Daily Archives: நவம்பர் 29th, 2009

உற்சாகம் வேண்டுமா? இப்படி மாறுங்கள்!

நீங்க எப்போதும் துறுதுறுவென்று சுறு சுறுப்பாக இயங்க வேண்டுமா? `அது ரொம்ப சுலபம்’ என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

“நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு தெரியும். காலையில் 5 மணிக்கு எழுந்து உடல் வலிக்க உடற்பயிற்சி செய்யச் சொல்லுவீங்க?” அப்படித்தானே யோசிச்சீங்க, அதுதான் இல்லை. “கவலையேபடாதீங்க. நம்மகிட்ட விசேஷமான ஒரு தைலம்/டானிக் இருக்கு, சீக்கிரமே உங்க களைப்பு ஓடியே போகும்”, “கண்டிப்பா ஆபரேஷன் செய்தாகணும்” என்பது போன்ற கரடு முரடான ஐடியாக்கள் கொடுத்து இருப்பார்களோ என்றால் அதுவும்இல்லை.

நமது சாப்பாட்டு விஷயத்தில் சிறிது கவனம் செலுத்தினாலே போதுமாம். சில சத்துக்கள் அளவுக்கு அதிகமாகும்போது தேவையற்ற பிரச்சினைகளை இழுத்து வந்துவிடுகிறது. அப்படிப்பட்ட சத்துக்களில் கொழுப்பும், கார்போஹைட்ரேட்டும் முக்கிய இடம் பிடிக்கிறது. இவை இரண்டுமே உடல்பருமனை அதிகரித்து பல்வேறு நோய்த் தொற்றுக்கும் காரணமாக அமைந்துவிடுவதுண்டு.

இந்த இரண்டு சத்துக்களையும் கட்டுப்பாட்டோடு சேர்த்துக் கொண்டால் என்ன ஆகும் என்று ஒரு ஆய்வு நடத்தப்பட்டது. அப்போதுதான் நமது சோம்பேறித்தனத்துக்கு மொத்த உருவமாக இருப்பதே கொழுப்புதான் என்று தெரியவந்தது.

ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு நகரில் இதற்கான ஆய்வு நடந்தது. சராசரியாக 50 வயதுடைய 106 பேரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டனர். அவர்களில் 55 பேருக்கு குறைவான கார்போஹைட்ரேட் சத்தும், அதிகமான கொழுப்புச்சத்தும் நிறைந்த உணவு கொடுக்கப்பட்டது. 51 பேருக்கு அதிக கார்போஹைட்ரேட் சத்தும், குறைந்த கொழுப்புச் சத்தும் நிறைந்த உணவு கொடுத்து சோதனை செய்யப்பட்டது. ஒரு வருடத்துக்குப் பிறகு இரு குழுவினரையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் சில வியப்பூட்டும் முடிவுகள் கிடைத்தன.

இரு குழுவினருமே முந்தைய நிலையில் இருந்து தலைகீழாக மாறிவிட்டனர். எடை விஷயத்தில் இரு குழுவைச் சேர்ந்தவர்களும் சராசரியாக 13 கிலோவுக்கு மேல் குறைந்திருந்தனர். ஆனால் சுறுசுறுப்பு விஷயத்தில் இரு தரப்பினருக்கும் நிறையவே வேறுபாடுகள் காணப்பட்டது. குறைந்த கொழுப்புள்ள உணவு சாப்பிட்டவர்களுக்கு சுறுசுறுப்பு அதிகரித்திருந்தது, மனநிலையும் அற்புதமாக இருந்தது. இந்த மாற்றங்கள் 2 மாதங்களிலேயே அவர்களுக்குள் ஏற்படத் தொடங்கிவிட்டது.

அதிக கொழுப்புள்ள உணவை சாப்பிட்டவர்கள், சுறுசுறுப்பில் ஆய்வுக்கு முந்தைய நிலையில் இருந்ததுபோலவே காணப்பட்டார்கள். எந்தவித மாற்றமும் இல்லை. மன நிலையும் மந்தமாகவே காணப்பட்டது.

இந்த ஆய்வைத் தொடர்ந்து, ஆஸ்திரேலியாவில் குறைந்த கலோரி, குறைந்த கொழுப்புள்ள உணவுகள் தயாரிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.

“அப்பாடா… நான் இனிமே சுறுசுறுப்பாகி விடுவேன்னு நீங்க நினைக்கிறீங்களா?” முயற்சி பண்ணித்தான் பாருங்களேன்!

மொபைல் வாங்கப் போறீங்களா…?

செல்போன்கள் சில ஆண்டுகளுக்கு முன் அதிசயப் பொருள். இன்றோ அது அத்தியாவசியமாகிவிட்டது. பயனுள்ளது என்பதோடு பொழுது போக்கு அம்சங்களும் இருப்பதால் அனைவரையும் வசியப் படுத்திவிட்டது எனலாம்.

நண்பர்கள், உறவினர்களின் செல்போன்களைப் பார்த்து வியந்து, ஒரு மொபைலை வாங்கலாம் என்று கடைக்குப் போனால் எல்லாவித போன்களும் கவர்ந்து இழுக்கின்றன. நாளுக்குநாள் புதிய வசதிகள், மாதிரிகள் அறிமுகமாகின்றன. எனவே ஏற்கனவே செல்போன் வைத்திருந்தாலும் வேறுமாடல் மீது மோகம் வருகிறது.

நீங்களும் புதிய மொபைல் வாங்க திட்டம்போட்டு வைத்திருக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே இங்கே சில ஐடியாக்கள்…

பட்ஜெட்: மொபைல் வாங்குவதற்கு முன்பு உங்கள் பட்ஜெட் எவ்வளவு என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். தற்போது எண்ணற்ற மாடல்கள், பிளான்கள் கிடைக்கின்றன. அதில் உங்களுடைய பட்ஜெட்டுக்கு எது ஒத்துவரும் எனத் தெரிந்து கொண்டு, அதைத் தேர்ந்தெடுங்கள். என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை கடைக்காரரிடமே நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

பயன்படுத்தும் முறை: நீங்கள் எவ்வளவு நேரம் மொபைலைப் பயன்படுத்த வேண்டியதிருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதிக நேரம் பேசு பவரா? அல்லது அதிகமாக எஸ்.எம்.எஸ். பயன்படுத்துவீர்களா? இதில் எதை நீங்கள் அதிகமாக உபயோகப்படுத்த வேண்டிய நிலை உள்ளதோ, அதற்குத் தகுந்தபடி பிளானைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

புதிய வசதிகள்: தற்போது நடைமுறையில் என்னென்ன புதிய வசதிகள் உள்ளன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக குறிப்பிட்ட கால ஒப்பந்தம், மாதக்கட்டணம், ப்ரீபெய்டு, குத்தகை என நான்கு வகையான பிளான்கள் உள்ளன. இதில் ப்ரீபெய்டு பிளான் மிகச் சிறந்தது. அவ்வப்போது பல சலுகைகள் இதில் அறிவிக்கப்படும். இளவயதினர்களுக்கு ஏற்ற பிளான் இது.

மாத வாடகை பிளானில் ஒவ்வொரு மாதமும் பேசிய பின் அந்த மாதத்தின் இறுதியில் பில் வரும். சில மாதங்கள் இது அதிகமாகவும், சில மாதங்கள் குறைவாகவும் இருக்கலாம். அதற்குத் தகுந்தபடி பட்ஜெட் உள்ளவர் என்றால், உங்களுக்கு மாத வாடகை பிளான் சரியாக இருக்கும். வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு குறிப்பிட்ட கால ஒப்பந்த பிளானும், குறுகிய காலத்துக்கு மட்டும் செல்போன் தேவைப்படுபவர்களுக்கு குத்தகை பிளானும் பொருந்தும்.

பிளானுக்குத் தகுந்தபடி கால் கட்டணங்கள் வித்தியாசப்படுகின்றன. ஒரே நிறுவனத்தில் சில பிளான்களில் குறைந்த கட்டணமும், சில பிளான்களில் அதிக கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. சில நிறுவனங்கள் நொடியைக் கணக்கிட்டும், சில நிறுவனங்கள் நிமிடத்தைக் கணக்கிட்டும் கட்டணங்களை முடிவு செய்கின்றன. அதே நிறுவனத்தைச் சேர்ந்த எண்களுக்கு பேச குறைந்த கட்டணமும், மற்ற நிறுவனத்தைச் சேர்ந்த எண்களுக்கு பேச அதிக கட்டணம் வசூலிக்கும் வழக்கமும் நடைமுறையில் உள்ளது. எஸ்.எம்.எஸ். அனுப்புவதற்கு சில நிறுவனங்கள் கட்டணம் வசூலிக்கின்றன, சில நிறுவனங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கை வரை இலவசமாக எஸ்.எம்.எஸ்.கள் அனுப்ப சலுகை அளிக்கின்றன. எனவே, எந்த பிளான் உங்களுக்குப் பொருத்தமாக இருக்கும் என முடிவு செய்து அதை தேர்ந்தெடுங்கள். ப்ரீ பெய்டு, போஸ்ட் பெய்டு போன்ற வற்றிலும் சலுகைகள் வரலாம். சில நிறுவனங்கள் புது பிளானுக்கு மாறுவதற்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாகப் பெற்றுக்கொள்கின்றன. எனவே, சிம்கார்டு வாங்கும்போது அதில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை கவனமாகப் படித்துப் பாருங்கள்.

பேட்டரியில் கவனம்: ஆரம்பகட்ட மொபைலில் கால் செய்யும் வசதி, எஸ்.எம்.எஸ். அனுப்பும் மற்றும் பெறும் வசதி மட்டுமே இருக்கும். எம்.எம்.எஸ்., வாய்ஸ் ரெக்கார்டிங், வீடியோ கால்ஸ், இன்டர்நெட் போன்ற நவீன வசதிகள் சிலருக்கு தேவைப்படலாம். இதில் எந்த வசதி உங்களுக்கு தேவைப்படுகிறதோ, அந்த வசதி உள்ள மொபைலை வாங்குவது நல்லது. அதிக விலை கொடுத்து அனைத்து நவீன வசதிகளும் கொண்ட மொபைலை வாங்கி பயன்படுத்தாமல் இருப்பதைவிட, தேவையான வசதி உள்ள மொபைலை வாங்கினால் பணம் வீணாகாது. அதேபோல் அதிக நேரம் நீடிக்கக் கூடிய பேட்டரி உள்ள மொபைலாகப் பார்த்து வாங்குவதும் நல்லது.

மாற்றிக் கொள்ளும் வசதி: நீங்கள் மொபைல் வாங்கிய 6 மாதத்திற்குப் பிறகு நவீன வசதி நிறைந்த மொபைல் புதிதாக வரலாம். அப்போது அதை வாங்க நீங்கள் ஆசைப்பட்டால் ஏற்கனவே உள்ள மொபைலைக் கொடுத்து விட்டுப் புதியதை வாங்கும் வசதி உள்ளதா என்பதைப் பாருங்கள். கூடுதல் தொகை கொடுக்க வேண்டியது இருந்தால், அது உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்றதா என்பதையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

நெட்வொர்க் வசதி: நீங்கள் நகர்ப்பகுதியில் மட்டும் மொபைலைப் பயன்படுத்தினால் போதுமா? அல்லது எல்லா இடங்களிலும் பயன்படுத்த வேண்டுமா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள். ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ. என இரண்டு வகையான நெட்வொர்க்குகள் உள்ளன. இதில் நீங்கள் எந்த மாதிரியான இடங்களில் மொபைலைப் பயன்படுத்துவீர்களோ, அதற்கேற்ற நெட்வொர்க் வசதியுள்ள மொபைலைத் தேர்ந்தெடுங்கள்.

மதிப்பிடுங்கள்: உங்களைச் சுற்றி உள்ள குடும்பத்தினர்கள், உறவினர்கள், நண்பர்கள் எந்த மாதிரியான மொபைலைப் பயன்படுத்துகின்றனர், அதில் உள்ள வசதிகள் என்னென்ன, அதன் விலை எவ்வளவு என்பதை விசாரித்து, அதனுடைய மதிப்பைக் கணக்கிட்டுப் பாருங்கள். அதில் எந்த மொபைல் உங்களின் பயன்பாட்டிற்கும், பட்ஜெட்டிற்கும் ஒத்து வருகிறதோ, அதையே நீங்களும் தேர்வு செய்யலாமே!

கிருபானந்த வாரியார்- லட்சுமி கடாட்சம் கிடைக்க வழி

கொடுத்த கடனைத்திருப்பிக் கொடுக்காதது எவ்வளவு பெரிய பாவமோ, அத்தனை பெரிய பாவம் இறைவனை நாள்தோறும் வணங்காததும் ஆகும். அதனால் தான் “என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்றார் அப்பர். இறைவன் தந்த உடம்பினால் அவனை வழிபடுவதை ” அவனருளாலே அவன் தாள் வணங்கி’ என்கிறார் மாணிக்கவாசகர்.

* பல இழைகள் ஒன்றுபட்டுத் திரித்த வடக்கயிற்றைக் கொண்டு பெரிய தேரை இழுத்து விடலாம். ஆனால், தனி இழையான துரும்பினைக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. ஒரே சிந்தனையுடன் பல அன்பர்கள் கோவிலில் கூட்டு வழிபாடு செய்யும் போது இறைவனின் திருவருளை உறுதியாகப் பெற முடியும். பல காலமாக கணக்கு வழக்கில்லாமல் பிறவிகளை எடுத்து வருகின்ற நாம் இறைவனை உள்ளத்தூய்மையுடன் உருகி வழிபட்டு நாளும் அர்ச்சித்து வந்தால் நம் பிறவிநோய் தீரும். நம் வீட்டில் அனைவரும் இயன்ற வரையில் நாள்வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும் இல்லங்களில் குடும்ப ஒற்றுமை சிறந்து விளங்கும். தெய்வஅருளும், லட்சுமி கடாட்சமும் நிறைந்து இருக்கும். நீராடி தூய ஆடை அணிந்து நல்ல சிந்தனையுடன் ஒழுக்கநெறியில் கோவில்களுக்குச் செல்ல வேண்டும். கோவிலில் இருக்கும் நேரத்தில் மனம் ஒருமுகப்பட்ட நிலையில் இறைசிந்தனையுடன் இருப்பது மிக அவசியம்.

தண்ணீருக்குள் விமானம்

விஞ்ஞானத்தில் அவ்வப்போது வியக்கத் தக்க கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே இருக்கும். சமீபத்தில் நீரிலும், நிலத்திலும் செல்லும் கார் அறிமுகமானது. அதேபோல புதிதாக வந்திருப்பது தண்ணீருக்குள்ளும் பறக்கும் விமானம். இங்கிலாந்து ராணுவத்துக்கு சொந்தமான `சப் ஏவியேட்டர் சிஸ்டம்’ என்ற அமைப்பு இந்த அதிரடி விமானத்தை தயாரித்து உள்ளது. இந்த அதிசய விமானத்தின் சிறப்புகள் வருமாறு:-

* தரை, ஆகாயத்தைப் போலவே தண்ணீருக்குள்ளும் வேகமாகச் செல்லும்.
* பேட்டரிகளைக் கொண்டு இயங்கும்.
* ஆயிரம் அடி ஆழத்துக்கு கீழும் தண்ணீரின் அழுத்தத்தை தாங்கி இயங்கும் திறனுடையது.
* 11 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது.
* இதன் இறக்கைகள் பல்வேறு திசைகளிலும் திரும்பிச் செல்ல உதவியாக இருக்கும்.
* ஆளில்லாமலும் இயக்க முடியும்.
* 360 டிகிரி சுற்றிலும் (எதிரிகளை) கண்காணிக்கும் வசதி உள்ளது.
* மற்ற நீர்மூழ்கி கப்பல்களைப் போலவே சப்தமின்றி இயங்கி எதிரிகளை நிலைகுலையச் செய்யும்.

இந்த விமான தயாரிப்புப் பணியில் பங்குபெற்ற ஒரு ஆய்வாளர் கூறும்போது, “தண்ணீருக்குள் இயங்கும் வகையில் 22 அடி நீளமுள்ள 2 குட்டி விமானங்கள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இவற்றைத் தயாரிக்க 1.20 கோடி செலவாகியது. இதன் வேகத்தை அதிகரிக்க ஆய்வு செய்யப்படுகிறது” என்றார்.