வாழ்க்கைக்கு வேலை அவசியம்தான். ஆனால், வேலையே வாழ்க்கையாக இருந்து விடக்கூடாது.

வாழ்க்கைக்கு வேலை அவசியம்தான். ஆனால், வேலையே வாழ்க்கையாக இருந்து விடக்கூடாது. எந்த நேரமும் வேலையைக் கட்டி அழுது கொண்டிருக்காமல், அதற்காக ஒதுக்கபட்ட நேரத்தில் மட்டும் வேலை செய்யுங்கள். அதேபோல் வாங்கும் சம்பளத்திற்குக் குறைவில்லாமல் வேலை பாருங்கள். அலுவலக வேலைக்காக குடும்பத்தில் கிடைக்கக் கூடிய சந்தோஷங்களைத் தியாகம் செய்யாதீர்கள்.   வேலையையும், அது சார்ந்த டென்ஷன்களையும் மறக்க ஓய்வு அவசியம். விடுமுறை நாட்களிலும் அலுவலகத்தை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்காமல், கிடைக்கக் கூடிய ஓய்வை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதிக நாட்கள் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்லுங்கள். வார இறுதியில் திரைபடங்களுக்கோ, உறவினர் அல்லது நண்பர்களின் வீடுகளுக்கோ சென்று வரலாம். அதன் முலம் கிடைக்கும் புத்துணர்ச்சி தான் அடுத்த ஆறு நாட்களுக்கு சோர்வு இல்லாமல் வேலையை சிறப்பாகச் செய்ய உதவும்.   உங்களுக்கு எந்த வேலையில் ஆர்வம், திறமை இருக்கிறதோ, அந்தத் துறையில் சேர்ந்து பணியாற்றுங்கள். அப்போதுதான் வேலையையும் நன்றாகச் செய்ய முடியும்; உங்கள் திறமைகளும் வெளி உலகத்திற்குத் தெரிய வரும். விருப்பமில்லாத வேலையைச் செய்யும்போது, வேலையும் ஒழுங்காக நடக்காது. உங்கள் திறமைகளும் வீணாகி போகும். ஓவியம் வரைவதில் திறமையை வைத்துக் கொண்டு மார்க்கெட்டிங் துறைக்கு போக வேண்டாம்.   உங்களால் செய்ய முடியாத அல்லது செய்யத் தெரியாத வேலைகளைக் கண்டிப்பாக மறுத்து விடுங்கள். மேலதிகாரியைத் திருப்தி படுத்துவதற்காகவோ, சக ஊழியர்களிடம் உங்களை பெரிய ஆளாக காட்டிக் கொள்வதற்காகவோ எல்லா வேலைகளையும் ஒப்புக் கொண்டால் வேலையின் முடிவு எதிர்பார்த்த பலனைத் தராது; உங்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும். எனவே, மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணாமல், `இதை என்னால் செய்ய முடியாது’ என்று திட்டவட்டமாகக் கூறிவிடுங்கள்.   வேலையில் ஏதாவது உதவி தேவைபடும் பட்சத்தில், தயங்காமல் உடன் பணிபுரிபவர்களிடம் கேளுங்கள். `எனக்கு யாருடைய உதவியும் தேவையில்லை, நானே எல்லாவற்றைம் செய்து கொள்கிறேன்’ என்று அடம் பிடித்தால் டென்ஷன்தான் மிஞ்சும். எல்லா வேலைகளும் தேங்கி, உங்கள் ஒருவரால் மொத்த அலுவலகத்தின் வேலையும் ஸ்தம்பித்து போகும் நிலை உருவாகும். அதேபோல, உடன் பணிபுரிபவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டால், அவர்களுடைய வேலைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.   ஒவ்வொரு வாரமும் அந்த வாரத்தின் இறுதியில் நீங்கள் செய்த வேலைகளை பட்டியலிடுங்கள். எந்த வேலைக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டீர்கள், எந்த வேலைக்கு குறைவான நேரம் எடுத்துக் கொண்டீர்கள் என்பதையும் கணக்கிட்டு பாருங்கள். வேலையை முடிக்க அதிக நேரம் ஆனதற்குக் காரணம் என்ன? அந்த வேலையில் தோன்றிய சிக்கல்கள் என்னென்ன? நாம் செய்த தவறுகள் எவையெவை? இதையெல்லாம் குறித்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் அடுத்து குறையில்லாமல் வேலை பார்க்க முடியும்.   மேல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்வதைத் தவிருங்கள். பெரும்பாலும் அதுபோன்ற சூழ்நிலைகள் உருவாகாமல் தடுப்பதே நல்லது. தவறு யார் மீது இருந்தாலும் அனுசரித்துச் செல்பவராக நீங்கள் இருங்கள். மேலதிகாரி மீது தவறு இருக்கும் பட்சத்தில், பலர் முன்னிலையில் வெளிப்படையாகச் சொல்லி அவமானபடுத்துவது தவறான செயலாகும். அவரைத் தனியாகச் சந்தித்து யார் மீது தவறு என்பதை விளக்கிச் சொல்லும்போது, அவர் மனபூர்வமாக தவறை ஒத்துக் கொள்வார். மேலும், உங்கள் மீதான மரியாதையும் அதிகரிக்கும்.

ஒரு மறுமொழி

  1. சூப்பர் அண்ணே

%d bloggers like this: