Daily Archives: திசெம்பர் 15th, 2009

பிரச்சினைக்குரிய முதுமையில் தாய்மை

இப்போதெல்லாம் திருமணம் ஆன தம்பதியர் பலர், குழந்தை பெற்றுக்கொள்வதை தள்ளிப்போட்டு வருகிறார்கள். இவர்களில் பலர், தங்கள் லட்சியத்தை எட்டுவதற்காகவும், குடும்பத்தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காகவும் குழந்தை பெறுவதை சிறிது காலத்திற்கு தள்ளிப்போடுகிறார்கள்.

இப்படி, குழந்தை பெறுவதை தள்ளிப்போட்டு, முதுமையில் தாய்மைப்பேற்றை அடையும் பெண்களின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்து வருவதாக சமீபத்தில் லண்டனில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் ஆய்வு கட்டுரை ஒன்று சமர்பிக்கப்பட்டது. அதில் மேலும் கூறப்பட்டு இருந்ததாவது:-

“பெண்கள் வயது அதிகம் ஆன காலகட்டத்தில் தாய்மைப்பேறு அடைய விரும்புவது என்ற பிரச்சினை உலகின் பல நாடுகளிலும் காணப்படுகிறது. செயற்கை கருத்தரிப்பு முறை கண்டுபிடிக்கப்பட்டு சுமார் 25 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும், இந்த காலதாமதமான தாய்மைப்பேறு என்பது மருத்துவ அறிவியலின் உதவியுடன் அடையக் கூடியதாக ஒன்றாகவே ஆகியுள்ளது.

ஆனால், மருத்துவ ரீதியாக இது சாத்தியமாகிவிட்டாலும் 40 வயதுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்கள் உடல்ரீதியாக பல பிரச்சினைகளை எதிர்நோக்குகிறார்கள். மேலும், இவ்வாறு பிறக்கும் குழந்தைகளும் மருத்துவ ரீதியான பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றன.இதுதவிர, சமூக, உளவியல் ரீதியான பிரச்சினைகளும் இம்மாதிரியான காலதாமதமான தாய்மைப்பேறு காரணமாக ஏற்படுகின்றன…” என்று, பல தகவல்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

நீங்களும் குழந்தை பெறுவதை தள்ளிப்போடும் தம்பதியர் என்றால் இப்போதே உஷாராகிவிடுங்கள். குறித்த காலத்தில் விதைத்தால்தான் மகசூல் சரியாக கிடைக்கும் என்பது இதற்கும் பொருந்தும்.

கர்ப்பிணிகள் பப்பாளி சாப்பிடலாமா?


கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைக்கான வாய்ப்பை எதிர்நோக்கும் பெண்கள் தவிர மற்ற எல்லோரும் விரும்பி சாப்பிடும் பப்பாளிப் பழம் நிறைய சத்துக்கள், மருத்துவ குணங்கள் கொண்ட பழமாகும். இதில் வைட்டமின்கள் ஏ, சி, ஈ மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. பெரும்பாலும் கோடைகாலம்தான் இந்த பழத்திற்கான சீசன்.

இந்த பழத்தில் இருந்து நமக்கு கிடைக்கும் சில பயன்கள்:

பப்பாளியில் உள்ள பேராக்ஸ்நேஸ் என்ற தாதுப்பொருள் கொழுப்பை குறைக்க உதவுகிறது. பப்பாளிப் பழத்தில் காணப்படும் வைட்டமின் `ஈ’ குடல் பகுதியில் கேன்சர் வராமல் தடுக்கிறது.

கிட்னியில் கல் இருப்பவர்கள் பப்பாளிப் பழத்தை தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் அடையலாம். அல்சர் தொல்லை உள்ளவர்கள் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம் பெறலாம்.

சிலருக்கு அதிக புரோட்டின் நிறைந்த உணவு சாப்பிட்டால் செரிக்காமல் வயிறு கோளாறு ஏற்படும். அப்படி உள்ளவர்கள் உணவுக்குப்பின் இந்த பழத்தை சாப்பிட்டால் உணவை விரைவில் செரிக்க வைக்கும்.

மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு லேகியங்களைவிட, பப்பாளிப் பழம் ஒரு அருமையான மருந்து. இதை தவறாமல் தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் வரவே வராது.

பப்பாளிப் பழத்தை கூழாக்கி வாரம் இரண்டு முறை முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், சொரசொரப்பு தன்மை மாறி முகம் பளப்பளப்பாக மாறிவிடும்.

பப்பாளியில் `பப்பைன்’ என்ற தாது பொருள் உள்ளது. இந்த பப்பைன் மேலை நாடுகளில் மாட்டு இறைச்சி மற்றும் கோழி இறைச்சியை பதப்படுத்த உபயோகிக்கப்படுகிறது.

பப்பாளிப்பழத்தை கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தை பாக்கியத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் பெண்கள் சாப்பிடக்கூடாது என்ற கருத்து உள்ளது. இவர்கள், பப்பாளிப் பழத்தை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், உடல் வெப்பநிலை அதிகரித்து, ஆரம்ப நிலையில் உள்ள கரு கலைந்துவிடும் அல்லது கரு உருவாகுதல் தள்ளிப்போகும் என்பதால் அப்படிச் சொல்கிறார்கள். அதேநேரம், மேற்படி பெண்கள் இந்த பழத்தில் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் சாப்பிடுவதில் தவறே இல்லை. ஒருவேளை, அளவுக்கு அதிகமாக பப்பாளிப் பழத்தை அவர்கள் எடுத்துக்கொண்டால், அந்த பழத்தை சாப்பிட்டு முடித்தவுடன் ஒரு டம்ளர் பால் குடிப்பது உடல் வெப்பநிலை அதிகரிப்பதை தடுத்து நிறுத்திவிடும்.

புவி வெப்பம் குறைக்க வாய்ப்பு இல்லை ? வளர்ந்த – வளரும் நாடுகள் இடையே மோதல்

புவிவெப்ப உயர்வு மற்றும் பருவகால மாற்றம் தொடர்பாக உலக அளவில் ஒரே சட்ட வரைவு ஏற்படுத்துவதில் வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இடையே கருத்து வேற்றுமை எழுந்துள்ளது. இதனால் கோபன்ஹேகன் மாநாட்டில் பயனுள்ள சட்ட திட்டம் ஏற்படும் என்பதில் சந்தேகமே. இதற்கிடையில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இந்த மாநாட்டில் பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எரிபொருளில் இருந்து வெளியாகும் வாயு : உலக அளவில் புவியை சுற்றியுள்ள வாயுக்களின் வெப்பம் உயர்ந்து புவியின் வெப்பம் அதிரிக்கரித்து வருகிறது. பனி மலை உருகி ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பருவ மாற்றம் – புவிவெப்பம் பிரச்னையை சமாளிக்க என்ன நடவடிக்கை எடுக்கலாம் என ஆய்வு செய்ய 194 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு கோபன்ஹேகனில் கூட்டப்பட்டுள்ளது. இதில் முக்கிய பிரச்னையாக அந்தந்த நாட்டில் இருந்து வெளியேற்றம் ஆகும் எரிபொருளில் இருந்து வெளியாகும் வாயுக்களை கட்டுப்படுத்துவது என்பது . கரியமில வாயுவை கட்டுப்படுத்துவதில் யார் எவ்வளவு கட்டுப்படுத்துவது என்பதில் பிரச்னை துவங்குகிறது. இந்ந மாநாட்டில் வளர்ந்த நாடுகள் எடுக்கும் சட்ட திட்டங்களை வளர்ந்து வரும் நாடுகளும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஒரு சட்ட முன்வடிவு தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ஆதரிக்குமா ? : இந்தசட்ட வரைவு குறித்து நேற்றைய கூட்டத்தில் பல்வேறு நாட்டு சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் பங்கேற்று ஆலோசித்தனர். இதில் கியோட்டோ ஒப்பந்தம் சரத்துகள் தொடர்பாக சர்‌ச்சை எழுந்துள்ளது. சுற்று சூழல் துறை அமைச்சர் ஜெய்ராம்ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்தார். கரியமில வாயுவை கட்டுப்படுத்தும் சதவீதம் குறித்து அவர் அதிருப்பதி தெரிவித்தார். இதே நிலையில் சீனாவும், ஆப்பிரிக்காவும் இருப்பதாக இணைந்து எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து மாநாடு சிறிது நேரம் தடைப்பட்டது. இந்த பிரச்னையில் இந்தியாவும், சீனாவும் , ஆப்ரிக்காவும் இணைந்து செயலாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கியோட்டோ ஒப்பந்தத்தையே ஏற்காத அமெரிக்கா கோபன்ஹேகன் மாநாட்டில் எடுக்கும் முடிவுகளை அப்படியே ஆதரிக்காது என தெரிகிறது.

உலக அளவில் வளர்ந்த நாடுகள் கரியமில வாயுவை குறைக்க தயாராக இருக்கும் அளவை வளர்ந்து வரும் நாடுகள் ஏற்க முடியாது என்பது தற்போதைய பிரச்னை. இதற்கிடையில் மாநாட்டை நடத்தும் ஐ.நா., அமைப்பாளர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். இது போன்ற குளறுபடிகள் இருக்கும் நேரத்தில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் இம்மாநாட்டில் பங்கேற்பாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

கரியமில வாயு வெளியேற்ற அளவை குறைத்தால் வளர்ச்சி பாதிக்கும் என வளர்ந்து வரும் நாடுகள் அஞ்சுகின்றன. இதே நேரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு இந்த கவலை இல்லை. எப்படியோ உலகை காப்பாற்ற நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டால் உலகம் எதிர்பார்க்கும் உதவியாக இருக்கும்.

விண்டோஸ் வேகம் பெற இனியவை இருபது

விண்டோஸ் 95, 98, 2000, எக்ஸ்பி, விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல நிலைகளில் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அவை இயங்கும் வேகம் இன்னும் அதிகமாக இருக்க வேண்டும், சிறிது கூடக் குறையக் கூடாது என்பதுதான் நம் விருப்பமாக எந்தக் காலத்திலும் உள்ளது. தொடக்கத்தில் உள்ள ஒரு சிஸ்டத்தின் வேகம் போகப் போகக் குறைவது பலருக்கு ஏமாற்றத்தைத் தருகிறது. இதில் இந்த சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்களின் கவனக் குறைவும் உள்ளது. அவையும் சேர்ந்தே சிஸ்டத்தின் வேகக் குறைவிற்குக் காரணமாய் அமைந்துள்ளது. ஒரு சில நடவடிக்கைகளை மேற்கொண்டால் நிச்சயம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை புயல் வேகத்தில் இயங்க வைக்கலாம் என்பதே உண்மை. அந்த சில நடவடிக்கைகளை இங்கு காணலாம். இந்த நடவடிக்கை குறித்த டிப்ஸ்கள், சிஸ்டம் வடிவமைப்பவர்கள், சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேட்டர்கள், நெட்வொர்க் அட்மினிஸ்ட் ரேட்டர் மற்றும் ஹெல்ப் டெஸ்க் வல்லுநர்கள் எனப் பலரிடம் திரட்டியவை. நீங்களும் இவற்றை முயற்சித்துப் பாருங்களேன்.

1. ஹார்ட் டிஸ்க்கின் சுழற்சி, அதன் மூலம் பைல் தேடும் நேரம் ஆகியவை சிஸ்டம் இயங்குவதில் முக்கிய இடத்தைக் கொள்கின்றன. எனவே சிதறலாகப் பதிந்த பைல்களை ஒருமுகப்படுத்தும் டிபிராக் செயல்பாட்டினை மேற்கொள்ளுங்கள். விண்டோஸ் இணைந்து வரும் டிபிராக் பைல் அல்லது ஸ்மார்ட் டிபிராக் (SmartDefrag) போன்ற மற்றவர்கள் தந்துள்ள புரோகிராம்களை இதற்குப் பயன்படுத்தலம. இந்த புரோகிராம் பெற http://www.onlinetechtips.com/freesoftwaredownloads/freedefragmenter/ என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். ஹார்ட் டிஸ்க் என்று பொதுவாக இல்லாமல் விண்டோஸ் பேஜ் பைல் மற்றும் ரெஜிஸ்ட்ரியைக் குறிப்பாக டிபிராக் செய்திட வேண்டும்.

2. தற்காலிக பைல்கள் உருவாக்கம் நம் ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை எடுத்துக் கொண்டு அதன் பைல் தேடும் செயல்பாட்டினைத் தடுக்கும். எனவே டெம்பரரி பைல் போல்டர், ரீசைக்கிள் பின், ஹைபர்னேஷன் போன்ற போல்டர்கள் மற்றும் டைரக்டரிகளில் உள்ள தற்காலிக பைல்களை நீக்க வேண்டும். Treesize போன்ற புரோகிராம்களின் உதவி கொண்டு எந்த புரோகிராம்கள், பைல்கள் உங்கள் டிஸ்க்கில் அதிக இடம் எடுத்துக் கொண்டுள்ளன என்று பார்த்து செயல்படவும். இந்த புரோகிராமினைப் பெற http://www.onlinetechtips.com/computertips/treesizefreeutilitytofindviewandfreeupharddiskspace/ என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.

3.விண்டோஸ் சிஸ்டத்தினை வேகமாக இயக்கலாம். இதற்கு ஸ்டார்ட் அப் புரோகிராம்கள் லோட் ஆவதை தாமதப்படுத்தலாம். இலவசமாக, ஸ்டார்ட் அப் டிலேயர் (Startup Delayer) என்ற புரோகிராம் இதற்கு உதவும். இதனைப் பெற http://www.onlinetechtips.com/computertips/speedupwindowsxpboot/ என்ற முகவரிக்குச் செல்லவும். பொதுவாக பல ஸ்டார்ட் அப் புரோகிராம்கள், காலப் போக்கில் நமக்குத் தேவையற்றதாக இருக்கும். இவற்றை இந்த பட்டியலில் இருந்து நீக்க msconfig என்ற கட்டளையை ரன் பாக்ஸில் இயக்கி நீக்கவும்.

4. விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவில் விண்டோஸ் சர்ச் இன்டெக்ஸிங் என்ற பணி தொடர்ந்து நடைபெறும். இது நடைபெறுவதனை நிறுத்தி வைக்கலாம். அதே போல, பெர்பார்மன்ஸ் ஆப்ஷன்ஸ் பெற்று, தேவையற்ற அலங்கார விண்டோக்கள், திரைக் காட்சிகளை நீக்கலாம். இந்த வழியைப் பின்பற்றி தேவையற்ற விண்டோஸ் சர்வீஸ், செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை நீக்கலாம்.

5. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைத் துரிதப்படுத்த மைக்ரோசாப்ட் நிறுவனம் Bootvis என்னும் புரோகிராமினைத் தந்துள்ளது. அதன் தளம் சென்று இந்த புரோகிராமினை இலவசமாகப் பெற்று இயக்கவும்.

6. ரெஜிஸ்ட்ரியில் பல ரெபரன்ஸ் வரிகள் தேவையற்றதாய் சில நாட்களிலேயே மாறிவிடும். இவற்றை நீக்கலாம். கவனத்துடன் இதற்கான வழிமுறைகளை மைக்ரோசாப்ட் தளத்தில் பெற்றுக் கையாளவும்.

7. பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மெதுவாக இயங்குவதற்குக் காரணம், நாம் அறியாமலேயே இன்டர்நெட் வழியாக நம் கம்ப்யூட்டரை வந்தடையும் ஸ்பைவேர் புரோகிராம்களாகும். இவற்றை AdAware, Giant Antispyware, SUPER AntiSpyware போன்ற புரோகிராம் களில் ஏதேனும் ஒன்றின் துணை கொண்டு நீக்கலாம். இவை இணையத்தில் இலவசமாகவே கிடைக்கின்றன. இவற்றின் மூலமாகவும் நீக்க முடியாமல், ஹார்ட் டிஸ்க்கில் தங்கும் ஸ்பை வேர்களை HijackThis to remove spyware என்ற புரோகிராம் மூலம் நீக்கலாம்.

8. சில சாப்ட்வேர் புரோகிராம்கள் தேவையில்லாமல், கம்ப்யூட்டருடன் சிஸ்டம் வரும்போதே பதியப்பட்டு கிடைக்கும். இவற்றை நீக்க PC Decrapifier போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.

9. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.

10. உங்கள் மவுஸ் செட்டிங்ஸில் கவனம் செலுத்துங்கள். அதற்கான வழிகளைச் சொல்லித் தரும் தளங்கள் இணையத்தில் உள்ளன. இதனால் வேகமாக காப்பி, பேஸ்ட், ஸ்குரோல் போன்ற செயல்களை வேகமாக மேற்கொள்ளலாம்.

11. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (C Cleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.

12.விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை http://www.techrecipes.com/rx/1353/xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.

13. தேவைப்படுகிறதோ இல்லையோ, அதிக எண்ணிக்கையில் எழுத்து வகைகளை (Fonts) நாம் கம்ப்யூட்டரில் சேர்த்து வைக்கிறோம். விண்டோஸ் தரும் எழுத்து வகைகளைக் கூட அனைத்தும் நாம் பயன்படுத்துவதில்லை. விண்டோஸ் இயங்கும் போது பாண்ட்ஸ் போல்டரில் உள்ள அனைத்து எழுத்து வகைக�ளையும் இயக்கி வைக்கிறது. எனவே இவற்றில் சிலவற்றை நீக்கி, விண்டோஸ் தொடக்கத்தில் இயக்காதபடி போட்டு வைக்கலாம்.

14. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும்.

15. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

16. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

17. விஸ்டாவில் என்று ஒரு செயல்பாடு இருக்கும். இதனை நிறுத்தி வைப்பதன் மூலம் வீடியோக்களையும், படங்களையும் இணையத்தில் வேகமாக பிரவுஸ் செய்திட முடியும்.

18. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.

19. நீங்கள் பயர்பாக்ஸ் பயன்படுத்துகிறீர்களா! இதன் செயல் வேகத்தை அதிகப்படுத்த ஆட் ஆன் புரோகிராம் ஒன்று FasterFox என்ற பெயரில் உள்ளது. அதனைப் பயன்படுத்தவும்.

20. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.

இன்டர்நெட் வசதியுடன் லைவ் டிவி

டாட்டா டெலி சர்வீசஸ் நிறுவனம் உங்களுடைய லேப்டாப் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் டிவி நிகழ்ச்சியை லைவாகப் பார்க்கும் வசதியைத் தருகிறது. இந்நிறுவனம் வழங்கும் இன்டர்நெட் இணைப்பினைத்தரும் டாட்ட போட்டான் ப்ளஸ் தற்போது டிவி பார்க்கும் வசதியுடன் தரப்படுகிறது. இந்த வசதியைப் பெற உங்கள் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பில் வீடியோ ஸ்ட்ரீமிங் வசதி இருக்க வேண்டும். ஸ்போர்ட்ஸ்,நியூஸ், பொழுதுபோக்கு மற்றும் அந்த அந்த இடங்களில் பிரபலமான சேனல்கள் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை ஒளிபரப்பப்படும் நேரத்திலேயே கிடைக்கும். இவற்றுடன் ஏற்கனவே ஒளிபரப்பான நிகழ்ச்சிகளும் பதிவு செய்யப்பட்டு, பட்டியலிடப்பட்டு தரப்படுகின்றன. இவற்றிலிருந்தும் நீங்கள் நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுத்துப் பார்க்கலாம்.
டிவி சேனல் நிகழ்ச்சிகளை சந்தா கட்டிப் பெறலாம். மூன்று வகையான சந்தா முறை உள்ளது. ரூ.5 செலுத்தினால் ஒரு மாதத்திற்கு ஒரு சேனல் பார்க்கலாம். 10 சேனல்கள் அடங்கிய தொகுப்பு காண ரூ. 29 செலுத்த வேண்டும். அனைத்து சேனல்களையும் பார்க்க ரூ.75 செலுத்த வேண்டும். இவை தவிர டேட்டாவிற்கான தொகையை இன்டர்நெட் வசதிக்கு நீங்கள் தேர்ந்தெடுத்துள்ளபடி செலுத்த வேண்டும்.

பெண்ணின் நிலை உயர்ந்தால் பக்தி வளரும் -சுவாமி விவேகானந்தர்


* எல்லா நாடுகளுக்குள்ளும் நம் நாடு பலவீனமாகவும், பின்தங்கியும் இருப்பதற்குக் காரணம் என்னவென்றால் நம் நாட்டில் பெண்மை அவமானம் செய்யப்படுவதேயாகும்.

* ”எங்கெல்லாம் மாதர் உயர்வாக நடத்தப்படுகிறார்களோ, அங்கெல்லாம் தேவர்கள் மகிழ்ச்சியுடன் வாசம் செய்வார்கள்,” என்று புராதன மனு கூறியுள்ளார்.

* பெண்களின் முன்னேற்றமும், பொதுமக்களின் விழிப்பும் நம் நாட்டில் ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் நமது நாட்டிற்கு உண்மையான நன்மை ஏதாவது ஏற்படும்.

* மாதர் தங்களுடைய பிரச்னைகளைத் தாங்களே தீர்த்துக் கொள்ளும் நிலையில் வைக்கப்பட வேண்டும். அவர்கள் தங்கள் பிரச்னைகளைத் தாங்களாகவே தீர்த்துக் கொள்வார்கள்.

* நம் நாட்டில் பெண்களின் நிலை உயர்த்தப்பட வேண்டும். அவர்கள் மூலம்தான் நம் வருங்கால மக்கள் உயர்ந்த கருத்துகளைப் பெறுவார்கள். பெண்களின் நிலை உயர்த்தப்பட்டால், அவர்கள் மூலம் பண்பாடு, கல்வி, ஆற்றல், பக்தி ஆகியவை நாட்டில் மலரும்.

* கற்பு என்பது இந்து மாதரின் பரம்பரைச் சொத்தாகும். முதலில் இந்த லட்சியத்தை அவர்களிடையே உறுதிப்படுத்த வேண்டும். அவர்கள் எத்தகைய நிலையிலிருப்பினும் தங்கள் ஒழுக்கத்தை விட்டுத் தவறுவதை விட, உயிரை விடத்தக்க அஞ்சாத தன்மையையும் திடமனத்தையும் இந்த லட்சியம் அளிக்கும்.

* மனைவி இல்லாமல் எந்த ஒரு சடங்கையும் இந்தியாவில் செய்ய இயலாது. பக்கத்தில் வாழ்க்கைத் துணைவியை வைத்துக் கொண்டுதான் எந்தச் சடங்கையும் செய்ய வேண்டும். மனைவி இல்லாமல் செய்யும் எந்தச் சடங்கும் சாத்திர சம்மதம் ஆகாது.

சொல்லின் செல்வர்! (ஆன்மிகம்)

“ஆஞ்சநேயர்’ என்ற சொல்லுக்கு, என்ன பொருள் அகராதிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் பரவாயில்லை; ஆனால், உற்சாகத்தின் வடிவம் என்று சொன்னால் தான் அது பொருந்தும்; காரணம், அவர் ஒரு நிமிடம் கூட, சும்மா இருந்தேன், ஓய்வெடுத்தேன் என்ற நிலையில் இல்லவே இல்லை. ராமாயணத்தில் அவரது கதாபாத்திரம் துவங்கும் இடத்தில் இருந்து, முடியும் வரை அவரது உற்சாகமான வெற்றிப்பயணம் தொடர்கிறது; இந்த உற்சாகம் தான் அவருக்கு, சிரஞ்சீவி என்னும் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
சிரஞ்சீவி என்றால், என்றும் அழியாதவர் எனப் பொருள். ஆம், ராமாயண காலம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க, இன்றும் நாம் அவரை வணங்குகிறோம். மனிதனாகப் பிறந்த ராமனோ, லட்சுமணனோ தெய்வநிலைக்கு உயர்ந்ததில் வியப்பில்லை; ஆனால், குரங்காகப் பிறந்து, அவர்களையெல்லாம் விட உயர்ந்த நிலைக்கு சென்ற அந்த ஒப்பற்ற தலைவனின் முன், நாம் நிமிர்ந்து நின்று அவரைப் பெருமையுடன் வணங்க வேண்டும்.
ஆஞ்சநேயரை வணங்குவதற்கு ஒரு ஸ்லோகம் உண்டு. இந்த ஸ்லோகத்தைத் தவறாமல் சொல்பவர்களுக்கு புத்தி, பலம், கீர்த்தி, சாந்தகுணம், தைரியம், வாக்கு வன்மை, ஆரோக்கியம் மற்றும் உற்சாகம் உண்டாகும்.
“புத்திர்-பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக்-படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!’
— இதுவே அந்த ஸ்லோகம்.
இதில் வரும், “அஜாட்யம்’ என்ற சொல்லுக்கு, சுறுசுறுப்பு என்று பொருள்.
இந்த சொல்லின்படி, ஆஞ்சநேயரிடம் நாம் முதலில் கேட்க வேண்டியது இந்த அஜாட்யத்தை தான்! ஏனெனில், சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும் ஒருவன், இதில் சொல்லப்பட்டுள்ள மற்ற குணங்களைத் தானாகவே பெற்று விடுவான்.
உற்சாகமான பலர் இன்றும் இருக்கின்றனர். ஆனால், அந்த உற்சாகம் சினிமா, “டிவி,’ கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றில் தான் வீணாகி விடுகிறது. தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லை ஆஞ்சநேயர். அவர், தன் உற்சாகமான மனநிலை மூலம் பிறருக்கு தொண்டு செய்தார். ராமனின் மனைவியைத் தேடும் விஷயத்திலும், சுக்ரீவனின் மனைவி கவரப்பட்ட வேளையிலும் அவர் ஆற்றிய தொண்டு அபரிமிதமானது. அதாவது, பெண்களின் நலனைக் காப்பதில் அவர் முந்தி நிற்கிறார். எனவே, பெண்கள், தங்கள் இஷ்ட தெய்வமாகவும், குல தெய்வமாகவும் ஆஞ்சநேயரையே ஏற்கலாம்.
அவர் சொல்லின் செல்வராகவும் விளங்குகிறார்.
சீதையைப் பார்த்து திரும்பிய அனுமன் முன், பரபரப்புடன் நின்றார் ராமர். அப்போது, “கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்…’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
ஏன் தெரியுமா?
“சீதை இருக்கிறாளோ, உயிர் விட்டாளோ…’ என்பது ராமனின் முதல் சந்தேகம். “சீதையை நான் பார்த்தேன்…’ என்று அவர் சொல்லியிருந்தால், “சீதையை நான் பார்க்கவில்லை…’ என்று சொல்லி விடுவானோ என்ற பதைபதைப்பிலேயே ராமனின் உயிர் போயிருக்கலாம். அதனால், “கண்டேன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி ராமனின் உயிரைக் காத்து விட்டார்.
அடுத்து, அவள், ராவணனால் இம்சைக்கு ஆளானாளோ என்ற சந்தேகம்…அதைத் தீர்க்கும் வகையில், “கற்பினுக்கு அணியை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, மனநிம்மதியைக் கொடுத்தார். “யாராவது இப்படியொரு தகவலைச் சொல்லி, அதை இங்கே அனுமன் சொல்கிறானோ…’ என்பது அடுத்த கேள்வி. அதைத் தீர்க்கும் வகையில், “கண்களால்…’ என்று சொல்கிறார்.
இவ்வாறாக, வார்த்தைகளைப் பயன்படுத்திய, சொல்லின் செல்வரை அவரது பிறந்தநாளில் வணங்கி, சொல்லாற்றல் பெற பிரார்த்திப்போம்.