Daily Archives: திசெம்பர் 30th, 2009

விண்வெளியில் கிறிஸ்துமஸ்

எந்த வயதினரையும் குழந்தைபோல் மாற்றி விடும் விண்வெளி அதிசயங்கள். பார்க்கப் பார்க்க அழகு. சிந்திக்கச் சிந்திக்க பிரமாண்டம். சுற்றி வரும் நிலவு, மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் அனைத்தும் எல்லோருக்கும் வேடிக்கைதான். அதை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சிகூடும்.

சில நட்சத்திரங்கள் நேர் கோட்டில் அமைந்திருக்கும். சில நட்சத்திரங்கள் உங்களைப் பார்த்து கண்சிமிட்டும். ஒன்று மற்றொன்றை துரத்துவதுபோல் தோன்றும். இன்னும் சில சுற்றுவதுபோல் இருக்கும். திடீரென எரிந்து விழும் நட்சத்திரத்தையும் பார்க்கலாம். நகரும் மேகங்கள் உங்கள் ரசனையை தூண்டும்.

சாதாரண கண்களுக்கு இவ்வளவு காட்சிகளை விருந்தாக்கும் விண்வெளி, தொலைநோக்கி வழியாகப் பார்த்தால் இன்னும் பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தரும். வெள்ளி போல விட்டுவிட்டு பிரகாசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் நீலம், மஞ்சள், காவி வண்ணங்களில் காணப்படும். எல்லா நிறமும் கலந்து குழப்பியதுபோலவும் வர்ணஜாலம் காட்டும்.

இப்படித் தோன்றும் அபூர்வ காட்சிகளில் ஒன்றுதான் விண்வெளியில் கண்ட கிறிஸ்துமஸ் விழாக்கோலம்.  ஹப்பிள் தொலைநோக்கியில் உள்ள ஒரு கேமரா படம்பிடித்த காட்சியில்தான் அது பதிவாகி இருந்தது.

இது ஒரு நட்சத்திரக்கூட்டமாகும். சூரியக்குடும்பத்தில் இருந்து சில மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த நட்சத்திரக் கூட்டத்தின் ஒளிரும் தன்மை, அதைச் சுற்றி உள்ள தூசுப் படலம் ஆகியவை அலங்கார விளக்குகள் போலவும், அவற்றில் ஏற்பட்டுள்ள குழிந்த வளைவுகள் கிறிஸ்துமஸ் அலங்கார பைன் மரங்களைப் போலவும் அழகாக காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு `ஆர் 136′ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இவற்றில் சில நட்சத்திரங்கள் அழியும் நிலையில் உள்ளன. இது நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிய ஒரு தடயமாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கவலைகளைத் துரத்தும் கல்யாணம்!

திருமணம் என்பது அர்த்தமுள்ள வாழ்க்கையின் ஆரம்பம் எனலாம். `திருமணம் ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று பழமொழி உண்டு.

ஆனால் திருமணம் என்றால் இளைஞர்கள் சிலர் ரொம்பவே யோசிக்கிறார்கள். திருமணம் செய்து கொண்டவர்களும், `உனக்கு என்னப்பா நீ சுதந்திரப்பறவை, நான் குடும்பஸ்தன்’ என்று சலிப்பு வசனம் பேசுகிறார்கள்.

அவ்வப்போது நடக்கும் ஆய்வுகளோ ஒவ்வொருவருக்கும் திருமணம் அவசியம். அதனால் உடல் ரீதியாக பல நன்மைகள் கிடைக்கிறது என்கிறது. இதேபோல் மனோரீதியாகவும் பல நன்மைகள் உண்டு என்கிறது சமீபத்திய ஆய்வு.

சர்வதேச நல அமைப்பான டபுள்.எச்.ஓ.வின் மனநலப் பிரிவு மற்றும் நிசிலாந்து பல்கலைக்கழகம் இணைந்து இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்டது. 15 நாடுகளைச் சேர்ந்த 34 ஆயிரத்து 500 பேர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த ஆய்வின் முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் வெளியான சில முக்கிய தகவல்கள்… திருமணம் செய்து கொள்வதால் மனச்சோர்வு, கவலை மற்றும் மனநல பாதிப்புகள் குறைகிறது. பெண்களைவிட ஆண்கள் திருமணம் செய்வதற்கு விருப்பக் குறைவுடன் இருக்கிறார்கள். அதிக மனச்சோர்வு அடைகிறார்கள். அதே நேரத்தில் திருமணம் செய்து கொண்டபிறகு பெண்களைவிட ஆண்கள் அதிகமான மனச்சோர்வு, கவலைகளில் இருந்து விடுபடுகிறார்கள். டிஸ்ஆர்டர் பாதிப்புகளும் குறைவாக இருக்கிறது. பெண்கள் அதிகம் கல்வி அறிவு பெற்றிருப்பதால் சோர்வு நிலை குறைவாக இருக்கிறது. சிலரிடம் மட்டும் அதிகமிருக்கிறது. தம்பதிகள் பிரிந்து வாழ்வது, யாரேனும் ஒருவர் இறந்துவிடுவது, விவாகரத்து பெற்றுக் கொள்வது போன்ற காரணங்களால் ஏற்படும் மனநல பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. குழந்தைக்காக சார்ந்து வாழ்வதில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் இளம்பருவத்தினர் இருபாலரிடமும் திருமணத்தைப் பற்றி எதிர்மாறான கருத்துக்களே இருக்கிறது. அதாவது திருமணத்தை கூடுதல் சுமையாகவும், கவலையாக கருதும் எண்ணம் உள்ளது.

குவிந்த புரோகிராம்களை நீக்க…

இணையத்தில் பல்வேறு வசதிகளைத் தரும் எக்கச்சக்கமான புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இவை இலவசமாகக் கிடைப்பதால், நாம் உடனே டவுண்லோட் செய்து பயன்படுத்திப் பார்க்கிறோம். ஆனால் சில நாட்களில் அதனை மறந்துவிடுகிறோம்; தொடர்ந்து பயன்படுத்துவதில்லை. இப்படி பல புரோகிராம்கள் நம் கம்ப்யூட்டரில் தங்கிவிடுகின்றன. இவற்றை எப்போதாவது, கண்ட்ரோல் பேனல் சென்று, ஆட்/ரிமூவ் பிரிவின் மூலம் ஒரு சிலவற்றை நீக்குகிறோம். அப்படி நீக்கும் போதும், அந்த புரோகிராம் சார்ந்த சில ரெஜிஸ்ட்ரி வரிகள் தங்கிவிடுகின்றன. சில பைல்களும் அவ்வாறே கம்ப்யூட்டரில் வைக்கப்படுகின்றன. இதனால் கம்ப்யூட்டரின் செயல்வேகம் மெதுவாகிறது. சில மோசமான வேளைகளில், புரோகிராம்கள் முடங்கியும் போகின்றன.
இது போன்ற குறைகளை நீக்கித் தேவையற்ற புரோகிராம்களை முழுமையாக நீக்க இணையத்தில் Absolute Uninstaller என்ற புரோகிராம் கிடைக்கிறது. இது ஆட்/ரிமூவ் மூலம் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை மேற்கொண்டாலும், அதனைக் காட்டிலும் கூடுதல் திறனுடன் செயல்படுகிறது. தேவையற்ற ரெஜிஸ்ட்ரி கீகள், சார்ந்த டெஸ்க்டாப் ஐகான்கள், ஸ்டார்ட் மெனுவில் எழுதப்பட்ட என்ட்ரிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து நீக்குகிறது.
இந்த புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன் ஒன்றை நீக்கும்போது, அழிக்காமல் விடப்படும் பைல்களைக் கண்டறிந்து முழுமையாக அழிக்கிறது. தானாகவே தேவையற்ற பைல் எண்ட்ரிகளின் இடமறிந்து காட்டுகிறது.
இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை, அவற்றிற்கான ஐகான்களுடன் தெரிவிக்கிறது. இதன் மூலம் நாம் நீக்கப்பட வேண்டிய புரோகிராம்களை எளிதாகத் தேர்ந்தெடுக்கலாம். தேர்ந்தெடுக்கும் வகையில் அவற்றின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தி, பின் நீக்குவதற்கான கட்டளை கொடுத்தால், மொத்தமாக, அவற்றின் சுவடே இல்லாமல் நீக்குகிறது.
பொதுவாக ஆட்/ரிமூவ் புரோகிராம் செயல்பட சற்று நேரம், பிடிக்கும். அப்ஸல்யூட் அன் இன்ஸ்டாலர் மிக வேகமாகச் செயல்படத் தொடங்குகிறது. அத்துடன் இதன் இன்டர்பேஸ் மிக எளிதாக இதனை இயக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை http://www.glarysoft.com /absoluteuninstaller/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் சென்று டவுண்லோட் செய்து கொள்ளுங்கள். அண்மையில் இதன் புதிய பதிப்பு Absolute Uninstaller 2.8.0.636 2.8.0.636 வெளியாகியுள்ளது.

பீர்க்கங்காய்

பீர்க்கங்காய், வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது என்று சொன்னால் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும்.

நீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாட்பட்ட புண், இரத்த சோகை முதலியவற்றைக் குணப்படுத்துவதில் பீர்க்கங்காய் கை கொடுத்து உதவுகிறது.

பீர்க்கங்காய் முற்றிவிட்டால் கவலை வேண்டாம். முற்ற முற்ற நல்லது. பீர்க்கை முற்றிய பிறகு மருத்துவக் குணங்கள் நிரம்பிய டானிக்காகவும், சத்துணவுப் பொருளாகவும் திகழ்கிறது.

நூறு கிராம் பீர்க்கங்காயில் கிடைக்கும் கலோரி 18தான். ஆனால் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, நார்ச்சத்து, மாவுப்பொருள், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி என அனைத்து வகையான வைட்டம¢ன்களும் தாது உப்புக்களும் தக்க அளவில் உள்ளன. இதனால்தான் டானிக்காகவும், சத்துணவு நிரம்பிய காய்கறியாகவும் இந்த எளிய காய்கறி விளங்குகிறது.

நீரிழிவு நோயாளிகள் பாகற்காய்க்கு மாற்றாகவும் இதைச் சேர்த்துக்கொள்ளலாம்.

இதன் இலை, விதைகள், வேர் என அனைத்தும் மருத்துவக் குணங்கள் நிரம்பியவையே.

இதன் இலைகளைச் சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்த வேண்டும். அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படும்.

சொறி, சிரங்கு, நாட்பட்ட புண்கள், காய்ச்சல் ஆகியவை குணமாகப் பீர்க்கங்காய் சாம்பார் வைத்து சேர்த்துக்கொள்ளலாம். மேலும் இதன் இலைகளை அரைத்துப் புண்கள் உள்ள இடங்களில் கட்டினால் போதும். சொறி, சிரங்கு உள்ள இடங்களில் இலைச் சாற்றைத் தடவுதல் நல்லது.

இரத்த சோகை நோயாளிகளும், தோல் நோயாளிகளும் இதன் வேரைத் தண்ணீர் விட்டுக் காய்ச்ச வேண்டும். ஆறியதும் நீரை வடி கட்டி அருந்தி வர வேண்டும். இதன் மூலம் இரத்த விருத்தி ஏற்படும். பீர்க்கை தோல் நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.

கண் பார்வை தெளிவு, நோய் எதிர்ப்புச் சக்தி ஆகியவற்றையும் வழங்கும் பீர்க்கங்காயை அடிக்கடி தேடிப்பிடித்து உண்ண வேண்டும்.

வீவோ மியூசிக் வீடியோ வெப்சைட்

யு–ட்யூப் மற்றும் உலகின் முன்னணி இசை நிறுவனங்கள் இணைந்து வீவோ (ஙஞுதிணி) என்ற பெயரில் ஒரு மியூசிக் வீடியோ வெப்சைட் ஒன்றை உருவாக்கியுள்ளனர். என்ற முகவரியில் இதனைக் காணலாம். யு–ட்யூப்புடன் யுனிவர்சல் மியூசிக் குரூப் , சோனி மியூசிக் என்டர்டெய்ன்மென்ட், இ.எம்.ஐ., ஏ.டி அண்ட் ட்டி மற்றும் அபுதாபி மீடியா கம்பெனி ஆகிய நிறுவனங்கள் இந்த திட்டத்தில் கை கோர்த்துள்ளன. இந்த திட்டத்திற்கென இந்த நிறுவனங்கள் 30 கோடி டாலர் வழங்கியுள்ளன. தற்போது இந்த இணைய தளத்தில் 5,191 கலைஞர்களின் 14,675 வீடியோக்கள் உள்ளன. 20 வகையான வீடியோ இசை ஆல்பங்கள் கிடைக்கின்றன. இந்த தளத்தைப் பயன்படுத்தும் பயனாளர்கள் தாங்கள் விரும்பும் வகையில் பிளே லிஸ்ட்டுகளை உருவாக்கிக் கொள்ளலாம். அவ்வகையில் இதுவரை 800க்கும் மேற்பட்ட பிளே லிஸ்ட்டுகள் உள்ளன.

ஒவ்வொரு இந்தியரிடமும் ஒரு செல்போன்!


இந்தியாவின் செல்போன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 50 கோடியை நெருங்கும் நிலையில், நாட்டின் செல்போன் சந்தை மற்றொரு பெரிய மைல்கல்லைத் தாண்டியுள்ளது. அதாவது, இந்தியாவின் நகர்ப்புறத் தொலைத்தொடர்பு அடர்த்தி 100 சதவீதக் குறியீட்டைத் தாண்டியுள்ளது. தொலைத் தொடர்புத் துறை அண்மையில் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

எளிமையாகச் சொல்வது என்றால், அரசால் `நகர்ப்புறம்’ என்று வகைப்படுத்தப்பட்டுள்ள பிரிவில் அடங்கியுள்ள நகரங்கள், பெருநகரங்கள், மாநகரங்களில் அவற்றின் மக்கள்தொகைக்கு இணையான செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன.

கடந்த ஆண்டு மார்ச்சில் நாட்டின் நகர்ப்புறத் தொலைத்தொடர்பு அடர்த்தி ஏறக்குறைய 60 சதவீதமாக இருந்தது. அது இந்த ஆண்டு மார்ச்சில் 85 சதவீதத்துக்குத் தாவியது. தற்போது 100 சதவீத இலக்கைக் கடந்துள்ளது.

தொலைத் தொடர்புத் துறையில் நடக்கும் தீவிரமான போட்டி, இதுவரையிலான காலகட்டத்திலேயே மிகக் குறைவான கட்டணத்துக்கு வழிவகுத்துள்ளது. ஒரு நொடிக்கு அரை பைசா என்ற நிலைக்குக் கூட செல்போன் நிறுவனங்கள் வந்துவிட்டன. இதனால் சாதனை வளர்ச்சியாக சமீப காலமாக ஒவ்வொரு மாதமும் ஒன்றைக் கோடி செல்போன் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வந்துள்ளனர்.

இந்தியாவின் 50 கோடி செல்போன் பயன்பாட்டாளர்களில் 70 சதவீதம் பேர் நகர்ப்புறத்தினர். செல்போன் சேவை நிறுவனங்களுக்கு 75 சதவீத வருவாயை அளிப்பவர்களும் இவர்களே.

முக்கியமான விஷயம், கடந்த இரண்டு காலாண்டுகளாக கடுமையான கட்டணப் போட்டியால் மொத்த வருவாய், லாபம் குறைந்த செல்போன் நிறுவனங்கள் தற்போது நகர்ப்புற வளர்ச்சியைக் கிராமப்புறங்களில் எட்டுவதற்கு செலவழிக்கும் அளவை அதிகரிக்க வேண்டும். உண்மையில், இந்திய நகர்ப்புற தொலைத்தொடர்பு அடர்த்தி வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இருந்தபோதும், அது கிராமப்புறங்களில் 18 சதவீதமாகவே உள்ளது என்று தொலைத்தொடர்புத் துறைப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

“100 சதவீதத்துக்கு மேல் தொலைத்தொடர்பு அடர்த்தி என்பது உண்மையான வாடிக்கையாளர்கள் அல்ல. ஒன்றுக்கு மேற்பட்ட `சிம்கார்டு’ கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது. செல்போன் சேவை நிறுவனங்களுக்கு இடையிலான தீவிரமான போட்டி, `சிம்கார்டுகளின்’ எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது. எனவே நகர்ப்புறத்தில் செல்போன் பயன்பாடு சரியாகப் புள்ளிவிவர அளவுக்கு இருக்கிறது என்று கூற முடியாது” என்று ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் கோலி கூறுகிறார்.

செல்போன் சேவை நிறுவனங்களிடம் உள்ள தகவல்படி, ஒருவரிடம் ஒன்றுக்கு மேற்பட்ட `சிம்கார்டுகள்’ இல்லாவிட்டால், நகர்ப்புறத் தொலைத்தொடர்பு அடர்த்தி 80 சதவீதமாக இருக்கும் என்று மற்றொரு முன்னணி செல்போன் சேவை நிறுவன அதிகாரி தெரிவிக்கிறார்.

தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா அண்மையில் பாராளுமன்றத்துக்கு அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் நாட்டிலேயே அதிகபட்சமாக இமாச்சலப் பிரதேசத்தில்தான் தொலைத்தொடர்பு அடர்த்தி 219 சதவீதம் உள்ளது. தொடர்ந்து கேரளாவில் 156 , டெல்லியில் 154 , சென்னையில் 143 , மும்பையில் 125 , ஆந்திராவில் 121 , கர்நாடகாவில் 116 உள்ளது. ராஜஸ்தானிலும், பஞ்சாப்பிலும் ஏறக்குறைய 104 சதவீதமாக உள்ளது.

மற்றொரு செல்போன் சேவை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் கூறுகையில், அடுத்த இரண்டாண்டுகளில் நகர்ப்புறங்களில் சராசரி செல்போன் பயன்பாடு 140 சதவீதத்தை எட்டும் என்று கூறுகிறார். இப்பகுதியில் ஒவ்வொரு ஐந்தாவது நபரும் குறைந்த வருவாய்ப் பிரிவில் உள்ளனர். இங்கு தொடர்ந்து மிகவும் விருப்பத்துக்குரிய பொருளாக செல்போன் உள்ளது.

“பெருநகரங்கள் மற்றும் நகரங்களில் மக்கள்தொகை அதிகம் என்பதால் அங்கு தொடர்ந்து நல்ல வளர்ச்சி இருக்கும். நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வோர் எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் தொடர்ந்து அதிகரிக்கத்தான் போகிறது. அதை செல்போன் நிறுவனங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தவிர, தகவல் மற்றும் மதிப்புக் கூட்டு சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையும் மேலும் அதிகரிக்கும. காரணம் எல்லா நவீன வசதிகளும் கொண்ட செல்போன் தற்போது 3 ஆயிரத்து 500 ருபாய்க்கே கிடைக்கிறது” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.

ஆக, செல்போன் உபகரண விற்பனை அதிகரிப்பு, வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகரிப்பு, கட்டணக் குறைப்பு என்று தொலைத்தொடர்புத் துறையில் எல்லோருக்குமே மகிழ்ச்சியான செய்தி இருக்கு!

மீன் சாப்பிட்டால் சருமம் பளபளக்கும்


மீனில் காணப்படும் `ஓமேகா 3′ என்ற பொருள், நம் சரும செல்களை புதுப்பிப்பதோடு, சருமத்தை பளபளக்கவும் செய்கிறது. அதனால், வாரத்துக்கு 3 நாள் மீன் சாப்பிடுவது நல்லது. மீன் சாப்பிடாதவர்கள் மீன் மாத்திரை சாப்பிடலாம்.

சோயாபீன்சை வாரத்துக்கு 3 நாள் உணவில் சேர்த்துக்கொண்டால் சருமம் புதுப்பொலிவுடனும், ஈரப்பசையுடனும் இருக்கும். முகப்பருக்களும் வராது.

கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் சருமத்தை பொலிவுடன் வைக்கும். ஆரஞ்சு, பப்பாளி, பூசணி, மாம்பழம் சாப்பிட்டாலும் சருமம் பொலிவுடன் இருக்கும்.

சிலர் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவர்களது முகத்தில் ஏதோ ஒரு சோகம் இழையோடிக் காணப்படுவதுபோல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தினமும் அதிக அளவில் தண்ணீர் குடிப்பது நல்லது. அவ்வாறு தண்ணீர் குடித்து வந்தால் சருமம் புத்துணர்ச்சி பெற்று ஈரப்பசையுடன் இருக்கும். குறைந்தது ஒரு நாளுக்கு 3 லிட்டர் தண்ணீராவது குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடித்தாலும் தப்பில்லைதான்.

பூச்செடி வளருங்க! (ஆன்மிகம்) ஜன., 1 – ஆருத்ரா தரிசனம்!

நாம், இன்று கடையில் கிடைக்கிற பூக்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்கிறோம். ஆனால், வீட்டில் மலர்ச்செடிகளை வளர்த்தால், புத்தம் புதிய பூக்களால் இறைவனைப் பூஜிக்கலாம். புதிய பூக்களை இறைவன் விரும்புகிறார் என்பதற்கு, திருவாதிரை நாயகர் நடராஜரின் அருள்பெற்ற வியாக்ரபாதரின் கதையே சாட்சி.
சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார் மத்யந்தினர் என்ற முனிவர். இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அவருக்கு, “மாத்யந்தினர்’ என்று பெயர் சூட்டப்பட்டது. மாத்யந்தினருக்கு, ஞானமார்க்கத்தை அவரது தந்தை கற்றுக் கொடுத்தார். எப்படியேனும், தன் வாழ்நாளில் சிவதரிசனத்தை நேரில் பெற்று விட வேண்டும் என விரும்பினார் மாத்யந்தினர்.
இந்த ஆசை நிறைவேற, தில்லைவனத்திற்கு சென்று, அங்குள்ள சிவலிங்கத்திற்கு பூஜை செய்து வரும்படி வற்புறுத்தினார் அவரது தந்தை. மாத்யந்தினரும் தில்லை வனத்தைச் சிரமப்பட்டு வந்தடைந்தார். அந்தக் காட்டில் ஓரிடத்தில், சிவலிங்கம் ஒன்று ஒளி வீசிய நிலையில் இருந்தது. அந்த லிங்கமே தன் தந்தை குறிப்பிட்டதாக இருக்க வேண்டுமென கருதிய மாத்யந்தினர், அந்த லிங்கத்திற்கு, “திருமூலநாதர்’ என பெயர் சூட்டி வணங்கி வந்தார்.
அந்த லிங்கத்திற்கு, தினமும் அதிகாலையில் பூத்த புத்தம்புது பூக்களால் அவர் பூஜை செய்வது வழக்கம். இதற்காக காட்டிலுள்ள மரங்களில் பூக்கும் பூக்களை காலை 4.00 மணிக்கெல்லாம் பறித்து வந்தார். இருளில் கண் சரி வர தெரியாததால், அவர் பறிக்கும் பூக்களில் அழுகியவை, இதழ் உதிர்ந்தவை, பட்டுப்போனவை என மற்ற பூக்களும் கலந்து வந்தன. இது மாத்யந்தினர் மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
ஒருமுறை, கண்ணீருடன் இந்தக் குறையை இறைவனிடம் முறையிட்டார். தன் மேல் அவர் கொண்ட அன்பைக் கண்ட இறைவன், அசரீரியாக, “மகனே! நீ மரங்களின் உச்சிக்குச் சென்று நல்ல பூக்களை பறிக்கும் வகையில் பற்றி ஏறுவதற்கு புலி நகங்களை கையிலும், காலிலும் தருகிறேன். புலிக்கு இருளிலும் கண் நன்றாகத் தெரிவது போல, எவ்வளவு இருட்டாயினும் உன் கண் தெளிவாகத் தெரியச் செய்கிறேன்…’ என்றார்.
அதன்படியே விரல்களைப் பெற்ற மாத்யந்தினர், சிறந்த மலர்களைப் பறித்து சுவாமிக்கு பூஜை செய்தார். புலியை, “வியாக்ரம்’ என்பர். இதனால், இந்த முனிவருக்கு, “வியாக்ரபாத முனிவர்’ என்ற பெயர் ஏற்பட்டது.
தன் மீது கருணை கொண்ட முனிவரின் வம்சத்தையும் பெருமையடையச் செய்தார் சிவன். மாத்யந்தினருக்கு மனைவியாக வாய்த்தாள் வசிஷ்டரின் சகோதரி. அவர்களுக்கு உபமன்யு என்ற மகன் பிறந்தான். காட்டில் வசித்ததால், குழந்தையை வளர்க்க சிரமப்பட, சகோதரியை, தன் ஆஸ்ரமத்துக்கு அழைத்துச் சென்று, காமதேனுவின் பாலை புகட்டி வந்தார் வசிஷ்டர். தன் மனைவி, குழந்தையைப் பிரிந்திருக்க மாத்யந்தினருக்கு மனமில்லாததால் மீண்டும் தில்லைவனத்துக்கே அழைத்து வந்து விட்டார்.
காமதேனுவின் பாலை குடித்து வளர்ந்த குழந்தை, காட்டில் சமைத்த கஞ்சியைக் குடிக்க மறுத்து அழுதான். தன் பக்தனின் குழந்தைக்காக, தில்லைக் காட்டிற்கு பாற்கடலையே வரவழைத்து, குழந்தைக்கு புகட்டச் செய்தார் சிவன். அத்துடன், தன் திருநடனத்தையும் இந்தக் காட்டில் அவருக்கு காட்டியருளினார். அவர் நடனமாடிய நாள் மார்கழி திருவாதிரை நாளாகக் கருதப்படுகிறது. அந்த தில்லைவனமே இப்போது சிதம்பரம் எனப்படுகிறது.
புத்தம்புது மலர்களால் பூஜை செய்ததற்கு கிடைத்த பலனைப் பார்த்தீர்களா! எனவே, நாமும் வீட்டில் மலர்ச்செடிகளை வளர்த்து, புத்தம் புதுபூக்களால் இறைவனை பூஜிப்போம்.