Daily Archives: ஜனவரி 4th, 2010

குறிஞ்சான் கீரை


குறிஞ்சாக் கீரையில் இருவகை உண்டு. சிறுகுறிஞ்சான், பெருங்குறிஞ்சான்.

சிறுகுறிஞ்சான் மிகுந்த மருத்துவப் பயன் கொண்டது. சித்த, ஆயுர்வேத மருத்துவங்களில் இதன் பயன்பாடு அதிகம். இது கொடி வகையைச் சார்ந்தது. மரங்களில் கொடியாகப் படரும். கசப்புச் சுவை கொண்டதால் இதனை பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவதில்லை.

இதன் இலை, வேர் மருத்துவப் பயன் கொண்டது.

சிறுகுறிஞ்சான் வாதமொடு சீதத்தை நீக்கும்

மறுவுதிரம் இல்லாத மாதர்க்குறுமுலகில்

அத்தி சுரமும் அகலாக் கடி விடமும்

தத்தியக லர்த்தகர்க்குத் தான்

வாதசுரஞ் சன்னிசுரம் மாறாக் கபச்சுரமும்

பூதலம் விட்டோடப் புரியுங்காண்மாதேகேள்

அக்கரங்கள் தீர்க்கும் அதிசுரந்தா கந்தொலைக்குந் தக்க சிறு குறிஞ்சான்தான்

(அகத்தியர் குணபாடம்)

நீரிழிவு நோயின் தாக்கம் குறைய

நீரிழிவு நோயாளிகளின் முக்கிய உணவாக உட்கொள்ள வேண்டிய கீரை குறிஞ்சாக் கீரைதான். இன்று நம் நாட்டில் குறிப்பாக தென்தமிழ்நாட்டில் அதிக மக்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2025ம் ஆண்டில் உலகில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

உணவு முறையின் மாறுபாடே நீரிழிவு நோய் வருவதற்கு முக்கியக் காரணம். மேலும் உடல் உழைப்பின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களாலும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.

நீரிழிவு நோயாளிகளின் பாதிப்புகள் குறைய குறிஞ்சாக் கீரை மிகவும் உதவுகிறது. அதிக கசப்புத் தன்மை கொண்ட இந்தக் கீரை உடலின் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. மேலும் சர்க்கரை நோயின் பாதிப்பு ஏற்படாமல் வருமுன் காக்க குறிஞ்சாக் கீரை சிறந்த மருந்தாகும்.

குறிஞ்சாக் கீரையை நன்கு நீர்விட்டு அலசி, அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து சிறிது நீர்விட்டு அவித்து சிறிது நேரம் அப்படியே ஊறவைத்து சாப்பிட வேண்டும்.

இவ்வாறு வாரம் இருமுறை சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோயின் தாக்கம் குறையும்.

நாவற் பழக் கொட்டையையும், சிறுகுறிஞ்சான் கீரையையும் நிழலில் உலர்த்தி பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலையில் 1 குவளை தண்ணீருக்கு 1 தேக்கரண்டி பொடி வீதம் இட்டு காய்ச்சி கஷாயமாக்கி அருந்தி வந்தால் நீரிழிவு நோய் கட்டுப்படும்.

வயிற்றுப்புண், வாய்ப்புண் நீங்க

உணவு முறை மாறுபாட்டாலும், நேரம் தவறி உணவு உண்பதாலும் வாயு சம்பந்தப்பட்ட உணவுகளை அடிக்கடி உண்பதாலும் சிலரின் வயிற்றில் வாயுவின் சீற்றம் மிகுந்து குடலின் உட்புறச் சுவர்களைப் பாதிக்கிறது. மேலும் மது, புகை, போதை வஸ்துக்களாலும் குடல் புண்ணாகிவிடும். இதனால் வாயிலும் புண்கள் உண்டாகும்.

இவர்கள் குறிஞ்சாக் கீரையை பாசிப் பருப்புடன் சேர்த்து காரம் சேர்க்காமல் வேகவைத்து கடைந்து நெய் கலந்து உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் விரைவில் குணமாகும். மேலும் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.

உடல் வலுப்பெற

குறிஞ்சாக் கீரையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் காலையில் கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோயின் தாக்கம் ஏதுமின்றி நல்ல வலுவுள்ள உடலைப் பெறலாம்.

பசியைத் தூண்ட

சிலர் எப்போது பார்த்தாலும் பசியில்லை என்று புலம்பிக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் தினமும் குறிஞ்சாக் கீரையை பாசிப்பருப்புடன் சேர்த்து சமைத்து உணவில் சேர்த்துக்கொண்டால் நன்கு பசியைத் தூண்டும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

உடல் சூட்டைத் தணிக்க

வாரம் இருமுறை குறிஞ்சாக் கீரையை உணவில் சேர்த்து உண்டு வந்தால் உடல் சூடு தணியும்.

இருமல், சுரம் நீங்க

கடும் சுரம், இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் குறிஞ்சாக் கீரையை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை அருந்தி வருவது நல்லது.

ஈரல் பலப்பட

குறிஞ்சாக் கீரையை வேகவைத்து அதனுடன் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஈரலில் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.

மேலும் குறிஞ்சாக் கீரையை ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி நெறிகட்டிய இடத்தில் வைத்து கட்டினால் வலி குறையும்.

காணாக்கடி

எத்தகைய விஷக்கடியாக இருந்தாலும் குறிஞ்சாக் கீரையை கடிபட்ட இடத்தில் வைத்து கட்டியும், கீரையை கஷாயம் செய்து சாப்பிட்டால் விஷம் விரைவில் முறியும்.

பாலுறவில் மன அழுத்தம் வேண்டாம்

பொதுவாக வாழ்க்கையில் கணவன் – மனைவி பந்தம் அல்லது இல்லறம் – தாம்பத்யம் என்பது புனிதமானது; அதனைத் தவிர்த்து மனித வாழ்க்கை அமைவதில்லை என்பதைப் பற்றியெல்லாம் ஏற்கனவே பார்த்தோம்.

பலருக்கு தாம்பத்ய வாழ்க்கையைப் பற்றிய பல எதிர்பார்ப்புகளும், அதே அளவுக்கு சந்தேகங்களும் இருக்கலாம்.

என்னதான் உடலளவில் பலசாலியாக இருப்பவர்களும், முதலிரவு நாளில், மனைவியுடன் தனிமையில் தள்ளப்படும்போது, ஒருவித அச்சம், பீதி இருப்பது இயற்கையே.

பலருக்கு முதலிரவை நினைத்தே ஒருவித பயம் ஏற்படக்கூடும், இந்த பயம் ஆண்/பெண் இருபாலருக்கும் இருப்பது இயல்பே.

வேறு சிலருக்கு முன் கூட்டியே விந்தணு வெளியேறி விடுமோ? முழு அளவில் பாலுறவுப் புணர்ச்சியை வைத்துக் கொள்ள முடியாதோ? என்பன போன்ற பலவாறான சந்தேகங்கள் எழலாம். அந்த சந்தேகங்கள் உண்மையாகக் கூட இருக்கலாம்.

ஆனால், பாலுறவுப் புணர்ச்சியைப் பொருத்தவரை இருவரும் ஒருங்கே, ஒரே நோக்கத்துடன் மாற்று சிந்தனைகளுக்கு இடம் அளிக்காமல் புணர்ச்சியில் ஈடுபடுதல் அவசியம்.

வேறு எதைப்பற்றியும் கவலை கொள்ள வேண்டாம். அப்படியே உங்களுக்கு ஏதேனும் குறை இருப்பதாக, இருபாலரில் யாராவது உணர்ந்தால், திருமணம் ஆகி ஓரிரு மாதங்களுக்குள் உரிய மருத்துவரை அணுகி உங்களின் சந்தேகங்களுக்கு விடை காணவும்.

முதலில் மன அழுத்தம் அறவே கூடாது. மனதை இலேசாக வைத்துக் கொண்டு, பாலுறவுப் புணர்ச்சியை மேற்கொள்ளுங்கள். ஒருவித பயம் அல்லது அழுத்தத்துடன் நீங்கள் புணர்ச்சி கொள்வீர்களானால், அது உங்களுக்கும் திருப்தி அளிக்காது. உங்களின் துணையையும் திருப்தி கொள்ளச் செய்யாது.

எனவே கவலையின்றி இருங்கள். களிப்புடன் பாலுறவை வைத்துக் கொள்ளுங்கள்.

2010 – எதிர்கால இணையவாய்புகள்

இணைய வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் எதிர்பாராத திசைகளில் வளர்ந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சியை வழங்கி வருகிறது. உலகைச் சுருக்கி, மக்களை இணைக்கும் பணியை மேற்கொள்ளும் சக்திகளில் இணையத்திற்குத்தான் முதலிடம் என்று சொன்னால் அது மிகையாகாது. நிறுவனங்கள் மட்டுமே பயன்படுத்திய இணைய வெளி இன்று உலக மக்கள் அனைவரின் சொத்தாக உயர்ந்துள்ளது. ஒவ்வொருவரும் அதில் தங்களுக்கென ஓர் இடத்தை, உலகை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் இன்டர்நெட் வளர்ந்துள்ளது. இந்த ஆண்டில் இந்த வளர்ச்சி மேலும் தீவிரமாகும் என எதிர்பார்க்கலாம்.

கூகுள் வேவ்: இந்த ஆண்டில் கூகுள் வேவ் பயன்பாடு நிச்சயம் அதிகரிக்கும். 2009 ஆம் ஆண்டு மே மாதம் இது குறித்த செய்தி வெளியானது. இருப்பினும் அதிக எண்ணிக்கையில் இதில் உறுப்பினர்கள் சேரவில்லை. ஏனென்றால் அறிவிக்கப்பட்ட நிலையிலும், இது தொடர்ந்து வடிவமைக்கப்பட்டு வந்தது. சில வாரங்களுக்கு முன் கூகுள் வேவ் இணையத்தில் இடம் பெற்றது. கூகுளின் வழக்கமான நடைமுறையாக, இந்த தளத்தில் சேர்ந்து செயல்பட, உங்களுக்கு அழைப்பு கிடைக்கப்பெற வேண்டும். இந்த முறை உங்களுக்கு அழைப்பு வேண்டி, நீங்கள் விண்ணப்பிக்கலாம். https://services. google.com/fb/forms/wavesignup// என்ற தளத்தில் இதற்கான விண்ணப்பம் கிடைக்கிறது. கூகுள் “அலை”தளத்தில் உறுப்பினர்கள் இணைந்து உரையாடலாம்; டாகுமெண்ட்களை உருவாக்கிப் பரிமாறிக் கொள்ளலாம்; அத்துடன் போட்டோ, வீடியோ, மேப் எனப் பல்வேறு தகவல் கோப்புகளை ஒருவருக்கொருவர் கொள்ளலாம். முதலில் நீங்கள் ஓர் அலையை உருவாக்குகிறீர்கள். பின் அதில் உங்களுக்குப் பிடித்த நபர்களை இணைக்கிறீர்கள். இவர்கள் ஒவ்வொருவரும் இந்த அலையில் அமைக்கப்படும் பைல்களை எடிட் செய்திடலாம். எந்த காலகட்டத்திலும் ஒரு பைல் எப்படி உருவானது என்று ரீவைண்ட் செய்து பார்க்கலாம். இதுவும் ஆண்ட்ராய்ட், குரோம் போல ஓப்பன் சோர்ஸ் முறையில் உருவானது என்பதால், இதில் புரோகிராம் டெவலப் செய்பவர்கள் இதனை மேம்படுத்தலாம். இது ஒரு வரவேற்கத்தக்க முயற்சி மட்டுமின்றி, ஒருவருக்கொருவர் இணைந்து செயல்பட நல்ல தளமாகவும் பயன்படும். எனவே இந்த ஆண்டு நிச்சயம் இத்தளம் குறித்து அதிகம் பேசப்படும் அளவிற்கு பிரபலமாகும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த தகவல்களைப் பெற http://wave.google.com/ என்ற தளத்தில் உங்கள் பெயரைப் பதிந்து வைக்கலாம்.

இணைய வெளி சமுதாய வலைமனைகள் (Social Network) : 2008 ஆம் ஆண்டு தொடங்கிய சோஷியல் நெட்வொர்க் தளங்கள், சென்ற ஆண்டில் மிக வேகமாக வளர்ந்தன. ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யு–ட்யூப் போன்றவை இவற்றைத் தங்களுடன் இணைத்துத் தொடர்பு கொள்ள அனுமதி தந்தன. இந்த வளர்ச்சி வரும் ஆண்டில் இன்னும் பெருகும்.
பணம் சம்பாதித்தல்: இன்டர்நெட் மூலம் ஏமாற்றி பணம் தேடுவது இன்னும் நடந்து கொண்டு இருந்தாலும், இணைய தளங்களில் விளம்பரம் மற்றும் பிற நாணயமான வழிகள் மூலம் பணம் ஈட்டுவது தொடர்ந்து நடைபெறுகிறது. குறிப்பாக சோஷியல் நெட்வொர்க் தளங்கள் இதற்கு வழி தருகின்றன. விளம்பரங்களில் ஒவ்வொரு கிளிக் ஏற்படுவதற்கும் பணம் என்ற வகையில் இவ்வகை வர்த்தகம் பெருகி வருகிறது. இது இந்த ஆண்டில் அதிகம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கலாம்.

இன்டர்நெட் டிவி: சென்ற ஆண்டில் அவ்வளவாக எடுபடாத இன்டர்நெட் டிவி, 2010ல் நிச்சயம் பரவலாகப் பயன்படுத்தப்படும் அளவிற்கு வளரும். 2006ல் கூகுள் யு–ட்யூப் தொடங்கியபின், வீடியோ பகிர்தல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிவேக இன்டர்நெட் இணைப்பு, அதிக திறனுடன் இயங்கும் ஸ்ட்ரீமிங் வீடியோ, நல்ல தரமான படங்கள், தனிப் பொருள் குறித்த விளம்பரப் படங்கள் என இந்த பிரிவில் பலமுனை விரிவாக்கம் இந்த ஆண்டில் நிச்சயம் ஏற்படும். யு–ட்யூப் இதில் தொடர்ந்து முன்னிலை வகிக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்திய மண்ணில் விரைவாக பரவும் சீனத்து விஷ(ம)ம்

குறைந்த விலைக்கு கொடுத்தால், எதையும் எளிதாக இந்திய மண்ணில் விற்க முடியும் என்பதை சர்வதேச அளவிலான நிறுவனங்கள் நிரூபித்து வருகின்றன. அமெரிக்காவில் இருந்து குப்பையை கூட கண்டெய்னர்களில் இறக்குமதி செய்தது இந்தியாவில் உள்ள ஒரு பெரிய “டுபாக்கூர்’ நிறுவனம்.

உலகின் குப்பை தொட்டியாக மாறி விட்ட இந்தியாவிற்குள் எந்த பொருள் வருகிறது, எந்த பொருள் செல்கிறது என்பதை சுங்க இலாகாவும் கூட கண்டு கொள்ளாது. கண்ணை மூடிக் கொள்ள அவர்களுக்கு “கரன்சியை’ வீசினால் போதும் என்பதை சமீப கால உளவுத்துறை நிரூபித்தது. சென்னை விமான சரக்கு வளாகத் தோடு மட்டுமே அந்த அதிரடி சோதனை நின்று போனது. துறைமுகம், நீண்ட கடற்கரை, என எவ்வளவோ வழிகளில் இந்தியாவிற்குள் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால், கண்டெய்னரில் ஒரு பொருள் இருப்பதாக கூறி, வேறு பொருள் களை இறக்குமதி செய்கின்றனர்; ஏற்றுமதியும் செய்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பொருளின் பெயரை மாற்றி, வேறு பொருளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். கடல் போன்ற வெளிநாட்டு வர்த்தகத்தில் நடக்கும் “ஊழல்’ வெளிச்சத்திற்கு வரவே இல்லை. இவை, இப்படியிருக்க, சீனாவோ, இந்திய மார்க்கெட்டை சீர்குலைக்க பல பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

கண்டெய்னர், கண்டெய்னராக வந்திறங்கும் இந்த பொருட்கள், உரிய முறையில் பரிசோதிக்கப்படுகிறதா என்பதே சந்தேகம். அவை எப்படி விற்பனைக்கு செல்கின் றன; என்ன விலைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன; பொருளின் மதிப்பு என்ன; வரி விதிப்பு எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. பத்து ரூபாய்க்கு கடிகாரம்… 200 ரூபாய்க்கு பேன்… ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்… ஐயாயிரம் ரூபாய்க்கு பைக்… என சீனா பொருட்கள் கிடைக்கும் என்பது சில ஆண்டுகளுக்கு முன் விஷமாக பரவிய விஷயம். இப்போதோ… மெல்ல மெல்ல உண்மையாகி விடுமோ என்ற அச்சம் தொழில் நிறுவனங்களிடையே பரவி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் தரமற்ற சீனத்து பொருட்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கவில்லை. டூத்பேஸ்ட், பொம்மை, சாக்லேட், பிளாஸ்டிக் பொருள், பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள், பதப்படுத்தப்பட்ட மீன் என பல பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. அமெரிக்காவில் இந்த பொருட்களில் நச்சுத்தன்மை கலந்துள்ளதாகவும், பொம்மையில் பூசப்பட்ட பெயின்ட், அமெரிக்க குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்தன. ஐரோப்பாவிலும் சீனாவின் சில பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டன.

சர்வதேச அளவில், விற்பனை போட்டியை அதிகரிக்கவும், ஏற்றுமதியில் சீனாவின் பங்கை அதிகரிக்கவும் இப்படி “மலிவான’ பொருட்களை ஏற்றுமதி செய்தது. சீனாவின் உற்பத்தி எப்போதுமே “மெகா’ அளவில் இருக்கும். பெரிய பெரிய தொழிற்சாலைகளில் தயாரான இந்த பொருட்கள் மிக அதிமாக இருக்கும். இப்படிப்பட்ட பொருளை சீனாவிற்கு அமெரிக்கா திரும்ப அனுப்பியது. இவற்றையெல்லாம் என்ன செய்வது என்ற தவித்துக் கொண்டிருந்த சீனாவுக்கு, அருகிலேயே ஒரு நல்ல சந்தை இந்தியா தென் பட்டது. எல்லையை தாண்டினால் போதும்; இந்தியாவிற்குள் ஊடுருவி விட முடியும் என சந்தோஷப்பட்டது சீனா. எனவே, இந்தியாவிற்குள் ஊடுருவ இரண்டு வகையான வழிகளை பயன்படுத்தியது. முதலாவது, நேரடியாக ஏற்றுமதி செய்வது… இரண்டாவது மறைமுகமாக கடத்தலில் ஈடுபட்டு இந்தியாவிற்குள் பொருளை குவிப்பது. இந்த இரண்டிலுமே சீனா, இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது எனக் கூறலாம். சமீபத்தில் சென்னையில், வேறு பொருளை இறக்குமதி செய்வதாக கூறி, விவசாயத்திற்கு பயன்படும் வீரியமிக்க பூச்சி மருந்தை அனுப்பி வைத்திருந்தது. இந்த பூச்சி மருந்து, அதிக விஷத்தன்மை வாய்ந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கண்டுபிடித்ததோ ஒரு முறை தான். இந்த ஒன்றே போதும், சீனத்து விஷங்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகிறது என்பதற்கான சாட்சி.

இதே போன்று, ஆட்டோ உதிரிபாகங்களை போலியாக தயாரித்து இந்தியாவிற்குள் அனுப்பி வைத்துள்ளது. “ஸ்பார்க் பிளக்’கிற்கு பெயர் போன அந்த நிறுவனத்தின் போலி தயாரிப்பு இந்தியாவிற்குள் ஊடுருவியது. பத்து மடங்கு குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பொருட்களை எளிதாக அடையாளம் காண முடியாது. இந்த பொருட்கள் மட்டுமல்ல… சீனாவிலிருந்து இந்திய பொருட்களின் தரமான பொருளுக்கு இணையான போலிகள் ஏராளமாக ஊடுருவியுள்ளது அதிர்ச்சி தரும் விஷயம். “பாடி ஸ்ப்ரே’ எனப்படும் வாசனை திரவியம், பூசும் பவுடர் போன் றவை போலியாக தயாரிக்கப்பட்டு இங்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. போலியான பொருட்கள் இங்கு எளிதாக விற்பனையாகின்றன. மும்பையை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனம், சீனாவிலிருந்து வரக்கூடிய பொருட்களை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம், தனது நிறுவனத்தின் போலி பொருட்களை ஆராய்ந்து கண்டறிந்து தடுத்து வருகிறது. இதற்கென தனிப்படை ஒன்றை அமைத்தது. ராமநாதபுரத்தில் இந்த பொருள் வந்திறங்கியதும் அதை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்த நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பொருள் என்பதால், அடையாளம் கண்டு தடுப்பதில் முனைப்பு காட்டுகிறது. இதுவே வேறு பொருளாக இருந்தால், யாரும் தடுக்க முடியாது.

சீனாவிலிருந்து வந்திறங்கும் பொருளால், என்ன பாதிப்பு ஏற்படுகிறது? என ஆய்வு செய்தால், அமெரிக்காவில் தடை செய்யப் பட்ட பொருளை இந்தியாவில் குவிக்கிறது. இதனால், சீனாவின் சந்தையாக இந்தியா மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நச்சு பொருளை காரணம் காட்டி தடை விதிக்கப் பட்டிருந்தால், அந்த பொருளை பயன்படுத்தும் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். சீனத்து பொம்மைகள் மீது பூசப்பட்டுள்ள பெயின்ட், “நச்சுத்தன்மை கொண்டது; குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்’ என தடை செய்யப்பட்ட பொருள், இந்தியாவில் எளிதா விற்பனை செய்து விட முடியும். இங்கு சீனாவின் பொம்மைகளுக்கு தடை ஏதும் இல்லை. இவ்வளவு நுணுக்கமாக இந்தியா ஆய்வு செய்யாது என்பது ஒரு பிளஸ் பாயின்ட். இந்த பொம்மைகள், அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதால், சீனாவுக்கு நஷ்டம். இந்தியாவில் மதிப் பில்லாமல், கொண்டு வந்து தள்ளினால் போதும் என்ற நிலை உள்ளது. மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த பொம்மைகள், இந்திய கடைகளில் நல்ல விலை போகின்றன. ஒட்டுமொத்தமாக இறக்குமதி செய்து விற்போருக்கு பல மடங்கு லாபம் கிடைக்கிறது. வெறும் நான்கு ரூபாய் மதிப்புள்ள சீனத்து பொம்மை, நாற்பது ரூபாய்க்கு விற்கின்றனர்.

கோவையில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஏதாவது ஒரு பொருளாவது சீனாவின் தயாரிப்பாக இருக்கும். பெரிய அளவிலான ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் சீனாவின் பொருட்கள் தாரள மாக விற்கப்படுகின்றன. இவை பெரும் பாலும் பொம்மைகள் தான். இதே போன்று, கடைகளில் சீனாவிலிருந்து இறக்குமதியான துடைப்பம் முதல் மொபைல் வரை கிடைக் கின்றன. இவை பல நேரடியாக வரி செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டவை; பல கடத்தல் மூலம் வந்தவை. இவ்வாறு பொருட்கள் வந்து இறங்குவதால், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்படுகின்றன.

கோவையில் மில்கள் பல டெக்ஸ்டைல் மெஷின்களை இறக்குமதி செய்தன. இந்த சீனாவின் இயந்திரங்கள், பல சரிவர இயங்கவில்லை. பழுதானால், சரி செய்வது எளிதாக இருக்கவில்லை. இந்திய மின் அழுத்த வேறுபாடுகளுக்கு இவை ஈடுகொடுக்கவில்லை. சீனாவின் பொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதால், பல குறு, நடுத்தர, தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. சிறு, சிறு வீட்டு உபயோகப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், பிளாஸ்டிக் பொருள் தொழில் நிறுவனங்கள் பல வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்துள்ளன. சில இழுத்தும் மூடப்பட்டுள்ளன. சீனப்பொருள் அளவுக்கு இவை “சீப்’ ஆக இல்லை என்பது ஒரு காரணம்.

சீனாவில் பெரும் அளவில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சீன அரசு அதிக அளவில் மானியமும் தருகின்றன. அங்கு அரசு தான், விலையை நிர்ணயம் செய்கிறது. இந்தியாவில் அவ்வாறு இல்லை. ஒவ்வொரு பொருளும் தயாரிக்க அதன் உற்பத்தி விலையோடு, வரியும் இருக்கும். வரிக்குமேல் லாபமும் போக்குவரத்து செலவும் சேர்ந்து இருக்கும். இந்தியாவில் சீனப்பொருள் வந்திறங்கும் அளவு ஒவ்வொரு ஆண்டும் 7 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. இவை, இந்திய பொருளின் மதிப்பில் 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விலை குறைவாக உள்ளது. 2006-07ம் நிதியாண்டில் சீனப்பொருள் இறக்குமதி அளவு 56 ஆயிரத்து 900ம் கோடியாக இருந்தது. கடந்த ஏப்ரல் – டிசம்பர் 2009ல், இது ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என ரிசர்வ் வங்கி கணக்கு தெரிவிக்கிறது. இவற்றில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிக பங்கு வகிக்கிறது. உணவுப்பொருள்களில் குறிப்பாக சாக்லேட் போன்றவற்றில் சீனாவின் எச்சரிக்கை வாசகங்கள் கூட இடம் பெற்றுள்ளன. இந்த வகை சாக்லேட்டுகள் உடல் நலத்தை பாதிக்கும் எனவும் கூட அச்சிட்டுள்ளனர். எனவே, உங்களது குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி தரும்போதும் கூட எச்சரிக்கை தேவை.

சீனாவிலிருந்து வந்த பொருட்களுக்கு பல சில்லறை விற்பனை கடைகளில் பில் கிடைப்பதில்லை. இவற்றிற்கென எந்த பதிவேடும் பராமரிப்பில் இல்லை. கணக்கில் இல்லாத அளவிற்கு வரி ஏய்ப்பும் இதில் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, அரசுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. வணிக வரித்துறையோ, சுங்க இலாகாவோ இவற்றில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வளவு இருந்தாலும், சீனா தரமான பொருளை உருவாக்குவதில் முன் னணியில் தான் உள்ளது. இந்தியாவை காட்டிலும் தொழில்நுட்பத்திலும், அடிப் படை தொழிற் சாலை கட்டமைப்பு வசதியிலும் போக்குவரத்து வசதியிலும் எவ்வளவோ முன்னேற்றங்கள் சீனாவில் உள்ளன. எதையும் மலிவாகவும் சர்வதேச தரம் மிகுந்த பொருளை தயாரிக்கும் வல்லமை படைத்தது சீனா. அங்குள்ள உற்பத்தி திறன், மனித வளம் இந்தியாவை விட பல மடங்கு அதிகம். ஆனால், தரமான பொருட்கள் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அங்கு செல்லுபடியாகாத பொருட்களை இந்தியாவில் குவிக்கிறது. எனவே, சீனத்து பொருட்களை வாங்கும்போது, கவனமாக வாங்குங்கள்.

தரமானதா… எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத பொருளா… என்பதை உணர்ந்து வாங்க வேண்டும். வெளிநாட்டு பொருள் மீது பொருள் தரக்கட்டுப் பாடு, ஆய்வு வசதி, உணவு பொருளின் தரம், நச்சுத்தன்மை பரிசோதனை போன்றவைகளை அரசு ஏற்படுத்துவது அவசியம். வெளிநாட்டு பொருட்களுக்கு உள்ள விலை வித்தியாசத்தை தவிர்க்க, அரசு உரிய அளவில் வரி விதிக்க வேண்டும். இந்த வரி வருமானத்தைக் கொண்டு, இந்திய குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அப்போது தான் இந்தியாவிலும் தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதையும், தொழிலாளர் வேலை இழப்பையும் தவிர்க்க முடியும்.

ரத்த அழுத்தத்தை குணமாக்க ஒரு மணி நேரம் போதும்

உயர் ரத்த அழுத்தத்தை குணமாக்க, புதிய முறையிலான சிகிச்சை ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளது, அந்நோயால் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.இந்த புதிய சிகிச்சை முறையால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படும் வாய்ப்பு குறைந்துள்ளது.
இந்த புதிய முறையிலான சிகிச்சைக்கு “ரீனல் சிம்பதடிக் நெர்வ் அப்ளேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.இந்த சிகிச்சை முறையில், ஒயர் ஒன்று, சிறுநீரகத்திற்கு அருகில் இருக்கும் ரத்த குழாயினுள் செலுத்தப்பட்டு, மிதமான ஷாக் கொடுக்கப்படுகிறது. இதனால், ரத்த அழுத்தத்தை அதிகரிக்குமாறு, மூளையில் இருந்து அனுப்பப்படும் சிக்னல்கள் தடுக்கப்படுகின்றன. பிரிட்டனை சேர்ந்த அந்தோணி ஹென்றி(68) என்பவர் தான், அந்நாட்டில், முதன் முதலில் இந்த சிகிச்சையை செய்து கொண்டுள்ளார். இவருக்கு இந்த சிகிச்சை அளிக்க ஒரு மணி நேரம் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது.

பிரிட்டனில் மொத்தம் 1.5 கோடி பேர், உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, கணக்கிடப்பட்டுள்ளது. இவர்களில், பாதி பேருக்கு, தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை.நூற்றுக்கணக்கானோர், உயர் ரத்த அழுத்தத்தால், மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் போன்றவை ஏற்படாமல் தடுக்க, வாழ்நாள் முழுவதும் மருந்துகள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலையும் நிலவுகிறது. அத்தகையோருக்கு இந்த புதிய சிகிச்சை முறை மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று பிரிட்டன் டாக்டர்கள் கருதுகின்றனர்.இதுகுறித்து, டாக்டர் மெல் லோபோ என்பவர் கூறுகையில், “இது, உயர் ரத்த அழுத் தத்திற்கான சிகிச்சை முறையில், மிகச் சிறந்த வளர்ச்சி’ என்றார்.

ஒரு சில நிமிடங்கள் போதும் புத்துணர்ச்சி பெற…

புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சையால், மனமும் உடலும் சோர்வுற்ற நோயாளிகளை உற்சாகப்படுத்த, பல்வேறு வழிமுறைகள் பின்பற்றப் படுகின்றன. அவற்றில் ஒன்று தான் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பின்பற்றப்படும், “நியூ ஏஜ் தெரபி’ எனும் புது யுக சிகிச்சை முறைகள். இந்த “புதுயுக சிகிச்சை’ முறைகள் குறித்து பெண் நலம் அமைப்பின் கதிரியக்க நிபுணர் டாக்டர் சரோஜினி பிரகலாத் கூறியதாவது:
சைனீஸ் பவர் ஹீலிங், ரிலீஸ் டெக்னிக்ஸ், எமோஷனல் டெக்னிக்ஸ் மற்றும் தேட்டா ஹீலிங் ஆகிய இந்த நான்கு சிகிச்சை முறைகள் மூலம் நோயாளிகள் மனதில் பெரும் மாற்றத்தை கொண்டு வர முடியும். குறிப்பாக, புற்றுநோய் போன்ற வியாதிகளுக்கான சிகிச்சை பெற்றவர்கள், உடலால் அந்நோயில் இருந்து விடுபட்டிருப்பர். ஆனால், மனம் மிகவும் சோர்வுற்ற நிலையில், எதிலும் பிடிப்பில்லாது ஒரு விட்டேற்றி உணர்வுடன் இருக்கும்.
நோயால் மீண்டும் பாதிக்கப்படலாம் என்ற அச்ச உணர்வில் இருந்து, அவர்களை மீட்டு வருவது எளிதானதல்ல. ஆனால், மேலே கூறிய முறைகள் மூலம் நோயாளிகளிடையே, நேர்மறை எண்ணங்களை ஒரு சில நிமிடங்களிலேயே கொண்டு வர முடியும். ஆற்றல் மிக்க இச்சிகிச்சை முறைகள் மூலம் உடல் வலி, சோர்வு, கவலை, தாழ்வு மனப்பான்மை, மரண பயம் ஆகிய <உணர்வுகள் அனைத்திலிருந்தும் அவர்கள் விடுவிக்கப்படுகின்றனர். இவை அனைத்துமே அறிவியல் ரீதியாக வெளிநாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டவை. இதற்கு மருந்து, உபகரணங்கள், கடவுள் நம்பிக்கை மற்றும் தியானம் போன்ற எதுவுமே தேவையில்லை. தன் உறவினருக்காக, மனைவிக்காக, கணவருக்காக, நண்பருக்காக என சம்பந்தப்பட்டவர்கள், இங்கிருந்தபடியே நோயாளிகளுக்குத் தேவையான மன ஆற்றலை தர முடியும். அது தான் இச்சிகிச்சை முறையின் மகத்துவம்.
நோயாளிகளின் உடல் மற்றும் மனம் ஆகியவற்றின் நிலைக்கேற்ப தேவையான சிகிச்சை முறைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அளிக்கப்படுகின்றன. ஒரு சில நிமிடங்கள் 100 சதவீதம் ஈடுபாட்டுடன் மேற்கொள்ளப்படும் போது, இச்சிகிச்சை முறைகள் வியக்கத்தக்க வகையில் பலன்களைத் தரும்.
இவ்வகையில், சீன மருத்துவர் ஸீ சென் குவே என்பவரின் ஹீலிங் முறையை பின்பற்றிய ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகள் தாங்கள் மனமகிழ்வுடன் உற்சாகமாக வாழ்வதுடன் மீண்டும் புற்றுநோய் தங்களுக்கு வரவில்லை என்றும் நிரூபித்துள்ளனர்.
ஆத்மா, மனம், உடல் ஆகிய மூன்றையும் ஒரு சேர உற்சாகப்படுத்தி, ஆழ்மனதில் இருக்கக் கூடிய எதிர்மறை எண்ணங்களை அகற்றி, புதுவாழ்வினை மலரச் செய்யும் இம்முறைகள் மூலம் பொது வாழ்வில் சந்திக்கக் கூடிய அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணலாம். இவ்வாறு சரோஜினி பிரகலாத் கூறினார்.

சுட்டெரிக்குமா.. 2010?

இந்த ஆண்டு எப்படி இருக்கும்? பணம் கொட்டுமா…பதவி உயர்வு வருமா…கார் வாங்குவோமா என் றெல்லாம் தான் மனித மனம் கணக்கு போடும்.புத்தாண்டு ஜோதிடத்தை துருவித்துருவி பார்ப்பர் பலரும். ஆனால், 2010ல் உண்மையில் கவலைப்பட வேண்டியது எது பற்றி தெரியுமா, 2009 போலவே 2010 சுட்டெரிக்குமா என்பது தான்.

புவி வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் என்றெல்லாம் விஞ்ஞானிகள் பீதியை கிளப்பிக் கொண்டிருக்கின்ற னரே… அது பற்றி ஒவ்வொரு மனிதனும் முன்னெச்சரிக்கையுடன் களம் இறங்க வேண்டிய தருணம் நெருங்கி வருகிறது.
அட, நம்ம தலைமுறையிலா விபரீதம் வரப்போகிறது…? “2012 – எண்ட் ஆப் தி வேர்ல்டு’ என்று ஒரு ஹாலிவுட் படம் வந்து நம்மையெல்லாம் பீதி கிளப்பியதே, அதுபோல, உலகம் அழிந்து விடுமோ, என்று தான் நினைக்கின்றனர் பலர். ஆனால், உலக வெப்பமயமாதல் என்பது, கொஞ்சம், கொஞ்சமாக மனிதர்களை, இந்த பூமியை கொல்லும் மெகா கொடூரன்.
சர்வதேச அளவில் விஞ் ஞானிகள் கூட்டம் போட்டு, ஆராய்ச்சி செய்து, உலக வெப்பத்தை குறைக்க எவ்வளவோ வழிகளை சொல்லி விட்டனர்; விபரீதங்களையும் பட்டியலிட்டு விட்டனர். முடிவெடுக்க வேண்டியது உலக நாடுகளின் கையில் தான் உள்ளது.
“உலக போலீஸ் காரன்’ என்று அழைக் கப்படும் அமெரிக்கா தலைமையில் பணக்கார நாடுகள் ஒரு பக்கம்; இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகள் ஒரு பக்கம். இரண்டிலும் சேராத பிச்சைக்கார நாடுகள், “வாய் பேசா அடிமைகளாக’ இன்னொரு பக்கம்.
“கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறோம் இல்லே…அதனால், நீங்க தான் அதிகமாக வசதியை குறைக்கணும்; வெப்பமயமாதலுக்கு காரணமான விஷயங்களை கட்டுப்படுத்த வேண்டும்!’ என்பது வளரும் நாடுகளுக்கு பணக்கார நாடுகள் இடும் கட்டளை. ஏழை நாடுகளை கேட்கவே வேண்டாம்; சொன்னதை கேட்டு வாய் மூடியிருக்க வேண்டியது தான். இப்படி பிரச்னை எழுந்ததால் தான், சமீபத்தில் டென்மார்க் நாட்டு தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த, “பருவநிலை மாற்ற விபரீத தடுப்பு மாநாடு’ முடிவெடுக்க முடியாமல் தோல்வியில் முடிந்தது. இந் தாண்டு மீண்டும் கூடிப் பேச போகின்றனார். மீண்டும், “உர்ர்ர்…’ என்று தான் ஆளாளுக்கு திரும்பிப் போவர். இவர்கள் காலம் தாழ்த்தலாம்; காத்திருக்கலாம்.
ஆனால், விபரீதங்கள் காத்திருக்குமா? உலக வெப்பமயமாதலின் பயங்கர விளைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ ஆரம்பித்து விட்டன.
*கடந்தாண்டு வெயில் எப்படி சுட்டெரித்தது என்பது தெரிந்தது தானே; மாலை ஆறு மணிக்கும் கூட, பகல் 12 மணி போல சுரீர் என்று சுட்டது. இந்தாண்டு மட்டும் குறையுமா என்ன? இதுவரை 0.8 சென்டிகிரேட் வெப்பம் அதிகரித்து விட்டது; விஞ்ஞானிகளின் கணிப்பு, வெப்பம் 0.3 சென்டிகிரேட் அதிகரிக்கும் என்பது தான். 2012ல் தான் அதிக பட்ச சுட்டெரிப்பு ஆரம்பிக்குமாம்.
*சுட்டெரித்தால் என்ன விளைவுகள் ஏற்படும்? பனிமலைகள் உருகி வெள்ளம் பெருக்கெடுக்கும். இமயமலையில் கங்கோத்ரி பனிமலையில் இருந்து தான் கங்கை நதி, உற்பத்தியாகிறது. இமயமலை உருகிக் கொண்டிருக்கிறது. இல்லை, உருகவே இல்லை என்று பேச்சுக்கு சொன்னாலும், கங்கையில் வெள்ளப்பெருக்கெடுக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
*உலகின் ஒரு பகுதி ஆர்க்டிக் கடலில் முடிகிறது; பனிக்கடலான அது இப்போது உருக ஆரம்பித்து விட்டது. மேற்கு அண்டார்ட்டிக்காவில் பனி உருகி, பென்குயின்கள் உட்பட பனி வாழ் இனங்கள் அழியும் ஆபத்து ஆரம்பமாகி விட்டது.
*இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், அதாவது, 2100 ல் உலகில் கடல் மட்டம் 23 அங்குலம் உயர்ந்துவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அப்படியானால், மும்பை போன்ற இடங்களில் கடல் சூழ்ந்து விடும்; கடல் இல்லா பகுதிகளில் எல்லாம் பீச் வந்து விடும்.
*வெப்பமயமாதலின் விபரீதத்தில் நம்மை பெரிதும் அஞ்ச வைக்கப்போவது எது தெரியுமா? கொசு போன்ற சிறிய, “லொள்ளு’ பூச்சிகள் தான். இந்த பூச்சிகள் எல்லாம் மெகா சைசுக்கு பெருத்து விடுமாம். மலேரியா, டெங்கு, பன்றிக்காய்ச்சல் போல புதுப்புது நோய்கள் ஆட்டிப் படைக்கும்.
* கடல் நீர் அதிகமாக இருக்கும்; ஆனால், குடிநீர் பெரும் பற்றாக்குறையாகி விடும். 2025ல் இப்பிரச்னை பல நாடுகளில் தலைதூக்க ஆரம்பித்து விடும்.
* கடல் சீற்றம், நகரங்களை விழுங்குவது சிறிது, சிறிதாக பல இடங்களில் ஏற்படும். அதனால், பல நகரங்களில் இருந்து மக்கள் வெளியேற வேண்டியிருக்கும்.
* வனங்களில் உள்ள சிங்கம், புலிகளுக்கு ஆபத்து ஏற்படும். விஞ்ஞானிகள் கணிப்பின்படி, 10 லட்சம் வன உயிரினங்கள் அழிந்து விடும் என்கின்றனர்..

2010 – வளரும் இன்டர்நெட்

இந்த ஆண்டில் இன்டர்நெட் தொழில் நுட்ப வளர்ச்சி, சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் புதிய மாற்றங்களைத் தருவதாக அமையும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அவற்றின் சில அம்சங்களை இங்கு காணலாம்.
கிளவுட் கம்ப்யூட்டிங்: 2009ல் அறிமுகமான கிளவுட் கம்ப்யூட்டிங் முறை இந்த ஆண்டில் தீவிரமாகும். டேட்டா பாதுகாப்பு என்பது கேள்விக் குறியானாலும், நமக்குத் தேவையான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் எந்தவித சிக்கலும் இன்றி எந்நேரமும் கிடைப்பது மற்றும் டேட்டா சேமித்து வைத்து எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய வசதி ஆகிய இரண்டும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை கிளவுட் கம்ப்யூட்டிங் பக்கம் இழுத்துச் செல்லும் பெரிய விஷயங்களாக அமையும். இதன் பயன்பாடு அதிகமாகும் போது அதற்கான விதிமுறைகள் சீரமைக்கப்பட்டு கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதனைச் சார்ந்து கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவிற்கான தனி சாப்ட்வேர் அப்ளிகேஷன்களும் அதிக அளவில் உருவாக்கப்படலாம்.

இன்டர்நெட் பேங்கிங்: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த வசதி, 2010ல் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளில் அக்கவுண்ட் தொடங்கியவுடன் பாஸ்புக் வாங்குவது போல உடனடியாக இன்டர்நெட் அக்கவுண்ட்டிற்கான நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. ஏனென்றால் இந்த வழி வங்கிகளுக்கு வேலைச் சுமையைப் பெரிய அளவில் குறைக்கிறது. நிதி பரிமாற்றங்களை அறிந்து கொள்ளுதல், டிமாண்ட் ட்ராப்ட், செக் புக் தேவைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளல், வேறு அக்கவுண்ட்களுக்கு நிதி மாற்றுதல், அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் பெறுதல் என அனைத்து நடைமுறைகளையும் வங்கிக்கு செல்லாமலே நாம் மேற்கொள்ள முடியும் என்பதால் இன்டர்நெட் வழி பேங்கிங் மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. இதன் பாதுகாப்பு தன்மையினை மக்களிடையே நல்ல முறையில் கொண்டு சென்றால், நிச்சயம் இந்த வழி பெரிய அளவில் பயன்படுத்தப்படும். பாதுகாப்பினைப் பலப்படுத்த சட்டங்களும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக இன்டர்நெட் குற்றங்கள் அறிவிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதைக் காட்டிலும், இழந்த பணம் திரும்ப கிடைப்பதில் வேகத்தைக் காட்டும் வகையில் சட்ட விதி முறைகள் அல்லது இன்ஸூரன்ஸ் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவற்றை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.

மொத்த பயனாளர்கள்: உலக அளவில் தற்போது இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தாலும், இந்த பிரிவில் இதுவரை நாம் பெற்ற முன்னேற்றம் போதுமானதாக இல்லை. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் அடைந்த வளர்ச்சியின் வேகம் இன்டர்நெட் பயன்பாட்டில் போதுமானதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனை உணர்ந்த அரசு 2009ல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை இந்த ஆண்டில் முடுக்கிவிடப்படும் என எதிர்பார்க்கலாம்.
குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் இணைப்பு, கிராமங்களில் இதன் பரவலாக்கம், கிராமப்புற இணைப்புகளுக்குச் சலுகை, பிராட்பேண்ட் வேக அதிகரிப்பு, பாதுகாப்பு முறைகள், வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு திட்டங்கள் எனப் பல முனை வளர்ச்சி இந்த ஆண்டில் வேகப்படுத்தப்படும்.
உலக அளவில் இன்டர்நெட் பயன்பாடு வளர்ச்சியைக் கணக்கிட்ட பாரஸ்டர் ரிசர்ச் மையம், இந்தியா 2013ல் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்து விடும் என்று கணக்கிட்டுள்ளது. உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் உயர்ந்து 220 கோடியை எட்டும். இந்தியாவில் இந்த வளர்ச்சி 10 முதல் 20 சதவீதம் ஆக இருக்கும். மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்டர்நெட் பயன்பாடு குறையும் வாய்ப்பும், ஆசிய நாடுகளில் இது மிக அதிகமாகும் வாய்ப்பும் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா இந்த வகையில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. சென்ற நவம்பர் முடிவில் சீனா,அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றை அடுத்து இந்தியா இருந்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கையில், சீனாவில் 26.9சதவீதம், அமெரிக்காவில் 74.1 சதவீதம், ஜப்பானில் 75.5 சதவீதம் மக்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் 7 சதவீதம் மக்களே பயன்படுத்துகின்றனர். ஆனால் வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. 1520 சதவீதம் வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளது. இது மேலும் வளர்ந்து வருகிறது. சீனாவில் இது 1500 சதவீதம் ஆக உள்ளது. எனவே தான் இந்த ஆண்டு பயனாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகின் மிக உயர்ந்த கட்டடம் துபாயில் இன்று திறப்பு

துபாய் : துபாயில் 160 தளங்களை கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம் இன்று திறக்கப்படுகிறது. நட்சத்திர ஓட்டல்கள், குடியிருப்புகள், வர்த்தக வளாகங்கள், பொழுது போக்கு மையங்கள் என பலதரப்பட்ட அம்சங்களை கொண்ட 160 அடுக்கு கொண்ட உலகின் மிக உயரமான கட்டடம், துபாயில் உள்ள பர்ஜ் துபாய் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்த இந்த கட்டடத்தின் கட்டுமான பணிகள் முடிந்து இன்று திறப்பு விழா காண்கிறது. 2,625 அடி உயரமுள்ள இந்த கட்டடத்தில் 57 லிப்டுகளும், எட்டு தானியங்கி படிகட்டுகளும் உள்ளன.
அமெரிக்காவின் 101 அடுக்குகள் கொண்ட எம்பயர் ஸ்டேட் கட்டடத்தின் உயரம் 381 மீட்டர்; தைவான் நாட்டில் உள்ள கட்டடத்தின் உயரம் 448 மீட்டர். தற்போது துபாயில் திறக்கப்பட உள்ள கட்டடத்தின் உயரம் 504 மீட்டர். எனவே, இந்த கட்டடம், உலகின் மிக உயர்ந்த கட்டடமாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

காலம் கனிந்து வந்தால்… (ஆன்மிகம்)

மனிதர்களின் வாழ்க்கை, தெய்வ பலத்தை நம்பி இருக்கிறதா, மனித பலத்தை நம்பி இருக்கிறதா என்றால், தெய்வ பலத்தைத் தான் அதிகம் நம்பி இருக்கிறது. மனிதனுக்கு எவ்வளவு தான் பணபலம், ஆள் பலம் எல்லாமிருந்தாலும் தெய்வ பலம், அதாவது, தெய்வானுகூலம் இல்லையேல், மனிதனின் முயற்சிகள் பலன் தருவதில்லை.
தெய்வானுகூலத்துக்காக எத்தனையோ வித பிரார்த்தனைகள், வழிபாடுகள் செய்கின்றனர். அப்படிச் செய்தும் கூட உடனடியாக தெய்வம் அனுகூலம் செய்கிறதா என்றால், அதிலும் தாமதம் ஏற்படுவதுண்டு. ஒருவன், ஒரு காரியத்துக்காக பிள்ளையாரை சுற்றுகிறான்; மற்றொருவனும் ஒரு காரிய லாபத்துக்காக அதே பிள்ளையாரை சுற்றுகிறான். ஆனால், ஒருவனுக்கு சில நாட்களிலேயே காரியம் கை கூடி விடுகிறது; மற்றொருவனுக்குப் பல நாட்களுக்குப் பிறகு காரியம் கைகூடுகிறது.
இதற்கு என்ன காரணம்? அனுகூலம் செய்யத் தயாராக தெய்வம் உள்ளது; ஆனால், இவனுக்கு அனுகூலம் கிடைக்கும் காலம் வரவில்லை. காலமும் வந்து, தெய்வானுகூலமும் இருந்தால் எல்லா காரியங்களும் நினைத்தபடி நடக்கும்.
கண்ணனுடைய அருளையும், சகாயத்தையும் வேண்டினர் பாண்டவர்கள். துரியோதனன், கண்ணனுடைய சைன்யத்தை வேண்டினான். பாண்டவர்களுக்கு தெய்வ சகாயம் இருந்தது; வெற்றி கிடைத்தது. துரியோதனனுக்கு தோல்வியும், அழிவும் ஏற்பட்டது. இதே பாண்டவர்கள் கடைசியில் என்ன ஆயினர்? அவதார காரியம் முடிந்து வைகுண்டம் சென்று விட்டான் கண்ணன். பாண்டவர்களுக்கு தெய்வ சகாயம் இல்லாமல் போய் விட்டது. அதனால், பாண்டவர்களின் வீர, தீர, சரீர பலம் எதுவும் பயன்படாமல் போயிற்று.
பீமனின் கதாயுதம் பஞ்சு அடைத்த தலை யணை மாதிரி மெத்தென்றாகி விட்டது. சிறு பிள்ளைகள் கூட அதை இழுத்து வீசியெறிந்தனர். அர்ஜுனனின் வில்லும், அம்பும் சுள்ளிக் குச்சிகளுக்கு சமமாகி விட்டது. சிறுவர்கள் அவைகளைப் பிடித்து இழுத்து, ஒடித்துப் போட்டனர்.
“நம் சக்தியெல்லாம் எங்கே போயிற்று, நம் ஆயுதங்களின் வலிமை என்ன ஆயிற்று?’ என்று இவர்கள் திகைத்து நின்ற போது தான், கண்ணன் வைகுண்டம் போய்விட்ட விஷயம் தெரிந்தது; தெய்வ பலம் போய் விட்டது; கூடவே மனித பலமும், ஆயுத பலமும் பயனற்று போய்விட்டது; என்பதைப் புரிந்து கொண்டனர். இப்படியெல்லாம் மகாபாரதத்தின் கடைசி பகுதியில் நிறைய சொல்லப்பட்டுள்ளது. அதனால், தெய்வ பலம் முக்கியம்; அத்துடன் காலமும் கூடி வர வேண்டும். தெய்வத்தை நம்பி வழிபட்டு, காலம் வரும் வரை பொறுமையாக காத்திருக்க வேண்டும்.