அவங்க திருந்திட்டாங்க; நாமளோ…?- குளிர்பானங்களுக்கு தடை


* அமெரிக்கா போடுது குளிர்பானங்களுக்கு தடை
* இந்திய இளைஞர்களோ ருசித்து குடிக்கறாங்க
* “எனக்கு ஒரு செஷ்வான் நூடூல்ஸ், ஆலு மட்டர், அத்தோடு ஒரு கோக்’ என்று ஓட்டலில் இளசுகள் ஆர்டர் செய்வது இப்போது வழக்கமாகி விட்டது.
* குறிப்பிட்ட டிபன் பாக்கேஜ்களுடன் கோக் பாட்டில் இலவசம் என்று சலுகை மெனுக்களை பல ஓட்டல்களில் காணலாம். அதற்கு செம வரவேற்பு வேறு.
* முன்பெல்லாம் சுற்றுலா சென்றால், இட்லி, சப்பாத்திகளை தயார் செய்து எடுத்துப் போவதுண்டு. இப்போதோ, கவர்ச்சி பாக்கெட்களில் உள்ள மொறுமொறுக்கள், அத்தோடு, இரண்டு லிட்டர் கூல் டிரிங்க் பாட்டில் வாங்கிவைத்தால் போதும். இப்படி, “சாப்ட் டிரிங்க்’ மோகம், இளைய தலைமுறையினரிடம் அதிகளவில் பரவி விட்டது. மற்ற உணவு வகைகளில் உள்ள கொழுப்பு சத்தை விட, கேன், பாட்டிலில் அடைக்கப்பட்ட, “கார்பன்’ ஏற்றப்பட்ட கூல் டிரிங்க்குகளில் கலோரி மிக அதிகம்.
சர்க்கரை நோய், இதய பாதிப்புக்கு இது தான் அடிப்படை காரணம். தினமும் இரண்டு சாப்ட் டிரிங்க் குடித்து வரும் இளைஞர் ஒருவர், சில ஆண்டுகளில் மிகவும் குண்டாகி விடுகிறார்; அப்புறம் என்ன, சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் என்று டாக்டர்களை தேடிப் போக வேண்டியது தான்.
ஒரு நாளைக்கு 44 கிராம் தான்!
குளிர்பானம் குடிக்கக் கூடாது என்பதல்ல; ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களில் இருந்து சாறெடுத்து அப்படியே குடிப்பது நல்லது தான். ஆனால், பாட்டிலில் அடைக்கப்பட்ட, “கார்பன்’ அழுத்தம் தரப்பட்ட (கார்பனேட்டட்) கூல் டிரிங்குகள் தான் உடலுக்கு ஆபத்து.
குளிர்பானங்களில், வைட்டமின், நார்ச்சத்து போன்றவை இல்லாமல் இல்லை. ஆனால், அதையும் தாண்டி, இனிப்பு சத்து அதிகம். ஒருவர் ஒரு நாளைக்கு 44 கிராம் இனிப்பு தான் எடுத்துக்கொள்ள வேண்டும். காபி, ஜூஸ் போன்ற பல வகை உணவுகளில் இந்த அளவு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆனால், ஒரு பாட்டில் குளிபானம் குடித்தால், அதில் இதை விட அதிகமாகவே இனிப்பு சத்து உள்ளது. ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு குளிர்பான பாட்டில் குடித்தாலே போதும், அவர் உடல் எடை பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு அதிகம்.
டீன்-ஏஜ் பெண்களுக்கும்
இளைஞர்களுக்கு குளிர்பானங்களால், உடல் எடை அதிகரித்து, சர்க்கரை அளவு கூடி விடுகிறது; ரத்த அழுத்தம் ஏற்படுகிறது என்றால், இளம் பெண்களுக்கு எலும்பு தின்மை குறைகிறது. கால்சியம் சத்துக்களை குளிர்பானத்தில் உள்ள இனிப்பு சத்து பறித்துவிடுகிறது என்பது ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
டீன்-ஏஜ் பெண்களுக்கு அப்போது குளிர்பானம் குடிப்பது குஷியாகத்தான் இருக்கும். 40 வயதை அடையும் போது தான் மூட்டுவலியில் ஆரம்பித்து, பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் போதுதான் உணர முடியும். அப்போது டாக்டரிடம் ஓடத்தான் நேரம் சரியாக இருக்கும்.
அவங்க மாறிட்டாங்க
கடந்த மூன்றாண்டாகவே, அமெரிக்காவில் பல ஆய்வுகளில் குளிர்பான அபாயம் குறித்து தகவல்கள் வெளிவந்தன. ஆனால், குளிர்பான தயாரிப்பாளர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க விடாமல் தடுத்து விட்டனர். ஆனால், குழந்தைகள் கூட பெரியவர்கள் போல குண்டாக ஆவது தெரியவந்தபோது தான் சுகாதாரத்துறை அதிர்ந்தது. இதையடுத்து பள்ளிகளில் குளிர்பானங்களுக்கு தடை போடப்பட்டது. விளைவு, இப்போது பள்ளி மாணவர்கள் 65 சதவீதம் பேர் குளிர்பானம் குடிப்பதை நிறுத்தி விட்டனர்.
இங்கே ரத்தின கம்பளம்
ஆனால், படித்த , திறமை வாய்ந்த நம் இளைஞர்கள், கேன், பாட்டில் குளிர்பானங்களில் தான் அன்றாட டிபன், சாப்பாட்டையே காண்கின்றனர். வீட்டில் சாப்பாடு செய்யவில்லை என்றால், கவலையில்லை, ஒரு இரண்டு லிட்டர் குளிர்பான பாட்டில் போதும். ஓட்டலுக்கு போனால், டம்ளரில் தண்ணீர் கொண்டு வந்து வைப்பது வழக்கம். இப்போது, வாண்டூஸ்களுக்கு கூட, ஒரு குளிர்பான பாட்டிலோ, கேனோ வைத்தால் தான் டிபனே உள்ளே இறங்கும். அந்த அளவுக்கு மாற்றியது யாராக இருந்தாலும், பெற்றோரை தான் குறை சொல்ல வேண்டும்.
தடை இங்கே பயனில்லை
சர்க்கரை வியாதிக்கு, இதய பாதிப்புக்கு குளிர்பானம் முக்கிய காரணம் என்று தெரிந்தும், இந்தியாவில் தடை செய்ய அரசுகளுக்கு தைரியமில்லை; காரணம் சந்தை பொருளாதாரம் பாதிக்கும் என்பது தான்.
கேரளா தான் முதலில், பள்ளிகள் அருகே குளிர்பானம் விற்க தடை விதித்தது. ஆனால், அங்கும் இப்போது தலைகீழாகி விட்டது. சட்டம் போட்டால் பயனில்லை. அவரவர் திருந்த வேண்டும் என்ற நிலை தான் இப்போது உள்ளது.
திறமையா – ஒபிசிட்டியா?
நம் இளைஞர்களிடம் திறமை எக்கச்சக் கம்; அதுபோல, அமெரிக்கா எதையெல் லாம், “கெட்டது’ என்று கழற்றி விடுகிறதோ, அதையெல்லாம் வரவேற்பதும் நாம் தான். உடலை கெடுக்கும் விஷயத்தில் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், அடுத்த சில ஆண்டுகளில் இளைஞர்களிடம் சர்க்கரை வியாதி, இதய பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் எச்சரித்துவிட்டனர். திறமையா, ஒபிசிட்டியா என்பதை இளைஞர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்; உணராவிட்டால், காலம்தான் பதில் சொல்லும்.

%d bloggers like this: