உஷார்: மொபைல் போனால் பணம் பறிப்பு


மொபைல் போன் பிரீபெய்டு சிம் கார்டுகளில் “ஜோக் பேக்’, “சாங் பேக்’, “கிரிக்கெட்’ உட்பட பல பெயர்களில், வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் அபகரிக்கும் நிலை உள்ளது.பல நிறுவன பிரீபெய்டு சிம் கார்டுகள் பயன் படுத்துவோர்களுக்கு, அந்நிறுவனம் மட்டுமின்றி பல நிறுவனங்கள், அமைப்புகள் பெயர்களில், தினமும் பல எஸ்.எம்.எல்.,கள் சேவை என்ற பெயரில் வருகிறது. இதில், ஏர்டெல் நிறுவனம் நேரடியாக குறிப்பிட்ட சினிமா பாட்டுகள், கிரிக்கெட், ஜோக் பேக், சாங் பேக், காலர் டியூன் உட்பட பல எஸ்.எம்.எஸ்.,களை அனுப்புகின்றனர். அவை ஆங்கிலத்தில் வருவதால், இவற்றை புரிந்தோ, புரியாமலோ பல வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தெரிந்த ஒரு கீயை அல்லது மொபைலின் சிவப்பு நிற துண்டிப்புக்கான கீயை அழுத்தி எஸ்.எம்.எஸ்.,ஐ துண்டிக்கின்றனர்.

பல நேரம் இந்நிறுவன எண்களில் இருந்து கம்ப்யூட்டர் வாய்ஸ்களில், “நீங்கள் ஹலோ டியூன் வாடிக்கையாளர் ஆனதற்கு நன்றி…’ என்பது போன்ற தொடர் பேச்சும், அதைத் தொடர்ந்து இந்த பட்டனை அழுத்துங்கள், வேறு பட்டனை அழுத்துங்கள், என வருகிறது.
இதை தவறாக கையாளும்போது, உடனடியாக அவர்கள் காலர் டியூன், சில குறிப்பிட்ட பாட்டுக்களை டவுன் லோடு செய்ததாக கணக்கிடப்படுகிறது. இதில், கிரிக்கெட், ஜோக், படங்கள், பாட்டுகள் போன்றவைகளுக்கு தினமும் ஒரு ரூபாய் கட்டணம், ஒரே முறையில் கழித்துக் கொள்ளும்படி 30 ரூபாய் கட்டணம் என பலவாறு வாடிக்கையாளர் மொபைலில் கையிருப்பில் உள்ள தொகை கழிக்கப்படுகிறது.பணம் திடீரென குறைந்ததும், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்து, இந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டால், “நீங்கள் ஜோக் பேக் எடுத்துள்ளீர்கள். கிரிக்கெட் பேக் எடுத்துள்ளீர்கள். அதற்காக இத்தொகையை பிடித்தம் செய்துள்ளோம். நீங்கள் வேண்டாமென்றால் துண்டித்துக் கொள்கிறோம்’ எனக்கூறி துண்டிக்கின்றனர். துண்டிக்கப்பட்டாலும், அதற்காக அவர்கள் மொத்தமாக 30 ரூபாய் அல்லது பல நாட்களாக ஒரு ரூபாய் வீதம் அவர்கள் எடுத்துக் கொண்ட தொகை வாடிக்கையாளருக்கு பறிபோய்விடுகிறது. இந்த துண்டிப்பு நடவடிக்கைக்கும் 24, 48 மணி நேரம் அவகாசம் வைத்து துண்டிக்கின்றனர். அதற்குள் ஒரு தொகை பறிபோகிறது.

இதுபோன்ற அனைத்து சேவை எஸ்.எம்.எஸ்.,கள், அழைப்புக்களை முழுமையாக தங்கள் எண்ணுக்கு துண்டித்துவிடும்படி வாடிக்கையாளர்கள் கூறினால், சேவை துண்டிக்கப்படும் என்ற தகவல் வருகிறது. ஆனால், அச்சேவை துண்டிப்புச் செய்ய 45 நாள் ஆகும் என கூறுவதுதான் வாடிக்கையாளர்களை கொதிப்படைய செய்கிறது. இந்த 45 நாட்களுக்குள் வாடிக்கையாளர் பெரும் தொகையை இழக்க நேரிடுகிறது.வாடிக்கையாளர் அறியாமல் சேவை எஸ்.எம்.எஸ்.,ஐ கிளிக் செய்துவிட்டால், அடுத்த வினாடி அவரது இருப்பில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யும் அதே நிறுவனம், வாடிக்கையாளர் தனக்கு எந்த சேவை அழைப்புகளும் வேண்டாம் என்பதை ரத்து செய்ய 45 நாள் எடுத்துக் கொள்வது வெறுப்படையச் செய்கிறது.

இதுபற்றி, ஏர்டெல் சேவை மையத்தில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “சேவைகளை துண்டிக்க 45 நாட்கள் எடுத்துக் கொள்வது எங்கள் நிறுவன விதிமுறை. வேறு வழியில்லை. வாடிக்கையாளர் குறிப்பிட்ட கீ களை அழுத்தி, ஏற்றுக் கொள்ளும் போது தான் கட்டணத்துடன் கூடிய பேக்குகள் அவர்கள் எண்ணுக்கு சென்றடைகிறது’ என்கின்றனர்.ஒரு நிறுவனத்துக்கு வாடிக்கையாளர் அவசியம் என்பதைப்போல, அவர்களது பணத்தை அவர்கள் விரும்பாமல் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதும் அவசியமாகிறது

%d bloggers like this: