பயம் காட்டிக் கொடுக்கும் உண்மைகள்!


“நீங்க யானைக்கு பயப்படுவீங்களா? பூனைக்கு பயப்படுவீங்களா?”. இந்தக் கேள்வியை சின்னப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் கேட்டு விளையாடுவார்கள்.

`நீங்க பயப்படுவீங்களான்னு கேட்டால், பலர் உண்மையைச் சொல்ல மாட்டார்கள். சிலர் “நான் யாருக்கும் பயப்படமாட்டேன்” என்று சொல்லிவிட்டு இருட்டினால் வீட்டைவிட்டு வெளியே வரமாட்டார்கள். உண்மையைச் சொல்லாவிட்டாலும் இந்தக் கருவி நீங்கள் பயந்தாங்கொள்ளி ஆசாமி என்பதை கண்டுபிடித்துவிடும். ஆமாம், பயத்தை கண்டுபிடிக்கும் கருவி வந்துவிட்டது.

“பயத்தை கண்டுபிடித்து என்ன செய்வது? பயப்படாம இருக்க ஏதாவது மருந்து கண்டுபிடிச்சா நல்லா இருக்கும்ன்னு நினைக்கிறீங்களா?”

அப்படி இல்லீங்க, ஒருவரின் பயத்தை வைத்து பல உண்மைகளை கண்டுபிடிக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். நீங்கள் என்ன மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதை கண்டுபிடிக்கலாம். தீவிரவாதிகளையும் அடையாளம் காணலாம்.

முறுக்கு மீசை, முகத்தில் தழும்பு இதெல்லாம் பழைய பட வில்லன்களுக்குத்தான் பொருந்தும். இப்போதெல்லாம் சமூக விரோதிகள் சாதாரண மனிதர்களோடு மனிதராக கலந்துவிட்டார்கள். எந்தவிதத்திலும் சந்தேகம் இல்லாதபடி நடந்து கொள்கிறார்கள். அதனால்தான் தீவிரவாதிகளை கண்டுபிடிப்பதும், அழிப்பதும் அரசாங்கத்துக்கு பெரிய தலைவலியாக இருந்து வருகிறது.

இந்தப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில்தான் இந்த பயம் கண்டுபிடிக்கும் கருவி (பியர் டிடெக்டர்) பயன்படுத்தப்பட உள்ளது. ஒருவரது உடலில் இருந்து வெளிப்படும் வியர்வை வாசனையை வைத்தே அவர் எப்படிப்பட்டவர் என்று இது முடிவுகட்டிவிடும்.

சாதாரண நேரங்களைவிட பயம் வரும்போதுதான் நமக்கு அதிகமாக வியர்க்கும். அந்த வாசனையில் குற்றவாளிக்கும் நமக்கும் வேறுபாடு உண்டு. அந்த மாற்றத்தை வைத்து தீவிரவாதிகள், குற்ற எண்ணம் உடையவர்களை `பியர் டிடெக்டர்’ கருவி கண்டு பிடித்துவிடும்.

வருங்காலத்தில் நிறைய குற்றங்களைத் இந்தக்கருவி தடுக்கும் என்று இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

%d bloggers like this: