போதைப் பாக்கு…


மனித இனம் நவீன வளர்ச்சியில் நிறைய பயன்களை அடைந்தாலும் அதற்கு எதிர்வினையாக பல தீய பழக்கங்களுக்கும் அடிமையாகிக் கொண்டிருக்கின்றது.

ஆரோக்கிய சீர்கேடான பழக்கங்கள் பல அன்று முதல் இன்று வரை மனித இனத்தை அடிமைப்படுத்தியுள்ளது.

மது, புகை என பலவகைகளில் விளையாட்டாக ஆரம்பிக்கும் இந்தப் பழக்கம் நாளடைவில் உயிரைக் குடிக்கும் எமனாகிறது.

பாக்கு என்ற போர்வையில் நுழைந்துள்ள போதைப் பொருளைப் பற்றியும் அதனால் உண்டாகும் விளைவுகளைப் பற்றியும் அறிந்துகொள்வோம்.

முன்னோர்கள் உணவுக்குப்பின் தாம்பூலம் தரிப்பார்கள். அதாவது வெற்றிலைப் பாக்கு போடுவார்கள். வெற்றிலையும், பாக்கும், சுண்ணாம்பும் சேர்ந்து சீரண சக்தியை அதிகரிக்கச் செய்யும். சிலர் இந்த கலவையுடன் புகையிலையையும் சேர்ப்பார்கள்.

ஆனால் நாட்கள் செல்லச் செல்ல இதனை போதைக்காக உபயோகிக்கும் பழக்கம் உண்டானது. அதனால் பாக்குடன் புகையிலையை அதிகமாகச் சேர்த்து அதனுடன் வாசனையை உண்டாக்கும் சில பொருட்களைச் சேர்த்து புதிதான ஒரு சுவையுடன் தயாரித்தார்கள். இவற்றை வாயில் போட்டவுடன் சுறுசுறுவென்று ஒருவிதமான மயக்கத்தை உண்டுபண்ணும்.

இந்த வகையான பாக்கிற்கு அடிமையானவர்கள் நாள் ஒன்றுக்கு 10 முதல் 15 பாக்கெட்டுகள் வரை உபயோகிக்கிறார்கள்.

பாமரர் முதல் பணக்காரர் வரை இந்தப் பழக்கம் தொற்றிக்கொண்டுள்ளது. குறிப்பாகக் கல்லூரி மாணவர்கள், கடுமையான வேலை செய்பவர்கள் போதைக்காகவும், வேலையின் கடினம் தெரியாமல் இருப்பதற்காகவும் இதனை அதிகமாக பயன்படுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பாக்கு வெறும் கிறுகிறுப்பை மட்டும் தராமல் பலவித ஆபத்தான நோய்களையும் உண்டாக்குகிறது.

போதைப் பாக்கால் ஏற்படும் கேடுகள்

போதைப் பாக்குகளில் உள்ள போதைப் பொருள்கள், வாயின் உட்பகுதி, நாக்கு, பல் ஈறுகளின் மென்மையான பகுதிகளை அரித்து புண்களை எற்படுத்திவிடுகின்றன. இந்தப் புண்களால் எந்தவகையான உணவையும் எளிதில் சாப்பிட முடியாது. வாயின் உள்பகுதி சிவந்து வெந்து காணப்படும். சிலர் அந்த நீரை உள்ளே விழுங்கிவிடுகின்றனர். இந்த விஷம் கலந்த நீர் வாயின் உள்ளே இறங்கும்போது தொண்டை மற்றும் உணவுக் குழாயை அரித்து தொண்டைப்புண், வயிற்றுப்புண்ணை ஏற்படுத்துகிறது.

மேலும் பற்களின்மேல் படிந்துள்ள பாக்குத் துகள்கள் ஈறுகளை பலமிழக்கச் செய்கின்றன.

இதனால் பற்கள் எளிதில் விழுந்துவிடுவதுடன் வாய்ப் புற்றுநோய் (கேன்சர்) ஏற்படவும் வாய்ப்பாகின்றது.

மேலும் இவை தொண்டைப் பகுதியைத் தாக்கி வாயிலும் வயிற்றிலும் புண்களை உண்டாக்குகிறது. இதனால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு மலச்சிக்கல் உருவாகிறது. மேலும் நரம்பு மண்டலத்தைத் தாக்கி ஈரலைப் பாதிக்கிறது. ஈரல் பாதிக்கப்படுவதால் பித்தம் அதிகரித்து மூளையை செயலிழக்கச் செய்கிறது.

மேலும் பித்த அதிகரிப்பால் உடலில் உள்ள இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் உடல் சோர்வு ஏற்படுகிறது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் பல கொடிய நோய்கள் தொற்றிக்கொள்ள ஏதுவாகிறது.

குடல் புண் எற்படவும் இது காரணமாகிறது.

மேலும் பாக்கு போடுவதால் பற்கள் கறை படிந்து காணப்படும். பிறரிடம் உரையாடும்போது எச்சில் தெறிக்கும். இதனால் சில நேரங்களில் மற்றவர்களின் அருவருப்பான பார்வைக்கு ஆளாக நேரிடும்.

பாக்கு போட்டு கண்ட இடங்களில் எச்சில் துப்புவதால் சுகாதாரம் கெடுகிறது, மேலும் பல தொற்று நோய்கள் ஏற்படவும் வாய்ப்புண்டாகிறது.

போதைப் பாக்கை மறக்க

எந்த ஒரு கெட்ட பழக்கமும் நாம் கருவில் இருக்கும்போதிலிருந்தே வந்ததல்ல. நம் மனதை அலைபாயவிட்டு கற்றுக்கொண்டவைகளே இவைகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு தீய பழக்கத்தை கற்றுக் கொள்வதற்கு மனம் எப்படி உதவுகிறதோ.. அதேபோல்தான் அதை மறப்பதற்கும் மனமே உதவும்…

அதாவது முதலில் மனதை கட்டுப்படுத்தப் பழகிக்கொள்ள வேண்டும்.

பாக்கு போடும் எண்ணம் தோன்றும் போதெல்லாம் பாக்கிற்குப் பதிலாக உடலுக்கு நலம் தரும் உலர்ந்த திராட்சை, பேரிச்சம் பழம், கிராம்பு போன்ற பொருட்களில் ஏதாவதொன்றை வாயில் போட்டு சுவைக்கலாம். இது உடலுக்கு நன்மை தருவதோடு, பாக்குபோடும் எண்ணத்தையும் மறக்கச் செய்யும்.

அரசு இந்தவகையான போதைப் பாக்குகளைத் தடைசெய்து இதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.

மனிதன் மனது வைத்தால் எதையும் வெல்லலாம்.

இந்த பாக்கை வெல்ல முடியாதா..?

%d bloggers like this: