விண்வெளியில் கிறிஸ்துமஸ்

எந்த வயதினரையும் குழந்தைபோல் மாற்றி விடும் விண்வெளி அதிசயங்கள். பார்க்கப் பார்க்க அழகு. சிந்திக்கச் சிந்திக்க பிரமாண்டம். சுற்றி வரும் நிலவு, மின்னிக் கொண்டிருக்கும் நட்சத்திரம் அனைத்தும் எல்லோருக்கும் வேடிக்கைதான். அதை கூர்ந்து பார்ப்பவர்களுக்கு இன்னும் மகிழ்ச்சிகூடும்.

சில நட்சத்திரங்கள் நேர் கோட்டில் அமைந்திருக்கும். சில நட்சத்திரங்கள் உங்களைப் பார்த்து கண்சிமிட்டும். ஒன்று மற்றொன்றை துரத்துவதுபோல் தோன்றும். இன்னும் சில சுற்றுவதுபோல் இருக்கும். திடீரென எரிந்து விழும் நட்சத்திரத்தையும் பார்க்கலாம். நகரும் மேகங்கள் உங்கள் ரசனையை தூண்டும்.

சாதாரண கண்களுக்கு இவ்வளவு காட்சிகளை விருந்தாக்கும் விண்வெளி, தொலைநோக்கி வழியாகப் பார்த்தால் இன்னும் பிரமிப்பையும், மகிழ்ச்சியையும் தரும். வெள்ளி போல விட்டுவிட்டு பிரகாசிக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் நீலம், மஞ்சள், காவி வண்ணங்களில் காணப்படும். எல்லா நிறமும் கலந்து குழப்பியதுபோலவும் வர்ணஜாலம் காட்டும்.

இப்படித் தோன்றும் அபூர்வ காட்சிகளில் ஒன்றுதான் விண்வெளியில் கண்ட கிறிஸ்துமஸ் விழாக்கோலம்.  ஹப்பிள் தொலைநோக்கியில் உள்ள ஒரு கேமரா படம்பிடித்த காட்சியில்தான் அது பதிவாகி இருந்தது.

இது ஒரு நட்சத்திரக்கூட்டமாகும். சூரியக்குடும்பத்தில் இருந்து சில மில்லியன் ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த நட்சத்திரக் கூட்டத்தின் ஒளிரும் தன்மை, அதைச் சுற்றி உள்ள தூசுப் படலம் ஆகியவை அலங்கார விளக்குகள் போலவும், அவற்றில் ஏற்பட்டுள்ள குழிந்த வளைவுகள் கிறிஸ்துமஸ் அலங்கார பைன் மரங்களைப் போலவும் அழகாக காட்சி அளிக்கிறது. இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு `ஆர் 136′ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

இவற்றில் சில நட்சத்திரங்கள் அழியும் நிலையில் உள்ளன. இது நட்சத்திரங்கள் எப்படி உருவாகின்றன என்பதை அறிய ஒரு தடயமாக அமைந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

%d bloggers like this: