சொல்லின் செல்வர்! (ஆன்மிகம்)

“ஆஞ்சநேயர்’ என்ற சொல்லுக்கு, என்ன பொருள் அகராதிகளில் சொல்லப்பட்டிருந்தாலும் பரவாயில்லை; ஆனால், உற்சாகத்தின் வடிவம் என்று சொன்னால் தான் அது பொருந்தும்; காரணம், அவர் ஒரு நிமிடம் கூட, சும்மா இருந்தேன், ஓய்வெடுத்தேன் என்ற நிலையில் இல்லவே இல்லை. ராமாயணத்தில் அவரது கதாபாத்திரம் துவங்கும் இடத்தில் இருந்து, முடியும் வரை அவரது உற்சாகமான வெற்றிப்பயணம் தொடர்கிறது; இந்த உற்சாகம் தான் அவருக்கு, சிரஞ்சீவி என்னும் பட்டத்தைப் பெற்றுத் தந்தது.
சிரஞ்சீவி என்றால், என்றும் அழியாதவர் எனப் பொருள். ஆம், ராமாயண காலம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடந்திருக்க, இன்றும் நாம் அவரை வணங்குகிறோம். மனிதனாகப் பிறந்த ராமனோ, லட்சுமணனோ தெய்வநிலைக்கு உயர்ந்ததில் வியப்பில்லை; ஆனால், குரங்காகப் பிறந்து, அவர்களையெல்லாம் விட உயர்ந்த நிலைக்கு சென்ற அந்த ஒப்பற்ற தலைவனின் முன், நாம் நிமிர்ந்து நின்று அவரைப் பெருமையுடன் வணங்க வேண்டும்.
ஆஞ்சநேயரை வணங்குவதற்கு ஒரு ஸ்லோகம் உண்டு. இந்த ஸ்லோகத்தைத் தவறாமல் சொல்பவர்களுக்கு புத்தி, பலம், கீர்த்தி, சாந்தகுணம், தைரியம், வாக்கு வன்மை, ஆரோக்கியம் மற்றும் உற்சாகம் உண்டாகும்.
“புத்திர்-பலம் யசோ தைர்யம்
நிர்பயத்வம் அரோகதா!
அஜாட்யம் வாக்-படுத்வம் ச
ஹநூமத் ஸ்மரணாத் பவேத்!’
— இதுவே அந்த ஸ்லோகம்.
இதில் வரும், “அஜாட்யம்’ என்ற சொல்லுக்கு, சுறுசுறுப்பு என்று பொருள்.
இந்த சொல்லின்படி, ஆஞ்சநேயரிடம் நாம் முதலில் கேட்க வேண்டியது இந்த அஜாட்யத்தை தான்! ஏனெனில், சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கும் ஒருவன், இதில் சொல்லப்பட்டுள்ள மற்ற குணங்களைத் தானாகவே பெற்று விடுவான்.
உற்சாகமான பலர் இன்றும் இருக்கின்றனர். ஆனால், அந்த உற்சாகம் சினிமா, “டிவி,’ கெட்ட பழக்கங்களைக் கற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றில் தான் வீணாகி விடுகிறது. தனக்காக எதையும் செய்து கொள்ளவில்லை ஆஞ்சநேயர். அவர், தன் உற்சாகமான மனநிலை மூலம் பிறருக்கு தொண்டு செய்தார். ராமனின் மனைவியைத் தேடும் விஷயத்திலும், சுக்ரீவனின் மனைவி கவரப்பட்ட வேளையிலும் அவர் ஆற்றிய தொண்டு அபரிமிதமானது. அதாவது, பெண்களின் நலனைக் காப்பதில் அவர் முந்தி நிற்கிறார். எனவே, பெண்கள், தங்கள் இஷ்ட தெய்வமாகவும், குல தெய்வமாகவும் ஆஞ்சநேயரையே ஏற்கலாம்.
அவர் சொல்லின் செல்வராகவும் விளங்குகிறார்.
சீதையைப் பார்த்து திரும்பிய அனுமன் முன், பரபரப்புடன் நின்றார் ராமர். அப்போது, “கண்டனென் கற்பினுக்கு அணியை கண்களால்…’ என்ற சொல்லைப் பயன்படுத்தினார்.
ஏன் தெரியுமா?
“சீதை இருக்கிறாளோ, உயிர் விட்டாளோ…’ என்பது ராமனின் முதல் சந்தேகம். “சீதையை நான் பார்த்தேன்…’ என்று அவர் சொல்லியிருந்தால், “சீதையை நான் பார்க்கவில்லை…’ என்று சொல்லி விடுவானோ என்ற பதைபதைப்பிலேயே ராமனின் உயிர் போயிருக்கலாம். அதனால், “கண்டேன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி ராமனின் உயிரைக் காத்து விட்டார்.
அடுத்து, அவள், ராவணனால் இம்சைக்கு ஆளானாளோ என்ற சந்தேகம்…அதைத் தீர்க்கும் வகையில், “கற்பினுக்கு அணியை’ என்ற சொல்லைப் பயன்படுத்தி, மனநிம்மதியைக் கொடுத்தார். “யாராவது இப்படியொரு தகவலைச் சொல்லி, அதை இங்கே அனுமன் சொல்கிறானோ…’ என்பது அடுத்த கேள்வி. அதைத் தீர்க்கும் வகையில், “கண்களால்…’ என்று சொல்கிறார்.
இவ்வாறாக, வார்த்தைகளைப் பயன்படுத்திய, சொல்லின் செல்வரை அவரது பிறந்தநாளில் வணங்கி, சொல்லாற்றல் பெற பிரார்த்திப்போம்.

%d bloggers like this: