இந்திய காப்பீட்டுச் சந்தையில் `ஆயுள் காப்பீட்டுக் கழகமே’ (எல்.ஐ.சி.) தொடர்ந்து ராஜாவாக விளங்கி வருகிறது.
எல்.ஐ.சி.யின் சந்தைப் பங்கு 65.26 சதவீதமாக உள்ளது. இது நடப்பு ஆண்டு ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் பிரீமியத் தொகையாக 30 ஆயிரத்து 471 கோடி ருபாய் திரட்டியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் எல்.ஐ.சி. திரட்டியது 21 ஆயிரத்து 874 கோடி ருபாய். இது மொத்தத்தில் 39.30 சதவீத வளர்ச்சி.
2009 அக்டோபர் வரையில் திரட்டப்பட்ட, சந்தைப் பங்கு அடிப்படையிலான புள்ளி விவரப்படி, எல்.ஐ.சி.க்குப் பிறகு இரண்டாவது இடத்தில் உள்ளது `எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ்’. இது குறிப்பிட்ட காலகட்டத்தில் பிரீமிய வருவாயாக 3 ஆயிரத்து 74 கோடி பாய் பெற்றுள்ளது. இதன் முந்தைய ஆண்டு வருவாய் 2 ஆயிரத்து 731 கோடி ருபாய். 6.58 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ள எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், 12.56 வளர்ச்சியைக் கண்டுள்ளது. முன்றாமிடம் பெறுவது `ஐசிஐசிஐ புருடென்ஷியல்’. குறிப்பிட்ட ஆய்வுக் காலத்தில் இதன் பிரீமிய வருவாய் 2 ஆயிரத்து 588 கோடி ருபாய் ஆகும். இதன் கடந்த ஆண்டு கால வருவாய் 3 ஆயிரத்து 870 கோடி பாயாக இருந்தது. 5.54 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ள இந்நிறுவனம், 33.14 எதிர்மறை வளர்ச்சியை எட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆய்வுக் காலத்தில் `பஜாஜ் அலயான்ஸ்’ நிறுவனத்தின் மொத்த பிரீமிய வருவாய் ஆயிரத்து 752 கோடி ருபாய். இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டு வருவாய் 2 ஆயிரத்து 360 கோடி ருபாய். இந்நிறுவனத்தின் சந்தைப் பங்கு 3.75 . இந்நிறுவனம் -25.76 எதிர்மறை வளர்ச்சியை அடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேநேரம் காப்பீட்டுச் சந்தைக்குப் புதிதாக வந்துள்ள நிறுவனங்கள் ஊக்க முட்டும் வளர்ச்சியை எட்டியிருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உதாரணத்துக்கு `கனரா எச்எஸ்பிசி ஓபிசி’, குறிப்பிட்ட காலகட்டத்தில் 333.92 கோடி பிரீமிய வருவாயுடன் 254.58 என்ற சாதகமான வளர்ச்சியை அடைந்துள்ளது. இந்நிறுவனத்தின் கடந்த ஆண்டு பிரீமிய வருவாய் 94.17 கோடி ருபாயாகத்தான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. `பியூச்சர் ஜெனரலி’ நிறுவனமும் பெரும் வளர்ச்சியைக் காட்டியுள்ளது. இது வெறும் 19.53 கோடி ருபாயிலிருந்து 184.81 கோடி ருபாய்க்கு வளர்ச்சி கண்டுள்ளது.
அரசுத் துறை நிறுவனமான எல்.ஐ.சி.யின் சிறப்பான செயல்பாட்டுக்கு தனது ஆயுள் காப்பீட்டுத் தொழிலுக்கு கள அலுவலர்களாகவும், முகவர்களாகவும் மனித சக்தியை அதிகம் சேர்த்தது, ஜீவன் சரள், ஜீவன் நிஷ்சய் என்பதை போன்ற புதிய திட்டங்களை அறிமுகம் செய்தது போன்றவை முக்கியக் காரணம் என்று எல்.ஐ.சி. உயர் வட்டாரம் தெரிவிக்கிறது. மற்றொரு முக்கியக் காரணம், இறப்பு `கிளெய்முக்கு’ சரியான உடனடி நிவாரணம் அளிப்பு. அது தற்போது 98.75 -ஆக உள்ளது என்றும் அந்த வட்டாரம் கூறுகிறது.