மனிதனின் கஷ்டம் இறைவனுக்கு விளையாட்டு -சுவாமி விவேகானந்தர்


துன்பங்களிலும் போராட்டங்களிலும் உழலும் போது இந்த உலகம் பயங்கரமானதாக நமக்குத் தோன்றுகிறது. இரண்டு நாய்க்குட்டிகள் கடித்து விளையாடிக் களிப்பதை நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அது ஒரு விளையாட்டு, சற்று காயப்படும்படி அவை கடித்துக் கொண்டாலும் அதனால் தீங்கு எதுவும் விளையாது என்பது நமக்குத் தெரியும். அதுபோலவே நமது போராட்டங்கள் எல்லாம் இறைவனின் கண்களுக்கு விளையாட்டே. இந்த உலகம் விளையாட்டுக்கென்றே அமைந்தது. அது இறைவனைக் களிப்படைய செய்கிறது. எதற்காகவும் அவன் கோபம் கொள்வதில்லை.

அம்மா! வாழ்வெனும் கடலில் என் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. மனமயக்கம் என்னும் சூறைக்காற்றும், பற்று என்னும் புயலும் கணந்தோறும் அதிகரிக்கின்றன. படகோட்டிகள் ஐவரும் (ஐந்து புலன்களும்) வெறும் முட்டாள்கள், சுக்கான் பிடிப்பவனோ (மனம்) மெலிந்தவன். நிலைகுலைத்து என் படகு மூழ்குகிறது. அன்னையே, என்னைக் காப்பாற்று!

அன்னையே! மகான் என்றோ, பாவி என்றோ உன் அருள் பிரித்துப் பார்ப்பதில்லை. பக்தனிலும் அதேபோல் கொலைகாரனிலும் அது பிரகாசிக்கிறது. எல்லாவற்றின் மூலமும் அன்னையே வெளிப்படுகிறாள்.

ஒளிபாயும் பொருட்களில் மாசு இருக்கலாம். அதனால் ஒளி கெடுவதில்லை. பயன் பெறுவதும் இல்லை. மாற்றம் அடையாமல் மாசுபடியாமல் திகழ்கிறது அந்த ஒளி. ஒருபோதும் மாறாத, தூய, அன்புமயமான ‘அன்னை’ ஒவ்வோர் உயிரின் பின்னாலும் நிற்கிறாள்.

உன்னை எதுவும் துன்புறுத்த முடியாது என்பதை உணர்ந்து கொள். ஏனெனில் நீ சுதந்திரன். நீயே ஆன்மா.

%d bloggers like this: