இந்திய மண்ணில் விரைவாக பரவும் சீனத்து விஷ(ம)ம்

குறைந்த விலைக்கு கொடுத்தால், எதையும் எளிதாக இந்திய மண்ணில் விற்க முடியும் என்பதை சர்வதேச அளவிலான நிறுவனங்கள் நிரூபித்து வருகின்றன. அமெரிக்காவில் இருந்து குப்பையை கூட கண்டெய்னர்களில் இறக்குமதி செய்தது இந்தியாவில் உள்ள ஒரு பெரிய “டுபாக்கூர்’ நிறுவனம்.

உலகின் குப்பை தொட்டியாக மாறி விட்ட இந்தியாவிற்குள் எந்த பொருள் வருகிறது, எந்த பொருள் செல்கிறது என்பதை சுங்க இலாகாவும் கூட கண்டு கொள்ளாது. கண்ணை மூடிக் கொள்ள அவர்களுக்கு “கரன்சியை’ வீசினால் போதும் என்பதை சமீப கால உளவுத்துறை நிரூபித்தது. சென்னை விமான சரக்கு வளாகத் தோடு மட்டுமே அந்த அதிரடி சோதனை நின்று போனது. துறைமுகம், நீண்ட கடற்கரை, என எவ்வளவோ வழிகளில் இந்தியாவிற்குள் பொருட்கள் குவிக்கப்பட்டு வருகின்றன. சொல்லப்போனால், கண்டெய்னரில் ஒரு பொருள் இருப்பதாக கூறி, வேறு பொருள் களை இறக்குமதி செய்கின்றனர்; ஏற்றுமதியும் செய்கின்றனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பொருளின் பெயரை மாற்றி, வேறு பொருளை வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். கடல் போன்ற வெளிநாட்டு வர்த்தகத்தில் நடக்கும் “ஊழல்’ வெளிச்சத்திற்கு வரவே இல்லை. இவை, இப்படியிருக்க, சீனாவோ, இந்திய மார்க்கெட்டை சீர்குலைக்க பல பொருட்களை விற்பனைக்கு அனுப்பி வைத்துள்ளது.

கண்டெய்னர், கண்டெய்னராக வந்திறங்கும் இந்த பொருட்கள், உரிய முறையில் பரிசோதிக்கப்படுகிறதா என்பதே சந்தேகம். அவை எப்படி விற்பனைக்கு செல்கின் றன; என்ன விலைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன; பொருளின் மதிப்பு என்ன; வரி விதிப்பு எப்படி என்பது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை. பத்து ரூபாய்க்கு கடிகாரம்… 200 ரூபாய்க்கு பேன்… ஆயிரத்து 500 ரூபாய்க்கு வாஷிங் மெஷின்… ஐயாயிரம் ரூபாய்க்கு பைக்… என சீனா பொருட்கள் கிடைக்கும் என்பது சில ஆண்டுகளுக்கு முன் விஷமாக பரவிய விஷயம். இப்போதோ… மெல்ல மெல்ல உண்மையாகி விடுமோ என்ற அச்சம் தொழில் நிறுவனங்களிடையே பரவி வருகின்றன. சில ஆண்டுகளுக்கு முன் தரமற்ற சீனத்து பொருட்களை அமெரிக்காவுக்குள் அனுமதிக்கவில்லை. டூத்பேஸ்ட், பொம்மை, சாக்லேட், பிளாஸ்டிக் பொருள், பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருள், பதப்படுத்தப்பட்ட மீன் என பல பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது. அமெரிக்காவில் இந்த பொருட்களில் நச்சுத்தன்மை கலந்துள்ளதாகவும், பொம்மையில் பூசப்பட்ட பெயின்ட், அமெரிக்க குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவித்தன. ஐரோப்பாவிலும் சீனாவின் சில பொருட்கள் இறக்குமதிக்கு தடைவிதிக்கப்பட்டன.

சர்வதேச அளவில், விற்பனை போட்டியை அதிகரிக்கவும், ஏற்றுமதியில் சீனாவின் பங்கை அதிகரிக்கவும் இப்படி “மலிவான’ பொருட்களை ஏற்றுமதி செய்தது. சீனாவின் உற்பத்தி எப்போதுமே “மெகா’ அளவில் இருக்கும். பெரிய பெரிய தொழிற்சாலைகளில் தயாரான இந்த பொருட்கள் மிக அதிமாக இருக்கும். இப்படிப்பட்ட பொருளை சீனாவிற்கு அமெரிக்கா திரும்ப அனுப்பியது. இவற்றையெல்லாம் என்ன செய்வது என்ற தவித்துக் கொண்டிருந்த சீனாவுக்கு, அருகிலேயே ஒரு நல்ல சந்தை இந்தியா தென் பட்டது. எல்லையை தாண்டினால் போதும்; இந்தியாவிற்குள் ஊடுருவி விட முடியும் என சந்தோஷப்பட்டது சீனா. எனவே, இந்தியாவிற்குள் ஊடுருவ இரண்டு வகையான வழிகளை பயன்படுத்தியது. முதலாவது, நேரடியாக ஏற்றுமதி செய்வது… இரண்டாவது மறைமுகமாக கடத்தலில் ஈடுபட்டு இந்தியாவிற்குள் பொருளை குவிப்பது. இந்த இரண்டிலுமே சீனா, இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது எனக் கூறலாம். சமீபத்தில் சென்னையில், வேறு பொருளை இறக்குமதி செய்வதாக கூறி, விவசாயத்திற்கு பயன்படும் வீரியமிக்க பூச்சி மருந்தை அனுப்பி வைத்திருந்தது. இந்த பூச்சி மருந்து, அதிக விஷத்தன்மை வாய்ந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கண்டுபிடித்ததோ ஒரு முறை தான். இந்த ஒன்றே போதும், சீனத்து விஷங்கள் இந்தியாவிற்குள் ஊடுருவி வருகிறது என்பதற்கான சாட்சி.

இதே போன்று, ஆட்டோ உதிரிபாகங்களை போலியாக தயாரித்து இந்தியாவிற்குள் அனுப்பி வைத்துள்ளது. “ஸ்பார்க் பிளக்’கிற்கு பெயர் போன அந்த நிறுவனத்தின் போலி தயாரிப்பு இந்தியாவிற்குள் ஊடுருவியது. பத்து மடங்கு குறைந்த விலையில் கிடைக்கும் இந்த பொருட்களை எளிதாக அடையாளம் காண முடியாது. இந்த பொருட்கள் மட்டுமல்ல… சீனாவிலிருந்து இந்திய பொருட்களின் தரமான பொருளுக்கு இணையான போலிகள் ஏராளமாக ஊடுருவியுள்ளது அதிர்ச்சி தரும் விஷயம். “பாடி ஸ்ப்ரே’ எனப்படும் வாசனை திரவியம், பூசும் பவுடர் போன் றவை போலியாக தயாரிக்கப்பட்டு இங்கு விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. போலியான பொருட்கள் இங்கு எளிதாக விற்பனையாகின்றன. மும்பையை தலைமையிடமாக கொண்ட ஒரு நிறுவனம், சீனாவிலிருந்து வரக்கூடிய பொருட்களை கண்காணித்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிறுவனம், தனது நிறுவனத்தின் போலி பொருட்களை ஆராய்ந்து கண்டறிந்து தடுத்து வருகிறது. இதற்கென தனிப்படை ஒன்றை அமைத்தது. ராமநாதபுரத்தில் இந்த பொருள் வந்திறங்கியதும் அதை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுத்தது. இந்த நிறுவனத்தின் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி பொருள் என்பதால், அடையாளம் கண்டு தடுப்பதில் முனைப்பு காட்டுகிறது. இதுவே வேறு பொருளாக இருந்தால், யாரும் தடுக்க முடியாது.

சீனாவிலிருந்து வந்திறங்கும் பொருளால், என்ன பாதிப்பு ஏற்படுகிறது? என ஆய்வு செய்தால், அமெரிக்காவில் தடை செய்யப் பட்ட பொருளை இந்தியாவில் குவிக்கிறது. இதனால், சீனாவின் சந்தையாக இந்தியா மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு நச்சு பொருளை காரணம் காட்டி தடை விதிக்கப் பட்டிருந்தால், அந்த பொருளை பயன்படுத்தும் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். சீனத்து பொம்மைகள் மீது பூசப்பட்டுள்ள பெயின்ட், “நச்சுத்தன்மை கொண்டது; குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்தும்’ என தடை செய்யப்பட்ட பொருள், இந்தியாவில் எளிதா விற்பனை செய்து விட முடியும். இங்கு சீனாவின் பொம்மைகளுக்கு தடை ஏதும் இல்லை. இவ்வளவு நுணுக்கமாக இந்தியா ஆய்வு செய்யாது என்பது ஒரு பிளஸ் பாயின்ட். இந்த பொம்மைகள், அமெரிக்காவில் தடை செய்யப்பட்டதால், சீனாவுக்கு நஷ்டம். இந்தியாவில் மதிப் பில்லாமல், கொண்டு வந்து தள்ளினால் போதும் என்ற நிலை உள்ளது. மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த பொம்மைகள், இந்திய கடைகளில் நல்ல விலை போகின்றன. ஒட்டுமொத்தமாக இறக்குமதி செய்து விற்போருக்கு பல மடங்கு லாபம் கிடைக்கிறது. வெறும் நான்கு ரூபாய் மதிப்புள்ள சீனத்து பொம்மை, நாற்பது ரூபாய்க்கு விற்கின்றனர்.

கோவையில் உள்ள பெரும்பாலான கடைகளில் ஏதாவது ஒரு பொருளாவது சீனாவின் தயாரிப்பாக இருக்கும். பெரிய அளவிலான ஒரு டிப்பார்ட்மென்ட் ஸ்டோரில் சீனாவின் பொருட்கள் தாரள மாக விற்கப்படுகின்றன. இவை பெரும் பாலும் பொம்மைகள் தான். இதே போன்று, கடைகளில் சீனாவிலிருந்து இறக்குமதியான துடைப்பம் முதல் மொபைல் வரை கிடைக் கின்றன. இவை பல நேரடியாக வரி செலுத்தி இறக்குமதி செய்யப்பட்டவை; பல கடத்தல் மூலம் வந்தவை. இவ்வாறு பொருட்கள் வந்து இறங்குவதால், குறு, சிறு நடுத்தர தொழில் நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்படுகின்றன.

கோவையில் மில்கள் பல டெக்ஸ்டைல் மெஷின்களை இறக்குமதி செய்தன. இந்த சீனாவின் இயந்திரங்கள், பல சரிவர இயங்கவில்லை. பழுதானால், சரி செய்வது எளிதாக இருக்கவில்லை. இந்திய மின் அழுத்த வேறுபாடுகளுக்கு இவை ஈடுகொடுக்கவில்லை. சீனாவின் பொருட்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதால், பல குறு, நடுத்தர, தொழில் நிறுவனங்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகி வருகின்றன. சிறு, சிறு வீட்டு உபயோகப்பொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், பிளாஸ்டிக் பொருள் தொழில் நிறுவனங்கள் பல வர்த்தகத்தில் பின்னடைவை சந்தித்துள்ளன. சில இழுத்தும் மூடப்பட்டுள்ளன. சீனப்பொருள் அளவுக்கு இவை “சீப்’ ஆக இல்லை என்பது ஒரு காரணம்.

சீனாவில் பெரும் அளவில் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. சீன அரசு அதிக அளவில் மானியமும் தருகின்றன. அங்கு அரசு தான், விலையை நிர்ணயம் செய்கிறது. இந்தியாவில் அவ்வாறு இல்லை. ஒவ்வொரு பொருளும் தயாரிக்க அதன் உற்பத்தி விலையோடு, வரியும் இருக்கும். வரிக்குமேல் லாபமும் போக்குவரத்து செலவும் சேர்ந்து இருக்கும். இந்தியாவில் சீனப்பொருள் வந்திறங்கும் அளவு ஒவ்வொரு ஆண்டும் 7 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது. இவை, இந்திய பொருளின் மதிப்பில் 10 சதவீதம் முதல் 70 சதவீதம் வரை விலை குறைவாக உள்ளது. 2006-07ம் நிதியாண்டில் சீனப்பொருள் இறக்குமதி அளவு 56 ஆயிரத்து 900ம் கோடியாக இருந்தது. கடந்த ஏப்ரல் – டிசம்பர் 2009ல், இது ஒரு லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது என ரிசர்வ் வங்கி கணக்கு தெரிவிக்கிறது. இவற்றில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிக பங்கு வகிக்கிறது. உணவுப்பொருள்களில் குறிப்பாக சாக்லேட் போன்றவற்றில் சீனாவின் எச்சரிக்கை வாசகங்கள் கூட இடம் பெற்றுள்ளன. இந்த வகை சாக்லேட்டுகள் உடல் நலத்தை பாதிக்கும் எனவும் கூட அச்சிட்டுள்ளனர். எனவே, உங்களது குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி தரும்போதும் கூட எச்சரிக்கை தேவை.

சீனாவிலிருந்து வந்த பொருட்களுக்கு பல சில்லறை விற்பனை கடைகளில் பில் கிடைப்பதில்லை. இவற்றிற்கென எந்த பதிவேடும் பராமரிப்பில் இல்லை. கணக்கில் இல்லாத அளவிற்கு வரி ஏய்ப்பும் இதில் நடக்க வாய்ப்புகள் உள்ளன. எனவே, அரசுக்கும் நஷ்டம் ஏற்படுகிறது. வணிக வரித்துறையோ, சுங்க இலாகாவோ இவற்றில் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இவ்வளவு இருந்தாலும், சீனா தரமான பொருளை உருவாக்குவதில் முன் னணியில் தான் உள்ளது. இந்தியாவை காட்டிலும் தொழில்நுட்பத்திலும், அடிப் படை தொழிற் சாலை கட்டமைப்பு வசதியிலும் போக்குவரத்து வசதியிலும் எவ்வளவோ முன்னேற்றங்கள் சீனாவில் உள்ளன. எதையும் மலிவாகவும் சர்வதேச தரம் மிகுந்த பொருளை தயாரிக்கும் வல்லமை படைத்தது சீனா. அங்குள்ள உற்பத்தி திறன், மனித வளம் இந்தியாவை விட பல மடங்கு அதிகம். ஆனால், தரமான பொருட்கள் ஐரோப்பா, அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. அங்கு செல்லுபடியாகாத பொருட்களை இந்தியாவில் குவிக்கிறது. எனவே, சீனத்து பொருட்களை வாங்கும்போது, கவனமாக வாங்குங்கள்.

தரமானதா… எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத பொருளா… என்பதை உணர்ந்து வாங்க வேண்டும். வெளிநாட்டு பொருள் மீது பொருள் தரக்கட்டுப் பாடு, ஆய்வு வசதி, உணவு பொருளின் தரம், நச்சுத்தன்மை பரிசோதனை போன்றவைகளை அரசு ஏற்படுத்துவது அவசியம். வெளிநாட்டு பொருட்களுக்கு உள்ள விலை வித்தியாசத்தை தவிர்க்க, அரசு உரிய அளவில் வரி விதிக்க வேண்டும். இந்த வரி வருமானத்தைக் கொண்டு, இந்திய குறு, சிறு தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அப்போது தான் இந்தியாவிலும் தொழில் நிறுவனங்கள் மூடப்படுவதையும், தொழிலாளர் வேலை இழப்பையும் தவிர்க்க முடியும்.

%d bloggers like this: