Advertisements

டைப் 2 டயபடீஸ்: இதோ ஒரு புது பூதம் குட்டீஸ்களையும் தாக்குகிறது

* “வாரத்திற்கு ஒரு முறை தானே, ஓட்டலில் பிட்சா, பர்கர் சாப்பிட்டால் பரவாயில்லை; ஒன்றும் செய்யாது; நீ சும்மா இரு, குழந்தைங்க நல்லா சாப்பிடறதே அதிசயம்…’ என்று வாதிப்பவரா?
* நீங்கள் மணிக்கணக்கில் சீரியல் பார்த்தால், அவங்களும் “டிவி’ யில் சினிமா, காமெடி என்று ஏதாவது பார்க்கத்தான் செய்வர்.
* கண்டபடி சாப்பிடும் பல குழந்தைகளுக்கு உடற்பயிற்சி, விளையாட்டு என்பதே மறந்து போய் விட்டது.
* சாப்பிட்டபின் தண்ணீர் குடி…ன்னு எத்தனை தடவை சொல்லியாச்சு; கேட்டாத்தானே…என்று நொந்து கொள்பவரா?
இப்படிப்பட்ட சூழல், பல குடும்பங்களில் வாடிக்கையாகி வருகிறது. இந்த குடும்பங்களில் இருந்து வளரும் குழந்தைகள் தான் “ஒபிசிட்டி’ என்ற குண்டாகும் நிலைக்கு ஆளாகின்றனர்; சில குடும்பங்களில், அடுத்த சில ஆண்டுகளில் இளம் வயதினருக்கே பி.பி.,சர்க்கரை நோய் என்ற பாதிப்பு நுழைந்து விடுகிறது.
விழிப்பு இல்லை இன்னும்
ஷுகர், டயபடீஸ் என்று சொல்லப்படும் சர்க்கரை நோய் தீவிரம் பற்றி பலருக்கும் இன்னும் தெரியவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தான் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனரே தவிர, பாதிப்பின் அறிகுறிகளுடன் உள்ளவர்களுக்கு தெரிவதில்லை.
டயபடீஸ் என்பது இப்போது உலகம் முழுக்க “டைம் பாம்’ மாதிரி பரவி வருகிறது. நாற்பது வயதை தாண்டியவர்களை தாக்கும் டைப் 2 டயபடீஸ்; அதுபோல, குழந்தைகளை தாக்கக் கூடியது டைப் 1 டயபடீஸ். ஆனால், சமீப காலமாக 25 ஐ தாண்டியவர்களுக்கே டைப் 2 டயபடீஸ் நோய் வர ஆரம்பித்து விட்டது. எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ள டயபடீஸ் நோயாளிகளில் 30 சதவீதம் பேர் இந்த வயதினர் என்று கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கும் டைப் 2
குழந்தைகளுக்கு பொதுவாக டைப் 1 டயபடீஸ் தான் வரும். ஆனால், சில மாதங்களாக, அமெரிக்கா, ஜப்பான் உட்பட பல நாடுகளில், குழந்தைகளை டைப் 2 டயபடீஸ் தாக்கி வருவது மருத்துவ நிபுணர்களை அதிர வைத்துள்ளது. ஜப்பானிய பள்ளிக்குழந்தைகளுக்கு டைப் 2 டயபடீஸ் வந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. டைப் 1 ஐ விட, டைப் 2 ஏழு மடங்கு அதிக வேகத்தில் குழந்தைகளை பாதிக் கிறது என்றும் நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
என்ன தான் காரணம்?
கடந்த ஐந்தாண்டில் நம் வாழ்க்கை முறை, உணவு முறை, உடற்பயிற்சி நிலை எல்லாம் மாறி விட்டது. இயந்திரமயம் வந்துவிட்டது. மனித உழைப்பு குறைந்துவிட்டது. உடலுக்கு தேவையில்லாத உணவு வகைகள் புகுந்துவிட்டன. வயது வித்தியாசம் பாராமல் பிட்சா, பர்கர் போன்ற “ஜங்க் புட்’ உணவு வகைகளை சாப்பிடுவது அதிகரித்து வந்தது. இதன் விளைவு தான் இப்போது குட்டீஸ்களும் இந்த “குப்பை’ உணவுகளில் நாட்டம் கொண்டுள்ளனர். இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு விட்டு, மணிக் கணக்கில் “டிவி’ மற்றும் கம்ப் யூட்டர் கேம் விளையாடுகின்றனர். ஓடி விளையாடுவது, உடற் பயிற்சி செய்வது போன்றவை அறவே இல்லாமல் போய்விட்டது. சத்தான உணவும் போச்சு; சீரான உடற்பயிற்சியும் போச்சு; இதன் விளைவு தான் டைப் 2 சர்க்கரை நோயும் குழந்தைகளை பாதிக்க ஆரம்பித்து விட்டது.
புரிந்து கொள்ளுங்கள்
நாம் உண்ணும் உணவுகளில் உள்ள எரிசக்தி, சீரான அளவில் ரத்தத்தில் கலந்து சத்துக்களை பல உறுப்புகளுக்கும் அனுப்ப வேண்டும்.
இந்த எரிசக்தியைத் தான் குளூக்கோஸ் கொண்டுள்ளது. இந்த குளூக்கோஸ் தான் சர்க்கரை என்று சொல்லப்படுகிறது. ரத்தத்தில் குளூக்கோசை எரிசக்தியாக மாற்றுவது இன்சுலின் என்ற சுரப்பி தான். கணையத்தில் உள்ள இந்த சுரப்பி சரியான அளவில் சுரந்து, குளூக்கோசை எரிசக்தியாக மாற்றி ரத்தத்தில் கலக்கும்; அதிகமாக கலக்காமலும் பார்த்துக்கொள்ளும். ஆனால், சிலருக்கு கணையத்தில் இந்த சுரப்பியில் இருந்து போதுமான இன்சுலின் சுரக்காது; அப்படியே சுரந்தாலும் அது வேலை செய்வதில் சிக்கல் இருக்கும். அப்படி இருந்தால் ரத்தத்தில் குளூக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படாமல் அதிகரித்து விடும். இது தான் டைப் 2 டயபடீஸ் என்பது.
கணையத்தில் உள்ள இன் சுலின் சுரப்பி, இன்சுலினை சுரக்கவே செய்யாது. இதனால், ஊசி மூலம்,மருந்து மூலம் தான் இன்சுலினை பெற முடியும். இந்த பாதிப்பு தான் டைப் 1 டயபடீஸ். குழந்தைகளுக்கு மட்டும் தான் இந்த பாதிப்பு வரும்.
எதிர்காலத்தில்
இதுவரை டைப் 1 தான் குழந்தைகளுக்கு வந்து கொண்டிருக்கிறது; இப்போது டைப் 2 டயபடீசும் வர ஆரம்பித்து விட்டது. அப்படியானால், அடுத்த சில ஆண்டுகளில் டயபடீஸ் 2 நோயாளிகளில் குழந்தைகளும் கணிசமாக இருப்பர் என்பது தான் நிபுணர்கள் கவலை. டயபடீஸ் என்பதே எதிர்பாராமல் வெடிக்கும் “டைம் பாம்’ தான். அதைக் கட்டுக்குள்ளேயே வைத்திருக்க வேண்டும். பாதிப்பு வந்த பின் தான் பலருக்கும் தெரிகிறது.
இப்போது புதிதாக வெடிக்கக் காத்திருக்கும் புது “டைம் பாம்’ அடுத்த சில ஆண்டுகளில் பயத்தை ஏற்படுத்தத்தான் போகிறது.

Advertisements
%d bloggers like this: