Daily Archives: ஜனவரி 5th, 2010

செயற்கை ரத்தசெல்கள் தயாரிப்பு – இந்தியர் சாதனை

உடல் இயக்கத்தில் பெரும்பங்கு வகிப்பது ரத்தம். நாம் உண்ணும் உணவு, பல மாறுதல்களுக்குப் பிறகு ரத்தமாக மாறுவது இயற்கை வினோதங்களில் உச்சமாகும்.

ஆபத்துக் காலத்தில் உயிரைத் தாங்கிப் பிடிப்பதில் ரத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனாலும் ரத்தப்பிரிவுகள் வேறுபடுவதால் எல்லோருக்கும் தேவையான ரத்தம் உடனடியாக கிடைப்பதில்லை. இதற்காக ரத்தத்தை உறையவைத்தல், தனித்தனி ரத்தசெல்களாக பிரிப்பது என பல வழிகளில் ரத்தத்தை பிரித்து சேமித்து பயன்படுத்துகிறோம்.

விஞ்ஞான வளர்ச்சியில் ரத்தசெல்களை வளர்த்து செயற்கையாக ரத்தம் உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது செயற்கையாகவே ரத்த செல்கள் உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டு உள்ளது. இந்த ரத்த செல்களை உருவாக்கியவர் அமெரிக்கவாழ் இந்தியர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் வேதியல் பிரிவு பேராசரியராக பணியாற்றி வரும் சாமிர் மித்ராகோத்திரி என்பவர்தான் இந்த ரத்த செல்களை உருவாக்கி உள்ளார். இவர் 1992-ம் ஆண்டில் மும்பையில் கெமிக்கல் என்ஜினீயரிங் படித்தவர் ஆவார்.

இவர் உருவாக்கி இருப்பது, ரத்த சிவப்பணுக்களாகும். இது 90 சதவீத அளவில் இயற்கை ரத்த செல்கள் போலவே செயல்படுகிறது. மிருதுவானதாகவும், நெகிழும் தன்மையுடனும் இருப்பதோடு ஆக்சிஜனை எடுத்துச் செல்வதிலும் சிறப்பாக பணியாற்றுகிறது.

இந்தக் கண்டுபிடிப்பு ரத்தத் தேவையை நிறைவேற்றும், நோய் எதிர்ப்புத்தன்மையுடன் கூடிய ரத்தமாக உட்செலுத்தும் புதிய மருத்துவ முறையாகவும் பயன்படும் என்று தெரிகிறது.

மித்ராகோத்திரி, ஏற்கனவே சிறப்புத் தன்மை கொண்ட பாலிமரை உருவாக்கி சாதனை படைத்தவர் எனது குறிப்பிடத்தக்கது.

பட்டுப்போன்ற கூந்தலுக்கு…


செம்பருத்தி இலையை அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி பட்டுப்போன்று மென்மையாக மாறிவிடும். பளபளப்பு கூந்தலுக்கு ஷாம்பே கதியென்று கிடக்கும் பெண்கள், அதற்கு மாற்றாக இதை பயன்படுத்தலாம்.

இதேபோல், 2 அல்லது 3 செம்பருத்திப் பூக்களை ஒரு டம்ளர் நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் குடித்து வந்தால் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். உடலும் நன்கு ஆரோக்கியம் பெறும். தலைமுடி அடர்ந்து, உறுதியாக, செழிப்பாக வளர்வதற்கும் இது உதவுகிறது.

பெண்கள் தொடும்போது `சிலிர்ப்பு’ ஏற்படுவது ஏன்?

பெண்கள் தொட்டால் பூ மட்டுமல்ல; ஆண்களின் உள்ளமும் மலர்கிறது. அது ஏன் என்று ஆன்டரியாவில் உள்ள மெஸ்மாஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன.

இந்த ஆராய்ச்சியில் 100 கல்லூரி மாணவிகள் உட்படுத்தப்பட்டனர். அவர்களை, சில ஆண்களை தொட வைத்து, அந்த ஆண்களுக்குள் என்ன மாற்றம் ஏற்படுகிறது என்றும் அப்போது சோதிக்கப்பட்டது. மேலும், அந்த மாணவிகள் தங்களை தொட்ட மாத்திரத்தில் அத்தனை ஆண்களும் சிலிர்த்துப் போனார்கள். சில ஆண்களின் ரோமங்கள்கூட சிலிர்த்துக்கொண்டு எழுந்து நின்றன.

இதைத்தொடர்ந்து, அந்த மாணவிகளின் கை விரல்களில் அப்படி என்னதான் இருக்கிறது? என்று துருவித் துருவி ஆராய்ந்தார், ஆய்வை மேற்கொண்ட நரம்பியல் நிபுணர் டேனியல் கோல்டுரிக்.

அப்போது, பெண்களின் விரல் நுனியில் அந்த `சிலிர்ப்பு’ ரகசியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

சாதாரணமாக பெண்களின் விரல் நுனியானது ஆண்களின் விரலை விட மிக மென்மையாகவும், குட்டையாகவும் இருக்கிறது. இதனால்தான் இவர்கள் ஒரு ஆணைத் தொடும்போது, அந்த ஆணுக்கு திடீர் சிலிர்ப்பு ஏற்படுகிறது.

இந்த ஆய்வில் பெண்களுடன் பங்கேற்ற ஆண்கள் கருத்து தெரிவிக்கும்போது அவர்களில் பலர் வெட்கத்தால் நெளிந்து போனார்கள். சிலர், அந்த மாணவிகள் தங்களை தொட்டபோது செக்ஸ் உணர்வு ஏற்பட்டதாக வெளிப்படையாகவே சொன்னார்கள்

வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்


அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்டரில் என்ன மாற்றங்கள் வரும் என இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சியின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.
1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படுத்தப்படும். ஆப்டிகல் கம்ப்யூட்டர்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.
2. கம்ப்யூட்டர்கள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டரின் கதவு திறக்கும்.
3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்கலாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும்.
4. கம்ப்யூட்டர்கள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கம்ப்யூட்டர் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இனி டெஸ்க்கில் உள்ள டாப் கம்ப்யூட்டராக இயங்கும்.
5.வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும்.
6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும்.
7.இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும். இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்கவேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும்.
8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும்.
9.இன்டெல் நிறுவனத்தின் கோர் ஐ3 மற்றும் கோர் ஐ5 சிப்கள், 2010 ஆம் ஆண்டில் பெரும் அளவில் கம்ப்யூட்டர்களை இயக்கும்.
10. இன்டர்நெட் டிவி புழக்கம், கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர், புளு ரே டிவிடி, விண்டோஸ் 7 தரும் முழு பயன்பாடு, டர்போ பூஸ்ட் தொழில் நுட்பம், நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் 2010 ஆம் ஆண்டு அமர்க்களப்படப் போகிறது.

மூலிகை கட்டுரை -நினைவுகள் மறப்பதில்லை

மனிதர்களுக்கு உள்ள சிறப்பான குணங்களில் ஞாபகசக்தியும் ஒன்று. ஆனால் மூளையின் செயல்பாட்டில் தோன்றும் சில மாறுதல்களால் 40 வயதை கடந்தவர்கள் பலவகை ஞாபக இழப்புக்கு ஆளாகின்றனர்.
நரம்பு செல்களின் அழிவினால் தோன்றும் இந்த மறதி நோயை அல்சிமர் நோய் என்று அறிவியல் குறிப்பிடுகிறது. மறதி நோயுடையவர்கள் தாங்கள் சொன்னதை மறந்து மீண்டும் மீண்டும அதே கருத்துகளை சொல்வதும், சில நேரங்களில் சொல்லாத செய்தி களையும் நிகழாத நிகழ்வுகளையும் நடந்ததுபோல் சொல்வதுமுண்டு. இந்த நோயை கட்டுப்படுத்த ஆப்பிள், அத்திப்பழம், நெல்லி, பாதாம், வல்லாரைகீரை போன்றவை பயன்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், மிக எளிதாக, விலைமலிவாக கிடைக்கும் கீரையான சிறுகீரையும் ஞாபகமறதியை போக்கும் அற்புத ஆற்றல் உடையது.
அமரன்தஸ் மெலன்கோலிகஸ் என்ற தாவரவியல் பெயர் கொண்ட அமரன்தியேசியே குடும்பத்தைச் சார்ந்த இந்த சிறுகீரை செடிகளின் இலை பாகங்களில் அடங்கியுள்ள அமரான்டின், பீட்டைன் போன்ற வேதிச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் மூளைச் சுருக்கத்தை கட்டுப்படுத்தி, செல் சிதைவை நீக்கி, மூளைக்கு புத்துணர்ச்சி தந்து, நினைவாற்றலை நீடிக்கச் செய்யும் அற்புத ஆற்றல் உடையன.
சிறுகீரையை நன்கு அலசி, காம்பு, நடுநரம்பு நீக்கி, சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 100 கிராம் பாசிப்பருப்பை மைய வேகவைத்து, அதில் வதக்கிய வெங்காயம் 100 கிராம், கடுகு அரைதேக்கரண்டி, உளுந்தம்பருப்பு – அரை தேக்கரண்டியை நல்லெண்ணெயில் தாளித்து, வெந்தபாசிப்பருப்பில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின் அரைமூடி தேங்காயை அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து நன்கு அரைத்து, அத்துடன் மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி, மிளகுதூள் அரை தேக்கரண்டி மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து பாசிப்பருப்புடன் கலந்து 10 நிமிடங்கள் நன்கு வேகவைத்து அடுப்பிலிருந்து இறக்கி, லேசாக நெய் சேர்த்து கிளறி எடுத்துக்கொள்ள வேண்டும். இதனை அடிக்கடி சாப்பிட்டுவர ஞாபகசக்தி அதிகரிக்கும். நரம்பு மண்டலத்தை தூண்டும் தன்மையுடையதால் வீரியமிக்க சித்த, ஆயுர்வேத மருந்துகளை உட்கொள்ளும்பொழுது சிறுகீரையை தவிர்க்க வேண்டுமென மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

பால், தயிரில் உயிருள்ள பாக்டீரியா…

* “ப்ரோ பயோட்டிக்’ உணவுகளில் உயிருள்ள பாக்டீரியா இருக்கின் றன; உடலுக்கு நல்லது செய்யும் இந்த பாக்டீரியாவுடன் “ப்ரோபயோட்டிக்’ உணவு பாக்கெட் களை தயாரிக்கும் நிறுவனங்கள் 2005ல் இருந்து இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன.
* அமுல், நெஸ்ட்லே, மதர் டெய்ரி, பிரிட்டானியா போன்ற நிறுவனங் கள், இந்த வகை பால், தயிர் பாக் கெட்களை விற்பனை செய்து வருகின்றன.
* “ப்ரோ பயோட்டிக்’ சுவையூட்டப் பட்ட பால், தயிர், யோகர்ட் போன்றவை அருந்துவது இந்தியாவில் அதிகரித்து வருகிறது.
* இந்த உணவுகளில் ஒமேகா 3 கொழுப்பு ஆசிட், கொலஸ்ட்ரால் நீக்கப்பட்ட துணைப்பொருட் களும் சேர்க்கப்படுகின்றன.
* கடந்த 2007ல் 120 கோடி ரூபாய் அளவுக்கு இந்த வர்த்தகம் இருந்தது. ஆண்டுக்கு 40 சதவீதம் அதிகரித்து வருகிறது.
* ப்ரோ பயோட்டிக் உணவுகள் அதிகமாக உட்கொண்டால், குடலை பாதிக்கச் செய்யும் அளவுக்கு நிலைமை போகும். குடல் செயலிழக்கும் அபாயமும் உண்டு.
* மாத்திரை வடிவிலும் “ப்ரோ பயோட்டிக்’ சத்து கிடைக்கிறது. வெளிநாடுகளில் இந்த வகை மாத்திரைகள் விற்கப்படுகின்றன.
* நான்காண்டாக இது தொடர்பான சர்ச்சை நீடித்துக்கொண்டிருக்க, முதன் முறையாக அரசு உறுதியான கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வர உள்ளது.
* நூறாண்டுக்கு முன், இலியா இலியாச் மெக்னிகோவ் என்ற ரஷ்ய விஞ்ஞானி தான் முதன் முதலில் இந்த பாக்டீரியாவை கண்டுபிடித்தார்.
* இந்த 21ம் நூற்றாண்டில், குறைந்த கொழுப்பு, முழு சத்தான, ஆன்டிபயாடிக் உள்ள “சூப்பர் புட்’ என்ற பெயரில் “ப்ரோ பயோட்டிக்’ உணவுகள் வந்துள்ளன.
* 1920ல், தயிர், பால் பொருட்களில் இந்த வகை பாக்டீரியா இருப்பது தெரிந்து, உடலுக்கு நல்லது என்று கண்டறிந்து உண்டு வந்தனர்.
* “ப்ரோ பயோட்டிக்’ என்பது கிரேக்க வாசகம்; வாழ்வதற்காக என்று பொருள்.
* செறிவூட்டப்படாத ஓட்ஸ், கோதுமை தானியங்கள், வாழைப் பழம், தக்காளி, கீரை வகைகள் ஆகியவற்றிலும் இந்த வகை பாக்டீரியாக்கள் உண்டு.

எளிய தர்மம் செய்யுங்க! (ஆன்மிகம்)

ஜன.,7 மதுரையில் படியருளும் லீலை!
தர்மம் தலைகாக்கும் என்பர். மிகப்பெரிய அளவில் தான் தர்மம் செய்ய வேண்டும் என்பதில்லை; எளிய முறையில் தர்மம் செய்தாலே போதும் என்பதை உணர்த்த, மதுரையில், மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று, மீனாட்சி-சுந்தரேஸ்வரர் படியருந்தருளிய லீலை என்ற பெயரில் நடக்கும் விழா மிகவும் சிறப்புமிக்கது.
பசி ஒரு கொடிய வியாதி. பாவிகளுக்கு கூட இது வந்துவிடக்கூடாது என்பதில் நம்மவர்கள் அக்கறையாக இருந்துள்ளனர். கேரளாவில் செருக்குன்னம் அன்னபூரணி கோவிலில் தினமும் அன்னதானம் நடக்கும். இரவானதும், ஒரு துணியில் அன்னத்தை வைத்து மரத்தில் கட்டி தொங்க விடுவர். இரவில், அந்தப் பக்கம் நடமாடும் பாவத்தொழில் செய்யும் திருடர்களுக்கு கூட, அந்தச் சோறு பசியாற்றட்டுமே என்பது இதற்கு காரணமாம்.
பெற்றவர்கள் சிரமப்பட்டு, பாடுபட்டு குழந்தைகளுக்கு உணவளிக்கின்றனர். அந்த உணவு தட்டுப்பாடின்றி கிடைக்க, சிறந்த நிலம், மழை, பிற வசதிகளெல்லாம் வேண்டும். எத்தனை அணைகள் இருந்து என்ன பயன்! மழை பெய்தால் தானே அது நிரம்பும்! அது யார் கையில் இருக்கிறது? பரமேஸ்வரான தந்தையிடமும், பார்வதியான அன்னையிடமுமே இருக்கிறது. இவர்களின் அம்சமான சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் உலக மக்களுக்கு உணவளிப்பதற்காக ஆண்டில் ஒருநாள் பவனி வருகின்றனர். இதற்காக அவர்கள் தேர்ந்தெடுத்த திதி அஷ்டமி. நாம் எந்த சுபநிகழ்ச்சியையும் அஷ்டமியில் நடத்துவதில்லை. நாம் எதை வேண்டாம் என்று ஒதுக்குகிறோமோ, அதை எடுத்துக் கொள்கிறான் ஆண்டவன். அதாவது, அவனுக்கு எந்த தேவையு மில்லை. அவன் தன்னிடமுள்ளதை, தன்னால் படைக்கப்பட்ட ஜீவன்களுக்கு கொடுப்பதையே விரும்புகிறான். இதற்காக, உலக மக்களைச் சந்திக்க வருகிறான்.
ஒருமுறை, செப்பு ஒன்றில் ஒரு எறும்பை அடைத்து வைத்தாள் அம்பாள். “இறைவா! எல்லாருக்கும் படியளப்பதாகச் சொல்கிறீர்களே… செப்புக்குள் கிடக்கும் இந்த எறும்பிற்கு எப்படி படியளக்கிறீர்கள், பார்க்கலாம்?’ என்றாளாம். சற்றுநேரத்தில், செப்பைத் திறந்து பார்க்கச் சொன்னார் சுவாமி. அந்தச் செப்புக்குள் பாதி துண்டு அரிசி கிடந்தது. அதை அந்த எறும்பு எடுத்துச் செல்ல முயற்சி செய்து கொண்டிருந்ததாம்.
எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மார்கழி அஷ்டமியன்று மீனாட்சியம்மன் கோவில் ஆடிவீதியில், மாவுக்கோலம் போடும் வழக்கம் இருக்கிறது. இதை நேர்ச்சையாகவே பலர் செய்கின்றனர். மிகுந்த வறுமையிலுள்ளவர்கள் இந்த நேர்த்திக்கடனை செய்வது வழக்கம். இந்த மாவை அங்குள்ள எறும்பு உள்ளிட்ட ஜீவராசிகள் உண்ணும். இந்த எளிய தர்மத்திற்கு மகிழும் இறைவன், அவர்களது பசியைப் போக்குவதாக ஐதீகம்.
மதுரையில் நடக்கும் விழாக்களில் சப்பர பவனி ஆடிவீதி, சித்திரை வீதி, மாசிவீதிகளில் நடப்பதே வழக்கம்; ஆனால், படியளக்கும் விழா சப்பரம் மட்டும், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வெளிவீதியில் உலா வரும். அதிகளவு மக்களுக்கும், குறிப்பாக, அடித்தட்டு மக்களுக்கும் உணவளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இவ்வாறு செய்கின்றனர். மார்கழி அஷ்டமியை தர்மத் திருநாளாகக் கொண்டு, நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்து இறையருள் பெறுவோம்.

2010: தகவல் பாதுகாப்பு

மெல்ல மெல்ல நம் வாழ்வின் தன்மையைச் சிறப்பானதாகவும், மேம்படுத்தப் பட்டதாகவும், மனித இனத்தை இணைத்து ஒருமைப்படுத்துவதாகவும் கம்ப்யூட்டரும் இணையமும் மாறி வருகின்றன. தகவல் பரிமாற்றம், வேகமான செயலாக்கம், பொழுது போக்கில் புதிய பரிமாணங்கள், உறவுகளை இணைத்து உள்ளங்கைக்குள் உலகைக் கொண்டு வருதல் எனப் பல பரிமாணங்களில் இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாடு விரிந்து வருகிறது. அதே நேரத்தில் இந்தப் பிரிவில் பாதுகாப்பின்மையும் மெல்ல அதிகரித்து வருகிறது. 2009ல் Downadup என்னும் வைரஸ் Conficker அல்லது Kido எனவும் அழைக்கப் பட்டது) அதிக அச்சத்தை உருவாக்கியது. இதனால் அதிக சேதம் இல்லை என்றாலும், இது பரவிய வழி மற்றும் வேகம், வைரஸ் எதிர்ப்பு புரோகிராம்களை உருவாக்கு பவர்களை திகைக்க வைத்தது. இந்த பிரிவில் 2010 ஆம் ஆண்டு நமக்கு என்னவெல்லாம் தர இருக்கிறது என, இந்த துறை வல்லுநர்கள் தெரிவித்த கருத்துகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.

இணைய ஆபத்தும் பாதுகாப்பும்: பொதுவாக கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட்டில் நாம் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த லாவா சாப்ட் (Lavasoft) நிறுவனம், வரும் ஆண்டில் ஐந்து வகையான ஆபத்துகள் இருக்கும் எனப்பட்டியலிட்டுள்ளது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மீது தாக்குதல், அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில் தாக்குவதற்கு ஏதுவான இடம் பார்த்து நுழைதல், நாசம் விளைவிக்கும் தொகுப்புகள் தயாரிப்பு, விண்டோஸ் தவிர மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களின் பயன்பாடு அதிகரித்தல் மற்றும் மொபைல் போன்களில் மால்வேர் புரோகிராம்கள் என இவற்றை வரிசைப்படுத்தியுள்ளது. (லாவா சாப்ட் நிறுவனம் 1999ல் தொடங்கப்பட்டது. இதனை ஒரிஜினல் ஆண்ட்டி ஸ்பைவேர் நிறுவனம் என அழைப்பார்கள். இதனுடைய இலவச ஆட்–அவேர் புரோகிராம் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே பிரபலமானது. இதுவரை 40 கோடிக்கு மேலான எண்ணிக்கையில் இது டவுண்லோட் செய்யப்பட்டுள்ளது)

1. 2009ஆம் ஆண்டின் இறுதியில் ஆன்லைன் கிரிமினல்கள் நடவடிக்கை 477% உயர்ந்து இருந்ததாகக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆட் அவேர் (AdAware) என்னும் ஆண்ட்டி மால்வேர் தளத்தில், நாசம் விளைவிக்கும் புதிய புரோகிராம்களின் பட்டியலின் எண்ணிகை அந்த அளவிற்கு உயர்ந்துள்ளது. வழக்கமான முறையிலேயே இந்த மால்வேர் புரோகிராம்களின் வேலை தொடரும். அதே நேரத்தில் புதிய சிஸ்டம் புரோகிராம்கள் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் வழியாகவும் இவை தங்கள் வேலையை மேற்கொள்ளும் என இந்நிறுவனம் எச்சரித்துள்ளது. குறிப்பாக தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் போன்களை இந்த வகை புரோகிராம்கள் தங்கள் இலக்காகக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இலக்காகக் கொண்டு நிச்சயம் மால்வேர் புரோகிராம்கள் வடிவமைக்கப்படும். மைக்ரோசாப்ட் இதனைத் தடுத்து, சிஸ்டத்தி னை பாதுகாப்பானதாக அமைக்கும் பட்சத்தில், புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைத் தங்கள் தளமாக மால்வேர்கள் கொள்ளலாம். எனவே ஆப்பிள் மேக் மற்றும் பிற சிஸ்டங்களைப் பயன்படுத்துபவர்கள், தங்களுக்கென ஒரு ஆண்ட்டி வைரஸ் சிஸ்டத்தினை உருவாக்கிக் கொள்வது இந்த ஆண்டில் ஏற்படும்.

3.ஸ்கேர்வேர் (Scareware) என்ற வகையில், நேரடியாகவே வைரஸ் புரோகிராமாக உருவாக்கப்படுபவற்றின் எண்ணிக்கையும் இந்த ஆண்டில் அதிகரிக்கும். இவற்றைத் தயாரித்து நிறுவனங்களிடம் பணம் பறிக்கும் வேலை அதிகமாகும்.

4. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீது அதிருப்தி கொண்டவர் எண்ணிக்கை உயரும் வாய்ப்புகள் உள்ளன. எனவே இந்த ஆண்டில் உபுண்டு லினக்ஸ், புதிதாக விண்டோஸ் தவிர்த்து மற்ற சிஸ்டங்களை நாடுபவர்களிடம் இடம் பெறலாம். விண்டோஸ் அளவிற்கு இது உயராவிட்டாலும், விண்டோஸ் மீது வைரஸ் மற்றும் மால்வேர் தாக்குதல்கள் இருக்கும் பட்சத்தில், லினக்ஸ் புதிய இடம் பெறலாம். அப்படி இடம் பெறுகையில், இதுவரை அதிகம் தாக்குதலுக்கு ஆகாத லினக்ஸ் தொகுப்புகள் பக்கம் மால்வேர் உருவாக்குபவர்களின் ஆர்வம் திரும்பலாம்.

5. ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு இந்த ஆண்டு அதிகம் இடம் பெறலாம். கூடுதலான பயன் தன்மையுடன், குறைவான விலையில் இவை கிடைப்பதாலும், மொபைல் வழி நெட்வொர்க் எளிதாகக் கிடைப்பதாலும், சேவைக் கட்டணம் குறைப்பாலும், மொபைல் போன்களிடையே ஸ்மார்ட் போன் நிச்சயம் அதிக எண்ணிக்கையில் இடம் பெறும். அப்படி இடம் பெறுகையில், ஸ்மார்ட் போன்களைத் தாக்கும் மால்வேர் புரோகிராம்களும் அதிக எண்ணிக்கையில் காணப்படும். எனவே 2010 ஆம் ஆண்டு, பலமுனை பயமுறுத்தல்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என லாவாசாப்ட் கருத்து தெரிவிக்கிறது. மேலும் தகவல்கள் அறிய www.lavasoft.com என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும்.