Advertisements

துரத்தும் தும்மலை விரட்டும் மூலிகை

மூலிகை கட்டுரை
இரவில் காற்று கூட புகுந்து விடாமல் கதவை மூடிக்கொண்டு தூங்குவதால் நமது அறையின் வெப்பநிலை நமது மூச்சுக்காற்றின் சுழற்சியால் சற்று அதிகரித்துவிடுகிறது. இதிலும் கொசுவிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள பல வேதிப்பொருட்களையும் எரிய விடுவதால் ஏற்கனவே அதிகரித்த அறையின் வெப்பநிலை இன்னும் அதிகரிப்பதுடன் அறையின் உள்ளே தங்கியுள்ள காற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளால் மாசடைய தொடங்குகிறது.
இதே காற்றை நாம் மீண்டும், மீண்டும் சுவாசிப்பதால் நுரையீரலின் சவ்வு பகுதிகள் உணர்விழந்து, மூளையின் கட்டுப்பாட்டுக்கு அடிபணியாமல் தன்னிச்சையாக செயல்பட ஆரம்பிக்கின்றன. அதிலும் நாம் உறங்கும் பொழுது நம்மையறியாமலேயே வாய் வழியாகவும் மூச்சுவிட்டு, மூக்குப்பாதை மட்டுமின்றி, உணவுப்பாதை மற்றும் தொண்டைப்பாதையும் வறட்சியடைய செய்து விடுகிறோம். இதனால், இயற்கையாகவே சுவாசப் பாதையின் உட்பகுதிகள் வலுவிழந்து, அவற்றின் உட்புறமுள்ள மயிர்கற்றைப் போன்ற உறிஞ்சுகளின் செயல்பாடு குன்றி, நுண்கிருமிகளை தடுத்து வெளியேற்றும் ஆற்றலை இழந்துவிடுகின்றன. ஆனால், காலையில் கண்விழித்துஎழும் நாம் அறைக்கதவை திறந்தவுடன் வெளியிலுள்ள குளிர்ந்த காற்றை எதிர்கொள்கிறோம்.
குளிர்ந்த நீரால் முகத்தை கழுவி, மூச்சுப்பாதை மற்றும் கபால அறைகளை குளிரச் செய்வதால் திடீரென சுருங்கி, விரியும் மூச்சுக்குழல் மற்றும் தொண்டைப்பாதையின் தன்னிச்சையான எதிர்ப்பே தும்மலாக மாறுகிறது. ஆகையால்தான் கடும் பனியில், வெட்டவெளியில் தூங்கி எழும் பொழுது ஏற்படாத தும்மல், மூடிய அறையில் தூங்கி எழும் காலைப்பொழுதில் நம்மை துரத்த ஆரம்பித்துவிடுகிறது.
அடுக்குத் தும்மலால் கழுத்து, பிடரி, கீழ் மார்பு வலி, தொண்டை வறட்சி, மூக்கு, கண், உதடு எரிச்சல், தலைவலி, மூக்கடைப்பு, மூக்கு கோணுதல், மூக்கின் உட்புறங்களில் ஒருவித அரிப்பு என பல உபாதைகள் உண்டாகின்றன. சிலருக்கு அடுக்குத் தும்மலால் கழுத்து மற்றும் முதுகு பகுதியில் வாயுப்பிடிப்பும் உண்டாகிறது.
அல்பீனியா கேலங்கா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஜிஞ்ஜிபெரேசியே குடும்பத்தைச் சார்ந்த அகன்ற இலைகளையுடைய புல் போன்ற செடியின் வேர்தண்டே பேரரத்தை என்று அழைக்கப்படுகிறது. இவற்றில் அல்பீனியா அபிசினேரம் என்ற தாவரவியல் பெயர் கொண்ட சிற்றரத்தை என்ற வேறு வகை செடிகளும் காணப்படுகின்றன. பேரரத்தை வேர்களிலுள்ள மெத்தில் சின்னமேட், சினியோல், டீபைனின் ஆகியன தொண்டை மற்றும் மூச்சுப்பாதையிலுள்ள தசைகளின் இறுக்கத்தை குறைத்து, அங்கு தேங்கியுள்ள கபத்தை வெளியேற்றுகின்றன. இவை சளி சவ்வின் அதிக சுரப்பை கட்டுப்படுத்தி, செல் அழிவையும் தடுத்து, மூச்சுப்பாதையின் மென்மையான சவ்வை பாதுகாக்கின்றன.
பேரரத்தை, சிற்றரத்தை, ஓமம், அதிமதுரம், சுக்கு, மிளகு, திப்பிலி, நெல்லிவற்றல், சீந்தில் தண்டு ஆகியவற்றை சமஅளவு எடுத்து ஒன்றிரண்டாக மொத்த எடைக்கு பொடித்த பனங்கற்கண்டு பாதியளவு சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனை 2 மேசைக்கரண்டியளவு நீரில் கொதிக்க வைத்து 60 மி.லி.,யாக சுண்டியப் பின்பு வடிகட்டி சாப்பிட சளியினால் ஏற்படும் இருமல், காய்ச்சல், தொண்டைவலி நீங்கும்.
பேரரத்தையை உலர்த்திப் பொடித்து அரை முதல் 1 கிராமளவு தேனுடன் கலந்து உணவுக்கு பின்பு சாப்பிட தொண்டைவலி மற்றும் இருமல் நீங்கும். இதை வாயிலிட்டு மென்று, எச்சிலை உள்ளே விழுங்கி வந்தாலும் தொண்டையில் காணும் உறுத்தல் தீரும். இதனை வெந்நீர் விட்டு மைய அரைத்து தொண்டை மற்றும் மார்பில் லேசாக தடவி வர சளி நன்கு வெளியேறும். இருமலினால் தோன்றும் மார்பு வலி நீங்கும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்

Advertisements
%d bloggers like this: