2010 – வளரும் இன்டர்நெட்

இந்த ஆண்டில் இன்டர்நெட் தொழில் நுட்ப வளர்ச்சி, சென்ற ஆண்டுகளைக் காட்டிலும் புதிய மாற்றங்களைத் தருவதாக அமையும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அவற்றின் சில அம்சங்களை இங்கு காணலாம்.
கிளவுட் கம்ப்யூட்டிங்: 2009ல் அறிமுகமான கிளவுட் கம்ப்யூட்டிங் முறை இந்த ஆண்டில் தீவிரமாகும். டேட்டா பாதுகாப்பு என்பது கேள்விக் குறியானாலும், நமக்குத் தேவையான அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் எந்தவித சிக்கலும் இன்றி எந்நேரமும் கிடைப்பது மற்றும் டேட்டா சேமித்து வைத்து எங்கிருந்து வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய வசதி ஆகிய இரண்டும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை கிளவுட் கம்ப்யூட்டிங் பக்கம் இழுத்துச் செல்லும் பெரிய விஷயங்களாக அமையும். இதன் பயன்பாடு அதிகமாகும் போது அதற்கான விதிமுறைகள் சீரமைக்கப்பட்டு கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கலாம். இதனைச் சார்ந்து கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவிற்கான தனி சாப்ட்வேர் அப்ளிகேஷன்களும் அதிக அளவில் உருவாக்கப்படலாம்.

இன்டர்நெட் பேங்கிங்: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இந்த வசதி, 2010ல் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளில் அக்கவுண்ட் தொடங்கியவுடன் பாஸ்புக் வாங்குவது போல உடனடியாக இன்டர்நெட் அக்கவுண்ட்டிற்கான நடைமுறை மேற்கொள்ளப்படுகிறது. ஏனென்றால் இந்த வழி வங்கிகளுக்கு வேலைச் சுமையைப் பெரிய அளவில் குறைக்கிறது. நிதி பரிமாற்றங்களை அறிந்து கொள்ளுதல், டிமாண்ட் ட்ராப்ட், செக் புக் தேவைக்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளல், வேறு அக்கவுண்ட்களுக்கு நிதி மாற்றுதல், அக்கவுண்ட் ஸ்டேட்மென்ட் பெறுதல் என அனைத்து நடைமுறைகளையும் வங்கிக்கு செல்லாமலே நாம் மேற்கொள்ள முடியும் என்பதால் இன்டர்நெட் வழி பேங்கிங் மக்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. இதன் பாதுகாப்பு தன்மையினை மக்களிடையே நல்ல முறையில் கொண்டு சென்றால், நிச்சயம் இந்த வழி பெரிய அளவில் பயன்படுத்தப்படும். பாதுகாப்பினைப் பலப்படுத்த சட்டங்களும் மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக இன்டர்நெட் குற்றங்கள் அறிவிக்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதைக் காட்டிலும், இழந்த பணம் திரும்ப கிடைப்பதில் வேகத்தைக் காட்டும் வகையில் சட்ட விதி முறைகள் அல்லது இன்ஸூரன்ஸ் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவற்றை இந்த ஆண்டு எதிர்பார்க்கலாம்.

மொத்த பயனாளர்கள்: உலக அளவில் தற்போது இன்டர்நெட் பயன்படுத்தும் மக்கள் எண்ணிக்கையில் இந்தியா நான்காவது இடத்தில் இருந்தாலும், இந்த பிரிவில் இதுவரை நாம் பெற்ற முன்னேற்றம் போதுமானதாக இல்லை. கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன்களில் அடைந்த வளர்ச்சியின் வேகம் இன்டர்நெட் பயன்பாட்டில் போதுமானதாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதனை உணர்ந்த அரசு 2009ல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அவை இந்த ஆண்டில் முடுக்கிவிடப்படும் என எதிர்பார்க்கலாம்.
குறைந்த கட்டணத்தில் பிராட்பேண்ட் இணைப்பு, கிராமங்களில் இதன் பரவலாக்கம், கிராமப்புற இணைப்புகளுக்குச் சலுகை, பிராட்பேண்ட் வேக அதிகரிப்பு, பாதுகாப்பு முறைகள், வயர்லெஸ் இன்டர்நெட் இணைப்பு திட்டங்கள் எனப் பல முனை வளர்ச்சி இந்த ஆண்டில் வேகப்படுத்தப்படும்.
உலக அளவில் இன்டர்நெட் பயன்பாடு வளர்ச்சியைக் கணக்கிட்ட பாரஸ்டர் ரிசர்ச் மையம், இந்தியா 2013ல் மூன்றாவது இடத்திற்கு உயர்ந்து விடும் என்று கணக்கிட்டுள்ளது. உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் உயர்ந்து 220 கோடியை எட்டும். இந்தியாவில் இந்த வளர்ச்சி 10 முதல் 20 சதவீதம் ஆக இருக்கும். மேற்கத்திய நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இன்டர்நெட் பயன்பாடு குறையும் வாய்ப்பும், ஆசிய நாடுகளில் இது மிக அதிகமாகும் வாய்ப்பும் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா இந்த வகையில் சீனா, அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் எனவும் கருத்து தெரிவித்துள்ளது. சென்ற நவம்பர் முடிவில் சீனா,அமெரிக்கா, ஜப்பான் ஆகியவற்றை அடுத்து இந்தியா இருந்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் பார்க்கையில், சீனாவில் 26.9சதவீதம், அமெரிக்காவில் 74.1 சதவீதம், ஜப்பானில் 75.5 சதவீதம் மக்கள் இன்டர்நெட்டைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்தியாவில் 7 சதவீதம் மக்களே பயன்படுத்துகின்றனர். ஆனால் வளர்ச்சியைப் பொறுத்தவரை இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. 1520 சதவீதம் வளர்ச்சியை இந்தியா கொண்டுள்ளது. இது மேலும் வளர்ந்து வருகிறது. சீனாவில் இது 1500 சதவீதம் ஆக உள்ளது. எனவே தான் இந்த ஆண்டு பயனாளர்கள் எண்ணிக்கை மிக அதிகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

%d bloggers like this: