Monthly Archives: நவம்பர், 2009

மொழிபெயர்க்கும் `மூக்கு கண்ணாடி’


மக்களிடையே தொடர்புக்கு அடிப்படையானது மொழி. இன்று அறிவியல் வளர்ச்சியால் உலகமே சுருங்கிவிட்டது. அதனால் பலமொழிகளை அறிந்து வைத்திருப்பது நமக்கு அவசியமாகிறது. குறைந்தபட்சம் தாய்மொழி, தேசியமொழி, உலகப்பொதுமொழி ஆகியவற்றையாவது அறிந்திருக்க வேண்டும்.

சிலர் பொது இடங்களில் பலமொழி பேசி அசர வைப்பார்கள். பலர் தாய்மொழியைத் தவிர மற்றமொழி தெரியாமல் விழி பிதுங்க நிற்பார்கள். படித்த சிலர்கூட, பொது இடங்களில் இருக்கும் அறிவிப்புகள் வேறு மொழியில் இருந்தால் கண்டும் காணாமல் சென்றுவிடுவார்கள். படிக்கும் குழந்தைகளுக்கும் மற்றமொழிப் பாடங்கள் சிரமமாக இருக்கும்.

இவர்களுக்கு உதவும் வகையில் மொழி பெயர்க்கும் கண்ணாடி வந்திருக்கிறது. இந்த மூக்குக்கண்ணாடியுடன் இணைந்து ஒரு டிரான்ஸ்லேட்டர் (மொழிபெயர்க்கும்) கருவி இருக்கும். இது ஒரு கேமராவும், மைக்ரோபோனும் இணைந்த கருவியாகும். இந்த கண்ணாடியை அணிந்து கொண்டு நீங்கள் வாசிக்கும்போது மைக்ரோபோன் வேலை செய்து அதை மெமரி கருவிக்கு அனுப்பும். அங்கிருந்து அதற்கான மொழிபெயர்ப்பு வார்த்தை உங்களுக்குத் தெரியும்படியாக காட்டப்படும். இதனால் நீங்கள் எளிதில் அறிவிப்புகளையோ, பத்திரிகைகளையோ வாசித்து அறிந்து கொள்ள முடியும்.

இந்தக்கருவி ஜப்பான் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு சோதனை முறையில் வெற்றி கிடைத்துவிட்டது. ஆனால் நாம் வாசிக்கும் வேகத்துக்கு மொழி பெயர்க்கும் வேகம் இல்லை. எனவே இதன் வேகத்தை அதிகரிக்கவும், வார்த்தைகளை மொழிபெயர்த்து உச்சரித்து சொல்லும் வகையில் மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகிறது.

படிக்கும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, மொழித்தடுமாற்றம் உடைய பலருக்கும் இந்தக் கண்ணாடி உபயோகப்படும்.

உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்கும் பசை


மருத்துவத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே வருகின்றன. அறுவை சிகிச்சை இல்லாமல் நவீன முறையில் பல்வேறு நோய்களை குணப்படுத்தப்படுத்தக்கூடிய நிலை இன்று சாத்தியமாகி இருக்கிறது.

உறுப்பு மாற்றம், செயற்கை உறுப்புகள் போன்றவை மருத்துவத்துறையை உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளன. மிக எளிதாக நவீன முறையில் சிகிச்சை அளிக்க பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்ட வண்ணம் உள்ளன.

அந்த வரிசையில், கடலில் வாழும் ஒருவகையான பூச்சியின் உடலில் இருக்கும் ஒருவிதமான பசையைக் கொண்டு உடைந்த எலும்புகளை ஒட்ட வைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

கடலில் வாழும் சான்ட்கேஸ்ட்லி எனப்படும் மிகச்சிறிய பூச்சிகள் தங்களுடைய உடலில் பசை போன்ற திரவத்தை ஒளித்து வைத்திருக்கின்றன. நீண்டகால ஆராய்ச்சிக்குப் பிறகு, அந்தப் பசையானது மருத்துவத்துறைக்குப் பயன்படும் எனத் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, உடைந்த எலும்புகளை ஒட்ட வைத்தல், ஒழுங்கற்ற எலும்புகளை சரி செய்தல் போன்றவற்றிற்குப் பயன்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனுடைய தொடக்க சோதனையில், இந்த பசை மூலம் சிகிச்சை பெற்றவர்கள் முன்பைவிட அதிக பலத்துடன் செயல்படுவதாக தெரிய வந்துள்ளது.

ஈரமான பகுதிகளிலோ அல்லது தண்ணீரில் விழுந்தாலோ இந்த பசை கரையாது என்பது குறிப்பிடத்தக்கது.

விண் ஸிப் 14

பல்களைச் சுருக்கி அமைக்கவும், பின் அவற்றை விரித்துப் பயன்படுத்தவும் விண்ஸிப் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு புரோகிராம் ஆகும். இந்த புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டும் என்றாலும், இதன் சோதனைப் பதிப்பு இலவசமாக இதன் நிறுவனத்தால் வழங்கப்படுவதால், பலரும் அதனையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அண்மையில் வெளியானதைத் தொடர்ந்து, அதன் பல வசதிகளைப் பயன்படுத்தி விண்ஸிப் புரோகிராமின் புதிய பதிப்பு 14 அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கும் சோதனைப் பதிப்பு இலவசமாகக் கிடைக்கிறது.
விண்டோஸ் 7 தரும் லைப்ரரி மற்றும் ஜம்ப் லிஸ்ட் வசதிகளை விண்ஸிப் 14 நன்றாகப் பயன்படுத்திக் கொள்கிறது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைந்து வந்தது போன்ற பயன்பாட்டு எளிமையை இது தருகிறது. ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களில் உள்ள பைல்களை விண்டோஸ் 7 லைப்ரரி மூலம் ஸிப் செய்திடலாம். பைல்கள் எங்கிருந்தாலும் அவற்றை மொத்தமாக ஒரு ஸிப் பைலில் கொண்டு வரலாம். இந்த வசதி இதற்கு முன் இல்லை. விண்ஸிப் புரோகிராமினை ஜம்ப் லிஸ்ட்டில் இணைத்து வைக்கலாம். தேவைப்படுகையில் இதனைக் கிளிக் செய்து நேரடியாகப் பயன்படுத்தலாம். பைல்களைச் சுருக்கலாம்; விரித்துப் பயன்படுத்தலாம்.
விண் ஸிப் 14, விண்டோஸ் 7 வசதிகளைப் பயன்படுத்தினாலும், இதற்கு முன் உள்ள விண்டோஸ் சிஸ்டங்களுடனும் பயன்படுத்தலாம்.
இந்த பதிப்பில் சுருக்கப்பட்ட பைல்களுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. தானாகவே தற்காலிகமாகத் தான் உருவாக்கிய பைல்களை அழிக்கிறது. சுருக்கப்பட்ட பைல்களின் நகல்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தால் அவற்றையும் நீக்குகிறது. பைல்களை முன்னதாகப் பார்ப்பதற்கு மட்டும் என உருவாக்கப்பட்டிருந்தால் அவற்றையும் அழிக்கிறது.
மேலே சொல்லப்பட்ட வசதிகள் அனைத்தும்,ஏற்கனவே விண்ஸிப் புரோகிராம்களில் தரப்பட்ட வசதிகள் அனைத்திற்கும் கூடுதலாகத் தரப்பட்டுள்ளன. இந்த விண்ஸிப் பதிப்பில் .zipx என்னும் கம்ப்ரஸன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமான சுருக்கும் நிலையைக் காட்டிலும், கூடுதலாக சிறிய அளவில் பைல்களைச் சுருக்குகிறது. ஏற்கனவே சுருக்கப்பட்ட வடிவில் இருக்கும் .jpg பைல்களை மேலும் 20% சுருக்குகிறது.
50 டாலர் கூடுதலாகச் செலுத்தினால் கூடுதல் வசதிகளுடன் விண்ஸிப் 14 கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி பைல்களை சிடி மற்றும் டிவிடிக்களில் எழுதலாம்.
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே பைல்களைச் சுருக்கும் வசதி இருக்கையில், ஏன் இது போன்ற தனியாக கம்ப்ரஸ் செய்திடும் புரோகிராம்களை விலை கொடுத்து வாங்க வேண்டும் என சிலர் வாதிடலாம். விண்ஸிப், விண்டோஸ் தரும் வசதிகளைக் காட்டிலும் சில கூடுதல் வசதிகளைத் தருகிறது. எளிதாக ஸிப் செய்வதும், அவற்றை விரித்துக் கொடுப்பதும் விண்ஸிப் புரோகிராமின் தனி குணங்களாகும்.
வழக்கம்போல விண்ஸிப் 14 பதிப்பின் சோதனைக்குத் தரப்படும் புரோகிராமினை http://www.winzip.com// என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம். கட்டணம் செலுத்தி வாங்க விரும்பினால் 30 டாலர் செலுத்த வேண்டும்.

சோனி வழங்கும் ஆடு புலி ஆட்டம்

கம்ப்யூட்டரில் கேம்ஸ் விளையாட முடியும் என்றாலும், பல இல்லங்களில் சிறுவர்கள் கேம்ஸ் விளையாட பிளே ஸ்டேஷன்கள் என்னும் சாதனத்தைப் பயன்படுத்துவதனைக் காணலாம். இவற்றிற்கான கேம்ஸ் தயாரிப்பில் சோனி நிறுவனம் அண்மையில் புதுமையைக் கொண்டுவந்துள்ளது. தமிழில் நம் நாட்டிற்கேற்ற கேம்ஸ்களை வடிவமைத்துத் தந்துள்ளது. இதற்கென சோனி கம்ப்யூட்டர் என்டர்டெய்ன் மென்ட் மற்றும் கேம் சாஸ்திரா சொல்யூசன்ஸ் இணைந்து பல கேம்ஸ்களைத் தமிழில் உருவாக்கித் தந்துள்ளன. பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் பி.எஸ்.2 (ரூ.499) மற்றும் பி.எஸ்.பி. (ரூ.999) ஆகியவை அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.
இவை ஒரு கதை போல் அமைத்துத் தரப்பட்டுள்ளது. பிறந்தது முதல் வெளிநாடுகளில் வசித்த ஒருவன், தன் மூதாதையர் பிறந்த கிராமத்திற்கு வருகிறான். அங்கு அந்த கிராம விளையாட்டுக்களில் பங்கு பெறுகிறான். ஒரு காதல் ஜோடியைச் சேர்த்து வைக்கிறான். இதில் 1. பசிசி எனப்படும் தாயக்கட்டம், 2. ஆடு புலி ஆட்டம், 3. காற்றாடி விடுதல், 4.கபடி,5.கிட்டி எனப்படும் கில்லி தண்டா மற்றும் 6. நடன விளையாட்டு என கேம்ஸ்கள் தரப்பட்டு, நாம் முழுமையான ஈடுபாட்டுடன் விளையாடும் வகையில் இயங்குகின்றன. கிராமங்களில் கூட இந்த விளையாட்டுகள் மறைந்து வரும் நாட்களில், சோனி நிறுவனம் முயற்சி எடுத்து இவற்றை பிளே ஸ்டேஷன்களில் விளையாடும் வகையில் கொண்டு வந்துள்ளது, நம் பாரம்பரிய விளையாட்டுகளுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

மீசையும்… ஆசையும்…

ஆண்களுக்கு உதட்டின் கிரீடமாக உட்கார்ந்திருப்பதாலேயே மீசை தனி மரியாதை பெறுகிறது. நம் நாட்டில் மட்டுமல்ல, உலகில் பல நாடுகளில் மீசைக்கு உயர் அந்தஸ்து உண்டு. மீசை விஷயத்தில் `டாப் 10′ நாடுகள் எவையெவை என்று பார்க்கலாமா…

1. இந்தியா

தென்னிந்தியாவில் 80 சதவீதம் பேர் மீசை வைத்திருக்கின்றனர். இதனால் இந்தியா உலகத்திலேயே `நம்பர் 1′ ஆகிவிடுகிறது. இந்தியக் கலாசாரத்தில் நீண்ட காலமாகவே மீசை ஒரு முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. இது ஆமையின் அடையாளமாக நம் நாட்டில் கருதபடுகிறது. உலகத்திலேயே நீளமான மீசைக்குச் சொந்தக்காரர் ஓர் இந்தியர்தான். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அந்த மனிதரின் மீசையின் நீளம் 12.5 அடி.
2. மெக்சிகோ

இங்கும் மீசை ஆண்மையின் அடையாளமே. மீசையில் மெக்சிகோவின் அடையாள மனிதர்களாக எமிலியானோ ஸபாட்டா, பாஞ்சோ வில்லா ஆகியோர் இருக்கிறார்கள். ஐரோப்பிய மக்கள் மெக்சிகோவில் குடியேறியபோது, தங்களின் சமுக அந்தஸ்தை உயர்த்திக் காட்டும் விதமாகவும் அந்நாட்டு மக்கள் மீசை வளர்த்தனர்.
3. பாகிஸ்தான்

உலகிலேயே அதிகமான முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். இந்நாட்டின் 17 கோடி இஸ்லாமிய மக்களில் பெரும்பாலானவர்கள் தாடி, மீசை வைத்திருக்கின்றனர். புகழ்பெற்ற பாகிஸ்தானியர்களாக தேசியக் கவி முகம்மது இக்பால், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவித் மியான்டட், முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷரப், தற்போதைய பிரதமர் அசிப் அலி சர்தாரி ஆகியோரும் மீசைக்காரர்களே.
4. ஜெர்மனி

ஜெர்மனியின் மொத்த மக்கள்தொகை 8 கோடி. இந்நாட்டுக்கும் மீசையில் பெருமிதமான வரலாறு உண்டு. அரசியல் தலைவர் பிஸ்மார்க் முதல், தத்துவஞானி பிரெட்ரிச் ஷே, விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் வரை மீசை மீது ஆசை வைத்த பிரபலங்கள். உலக மீசை மற்றும் தாடி சாம்பியன்ஷப் போட்டியில் அதிக சங்கங்கள் பங்கேற்பது ஜெர்மனியில் இருந்துதான்.
5. ஈரான்

ஈரானிய மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஷியா முஸ்லீம்கள். இங்கு முக்கிய புள்ளிகள் பலர் பெருமையோடு மீசைடன் வலம் வருகிறார்கள். அவர்களில் அயதுல்லா, கால்பந்து நட்சத்திரம் அலி டே போன்றவர்கள் குறிபிடத்தக்கவர்கள்.
6. எகிப்து

பிற முஸ்லீம் நாடுகளை போல இங்கும் மீசை வளர்பதில் ஆர்வம் அதிகம். முக்கியத் தலைவர்களுக்கும் இதில் ஆர்வம் உண்டு. உதாரணமாக முன்னாள் அதிபர் நாசர், அதிபர் அன்வர் அல் சதாத் போன்றோர்.
7. துருக்கி

சமீப ஆண்டுகளில் துருக்கியானது ஐரோப்பிய நாடுகளுடன் அதிக நெருக்கம் காட்டி வருகிறது. அதற்கேற்ப அந்நாட்டு மக்கள் `நவீனமாகவும்’, `புரொபஷனல்களாகவும்’ தோற்றமளிக்க விரும்புவதால், மீசை- தாடியைத் துறக்க ஆரம்பித்திருக்கின்றனர். ஆனால் இன்றும் துருக்கிய சமுகத்தில் மீசைக்கு ஒரு முக்கிய பங்கு இருக்கிறது. இது ஏறக்குறைய மதஅடையாளமாகவும் இங்கு கருதபடுகிறது.
8. அமெரிக்கா

அமெரிக்காவில் தற்போது ஏறக்குறைய 1 கோடி பேர் மீசை வைத்திருக்கின்றனர். கடந்த மே மாதம் அலாஸ்காவின் ஆங்கரேஜ் நகரில் உலக மீசை மற்றும் தாடி சாம்பியன்ஷி போட்டி நடைபெற்றது. அதில் அதிக பதக்கங்கள் பெற்ற நாடு அமெரிக்கா தான். அது ஒவ்வொரு போட்டி பிரிவிலும் ஒரு பதக்கத்தை வென்றது.
9. ஹங்கேரி

ஹங்கேரியில் உலக மீசை மற்றும் தாடி சாம்பியன்ஷி போட்டி நடக்கிறது. ஹங்கேரிய மீசை, `ஒயில்டு வெஸ்ட் மவுஸ்டாச்’ என்று அழைக்கபடுகிறது. அங்குள்ளவர்களிடம் மீசை மட்டுமல்ல, அதன் மீதான ஆசைம் வளர்ந்து வருகிறது.
10. பல்கேரியா

இசை, கால்பந்து, கைபந்துக்கு அப்புறம் பல்கேரியர்கள் அதிகம் நேசிப்பது மீசையைத் தான்.. சோவியத் யூனியனின் தாக்கத்தில் பல்லாண்டு காலம் இருந்த பல்கேரியா, அண்மை ஆண்டுகளில் மாறியுள்ளது. மாறாதது மீசை மீதான மோகம் மட்டும்தான்.

குழு மருத்துவக் காப்பீட்டுக்கு நெருக்கடி!


நிறுவனங்களுக்கான குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்களின் ஆர்வம் குன்றியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. `கிளெய்ம்’கள் அதிகமாக இருப்பதே காரணம். எனவே நீங்கள் எதிர்பார்க்கும் பலனைப் பெற வேண்டுமானால் தனிப்பட்ட `பாலிசி’ எடுப்பதே நல்லது என்று காப்பீட்டு நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஓர் ஊழியர் அவரது குடும்பத்தினரின் மருத்துவமனைச் செலவுகளைச் சமாளிக்க உதவும் வகையில் குழு மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளை நிறுவனங்கள் பெற்று வந்தன. தனிநபர் மருத்துவக் காப்பீட்டில் இல்லாத, ஏற்கனவே உள்ள வியாதிகள் மற்றும் கர்ப்பகாலச் செலவுகளும் குழுக் காப்பீட்டுத் திட்டத்தில் ஏற்கப்படுவது இவற்றின் சிறப்பம்சம்.

குழு மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களைப் பொறுத்தவரை `கிளெய்ம்’ விகிதம் -செலுத்தத்தக்க கிளெய்ம்களின் பங்கும், பெறப்பட்ட பிரீமியங்களின் சதவீதமும்- 180 சதவீதத்துக்கு மேல் உள்ளது. எனவே, காப்பீட்டுத் துறையில் 65 சதவீதப் பங்கைக் கொண்டுள்ள நான்கு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியத் தொகை அளவைக் கூட்டியுள்ளதுடன், அனுகூலங்களிலும் வெட்டு போட்டுள்ளன.

நி இந்தியா அஸ்ரன்ஸ், ஒரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏகமனதாக ஒரு முடிவை மேற்கொண்டுள்ளன. அதன்படி, குடும்ப மெடிக்கிளைமுக்கான (மருத்துவக் காப்பீடு) பிரீமிய விகிதங்களும், கவரேஜும், ஆயிரத்துக்கும் குறைவான ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படும் புதிய குழு காப்பீட்டுத் திட்டங்களுக்குப் பொருந்தும்.

“இதன் அர்த்தம், நிறுவனங்கள் குழு காப்பீட்டுக்காக இன்று செலவழிப்பதை விட குறைந்தபட்சம் 100 சதவீதம் அதிகமாகச் செலவழிக்க வேண்டும். அதேநேரம், ஏற்கனவே உள்ள வியாதிகள், மகப்பேறுச் செலவுகளுக்குக் காப்பீடு கிடைக்காது. கூடுதலாக, புதிய ஊழியர்கள் தங்களின் காப்பீடு `ஆக்டிவேட்’ செய்யப்பட ஒரு மாத காலம் காத்திருக்க வேண்டும்” என்கிறார் காப்பீட்டு முகமை நிறுவனம் ஒன்றின் தலைவரான ராகுல் அகர்வால்.

தனிப்பட்ட மருத்துவக் காப்பீடு காலாவதியாகி விட்டாலும் கைகொடுத்துவந்த குழு காப்பீட்டுத் திட்டங்கள் இனி சில பெரிய நோய்களுக்கு மட்டுமே காப்பீடு அளிக்கும்.

யுனைடெட் இண்டியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ஜி. ஸ்ரீனிவாசன், “இந்த ஆண்டு இறுதியில் எங்கள் நிறுவனத்தில் `கிளெய்ம்’களை 90 சதவீதத்துக்குக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம். அதன் மூலம் அடுத்த ஆண்டு தொழிலை வலுப்படுத்துவோம்” என்கிறார்.

`புரூடன்ட் இன்சூரன்ஸ் புரோக்கர்ஸ்’ நிறுவனத்தின் துணைத் தலைவரான பவன் ஜித் சிங் திங்ரா, “இந்தியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்பது இல்லை. எனவே ஊழியர்கள் பலருக்கு அவரவர் நிறுவனங்கள் வழங்கும் குழு காப்பீட்டுத் திட்டம்தான் ஒரே ஆதாரமாக உள்ளது” என்கிறார்.

கிருபானந்த வாரியார்- அமைதி உங்கள் மனைவி

*சத்தியம் என்னும் தாய், ஞானம் என்னும் தந்தை, தருமம் என்னும் சகோதரன், கருணை என்னும் நண்பன், அமைதி என்னும் மனைவி, பொறுமை என்னும் புதல்வன் இவர்கள் மட்டுமே நமக்கு உகந்த உற வினர்கள் ஆவர்.

*விடாது கடைந்தால் பாலிலிருந்து வெண் ணெய் வெளிப்படும். அதுபோல, இடைய றாத தியானத்தாலும், வழிபாட்டாலும் இறைவன் நம் உள்ளத்தாமரையில் வெளிப்படுவான்.

*தெரியாத ஒருவனுக்கு ஒரு விஷயத்தை தெரிவிக்கலாம். தெரிந்தவனுக்கு அந்த விஷயத்தின் நுட்பங்களைக்கூறி மேலும் தெளிவுபடுத்தலாம். ஆனால், இது நல்லது இது கெட்டது என்று அறியாதவனைச் சீர்திருத்த ஆண்டவனாலும் முடியாது.

*சந்திரன் இரவுப் பொழுதைப் பிரகாசிக்கச் செய்கிறது. சூரி யன் பகல் பொழுதினைப் பிரகாசிக்கச் செய்கிறது. ஒருவன் செய்த தருமம் மூன்று உலகங்களிலும் பிரகாசிக்கச் செய்யும். நல்ல பிள்ளை, பிறந்த குடும்பத்தை பிரகாசிக்கச் செய்கிறான்.

*ஆறுதரம் பூமியை வலம் வருவதாலும், பத்தாயிரம் தடவை கங்கையில் குளிப்பதாலும், பலநூறு முறை சேதுக்கரையில் தீர்த்தமாடுவதாலும் கிடைக்கும் புண்ணியம், தாயைப் பக்திப்பூர்வமாக ஒரே ஒருதரம் வணங்கினாலே கிடைத்து விடும்.

*பசுக்கள், வேதங்கள், பதிவிரதைகள், சத்தியசீலர்கள், பற்றற்ற ஞானிகள், தருமசீலர்கள் இவர்களாலேயே உலகம் இன்றும் நிலைத்து நிற்கிறது

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?!

ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற வேண்டும். தன்னுடைய இளம்பருவத்தை வறுமையில் கழித்தவர்கள் வசதிக்காக ஏங்குகிறார்கள். எந்த பணம் அவர்களைத் துன்பத்திலும், சோதனையிலும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததோ, அந்த பணத்தை திகட்டுமளவு சம்பாதிக்கும் ஆசை அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள்.

எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல விளைவுகளைம், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை

வடிவமைக்கிறது.பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் அதுவே வெறியாகி விடக் கூடாது.

நீங்கள் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில் கட்டிவிட முடியும். ஆனால் உங்கள் கவலையை அவர்கள் மீது சுமத்த முடியாது.

மனிதர்கள் இரண்டு வகை. எதற்குமே கவலை படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைபடுகிறவர்கள் என இரண்டு வகை. நியாயமான கவலைகள் மனித இயல்பு. நேற்று வரை தொலைந்து போன பணத்துக்காகக் கவலைபடுவதும், அடுத்து தொலைத்ததை விட பணக்கார உறவினர் முலமாக அதிகபணம் ஈட்டிவிட முடிமா என்ற எதிர்பார்ப்பதும் எப்படி நியாயமான கவலையாகும்?

வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது? கொடுத்த கடன் திரும்ப வருமா? பைக்கில் சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்புவானா? இப்படி கணக்கில்லாத கவலைகளும் சிலருக்கு எட்டிபார்க்கும்.

கவலைகள் காளான்களாய் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும்.

அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்க வேண்டாம். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும்.

இதை புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.

நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. அதனால் தான் நாம் கடைகடையாக ஏறி, நமக்கு பிடித்தமானதை வாங்குகிறோம். மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது? ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்… இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது.

சவால் என்பது சாதாரணமல்ல… ஒரு சவாலை நீங்கள் எதிர்கொள்கிற போது அது உள்ளடக்கிய அநேக பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சவால்கள் வளர்ச்சிக்கு அவசியம். அவற்றை வெல்கிறபோது நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம்..

நம்முடைய ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்துகிறபோது, நமது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும்.

ங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கபடுகிறது. உங்களுடைய வழக்கமான சிந்திக்கும் முறைதான் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை உங்கள் மனதில் ஊன்றுகிறது.

வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுவதற்கு, உங்களுக்குள் ஏராளமான திறன்கள் காத்திருக்கின்றன என்றாலும் அதை கண்டுகொள்ள வேண்டும், அதை கருத்தாய் வளர்க்க வேண்டும். நம்முடைய திறமையைக் கொண்டு பல உன்னதங்களை நாம் நிகழ்த்த முடியும் என்று நம்புங்கள்.

எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருபது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.

ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்.

ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான்… ஆனால் அது விதைக்கபட்டு விடுகிறபோது… அது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியைம் கொண்டுவந்து விடுகிறது.

எக்ஸெல் டிப்ஸ்… டிப்ஸ்….

 

வரிசைகள் எத்தனை?
எக்ஸெல் தொகுப்பில் வரிசைகளைத் தேர்ந்தெடுக்கையில் எத்தனை வரிசைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம் என்று எப்படி அறிவது? எடுத்துக் காட்டாக மாணவர்களின் மதிப்பெண்களை வரிசையாக என்டர் செய்கையில், அல்லது செய்த பின் எத்தனை பேருக்கு என்டர் செய்திருக்கிறோம் என்று பார்க்க விரும்புகையில் என்ன செய்கிறோம்?
மானிட்டரில் விரலை வைத்து ஸ்கிரீனைத் தொட்டுப் பார்த்து எண்ணுவதா? அல்லது ஒவ்வொரு வரிசையாகக் கர்சரைக் கொண்டு சென்று 1,2,3 என்று கணக்கிடுவதா? அதிக எண்ணிக்கையில் இருந்தால் நிச்சயம் இவை இரண்டும் நமக்கு சரியாக வராது. எக்ஸெல் இதற்கென்றே ஒரு வசதியைக் கொண்டுள்ளது.
எக்ஸெல் தொகுப்பே உங்களுக்கு நீங்கள் செலக்ட் செய்திடும் வரிசைகளை எண்ணிச் சொல்லும். அதுவும் நீங்கள் செல்களை ஹைலைட் செய்திடும்போதே அவை எண்ணப்பட்டு எண்ணிக்கை என்னவென்று உங்களுக்குச் சொல்லப்படும். இதில் என்ன வேடிக்கை என்றால் இந்த வசதி உங்கள் கண் முன் எப்போதும் உள்ளது. ஆனால் நீங்கள் அதனை இது வரை உற்று நோக்கவில்லை. அதனை இங்கு பார்ப்போம். அடுத்த முறை நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசைகளை ஹைலைட் செய்திடுகையில் படுக்கை வரிசைகளுக்கான எழுத்துக்கள் தோன்றும் இடத்திற்கு மேலாகப் பாருங்கள். அல்லது இறுதியாக ஹைலைட் ஆன செல்லுக்கு அருகாமையில் மேலாகப் பாருங்கள். எத்தனை காலம் எனக் காட்டப்படும். எடுத்துக்காட்டாக நான்கு காலம் என்றால் 4இ எனக் காட்டப்படும். காலம் முழுவதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். இதே போல ரோ எனப்படும் படுக்கை வரிசை செலக்ட் ஆகும்போது 4கீ எனக் காட்டப்படும். எங்கே, உடனே இந்த எண்ணிக்கையை முயற்சி செய்து பார்த்துவிடுங்கள்.

படுக்கை வரிசைகளை இடைச்சேர்க்க:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இன்ஸெர்ட் மூலம் ஒரு வரிசையினை இணைப்பது எளிது. ஆனால் பல வரிசைகளை இணைக்க விரும்பினால் என்ன செய்வது? அதற்கான இரு வழிகளை இங்கு காணலாம். ஒவ்வொன்றாக இன்ஸெர்ட் அழுத்தி அடுத்தடுத்து வரிசைகளை இணைக்கலாம். முதல் வரிசையை இணைத்தவுடன் எப்4 கீயை அழுத்தினால், அழுத்த அழுத்த ஒரு வரிசை இணைக்கப்பட்டுக் கொண்டே இருக்கும். (எப்4 கீ அழுத்துகையில் அதற்கு முன்னால் என்ன செயல்பாடு மேற்கொள்ளப்பட்டதோ அதே செயல்பாடு திரும்ப மேற்கொள்ளப்படும் என்பதை நாம் ஏற்கனவே சொல்லி இருக்கிறோம்.)
இன்னொரு வழி தான் இங்கு புதிதாகச் சொல்லப்படுகிறது. நீங்கள் ஐந்து படுக்கை வரிசைகளை இணைக்க விரும்புவதாக வைத்துக் கொள்வோம். அவ்வாறு இணைக்குமுன், ஏற்கனவே இருக்கின்ற ஐந்து வரிசைகளைத் தேர்ந்தெடுங்கள். அதன்பின் இன்ஸெர்ட் மெனுவில் கீணிதீண் என்பதைத் தேர்ந்தெடுத்தால், எக்ஸெல் அழகாக ஐந்து படுக்கை வரிசைகளை இன்ஸெர்ட் செய்திடும்.

செல் பார்முலா :
செல் ஒன்றில் உள்ள எண்ணைக் கொண்டு, பார்முலா ஒன்றை அமைக்கிறீர்கள். அந்த செல்லில் எண் உள்ளதோ இல்லையோ, எக்ஸெல் அந்த செல்லைத் தேடி, அதில் உள்ள மதிப்பைக் கொண்டு பார்முலாவினை இயக்கத் தொடங்கும். எண் இல்லாவிட்டால் என்ன ஆகும்? அல்லது எண்ணுக்குப் பதிலாக டெக்ஸ்ட் இருந்தால் விளைவு என்ன? அதில் எண்ணை நிரப்புமாறு கட்டளை இடச் சொல்லி அமைக்கலாம். எடுத்துக்காட்டாக, A3 செல்லில் உள்ள மதிப்பைக் கொண்டு ஒரு பார்முலாவினை அமைக்கிறீர்கள். பார்முலா இப்படி அமைக்கலாம் =IF(ISNUMBER(A3), (A3*12)/52,”Enter number in cell A3″). A3 செல்லில் எண் இருந்தால், A3 * 12) / 52 என்ற கணக்கின் அடிப்படையில் மதிப்பு பார்முலாவிற்கான செல்லில் அமைக்கப்படும். இல்லை என்றால் “Enter number in cell A3.” என்ற டெக்ஸ்ட் அமைக்கப்படும்.

மைக்ரோசாப்ட் ஆன்லைன் சேவை


சிறிய மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் தங்கள் நிர்வாக நடவடிக்கை களுக்கான செலவினைக் குறைக்கும் வழிகளை மைக்ரோசாப்ட் தன் ஆன்லைன் சேவை மூலம் வழங்குகிறது. டில்லியில் அண்மையில் இந்த சேவை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. இதன் தொடக்க கட்டணம் மாதம் ரூ.95 (2 டாலர்). மின்னஞ்சல், இன்டர்நெட் ஒருங்கிணைப்பு, இன்டர்நெட் வழி கான்பரன்சிங் மற்றும் இவை சார்ந்த வழிகளை ஒரு நிறுவனம் தனக்கெனப் பெற்றுப் பயன்படுத்த முடியும். இந்த சேவையினை www.microsoft.com/india/onlineservices என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் நிறுவன இணைய தளம் சென்று பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். பயன்படுத்தும் சேவைக்கேற்ப கட்டணம் செலுத்தினால் போதும். இதன் மூலம் வணிக நிறுவனங்கள் தங்களுக்கென இணைய தள சேவையை கூடுதல் செலவின்றி பெற முடியும். மேலும் இந்த சேவையினைத் தங்கள் நிறுவன வளாகம் மட்டுமின்றி, எந்த இடத்திலிருந்தும் பெற முடியும். இதனால் நிறுவனத்தின் நிர்வாகத்திறன் உயரும் வாய்ப்புகள் அதிகமாகிறது. இன்றைய போட்டி மிகுந்த உலகில், வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்கள் தங்களின் ஒவ்வொரு செயல்பாட்டுப் பிரிவிலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தி, செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியுள்ளது. அந்த வகையில் நிர்வாகக் காரணங்களுக்கான செலவை மிச்சப்படுத்த இந்த ஆன்லைன் வசதி கை கொடுக்கும் என இதனை அறிமுகப்படுத்திய விழாவில் மைக்ரோசாப்ட் பிசினஸ் குரூப் தலைவர் ஸ்டீபன் குறிப்பிட்டார். இந்த சேவைகளை நிறுவனங்களுக்கு வழங்குவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் எச்.சி.எல். இன்போசிஸ்டம்ஸ், இன்போசிஸ் மற்றும் விப்ரோ ஆகிய முன்னணி நிறுவனங்கள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இந்த சேவை முறை, சோதனை முறையில் கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஏறத்தாழ 1,800 பேர் இதனைப் பயன்படுத்தினார்கள். அவர்கள் நிறைவான வரவேற்பினைத் தெரிவித்ததால், சென்ற நவம்பர் 7 முதல் இது முழுமையாக அறிமுகமாகியுள்ளது. இந்த சேவைப்பிரிவில் மின்னஞ்சல்களுக்கு ஆன்லைன் எக்சேஞ்ச், இணைய தளங்களைப் பயன்படுத்த ஆபீஸ் ஷேர் பாய்ண்ட், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன அலுவலர்கள் இடையே கலந்தாய்வு மேற்கொள்ள ஆபீஸ் லைவ் மீட்டிங், இன்ஸ்டண்ட் மெசேஜ் அனுப்பி பதில் பெற மைக்ரோசாப்ட் ஹோஸ்டட் சர்வீசஸ் மற்றும் மைக்ரோசாப்ட் கம்யூனிகேஷன்ஸ் ஆன்லைன் ஆகிய வசதிகள் தரப்படுகின்றன