விரைப்பு தன்மை குறைவு – மாரடைப்பு தொடர்பு…!

இதயம் ஒரு அற்புத இயந்திரம்; சூப்பர் கம்ப்யூட்டரை விட துல்லியமான மிஷின்; இதயம் நான்கு அறைகள், நான்கு வால்வுகள் கொண்ட, “பம்ப்’ தாயின் கருப்பையில் சிசு உருவான மூன்றாவது வாரத்தில், இதயம் இயங்க ஆரம்பித்து விடுகிறது; மூடிய கை அளவே உள்ள இது, மார்பு கூட்டில், நுரையீரலின் நடுவில், இடதுபக்கம் சாய்ந்து உள்ளது.
இதய துடிப்பு, ஒரு நிமிடத்திற்கு 72 முறை; தூங்கும்போது 50 முறை துடிக்கும்; கணக்கிட்டால், ஆண்டு முழுவதும் மூன்றரை கோடி முறை “லப்…டப்’ துடிப்பு. வாழ்நாள் முழுவதும் தூங்காமல் இயங்கும் இதயம், மூன்று லட்சம் டன் ரத்தத்தை,”பம்ப்’ செய்து மற்ற பாகங்களுக்கு அனுப்புகிறது. இப்படிப்பட்ட அரிய இயந்திரம், ரத்த நாளச் சுருக்கத்தால் பலவீனமடைகிறது. இதனால், இதயம் பாதிப்பது மட்டுமல்ல, ஆண் உறுப்பு விரைப்புத் தன்மை குறைபாடும் ஏற்படுகிறது.
என்ன காரணம்?
உணவு, வாழ்க்கை முறையில் மாற்றம் தான் சர்க்கரை நோய், இதய பாதிப்புக்கு காரணம். எல்லாவற்றையும் அனுபவித்துவிட வேண்டும் என்று, உணவுப் பழக்கத்தை மாற்றிக்கொள்கின்றனர் பலர்; அதுபோல, வாழ்க்கை முறையையும் மாற்றி விடுகின்றனர். தவறான பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் எதில் போய் விடுகிறது தெரியுமா? மன அழுத்தம், ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய். உடலில், அதிக கொலஸ்டிரால் சேருவதும் இதனால் தான்; இந்த பாதிப்பால், “அத்திரோஸ்கிலிரோசிஸ்’ என்ற, தமனி இறுக்க நோய் ஏற்படுகிறது. ரத்த நாளத்தின் உட்சுவர் பெயர் எண்டோதீலியம்; இதில், கெட்டக் கொழுப்பை, ரத்தக் குழாயில் படரச் செய்கிறது. இதனால், குழாய் அடைப்பு ஏற்பட்டு, ரத்த ஓட்டம் குறைகிறது. ரத்த நாளம் முழுவதும் சிதைந்து போக வாய்ப்பு ஏற்படுகிறது. இது தான் மார்பு வலி; இதுவே, மாரடைப்புக்கு காரணமாகிறது.
எண்டோதீலியம், கண்ணாடி போன்றது. அதிக ரத்த அழுத்தம், அதிக சர்க்கரையளவு, அதிக கொலஸ்டிரால் ஆகியவை, எண்டோதீலியத்தைக் கிழித்து விடும். இதனால், கெட்டக் கொழுப்பு ரத்த நாளத்தில் படர்ந்து அடைப்பு ஏற்பட்டு வருகிறது. ரப்பர் பை போன்ற ரத்த நாளம், சிலருக்கு முழுவதும் அடைத்து, சிமென்ட் பை போல ஆகிவிடுகிறது. இவற்றின் விளைவு தான், மார்பு வலி, மாரடைப்பு.
விரைப்பு தன்மை சரிவு
ஆண்களின் உறுப்பில் விரைப்பு ஏற்பட, அந்த உறுப்பில் காணப்படும் வெற்றிடமே. உடல், உறவுக்குத் தயாராகிறது என்பதற்கான அறிகுறியாக, இந்த வெற்றிடத்தில் ரத்தம் நிரம்புகிறது. இதனால் விரைப்பு ஏற்படுகிறது. இறைவன் படைத்துள்ள அற்புதமான தொழில்நுட்பம் இது. இந்த வெற்றிடத்திற்கான ரத்தம், ரத்த நாளத்திலிருந்து கிடைப்பதால், ரத்த நாளத்தில் பாதிப்பு ஏற்பட்டால், விரைப்பு தன்மை குறையும்.
ரத்தக் குழாயின் விட்டம், ஒரு மி.மீ., முதல் 2 மி.மீ., வரை இருக்கும். “அத்திரோஸ்கிலிரோசிஸ்’ என்ற தமனி இறுக்க நோய் தாக்கினால், ரத்த நாளம் சுருங்கி விடுகிறது. இதனால், ஆண் உறுப்பின் வெற்றிடத்திற்கு ரத்தம் செல்வது குறைகிறது; விரைப்புத் தன்மையும் குறைகிறது. இதை மையமாக வைத்து தான், இதய நோய் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், விரைப்பு தன்மை இல்லாதவர்களில் மூன்றில் இரண்டு பேருக்கு, மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.
திடீர் மரணம், மர்ம மரணம்
திடீர் மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணம். திடீர் மரணத்தை, “Sudden Cardiac Death’ என்று அழைக்கின்றனர். திடீர் மரணம், 90 சதவீதம் இதயத்தை சார்ந்தது. 10 சதவீதம், நுரையீரலிலுள்ள தமனி அடைப்பு பல்மனரி எம்பாலிசம் (Pulmanary Embolism) ஏற்படுவதால் நிகழலாம்.
மூச்சு பேச்சு இல்லாமல் ஒருவர் கீழே விழுந்து இருந்தால், உடனடியாக சி.பி.ஆர்., என்ற இதய நுரையீரல் முதலுதவி செய்தால் பிழைத்துக் கொள்வர். இதை ஆங்கிலத்தில் Cardio Pulmanary Resuscitation என்பர். இது மேலை நாடுகளில் ஆரம்ப பள்ளியில் மாணவர்களுக்கு பாடமாகச் சொல்லித் தருவர். இதனால், ஆயிரக்கணக்கானோர் உயிர் பிழைக்கின்றனர்.
அமெரிக்காவில் வருடத்தில் 15 லட்சம் பேர் திடீர் மரணமடைகின்றனர்.ஆனால், இதய நோய் எதுவும் இல்லை; எந்த தொந்தரவுமில்லை. இ.சி.ஜி. எக்கோ, டி.எம்.டி., ரத்தக் கொதிப்பு எல்லாம் நார்மலாக இருக்கிறது. இவர்கள் எப்படி திடீர் மரணமடைகின்றனர்?
நார்மலாக இயங்கிக் கொண்டிருக்கும் இதயத்தில், சில நேரங்கள் தாறுமாறாக துடிப்பு ஏற்பட்டு, சில நொடிகளில் திடீர் மரணம் ஏற்படும். இதை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் கடினம். பாரம்பரியமாக குடும்பத்தில் திடீர் மரணம் ஏற்படுகிறதா என்பதைத் தெரிந்து கொண்டால், தாறுமாறாக துடிப்பு ஏற்படும் இடத்தைப் பரிசோதித்து, “இம்ப்லான்டபிள் டீபைபிரிலேட்டர் (Implantable Defibrillator) பொருத்தி தடுக்கலாம்.
அந்த மூன்று இளைஞர்கள்
மூன்று வாரங்களுக்கு முன், 30 வயது இளைஞர், மூச்சிரைப்போடு என்னிடம் வந்தார். “எக்கோ’ செய்ததில், அவரது இதயம் 45 சதவீதம் மட்டுமே வேலை செய்தது. உடனே, “ஆஞ்சியோகிராம்’ செய்தேன். இதயத்திற்கு ரத்தம் கொடுக்கும் இரு குழாய்களில் முழு அடைப்பு ஏற்பட்டு, மூன்றாவது குழாயிலும், 40 சதவீதம் அடைப்பு. உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலை. என் நண்பர்களை ஆலோசனை செய்தேன். ஆபரேஷனுக்கு ஏற்பாடு செய்தேன்; நோயாளி திரும்பவும் என்னிடம் வரவில்லை.
சென்னைக்கு அடுத்து பெரியபாளையம் அருகில், 29 வயது கசாப்பு கடை முஸ்லிம் இளைஞர், மாரடைப்புடன் வந்தார். இடது ரத்தக்குழாய் முழு அடைப்பு. பலூன் ஸ்டென் சிகிச்சை செய்து, குணமடைந்து சென்றுவிட்டார். பதினைந்து ஆண்டுகளுக்கு முன், என் ஊரான சேலத்திலிருந்து, 25 வயது இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு என்னிடம் வந்தார். “ஆஞ்சியோ கிராம்’ செய்து, “பலூன் ஆஞ்சியோ பிளாஸ்டி ஸ்டென்ட்’ சிகிச்சை மூலம் சரி செய்யப் பட்டது. இன்றும் நன்றாக வாழ்கிறார். இப்படியே பல உதாரணங்கள் உள்ளன. இது தினசரி நிகழ்வாகி விட்டது.
இளைஞர்களுக்கு அறிவுரை
இன்று இந்தியாவில் பத்தில் ஆறு பேருக்கு மாரடைப்பு வர வாய்ப்புள்ளது. இதில், பெரும்பாலோர் இளைஞர் சமுதாயமே. இந்த கொடூர வியாதியைக் கட்டுப்படுத்த, தனி மனித ஒழுக்கம், முறையான உடற்பயிற்சி, மது, மாமிசம் அதிகம் உண்ணாமை, புகைப் பிடிப்பதை அறவே நீக்குவது, யோகா பயிற்சி ஆகியவற்றை கடை பிடியுங்கள்.
– பேராசிரியர் டாக்டர் சு.அர்த்தநாரி எம்.டி.டி.எம்.,

%d bloggers like this: