Daily Archives: திசெம்பர் 21st, 2009

இளம் பெண்களை தாக்கும் ரத்தச்சோகை

பெண்களின் நலமே நாட்டின் நலம்.

ஒரு வீட்டில் பெண் ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த வீட்டில் அனைவரும் நலமாக இருக்க முடியும். இதைத்தான் பாரதி

மாதராய்ப் பிறந்திட மாதவம் செய்திட வேண்டும் –என்றார்.

இந்திய நாடு பெண்களை சக்தியாகப் போற்றி வந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் ஆணாதிக்கம் மிகுந்து பெண்களை அடிமைப்படுத்தியது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்று வெற்று வேதாந்தம் பேசி ஒரு நூற்றாண்டை சீரழியச் செய்தது.

இதனால் பெண் பிள்ளைகள் பிறந்தவுடன் கள்ளிப்பால் கொடுத்து சாகடித்தனர். அப்படியும், தப்பிய பெண் குழந்தைகளுக்கு சரியான உணவு கொடுக்காமல் அவளை உடலாலும் உள்ளத்தாலும், பாதிப்படையச் செய்தனர். அந்த பெண் எதிர்கால சந்ததியினரை உருவாக்கக்கூடியவள் என்பதை அனைவருமே மறந்தனர். அந்நேரத்தில் பெண்களே பெண்குழந்தைகளுக்கு எதிராக இருந்தனர். தானும் ஒரு பெண்தான் என்பதை மறந்து பெண் பிள்ளைகளை சுமையாக நினைத்தனர்.

இன்று இந்தியாவில் ஆண் பெண் விகிதாசாரம் 1000 ஆண்களுக்கு 971 பெண்கள் தான் உள்ளனர். இன்னும் சில மாநிலங்களில் நிலமை இன்னும் மோசமாக உள்ளது. கல்வியில் முதலிடம் பெறும் கேரளாவில் மட்டும்தான் 1000 ஆண்களுக்கு 1041 பெண்கள் என்ற விகிதத்தில் உள்ளனர்.

இன்று இந்தியாவில் 64 சதவிகித பெண் குழந்தைகள் இரத்த சோகை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். பெண் குழந்தைகளுக்கு சிறு வயது முதலே அவர்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான சத்தான உணவுகள் இன்றி வளர்கின்றனர். இதனால் அவர்களின் உடல் வளர்ச்சி மாறுபாட்டின்போது அவர்கள் போதிய சத்தின்றி உடல்நலம் குன்றி காணப்படுகின்றனர். இதனால் அவர்கள் பூப்பெய்தியவுடன் மேலும் பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இரும்பு சத்து குறைவினால் அதாவது, இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு குறைவதால் உடல் சேர்வடைந்துவிடுகிறது. மேலும் மாத விலக்குக் காலங்களில் ஏற்படும் உதிர இழப்பால் எலும்புகள் பலமிழக்கின்றன. இரத்தத்தில் பித்தம் அதிகரித்து இரத்தம் சீர்கேடு அடைந்து தலைவலி, தலைச்சுற்றல் வாந்தி மயக்கம் ஏற்படுகின்றது.

மேலும் கர்ப்பப்பை வீக்கம், ஒழுங்கற்ற உதிரப்போக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை ஏற்படுகிறது. இதனால் இரத்த சோகை அதாவது அனீமியா ஏற்படுகிறது.

· இரத்த சிவப்பணுக்களின் (Red blood cells) தொடக்கம் சீராக இல்லாத நிலையில் இரத்தச் சோகை உண்டாகும். (Dyshaemopoietic anemia)

· வலுவற்ற, பாதிக்கப்பட்ட எலும்பு மஜ்ஜை (bone marrow) யினாலும் ரத்தச் சோகை உண்டாகும்.

· இரத்த சிவப்பணுக்கள் இறந்து போவதால் (aemolytic anemia) இரத்தச் சோகை ஏற்படும்.

· இரத்தம் அதிகம் வெளியேறுவதால் (Haemorrhagic anemia)

· இரத்தம் மாசுபடுதல்

போன்ற காரணங்களால் இரத்தச் சோகை பெண்களுக்கு ஏற்படுகிறது.

மேலும் இவர்கள் குழந்தை பேறுக்குப்பின் உடல் பலம் இழப்பதால், கை, கால் மூட்டு, இடுப்பு போன்ற இடங்களில் வலி ஏற்படுகிறது. மேலும், மலத்தையும், சிறுநீரையும் பெண் குழந்தைகள் அடக்குவதால் மலச்சிக்கல், சிறுநீரகக் கோளாறு ஏற்பட வாய்ப்பாகிறது. இதனால் ஈரல் பாதிக்கப் பட்டு பித்தம் அதிகரித்து ரத்தத்தில் கலந்து உடலை நோய் எதிர்ப்பு சக்தியின்றி ஆக்குகிறது.

இரத்தச் சோகையின் அறிகுறிகள்

· மயக்கம் அல்லது காரணமில்லாத சோர்வு.

· சிறிது உணவு சாப்பிட்டவுடன் வயிறு நிறைந்துவிட்டது போன்ற உணர்வு,

· உணவு செரிமானமாகாமல் இருத்தல்.

· உடல் வெளுத்துக் காணப்படல்

· முகத்தில் வீக்கம் உண்டாதல்

· நகங்களில் குழி விழுதல்

· கண்குவளைகள் மற்றும் நாக்கு வெளுத்து இருத்தல்

இத்தகைய ரத்தச் சோகையை போக்க இளம்பெண் குழந்தைகளுக்கு உணவில் அதிக இரும்புச்சத்துள்ள கீரைகளான,

முருங்கைக்கீரை,

ஆரைக்கீரை

அரைக்கீரை,

புதினா,

கொத்தமல்லி,

கறிவேப்பிலை

அகத்திக்கீரை,

பொன்னாங்கண்ணி கீரை,

போன்ற கீரைகளையும்,

திராட்சை, பேரீச்சை, உலர்ந்த திராட்சை, பப்பாளி, அத்திப்பழம், மாம்பழம், பலாபழம், சப்போட்டா, ஆப்பிள், நெல்லிக்கனி போன்ற பழங்களையும் தினமும் கொடுத்து வருவது நல்லது. இதனால் ரத்தம் விருத்தி அடைந்து, ரத்தச்சோகை நீங்கும்.

மேலும் முளைகட்டிய பச்சை பயறு, முந்திரி பருப்பு, உளுந்தங்களி, பாதாம், பிஸ்தா பருப்பு போன்றவை அதிகம் உணவில் சேர்த்து வருவது நல்லது. காய்கறி சாலட்டுகள் அடிக்கடி கொடுப்பது நல்லது.

பெண் குழந்தைகள் பருவ வயது வரையும் அதற்கு பின்பும் மேற்கண்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் இரத்தச்சோகை நீங்கும். பெண்பிள்ளைகள்தான் எதிர்கால இந்தியாவை உருவாக்கும் தூண்கள். ஆரோக்கியமும், அறிவும் அவர்களின் பொக்கிஷமாக இருந்தால்தான் எதிர்கால இந்தியா வளமாகும்.

சாம்சங் தரும் கோலாகல கோர்பி போன்கள்

இளைஞர்களிடையே தன் கோர்பி மாடல் போன்கள் பிரபலமானதைக் கண்ட சாம்சங் நிறுவனம், மேலும் இரு மாடல்களை அதே வரிசையில் கொண்டு வந்துள்ளது . கோர்பி பிளஸ் (Corby Plus B3410) ) பி 3410 மற்றும் கோர்பி புரோ பி 5310 (Corby Pro B5310) என இரு போன்கள் வெளிவந்துள்ளன. இவற்றையும் சேர்த்து மொத்தம் ஐந்து மாடல்கள் கோர்பி வரிசையில் உள்ளன. இதனுடைய டச் யூசர் இன்டர்பேஸ் மற்றும் ஸ்லைடிங் குவெர்ட்டி கீ போர்ட், ஒரே கிளிக் செய்து கிடைக்கும் சோஷியல் நெட்வொர்க்கிங், சேட்டிங், எளிதான இமெயில் செட்டிங் ஆகியவை பயன்படுத்துபவர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளன. இந்த இரண்டு மாடல்களும் பெரிய அளவில் டெக்ஸ்ட் மெயில் அனுப்புபவர்களுக்கானதாக தயாரிக்கப்பட்டுள்ளன.YouTube, Flickr, Picasa மற்றும் Photobucket போன்ற தளங்களுக்கு எளிதில் ஒரே டச் கீயில் இணைப்பு கிடைக்கின்றன. கோர்பி ப்ளஸ் 2.6 அங்குல எல்.சி.டி. திரை, 2 மெகா பிக்ஸெல் கேமரா, ரெகார்டிங் வசதியுடன் கூடிய எப்.எம். ரேடியோ, போன் அழைப்புகளை பதியக் கூடிய வசதி, 3.5 மிமீ இயர் போன் ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன.
கோர்பி புரோ, பிசினஸ் போன்களில் எதிர்பார்க்கக் கூடிய அனைத்து வசதிகளுடன் மல்ட்டி மீடியா அம்சங்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. புஷ் இமெயில்சர்வீஸ், உரையாடல் மாடலில் எஸ்.எம்.எஸ்., பேஸ்புக் மற்றும் மை ஸ்பேஸ் தளங்கள் நேரடி இணைப்பு ஆகியவை தரப்பட்டுள்ளன. 2.8 அங்குல முழு டி.எப்.டி. டச் ஸ்கிரீன் திரை, 3 எம்பி டிஜிட்டல் கேமரா, வை–பி இணைப்பு, 3ஜி வசதி, நான்கு பேண்ட் இணைப்பு மற்றும் மியூசிக் இயக்க என தனி கீகள் என வசதிகள் தரப்பட்டுள்ளன. கோர்பி ப்ளஸ் ரூ. 10,050 எனவும், கோர்பி புரோ ரூ.13,900 எனவும் விலையிடப்பட்டுள்ளன.
சாம்சங் இதே வரிசையில் மேலும் சில மாடல்களைக் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. அதன் பிரபலமான சாம்சங் கோர்பி எஸ் 3650 மாடலில் வை–பி வசதி தரப்படுகிறது. இது ரூ.10,000 முதல் ரூ.11,000 வரையிலான விலையில் இருக்கலாம். மேலும் இதே போன் சி.டி.எம்.ஏ. வில் இயங்கும் மாடலாகவும் வர இருக்கிறது. விரைவில் இது வெளியாகும் எனத் தெரிகிறது.
ஒவ்வொரு மாதமும் 90 லட்சம் மொபைல் போன்கள் விற்பனை செய்யப்படும் சந்தையில், நோக்கியா விற்கு அடுத்தபடியாக, சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் இடம் பிடித்துள்ளது. சென்ற ஆண்டில் 18.5 சதவீத வளர்ச்சியைக் கொண்ட சாம்சங், இந்த ஆண்டில் இது அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. வரும் ஆண்டில் 18 லட்சம் டச் ஸ்கிரீன் போன்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கும் சாம்சங், அந்த பிரிவில் முதல் இடம் பெற முயற்சிகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து டச் ஸ்கிரீன் போன்களை அறிமுகம் செய்து வருகிறது. 2009 ஆம் ஆண்டில் சாம்சங் 43 புதிய மொபைல்களை அறிமுகம் செய்தது. இவற்றில் 12 டச் ஸ்கிரீன் போன்களாகும்.

குருவுக்கும் நாம் அடிமையல்ல! -சுவாமி விவேகானந்தர்


யார் மீது ஆன்மிக உணர்வு பெறுகிறோமோ அவரே நமக்கு உண்மையான குரு. ஆன்மிகப் பெருவெள்ளம் நம்மிடம் பாய்வதற்கான கால்வாய் அவர். தனிமனிதரை நம்புவது பலவீனத்திலும் உருவவழிபாட்டிலும் தான் கொண்டுபோய்விடும். ஆனால், ஆழ்ந்த குரு பக்தி நம்மைவிரைவில் முன்னேறச் செய்யும். உண்மையான குரு இருந்தால் அவரை மட்டுமே வணங்கு. அது மட்டுமே நம்மை கரை சேர்க்கும்.பகவான் ராமகிருஷ்ணர் குழந்தையைப் போல தூய்மையானவர்.

அவர் ஒரு போதும் பணத்தை தன் மனதாலும் தொட்டதில்லை. காமசிந்தனை அவரிடத்திலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டது. பெரிய மகான்கள் தங்கள் சிந்தனையை முழுமையாக ஆன்மிகத்திலே செலுத்தி விடுவர். உண்மையான ஞானியிடத்தில் பாவத்தை பார்க்க இயலாது. ராமகிருஷ்ணரின் கண்கள் தீயவற்றைக் காண இயலாத அளவுக்கு தூய்மை பெற்றிருக்கின்றன.

இத்தகைய பரமஹம்சர்கள் உலகில் இருப்பதால் தான் உலகம் செயல்படுகிறது. அவர்கள் அனைவரும் இறந்து விடுவார்களானால், உலகமே சுக்கல் சுக்கலாக நொறுங்கி மண்ணாகி விடும். குருவிற்கு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதற்காக அடிமைப்பட வேண்டியதில்லை. குரு நமக்கு உதவுபவர் என்ற கருத்தை மட்டுமே கொண்டிருக்க வேண்டும். உங்களுக்குள் நீங்களே முயன்று உண்மையைத் தேடுங்கள்.-விவேகானந்தர்

எம்.எஸ்.ஆபீஸ் 2010 தொகுப்பு 15 நாட்களில் 10 லட்சம் டவுண்லோட்

மைக்ரோசாப்ட் நிறுவனம் எம்.எஸ். ஆபீஸ் 2010 தொகுப்பின் சோதனைத் தொகுப்பினைத் தன் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை வெளியிட்ட 15 நாட்களில் 10 லட்சம் பேர் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தனக்கு பெருமைக்குரிய விஷயமாக மைக்ரோசாப்ட் கருதுகிறது. வரும் ஜூன் மாதம் இது பொது மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனைக்கு வரும். ஆறு வகைகளில் (Starter, Home and Student, Home and Business, standard, Professional and Professional Plus) இது விற்பனை செய்யப்படும். இதில் ஒரு வகை வேர்ட் மற்றும் எக்ஸெல் தொகுப்புகள் அடங்கியதாகவும், அடிப்படை பயன்பாட்டி னைக் கொண்டதாகவும் கொண்டு இலவசமாகத் தரப்படும். இதில் விளம்பரங்களும் இருக்கும். வர இருக்கும் ஆபீஸ் தொகுப்பு என்ன விலையில் இருக்கும் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. உங்களுக்கும் இந்த சோதனைத் தொகுப்பினை டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்க ஆசையாக இருந்தால், http://www.microsoft. com/office/2010/en/default.aspx என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும். இந்த ஆபீஸ் தொகுப்பில் என்னவெல்லாம் புதியதாக உள்ளன என்று தெரிய பல தளங்கள் உள்ளன. http://www.neowin. net /news/main/09/11/18/microsoftoffice2010topnewfeatures என்ற முகவரியில் உள்ள தளத்தில் சிறப்பான தகவல்கள் உள்ளன.

கம்ப்யூட்டர் கிராஷ்

சில வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press ControlAltDelete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம்.
1. ஹார்ட்வேர் பிரச்னை: கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் குறைந்த பட்சம் 16 இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு / மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் StartSettingsControl PanelSystemDevice Manager எனச் சென்று பார்த்தால், பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும்.
2. ராம் மெமரி சிப்ஸ்: ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் wait state நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம்.
3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்: பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.
4. வீடியோ கார்ட்: சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். StartSettingsControl PanelDisplaySettings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.
5. வைரஸ்: பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள்.
6. பிரிண்டர்: பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும்.
7. சாப்ட்வேர்: முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.
8. அதிக வெப்பம்: இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப் படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கும் வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.
9. மின் ஓட்டம்: கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும் சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கவும்.

டயட் கோழிக் குழம்பு

தேவையானப் பொருட்கள்:
* தோல் மற்றும் கொழுப்பு நீக்கி சுத்தம் செய்த கோழி – அரைக் கிலோ
* சின்ன வெங்காயம் – 30
* தக்காளி – ஒன்று
* பச்சை மிளகாய் – 2
* இஞ்சி பூண்டு விழுது – ஒரு மேசைக்கரண்டி
* மிளகாய் தூள் – ஒரு மேசைக்கரண்டி (காரத்திற்கேற்ப)
* மல்லித் தூள் – 1 1/2 மேசைக்கரண்டி
* மஞ்சள் தூள் – கால் தேக்கரண்டி
* பெருஞ்சீரகம்(சோம்பு) – ஒரு தேக்கரண்டி
* ஏலக்காய் – 2
* கிராம்பு – 2
* பட்டை – ஒரு இன்ச் துண்டு
* கறிவேப்பிலை – 2 கொத்து
* மல்லிக்கீரை – ஒரு கொத்து
* உப்பு – தேவையான அளவு
* எண்ணெய் – 1 1/2 மேசைக்கரண்டி
செய்முறை:
கோழியை தோல் மற்றும் கொழுப்பு நீக்கி மஞ்சள் தூள் வினிகர் சேர்த்து சுத்தம் செய்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிவைக்கவும்.
step 1
வாணலியில் அரை மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் 20 சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய், ஒரு கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
step 2
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் சோம்பு சேர்த்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கவும்.
step 3
தீயைக் குறைத்து மிளகாய்தூள், மல்லித்தூள் சேர்த்து கிளறி உடனே அடுப்பை அணைத்து விடவும். வாணலியின் சூட்டிலேயே பொடிகள் வறுபட்டு விடும்.
step 4
ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
step 5
குக்கரில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவும். ஏலக்காய் வெடித்ததும் இஞ்சி, பூண்டு விழுது, கறிவேப்பிலை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
step 6
அதனுடன் மீதமுள்ள சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
step 7
வெங்காயம் முக்கால் பாகம் வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
step 8
தக்காளி குழைந்ததும் கோழித்துண்டுகளை சேர்த்து நிறம் மாறும் வரை(5 நிமிடம்) வதக்கவும்.
step 9
அரைத்த மசாலா, மஞ்சள் தூள், அரைக் கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி குக்கரை மூடி மிதமான
தீயில்(medium flame) 4 முதல் 5 விசில் வரை வேக விடவும்.
step 10
குக்கர் ஸ்டீம் அடங்கியதும் திறந்து மல்லிக்கீரை தூவி கிளறி விடவும்.
step 11
சுவையான கோழிக் குழம்பு தயார். இட்லி, தோசை, சப்பாத்தி, சாதம், பிரியாணி, ப்ரெட் மற்றும் நெய்சோறு என
எல்லாவற்றிற்கும் பொருந்தும். தேங்காய்ப்பால் சேர்க்க விரும்பினால் மல்லிக்கீரை சேர்க்கும் முன் கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி மல்லிக்கீரை சேர்க்கலாம்.

உடல் எடையைக் குறைப்பதற்காக வெஜிடபிள் ஓட்ஸ் உப்புமா

தேவையானப் பொருட்கள்:
* 1) ஓட்ஸ் ஒரு கப்
* (2) தக்காளி 1
* (3) பெரிய வெங்காயம் 1
* (4) இஞ்சி சிறிதளவு
* (5) பூண்டு
* (6) காரட் 1
* (7) பச்சை பட்டாணி 2 ஸ்பூன்
* (8) கொத்தமல்லி சிறிதளவு
* (9) உப்பு தேவைக்கேற்ப
* (10) எண்ணெய் இரண்டு ஸ்பூன்
* 11) கடுகு தாளிக்க
* (12 ) பெருகாயம் சிறிதளவு
* (13 ) உளுத்தம் பருப்பு

செய்முறை:
* முதலில் எண்ணெய் சேர்க்காமல் ஓட்ஸை நன்கு வறுத்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் எண்ணெயை விட்டு கடுகு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
* கடுகு பொறிந்த உடன் சிரிதஈ சிறிதாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய், பூண்டு மற்றும் பெருங்காயத்தைப் போடவும்.
* பிறகு பொடிப் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை பட்டாணி காரட்டைப் போட்டு அத்துடன் உப்பையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயம்& காரட் பச்சை பட்டாணி நன்கு வதங்கியதும் அத்துடன் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.காய்கறிகள் நன்கு வதங்கிய உடன் அத்துடன் 3 /4 கப் தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் ஒரு கப் ஓட்ஸைப் போட்டு நன்கு வேகும் வரை கிளறவும்.
* இதற்குத் தொட்டுக் கொள்ள எதுவும் தேவையில்லை.
* வேண்டுமானால் ஏதேனும் வெஜிடபிள் ராய்த்தாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.

குறிப்பு:
காலை சிற்றுண்டிக்கு ஏற்ற உணவு இது

மாரடைப்புக்கு முக்கிய காரணம்- ஆவதும் பெண்ணாலே…

மாரடைப்புக்கு முக்கிய காரணமாக, பெரும்பாலான மருத்துவ நிபுணர்கள் சொல்வது, “மாடர்ன் லிவிங்’ தான். ஆம், இப்படித்தான் வாழ வேண்டும் என்ற நிலை போய், சாப்பிடுவது முதல் வாழ்க்கையின் எல்லா வகையிலும் புதுப்புது விஷயங்களை அனுபவிப்பதில் ஆரம்பித்து, கடைசியில் பல வித குழப்பங்கள், பிரச்னைகளில் சிக்கித்தவிப்பது என்று தான் இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கை பாதை திரும்புகிறது. இதனால், மாரடைப்பு வருமா என்றால் இல்லை; மாரடைப்பை அழைக்கும் முதல் வாசல் இது தான். அதாவது, ஸ்ட்ரெஸ். மன அழுத்தம் வந்துவிட்டால், அடுத்து சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் வந்து விடுகிறது. அதன் இறுதிக்கட்டம் தான் மாரடைப்பு என்கிறது அமெரிக்க ஹார்வர்டு நிபுணர்களின் ஆய்வு.
ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் மாரடைப்பு வருவது அதிகரித்து விட்டது என்பதை டில்லியில் உள்ள தேசிய சுகாதார ஆராய்ச்சி அமைப்பு உறுதி செய்துள்ளது.
இந்தியாவில் மாரடைப்பு எண்ணிக்கை அதிகரிப்பது குறித்து ஆராய்ந்ததில் இதன் சில வித்தியாசமான தகவல்கள்:
* முன்பெல்லாம் குடும்பத்தில், கணவனுக்கு பக்க பலமாக மனைவி இருப்பார்; அவர் வேலைக்கு செல்ல மாட்டார்; குடும்ப பாரம் முழுக்க சுமப்பார். அதனால், மன அழுத்தம் வர வாய்ப்பே இல்லை.
* ஆனால், இப்போது மாறிவிட்டது; கணவன், மனைவி இருவரும் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது; தேவை அதிகரித்து விட்டது; ஆசை வளர்ந்துவிட்டது. அளவுக்கு மீறி உடல், மனம் இரண்டும் உழைக்கிறது. விளைவு, மன அழுத்தம்.
* இருவரும் சம்பாதிக்க ஆரம்பித்ததும், தனிப்பட்ட ஆசாபாசங்கள் ஆரம்பமாகிறது; “ஈகோ’ தலைதூக்குகிறது; பிரச்னை வளர்கிறது; விளைவு விவாகரத்து. கணவன், மனைவியின் உடல் பாதிப்புக்கு டைவோர்சும் காரணம்.
* மன அழுத்தம் பாதிக்கும் ஒரு ஆண், சிகரெட், மதுக்கு அடிமையாகிறான்; ஐம்பதை தாண்டிய பின், பாதிப்பு அதிகரிக்கிறது. சிலருக்கு முன்பே திடீர் மாரடைப்பு வர காரணமும் இது தான்.
* வீட்டை விட்டு வெளியில் வேறு மாதிரி பிரச்னைகள்; பொருளாதார நெருக்கடியால் வேலை இழப்பு, கடன் சுமையில் ஆரம்பித்து, பங்குச்சந்தை “திக் …திக்’ நிலவரம் வரை மனஅழுத்தத்தை அதிகரிக்கிறது. விளைவு, ரத்த அழுத்தம் விர்ர்ர்…
* அதிக வேலை, சம்பாதிக்கும் ஆர்வம் போன்றவை, சரியான உணவு சாப்பிடாமை, தூக்கமின்மையில் கொண்டு விடுகிறது. ஸ்ட்ரெஸ்க்கு மட்டுமல்ல, சர்க்கரை, ரத்த அழுத்தத்துக்கு இவையும் காரணம்.
* ஆண்களுக்கு தான் மாரடைப்பு வரும் என்பதல்ல; பெண்களுக்கும் வருகிறது என்பது இப்போது தெரியவந்துள்ளது.

சலபாசனம்


குப்புறப் படுத்து முகத்தை விரிப்பில் தாழ்த்தி வைத்துக் கொள்ளவும். இரு

கைகளையும் குப்புற மூடிய நிலையில் அடி வயிற்றின் கீழ் வைத்துக் கொள்ளவும்.

மூச்சை உள்ளே இழுத்து அடக்கியவாறு, கைகளைத் தரையில் அழுத்தியவாறு

கால்களை விறைப்பாக வைத்து படத்தில் காட்டியவாறு மேலே தூக்கவும். ஒரு

முறைக்கு 5 முதல் 10 வினாடியாக மிக மெதுவாக உயரே தூக்கி கீழே இறக்க

வேண்டும். ஆரம்பத்தில் சில நாள் ஒவ்வொரு காலாக மாற்றி மெதுவாகப் பழகவும்.

பலன்கள்:

வயிற்றுப் பகுதி பலப்படும். பெருங்குடல், சிறு குடல் இழுக்கப்பட்டு நன்கு வேலை

செய்யும். மலச்சிக்கல் தீரும். கல்லீரல், மண்ணீரல், கணையம் நன்கு வேலை

செய்யும். அஜீரணம், வயிற்று வலி நீங்கும். முதுகு, இடுப்பு வலி நீங்கும். அடிவயிறு

இழுக்கப்பெற்று தொந்தி கரையும். முதுகெலும்பு நோய் குணமாக முக்கிய ஆசனம்.