளவிலான தேவை போன்றவை விலை எகிறுவதற்கு முக்கியக் காரணங்கள்.வரலாறு காணாத விலை உயர்வை தங்கம் தொடர்ந்து சாதித்துக்கொண்டே இருக்கிறது. அமெரிக்கச் சந்தையில் இதுவரையில்லாத உயர்வாக ஓர் `அவுன்ஸ்’ தங்கம் ஆயிரத்து 99 டாலர்கள் ஆனது.

முதலீடாக தங்கம் புதிதாக வாங்கப்படுவதும், திருமண சீசனின் தேவையைச் சமாளிக்க நகைத் தயாரிப்பாளர்கள் அதிகளவில் தங்கம் வாங்குவதும் இந்த மகிமை மிக்க மஞ்சள் உலோகம் விலையில் சாதனை படைப்பதற்கு முக்கியக் காரணிகளாகும் என்கின்றனர் சந்தை நிபுணர்கள்.

டாலர் வீழ்ச்சியால் தங்கத்தில் அதிகமான நாடுகள் முதலீடு செய்யத் தொடங்கியிருப்பது ஒரு காரணம் என்பது உட்பட மேலும் பல காரணங்கள் கூறப்படுகின்றன, அலசல்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த சில விற்பனை சீசன்களாக ஏறுமுகத்திலேயே இருக்கும் தங்கத்தின் விலையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இந்திய ரிசர்வ் வங்கி 200 டன் தங்கம் வாங்கிய நடவடிக்கையும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவின் நடவடிக்கையை மேலும் பல நாடுகள் தொடரும் ஊகம் உலா வருகிறது. சவரனுக்கு 14 ஆயிரம் என்ற நிலையை நெருங்கி நிற்கிறது தங்கம். ஒரு `குறிப்பிட்ட’ நிலையை எட்டி தங்கம் நின்று

விடும் இரண்டு வருடங்களுக்காவது அந்த நிலை நீடிக்கும் என்று கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறார்கள் வல்லுநர்கள்.

இந்தியாவைப் பொறுத்தவரை தங்கம், கலாச்சாரம் சார்ந்த விஷயமாக இருப்பதால் வாங்கவும் முடியாமல், தவிர்க்கவும் முடியாமல் தவித்து நிற்கிறது நடுத்தர வர்க்கம். அலங்காரத்துக்கு `கவரிங்’கை நாடலாம் என்றாலும், திருமணம், சுபநிகழ்ச்சிகள் போன்ற அத்தியாவசியங்களுக்கு என்ன செய்வது என்பதே மக்களின் ஆழ்ந்த யோசனை.

தங்கம் அளவுக்கு இல்லாவிட்டாலும் வெள்ளியும் ஏணிப் படிகளில் ஏறிக்கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கிலோ வெள்ளி 27 ஆயிரத்து 50 ரூபாய் என்ற நிலையில் உள்ளது.

%d bloggers like this: