Daily Archives: நவம்பர் 30th, 2009

பாதுகாப்பான கம்ப்யூட்டிங் வழிகள்

1. திடீர் திடீரென எழுந்து வரும் பாப் அப் விளம்பரங்களிலிருந்து பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டாம். ஸ்பேம் மெயில்களில் வரும் விளம்பரங்கள் எல்லாம் வேறு எதற்கோ உங்களை மாட்ட வைத்திடும் விளம்பரங்களே.
2. உங்களுடைய இமெயில் முகவரி, இல்ல முகவரி, பேங்க் அக்கவுண்ட் எண், அதன் இணையதளத்தில் நீங்கள் பயன்படுத்தும் பெயர், பாஸ்வேர்ட் மட்டுமின்றி, உங்களுக்குத் தெரிந்த மற்றவர்களின் மேற்படி தகவல்களையும் வெப்சைட்டில் தரும் முன் பலமுறை யோசிக்கவும். உங்கள் பணம் சார்ந்த தகவல்களை தரவே வேண்டாம்.
3. மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது செவ்வாய்க் கிழமையும் மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் வெப்சைட்டில் தரும் பேட்ச் பைல்களைக் கொண்டு, உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அப்டேட் செய்திட மறக்க வேண்டாம்.
4. ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்து இயக்காமல் இன்டர்நெட் தளங்களை பிரவுஸ் செய்திட வேண்டவே வேண்டாம். அண்மைக் காலத்திய அப்டேட் வரை பெற்ற பின்னரே,கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடவும்.
5. பயர்வால் ஒன்றை இன்ஸ்டால் செய்திடாமல் இன்டர்நெட் பிரவுசிங் மேற்கொள்ள வேண்டாம்.
6. மற்றவர்களின் கிரெடிட் கார்ட் எண், பேங்க் அக்கவுண்ட் எண் இவற்றைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டாம். இது வீணான பழியையும் கொண்டு வந்து சேர்க்கும்.
7. இணையத்தில் உங்கள் பேங்க் அக்கவுண்ட் சார்ந்த தகவல்களைப் பயன்படுத்துகையில், அந்த தளம் தோன்றுகையில் டாஸ்க் பாரின் சிறிய பேட் லாக் போன்ற படம் தெரிந்தால் மட்டுமே தரவும். அல்லது அதன் முகவரியில் அந்த தளம் பாதுகாப்பானது என்பதற்கான அடையாளத்தைத் தேடவும். பெரும்பாலும் இதன் முகவரிகள் https: என எஸ் (s) என்ற எழுத்தையும் சேர்த்துக் கொண்டு தொடங்கும்.
8.நைஜீரியா அல்லது மற்ற பிரபலமாகாத நாடுகளின் பேங்கர்கள் அல்லது பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு உங்களுக்கு வரும் இமெயில்களைப் படிக்காமலேயே நீக்கிவிடுங்கள்.
9.இதனை பார்வேர்ட் செய்திடுங்கள் என்று வரும் மெயில்களை அலட்சியம் செய்துவிடுங்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி கெட்ட பெயர் எடுக்காதீர்கள். எல்லாம் ஏமாற்றுவேலை.
10. உங்கள் மற்றும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பிறந்த நாள் மற்றும் முக்கிய நாட்களின் தேதிகளை பாஸ்வேர்டாகப் பயன்படுத்த வேண்டாம்.
இது என்ன பத்து கட்டளையா? என்று கேட்கிறீர்களா! இன்னமும் சில பாதுகாப்பிற்கான வழிகள் உள்ளன. ஆனால் குறைந்த பட்சம் இதனைப் பின்பற்றவும்.

மெருகு பெறும் பயர்பாக்ஸ்


தொடர்ந்து அதிக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பிற்கு போட்டியாக இயங்கும் பயர்பாக்ஸ் பிரவுசர், பல புதிய வழிகளில் மேம்பாடு அடைய உள்ளது. மொஸில்லா தன் இணைய தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் இரண்டு நிலைகளில் ஏற்படுத்தப் படும். முதல் நிலை மாற்றங்கள் பயர்பாக்ஸ் பதிப்பு 3.7ல் அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தரப்படும். மற்ற மாற்றங்கள் அனைத்தும் பயர்பாக்ஸ் தொகுப்பு 4ல் ஏற்படுத்தப்படும்.
பிரவுசர்களுக்கிடையேயான போட்டியில் தன் பயர்பாக்ஸ் நல்லதொரு இடத்தைப் பிடித்து வருவதனை மொஸில்லா நன்கு உணர்ந்துள்ளது. எனவே தான் எந்தவித ஆரவாரமும் ஆர்ப்பாட்டமும் இன்றி பல வசதிகளைத் தொடர்ந்து சேர்த்து வழங்கி வருகிறது.
தற்போதைய பயர்பாக்ஸ் முகப்பு தோற்றம் மிகப் பழமையாக இருப்பதாக மொஸில்லா எண்ணுகிறது. முகப்பு தோற்றத்தில், விஸ்டா தொகுப்பில் வந்த கிளாஸ் ஸ்டைலில் முதல் மாற்றம் இருக்கும் Page மற்றும் Tools என இரண்டு பிரிவுகள் மட்டுமே உள்ளதாக மெனு மாற்றி அமைக்கப்படும். Stop மற்றும் Reload ஆகிய இரண்டும் ஒரே பட்டனில் தரப்படும். மெனு பார் மறைக்கப்பட்டு ரிப்பன் ஸ்டைல் மெனு தரப்படும் என முன்பு அறிவித்தபோது பலத்த எதிர்ப்பு இருந்ததால், அதனைக் கைவிட்டுவிட்டது மொஸில்லா.
அட்ரஸ் பார் மற்றும் சர்ச் பார் ஒரே கட்டத்தில் தரப்படும். ஸ்டேட்டஸ் பார் எடுக்கப்படும். இவை எல்லாம் குரோம் பிரவுசர் போல தோற்றத்தைத் தருவதற்கான முயற்சிகள் என்று சிலர் கூறிய போது, மொஸில்லா அதனை வன்மையாக மறுத்து பயர்பாக்ஸ் எப்போதும் பயர்பாக்ஸ் போலத்தான் தோற்றமளிக்கும் எனக் கூறப்பட்டது.
அனைத்து பிரவுசர்களும் ஒரே மாதிரியான வேலையை மேற்கொள்வதால், சில வேளைகளில் இவை ஒன்றுக்கொன்று மற்றதைக் காப்பி செய்வது போலத் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென்று ஒரு தனித் தோற்றத்தைக் கொண்டுள்ளதை மறுக்க முடியாது.
பிரவுசர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள போட்டியில், இன்னும் இன்டர்நெட் தான் முதல் இடத்தில் உள்ளது. ஆனால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6ஐப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை யைக் காட்டிலும் கூடுதலானவர்கள் பயர்பாக்ஸினைப் பயன்படுத்துகின்றனர்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துவதை விட்டுவிட்டு, பலர் பயர்பாக்ஸ் பிரவுசருக்குத் தாவியதற்கு முக்கிய காரணம், இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பல இடங்கள் ஹேக்கர்களுக்குச் சாதகமாக இருந்ததுதான். ஆனால் நிலைமை இப்போது தலைகீழாக மாறியுள்ளது. இணைய பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்திடும் ஸென்ஸிக் என்ற அமைப்பு அண்மையில் நடத்திய ஆய்வில், பயர்பாக்ஸ் பிரவுசர் தான் ஹேக்கர்கள் காணும் பலவீனமான இடங்களைக் கொண்டிருப்பதில் முதல் இடம் பெற்றுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதன் பாதுகாப்பற்ற தன்மை 44 சதவீதம், சபாரி 35சதவீதம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 15சதவீதம் என அறிவித்துள்ளனர். இந்த ஆய்வின் நம்பகத் தன்மை இப்போது கேள்விக் குறியாகி இருந்தாலும், பயர்பாக்ஸ் ஏற்றுக் கொள்ளும் ப்ளக் இன் புரோகிராம்கள்தான் இந்த பாதுகாப்பற்ற தன்மையினைத் தருவதாக தெரியவந்துள்ளது. ஆனால், பயர்பாக்ஸ் உடனே தன் பிரவுசரில் இருந்த பலவீனமான இடங்களைச் சரி செய்துவிட்டது.

பயர்பாக்ஸ் 3.6 பீட்டா 2
பயர்பாக்ஸ் வாடிக்கையாளர்கள், இதன் பதிப்பு 3.5 னைத்தான் அதிகமாகப் பயன்படுத்து கின்றனர் என்றாலும், பலரும் ரிஸ்க் எடுத்து பயர்பாக்ஸ் 3.6 சோதனைத் தொகுப்பினையும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கான சோதனைத் தொகுப்பு 2 அண்மையில் வெளியிடப்பட்டது. அதில் 190 பிரச்னைகள் சரி செய்யப்பட்டதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சென்ற வாரம் வெளியான பயர்பாக்ஸ் 3.6 சோதனை பதிப்பு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் சில புதிய வசதிகளுக்கு இணைந்து வடிவமைக்கப் பட்டுள்ளது. ஏரோ பீக், டாஸ்க்பார் தம்ப்நெயில் பிரிவியூ போன்றவற்றை இதற்கு எடுத்துக் காட்டுக்களாகக் கூறலாம். ஆனால் விண்டோஸ் 7 தரும் ஜம்ப் லிஸ்ட்டின் வசதிகள் பயர்பாக்ஸ் பதிப்பில் இல்லை.
குறிப்பாக இதனுடன் இயங்க முடியாமல் இருக்கும் சாப்ட்வேர் புரோகிராம்களால், பயர்பாக்ஸ் கிராஷ் ஆவது தடுக்கப்பட்டுள்ளது.
பிரவுசரின் தோற்றத்தினை பயன்படுத்துபவர்கள் எளிதில் மாற்ற பெர்சனா என்ற டூலை மொஸில்லா வழங்கியது. இந்த தொகுப்பில் இன்னும் பல ஸ்கின்கள் தரப்பட்டுள்ளன. இப்போது பெர்சனாவில் ஒரே கிளிக் செய்வதன் மூலம் பயர்பாக்ஸ் தோற்றத்தினை மாற்றுவதற்கு வழி தரப்பட்டுள்ளது. வீடியோக்களை இயக்குகையில் முழு திரையிலும் பார்க்க வழி அமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்து பவர்களுக்கு, பழசாகிப் போன, பயன்படுத்த முடியாத ப்ளக் இன் புரோகிராம்கள் குறித்த அறிவிப்பு வழங்கப்படுகிறது. ஆட் ஆன் தொகுப்புகள் புதிய பிரவுசர் தொகுப்பிற்கு ஏற்றவைதானா என்று அறிய ஆட் ஆன் கம்பாடிபிளிட்டி ரீடர் என்னும் புரோகிராம் டவுண்லோட் செய்து பயன்படுத்தும் வகையில் தரப்படுகிறது.
கம்ப்யூட்டரிலிருந்து பைலை பிரவுசரின் அட்ரஸ் பாரில் போட்டு திறக்க வழி செய்யப்பட்டுள்ளது.
மொஸில்லா என்ன செய்ய வேண்டும் என்பதனை கூகுள் தந்த குரோம் பிரவுசர் சுட்டிக் காட்டியது. அதே போல குரோம் பிரவுசரில் இருந்த புதிய வசதிகளை பயர்பாக்ஸ் தரத் தொடங்கியது. பிரவுசர் யுத்தத்தில் பயர்பாக்ஸ், குரோம் பிரவுசரை எதிர் கொண்டாலும், ஓப்பன் சோர்ஸ் அமைப்பில் இரண்டும் ஒரே மாதிரியான செயல்பாட்டினையே மேற்கொண்டுள் ளன என்பது குறிப்பிடத்தக்கது. எச்.டி.எம்.எல். வசதியை புரோகிராமிங் மற்றும் டிஸ்பிளேவுக்கான வலிமையான சாதனமாகக் கொண்டு வருவதில் இரண்டும் செயல்படுகின்றன.
பயர்பாக்ஸ் 3.7 அடுத்த 2010 ஆம் ஆண்டின் நடுவிலும், பதிப்பு 4 அடுத்து ஒரு ஆண்டிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் அறிவிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதலாகப் புதிய வசதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குரோம் ஓ.எஸ். என் வழி தனி வழி

//
//

கம்ப்யூட்டர் பயன்பாட்டில் முற்றிலும் புதிய ஒரு திருப்பத்தை ஏற்படுத்தக் கூடிய திறன் கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கூகுள் “குரோம் “ என்ற பெயரில் சென்ற நவம்பர் 19ல் வெளியிட்டது. இதன் சோர்ஸ் கோட் எனப்படும் கட்டமைப்பு வரிகளை தன்னுடைய இணைய தளத்தில் கூகுள் வெளியிட்டுள்ளது. பொது மக்கள் பயன்பாட்டிற்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கிடைக்க இன்னும் ஓர் ஆண்டு ஆகலாம்.
ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்றவுடன் அது ஒரு டிவிடியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்த்த அனைவருக்கும், இதன் கட்டமைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனியாகக் கிடைக்காது. கம்ப்யூட்டர்களில், குறிப்பாக நெட்புக் கம்ப்யூட்டர்களில் பதிந்து கிடைக்கும். எப்படி மொபைல் போனில் நாம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிக்காமல், அதில் பதிந்து வருவதனைப் பயன்படுத்துகிறோமோ, அதே போல குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பதிந்து வரும் கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு வரும்.
இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாடு பெரும்பாலும் இன்டர்நெட்டைச் சார்ந்து இருப்பதனை உணர்ந்த கூகுள், வாடிக்கையாளர்களுக்கு அதன் வழியிலேயே முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டினையும் தரும் வகையில், குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உருவாக்கியுள்ளது. இந்த சிஸ்டத்தை இயக்கியவுடன் இன்டர்நெட்டில் இணைந்து, உங்களுக்கு என்ன பயன்பாடு வேண்டும் என்கிற ஆப்ஷன் கேட்கப்படும். டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட், அனிமேஷன், இணைய தளம், ஆடியோ வீடியோ எடிட்டிங் இன்னும் பல செயல்பாடுகள் பட்டியலிடப்பட்டு நீங்கள் எது வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கலாம். அதற்கான அப்ளிகேஷன் சாப்ட்வேர் உங்களுக்குத் தரப்படும். நீங்கள் தேவையான பைல்களை உருவாக்கலாம். ஏற்கனவே உருவாக்கி இருப்பதனை எடிட் செய்திடலாம். பின் இவற்றை நீங்கள் விரும்பினால், கம்ப்யூட்டரில் உள்ள ஹார்ட் டிஸ்க், சிடி அல்லது பென் டிரைவில் பதிந்து சேவ் செய்து வைக்கலாம். இல்லை என்றால் குரோம் சிஸ்டம் மூலம் பெறும் ஆன்லைன் ஸ்டோரேஜ் வசதியைப் பயன்படுத்தி சேவ் செய்திடலாம். இதனால் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், குரோம் ஓ.எஸ். உள்ள ஒரு கம்ப்யூட்டர் மூலம் உங்கள் பைல்களை நீங்கள் எடிட் செய்திடலாம். உங்கள் கம்ப்யூட்டரில் இருந்து பைல்களைத் தயார் செய்தது போல அவற்றை உருவாக்கலாம்.
இதனால் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை நீங்கள் விலை கொடுத்து வாங்கி உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கத் தேவையில்லை. எங்கே அவை கரப்ட் ஆகி, தக்க தருணத்தில் காலை வாரிவிடும் வகையில் கிராஷ் ஆகிவிடுமோ என்ற கவலை இல்லை. சேவ் செய்து வைக்க அதிகக் கொள்ளளவில் ஹார்ட் டிஸ்க் வாங்கிப் பொருத்த வேண்டியதில்லை. இவற்றை எல்லாம் குரோம் ஓ.எஸ். மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
இதனால் எப்போதாவது ஒரு முறை பயன்படுத்தக் கூடிய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளை, உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்க வேண்டியதில்லை.
ஆன்லைனில் அனைத்தும் இயங்குவதால் வேகம், எளிமை, பாதுகாப்பு ஆகியன அடங்கியதாக நம் கம்ப்யூட்டர் அனுபவம் இருக்கும். குரோம் ஓ.எஸ். இயங்க 7 விநாடிகள் போதும். எதிர்காலத்தில் இந்த கால அவகாசம் இன்னும் குறையும்.
குரோம் ஓ.எஸ். முகப்பு தோற்றத்தில் குரோம் பிரவுசரைப் போலவே தோற்றமளிக்கும். கூகுள் அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் (டாகுமெண்ட்ஸ், ஸ்ப்ரெட்ஷிட், கிராபிக்ஸ் போன்றவை) அனைத்தும் தனித்தனி டேப்களில் தரப்பட்டிருக்கும். எது வேண்டுமோ அதற்கான டேப்பினைக் கிளிக் செய்து பயன்படுத்தலாம்.
நம்மிடம் உள்ள மெமரி கார்டு, மொபைல் போன், கேமரா ஆகியவற்றை கம்ப்யூட்டரில் இணைத்து அவற்றில் உள்ள படங்கள், ஆடியோ வீடியோ பைல்களைக் கம்ப்யூட்டர் பைல்களாக இயக்கலாம்.
இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை எப்படி வாங்கி இணைப்பது? தேவையே இல்லை. “குரோம் சிஸ்டம் பதிந்த கம்ப்யூட்டர்’ என்று மட்டுமே கேட்டு வாங்க முடியும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனியே கிடைக்காது. இதற்காகக் கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களிடம் கூகுள் நிறுவனம் பேசி வருகிறது. முதலில் குரோம் ஓ.எஸ். பதிந்த நெட்புக் கம்ப்யூட்டர்கள் மட்டுமே கிடைக்கும். பின் லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் கிடைக்கும். தற்போது டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் இடத்தில் லேப் டாப் கம்ப்யூட்டர்களும், லேப் டாப் இடத்தில் நெட்புக் கம்ப்யூட்டர்களும் இடம் பிடித்து மக்களிடையே பரவி வருகின்றன. எனவே தான் குரோம் ஓ.எஸ். முதலில் நெட்புக் கம்ப்யூட்டர்களில் தரப்பட இருக்கிறது.
இப்போது கம்ப்யூட்டரில் பயன்படுத்தப்படும் விண்டோஸ், மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் எல்லாம் இணையம் பயன்பாட்டில் இல்லாத காலத்தில் தொடங்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டு கிடைப்பவை. இப்போது எல்லாமே இன்டர்நெட் என்று ஆகிவிட்ட நிலையில், அதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்க வேண்டும் என கூகுள் திட்டமிட்டு, குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைத்துள்ளது.
மக்கள் தங்கள் கம்ப்யூட்டரில் எல்லாமே உடனே கிடைக்க வேண்டும் என எண்ணுகின்றனர். இமெயில் பார்க்க வேண்டும் எனில், ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்கி, பிரவுசர் அல்லது இமெயில் கிளையண்ட் புரோகிராமை இயக்கி, இணைய தளத்தை அணுகி என அதிக நேரம் செலவழித்த பின்னரே இமெயிலைப் பெறுகின்றனர். இந்த தடைகற்களை நீக்கி வேகமாக இமெயிலைப் பெற்றுத் தருகிறது குரோம் ஓ.எஸ்.
வழக்கமான கம்ப்யூட்டர் பயன்பாட்டிலிருந்து, முற்றிலும் மாறுதல்களுடன், கவலையற்ற, அதி வேகமான, எளிதான கம்ப்யூட்டர் பயன்பாட்டினைத் தர இருக்கிறது குரோம் ஓ.எஸ். இந்த ஓ.எஸ். இப்போது பயன்பாட்டில் இருக்கும் கம்ப்யூட்டர்களுக்கும் அவற்றில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுக்கும் மாற்றானது அல்ல. இதன் வழி தனி வழி.
எச்.பி., ஏசர், அடோப், லெனோவா, குவால்காம், டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ், ப்ரீ ஸ்கேல், இன்டெல் ஆகியவை இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து செயல்பட ஒத்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பில்கேட்ஸ் இது பற்றிக் குறிப்பிடுகையில் குரோம் ஓ.எஸ். லினக்ஸ் சிஸ்டத்தின் இன்னொரு வடிவம் போல இருக்கிறது. இதன் இயக்கம் குறித்து குறைந்த தகவல்களே வந்திருப்பதால், அது என்ன செய்திடும் என்று அறிய ஆர்வம் அதிகரிக்கிறது என்றார். குரோம் ஓ.எஸ். இலவசமா? என்ற கேள்விக்கு கூகுள் இன்னும் விடையளிக்கவில்லை. ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் இயங்குவதால் இலவசமாக அல்லது மிக மிகக் குறைந்த விலையில் இது கிடைக்கலாம். இதனால் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் விண்டோஸ் சிஸ்டத்திலிருந்து மக்கள் இதற்கு மாறலாம்.
குரோம் ஓ.எஸ். இலவசமாகத் தரப்படும் நிலையில், நிச்சயமாக அதில் விளம்பரங்கள் இடம் பெறலாம். குரோம் ஓ.எஸ். ஓப்பன் சோர்ஸ் அடிப்படையில் உருவானதால், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் உருவாக்கப்பட்டு இலவசமாகக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
அடுத்த ஆண்டில் குரோம் ஓ.எஸ். கம்ப்யூட்டர்கள் மிகச் சிறிய அளவில், சிறிய ஸ்கிரீன், டச் பேட், கீ போர்டு ஆகியவற்றுடன் கிளாம் ஷெல் கம்ப்யூட்டர்களாக வெளிவரலாம்.
குரோம் ஓ.எஸ். வழக்கமான ஹார்ட் டிஸ்க்குகளுக்குப் பதிலாக சாலிட் ஸ்டேட் டிஸ்க்குகளையே சப்போர்ட் செய்திடும். இதனால் மின்சக்தி குறைந்த அளவே பயன்படுத்தப்படும்; வேகம் அதிகரிக்கும்.
இயக்க வேகம் மிக மிகக் குறைந்த அளவில் இருக்கும். ஒரு பட்டனை அழுத்தியவுடன், கம்ப்யூட்டர் தயாராகி உங்களை இணையத்தில் இடம் பெறச் செய்திடும் குரோம் ஓ.எஸ்.
அனைத்துமே வெப் அடிப்படையிலான அப்ளிகேஷன் களாக இருப்பதால், நாம் எந்த சாப்ட்வேர் தொகுப்பையும் இன்ஸ்டால் செய்து, அப்டேட் செய்து பராமரிக்க வேண்டியதில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் தருவதில் நிலையான முதல் இடத்தைப் பெற்றுள்ளது. ஆனால் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் பயன்பாடு குறைந்து வருகிறதே. அந்த இடத்தில் லேப்டாப் மற்றும் நெட்புக் கம்ப்யூட்டர்கள் கைப்பற்றி வருகின்றன. எனவே தான் கூகுள் நெட் டாப் கம்ப்யூட்டர்களில் தன் ஓ.எஸ். பயணத்தைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் டெஸ்க்டாப் பழக்கத்தை மூடிவிட கூகுள் திட்டமிடுகிறது.

குரோம் ஓ.எஸ். குறித்து சுருக்கமாகச் சொல்வதென்றால்,
1. வெப் பிரவுசர் இங்கே டெஸ்க் டாப் கம்ப்யூட்டராகச் செயல்பட உள்ளது. எல்லாமே இணையதளத்துடன் கூடிய தொடர்பாகவே அமையும்.
2. வழக்கமான பைல், போல்டர், டிரைவ் எல்லாம் இருக்காது. எல்லாமே இணையத்தில் சேர்த்து வைக்கப்படும்.
3. குரோம் ஓ.எஸ். உள்ள கம்ப்யூட்டரில் ஷட் டவுண் பட்டன் இருக்காது. ஸ்லீப் மோடில் தான் இருக்கும். எனவே தொட்டவுடன் இயங்கத் தொடங்கி இணையத்தில் உங்களை அமர வைக்கும்.
4. கம்ப்யூட்டரில் எந்த சாப்ட்வேருக்கும் அப்டேட் தேவையில்லை. எல்லா அப்ளிகேஷனும் இணையத்திலிருந்தே நமக்குத் தரப்படுவதால், அப்போது தயாராக அப்டேட் செய்யப்பட்டுள்ள சாப்ட்வேர் தொகுப்புதான் பயன்படுத்தக் கிடைக்கும்.
5. எதுவுமே கம்ப்யூட்டரில் ஸ்டோர் செய்யப்படமாட்டாது. எனவே வைரஸ் தாக்கி கெடுக்கும் என்ற சந்தேகத்திற்கு இடமே இல்லை. அதிக பாதுகாப்பான, கவலையற்ற கம்ப்யூட்டிங் சுகம் கிடைக்கும்.

மைக்ரோசாப்ட் வழங்கும் அஸுர்


வெகு காலமாக எதிர்பார்த்து வந்த ஆன்லைன் சாப்ட்வேர் அப்ளிகேஷன் சேவையினை மைக்ரோசாப்ட் வரும் புத்தாண்டு முதல் தர முடிவு செய்துள்ளது. ஜனவரி 1 முதல் விண்டோஸ் அஸூர் க்ளவுட் கம்ப்யூட்டிங் என்ற பெயரில் இந்த சேவை கிடைக்கும்.
இன்டர்நெட் மூலம் தங்களுக்குத் தேவையான சாப்ட்வேர் அப்ளிகேஷன் தொகுப்புகளையும், பைல்கள் சேவ் செய்து வைக்க டிஸ்க் இடத்தையும் பெற தற்போது மக்கள் விரும்பு கின்றனர். இதனால் பல தொல்லைகளிலிருந்து விடுபடுகின்றனர். எனவே இன்டர்நெட் சேவையினைக் கட்டணம் செலுத்திப் பெறுவது போல, இந்த சேவைகளையும் ஆன்லைனிலேயே பெற்றுப் பயன்படுத்த விரும்புகின்றனர். இந்த எதிர்பார்ப்பினை மைக்ரோசாப்ட் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள திட்டமிட்டு, ஓராண்டுக்கு முன் பரீட்சார்த்த அடிப்படையில் தந்து வந்தது. தற்போது இதனை முழுமையான கட்டமைப்பில் தர முடிவு செய்து, ஜனவரி 1 முதல் இதில் இறங்குகிறது. சென்ற வாரம் நடைபெற்ற மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் வல்லுநர்களின் ஆண்டுக் கூட்டத்தில், அப்பிரிவின் தலைவர் ரே ஓஸி அறிவித்தார்.
முதல் மாதத்தில் இந்த சேவை இலவசமாக வழங்கப்படும். பிப்ரவரி முதல் பயன்படுத்தப்படும் சேவைகளுக்கு மட்டும் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இந்த ஆன்லைன் சாப்ட்வேர் மற்றும் சேவை துறையில் மைக்ரோசாப்ட் நிச்சயம் பெரிய அளவில் இயங்க முடியும். தாமதமாகத்தான் இதனை மைக்ரோசாப்ட் இயக்க முன் வந்துள்ளது. ஏற்கனவே அமேஸான் (Amazon.com Inc) கட்டணம் பெற்றும் கூகுள் இலவசமாகவும் இந்த சேவையினை ஓரளவிற்கு வழங்கி வருகின்றனர்.

 

பயம் காட்டிக் கொடுக்கும் உண்மைகள்!


“நீங்க யானைக்கு பயப்படுவீங்களா? பூனைக்கு பயப்படுவீங்களா?”. இந்தக் கேள்வியை சின்னப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கேட்டு விளையாடுவார்கள்.

`நீங்க பயப்படுவீங்களான்னு கேட்டால், பலர் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். சிலர் “நான் யாருக்கும் பயப்படமாட்டேன்” என்று சொல்லிவிட்டு இருட்டினால் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள். உண்மையைச் சொல்லாவிட்டாலும் இந்தக் கருவி நீங்கள் பயந்தாங்கொள்ளி ஆசாமி என்பதை கண்டுபிடித்துவிடும். ஆமாம், பயத்தை கண்டுபிடிக்கும் கருவி வந்துவிட்டது.

“பயத்தை கண்டுபிடித்து என்ன செய்வது? பயப்படாம இருக்க ஏதாவது மருந்து கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா?”

அப்படி இல்லீங்க, ஒருவரின் பயத்தை வைத்து பல உண்மைகளை கண்டுபிடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். தீவிரவாதிகளையும் அடையாளம் காணலாம்.

முறுக்கு மீசை, முகத்தில் தழும்பு இதெல்லாம் பழைய பட வில்லன்களுக்குத்தான் பொருந்தும். இப்போதெல்லாம் சமூக விரோதிகள் சாதாரண மனிதர்களோடு மனிதராக கலந்துவிட்டார்கள். எந்தவிதத்திலும் சந்தேகம் இல்லாதபடி நடந்து கொள்கிறார்கள். அதனால்தான் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதும், அழிப்பதும் அரசாங்கத்துக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.

இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் இந்த பயம் கண்டுபிடிக்கும் கருவி (பியர் டிடெக்டர்) பயன்படுத்தப்பட உள்ளது. ஒருவரது உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாசனையை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்று இது முடிவுகட்டிவிடும்.

சாதாரண நேரங்களைவிட பயம் வரும்போதுதான் நமக்கு அதிகமாக வியர்க்கும். அந்த வாசனையில் குற்றவாளிக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு. அந்த மாற்றத்தை வைத்து தீவிரவாதிகள், குற்ற எண்ணம் உடையவர்களை `பியர் டிடெக்டர்’ கருவி கண்டு பிடித்துவிடும்.

வருங்காலத்தில் நிறைய குற்றங்களைத் இந்தக்கருவி தடுக்கும் என்று இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

கிருபானந்த வாரியார்- பக்திக்கு வேண்டாம் பணம்

ஒரு பறவை வானில் பறக்க வேண்டுமானால் அதற்கு இரண்டு இறக்கைகள் வேண்டும். அதுபோல இறைவழிபாட்டிற்கு அன்பும், ஆச்சாரமும் வேண்டும். அன்பில்லாத ஒழுக்கமோ அல்லது ஒழுக்கமில்லாத அன்போ பயனற்றதாகும்.
கண்ணால் காணமுடியாததால் கடவுள் இல்லை என்று கூறக்கூடாது. இந்த உடம்பிலேயுள்ள உயிரை நாம் எப்போதாவது கண்ணால் கண்டதுண்டா? உயிரைப் பார்க்க முடியாததால் நாங்கள் உயிரில்லாதவர்கள் என்று கூறினால் உலகம் சிரிக்குமல்லவா? உடம்புக்குள் உயிரும், உயிருக்குள் தெய்வமும் உறைந்திருக்கின்றன. ஆகவே, கடவுள் உயிர்கள் தோறும் உறைகின்றார். எவ்வுயிரும் இறைவன் சன்னிதியே. அதனால், எல்லா உயிர்களுக்கும் நாம் நன்மையே செய்ய வேண்டும். உயிர்களுக்குச் செய்யும் நன்மை கடவுளுக்குச் செய்யும் நன்மையாகும்.
கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என்று யுகங்கள் நான்காகும். ஒவ்வொரு யுகத்திலும் இறைவனை அடையும் வழிகள் வேறுவேறாகும். கிருதயுகத்தில்ஞானத்தினாலும், திரேதாயுகத்தில் தானத்தினாலும், துவாபரயுகத்தில் யாகத்தினாலும், கலியுகத்தில் பக்தியினாலும் முக்தி பெறலாம். பக்தி செய்ய பணச்செலவு செய்ய வேண்டியதில்லை. இறைவனின் திருநாமத்தை அன்போடு அனுதினமும் உச்சரித்தால் போதும்.