Daily Archives: ஜனவரி 2nd, 2010

துத்திக் கீரை

கீரைகளின் பயன்களை அனைத்து மக்களும் உணரத் தொடங்கிவிட்டனர். காலை நேரங்களில் கீரைக் கட்டுகளை மக்கள் வாங்கிச் செல்வதை நாம் காண்கிறோம்.

குறைந்த விலையில் கிடைக்கிறது என்பதால் இதன் மகிமையை சில காலம் மறந்து நோய்களின் உறைவிடமாக தங்கள் உடம்பை ஆக்கிக் கொண்டு விட்டனர் பலர்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் குணம் கீரைகளுக்கு அதிகம் உண்டு என்பதை விளக்கும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூலிகை சமையல் என்னும் தலைப்பில் ஒவ்வொரு கீரையைப் பற்றி அறிந்து வருகிறோம்.

இந்த இதழில் கிராமங்களில் அதிகம் கிடைக்கும் துத்திக் கீரையைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

இந்தக் கீரை மருத்துவக் குணங்கள் கொண்ட கீரையாகும். இதனை கக்கடி, இக்கசி என்ற பெயர்களில் அழைக்கின்றனர்.

இவை இந்தியாவில் உஷ்ணப் பகுதிகளில் அதிகம் வளர்கிறது. இவற்றில் பால் துத்தி, சிறுதுத்தி, கருந்துத்தி, ஐயிதழ்துத்தி, காட்டுத் துத்தி, கொடித்துத்தி, நாமத்துத்தி, நிலத்துத்தி, பொட்டகத்துத்தி என பல வகைகள் உள்ளன.

இதன் இலை, பூ, வேர், பட்டை என அனைத்துப் பகுதிகளும் மருத்துவக் குணம் கொண்டவை.

மூலநோய் கட்டி முளைபுழுப்புண் ணும்போகுஞ்

சாலவதக் கிக்கட்டத் தையலே – மேலுமதை

எப்படியேனும் புகிச்ச எப்பிணியும் சாந்தமுறும்

இப்படியிற் றுத்தி யிலையை

(அகத்தியர் குணபாடம்)

மலச்சிக்கல் தீர

மலச்சிக்கல் உடல் ஆரோக்கியத்திற்கு முதல் கேடாகும். மலச்சிக்கலை நீக்கினால் நோயின்றி நூறாண்டு வாழலாம். இன்றைய நவீன உணவுகள் எளிதில் ஜீரணமாவதில்லை, மேலும் அவசரமாக உணவை சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் உருவாகின்றது. மனச் சிக்கல் இருந்தால் கூடவே மலச்சிக்கல் வந்துவிடும்.

மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்திக் கீரையை நன்கு சுத்தமாகக் கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய்சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச் சிக்கல் தீரும்.

மூல வியாதி குணமாக

காரமும், புளிப்பும் உணவில் அதிகம் சேர்ப்பதால் சிலருக்கு குடலில் அலர்ஜி ஏற்பட்டு வாய்வுக்கள் சீற்றமாகி மூலக் குடலை அடைக்கிறது. இதனால் மூலத்தில் புண் ஏற்பட்டு மூலநோயாக மாறுகிறது.

இவ்வாறு மூல நோயால் அவதிப்படுபவர்கள் துத்திக் கீரையை நீர்விட்டு அலசி சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் பாசிப்பருப்பு, பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நெய்விட்டு கடைந்து வாரம் இருமுறை மதிய உணவுக்குப்பின் சாப்பிட்டு வந்தால் மூலநோயால் ஏற்படும் பாதிப்புகள் குறைந்து மூலநோய் படிப்படியாகக் குணமாகும்.

உடல் சூடு தணிய

துத்திக் கீரையை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி நீரில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு தணியும்.

வெப்பக்கட்டி குணமாக

துத்தியிலையை எடுத்து ஆமணக்கு (விளக்கெண்ணெய்) எண்ணெய் தடவி வதக்கி வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்து உடைந்து ஆறும்.

துத்தியிலையை சாறெடுத்து, பச்சரிசி மாவுடன் சேர்த்து களியாகக் கிண்டி கட்டிகளின் மேல் பூசி வந்தால் கட்டிகள் வெகு விரைவில் குணமாகும்.

பல்ஈறு நோய் குணமாக

துத்தி இலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் ஏற்படும் நோய்கள் தீரும்.

குடல் புண் ஆற

துத்திக் கீரையை வாரம் ஒருமுறை உணவில் சேர்த்து வந்தால் குடல் புண் ஆறும்.

சிறுநீர் பெருக்கி

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால் சிறுநீரக நோய் வர வாய்ப்புள்ளது. துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

துத்திக் கீரையை கிடைக்கும் காலங்களில் வாங்கி சமைத்து சாப்பிட்டு வந்தால் நீண்ட நாள் ஆரோக்கியத்தோடு வாழலாம்.

பெண் ஆணிடம் எதிர்ப்பார்ப்பது

ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன என்பதை இங்கு காண்போம்.

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ஆண்களின் கவர்ச்சி என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என fair complexion உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் மீசை க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மீசை ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ தாடி பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய் வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல், தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது, போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ்- டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான, நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும் (அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும், ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.

நார்த்தம் பழம்

பழங்கள் மனிதனுக்கு நேரடியாக சத்துக்களைக் கொடுக்கக்கூடியது. இயற்கையின் கொடைகளில் பழங்கள்தான் உணவுவகைகளில் முதலிடம் வகிக்கிறது. அடியார்கள் பலர் பால், பழம் மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளனர். சமைத்தால் சில சத்துக்கள் அழிந்துபோகும். ஆனால் பழங்கள் மூலம் சத்துக்கள் அனைத்தும் மனித உடலுக்கு அப்படியே கிடைக்கின்றன.

வளரும் குழந்தைகள் முதல் முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் பழங்களை அதிகம் சாப்பிட்டே ஆகவேண்டும். இந்த இதழில் எங்கும் கிடைக்கும் நார்த்தம் பழம் பற்றி அறிந்துகொள் வோம்.

எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக சாத்துகுடி அளவில் காணப்படும்.

காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும்.

பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும். பழத்தின் உள்ளே 8 அல்லது 10 சுளைகள் காணப்படும்.

புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு.

நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும்.

கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது. பழங்காலத்தில் கிராமங்களில் ஒவ்வொரு வீட்டின் கொல்லைப்புறத்திலும் நார்த்தை, முருங்கை, எலுமிச்சை, தென்னை மரங்கள் கண்டிப்பாக இருக்கும். இந்த நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்குமேல் வாழக்கூடியவை.

நார்த்தம் பழத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

பித்தம் தணிய

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் சூடு தணிய

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும்.

இரத்தம் சுத்தமடைய

இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும்.

உடல் வலுப்பெற

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும்.

நோயுற்றவர்கள் தேற

நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

வயிற்றுப்பொருமல் நீங்க

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும்.

இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும்.

சுகமான பிரசவம் ஆக

காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் ஆகும்.

· களைப்பு நீங்கும்

· வாந்தி, மயக்கத்தைப் போக்கும்.

· மூலத்தைக் கட்டுப்படுத்தும்.

· சீரண சக்தியை அதிகரித்து அஜீரணக் கோளாறுகளை நீக்கும்.

· தாது கெட்டிப்படும்.

· வாய் கசப்பைப் போக்கும்.

· உடல் நமைச்சலைப் போக்கும்.

· மலச்சிக்கல் நீங்கும்

· நீர்க்கடுப்பு குணமாகும்.

· கண்பார்வை தெளிவுபெறும்.

எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.

வாழ்க்கைக்கு வேலை அவசியம்தான். ஆனால், வேலையே வாழ்க்கையாக இருந்து விடக்கூடாது.

வாழ்க்கைக்கு வேலை அவசியம்தான். ஆனால், வேலையே வாழ்க்கையாக இருந்து விடக்கூடாது. எந்த நேரமும் வேலையைக் கட்டி அழுது கொண்டிருக்காமல், அதற்காக ஒதுக்கபட்ட நேரத்தில் மட்டும் வேலை செய்யுங்கள். அதேபோல் வாங்கும் சம்பளத்திற்குக் குறைவில்லாமல் வேலை பாருங்கள். அலுவலக வேலைக்காக குடும்பத்தில் கிடைக்கக் கூடிய சந்தோஷங்களைத் தியாகம் செய்யாதீர்கள்.   வேலையையும், அது சார்ந்த டென்ஷன்களையும் மறக்க ஓய்வு அவசியம். விடுமுறை நாட்களிலும் அலுவலகத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், கிடைக்கக் கூடிய ஓய்வை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிக நாட்கள் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். வார இறுதியில் திரைபடங்களுக்கோ, உறவினர் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ சென்று வரலாம். அதன் முலம் கிடைக்கும் புத்துணர்ச்சி தான் அடுத்த ஆறு நாட்களுக்கு சோர்வு இல்லாமல் வேலையை சிறப்பாகச் செய்ய உதவும்.   உங்களுக்கு எந்த வேலையில் ஆர்வம், திறமை இருக்கிறதோ, அந்தத் துறையில் சேர்ந்து பணியாற்றுங்கள். அப்போதுதான் வேலையையும் நன்றாகச் செய்ய முடியும்; உங்கள் திறமைகளும் வெளி உலகத்திற்குத் தெரிய வரும். விருப்பமில்லாத வேலையைச் செய்யும்போது, வேலையும் ஒழுங்காக நடக்காது. உங்கள் திறமைகளும் வீணாகி போகும். ஓவியம் வரைவதில் திறமையை வைத்துக் கொண்டு மார்க்கெட்டிங் துறைக்கு போக வேண்டாம்.   உங்களால் செய்ய முடியாத அல்லது செய்யத் தெரியாத வேலைகளைக் கண்டிப்பாக மறுத்து விடுங்கள். மேலதிகாரியைத் திருப்தி படுத்துவதற்காகவோ, சக ஊழியர்களிடம் உங்களை பெரிய ஆளாக காட்டிக் கொள்வதற்காகவோ எல்லா வேலைகளையும் ஒப்புக் கொண்டால் வேலையின் முடிவு எதிர்பார்த்த பலனைத் தராது; உங்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல், `இதை என்னால் செய்ய முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிடுங்கள்.   வேலையில் ஏதாவது உதவி தேவைபடும் பட்சத்தில், தயங்காமல் உடன் பணிபுரிபவர்களிடம் கேளுங்கள். `எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, நானே எல்லாவற்றைம் செய்து கொள்கிறேன்’ என்று அடம் பிடித்தால் டென்ஷன்தான் மிஞ்சும். எல்லா வேலைகளும் தேங்கி, உங்கள் ஒருவரால் மொத்த அலுவலகத்தின் வேலையும் ஸ்தம்பித்து போகும் நிலை உருவாகும். அதேபோல, உடன் பணிபுரிபவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களுடைய வேலைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.   ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தின் இறுதியில் நீங்கள் செய்த வேலைகளை பட்டியலிடுங்கள். எந்த வேலைக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டீர்கள், எந்த வேலைக்கு குறைவான நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என்பதையும் கணக்கிட்டு பாருங்கள். வேலையை முடிக்க அதிக நேரம் ஆனதற்குக் காரணம் என்ன? அந்த வேலையில் தோன்றிய சிக்கல்கள் என்னென்ன? நாம் செய்த தவறுகள் எவையெவை? இதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அடுத்து குறையில்லாமல் வேலை பார்க்க முடியும்.   மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிருங்கள். பெரும்பாலும் அதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் தடுப்பதே நல்லது. தவறு யார் மீது இருந்தாலும் அனுசரித்துச் செல்பவராக நீங்கள் இருங்கள். மேலதிகாரி மீது தவறு இருக்கும் பட்சத்தில், பலர் முன்னிலையில் வெளிப்படையாகச் சொல்லி அவமானபடுத்துவது தவறான செயலாகும். அவரைத் தனியாகச் சந்தித்து யார் மீது தவறு என்பதை விளக்கிச் சொல்லும்போது, அவர் மனபூர்வமாக தவறை ஒத்துக் கொள்வார். மேலும், உங்கள் மீதான மரியாதையும் அதிகரிக்கும்.

யானை `மசாஜ்’


`மசாஜ்கள்’ பலவிதம். பாம்புகளைக் கொண்டு கூட `மசாஜ்’ செய்கிறார்கள். இந்த வரிசையில் `லேட்டஸ்ட்,’ யானை `மசாஜ்’. தாய்லாந்தின் பாங்காக் சியாங் மே சுற்றுலா பூங்கா நிர்வாகிகள் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர். `மசாஜ்’ செய்வதற்கு யானை ஒன்றுக்கு தீவிர பயிற்சி கொடுக்கபட்டுள்ளது. முவாயிரம் கிலோ எடைள்ள அந்த யானை, சுற்றுலா பயணிகளுக்கு முதுகை மெதுவாக மிதித்து `மசாஜ்’ செய்யும். இதமாக, பதமாக, கவனமாக `மசாஜ்’ செய்யும்வகையில் யானைக்கு பயிற்சி கொடுக்கபட்டுள்ளது. சுற்றுலாவாசிகளை இது மிகவும் கவரும் என்று யானை பாகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் முதன்முதலில் யானையிடம் `மசாஜ்’ செய்துகொள்ள தயாராக இருபவர் யார் என்று தெரியவில்லை. யானை `மசாஜ்’ செய்துகொள்ள முன்வருவதற்கே தனித் தைரியம் வேண்டுமல்லவா?

பட்டு புடவையில் பல வகை…


பெண்களின் உடைகளில் புதுமைக்குரியதாய் அமைந்தது, பேப்ரிக்ஸ். இந்த மெட்டீரியலை பெண்கள் அதிகம் விரும்பக் காரணம் அதன் நேர்த்தி. இதில் எம்ராய்டரிங் செய்யலாம். பிரிண்டிங், டையிங் போன்றவைகளும் செய்யலாம். பேப்ரிக்ஸ் மெட்டீரியலில் உருவான புடவைகளை பலவிதங்களில் அழகுபடுத்தி உடுத்த முடியும் என்பதால் பெண்கள் அதிகமான அளவில் அவைகளை விரும்பி வாங்கி பயன்படுத்துகிறார்கள். சில்க் வகைகள் பேப்ரிக்ஸ்சின் முன்னோடி. பட்டு புடவைகளின் தயாரிப்பு 4500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. பட்டு தயாரிப்பில் உலகில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

சில்க்கில் பலவகை இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கவை ஐந்து. அவை: மல்பரி, டசர், எரி, முகா, ஓக் டசர். எந்த வகை இலைகளை பட்டு பூச்சி தின்னுகிறது என்பதை வைத்து, அந்த இலைகளில் தரத்திற்கு ஏற்ப பட்டின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள்.

பண்டிகை காலத்திலும், திருமண நிகழ்வுகளுக்காகவும் பட்டு புடவை வாங்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இங்கே குறிப்பிடும் பட்டு தரத்தை பற்றி நன்றாகவே தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

மல்பரி சில்க் ரொம்ப மென்மையாக இருக்கும். இதை உடுத்திக்கொண்டு அதிக அழகுடன், சவுகரியமாக உலாவர முடியும். இதன் விலை சற்று அதிகம். இந்த வகை பட்டுகள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகாவில் அதிகமாக தயார் செய்யப்படுகின்றன.

டசர் சில்க் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் முறுமுறுப்பாக இருக்கும். பேக்குகள், குர்தி போன்றவைகளை இதில் தயாரிப்பார்கள்.  எரி சில்க் அசாம், பீகார் போன்ற மாநிலங்களில் பிரபலம். காஸ்டெர் என்ற செடிகளின் இலைகளை சாப்பிடும் பட்டுபூச்சிகளில் இருந்து எடுக்கபடும் நுலில் இருந்து இந்தவகை பட்டு தயாரிக்கப்படுகிறது. இதற்கு என்டி சில்க், எவரன்டி சில்க் போன்ற பெயர்களும் உண்டு.

முகா சில்க்கின் பிறப்பிடமும் அசாம்தான். இந்த பட்டு இயற்கையான மஞ்சள் நிறத்துடன் காட்சியளிக்கும். சோம் மற்றும் சோலு வகை செடிகளின் இலைகளை தின்னும் பட்டுபூச்சிகளில் இருந்து இந்த வகை பட்டு நுல்கள் எடுக்கபடுகின்றன.

ஓக் டசர் பட்டுகளை வாங்கி பெண்கள் புடவையாக உடுத்த முடியாது. அது சோபா விரிப்பு, திரைச் சீலை, வீடு மற்றும் நிறுவனங்களின் உள்ளறை அலங்காரம் போன்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடியது. மராட்டியம், மேற்கு வங்காள மாநிலங்களில் இந்த வகை பட்டுகள் அதிகம் தயாராகின்றன. ஓக் டசர் பட்டு நுல் அசான், அர்ஜூன் எனபடும் செடிகளின் இலைகளைத் தின்னும் பூச்சிகளில் இருந்து எடுக்கபடுகிறது.

பட்டு பூச்சிகள் உண்ணும் இலைகளை வைத்து மட்டுமின்றி, தயாரிப்பின் நேர்த்தியை வைத்தும் பட்டின் சிறப்பு உணர்த்தபடுகிறது. சில நகரங்களின் பெயரைச் சொன்னாலே அங்கு தயாரிக்கப்படும் பட்டு எவ்வளவு சிறப்பானது என்றும் பெண்கள் கூறிவிடுவார்கள். அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள சில பட்டு நகரங்களை பற்றி பார்போம்.

-பனாரஸ். உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். இங்கு தரமான பட்டு நுல்களில் உயர்ந்தவகை பட்டுகளை தயாரிக்கிறார்கள். புதுபுது வண்ணங்கள், வடிவங்களில் பெண்களின் எண்ணங்களில் இடம்பெறும் அளவிற்கு பட்டுகளை தயார் செய்கிறார்கள். இங்கு தயாராகும் பட்டுகளுக்கு அம்ரு, ஜமாவர், நவரங்கி, ஜாம்தானி என்று பல்வேறுவகையான பெயர்கள் சூட்டபட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டோலா நகரத்தில் பட்டுபுடவைகளை தயாரிக்க நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். முதலில் `கிரா’பில் டிசைன் செய்து, பின்பு நுலில் `டை’ செய்கிறார்கள். அதன் பிறகு கோர்த்து நெய்கிறார்கள். இதனால் இதர வகை பட்டுகளை விட அது பளிச்சென இருக்கும். மத்திய பிரதேச மாநிலத்தில் சந்தேரி, மகேஸ்வரி போன்ற வகை பட்டுபுடவைகள் பிரபலம். காஞ்சிபுரத்தில் தயாராகும் பட்டுகள் உலக புகழ் பெற்றவை. வண்ணக்கலவை, பார்டர் நேர்த்தி, கற்பனைக்கு எட்டாத டிசைன்களில் இங்கு பட்டுகள் தயார் ஆகின்றன. இங்குள்ள பட்டுகள் அதிக தரத்துடன், பளிச்சென்று, அதிக ஆயூளுடன் இருபதால் இதற்கு உலக அளவில் மவுசு இருக்கிறது. தஞ்சாவூர், கும்பகோணமும் பட்டு உற்பத்திக்கு பெயர் பெற்றவை.

சுத்தமான பட்டு என்பது எது?

– அதில் நைலான், காட்டன் போன்ற எந்த கலப்பும் இருக்காது. சுத்தமான பட்டு காட்டனைவிட பலமாக இருக்கும். நல்ல கலராக இருக்கும். அதில் `டை’ செய்வது எளிது. இதில் `லைனிங்’ கொடுத்தாலும் மென்மையாக இருக்கும்.

– `ரா சில்க்’. இது முறுமுறுப்பாக இருக்கும். `டசர் சில்க்’ எனப்படும் இன்னொரு தரம் ஒழுங்கற்ற நிலையில் பேப்பரைபோல் காட்சியளிக்கும். சிவப்பு, கோல்டு பிரவுன் போன்றவை இதன் இயற்கை நிறமாகும். இதை முறைபடுத்தி புடவையாக்க `பினிஷிங் ட்ரீட்மென்ட்’ எனப்படும் கெமிக்கலை பயன்படுத்துகிறார்கள்.

மட்கா எனபடும் பட்டுக்கு `ஸ்பன் சில்க்’ என்று ஆங்கில பெயர் சூட்டியிருக்கிறார்கள். மட்கா என்ற பெயருக்கு இந்தியில் பானை என்று அர்த்தம். இயந்திரம் மற்றும் கைத்தறியில் இதனை தயாரிக்கிறார்கள். மட்கா பட்டு சலவை செய்ய எளிதாக இருக்கும்.

கிரே எனப்படும் சில்க் வகை நன்றாக உழைக்கக்கூடியது. சலவைக்கு ஏற்றது. ஆனால் தனியாக இதனை துவைக்க வேண்டும். பளபளப்பு தன்மை இதில் இருக்காது. உடுத்த சவுகரியமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

பட்டு விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டீர்கள்தானே.. இனி பார்த்து, கவனித்து அதை வாங்குங்கள்.

கொழுப்பைக் கரைக்கும் கொடம்புளி

உடல் பருமனால் ஆண்களும், பெண்களும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிறிது தூரம் நடந்தாலோ, மாடிப் படிகளில் ஏறினாலோ மூச்சிரைக்கும். அப்படியே உட்கார்ந்துவிடுவார்கள். இதனால் இவர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சிலர் எடையைக் குறைக்கிறோம் என்ற விளம்பரங்களை நம்பி ஏமாந்து பணத்தை இழப்பதுதான் மிச்சம்.

பொதுவாக ஒருவருடைய எடை அவருடைய நடுத்தர வயதில்தான் அதிகரிக்க ஆரம்பிக்கும். ஆனால் இன்று சிறு பிள்ளைகள் கூட குண்டாகி அவதிக்குள்ளாகின்றனர்.

இதற்கு நாம் உண்ணும் உணவுதான் முக்கியக் காரணமாகிறது. உணவில் உள்ள கொழுப்பு உடலில் தங்கி விடுவதால் உடல் பெருத்துவிடுகிறது.

உடல் எடையைக் குறைக்க சிலர் பட்டினி கிடப்பார்கள். அது தவறு. மருந்து மாத்திரைகளை உபயோகித்தாலும் உடல் எடை குறையாது.

உணவும், உடற்பயிற்சியும் தான் உடல் எடையை முறையாகக் குறைக்கும் மருந்தாகும்.

அதற்கு கொடம்புளி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.

கொடம்புளி இந்தியாவில் கன்னியாகுமரியிலும், கேரளாவிலும் அதிகம் பயன்படுத்துகிறார்கள். இலங்கை மக்களும் புளிக்குப் பதிலாக கொடம்புளியைப் பயன்படுத்துகிறார்கள்.

கொடம்புளியின் பூர்வீகம் இந்தியாதான். தற்போது தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் விளைகின்றது.

இதன் பழம் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதன் மேல் தோலுடன் உள்ள தசைப் பகுதிதான் மருத்துவத் தன்மை கொண்டது.

உடல் பருமன் குறைய

உடல் பருமன் உள்ளவர்கள் சமையலில் இந்த கொடம்புளியை சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.

இந்த கொடம்புளியில் உள்ள ஹைட்ராக்ஸி சிட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் தான் உடலின் எடையைக் குறைக்க பெரும் வகையில் உதவுகிறது.

உண்ணும் உணவில் இருக்கும் அதிகப்படியான மாவுச்சத்துக்கள் அனைத்தும் கொழுப்புச் சத்தாக மாறுகின்றது. இதனால் கொழுப்புப் படலம் உடலில் தங்கி உடலைப் பருமனாக்குகிறது.

இந்த மாவுச் சத்தை கொழுப்புச் சத்தாக மாறாமல் ஹைட்ரஸி சிட்ரிக் அமிலம் தடுக்கிறது. இதனால் உடலில் கொழுப்புச் சத்து உருவாவது தடுக்கப்படுகிறது. மேலும் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தக்கள் அனைத்தும் கிடைக்கின்றன.

பசியை அடக்கும்

கொடம்புளியை தினமும் உணவில் சேர்த்து வந்தால் அதிகப் பசியைக் கட்டுப்படுத்தும். சீரண மண்டலத்தை பலப்படுத்தும். இதனால் உடலில் உள்ள கொழுப்பு வெகு விரைவில் கரையும்.

மலச்சிக்கல் தீர

புளிக்குப் பதிலாக கொடம்புளியை உணவில் சேர்த்து வந்தால் மலச்சிக்கல் தீரும்.

மூட்டுவலி நீங்க

கொடம்புளியின் விதையை நீக்கி அதன் சதைப் பகுதியை நீரில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அருந்தினால் மூட்டுவலி குணமாகும். உடலில் உள்ள வாத பித்த குற்றத்தைச் சீர்படுத்தும்.

இலங்கை மக்களும், கேரள மக்களும் பழங்காலம்தொட்டே இந்த கொடம்புளியைப் பயன்படுத்தி வந்துள்ளனர்.

நாமும் கொடம்புளியை உணவில் சேர்த்து அதன் பயன்களை அடைவோம்.

மகாமுத்ரா

உசர்ட்டாசனத்திற்கு மாற்று ஆசனம், வஜிராசன நிலையில் கைகளை முதுகின் பின்புறம் படத்தில் காட்டியபடி கட்டிக் கொண்டு, தலையைத் தரையில் தொடும்படி முன்னால் குனியவும். உடலை 3 மடிப்புகளாக வளைப்பதால் உடல் விறைப்புத்தன்மை குறையும். சாதாரண மூச்சு 20 எண்ணும் வரை இருந்தால் போதுமானது. 3 முறை செய்யவும்.

பலன்கள்:

வாத நோய்க்கு சிறந்த ஆசனம். யோக முத்ரா ஆசனத்திற்கு உள்ள பலன்கள் இதற்குக் கிடைக்கும்.