குழு மருத்துவக் காப்பீட்டுக்கு நெருக்கடி!


நிறுவனங்களுக்கான குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்களின் ஆர்வம் குன்றியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. `கிளெய்ம்’கள் அதிகமாக இருப்பதே காரணம். எனவே நீங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெற வேண்டுமானால் தனிப்பட்ட `பாலிசி’ எடுப்பதே நல்லது என்று காப்பீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஓர் ஊழியர் அவரது குடும்பத்தினரின் மருத்துவமனைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில் குழு மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை நிறுவனங்கள் பெற்று வந்தன. தனிநபர் மருத்துவக் காப்பீட்டில் இல்லாத, ஏற்கனவே உள்ள வியாதிகள் மற்றும் கர்ப்பகாலச் செலவுகளும் குழுக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கப்படுவது இவற்றின் சிறப்பம்சம்.

குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை `கிளெய்ம்’ விகிதம் -செலுத்தத்தக்க கிளெய்ம்களின் பங்கும், பெறப்பட்ட பிரீமியங்களின் சதவீதமும்- 180 சதவீதத்துக்கு மேல் உள்ளது. எனவே, காப்பீட்டுத் துறையில் 65 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள நான்கு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியத் தொகை அளவைக் கூட்டியுள்ளதுடன், அனுகூலங்களிலும் வெட்டு போட்டுள்ளன.

நி இந்தியா அஸ்ரன்ஸ், ஒரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏகமனதாக ஒரு முடிவை மேற்கொண்டுள்ளன. அதன்படி, குடும்ப மெடிக்கிளைமுக்கான (மருத்துவக் காப்பீடு) பிரீமிய விகிதங்களும், கவரேஜும், ஆயிரத்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புதிய குழு காப்பீட்டுத் திட்டங்களுக்குப் பொருந்தும்.

“இதன் அர்த்தம், நிறுவனங்கள் குழு காப்பீட்டுக்காக இன்று செலவழிப்பதை விட குறைந்தபட்சம் 100 சதவீதம் அதிகமாகச் செலவழிக்க வேண்டும். அதேநேரம், ஏற்கனவே உள்ள வியாதிகள், மகப்பேறுச் செலவுகளுக்குக் காப்பீடு கிடைக்காது. கூடுதலாக, புதிய ஊழியர்கள் தங்களின் காப்பீடு `ஆக்டிவேட்’ செய்யப்பட ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும்” என்கிறார் காப்பீட்டு முகமை நிறுவனம் ஒன்றின் தலைவரான ராகுல் அகர்வால்.

தனிப்பட்ட மருத்துவக் காப்பீடு காலாவதியாகி விட்டாலும் கைகொடுத்துவந்த குழு காப்பீட்டுத் திட்டங்கள் இனி சில பெரிய நோய்களுக்கு மட்டுமே காப்பீடு அளிக்கும்.

யுனைடெட் இண்டியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி. ஸ்ரீனிவாசன், “இந்த ஆண்டு இறுதியில் எங்கள் நிறுவனத்தில் `கிளெய்ம்’களை 90 சதவீதத்துக்குக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம். அதன் மூலம் அடுத்த ஆண்டு தொழிலை வலுப்படுத்துவோம்” என்கிறார்.

`புரூடன்ட் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ்’ நிறுவனத்தின் துணைத் தலைவரான பவன் ஜித் சிங் திங்ரா, “இந்தியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்பது இல்லை. எனவே ஊழியர்கள் பலருக்கு அவரவர் நிறுவனங்கள் வழங்கும் குழு காப்பீட்டுத் திட்டம்தான் ஒரே ஆதாரமாக உள்ளது” என்கிறார்.

%d bloggers like this: