Daily Archives: திசெம்பர் 7th, 2009

துரத்தும் தும்மலை விரட்டும் மூலிகை

மூலிகை கட்டுரை
இரவில் காற்று கூட புகுந்து விடாமல் கதவை மூடிக்கொண்டு தூங்குவதால் நமது அறையின் வெப்பநிலை நமது மூச்சுக்காற்றின் சுழற்சியால் சற்று அதிகரித்துவிடுகிறது. இதிலும் கொசுவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல வேதிப்பொருட்களையும் எரிய விடுவதால் ஏற்கனவே அதிகரித்த அறையின் வெப்பநிலை இன்னும் அதிகரிப்பதுடன் அறையின் உள்ளே தங்கியுள்ள காற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் மாசடைய தொடங்குகிறது.
இதே காற்றை நாம் மீண்டும், மீண்டும் சுவாசிப்பதால் நுரையீரலின் சவ்வு பகுதிகள் உணர்விழந்து, மூளையின் கட்டுப்பாட்டுக்கு அடிபணியாமல் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கின்றன. அதிலும் நாம் உறங்கும் பொழுது நம்மையறியாமலேயே வாய் வழியாகவும் மூச்சுவிட்டு, மூக்குப்பாதை மட்டுமின்றி, உணவுப்பாதை மற்றும் தொண்டைப்பாதையும் வறட்சியடைய செய்து விடுகிறோம். இதனால், இயற்கையாகவே சுவாசப் பாதையின் உட்பகுதிகள் வலுவிழந்து, அவற்றின் உட்புறமுள்ள மயிர்கற்றைப் போன்ற உறிஞ்சுகளின் செயல்பாடு குன்றி, நுண்கிருமிகளை தடுத்து வெளியேற்றும் ஆற்றலை இழந்துவிடுகின்றன. ஆனால், காலையில் கண்விழித்துஎழும் நாம் அறைக்கதவை திறந்தவுடன் வெளியிலுள்ள குளிர்ந்த காற்றை எதிர்கொள்கிறோம்.
குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி, மூச்சுப்பாதை மற்றும் கபால அறைகளை குளிரச் செய்வதால் திடீரென சுருங்கி, விரியும் மூச்சுக்குழல் மற்றும் தொண்டைப்பாதையின் தன்னிச்சையான எதிர்ப்பே தும்மலாக மாறுகிறது. ஆகையால்தான் கடும் பனியில், வெட்டவெளியில் தூங்கி எழும் பொழுது ஏற்படாத தும்மல், மூடிய அறையில் தூங்கி எழும் காலைப்பொழுதில் நம்மை துரத்த ஆரம்பித்துவிடுகிறது.
அடுக்குத் தும்மலால் கழுத்து, பிடரி, கீழ் மார்பு வலி, தொண்டை வறட்சி, மூக்கு, கண், உதடு எரிச்சல், தலைவலி, மூக்கடைப்பு, மூக்கு கோணுதல், மூக்கின் உட்புறங்களில் ஒருவித அரிப்பு என பல உபாதைகள் உண்டாகின்றன. சிலருக்கு அடுக்குத் தும்மலால் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் வாயுப்பிடிப்பும் உண்டாகிறது.
அல்பீனியா கேலங்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜிஞ்ஜிபெரேசியே குடும்பத்தைச் சார்ந்த அகன்ற இலைகளையுடைய புல் போன்ற செடியின் வேர்தண்டே பேரரத்தை என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் அல்பீனியா அபிசினேரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சிற்றரத்தை என்ற வேறு வகை செடிகளும் காணப்படுகின்றன. பேரரத்தை வேர்களிலுள்ள மெத்தில் சின்னமேட், சினியோல், டீபைனின் ஆகியன தொண்டை மற்றும் மூச்சுப்பாதையிலுள்ள தசைகளின் இறுக்கத்தை குறைத்து, அங்கு தேங்கியுள்ள கபத்தை வெளியேற்றுகின்றன. இவை சளி சவ்வின் அதிக சுரப்பை கட்டுப்படுத்தி, செல் அழிவையும் தடுத்து, மூச்சுப்பாதையின் மென்மையான சவ்வை பாதுகாக்கின்றன.
பேரரத்தை, சிற்றரத்தை, ஓமம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிவற்றல், சீந்தில் தண்டு ஆகியவற்றை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக மொத்த எடைக்கு பொடித்த பனங்கற்கண்டு பாதியளவு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை 2 மேசைக்கரண்டியளவு நீரில் கொதிக்க வைத்து 60 மி.லி.,யாக சுண்டியப் பின்பு வடிகட்டி சாப்பிட சளியினால் ஏற்படும் இருமல், காய்ச்சல், தொண்டைவலி நீங்கும்.
பேரரத்தையை உலர்த்திப் பொடித்து அரை முதல் 1 கிராமளவு தேனுடன் கலந்து உணவுக்கு பின்பு சாப்பிட தொண்டைவலி மற்றும் இருமல் நீங்கும். இதை வாயிலிட்டு மென்று, எச்சிலை உள்ளே விழுங்கி வந்தாலும் தொண்டையில் காணும் உறுத்தல் தீரும். இதனை வெந்நீர் விட்டு மைய அரைத்து தொண்டை மற்றும் மார்பில் லேசாக தடவி வர சளி நன்கு வெளியேறும். இருமலினால் தோன்றும் மார்பு வலி நீங்கும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

வேலையின்மை அதிகரிப்பு:துபாயிலிருந்து வெளியேற்றம்

துபாய்:திடீரென்று ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், துபாயில் வேலை பார்த்து வரும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள், படிப்படியாக தங்கள் தாய் நாட்டுக்குத் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.உலகளாவிய பொருளாதார நெருக்கடி 2007ல் ஏற்பட்டது. இதற்கு முன்பு வரை, துபாயில் வெளிநாட்டவர்களுக்கான வேலைகளில் எவ்விதப் பிரச்னையும் இருந்ததில்லை. துபாய் 64 லட்சம் பேர் மக்கள் தொகை கொண்ட நாடு. அதில் 55 லட்சம் பேர் வெளிநாட்டவர்தான்.

துபாயில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில், இவர்களின் பங்குதான் குறிப்பிடத்தக்கது. அங்குள்ள வெளிநாட்டவர்களில் இந்தியா உள்ளிட்ட ஆசிய நாட்டவர்களே அதிகம்.அந்நாட்டு தொழிலாளர் அமைச்சகத்தில் பதியப்பட்டுள்ள வெளிநாட்டு நபர்களில் 30 லட்சம் பேர், கட்டடத் தொழிலாளர்களாகத்தான் பதிவு செய்யப்பட்டிருக்கின்றனர். அங்கு உருவாகும் புதிய பெரிய கட்டடங்கள் யாவும் இந்தத் தொழிலாளர்களால்தான் வடிவம் பெறுகின்றன.இப்போது உருவாகியுள்ள நெருக்கடியால், துபாயில் கட்டுமானம் உள்ளிட்ட புதிய வேலைவாய்ப்புகளுக்கு இனி இடமில்லை என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், அங்கு இதுநாள் வரை வேலைபார்த்து வந்த ஆசிய நாட்டவர்கள் பலர் வெளியேறி, தங்கள் தாய்நாட்டுக்குத் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த தாமஸ் (50) என்பவர் 10 ஆண்டுகளாகத் துபாயில் கட்டுமான நிறுவனத்தில் களப் பொறியாளராகப் பணிபுரிந்தவர். இப்போது அங்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் அவருக்கு வேலையில்லாமல் போய்விட்டது. சமீபத்தில் திருவனந்தபுரம் திரும்பி விட்ட அவர்,”தாய்நாட்டுக்குத் திரும்புவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. நான் வந்த விமானம் முழுவதும் இப்படித் திரும்பி வந்தவர்களால்தான் நிரம்பி வழிந்தது. கூடிய விரைவில் அல்லது கொஞ்சம் தாமதமாக ஆனாலும், 80 சதவீதம்பேர் துபாயை விட்டு வெளியேறி விடுவர்’ என்று தெரிவித்தார்.

கூகள் சீதோஷ்ண நிலை அறிக்கை

ஒரு ஊரில் அப்போதைய சீதோஷ்ண நிலை எப்படி உள்ளது என்று எப்படி அறியலாம்? அங்கே மழை பெய்கிறதா? பனி கொட்டுகிறதா? வெயில் எவ்வளவு? அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு போன் போட்டுப் பேசி அறியலாம். பாரிஸ், வாஷிங்டன் போன்ற தொலை தூர நகரங்களில் நிலவும் வானிலை குறித்து அறிய என்ன செய்யலாம்? இங்கு கூகுள் நமக்கு உதவுகிறது.
சீதோஷ்ண நிலை குறித்துத் தகவல் தரும் இணைய தளங்களைத் தேடிப் பின் நீங்கள் தேடும் ஊரின் நிலை குறித்து தேடி அறியலாம். இந்த சுற்று வேலை எல்லாம் வேண்டாம். கூகுள் சர்ச் பாக்ஸில் இதனை சற்று விளக்கமாகவே பெறலாம். மதுரை சீதோஷ்ண நிலை தெரிய வேண்டுமா? Madurai weather என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன் கிடைக்கும் திரையில் மதுரையின் அப்போதைய சீதோஷ்ண நிலை செல்சியஸில் காட்டப்படும். அப்போதைய மேகக் கூட்டம் எப்படி? காற்று எப்படி வீசுகிறது. அதன் ஈரப்பதம் என்ன? என்றெல்லாம் காட்டப்படும். பின் அடுத்த நான்கு நாட்களுக்கு எந்த அளவில் சீதோஷ்ண நிலை இருக்கும் என்று காட்டப்படும்.

புதிய அடோப் பிளாஷ் பிளேயர்

அடோப் நிறுவனம் தன் பிளாஷ் பிளேயர் 9க்கான அப்டேட் 3, தன் இணைய தளத்தில் இலவசமாக இறக்கிப் பயன்படுத்த தயாராய் இருப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய அப்டேட் பைலில் H.264 என்னும் ஸ்டாண்டர்ட் வீடியோ சப்போர்ட் தரப்படுகிறது. இதனைத்தான் புளு ரே மற்றும் எச்.டி – டி.வி.டி. ஸ்டாண்டர்டாகப் பயன்படுத்துகின்றன. HEAAC ஆடியோ தொழில் நுட்பமும் இதனையே பயன்படுத்துகிறது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் பிரவுசர்களிலும் அதிக ரெசல்யூசன் திறனுடன் காண இந்த அப்டேட் பைல் வழி தருகிறது.
இன்டர்நெட் டிவி காண்பதில் அடோப் பிளாஷ் தொழில் நுட்பம் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடோப் பிளாஷ் பிளேயர் மற்றும் அடோப் கிரியேட்டிவ் சூட் ஆகியவற்றில் H.264தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுவது, பல லட்சக்கணக்கான பிளாஷ் டெவலப்பர் களுக்குப் பெரிதும் உதவியாய் இருக்கும். மேலும் இப்போது இன்டர்நெட் வழியாக தங்களுக்குப் பிடித்த படங்களையும் வீடியோ காட்சிகளையும் பார்க்கும் பழக்கம் அனைத்து நாடுகளிலும் மக்களிடையே பரவி வருகிறது. அவர்களுக்கும் இந்த ஸ்டாண்டர்ட் தொழில் நுட்பம் இணைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியை த்தரலாம். அடோப் பிளாஷ் பிளேயர் 9 அப்ளிகேஷன் சாப்ட்வேர் விண்டோஸ், மேக் இன்டோஷ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இயங்கும் வகையில் கிடைக்கிறது. இதனை இலவசமாக டவுண்லோட் செய்திட www.adobe.com /go/getflashplayer என்னும் முகவரியில் உள்ள இணைய தளம் செல்லவும்.

யு.எஸ்.பி. டிரைவில் குரோம் ஓ.எஸ்.

குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent)தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளனர். உடனே இணைய தளத்தினை பிரவுஸ் செய்வதற்கு முடிந்ததாகவும் அறிவித்துள்ளனர்.
ஆனால் இந்த சிஸ்டத்தில் உள்ள டிவைஸ் டிரைவர்கள் அனைத்தும் வடிவமைப்பின் தொடக்க நிலையிலேயே உள்ளதாகத் தெரிகிறது. எனவே குரோம் சிஸ்டம் இயக்கத்தில் உங்கள் கம்ப்யூட்டரின் சில பகுதிகள் எதிர்பார்க்கும் வேகத்தில் இயங்காது எனத் தெரிகிறது. நீங்களும் குரோம் ஓ.எஸ். அதிகாரப் பூர்வமாக மக்களுக்கு வழங்கப்படும் முன், அதனைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என எண்ணினால், http://carbon.hexxeh.net/chromiumos/ என்ற முகவரியில் கிடைக்கும், பூட் செய்யக் கூடிய இமேஜை டவுண்லோட் செய்து, பிளாஷ் டிரைவில் பதிந்து, உங்கள் நெட்புக் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம். விண்டோஸ், மேக், லினக்ஸ் இயக்கங்கள் உள்ள கம்ப்யூட்டரில் இதனை எப்படிப் பயன்படுத்துவது என்ற குறிப்புகளும் இங்கே தரப்பட்டுள்ளன. அதற்கு முன் குரோம் சிஸ்டத்தில் எவை எவை இயங்கும் என்ற பட்டியலை கூகுள் தளத்தில் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

மனித மலைகள்

வியாதிகள் மட்டுமல்ல அபரிமிதமான உடல் எடையும் மனிதனுக்கு ஆபத்துதான். இதன் காரணமாகத்தான் உடல் எடையை சீராக வைத்துக்கொள்ள அவர்கள் பல்வேறுவிதமாக தங்களைத் தாங்களே வருத்திக் கொள்கிறார்கள்.

அதிகபட்ச உடல் எடையுடன் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வந்தவர் கரோல் யாகர். மாமிச மலையாக இருந்த இந்தபெண்ணுக்கு, தசைகள் வலுவிழந்து காணபட்டதால் நிற்கவோ, நடக்கவோ முடியாது. இயற்கை முறையில் முன்றில் ஒருபங்கு எடையை குறைத்தபோதும், கிட்னி பாதிப்பு உள்பட பல்வேறு நோயால் இவர் தனது 34-வது வயதில் மரணத்தை தழுவினார்.

இவருக்கு அடுத்தபடியாக 635 கிலோ எடையுடன் வாழ்ந்து வந்தவர் ஜோன் பிரோவெர் மின்னோக். 12 வயதிலேயே

வர் 132 கிலோ எடையுடன் இருந்தார். இவருக்கு திருமணம் முடிந்து 2 குழந்தைகளும் பிறந்தனர். 16 மாதங்கள் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று சுமார் 419 கிலோ எடையைக் குறைத்தார். ஆனால் டிஸ்சார்ஜ் ஆனதும் அவரது உடல்எடை இருமடங்காக உயர்ந்து விட்டது. இவர் தனது 42-வது வயதில் இறந்தார்.

597 கிலோ எடையுடன் காணப்படும் மேனுவல் ரை என்பவர் தனது உடல் ஒத்து ழையாமை காரணமாக கடந்த 9 ஆண்டுகளாக படுத்தபடுக்கையாகவே உள்ளார். கடந்த 2008-ம் ஆண்டில் இவர் கிளாடியா என்பவரை திருமணம் செய்து கொண்டார். “எந்த நிலையிலும் காதலைபெறமுடியும் என்பதை நான் நிருபித்து உள்ளேன். எனக்கு மனைவி கிடைத்து உள்ளார். இனி என்வாழ்நாளை சந்தோஷசமாக அமைத்துக் கொள்ள போகிறேன்” என்று தனது திருமண விழாவின்போது மேனுவல் ரை கூறினார்.

உலகின் 4-வது மிகபெரிய மனிதமலையாக இருந்தவர் நியூயார்க்கைச் சேர்ந்த வால்டர் ஹட்சன். 544 கிலோ எடைகொண்ட இவர் சாப்பிடுவதையே பொழுதுபோக்காக கொண்டிருந்தார். இப்படி சாப்பிட்டு, சாப்பிட்டே உடல் பெருத்து தனது அறையில் இருந்து வெளிவரமுடியாத நிலை ஏற்பட்டபோது, சுவரை உடைத்துதான் அவரை வெளியே கொண்டு வந்தனர். திருமணம் செய்து கொள்ள போவதாக அறிவித்த அவர், அந்தக்கனவு நிறைவேறுவதற்குள் இறந்து விட்டார்.

544 கிலோ எடையுடன், மனிதமலை பட்டியலில் 5-வது இடத்தை பிடித்தவர் ரோசலி பிராட்போர்டு. 14 வயதில் 92 கிலோ இருந்த இவரின் எடை அடுத்த ஓராண்டில் 140 ஆக உயர்ந்தது. திருமணம் முடிந்து ஒரு மகன் பிறந்தார். அதன்பிறகு அவர் முழுநேரத்தை வீட்டில் ஓய்வாக கழித்ததால் அவரது எடை மளமளவென உயர்ந்தது. மன அழுத்தம் காரணமாக, வலி நிவாரணி மாத்திரைகளை அதிகமாக தின்று தற்கொலை செய்து கொள்ளவும் இவர் முயற்சி மேற்கொண்டார். இதையடுத்து இவரது எடை 136 கிலோவாக குறைந்தது. இவர் தனது 63-வது வயதில் இறந்தார்.

பழங்களைத் தோலை உரிக்காதீங்க!

தோலை உரிக்காதீங்க!

சத்தான உணவைத் தேர்வு செய்து சாப்பிடுவது மட்டுமல்ல, அதைச் சாப்பிடும் விதமும் முக்கியம். ஆப்பிள் போன்ற பழங்கள் முதல் கடலை வகைகள் வரை தோலை நீக்கிச் சாப்பிடும் பழக்கம் நம்மில் பலருக்கு இருக்கிறது. அது கூடாது, அதன் மூலம் பல முக்கியமான ஊட்டச்சத்துகளை நீங்கள் இழக்க நேரிடலாம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

சாப்பாட்டு விஷயத்தில் அவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:

விலங்கு புரதம் வேண்டாம்

புரதத்துக்காக கால்நடைகளிலிருந்து கிடைக்கும் வெண்ணை, பால், இறைச்சி, பாலாடைக்கட்டி, முட்டை போன்றவற்றை அதிகம் சார்ந்திருக்காமல் இருப்பது நல்லது. தாவர புரதங்களைப் போலில்லாமல் இவை செரிமானம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கின்றன. இவை உங்களுக்கு ஒரு கனமான, வசதியற்ற நிலையை அளிக்கக்கூடும். நிலையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ஜீரணம் ஆக வேண்டும் என்பதற்காக அமிலவகைப் பானங்களை அருந்தும் வழக்கம் இருக்கிறது (உதாரணத்துக்கு பீட்சா சாப்பிட்ட பிறகு சோடா பருகுவது). அசிட்டிக் உணவுகளான சர்க்கரை, பால், பால் பொருட்கள், செயற்கைக் குளிர்பானங்கள் போன்றவற்றைத் தவிர்ப்பதும், ஆல்கலைன் உணவு வகைகளான பழங்கள், காய்கறிகளை அதிகமாகச் சேர்த்துக் கொள்வதும் நல்லது என்பதே.

பால்பொருட்களைத் தவிர்க்கலாம்

உங்களால் தினசரி பால் சாப்பிடாமல் இருக்க முடியாது என்றால் சோயா பால் அல்லது பாதாம் பால் சாப்பிடலாம். அதிலும் தற்போது பெரும்பாலும் பால் பொருட்கள் கலப்படமாக வருகின்றன என்று சந்தேகிக்கப்படும் நிலையில் அவற்றைத் தவிர்ப்பதே நல்லது என்கின்றனர் வல்லுநர்கள்.

எண்ணை உண்மை

நீங்கள் உங்கள் உணவில் எவ்வளவு எண்ணை எடுத்துக் கொள்கிறீர்கள் என்று பாருங்கள். கொட்டைகள், விதைகளிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் எண்ணை தான் சிறந்ததே தவிர, ரீபைண்ட் ஆயில் அல்ல. அதில் நார்ச்சத்து இழக்கப்பட்டு விடுகிறது.

சமைக்கும் முறையை மாற்றுங்கள்

எண்ணையில்லாமல், ஆரோக்கியமான முறையில் சமைப்பதற்குச் சற்றுக் கூடுதல் நேரமாகும். ஆனால் அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டாலும் நன்மையே. கட்லட் போன்றவற்றை நிலக்கடலை மாவு போட்டு ரோஸ்ட் செய்யலாம். அதற்கு சற்று கூடுதல் நேரமானாலும், நிலக்கடலையில் இருந்தே போதுமான எண்ணை கிடைத்து விடும்.

முழுமையாகச் சாப்பிடுங்கள்

பெரும்பாலான உணவுப் பொருட்களில் சத்துக்களும், மணமும் அவற்றின் தோலில்தான் இருக்கிறது. நீங்கள் தோலை உரிக்கும்போது சத்துகள் அதனுடன் போய்விடுகின்றன. காய்கறிகளுக்கு மணமூட்ட நாம் ஏன் மசாலாவையும், சாஸ்களையும் சேர்க்கிறோம் என்று எப்போதாவது நீங்கள் யோசித்தது உண்டா? நீங்கள் தோலை உரிக்கும்போது அதனுடன் மணத்தையுமஞ அகற்றி விடுகிறீர்கள். முழு உணவாக நீங்கள் சமைக்கப் பழகினால் மசாலா சேர்ப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். அதேபோல பட்டை தீட்டப்பட்ட பளபள அரிசிக்குப் பதிலாக பட்டை தீட்டப்படாத அரிசி நல்லது. மைதாவுக்குப் பதிலாக ஆட்டாவைப் பயன்படுத்தலாம்.

அதிகமாக அலச வேண்டாம்

காய்கறிகள், பழங்கள், தானியங்களை தண்ணீரில் அலசுவது நல்லதுதான். ஆனால் அதுவே அதிகமாகிவிட வேண்டாம். அப்படிச் செய்தால் நணங்கள் அனைத்துச் சத்துகளையும் இழக்க நேரிடும். காய்கறிகளை தண்ணீரில் வேகவைப்பதை விட ஆவியில் அவியுங்கள். அதற்குத் தண்ணீர் குறைவாகத் தேவைப்படும் என்பதுடன், சத்துகளையும் இழக்காது இருக்கலாம். காய்கறிகளை வெட்டியபிறகும் அலச வேண்டாம்.

பழங்களைத் தனியாகச் சாப்பிடுங்கள்

உணவுடன் பழங்கள் சாப்பிட வேண்டாம். மற்ற உணவுகளுடன் ஒப்பிடும்போது பழங்கள் வேகமாக ஜீரணமாகின்றன. அவை சர்க்கரைத்தன்மையைக் கொண்டுள்ளதால் உங்கள் வயிற்றில் நொதிக்கின்றன. அது பொதுவாக நல்லதுதான். ஆனால் நீங்கள் நிறைய உணவு சாப்பிட்டபின் பழங்கள் சாப்பிட்டால் ஜீரணம் மெதுவாக நடைபெறுகிறது. நீண்ட நேரமஞ நொதித்தல் நடைபெற்று வாயுப் பிரச்சினை, வயிற்றுப் பொருமல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். சாறாக இல்லாமல் முழுப் பழமாகச் சாப்பிடுவதும் நல்லது. பழச்சாறில் கலோரிகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் பழமாகச் சாப்பிடும்போது அதிக நார்ச்சத்தைப் பெறலாம்.

குரங்கைப் பின்பற்றுங்கள்

இயற்கையே நமக்குச் சிறந்த ஆசிரியர். அந்த வகையில் நமது நெருங்கிய உறவினரான குரங்கு நமக்கு வழிகாட்டுகிறது. எப்போதாவது குரங்கு ஆப்பிளைத் தோலை உரித்துச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஆனால் வாழைப்பழம், ஆரஞ்சு போன்றவற்றை அது நிச்சயமாகத் தோலை உரித்துச் சாப்பிடும். அதே பாணியை நீங்கள் உங்களின் உணவு முறையிலும் பின்பற்றுங்கள். தோல் உரிக்கத் தேவையில்லாத காய்கறிகள், பழங்களைத் தோல் உரிக்காதீர்கள்!

கூட்டுப் பிரார்த்தனையால் ஏற்படும் பலன்! (ஆன்மிகம்)

எல்லாருமே எதெதற்காகவோ, பகவானிடம் பிரார்த்திக்கின்றனர். பிரார்த்தனை என்பது கோரிக்கை தான். பகவானை துதிப்பது வேறு; அவனிடம் பிரார்த்திப்பது வேறு.
பகவானைத் துதித்து, அவன் புகழ் பாடினாலே போதும்… பக்தனுக்கு என்ன வேண்டுமோ, அதை கொடுத்து விடுவான். அவன் கொடுப்பான் என்ற நம்பிக்கை மட்டுமிருந்தால் போதும். பகவானைத் துதிப்பதை ஒருவராகவும் செய்யலாம்; பலர் சேர்ந்து பஜனை கோஷ்டியாகவும் செய்யலாம். பகவான் நாமாவை திருப்பித் திருப்பிச் சொன்னாலே போதும், பக்தனுக்கு வேண்டியதை அளிக்கிறார் பகவான்.
“பையன் பாஸ் ஆகணும்; நல்ல வேலை கிடைக்கணும்; பெண்ணுக்கு சீக்கிரம் கல்யாணமாக வேண்டும்…’ என்று சொல்லி, கோவிலில் போய் நிற்பது, தேங்காய் உடைப்பது எல்லாம் பிரார்த்தனை; இது எதையும் விரும்பாமல், கோவிலுக்கு போய், அந்தந்த தெய்வ நாமாவளியைச் சொல்லிவிட்டு வருவது துதி. தனியாக பிரார்த்திக்கும்போது, சுயநலம் முன் நிற்கிறது; கூட்டாக சேர்ந்து பிரார்த்திக்கும்போது, பொது நலம் முன் நிற்கிறது.
ஒரு தெருவில், குழாய் தண்ணீர் வரவில்லை. ஒரு வீட்டுக்காரர் மட்டும் முனிசிபாலிடி ஆபீசரைப் பார்த்து, “எங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை…’ என்றால், “சரிதான், போங்க சார்! எல்லார் வீட்டுக் குழாயிலும் தான் தண்ணீர் வரலை; எங்க வீட்டுல கூடத்தான் வரலை; எல்லாம் ரெண்டு நாளில் வரும், போங்க…’ என்கிறார்.
அதுவே, தெருக்காரர்கள் ஒன்று சேர்ந்து, கூட்டமாக அந்த ஆபீசர் முன் நின்று கோஷம் போட்டு, கோரிக்கை வைத்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார் ஆபீசர். மறுநாளே குழாயில் தண்ணீர் வந்து விடுகிறது. அதனால், தனியாக பகவானிடம் பிரார்த்திப்பதை விட, கூட்டாக பலர் சேர்ந்து பிரார்த்தித்தால் பலன் கிடைக்கும்.
தேவலோகத்தில் அசுரர்களின் கொடுமை தாங்க முடியவில்லை என்று பகவானிடம், தேவர்கள் கூட்டமாக சென்று பிரார்த்தித்தனர். உடனடி நடவடிக்கை எடுத்து, தேவர்களின் துயரை பகவான் போக்கினார் என்பது புராணம். கூட்டுப் பிரார்த்தனை என்றால், எல்லாரும் ஒன்று சேர்ந்து பிரார்த்திப்பது. இது, நல்ல பலனைத் தரும்!

பத்மாசனம்

செய்முறை: இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடை மீதும் மாற்றிப் போடவும். கால்மூட்டுகள் இரண்டும் தரைடைத் தொடவேண்டும். குதிகால்கள் இரண்டும் வயிற்றின் அடிப்பாகத்தை தொடும்படியாக அமைக்கவும். முதுகு எலும்பை நேராக நிமிர்த்திக் கம்பீரமாக உட்கார வேண்டும். இரண்டு கைகளையும் சின் முத்திரையுடன் படத்தில் காட்டியபடி வைத்துக் கண் பார்வையை மூக்கின் நுனியில் செலுத்தவும். சில பேர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது. ஒவ்வொரு காலாக தொடையில் போட்டுப் பழகவும். நாளடைவில் வந்துவிடும். ஆரம்பக் கட்டத்தில் சில வினாடிகள் இருந்தால் போதுமானது. வலி இருந்தால் உடன் ஆசனத்தைக் கலைத்துவிட வேண்டும். நாள் செல்ல வலி வராது. வெகு நேரம் இருக்கலாம். 1 முதல் 3 நிமிடம் இருக்கலாம். மேஜை சாப்பாடு உள்ளவர்களுக்கு இவ்வாசனம் இலகுவில் வராது. ஒரு வேளையாவது தரையில் சாதாரணமாக உட்கார்ந்து சாப்பிட்டால் இவ்வாசனம் இலகுவில் வந்துவிடும். பலன்கள்: அடிவயிற்றுப் பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகமாகும். நன்றாக பசி எடுக்கும். வாதநோய் தீரும். வழிபாடு, ஜபம், தவம், மன ஒருமைப்பாடு இவற்றிக்குச் சிறந்தது. நாடி சுத்தி, பிராணாயாமம் இந்நிலையில் இருந்து கொண்டு செய்தல் நலம்.


மரணத்தை வென்றவர் யார்?
* மனதை தூய்மைப்படுத்துவதே மனிதனின் முதல் கடமை. மனதை தூய்மைப்படுத்த மலைக்குகைகளிலும், வனங்களிலும், புண்ணியக்ஷத்திரங்களிலும் அலைந்து திரிந்து பயனில்லை.
* மனம் என்னும் கண்ணாடியை மனிதன் தூய்மையாக்கிய பிறகு, அவன் எங்கு வசிக்கிறான் என்ற பேச்சுக்கே இடமில்லை. தூய்மையான உள்ளத்தில் கடவுளாகிய மெய்ப்பொருள் உள்ளபடி ஒளிர்கிறார்.
* வெவ்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை மனிதன் விட்டொழிக்க வேண்டும். வெவ்வேறு இடங்களுக்கு ஓடுவதால் தனது வலிமையை மனிதன் வீணே இழக்கிறான்.
* மனிதன் தன் மனதை தூய்மையாக்குவதிலேயே கண்ணும் கருத்துமாக இருக்கவேண்டும். ஒருவன் எந்த இடத்தில் இருக்கிறானோ அங்கிருந்தே இதனைச் செய்ய முடியும். வேண்டியது மன வைராக்கியம் மட்டுமே.
* இதயத்தில் எப்போது வீணான ஆசைகள் அனைத்தும் அழிக்கப்படுகின்றதோ, அப்போதே மனிதன் மரணத்தை வென்றவன் ஆகிறான். அவன் இவ்வுடலில் இருக்கும்போதே கடவுளை அறியும் தன்மை பெறுகிறான்.
* உலகத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருந்தாதே. உன் உள்ளத்தில் இருக்கும் தீமைகளை நினைத்து வருத்தம் கொள். உன் உள்ளத்தை ஒழுங்குபடுத்து. பிறகு உள்ளும் புறமும் தூய்மை பெறுவதை விரைவில் உன்னால் உணரமுடியும்.
-விவேகானந்தர்