துபாயிலிருந்து `திரும்புவோருக்கு’ ஆறுதல்!


துபாய் பொருளாதார நெருக்கடி காரணமாக வளைகுடா பகுதியிலிருந்து திரும்புவோருக்குக் கொஞ்சம் ஆறுதல் அளிக்கும் செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது. பொருளாதார வீழ்ச்சி காரணமாக அங்கிருந்து தாய்நாடு திரும்புவோருக்கு உதவும் விதமாக விரைவில் ஒரு சிறப்பு நிதியுதவித் திட்டத்தை அறிவிக்கவிருக்கிறது மத்திய அரசு.

இதுதொடர்பாக வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார அமைச்சகத்தைச் சேர்ந்த ஓர் உயரதிகாரி கூறும்போது, “பொருளாதார நெருக்கடி காரணமாக வளைகுடாவில் இருந்து இந்தியா திரும்பும் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்காக ஓர் ஒட்டுமொத்தத் திட்டத்தை அறிவிப்பது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்றார்.

“இந்த நிதியானது அடிப்படையில், வெளிநாடுகளில் வேலையை இழந்து இந்தியா திரும்புவோருக்கு உதவுவதாக அமையும். அந்த நோக்கிலேயே இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்று வெளிநாடுவாழ் இந்திய விவகார அமைச்சகத்தின் செயலாளர் கே. மோகன்தாஸ் தெரிவித்துள்ளார்.

அதற்கான அடிப்படையான விஷயங்களை வரையறுக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளது என்று அவர் கூறினார். இந்த `தாயக வருகை மற்றும் மறுகுடியேற்ற நிதி’யானது முக்கியமாக, வளைகுடா பகுதியில் வாழ்வாதாரத்தை இழந்த மத்திய நிலை பணியாளர்களுக்கு புனர்வாழ்வு அளிப்பதாக அமையும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

%d bloggers like this: