Daily Archives: திசெம்பர் 22nd, 2009

உலகின் மிகப் பெரிய திரை கொண்ட முதல் தரமான மொபைல்

எச்.டி.சி. நிறுவனத்தின் அதி நவீன தொழில் நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் தரும் வகையில் மிகச் சிறப்பான மொபைலாக எச்.டி.2 மொபைல் வெளிவந்துள்ளது. விண்டோஸ் இயக்கத்தில் புதியமுறை டச் போனாக வடிவமைக்கப்பட்டு, நாம் இதுவரை மொபைல் ஒன்றில் பெறத் துடித்த அனைத்து அனுபவங்களையும் தருவதாக இந்த மொபைல் உள்ளது. 2009 ஆம் ஆண்டின் மிகச் சிறந்த போனாக எச்.டி.சியின் எச்.டி.2 (HTC HD 2)தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
முதலில் நம்மை ஆச்சரியப்படுத்துவது இதுவரை நாம் காணாத 4.3 அங்குல அகல டச் சென்சிடிவ் திரை. கெபாசிடிவ் டச் என அழைக்கப்படும் தொழில் நுட்பம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ப்ராசசிங் வேகம் 1 கிகா ஹெர்ட்ஸ் என்பதால், மிக மென்மையாகத் திரையைத் தொட்டாலே, அதற்கான செயல்பாடு உடனடியாக மேற்கொள்ளப்படுகிறது. எச்.டி.சி. நிறுவனத்தின் தாரக மந்திரமான “”இது என்னுடையது; எனக்கு மிக நெருக்கமானது; எதிர்பாரததைத் தேடித்தருவது” என்பதனை முழுமையாக மேற்கொண்டிருக்கும் மொபைல் இது. இதனைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பும் வகையில் மெயில், காலண்டர், மெசேஜிங், பிரவுசர் என அனைத்தையும் அமைத்துக் கொள்ளலாம். முக்கிய இணைய தளங்கள், நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் ஆகியோருக்கான ஷார்ட் கட்களை அமைத்து, அவற்றின் மீது செல்லமாக மெல்லத் தட்டி இணைப்பினைப் பெறலாம். நீங்கள் எந்த நாட்டுக்குச் சென்றாலும், அந்த நாட்டின் நேரத்திற்கேற்றபடி இதன் கடிகார நேரம் மாறும். வெளியே நிலவும் சீதோஷ்ணநிலையை திரையைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
இமெயில், எஸ்.எம்.எஸ். போன் லாக், பேஸ்புக் அப்டேட்டிங் ஆகியவற்றை அந்த நபர்களின் போட்டோ தெரிவதைக் கொண்டு அறியலாம்.
அழைப்பு ஒன்று கிடைக்கையில் அதனை கான்பரன்ஸாக மாற்ற வேண்டும் என விரும்பினால், மற்றவர்களின் போட்டோக்கள் மீது சிறிய அளவில் தட்டினால் போதும். அனைவரும் கூடிவிடுவார்கள். இதன் தொடு உணர்ச்சியைச் சொல்லால் விவரிக்க முடியாதது. மெலிதாகத் தொட்டாலே, இணைய தளங்கள் விரிகின்றன; சுருங்குகின்றன. படங்கள் மற்றும் இமெயில்களும் அதே போல் இயங்குகின்றன. இதில் கிடைக்கும் பெரிய ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம், வெகு வேகமாகவும் எளிதாகவும் மெசேஜ் டைப் செய்திட முடியும். இந்த போன் இருந்தால் வை–பி இணைப்பு கொண்ட லேப் டாப் எல்லாம் தேவையில்லை. இந்த போன் 3ஜி செல்லுலர் நெட்வொர்க்குடன் இணைந்து வேகமாகச் செயல்படுகிறது.
இதில் உள்ள 5 மெகா பிக்ஸெல் கேமரா அழகான படங்களை எடுத்துத் தருகிறது. 157 கிராம் எடையில் 120.5x67x11மிமீ பரிமாணங்களுடன் கைக்கு அடக்கமாக அமைக்கப் பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ். மற்றும் எம்.எம்.எஸ்., ஸ்பீக்கர் போன், பலவகை பார்மட்டுகளில் உள்ள ரிங் டோன்களைக் கையாளும் வசதி, 448 எம்பி ராம், மைக்ரோ எஸ்.டி. கார்ட் இணைப்பு வசதி, நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, டபிள்யூ லான், புளுடூத் என அனைத்து தொழில் நுட்பங்கள், வீடியோ ரெகார்டிங், ஆர்.டி.எஸ். இணைந்த ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ, வாய்ஸ் மெமோ, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் அறிந்து செயல்படுதல், தொடர்ந்து 6 மணி 20 நிமிடங்கள் பேசும் வசதி, 12 மணி நேர இசை கேட்கும் வசதியைத் தரும் லித்தியம் அயன் 1230 ட்அட பேட்டரி என அனைத்து நவீன வசதிகளையும் கொண்டு இந்த போன் இயங்குகிறது.
டாட்டா டொகொமோ நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு இந்த மொபைல் பயன்படுத்தும் அனுபவத்தினைத் தருவதற்காகச் சிறப்பு ஏற்பாடுகளைத் தங்கள் விற்பனை மையங்களில் மேற்கொண்டுள்ளது. அத்துடன் அறிமுகச் சலுகையாக மாதம் 500 எம்பி டவுண்லோட் செய்திடும் வசதியுடன் ஆறு மாத இன்டர்நெட் இணைப்பினை இலவசமாகத் தருகிறது.
இந்த மொபைல் மஹாராஷ்ட்ரா மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ரூ. 39,000க்கும் மற்ற மாநிலங்களில் ரூ. 36,900க்கும் கிடைக்கிறது.

பீர்க்கங்காய் தோல் புதினா துவையல்


தேவையானப் பொருட்கள்:
பீர்க்கங்காய் தோல் – 1 கப்
புதினா – 1/2 கப்
கொத்தமல்லி – 1/2 கப்
தேங்காய் – 1/2 கப்
பெருங்காயம் – 1/2 தே.கரண்டி
புளி – சிறிய துண்டு
பச்சை மிளகாய் – 2
உளுத்தம் பருப்பு – 2 மேஜை கரண்டி
உப்பு – 3/4 தே.கரண்டி
எண்ணெய் – 1 தே.கரண்டி

செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்து கொள்ளவும்.
புதினா, கொத்தமல்லியை சுத்தம் செய்து கழுவி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பினை வறுத்து தனியாக வைக்கவும்.
அதே கடாயில் பீர்க்கங்காய் தோலினை சேர்த்து நன்றாக வதக்கி தனியாக வைக்கவும்.
பிறகு புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாயினை சேர்த்து நன்றாக வதக்கவும்.
வதக்கி வைத்துள்ள அனைத்து பொருட்களையும் சிறிது நேரம் ஆறவைக்கவும்.
பிறகு ஆறவைத்துள்ள பொருட்களுடன் தேங்காய் , புளி, பெருங்காயம் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.
இப்பொழுது சுவையான பீர்க்கங்காய் புதினா துவையல் ரெடி.
இதனை இட்லி, தோசை, சாதம் போன்றவையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு:
பச்சை மிளகாயிற்கு பதில் காய்ந்த மிளகாய் சேர்த்து கொள்ளலாம்.

டாகுமெண்ட் இறுதியில் காலி பக்கங்கள்

வேர்டில் சில டாகுமெண்ட்களை பிரிண்ட் எடுக்கையில், இறுதியாக ஒன்று அல்லது இரண்டு காலி பக்கங்கள் அச்சாகி வருவதனைப் பார்க்கலாம். ஆனால் டாகுமெண்ட்டினைப் பார்க்கையில் திரையில் அது போல எதுவும் இருப்பது தெரியாது. இதற்குக் காரணம் என்ன? எப்படி இதனைச் சரி செய்திடலாம்?
இதற்குக் காரணம் டாகுமெண்ட் இறுதியில் சில காலி பாராக்கள் இருப்பதுதான். இவற்றை நீக்கலாம். கண்ட்ரோல் + என்ட் கீகளை அழுத்துங்கள். நீங்கள் டாகுமெண்ட்டின் கடைசி பக்கத்திற்குச் செல்வீர்கள். இங்கே காலியாகவுள்ள பக்கம் உங்களுக்குக் காட்டப்படும். இனி பேக் ஸ்பேஸ் கீயை அழுத்தவும். கர்சர் திரையில் தெரியும் வரி வரை இது வரட்டும். இந்த வகையில் காலி பக்கங்களை அழிக்கலாம்.
அந்த காலி பக்கங்களை எப்படி காண்பது? என்ற ஆவல் எழுகிறதா? இந்த அச்சாகாத கேரக்டர்களைக் காட்டுமாறு வேர்ட் தொகுப்புக்கு ஆணையிடலாம். ஸ்டாண்டர்ட் டூல் பாரினை, டாகுமெண்ட் மேலாகப் பார்க்கவும். Show/Hide toolஎன ஒன்று அதன் ஐகானோடு இருக்கும். இசைக்கான சிம்பல் போல இது தோற்றமளிக்கும். ஸ்டாண்டர்ட் டூல்பாரில் உள்ள ஐகான்கள் அருகே உங்கள் கர்சரை வரிசையாக ஒவ்வொரு ஐகானாகக் கொண்டு செல்லுங்கள். இந்த Show/Hide toolவருகையில்Show/Hide எனக் காட்டப்படும். இதில் கிளிக் செய்தால், டாகுமெண்ட் முழுவதும் பாரா முடியும் மற்றும் தொடங்கும் இடங்களில் இந்த அடையாளம் தெரியும். தானாக ஸ்பேஸ் விட்ட இடங்களில் புள்ளிகள் கிடைக்கும். காலியான பக்கங்களும் காட்டப்படும். இதுவரை நீங்கள் டாகுமெண்ட் ஒன்றில் காணாத அனைத்து விஷயங்களும் தெரியும். இந்த ஐகானை மீண்டும் கிளிக் செய்தால் இந்த அடையாளங்கள் அனைத்தும் மறந்து போகும்.
வகை வகையாய் கோடு அமைக்க
வேர்டில் கட்டம் கட்டுதல், பல அழகான கோடுகள் அமைத்தல் போன்றவை நம் டாகுமெண்ட்டிற்கு அழகூட்டும். வேர்டைப் பொறுத்தவரை பல அழகான கோடுகளை அமைக்கப் பல வழிகள் உள்ளன. சில சுருக்கு வழிகளை இங்கு பார்க்கலாம்.
இடது பக்கமிருந்து வலது பக்கத்திற்குஎளிமையான ஒரு கோடுஅமைக்க மூன்று மைனஸ் (–) அடையாளங்களை அமைத்து என்டர் தட்டுங்கள். கோடு ஒன்று வரையப்படும். மூன்று ஈக்குவல் (=)அடையாளங்களை அமைத்து என்டர் தட்டினால் இரட்டைக் கோடு கிடைக்கும். இதே போல டில்டே (~) அடையாளம் அலை அலையாய் ஒரு கோட்டினை அமைக்கும். இதே போல (x) மற்றும் வேறு அடையாளங்களை அமைத்து பரீட்சித்துப் பார்க்கவும். இந்த கோடுகளை வேண்டாம் என எண்ணினால் எப்படி நீக்குவது? கோட்டுக்கு மேலாக கர்சரைக் கொண்டு வரவும். பின் கண்ட்ரோல் + க்யூ அழுத்தவும். கோடு வரைவதில் இந்த ஏற்பாடு உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள வேர்ட் தொகுப்பில் கிடைக்கவில்லை என்றால் உள்ளே செட்டிங்ஸ் மாறி இருக்கலாம். இதனை மாற்ற Tools மெனு திறக்கவும். பின் அதில் Auto correctionsஎன்ற பிரிவைத் திறக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் Auto format as you type என்ற பிரிவில் Border Lines பாக்ஸுக்கு எதிராக டிக் அடையாளத்தை அமைக்கவும்.
வேர்ட் மெனுவில் பட்டன்களை மாற்ற நாம் அன்றாடம் வேர்ட் தொகுப்பைப் பயன்படுத்துகிறோம். அதில் மேலாக உள்ல மெனு பட்டன்களை அவற்றின் வழக்கமான இடங்களில் வைத்துப் பார்த்து தேர்தெடுக்கிறோம். சில வேளைகளில் இவை இடம் மாறி, வேறு ஒரு இடத்தில் இருந்தால் நல்லது என்று எண்ணுவோம். ஆனால் அதற்கு என்ன செய்வது என்று எண்ணாமல் விட்டுவிடுவோம். இதற்கான வழியை இங்கு காண்போம்.
இதற்கு முதலில் Alt யை அழுத்திப் பிடித்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் இடம் மாற்ற விரும்பும் மெனு பட்டனை உங்கள் மவுஸால் கிளிக் செய்து அப்படியே இழுத்து நீங்கள் விரும்பும் புதிய இடத்திற்குச் செல்லுங்கள். அப்போது பாய்ண்ட்டர் ஒரு நான்கு முனை சக்கர அம்பாக மாறி இருப்பதனைப் பார்ப்பீர்கள். புதிய இடத்திற்குச் சென்றவுடன் மவுஸை விட்டுவிடுங்கள். நீங்கள் விரும்பிய வகையில் மெனு பாரில் பட்டன்கள் அமைந்திருக்கும்.

மட்டன் மசாலா

தேவையானப் பொருட்கள்:
மட்டன் – 1/2 கிலோகிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பூண்டு – 15 பல் (உரித்தது)
இஞ்சி – 1 இன்ச் (பொடியாக நறுக்கவும்)
மிளகாய் பொடி – 2 ஸ்பூன்
தனியா பொடி – 1 ஸ்பூன்
கரம் மசாலாப்பொடி – 1/2 ஸ்பூன்
சோம்பு, மிளகு – 1/2 ஸ்பூன் (தாளிக்க)
பட்டை – சிறிது
கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:
குக்கரில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் சோம்பு, மிளகு, பட்டை போட்டு தாளித்து சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, போட்டு வதக்கி பிறகு மட்டனையும் போட்டு வதக்கி, மிளகாய்ப்பொடி, தனியாப்பொடி, கரம் மசாலாப்பொடி, உப்பு போட்டு வேக விடவும். வெந்தவுடன் அதை ஒரு வாணலியில் ஊற்றி தண்ணீர் வற்றி மசாலாப் பதத்திற்கு வந்தவுடன் கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.

தோலில் தோன்றும் உண்ணிகள்! -மூலிகை கட்டுரை

தோலில் கனத்த சிராய்போன்ற குச்சிகளுடன் முள் போன்று காணப்படும் நாய்முள் என்ற தோலுண்ணிகளும், வெள்ளைநிற அல்லது நிறமற்ற திரவத்தை கொண்ட உருண்டையான வடிவமுடைய பாலுண்ணிகளும், தோலிலிருந்து உருண்டையான அல்லது நீள்வட்ட வடிவமான தோற்றத்தையுடைய கொழுப்பு நிறைந்த குருணை உண்ணிகளும் நமக்கு அடிக்கடி பாதிப்பை உண்டாக்குகின்றன. பெரும்பாலும் வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் இந்த உண்ணிகள் உண்டாகின்றன. இவை தோலின் மென்மையான சவ்வை துளைத்து, அதன் கீழ்பாகத்தில் அல்லது நரம்பு முடிச்சுப் பகுதியில் தங்கி, தங்கள் இனத்தை பெருக்கி, தோலின் வியர்வை கோளங்கள், கொழுப்பு கோளங்கள், நிணநீர்க்கோளங்கள் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்தி, தோலில் ஒரு மாறுபட்ட வளர்ச்சியை உண்டாக்கி, தோலுண்ணிகளாக மாறுகின்றன.
வைரல்வார்ட், மொலஸ்கம் கன்டேஜியேசம் போன்ற பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த உண்ணிகள் தோலில் வளர்ந்து விகாரமான தோற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த உண்ணி வளர்ச்சியை கிள்ளும் பொழுதோ அல்லது அறுத்து எடுக்கும் பொழுதோ இவைகள் அருகிலுள்ள ரத்தக்குழாய்கள் மூலமாக பல இடங்களுக்கு விரைவில் பரவி, எண்ணிக்கையில் அதிகப்படுகின்றன. ஆகவே தோலில் உண்ணி வளர்ச்சியுள்ள இடங்களை நகத்தால் கிள்ளுவதோ, அறுப்பதோ, சொறிவதோ அல்லது பிய்த்து எடுப்பதோகூடாது. அவ்வாறு செய்வதால் உண்ணி வளர்ச்சி அதிகப்பட ஆரம்பிக்கின்றன.
தோலுண்ணியுள்ள இடங்களில் சோப்பால் நன்கு கழுவ வேண்டும். அறுவை சிகிச்சைக்கு பயன்படும் ஸ்பிரிட்டால் அவ்விடத்தை துடைத்து எடுக்கலாம். மருத்துவரின் ஆலோசனையின்றி அதனை நீக்க முயற்சிக்க கூடாது. ஆரம்ப நிலையில் தோன்றும் பலவகையான தோலுண்ணிகளை நீக்கி, அவற்�ற் பரவ விடாமல், வேதனையின்றி விழச்செய்யும் அற்புத மூலிகை பிரம்மத்தண்டு.
அர்ஜிமோன் மெக்சிகானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட பப்பாரேசியே குடும்பத்தைச் சார்ந்த பிரம்மத்தண்டு செடிகள் குடியேட்டிப் பூண்டு என்ற வேறு பெயராலும் அழைக்கப்படுகின்றன. இதன் விதைகள் வெடித்து காற்றில் பரவி பலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துவதால் இது களைச்செடியாக கருதி, அழிக்கப்படுகிறது. ஆனால் இதன் பாலிலுள்ள பெர்பரின், புரோட்டோபின், ஐசோகுவினோலோன் மற்றும் புரத கரைப்பான்கள் தோலில் தங்கி, தோலுண்ணி வளர்ச்சிக்கு காரணமான வைரஸ் கிருமிகளை அழித்து, அதிகப்படியான தோல் வளர்ச்சியை நீக்கி, தோலுண்ணிகளை விழச்செய்கின்றன.
பிரம்மத்தண்டு செடிகளின் தண்டை உடைத்து, அதிலிருந்து வடியும் பாலை நாய்முள், மரு, பாலுண்ணி போன்ற தோலுண்ணி உள்ள இடங்களில் மேல் மட்டும் பிற இடங்களில் படாமல் வைத்து வர 10 அல்லது 15நாட்களில் உண்ணிகளின் அளவைப் பொறுத்து காய்ந்துவிடும். இதன் பாலை கண் மையுடன் தடவி மருவுள்ள இடங்களில் தடவி வந்தாலும் மருக்கள் விழும். பிரம்மத்தண்டு பாலை விபூதியுடன் கலந்து பரு, மரு, ஆசனவாயில் தோன்றும் சிறு தோல் வளர்ச்சியில் தடவி வர வளர்ச்சி சுருங்கும். பருக்கள் வெடிக்காமல் மறையும்.
-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,

விண்டோஸ் வேகம் பெற இனியவை நாற்பது

21. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.
22. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாக ராம் மெமரி பயன்படுத்துவது சிரமத்தைத் தரும். இதனை அதிகரிக்கலாமே!
23. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் Adjust for best performance”தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.
24. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஹார்ட் டிரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் டிரைவை பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.
25. விண்டோஸ் இயக்கத்திற்கான டிரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும்.
26. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Removeஎன்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.
27.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் மற்றும் பிற இடங்களில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.
28. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.
29. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.
30. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.
31. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.
32.நீங்கள் ஒரு கம்ப்யூட்டர் டெக்னீஷியனாக இருந்தால் உங்கள் ப்ராசசருக்கு ஒரு ஓவர்கிளாக் போடலாம். இதனை எப்படி போடுவது என்பதை http://www.wikihow.com/OverclockaPC என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து தெரிந்து கொள்ளுங்கள்.
33. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும்.
34. உங்கள் கம்ப்யூட்டரில் பிளாப்பி டிரைவ், சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி டிரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (BIOS)செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.
35. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்தமாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.
36.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.
37. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும்.
38. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா? எந்தவிதத் தயக்கமும் இன்றி எக்ஸ்பிக்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே! லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.
39. மிக மிக ஸ்லோவாக இயங்குகிறதா? தயங்காமல் ஹார்ட் டிஸ்க்கினை ரீ பார்மட் செய்திடவும். பைல்களைக் கவனமாக பேக் அப் செய்துவிட்டு, விண்டோஸ் சிஸ்டம் டிஸ்க் மற்றும் டிரைவர் பைல்களைத் தயாராக வைத்துக் கொண்டு இந்த வேலையை மேற்கொள்ளலாம்.
40. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா? இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.

மூளைக்கு ‘ஓவர் லோடு’: சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்

இன்றைய நிலையில் மூளைக்கு அதிகமான தகவல்களை “ஓவர் லோடு’ செய்வதால், மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எங்கும், எதிலும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இக்காலத்தில், தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள் கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு லட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த்தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர்.
கடந்த 1980ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 டிரில்லியன் வார்த்தைகள் மூளைக்குள் செலுத்தப்பட்டன. ஆனால், 2008ம் ஆண்டில் 10 ஆயி ரத்து 845 டிரில்லியனாக <உயர்ந்து விட்டது. இது 1980ம் ஆண்டை விட இரு மடங்குக்கும் அதிகம். இந்த கணக்கில் மக்கள் சாதாரணமாக உரையாடும் பேச்சு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி மற்றும் ஊடகங் களில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் மொத்த அளவு 3.6 ஜெட்டாபைட்ஸ் (3.6 எம்.என்., மில்லியன் கிகாபைட்ஸ்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து கம்ப்யூட்டர் மொழியில் கூறுவதென்றால் தினசரி 34 கிகாபைட்ஸ் மனித மூளைக்குள் திணிக்கப் படுகிறது. இது, ஒரு வாரத்தில் லேப்- டாப் கம்ப்யூட்டரில் செலுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு இணையானது. தொடர்ந்து அதிகமான தகவல்கள் திணிக்கப்படுவதால் மூளையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பல் கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சாண்டியாகோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோகர் பான் கூறுகையில்,”அதிக தகவல்களை திணிப்பதால், குறைந்தபட்ச இடைவெளி நேரத்தில் மூளை சோர்வடைந்து விடுகிறது. இதனால் ஆழ்ந்து சிந்திப்பது தடைபடுகிறது’ என்கிறார். “பரபரப்பாக கம்ப்யூட்டரை இயக்கவும், மொபைல்போனில் பேசவும், “டிவி’ பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் தற்காலத்தில் மக்கள், அதற்காக அதிக நேரம் செலவு செய்கின்றனர். அதிகமாக சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மொத்தத்தில், தற்காலத்தில் உள்ளது போல முன் எப்போதும் இந்த அளவிற்கு மனித மூளைக்கு வேலை கொடுத்ததில்லை. இது பாதிப்பை ஏற்படுத்தும்’ என்று நியூயார்க்கில் உள்ள மனநோய் மருத்துவர் எட்வர்டு ஹாலோவெல் தெரிவிக்கிறார்.
“கடந்த 20 ஆண்டுக்கு முன் கற்றதை விட, தற்போது, மக்கள் அதிகமாக கற்றுக் கொள்கின்றனர். இதனால், மூளையை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. மூளையின் அளவு அதிகரிப்பது அதை பயன்படுத்துவதை பொறுத்தது. மூளையில் புதிய செல்கள் பிறப்பதும், புதிய நரம்பு இணைப்புகள் கிடைப்பதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக கிடைக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இருக்கும்’ என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் காலின் பிளாக்மோர் கூறுகிறார்.

கடைக்குட்டி விரதம்! (ஆன்மிகம்)

– எஸ்.செங்கை செல்வன்
பாவம் செய்யாத மனிதர்களே இல்லை… உடலால் செய்யாவிட்டாலும், மனதால் செய்யும் பாவங்கள் உண்டு. இரண்டுமே இல்லாவிட்டாலும் கூட, தரையில் செல்லும் பூச்சிகளை மிதித்து விடுதல் போன்று அறியாமல் செய்த பாவங்கள் இருக்கத் தானே செய்கிறது.
இப்படி, நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல, நம் முன்னோர் செய்த பாவங்களும், எதிர்கால சந்ததியினர் செய்ய இருக்கும் பாவங்களுக்கும் பரிகாரமாக சாஸ்திரத்தில் ஒரு விரதம் சொல்லப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையார் நோன்பு. வீட்டில் கடைக்குட்டி பிள்ளைகள் இந்த விரதத்தை மேற்கொள்வது மரபு.
மார்கழி சஷ்டி திதியில் வரும் பிள்ளையார் நோன்பை, முறைப்படி 21 நாட்கள் கடைபிடிக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அதாவது, கார்த்திகை மாதம் தேய்பிறை பிரதமை அன்று துவங்கி, மார்கழி மாதம் வளர்பிறை சஷ்டியன்று இதை நிறைவு செய்ய வேண்டும். மார்கழி வளர்பிறை சஷ்டி திதியன்று சதய நட்சத்திரமாக அமையும். இதனால், இவ்விரதத்தை முடிக்கும் நாளை, “சஷ்டி தொட்டு சதயத்தில் விட்டு’ என்பர்.
விரத நாட்களில், காலையில் சாப்பிடாமல், மதியம், இரவு மட்டும் எளிய பதார்த்தங்களை சாப்பிட வேண்டும். அப்பம், அவல் பொரி, பொரிகடலை, மோதகம், பிடி கொழுக்கட்டை, பிட்டு, வாழைப்பழம், நாவல்பழம், மாம்பழம், பலாப்பழம், வெண் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், தயிர்ச்சாதம், புளியோதரை, கற்கண்டு சாதம், சுண்டல், பூம்பருப்பு (கடலை பருப்பை வேக வைத்து தாளித்து விடுவது) சாம்பார் சாதம், வடை, பாயசம், அதிரசம் ஆகிய 21 வகையான நைவேத்தியத்தை தினமும் ஒன்று வீதம் படைக்க வேண்டும்.
செய்த பாவங்கள் தீர வேண்டும் என்பதற் காகவே இந்த நோன்பை மேற்கொள்வர். இந்த விரதத்தை 21 நாட்களும் மேற்கொள்ள முடியாதவர்கள், விரதத்துக்கு முதல்நாள் 21 இழைகளால் ஆன மஞ்சள் தடவிய நூலை கையில் காப்புக் கட்டிக் கொள்ள வேண்டும்; மறுநாள், பிள்ளையார் நோன்பை அனுஷ்டிக்க வேண்டும்.
இந்நாளில், வீட்டில், சாணத்தில் பிடித்த விநாயகர் அல்லது சிறிய அளவிலான களிமண் விநாயகரை திருவிளக்கின் முன் வைத்து, அருகம்புல் மாலை, எருக்கம்பூ மாலை அணிவிக்க வேண்டும். மேற்கண்ட நைவேத்தியங்களில் உங்களால் முடிந்ததைப் படைத்து, கணபதிக்குரிய பாடல்களை ஆத்மார்த்தமாகப் பாட வேண்டும். அவ்வையார் அருளிய, “சீதக்களப செந்தாமரைப்பூம்…’ என்று துவங்கும் விநாயகர் அகவல், “பந்தம் அகற்றும் அனந்த குணம்…’ என்று துவங்கும் கபிலர் எழுதிய காரியசித்தி மாலையும் பாட வேண்டும்.
“இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவிழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர் வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும்
அத்தடவு மருப்பு கணபதி
பொற்பாதம் சரணமடைகின்றோம்…’
— இந்த பாடல், இவ்விரத நாளில் முக்கியமாக பாட வேண்டியது.
குழந்தை இல்லாதவர்கள், இந்த விரதத்தை அனுஷ்டித்தால், புத்திர பாக்கியம் கை கூடும் என்பது நம்பிக்கை. வீட்டில் கடைக்குட்டி பிள்ளைகள் இதை அனுஷ்டிப்பது நீண்ட கால மரபு. பெற்றோர் உடல்நலம், சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமணம், பணப்பிரச்னை உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இதை அனுஷ்டிப்பர். குழந்தைக் கடவுளான விநாயகர் அவற்றை தீர்த்தருள்வார்.