Daily Archives: திசெம்பர் 3rd, 2009

பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை…. மூலிகை கட்டுரை

சில குழந்தைகளுக்கு பல் முளைக்கும்போது கழிச்சல் உண்டாகும். மேலும் குழந்தைகள் ஆறாம் மாதத்தில் தவழும் போதும், எட்டாம் மாதத்தில் எழுந்து நடக்கும் போதும் அருகில் கண்களில் படும் ஒற்றடை, தூசி, இறந்து போன பூச்சிகள், கொசுக்கள், ரோமங்கள் போன்றவற்றை துருதுருவென்ற தங்கள் கண்களால் கண்டுபிடித்து உட்கொண்டு விடுவது குழந்தைகளின் வழக்கம். இதனால் குழந்தைகளின் செரிமான மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டு வாந்தி, பேதி, சுரம் அதை தொடர்ந்து வலிப்பு, இருமல் உண்டாவதுடன் திடீர் திடீரென வீறிட்டு அழ ஆரம்பிக்கும். மேலும் தோல் வறட்சியடைந்து, சுருங்கி சவலைப் பிள்ளைப் போல் தேறாமல் காணப்படும்.
இதைக்கண்டு பயந்து போகும் பெற்றோர் பேய்,பூதம் என பலவாறாக கற்பனை செய்து கோயில்களிலும், பிற வழிபாட்டு தலங்களிலும் நேர்த்திகளை செய்கின்றனர். இன்னும் சிலரோ முதியோர்களையும், இறையன் பர்களையும் அணுகி, குழந்தையின் பயத்தை போக்க, மந்திரிக்கும்படி கூறுகின்றனர். அவர்களும் கயிறு போன்ற சில பொருட்களை கொடுத்து குழந்தையின் மணிக்கட்டு, இடுப்பு, கழுத்து மற்றும் கால்களில் தாயத்து போல் கட்டிவிடுகின்றனர். இவ்வாறு கட்டும் பொருட்களில் பெரும்பாலும் மூலிகை வேர்களே அடங்கியுள்ளன.
இந்த மூலிகை வேர் நிறைந்த தாயத்துகளை குழந்தை வாயிலிட்டு சப்பும்போதும், மூக்கால் உறிஞ்சும்போதும் அவற்றின் மருத்துவ குணத்தால் குழந்தையின் உபாதைகள் நீங்குகின்றன.

குழந்தைகளுக்கு தோன்றும் இது போன்ற நோய்களை கட்டுப்படுத்தி, உடலை நன்னிலைப்படுத்தும் அற்புத மூலகை பேய்மிரட்டி என்ற பெருந் தும்பை. அனிசோமீல்ஸ் மலபாரிக்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட லேமியேசியே குடும் பத்தைச் சார்ந்த இந்த பெருஞ்செடிகளின் வேரில் பீட்டா சைட்டோஸ்டீரால், லுட்டுலினிக் அமிலம், ஓவாடியோலிட், அனிசோமிக் அமிலம், ஜெரானிக் அமிலம் ஆகியன உள்ளன. இவை செரிமானத்தை தூண்டி, குடலின் இயங்கு தன்மையை கட்டுப்படுத்துகின்றன.
பெருந்தும்பை இலைகள்-5 எடுத்து சிறு,சிறு துண்டுகளாக வெட்டி, 200 மி.லி., நீரில் போட்டு கொதிக்க வைத்து, 50 மி.லி.,யாக சுண்டியப்பின். வடிக் கட்டி காலை, மாலை குழந்தைகளுக்கு கொடுத்து வர பேதி, செரிமானமின்மை நீங்கி தெளிவுறும், 5 அல்லது 10 சொட்டுகள் இந்த இலைச்சாற்றை தேனுடன் குழப்பிக் கொடுக்க, பல் முளைக் கும் காலங்களில் தோன்றும் பிள்ளைக்கழிச்சல் நீங்கும். இதன் வேரை சுத்தம் செய்து உலர்த்தி, நூலில் சுற்றி மணிக்கட்டில் காப்பு போல் கட்டிவர குழந்தைகள் விரல் சப்பும் பொழுது இதன் மருத்துவச் சத்துக்கள் உள்ளிறங்கி, குழந்தைகளுக்கு வயிற்றில் தோன்றும் பலவித வயிற்று உபாதைகள், பயம் ஆகியவற்றை நீக்கி குழந்தையை தேறச் செய்யும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

உலக மகா பிராடுகளில் ராமலிங்க ராஜு 4ம் இடம்


உலக மகா பிராடு தொழிலதிபர்கள் என்று போர்ப்ஸ் பத்திரிக்கை பட்டியலிட்டதில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ் ராமலிங்க ராஜுவுக்கு நான்காவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்க பங்குச் சந்தையில் மோசடி செய்ததாக சமீபத்தில் கைது செய்யப்பட்ட ராஜரத்னத்துக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த போர்ப்ஸ் பத்திரிகை, இந்த ஆண்டுக்கான மெகா மோசடி தொழிலதிபர்கள் என்று 10 பேரைப் பட்டியலிட்டுள்ளது.

இந்த பட்டியலில், “கோல்ட்மேன் சச்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் லாய்டு பிளாங்க்பெய்ன் முதலிடத்தில் உள்ளார். “மெரில் லின்ச்’ நிறுவன மாஜி தலைவர் ஜான் தெய்ன் இரண்டாமிடம். அமெரிக்கப் பங்குச் சந்தையில் மோசடி, புலிகளுக்குப் பண உதவி போன்ற குற்றச்சாட்டுகளின் சொந்தக்காரரான இலங்கையைச் சேர்ந்த ராஜரத்னம் மூன்றாம் இடத்தில் இருக்கிறார். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்தை நிறுவி, அதன் பங்குகளைத் தன் பெயரிலும் தனக்குச் சொந்தமான நிறுவனங்களின் பெயரிலும் மாற்றி பல கோடிகளை மோசடி செய்த ராமலிங்க ராஜு, நான்காம் இடத்தில் இருக்கிறார்.

அமெரிக்கத் தொழிலதிபர் தாமஸ் பீட்டர்ஸ் ஐந்தாமிடம்; ஏ.ஐ.ஜி., நிறுவனத்தின் முன்னாள் தலைவர் எட்வர்ட் எம்.லிட்டி ஆறாமிடம்; “பிரைவேட் ஈக்விட்டி மேனேஜ்மென்ட் க்ரூப்’ நிறுவனத்தின் தலைவர் டான்னி பாங்க் ஏழாமிடம்; 21 கிரிமினல் வழக்குகள் பதியப்பட்ட பில்லியனரி அல்லென் ஸ்டான்போர்டு எட்டாமிடம்; ஒன்பதாமிடத்தில் சி.டி.ஆர்., நிதிநிறுவனத்தின் தலைவர் டேவிட் ரூபின்; பத்தாமிடத்தில் “மொரன் யாச்ட் அண்டு ஷிப்’ நிறுவனத்தின் தலைவர் ராபர்ட் மொரன். “பெர்னார்ட் மடோப் என்பவரை இவர்கள் பத்துப்பேரும் சேர்ந்தாலும் “பிராடு’த் தனத்தில் வெல்ல முடியாது என்றாலும், அவர்களிடம் பேராசை, ஆணவம் இவற்றுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது’ என்று போர்ப்ஸ் பத்திரிகை முத்தாய்ப்பு வைத்துள்ளது.

சிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை அதிகப்படுத்தாது


மென்மையான பளபளப்பான கூந்தல் பெற வேண்டும் என்பதே, அனைவரின் விருப்பமாக இருக்கும். சிறந்த ஷாம்புகள், கண்டிஷனர்கள் மற்றும் கூந்தல் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதால் மட்டும், அத்தகைய கூந்தலை பெற முடியாது. கூந்தல் என்பது வேகமாக வளரும் திசு. எனவே, கூந்தல் வளர்ச்சியை ஊக்கப்படுத்த, புரதச்சத்து, கார்போஹைடிரேடுகள், வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் ஆகியவை அவசியம்.
புரதச்சத்து:
கூந்தல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அமினோ அமிலங்கள், புரதச்சத்தில் காணப்படுகின்றன. நம் உடலில் காணப்படும் புரதச்சத்து பற்றாக்குறையால் கூந்தல் உதிர்தல் மற்றும் வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். எனவே, கூந்தல் வளர்ச்சி நன்றாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், புரதச்சத்து நிறைந்த உணவு வகைகளான மீன், முட்டை, பால் பொருட்கள், சோயா, பருப்பு வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
கார்போஹைடிரேட்:
கூந்தல் உட்பட உடலின் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும் கார்போஹைடிரேட் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கார்போஹைடிரேட் சத்து அதிகம் நிறைந்த, ஓட்ஸ், சிவப்பு அரிசி, கோதுமை, பார்லி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆரோக்கியமான கூந்தலை பெறலாம்.
கொழுப்பு சத்து:
உடலுக்கு நல்ல கொழுப்பு சத்து தேவை. இவை, கூந்தல் வறண்டு போதல், கடினமாதல் மற்றும் பொடுகு ஏற்படுதல் ஆகியவற்றை தடுக்கிறது. எண்ணெய் தன்மை உள்ள மீன்கள், பருப்பு வகைகள், ஆலிவ், சூரிய காந்தி எண்ணெய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். உணவின் மூலம் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்து கிடைக்கவில்லை என்றால் டாக்டரின் ஆலோசனை பெறலாம்.
வைட்டமின்கள்:
*மீன், இறைச்சி, வெண்ணெய், முட்டை, புரோக்கோலி, முட்டைகோஸ், கேரட் மற்றும் ஏப்ரிகாட் ஆகியவற்றில் காணப்படும், “வைட்டமின் ஏ’ மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை தலையில் தேவையான எண்ணெய் சுரப்பதை உறுதிசெய்து, தலை போதிய ஈரத்தன்மையுடன் இருக்க உதவுகிறது.
* நெல்லிக்காய், கொய்யா, சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரி, அன்னாசி, தக்காளி, குடைமிளகாய் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றில் நிறைந்துள்ள “வைட்டமின் சி’ சத்து, கூந்தலின் ஆரோக்கியத்தை பராமரித்து, கூந்தலின் நுனியில் பிளவு ஏற்படுவதை தடுக்கிறது.
*ஆலிவ் ஆயில், சோயாபீன்ஸ், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் காணப்படும் வைட்டமின் சி சத்து, தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வறண்ட கூந்தலுக்கு ஊட்டமளிக்கிறது.
*”பயோட்டின்’ கூந்தல், சருமம் மற்றும் நகம் ஆகியவற்றின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. கூந்தல் நரைப்பதை தடுக்கும் கெரட்டின் உற்பத்திக்கு இது உதவுகிறது. கூந்தலுக்கு நிறமளிக்கும் மெலனின் உற்பத்திக்கு “நியாசின்’ உதவுகிறது. முட்டை மஞ்சள் கரு, கல்லீரல், அரிசி மற்றும் பால்பொருட்களில் “பயோட்டின்’ நிறைந்துள்ளது.
*இரும்புச்சத்து, கூந்தலுக்கு ஆக்சிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. கூந்தலுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டால், அவை உடைந்து உதிரத் தொடங்கும். பச்சைக் காய்கறிகள், உலர்ந்த பழங்கள், முட்டை, தர்ப்பூசணி ஆகியவற்றை உணவில் அதிகளவு சேர்த்துக் கொள்ளலாம்.
கூந்தலின் நெகிழ்வு தன்மைக்கு, ஈரப்பதம் முக்கியப் பங்கு வகிக்கிறது. எனவே, கூந்தலின் வறண்ட தன்மை நீங்க, தினமும், 1.5 லிட்டர் முதல் 2 லிட்டர் வரையிலான தண்ணீர் குடிக்க வேண்டும். முறையான உடற்பயிற்சி, உடலின் அனைத்து செல்களுக்கும் ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. எனவே, வாரத்திற்கு மூன்று நாட்கள், 30 நிமிடங்கள் முறையாக உடற்பயிற்சி செய்தாலே போதுமானது.
மேலும், டீ, காபி மற்றும் மது ஆகியவை அருந்துவது, உடலின் தண்ணீர் மற்றும் முக்கிய ஊட்டச் சத்துக்களை வெளியேற்றி விடுகிறது. அவை, உணவில் இருந்து ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. டீ மற்றும் காபி குடிப்பவர்கள், தினமும் ஒரு கப் என குறைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக பழச்சாறுகள் போன்றவற்றை குடிக்கலாம்.

நண்டு வறுவல்


தேவையானப் பொருட்கள்:
நடுத்தர அளவுள்ள நண்டுகள் – 6 ( ஓடு நீக்கி சுத்தம் செய்யவும்),
பெரிய வெங்காயம் – 2 ( நீளவாக்கில் நறுக்கவும்),
தக்காளி – 1 நறுக்கவும்,
மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப
அரைக்க:- இஞ்சி – சிறுதுண்டு, சின்ன வெங்காயம் – 10 , காய்ந்த மிளகாய் – 10 , சீரகம் – 1 டீஸ்பூன், பூண்டு பல்- 5 ,தனியா – 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு வாணலியில் தேவைக்கேற்ப எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த மசாலாவைச் சேர்த்து வதக்கி ஒரு டம்ளர் நீர் ஊற்றி தேவைக்கேற்ப உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், நண்டுகளைப் போடவும். குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருக்கவும். நண்டுகள் வெந்து, மசாலா கலவையுடன் சேர்ந்து கெட்டியானதும் இறக்கி வைத்துப் பரிமாறவும்.

மாரடைப்பு நோய்க்கான அறிகுறிகள்

சாதராணமாக நாம் நெஞ்சு வலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருந்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம். வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கெற்ப உரிய மருந்துக்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்பு தான் ஏற்பட்டு விட்டாதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.
உடல் வலி, அழுத்தம், இறுக்கம், போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன. ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான நெஞ்சு வலி இருக்கும். ஆனால், நோய் தீவரம் அதிகம் இ-ருக்க கூடும்.
உங்களுக்கு தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின் போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும். குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின் போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால் அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.
மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாதலால் ஏற்படும் அறிகுறிகளாவன:
நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது, அதிக வியர்வை, நெஞ்சு இறுக்கம், மூச்சு திணறல், இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில் கூட வலி பரவுதல், பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது போல் தோன்றும்.
பெண்களுக்கு மூச்சு திணறல், மேல் வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும். அறிகுறிகளை தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்யலாம். எனவே நெஞ்சு வலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.

எந்த தியேட்டரில் என்ன படம் கூகுள் சொல்கிறது

நம் ஊரில் உள்ள தியேட்டர்களில் என்ன சினிமா காட்டப்படுகிறது? எப்படி தெரிந்து கொள்ளலாம்? போன் செய்து, கல்லூரியில், பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைக் கேட்டு, சினிமாத் துறையில் வேலை பார்க்கும் நபர்களிடம் கேட்டு, சுவர்களில் ஒட்டப்பட்டிருக்கும் பெரிய அளவிலான விளம்பர போஸ்டர்களைக் கண்டு எனப் பல வழிகள் முன்பும் இப்போதும் உள்ளன. இவற்றுடன் இன்னொரு வழியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இணையம் வழி கூகுள் தரும் வழி. ஆம், http://google.com/movies என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் சென்றால் அங்கு இடது புறம் ஊர் தேர்ந்தெடுக்க கட்டம் தரப்பட்டிருக்கும். அதில் நீங்கள் அறிய விரும்பும் ஊரின் பெயரை டைப் செய்து என்டர் தட்டுங்கள். பெரிய, சிறிய நகரங்கள் அனைத்தும் இதில் இடம் பெறுகின்றன. ஊர் டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் அந்த ஊரில் உள்ள தியேட்டர்களின் பெயர், என்ன படம், எத்தனை மணிக்குஷோ என்ற விபரங்கள் எல்லாம் கிடைக்கின்றன. இப்போதெல்லாம் பல தியேட்டர்கள் ஆன்லைனிலேயே டிக்கட் புக் செய்திடும் வசதிகளைத் தந்துவருகின்றன. இருப்பினும் அனைத்து தியேட்டர்களிலும் என்ன படம் ஓடுகிறது என்ற தகவலைத் தரும் திட்டத்தினை கூகுள் தான் வழக்கம்போல தந்துள்ளது.

முருங்கைக்கீரை அடை

தேவையானப் பொருட்கள்:
துவரம்பருப்பு & அரை கப், கடலைப்பருப்பு அரை கப், உளுத்தம்பருப்பு & ஒரு டேபிள்ஸ்பூன், பச்சரிசி & கால் கப், புழுங்கலரிசி & கால் கப், துளிரான முருங்கைக்கீரை & ஒரு கப், தேங்காய் துருவல் & கால் கப், காய்ந்த மிளகாய் & 6, உப்பு & தேவைக்கேற்ப, பெருங்காயத்தூள் & அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவைக்கேற்ப.

செய்முறை:
பருப்பு வகை, அரிசி, காய்ந்த மிளகாய் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மணிநேரம் ஊறவைக்கவும். முருங்கைக்கீரையை ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு லேசாக வதக்கி வைத்துக் கொள்ளவும். ஊறவைத்த பருப்பு, அரிசி, மிளகாய் இவற்றுடன் பெருங்காயம், உப்பு, தேங்காய்துருவல் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். அரைத்த மாவுடன் வதக்கி வைத்த முருங்கைக்கீரையை சேர்த்து, ஒன்றாகக் கலந்து அடைகளாக சுட்டெடுக்கவும். குறிப்பு: அடைகளை சுடும்பொழுது அதன் நடுவில் சிறு ஓட்டை போட்டு அதிலும் சற்று எண்ணெய் விடவும். சுற்றிலும் சிறிது எண்ணெய் விடவும். இவ்வாறு செய்வதால் அடையின் உட்புறத்திலும் நன்றாக வேகும். பின்னர் திருப்பிப் போட்டு சிவந்தவுடன் எடுக்கவும். முருங்கைக்கீரையை வதக்கிப் போடுவதால் வயிற்றுக்கு ஒன்றும் செய்யாது.

காப்பி, டீயால் வரும் கேடு

பண்டைய காலத்தில் நம் முன்னோர்கள் எல்லாம் காலையில் எழுந்தவுடன் நீத்துப்பாகம் என்று சொல்லப்படுகின்ற பழஞ்சோற்று நீராகாரத்தைக் குடித்துப் பல்லாண்டு வாழ்ந்தனர். இக்காலத்தில் சிறு குழந்தை முதல் படுகிழம் வரை காலையில் எழுந்தவுடன் காப்பி, டீ போன்றவற்றின் முகத்தில்தான் விழிக்கின்றனர். நம் நாட்டு சீதோஷ்ண நிலைக்கு இது தேவை இல்லை.

காப்பியில் காபின் என்ற விஷமும் டீயில் டானின் என்ற கொடிய விஷமும் உள்ளன. இவை மருந்துக்கு உபயோகப்படும் பொருள்கள்.
இவற்றை நாம் அருந்துவதால் நாளாவட்டத்தில் நரம்புத்தளர்ச்சி, தூக்கமின்மை, மனக்குழப்பம், நினைவுத்தடுமாற்றம், வயிறு சம்பந்தப்பட்ட பல்வேறு வியாதிகள், குடல் அஜீரணம், கண்ணில் ஒளிமங்குதல் முதலியன உண்டாவதாக மேல் நாட்டு நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.
யோகாசனம் செய்வதால் கொஞ்சம் கொஞ்சமாக இப்பழக்கத்தை விட முடியும். எனவே காப்பி, டீயின் அளவைக் குறைக்கவாவது வேண்டும். இவற்றுடன் முடிந்த ஒரு சில அளவு யோகாசனங்களையும், நாடி சுத்தியையும் செய்வதால் பூரணமாக காப்பி, டீ பழக்கத்தைக் கண்டிப்பாக ஒழித்து விடலாம்.
காப்பிக்குச் செலவிடுவதைப் பாலுக்கு செலவிட்டால் நோயின்றி வாழலாம்.