பட்டு புடவையில் பல வகை…


பெண்களின் உடைகளில் புதுமைக்குரியதாய் அமைந்தது, பேப்ரிக்ஸ். இந்த மெட்டீரியலை பெண்கள் அதிகம் விரும்பக் காரணம் அதன் நேர்த்தி. இதில் எம்ராய்டரிங் செய்யலாம். பிரிண்டிங், டையிங் போன்றவைகளும் செய்யலாம். பேப்ரிக்ஸ் மெட்டீரியலில் உருவான புடவைகளை பலவிதங்களில் அழகுபடுத்தி உடுத்த முடியும் என்பதால் பெண்கள் அதிகமான அளவில் அவைகளை விரும்பி வாங்கி பயன்படுத்துகிறார்கள். சில்க் வகைகள் பேப்ரிக்ஸ்சின் முன்னோடி. பட்டு புடவைகளின் தயாரிப்பு 4500 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்டது. பட்டு தயாரிப்பில் உலகில் சீனா முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் இருக்கிறது.

சில்க்கில் பலவகை இருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கவை ஐந்து. அவை: மல்பரி, டசர், எரி, முகா, ஓக் டசர். எந்த வகை இலைகளை பட்டு பூச்சி தின்னுகிறது என்பதை வைத்து, அந்த இலைகளில் தரத்திற்கு ஏற்ப பட்டின் தன்மையை நிர்ணயிக்கிறார்கள்.

பண்டிகை காலத்திலும், திருமண நிகழ்வுகளுக்காகவும் பட்டு புடவை வாங்கும் பழக்கம் உங்களுக்கு இருந்தால், இங்கே குறிப்பிடும் பட்டு தரத்தை பற்றி நன்றாகவே தெரிந்துவைத்துக் கொள்ளுங்கள்.

மல்பரி சில்க் ரொம்ப மென்மையாக இருக்கும். இதை உடுத்திக்கொண்டு அதிக அழகுடன், சவுகரியமாக உலாவர முடியும். இதன் விலை சற்று அதிகம். இந்த வகை பட்டுகள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகாவில் அதிகமாக தயார் செய்யப்படுகின்றன.

டசர் சில்க் நெகிழ்வுத்தன்மை இல்லாமல் முறுமுறுப்பாக இருக்கும். பேக்குகள், குர்தி போன்றவைகளை இதில் தயாரிப்பார்கள்.  எரி சில்க் அசாம், பீகார் போன்ற மாநிலங்களில் பிரபலம். காஸ்டெர் என்ற செடிகளின் இலைகளை சாப்பிடும் பட்டுபூச்சிகளில் இருந்து எடுக்கபடும் நுலில் இருந்து இந்தவகை பட்டு தயாரிக்கப்படுகிறது. இதற்கு என்டி சில்க், எவரன்டி சில்க் போன்ற பெயர்களும் உண்டு.

முகா சில்க்கின் பிறப்பிடமும் அசாம்தான். இந்த பட்டு இயற்கையான மஞ்சள் நிறத்துடன் காட்சியளிக்கும். சோம் மற்றும் சோலு வகை செடிகளின் இலைகளை தின்னும் பட்டுபூச்சிகளில் இருந்து இந்த வகை பட்டு நுல்கள் எடுக்கபடுகின்றன.

ஓக் டசர் பட்டுகளை வாங்கி பெண்கள் புடவையாக உடுத்த முடியாது. அது சோபா விரிப்பு, திரைச் சீலை, வீடு மற்றும் நிறுவனங்களின் உள்ளறை அலங்காரம் போன்றவைகளுக்கு பயன்படுத்தக்கூடியது. மராட்டியம், மேற்கு வங்காள மாநிலங்களில் இந்த வகை பட்டுகள் அதிகம் தயாராகின்றன. ஓக் டசர் பட்டு நுல் அசான், அர்ஜூன் எனபடும் செடிகளின் இலைகளைத் தின்னும் பூச்சிகளில் இருந்து எடுக்கபடுகிறது.

பட்டு பூச்சிகள் உண்ணும் இலைகளை வைத்து மட்டுமின்றி, தயாரிப்பின் நேர்த்தியை வைத்தும் பட்டின் சிறப்பு உணர்த்தபடுகிறது. சில நகரங்களின் பெயரைச் சொன்னாலே அங்கு தயாரிக்கப்படும் பட்டு எவ்வளவு சிறப்பானது என்றும் பெண்கள் கூறிவிடுவார்கள். அந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள சில பட்டு நகரங்களை பற்றி பார்போம்.

-பனாரஸ். உத்திரபிரதேசத்தில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். இங்கு தரமான பட்டு நுல்களில் உயர்ந்தவகை பட்டுகளை தயாரிக்கிறார்கள். புதுபுது வண்ணங்கள், வடிவங்களில் பெண்களின் எண்ணங்களில் இடம்பெறும் அளவிற்கு பட்டுகளை தயார் செய்கிறார்கள். இங்கு தயாராகும் பட்டுகளுக்கு அம்ரு, ஜமாவர், நவரங்கி, ஜாம்தானி என்று பல்வேறுவகையான பெயர்கள் சூட்டபட்டிருக்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அமைந்திருக்கிறது.

குஜராத் மாநிலத்தில் உள்ள பட்டோலா நகரத்தில் பட்டுபுடவைகளை தயாரிக்க நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்துகிறார்கள். முதலில் `கிரா’பில் டிசைன் செய்து, பின்பு நுலில் `டை’ செய்கிறார்கள். அதன் பிறகு கோர்த்து நெய்கிறார்கள். இதனால் இதர வகை பட்டுகளை விட அது பளிச்சென இருக்கும். மத்திய பிரதேச மாநிலத்தில் சந்தேரி, மகேஸ்வரி போன்ற வகை பட்டுபுடவைகள் பிரபலம். காஞ்சிபுரத்தில் தயாராகும் பட்டுகள் உலக புகழ் பெற்றவை. வண்ணக்கலவை, பார்டர் நேர்த்தி, கற்பனைக்கு எட்டாத டிசைன்களில் இங்கு பட்டுகள் தயார் ஆகின்றன. இங்குள்ள பட்டுகள் அதிக தரத்துடன், பளிச்சென்று, அதிக ஆயூளுடன் இருபதால் இதற்கு உலக அளவில் மவுசு இருக்கிறது. தஞ்சாவூர், கும்பகோணமும் பட்டு உற்பத்திக்கு பெயர் பெற்றவை.

சுத்தமான பட்டு என்பது எது?

– அதில் நைலான், காட்டன் போன்ற எந்த கலப்பும் இருக்காது. சுத்தமான பட்டு காட்டனைவிட பலமாக இருக்கும். நல்ல கலராக இருக்கும். அதில் `டை’ செய்வது எளிது. இதில் `லைனிங்’ கொடுத்தாலும் மென்மையாக இருக்கும்.

– `ரா சில்க்’. இது முறுமுறுப்பாக இருக்கும். `டசர் சில்க்’ எனப்படும் இன்னொரு தரம் ஒழுங்கற்ற நிலையில் பேப்பரைபோல் காட்சியளிக்கும். சிவப்பு, கோல்டு பிரவுன் போன்றவை இதன் இயற்கை நிறமாகும். இதை முறைபடுத்தி புடவையாக்க `பினிஷிங் ட்ரீட்மென்ட்’ எனப்படும் கெமிக்கலை பயன்படுத்துகிறார்கள்.

மட்கா எனபடும் பட்டுக்கு `ஸ்பன் சில்க்’ என்று ஆங்கில பெயர் சூட்டியிருக்கிறார்கள். மட்கா என்ற பெயருக்கு இந்தியில் பானை என்று அர்த்தம். இயந்திரம் மற்றும் கைத்தறியில் இதனை தயாரிக்கிறார்கள். மட்கா பட்டு சலவை செய்ய எளிதாக இருக்கும்.

கிரே எனப்படும் சில்க் வகை நன்றாக உழைக்கக்கூடியது. சலவைக்கு ஏற்றது. ஆனால் தனியாக இதனை துவைக்க வேண்டும். பளபளப்பு தன்மை இதில் இருக்காது. உடுத்த சவுகரியமாகவும், மென்மையாகவும் இருக்கும்.

பட்டு விஷயங்களை எல்லாம் தெரிந்து கொண்டீர்கள்தானே.. இனி பார்த்து, கவனித்து அதை வாங்குங்கள்.

%d bloggers like this: