Monthly Archives: ஜனவரி, 2010

‘நோ பேன்ட் டே!’ -பேன்ட் இல்லாமல் பயணம்

நீங்கள் எப்போதாவது வெளிநாட்டுக்கு போனால், அங்கு ரயில்களில், பொது இடங்களில் பேன்ட் இல்லாமல், மேல் சட்டை, ஷூ மட்டுமே அணிந்து ஆண்களும், பெண்களும் செல்கின்றனர் என்றால் பயந்து விடாதீர்கள். அன்றைய தினம்,”நோ பேன்ட் டே’யாக இருக்கலாம்.
எல்லா நாளும் உர்ர்ர்…என்று இருந்தாலும், சிரிப்பே சிந்தாமல் இருந்தாலும், அன்று ஒரு நாளாவது சந்தோஷத்தை முழுமையாக பகிர்ந்து கொள்ளவே இந்த நாளை அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கொண்டாடுகின்றன.
மேற்கத்திய பணக்கார நாடுகளில் சில விசித்திரமான, “நாள்’களும் கொண்டாடப் படுகின்றன. வெறும் குஷிக்காக மட்டுமே கொண்டாடப்படும் நாட்களில் ஒன்று தான் இந்த, ” நோ பேன்ட் டே!’ பணக்கார நாடுகளின் தீபாவளி என்று கூட சொல்லலாம். அன்று விடுமுறை விடப்படுகிறது.
விமான, ரயில், பஸ் நிலையங்கள், பாதாள ரயில் நிலையம், பூங்காக்கள், மைதானங்களில்… இப்படி பொது இடங்களில், “நோ பேன்ட் டே’ விழா கொண்டாடப்படுகிறது. இதற்காக பல அமைப்புகள் விழாக்களுக்கு ஏற்பாடு செய்கின்றன. அதுபோல, ஓட்டல்களும், சுற்றுலா நிறுவனங்களும், “ஈவன்ட்’ மேலாண்மை நிறுவனங்களும், “தண்ணி’ பார்ட்டி உட்பட எல்லா வித கேளிக்கைகளுக்கும் ஏற்பாடு செய்கின்றன. ஆனால், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று யாரும், பேன்ட் அணியவே கூடாதுங்கோ.
கடந்த, 1986 ல் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆரம்பித்த இந்த, “நோ பேன்ட் டே’ ஆப்ரிக்க நாடுகள் வரை பரவிவிட்டது. மே மாதம் முதல் சனிக்கிழமையில் தான் இந்த நாள் முதன் முதலில் கடைபிடிக்கப்பட்டது. ஆனால், போகப்போக, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் தங்களுக்கு வசதியான நாளில் கொண்டாடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டனர். இந்த, “நோ பேன்ட் டே’யின் தொடர்ச்சியாக உருவாக்கப்பட்டது தான், “நோ பேன்ட் சப்வே ரைடு’ என்ற நாள். இதுவும் முதன் முதலில் நியூயார்க் நகரில் ஆரம்பித்தது; இப்போது பிரிட்டன், சுவீடன் உட்பட பல பணக்கார நாடுகளில் பெரும்பாலும் இளைஞர் திருவிழாவாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில், “பாதாள ரயில்களில் பேன்ட் இல்லாமல் பயணம் செய்ய வேண்டும்; இதற்காக, பல அமைப்புகள் விருந்துகள், கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்கின்றன. அன்று, குறிப்பிட்ட பாதாள ரயில் நிலையத்தில், காதல் ஜோடிகள் குவிகின்றன; சிலர் குடும்பம், குடும்பமாகவும் குவிந்து விடுகின்றனர்.
பாதாள ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தவுடன், பாதாள ரயிலில் ஏறிக்கொள்வர். ஏறியவுடன், ஒரு அலாரம் அடிக்கும். அப்போது, எல்லாரும் பேன்ட்டை அவிழ்த்து விட வேண்டும். ஆண்களும் சரி, பெண்களும் சரி, கால் சட்டையை கழற்றி விட்டு ஆடலாம்; பாடலாம்; கும்மாளம் அடிக்கலாம். ரயிலில் ஒரே குஷி கோஷம் தான்.
ஒரு பக்கம் இசைக்கருவிகளுடன், வித, விதமான டிசைன்களில் தலைமுடியை கத்தரித்துக் கொண்டு இளைஞர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருப்பர்; இன்னொரு பக்கம், வயதானவர்கள், பேன்ட்டை கழற்றி விட்டு, “பெக்’ அடித்தபடி உட்கார்ந்திருப்பர். வழக்கமாக, பணக்கார நாடுகளில் பாதாள ரயில்களில் கூட்டமே இருக்காது; ஆனால், அன்று மட்டும் இரவு வரை இப்படி கூட்டம் குவிந்திருக்கும்.
“இந்த சந்தோஷம் மற்ற நாட்களிலும் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த, “நோ பேன்ட் டே’யை கொண்டாடுகிறோம். இதுவரை எட்டாண்டுகள் கடந்துவிட்டன. நாங்கள், காதலர்களாக இருந்த போதே இதில் பங்கேற்று வருகிறோம்!’ என்று கால் சட்டை இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்த ஒரு ஜோடி கூறியது.
“நல்ல நோக்கத்துக்கு தான் இந்த விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இப்போ தெல்லாம் எய்ட்ஸ் உட்பட தொற்று நோய் பரவுவது பொது இடங்களில்தான்; அதனால் தான், இப்போதெல்லாம் நான் பங்கேற்பதை விட்டுவிட்டேன்…’ என்றும் இளைஞனாக இருந்து நடுத்தர வயதுக்கு வந்து, மருத்துவ ஆராய்ச்சியாளராக இருக்கும் மாட் ஜெர்னட் கூறினார்.
காதலர் தினம் போல, இந்த கண்றாவி கொண்டாட்டமும், இந்தியாவுக்குள் வந்தாலும் வந்துவிடும். எதற்கும் தயாராக இருந்து கொள்ளுங்கள்.

வந்துவிட்டது செயற்கை கணையம்!

குழந்தைப்பருவத்தில் வரும் சர்க்கரை நோயை “டயபடீஸ் டைப் 1 என்பர். பெரியவர்களுக்கு ஏற்படும் “டயபடீஸ் டைப் 2′ ஐ விட இது மோசமானது.
இந்தியாவில், சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்ட பெரியவர்களைவிட, குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் வருவது அடுத்த 15 ஆண்டில் பல மடங்கு அதிகரித்துவிடும்; உலகிலேயே இந்தியாவில் தான் சர்க்கரை நோய் பாதித்த குழந்தைகள் அதிகம் என்று சர்வதேச சர்வே ஒன்று இப்போதே எச்சரித்துள்ளது.
நம் உடலில், நரம்புகள், தசைகள், ரத்த ஓட்டம், எலும்புகள் செயல்பட, முக்கிய உறுப்புகள் இயங்க, எரிசக்தி முக்கியம். உணவுப் பொருட்களில் இருந்து எரிசக்தி கிடைக்கிறது. இந்த எரிசக்தி குறைவாக இருந் தாலும், அதிகமாக இருந் தாலும் ஆபத்து தான். இந்த எரிசக்தி தான் சர்க்கரை என்று சொல்லப்படுகிறது. சத்துள்ள உணவை சாப்பிடாவிட்டால், சக்தி குறைந்துவிடும்; அப்போது, உடலில் ரத்தசோகை உட்பட சில கோளாறுகள் வரும்.
எரிசக்தி அதிகமாகி விட்டால், அதை கட்டுப்படுத்துகிறது இன்சுலின் சுரப்பி. உடலில் இரைப்பை எனப்படும் கணையத்தில் இன்சுலின் சுரப்பி உள்ளது. நாம் சாப்பிட்டவுடன், இந்த சுரப்பி இயங்கி, சர்க்கரையை தேவைக்கு பயன்படுத்தி, அதை பிரித்து உடலில் முக்கிய உறுப்புகளுக்கும், ரத்தத்துக்கும் அனுப்புகிறது; அதிகமாக உள்ள சர்க்கரையை கழிவாக வெளியேற்றுகிறது. இப்படி ஆக்கலும், அழித் தலுமான பணிகளை செய்யும் இன்சுலின் சுரப்பியில் கோளாறு ஏற்பட்டால் சிக்கல் தானே… அப்போது, சர்க்கரை அளவில் பாதிப்பு ஏற்பட்டு சர்க்கரை நோய் ஏற்படுகிறது.
டயபடீஸ் டைப் 1 என்பது, கணையத்தில் உள்ள இன்சுலின் சுரப்பி அறவே வேலை செய்யாத நிலையில் ஏற்படும் சர்க்கரை நோய். குழந்தைகளுக்கு தான் இது வரும்; அதனால், 24 மணி நேரமும் குழந்தைகளை கண்காணித்த படியே இருக்க வேண்டும்;
ஒரு பக்கம் கண்காணித்து,இன்னொரு பக்கம், தேவைப்பட்டால் இன்சுலின் மருந்து செலுத்த வேண்டும்.
இதை தடுக்கவே, “ஜுவனைல் டயபடீஸ் ரிசர்ச் பவுண்டேஷன்’ பல ஆய்வுகளை செய்து வருகிறது. அதன் வளர்ச்சி தான், செயற்கை கணையம் உருவாக்கும் திட்டம். இந்த திட்டத்தில், ஜான்சன் – ஜான்சன் கம்பெனியின் துணை நிறுவன மான அனிமாசும் ஈடு பட்டுள்ளது.
டயபடீஸ் பம்ப், ஊசி உட்பட உபகரணங்களை இந்த நிறுவனம் தயாரித்து விற்கிறது. செயற்கை கணையத்தை உருவாக்கும் ஆராய்ச்சிகளை பவுண்டேஷன் விஞ்ஞானிகள் செய்து சில முடிவுகளை எடுப்பர். அதன் அடிப் படையில், செயற்கை சாதனத்தை அனிமாஸ் நிறுவனம் தயாரிக்கும்.
குழந்தைகளுக்கு சர்க்கரை அளவை கண்காணிக்க செயற்கை சாதனம் உள்ளது; அதுபோல, இன்சுலின் செலுத்தும் சாதனமும் உள்ளது. ஆனால், இரண்டும் தனித்தனியாகத்தான் செயல்படும். இதை கண்காணித்து, உடலில் செலுத்திக்கொள்ளும் வகையில் தானியங்கி சாப்ட்வேர் சாதன இணைப்பு தரப்பட்டால், செயற்கை கணையம் முழு வெற்றி பெறும். ஆராய்ச்சி திட்டத்தின் நோக்கம் இது தான்.
அடுத்த மூன்றாண்டில் இந்த திட்டம் முழு பலன் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, குழந்தைகளுக்கு டயபடீஸ் டைப் 1 பிரச்னை தீர வழி பிறக்கும்.

ஒட்டக பால், கவுதாரி, வேப்ப மரம் – தினம் ஒரு ஆடு பலி : ராணுவத்திடம் தப்ப சர்தாரியின் நம்பிக்கை

:ஒட்டகப் பால் தான் குடிக்கிறார்; கறுப்பு கவுதாரி வளர்க்கிறார்; வீட் டைச் சுற்றிலும் வேப்பமரம் வளர்க்கிறார்; யார் இப் படியெல்லாம் செய் றாங்க…? நீங்கள் கேட்பது புரிகிறது.ராணுவத்தின் பிடியிலிருந்து தப்பவும் கெட்ட சக்திகள் அணுகாமல் இருக்கவும் பாகிஸ்தான் அதிபர் சர்தாரிதான் இது மட்டுமல்ல, தினம் ஒரு ஆடு பலி கொடுத்தும் வருகிறார்.

பர்வேஸ் முஷாரப்புக்கும் சர்தாரிக்கும் இடையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால், சர்தாரி மீதான வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன. பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட் பொது மன்னிப்பு அளித்து விட்டது. இருந்தாலும், எந்தநேரத்திலும் ராணுவத்தால் தனக்கு ஆபத்து இருப்பதை சர்தாரி உணர்ந்திருக்கிறார்.இதனால், “கெட்ட சக்திகள் தன்னைப் பலி கொண்டுவிடாமல் இருக்க சில விசித்திரமான காரியங்களைச் செய்து வருகிறார்’ என்று பாகிஸ்தானிலிருந்து வரும் “டான்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு சர்தாரி தரப்பிலிருந்து இதுவரை மறுப்பு எதுவும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சர்தாரி தான் பதவியேற்ற 2008லிருந்து தினமும் ஒரு கறுப்பு ஆட்டைப் பலியிட்டு வருகிறார். ஒட்டகம் மற்றும் ஆட்டுப் பால்தான் அருந்துகிறார். மறந்தும் மாட்டுப் பால் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை. ஒரு ஒட்டகம், ஒரு பசுமாடு, சில ஆடுகள் இவை அதிபர் மாளிகையில் ராஜ உபசாரத்தில் வாழ்கின்றன. இவைதான் சர்தாரிக்குப் பால் கொடுப்பவை.கறுப்பு கவுதாரி ஒன்றை வளர்த்து வருகிறார். அது இருக்கும் இடத்தில் நல்ல காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையால் அதை வளர்க்கிறார். தனது மாளிகையில் கிருமிநாசினியான வேப்பமரத்தை வளர்க்கிறார்.

அதிபர் மாளிகைச் செய்தித் தொடர்பாளர் பர்கத்துல்லா பாபர் இது குறித்துக் கூறுகையில், “சர்தாரி இதுபோன்ற காரியங்களை ஆரம்ப காலத்திலிருந்தே செய்து வருகிறார்’ என்றார்.

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்

சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு (வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ.

1. தானியங்கள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதில் சில கட்டுப்பாடுகள் இருக்கும். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொண்டு செய்யுங்கள்.

2. எண்ணெய், வெண்ணெய், நெய், கிரீம், மிருகக் கொழுப்பு அதிகம் உள்ள ஆட்டைறைச்சி, மாட்டிறைச்சி, ஈரல் முதலான உறுப்பு இறைச்சிகள் ஆகியவற்றைத் தவிர்க்கவும்.

3. உங்கள் உணவில் பூண்டிற்கு முதல் இடம் கொடுங்கள்.

4. பீட்டா கரோட்டின், ஆன்டி ஆக்கிசிடன்ட் அதிகமுள்ள காரட், ப்ரோக்கோலி, மக்காச் சோளம் ஆகியவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

5. பொதுவாகவே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒன்றே கால் கரண்டி உப்பு போதும். கடுமையான சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் சிறுநீரக மருத்துவரின் அறிவுரைப்படி இன்னும் கூட உப்பைக் குறைக்க வேண்டி இருக்கும்.

6. நேரத்திற்குச் சாப்பிடுங்கள்.

7. ஒரு நாளைக்கு 21/2 முதல் 3 லிட்டர் நீர் அருந்துங்கள். சில வகை சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு குடிக்க அனுமதிக்கப்பட்ட நீரின் அளவு குறைவாக இருக்கலாம். உங்கள் சிறுநீரக மருத்துவரைக் கலந்து கொள்ளுங்கள்.

8. பச்சைத் தேயிலை (கிரீன் டீ- Green Tea) இதயத்திற்கு நல்லது

9. தினமும் உடற்பயிற்சி (குறைந்தது 30 நிமிட நடைப்பயிற்சி) அவசியம்.

10. வீட்டு வேலைகளை நாமே செய்தல், லிப்டை பயன்படுத்தாமல் மாடிப்படிகளில் ஏறுதல் போன்றவை மறைமுக உடற்பயிற்சியாகும்.

11. எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

12. புகைப் பிடிப்பதை (நீங்களும் உங்கள் அருகில் இருப்பவரும்) தடை செய்யுங்கள்.

13. மதுபானங்களா! வேண்டவே வேண்டாம்.

14. நேரத்திற்கு தூங்குங்கள்.

15. இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

16. இரத்தத்தில் கெட்ட கொழுப்புக்களை (பேட்-கொலஸ்டிரால் – Bad
Cholesterol) கட்டுப்பாடட்டில் வைக்க தேவையான உணவுப் பழக்கங்கள், மருந்துகள், உடற்பயிற்சிகளை தவறாமல் பின்பற்றுங்கள்.

17. வேலை நேரத்தில் சரியாக் கணக்கிட்டுச் செய்து சரியான நேரத்தில் தூங்கி டென்ஸன் ஆகாமல் இருங்கள்.

18. மன அழுத்தத்தைக் குறைக்கும் யோகா, தியானம் ஆகியவற்றைச் செய்வது நல்லது.

19. சிரித்துப் பழகி இசை கேட்டு மகிழ்ந்து சந்தோஷமாக இருப்பதை விட இதயத்திற்கு நல்ல மருந்து கிடையாது.

20. வருடத்திற்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்வது நல்லது.

21. சர்க்கரை நோய் பல நோய்களுக்கு அடிப்படை. உங்களுக்கு சர்க்கரை இருந்தால் நன்கு கட்டுப்பாட்டில் வைத்திருங்கள்.

22. இரத்தத்தில் நல்ல கொழுப்பை அதிகரிக்கும் சோள எண்ணெய், ஆலிš எண்ணெய் ஆகியவற்றையும் இதயத்திற்கு இதமான ஓமேகா கொழுப்பு அடங்கிய ஆழ்கடல் மீன்கள், பாதம் பருப்பு, பிஸ்தா பருப்பு ஆகியவற்றையும் தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.

23. நாள்பட்ட வியாதிகளான சிறுநீரக நோய், சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை தவறாமல் பின்பற்றுவது அவசியம். தொடர் மருத்துவக் கண்காணிப்பு மூலம் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

24. பிசியான வாழ்க்கையிலும் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நேரம் ஒதுக்குங்கள். இடையிடையே சுற்றுலா என்று உங்களை அவ்வப்போது ரீ-சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.

25. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக மருத்துவர் சொல்லியிருந்தால் ஆஸ்பிரின் மாத்திரை எடுத்துக் கொள்ளுங்கள்.

டிப்ஸ்… டிப்ஸ்… 30.1.2010

அகர வரிசைப்படி புரோகிராம்கள்
நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்துள்ள புரோகிராம் களுக்கு ஐகான்களை திரையில் அமைத்து கிளிக் செய்து இயக்குகிறோம். ஆனால் சில புரோகிராம்களை இயக்க Start>All Programs சென்று குறிப்பிட்ட புரோகிராமினைப் பட்டியலில் தேடி கிளிக் செய்கிறோம். இந்த புரோகிராம்கள் எழுத்து வரிசைப்படி இருப்பதால் நம் தேடும் வேலை எளிதாகிறது. ஆனால் புதிய புரோகிராம்களை நாம் இன்ஸ்டால் செய்வதால் அவை லிஸ்ட்டின் பின்புறம் ஒட்டிக் கொள்கின்றன. நம் தேடும் பணி கடினமாகிறது. அவற்றையும் அகர வரிசைப்படி அடுக்கினால் வேலை எளிதாகும் அல்லவா? அதற்கு பட்டியலிடப்பட்டுள்ள புரோகிராம்களில் ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Sort by Names என்பதில் ஒரு முறை கிளிக் செய்திடவும். அனைத்து புரோகிராம்களும் அகர வரிசைப்படுத்தப்படும். பின் நம் வேலையும் எளிதாகும்.

வேர்ட்: சில வழிகள்

உடனடியாக ஒரு டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் சோதனை மேற்கொள்ள எப்7 அழுத்தவும். ஹைபன் பயன்படுத்திய சொற்கள் பிரியாமல் இருக்க வேண்டும் என்றால் ஹைபன் டைப் செய்திடுகையில் கண்ட்ரோல் +ஷிப்ட் கீகளை அழுத்திக் கொள்ளுங்கள். குறிப்பிட்ட இரண்டு சொற்கள் வரி ஓரங்களில் பிரியாமல் அமைய வேண்டும் என்றால் கண்ட்ரோல்+ஷிப்ட்+ஸ்பேஸ் பயன்படுத்துங்கள்.
குறுக்கே வரும் மவுஸ் கர்சரை ஒதுக்க : மவுஸ் கர்சர் நமக்குப் பல வழிகளில் உதவிடும் ஒரு சாதனமாகும். ஆனால் வேக வேகமாக டைப் செய்பவர்களுக்கு அது ஒரு தொல்லை தரும் இடமாகும். இதை ஒதுக்க முடியவில்லையே என அவர்கள் ஆதங்கப்படலாம். அதனை ஒதுக்கவும் வழி உள்ளது. Start, Settings, Control Panel எனச் செல்லவும். பின் Mouse என்று உள்ள ஐகானில் இருமுறை கிளிக் செய்திடவும். இப்போது மவுஸ் பிராபர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இதில் உள்ள ஐந்து டேப்களில் Pointer Options என்று ஒரு டேப் நடுநாயகமாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் உள்ள மூன்று பிரிவுகளில் மூன்றாவதில் நடுவில் Hide Pointer While Typing என இருக்கும். இதில் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை மேற்கொள்ளவும். பின் அப்ளை, அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி நீங்கள் டைப் அடிக்கையில் மவுஸ் கர்சர் குறுக்கே வராது.
ஐகான் பட்டன்கள் எதற்காக?
வேர்டில் மெனு பாரினை ஒட்டி நிறைய பட்டன்கள் உள்ளன. இந்த பட்டன்களின் பெயர்கள் என்னவென்று தெரியவில்லை. சிறிய ஐகான்களாகத் தோற்றமளிக்கின்றன. பெயர் தெரிய வேண்டுமா? உடனே மவுஸின் கர்சரை இந்த பட்டன் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் தெரியும்.
பைலை அறவே நீக்கிட ஒரு பைலை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனை அழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.
மார்ஜின் மாற்ற
டாகுமென்ட் அமைக்க காலி பக்கம் ஒன்றைத் திறந்தவுடன் அதில் தரப்பட்டிருக்கும் மார்ஜின் உங்களுக்குப் பிடிக்கவில்லையா? அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் File மெனுவில்Page Setup செல்லவும். அங்கு Margins டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மார்ஜின் வெளியைக் கூட்டவும் குறைக்கவும் வசதிகள் தரப்பட்டிருக்கும். மாற்றிக்கொள்ளலாம். காலியாக இருக்கும்போதுதான் மாற்ற வேண்டும் என்பதில்லை. டாகுமெண்ட் உருவானபின்னும் மேலே சொன்ன வழியில் மாற்றலாம். மாற்றுவதற்கேற்ப உங்கள் டாகுமெண்ட் தோற்றமும் மாறும்.

விரும்பிய வகையில் கலரில் பார்டர் அமைக்க:
வேர்ட் டேபிளில் விரும்பிய கலரிலும் வகையிலும் பார்டர்களை அமைக்கலாம். Tables and Borders மெனுவினைத் திரையில் பெறவும். இதற்கு View மெனுவிலிருந்து Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் துணை மெனுவில் Tables and Borders என்பதைத் தேர்ந்தெடுத்தால் இந்த மெனு திரைக்கு வரும். லைன் ஸ்டைல் என்ற பீல்டில் கிடைக்கும் ட்ராப் டவுண் லிஸ்ட்டில் உங்களுக்குப் பிடித்த பார்டர் Line Style ஐத் தேர்ந்தெடுக்கவும். பார்டருக்கான கலர் தேர்ந்தெடுக்க Border Color என்பதில் கிளிக் செய்திடவும். இனி Draw Table என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் பென்சில் போன்ற கர்சரின் துணை கொண்டு நீங்கள் விரும்பிய பார்டர் லைனை தேர்ந்தெடுத்த வண்ணத்தில் அமைக்கலாம். மேலே கூறிய வழிகளை மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுத்து டேபிளில் பார்டர்களை அமைக்கலாம்.

இளைய தலைமுறைக்கு..!

-சிறிய விஷயங்களுக்குக் கூட நீங்கள் டென்ஷன் ஆகிறீர்களா?

– பிரச்சினையை சமாளிக்கத் தெரியாமல் அடிக்கடி சத்தம் போடுகிறீர்களா?

– எதற்கெடுத்தாலும் முக்கு நுனியில் கோபத்தை கொண்டு வருகிறீர்களா?’

இத்தனைக்கும் ஆம் என்றால் முதலில் அவற்றை கைவிட முயற்சிங்கள். இல்லாவிட்டால் இளம் வயதில்கூட `ஹார்ட் அட்டாக்’ வரும் அபாயம் உள்ளது.

ஆத்திரபடும் போது `ஸ்ட்ரெஸ்’ அதிகமாகி ரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. அட்ரினலின் சுரப்பி அதிக வேலை செய்கிறது. அதனால் இதய தசைகளுக்கு அதிக ஆக்ஸிஜன் தேவைபடுகிறது. அப்படி கிடைக்காதபோது `ப்ளேட்லெட்ஸ்’ என்ற பிசுபிசுப்பான திரவம் சுரந்து, ரத்தக்குழாய்களில் படிந்து, அதில் அடைப்பை ஏற்படுத்துகிறது. அடைப்பு ஏற்படுவதால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அஞ்சைனா என்ற மார்பு வலி, ரத்தக் குழாயில் 70 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை அடைப்பு ஏற்பட்டால் வரும்.

உணவு மற்றும் பழக்க வழக்க முரண்பாடே இதய பாதிப்பிற்கு அடிபடை காரணியாக இருக்கிறது. ஆனாலும், மன அழுத்தம் ஆகும்போதுதான் அதிக பாதிப்பு இதயத்தில் ஏற்படுகிறது. கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ரத்த அழுத்தம் ஏற்படுபவர்களைவிட ஆத்திரம் மற்றும் டென்ஷன் அடைபவர்களுக்குத் தான் மன அழுத்தம் அதிகம். மற்ற இதயநோயாளிகளை விட `டென்ஷன்

பார்ட்டிகளை’ நான்கு மடங்கு அதிகமாக இதயநோய் தாக்கும். அமைதியாக செயல்படுபவர்களுக்கு பொதுவாகவே எந்த உடல் பாதிப்பும் வருவதில்லை. அவர்களின் உணவு, பழக்க வழக்கங்களில் மாற்றம் இருந்தால் மட்டுமே பாதிப்பு ஏற்படும். ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவோருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, பல நோய்களுக்கு அது திறவுகோலாகிறது. இளைய தலைமுறையினருக்கு அதிகளவில் இப்போது மன அழுத்தம் ஏற்படுவதாக தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இளந்தலைமுறையினர் மன அழுத்தத்தை தவிர்த்து மகிழ்ச்சிடன் வாழ முன்வர வேண்டும்.

சாப்பிட்டு முடித்தவுடன் … செய்ய வேண்டியது

சாப்பிட்டு முடித்தவுடன் நிறைய நீரைக் குடித்து, சுத்தமான நீரால் நன்கு கொப்பளித்துச் சுத்தம் செய்ய வேண்டும். இல்லையேல் பற்சிதைவும் பல்வேறு தொந்தரவுகளும் வரும். இது எல்லோருக்கும் தெரிந்ததுதான். பலருக்குத் தெரியாத ஒன்றும் உண்ணு. உணவு நம் நாக்கில் பட்டதும், நாவில் உள்ள “சுவை அரும்புகள்” உணவை ஜீரணிக்கத் தேவையான செரிமானப்பொருளை சுரக்கும்படி ஜீரண உறுப்புக்களுக்குத் தகவல்களை அனுப்புகின்றன. வாயைச் சரியாகச் சுத்தம் செய்யாவிடில், இவை தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டே இருக்கும். இதனால் தேவையில்லாமல் செரிமானப் பொருள் சுரந்துகொண்டே இருக்கும். ஜீரண சக்தியும் வீணாகும். செரிமான உறுப்புக்களின் நலனும் கெடும்.

ஆரோக்கிய `டயட்’ டிப்ஸ்

உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்க டயட்டில் இருப்பவர்கள் இன்று நிறையபேர் உள்ளனர். உணவைக் குறைத்து உடலை அழகாக்க போகிறோம் என்ற தாரக மந்திரத்தை பின்பற்றும் இவர்களில் பலர் பட்டினி கிடந்து உடல் இளைத்துப்போவதும் உண்டு.

இப்படிப்பட்டவர்கள் ஆரோக்கியமான டயட் முறையை பின்பற்ற சில டிப்ஸ் : தினமும் ஏதாவது ஒரு பழ ஜூஸ் குடியுங்கள். நீங்கள் குடிக்கும் பழ ஜூஸ் அப்போது தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். அதில் சர்க்கரை மற்றும் ஐஸ் சேர்க்காமல் சாப்பிடவும். சர்க்கரை சேர்த்தால் பழத்தின் முழு சத்தும் குறைந்து விடும். எண்ணெய் அதிகம் சேர்த்து தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள். முடிந்தவரை காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளவும். வேக வைத்த பயிறு வகைகள், தானியங்கள், காய்கறிகள் உங்கள் உணவு பட்டியலில் முதலிடம் பிடிக்கட்டும். இட்லி, இடியாப்பம், ஆப்பம், புட்டு போன்ற வேகவைத்த உணவுகளை அளவோடு சாப்பிடவும். உண்ணும் உணவில் அதிக காரம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்காக சேர்க்கும் பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகு சேர்ப்பது நல்லது. மாலை வேலையில் கண்ட கண்ட நொறுக்கு தீனிகளை வாயில் போட்டு நொறுக்காமல், வேக வைத்த தானிய வகைகள், சுண்டல் ஆகியவற்றை சாப்பிடவும். அவ்வப்போது, பல வகை பழங்களை கொண்டு செய்யப்பட்ட சாலட் சாப்பிடுவதும் நல்லதுதான். புளிப்பான உணவுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்ளவும். அதுக்கு பதில் தக்காளி சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுடிதார் அணிந்தால் சொர்க்கமே…!

இன்றைய பெண்கள் காலமாற்றத்துக்கு ஏற்ப விதவிதமான ஆடைகளை அணிந்து கொண்டு வலம் வருகின்றனர். வாய்க்குள் நுழையாத பெயர்கள் எல்லாம் ஆடைகளுக்கு சூட்டபட்டு அணிந்து கொள்ளபடுகின்றன. காரணம், ஆடைகளின் வடிவமைப்பில் மட்டுமின்றி, பெயர்களிலும் வித்தியாசத்தை எதிர்பார்க்கின்றனர் இளைய தலைமுறையினர். சேலை, சுடிதார், ஜீன்ஸ், குர்தா, மிடி, டாஸ், சோளி என விதவிதமான ஆடைகள் இருந்தாலும், பெண்கள் அதிகமாக விரும்புவதும், அவர்கள் அழகை நன்றாக வெளிக்காட்டுவதும் சேலை, சுடிதார் அல்லது சல்வார் கமீஸ், சோளி போன்றவைகள்தான்.

சேலை

ஒரு நீளமான உடை. தைக்க வேண்டிய அவசியமில்லை. விதவிதமான வகைகளில், வண்ணங்களில் கிடைக்கின்றன. இன்னார்தான் அணிய வேண்டும் என்ற வரைமுறை ஏதும் இல்லாமல், எல்லாரும் அணிந்து கொள்ளலாம். மெல்லிய உடல்வாகு கொண்டவர்கள், உடல் பருமனானவர்கள் என வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் பொருந்தி போகும் இயல்புடையது. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் பாரம்பரிய ஆடை. இப்படி எல்லா புகழுக்கும் உரித்தான ஒரே ஆடை வகை சேலை மட்டுமே.

மென்மைத்தன்மை கொண்டது. எளிதாக துவைத்து பயன்படுத்தலாம். அணிந்து கொள்பவருக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது. திருமணமான பெண்களுக்கும், வயதான பெண்களுக்கும் ஏற்றது. வீட்டில் இருக்கும்போது அணிந்து கொள்ள, அலுவலகம் செல்லும்போது உடுத்திக் கொள்ள, விழாக்கள், திருமணம் மற்றும் பார்ட்டிகளுக்குச் செல்லும்போது அணிந்து கொள்ள என செல்ல வேண்டிய இடத்தை பொறுத்து வகைவகையான சேலைகள் உள்ளன.

பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு 100 ருபாயிலிருந்து லட்ச ருபாய் வரை சேலைகள் கிடைக்கின்றன. குழந்தைகளுக்குத் தொட்டில் கட்டுவது முதல் அவசரத்திற்கு போர்த்திக் கொண்டு தூங்குவது வரை இப்படி சேலைகளின் பயனை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். இதனால்தான் இன்றளவும் சேலையின் மவுசு குறையாமல் கூடிக்கொண்டே போகிறது.

காட்டன், ஷிப்பான், பாலியஸ்டர், பட்டு, ஜார்ஜெட், பஷ்மினா என பலவிதமான துணிகளில் சேலைகள் நெய்யபடுகின்றன. அதிகமான வண்ணங்களைக் கொண்டு சேலைகள் தயாரிக்கபட்டாலும், சிவப்பு வண்ணமே பெரும்பான்மையாக பயன்படுத்தபடுகிறது. அதற்கடுத்து வெள்ளை மற்றும் கறுப்பு வண்ணங்கள் பயன்படுத்தபடுகின்றன.

பிளெய்ன் சேலைகள், எம்ராய்டரி செய்யபட்டவை, பிரின்டட் செய்யபட்டவை என சேலைகளை முன்று விதமாக பிரிக்கலாம். இத்துடன் ஜமிக்கி, ஜர்தோஷி, குந்தன், ஆரி போன்ற வேலைபாடுகள் நிறைந்த சேலைகளும் பெரும்பான்மையாக அணியபடுகின்றன.

தென்னிந்தியாவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வசதிக்கேற்ப விதவிதமான ஆடைகளை அணிந்தாலும், பண்டிகைகள், விழாக்கள் என்று வரும்பொழுது சேலை அணிவதையே விரும்புகின்றனர். வடஇந்தியாவைச் சேர்ந்த பெண்கள் சேலை கட்டிக்கொண்டு கணவருடன் வெளியிடங்களுக்குச் செல்வதை பேஷனாக நினைக்கின்றனர். வெளிநாட்டில் வாழும் இந்திய பெகளும் விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு சேலை அணிந்து செல்வதை கவுரவமாகக் கருதுகின்றனர். அதேபோல் சுற்றி பார்பதற்காகவோ அல்லது படிப்பதற்காகவோ வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் பெண்களும் சேலை கட்டிக் கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

சுடிதார்

முகலாயர்கள் காலத்தில்தான் சுடிதார்கள் பயன்பாட்டிற்கு வந்தன. சுடிதாரானது சல்வார் கமீஸ் என்றும் அழைக்கபடுகிறது. சல்வார், கமீஸ், துப்பட்டா என முன்று துணிகள் சேர்ந்த ஆடையே சல்வார் கமீஸ் எனபடும். கமீஸானது டாப் அல்லது குர்தா என அழைக்கபடும். குர்தாவின் இறுதியில் மெல்லிய திறப்பு இருக்கும். அதிக நீளமான, அதாவது அணியும்போது காலின் இறுதி வரை இருக்கக்கூடிய குர்தாக்கள் பழைய ஸ்டைலாகும். உயரம் குறைவாக இருக்கும் குர்தாக்களே தற்போது பெரும்பாலானவர்களால் விரும்பி அணியபடுகின்றன.

சல்வார் என்பது குர்தாவுடன் சேர்த்து அணியக்கூடிய பேண்ட் வகையாகும். இடுப்பு பகுதியில் நாடா அல்லது எலாஸ்டிக் வைக்கபட்டிருக்கும். காலுடன் ஒட்டி இறுக்கமாக இல்லாமல், தொளதொளவென்று லேசாக இருக்கும். இவற்றுடன் அணிந்து கொள்ளபடும் துப்பட்டா, ஸ்கார்ப் வகைகளுள் ஒன்றாகும். நீளமாக இருக்கும். கழுத்து அல்லது தலையில் அணிந்து கொள்ளலாம். இதை அணிந்து கொள்பவருக்கு நல்ல ஸ்டைலைத் தரும். துப்பட்டாக்கள் தற்போது ஆடைக்கு அழகு சேர்க்கும் பொருட்
களுள் ஒன்றாகக் கருதபடுகின்றன.

தெற்காசியாவின் மத்திய பகுதி பெண்களால் தான் சுடிதார்கள் பெருமளவில் விரும்பி அணியபடுகின்றன. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் ஆண், பெண் இருவருமே சுடிதார்களை அணிந்து கொள்கின்றனர். இளவயது பெண்கள் சுடிதாரை அதிகமாக விரும்பி அணிகின்றனர். வீட்டில் இருக்கும்போதும், வெளியிடங்களுக்குச் செல்லும்போதும் சுடிதார்கள் பாதுகாப்பான உடையாக இருப்பதாக பெண்கள் கருதுகின்றனர்.

காஷ்மீர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் தயாராகும் சுடிதார்களில் எம்ராய்டரி வேலைபாடு அதிகமாக இருக்கும். சல்வாருக்கு பதில் பேட் அல்லது ட்ரவுசரை பயன்படுத்தினால், அது பேர்லல் சல்வார் என்று அழைக்கபடும். பேட்டில் நாடாவுக்கு பதிலாக எலாஸ்டிக் வைத்து வடிவமைக்கபட்டிருக்கும். பேட் `டைட்’டாக இல்லாமல் `ப்ரீ’யாக இருக்கும்.

பட்டியாலா சல்வார்கள் பழங்காலத்தில் இருந்தே பயன்படுத்தபட்டு வந்தாலும், அணிந்து கொள்பவருக்கு `மாடர்ன் லுக்’கைத் தருவதில் சிறப்பிடம் பெறுகின்றன. செமி பட்டியாலா சல்வாரில் துணியின் அளவு குறைவாக இருக்கும். பாகிஸ்தானி அல்லது பட்டானி சல்வாரை விரும்பி அணிபவர்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்களே. ஆண்-பெண் இருபாலருமே இந்த வகையான சல்வார்களை அணிகின்றனர். இந்த சுடிதாரில் டாப் என்று அழைக்கபடும் குர்தா நீளமாக இருக்கும்.

ஷலலா சல்வாரில் பேண்ட்டின் அகலம் அதிகமாக இருக்கும். ஹரம் சல்வார்கள் டைட்டாக இல்லாமல் ப்ரீயாக இருக்கும். பெல்லி டான்சர்கள் நடனம் ஆடும்போது அணிந்து கொள்ளக்கூடிய சுடிதார் இதுவாகும். ஷெர்வானி எனபடும் சுடிதார் வகை வடஇந்தியாவில் திருமணத்தின்போது மணமகனால் அணியபடுகின்றது. 17-ம் நுற்றாண்டில் `கதக்’ நடனக் கலைஞர்களால் சுடிதார்கள் அணியபட்டன.

சோளி

வடஇந்தியாவின் பாரம்பரிய ஆடைகளுள் ஒன்றான சோளி, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாட்டு பெண்களால் அதிகமாக அணியபடுகின்றது. ஆப்கானிஸ்தானின் பாரம்பரிய ஆடையும் சோளிதான். மேலாடை, ஆண்கள் அணியும் சட்டை போன்று இடுப்புபகுதி வரை நீண்டிருக்கும். அதற்குக்கீழே பாவாடை அணியபட்டிருக்கும். முதன்முதலில் இந்த ஆடையை பயன்படுத்தியவர்கள் முகலாயர்களின் அரச குடும்பத்து பெண்கள் தான். அதன்பின்னரே படிபடியாக எல்லோராலும் சோளி அணியபட்டது.

ராஜஸ்தானில் உள்ள ராஜ புத்திர இனத்தில் திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் முழுவதும் வண்ணமயமான சோளியை அணிகின்றனர். இதை வைத்தே மணமகன் வீட்டார் அவர்களை அடையாளம் கண்டுகொள்கின்றனர். விதவிதமாக எம்ராய்டரி செய்யபட்ட சோளி களை அங்குள்ள பெண்கள் விரும்பி அணிகிறார்கள். அத்துடன் கண்ணாடி, அலங்காரக்கல் மற்றும் மணிகள் பதிக்கபட்ட சோளி
களும் பெருமளவில் அணியபடுகின்றன.

சீனியா வேண்டவே வேண்டாம்!

மனிதன் அதிகம் உண்ணும் சத்தில்லாத உணவுகளில் சீனியும் ஒன்று. உண்மையில் நம்முடைய உடலுக்கு சீனி அறவே தேவையில்லை. உடலுக்கு சக்தி தேவைப்படும்போது இதர உணவுகள் குளுகோஸ் ஆக மாற்றி அமைக்கப்படுகின்றன.

சீனி உடலுக்கு எந்த சத்தையும் கொடுக்காமல் இருப்பதோடு மட்டுமல்லாமல், உடம்பிலுள்ள சத்தையும் ஈர்த்துக் கொள்கிறது. அதனால்தான் இது சத்தில்லாத கலோரி, சத்தில்லாத உணவு என்றும் அழைக்கப்படுகிறது.

சிகரெட், மது முதலியவற்றைவிட சீனி அதிக ஆபத்தானது என்று சொல்லலாம். புற்றுநோய், எலும்பு முறிவு நோய், மூட்டு வியாதிகள், உடல் பருமன், இதய நோய்கள், இரத்த அழுத்தம், சருமநோய்கள், விரைவில் முதிர்ச்சி, முதுமை, பித்தக்கல், ஈரல்நோய், சிறுநீரகக்கோளாறு, சொத்தைப்பல், பெண்ணுறுப்பு தொற்றுநோய், அளவுக்கு மீறிய சுறுசுறுப்பு, வன்செயல் மற்றும் பரவலாக இருக்கும் நீரிழிவு நோய், இப்படி சீனி உடம்பிலுள்ள ஒவ்வொரு உறுப்பையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது.

டின் பானங்கள், செயற்கை சத்துணவு முதலியவைகளில் சீனி அதிகம் சேர்க்கப்படுகிறது.

உங்கள் குழந்தைக்கு குளிர்பானம், ஐஸ்கிரீம், சாக்லேட் மற்றும் அளவுக்கு அதிகமான சீனி உள்ள உணவுகளைக் கொடுப்பதன் மூலம் உங்கள் குழந்தையை நீங்களே நோயாளியாக உருவாக்குகிறீர்கள் என்று அர்த்தம்.

சீனி அதிகமாகவும் வைட்டமின் மற்றும் தாதுப் பொருட்கள் குறைவாகவும் உள்ள உணவு வகைகளை உட்கொண்டு வருபவர்களுக்கு உடம்பில் ரசாயன மாறுதல்கள் ஏற்பட்டு, அளவுக்கு மிஞ்சிய துடுக்குத்தனத்தையும் வன்செயலையும் தூண்டிவிடும். ஜப்பானில் பெருகிவரும் வன்செயல்களுக்கு நொறுக்குத் தீனிகளுக்கும் அதிக தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இனிப்பான பொருளை உண்ணும்போது வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அதனுடன் சேர்ந்து அமிலத்தை உருவாக்குகிறது. இந்த அமிலம் பிறகு பற்களில் உள்ள எனாமலை அரித்து ஓட்டையாக்கி பல் சொத்தையை உண்டாக்குகிறது.

சீனியும் கொழுப்பும் அதிகம் உள்ள உணவுப் பொருட்கள் இரத்தத்தில் கொலாஸ்டிரல் அளவை அதிகரித்துவிடுவதால், இருதய நாளங்கள் அடைபடுகின்றன. இதனால் இரத்தம், ஆக்ஸிஜன் மற்றும் சத்துக்கள் செல்வது தடைபட்டுவிடுகிறது. இது தொடருமானால் ஒருவருடைய தசைநார்கள் இறந்து போய் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த மாரடைப்புக்கு குழந்தைப் பருவத்திலேயே நாம் வித்திட்டுவிடுகிறோம்.

தினமும் 24 தேக்கரண்டி சீனி நமது உணவில் சேர்ந்தால் இது 92 சதவிகித வெள்ளை இரத்த அணுக்கள் உருவாவதை தடுக்கிறது. இந்த வெள்ளை அணுக்கள் அபாயகரமான பாக்டீரியாக்களை எதிர்க்கும் தன்மை உடையவை.

உடலில் அதிகம் சீனி இருந்தால் அதைச் சுத்தப்படுத்த அதிகமான இன்சுலின் வெளியாக்கப்படுகிறது. அளவுக்கு அதிகமாக வெளியாகும் இன்சுலினுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தடுக்கும் ஹார்மோன்களான புரோஸ்டேகிளேன்டின் E2வுக்கும் அதிக தொடர்பு இருக்கிறது. இது புற்றுநோய் கழலையை உருவாக்குகிறது.

கேன்டிடா எல்பிகன்ஸ் என்ற பெண்ணுறுப்பு தொற்று நோயை அதிக அளவு சீனி இன்னும் துரிதப்படுத்துகிறது.

அளவுக்கு அதிகமாக சுக்ரோஸ் உள்ள உணவு எலும்பில் கால்சியத்தைக் குறைத்து எலும்பு முறிவு நோயை உண்டாக்குகிறது என்று பின்லாந்து ஆய்வு தெரிவிக்கிறது.

காபி, டீயில் ஒரு நாளைக்கு அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு தேக்கரண்டி சீனியை பயன்படுத்துங்கள் போதும்.

காபி, டீ சாப்பிடாதவர்கள் சீனியின் தொந்தரவிலிருந்து முழுவதும் விடுபட்டவர்கள். மெல்லக் கொல்லும் சீனியை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.