Daily Archives: ஜனவரி 6th, 2010

தகவல் பறக்கும் பாதை – திரும்பிப் பார்ப்போம்

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், நமக்கு ஏதேனும் தகவல் வேண்டும் என்றால் மெத்தப் படித்தவர்களைக் கேட்போம்; அல்லது ஏதேனும் ஒரு நூலகம் சென்று அச்சடித்த புத்தகங்களின் பக்கங்களில் தேடுவோம். ஆனால் இப்போது இன்டர்நெட் இணைப்புடன் உள்ள கம்ப்யூட்டர் ஒன்றை அடைந்து விக்கிபீடியா மற்றும் பல ஆன்லைன் என்சைக்ளோபீடியாக்களில் தேடுகிறோம். தேவையான பக்கங்களை அச்செடுத்து வைத்துக் கொள்கிறோம்.
மக்கள் இப்போதெல்லாம் பார்களிலும், டீக்கடைகளிலும் கூடி நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில்லை. கம்ப்யூட்டர் வழியாக பேஸ்புக் மற்றும் பிற சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களை அடைந்து நண்பர்களைப் பெறுகின்றனர்; ஏற்கனவே நண்பர்களானவர்களுடன் கருத்து யுத்தம் நடத்தி நட்பை உடைக்கின்றனர்.
இணையம் அல்லது மொபைல் வழியாக மக்கள் இப்போது வேலை தேடுகின்றனர்; கல்யாணத்தை நிச்சயிக்கின்றனர். ஏன், விவாகரத்தே செய்கின்றனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு லீவு என்பதால், ரெயில் டிக்கெட் எடுக்க பணம் எடுத்துட்டு வர, பரக்க பரக்க பேங்குக்கு ஓடிய காலம் எல்லாம் போயே போச்சு. வீட்டில் உட்கார்ந்த படியே இன்டர்நெட் வழியில் டிக்கெட்டும், கூடவே பக்கத்துத் தெரு ஹோட்டலின் இணையதளத்தில் பிரியாணியும் ஆர்டர் செய்து வாங்க முடிகிறது. இவ்வளவு ஏன்! அந்தக் கடவுளையே இன்டர்நெட்டில் பூஜிக்கிறோம். கோவிலில் நடக்கும் பூஜையில் நெட்டில் பார்த்தவாறே கலந்து கொள்கிறோம்.
உலகின் தலைசிறந்த அறிவாளி என்று போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப்போது இங்கு வந்தால், உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்து கொள்ள சில நாட்கள் ஆகலாம். இது எப்படி ஏற்பட்டது? இதோ மாற்றத்தின் அடையாளங்கள் அல்லது கருவிகளை இங்கு பட்டியலிடலாம்.
1. பிளாக்பெரி: ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம் இமெயில், வெப் பிரவுசிங், மொபைல் டெலிபோன், டெக்ஸ்ட் மெசேஜிங், இன்டர்நெட் பேக்ஸிங் ஆகிய வசதிகளை உள்ளடக்கி, 2002 ஆம் ஆண்டில் பிளாக்பெரி போனை அறிமுகப்படுத்தியது. வளர்ந்து கொண்டிருந்த தகவல் தொழில் நுட்பத்தில் இது புது திருப்பத்தை உண்டாக்கியது.
2. பிளாக்: Peter Merholz என்பவர் 1999 ஆம் ஆண்டு Blog என்னும் சொல்லை உருவாக்கினார். We Blog என்பதன் சுருக்கமாக இது கிடைத்தது. பத்தாண்டுகளுக்கு முன்பே பிளாக் உருவாக்கம் குறித்த சிந்தனை இருந்தாலும் 1999 க்குப் பின்பே இது வேகமாக உருவெடுத்தது. கருத்து சுதந்திரம் உள்ள நாடுகளில் ஆட்சியாளர்கள் கண்டு பயப்படும் அளவிற்கு இந்த பிளாக்குகள் வளர்ந்துள்ளன.
3. புளுடூத்: மொபைல் போன், கம்ப்யூட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கிடையே குறுகிய தொலைவில் தகவல் பரிமாறும் வழியாக இது அமைந்துள்ளது. பெயருக்கும் செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லாத இந்த டிஜிட்டல் வழிதான் இப்போது பல நெருங்கிய நண்பர்களிடையே தகவல் பாலத்திற்கு வழி வகுத்து வருகிறது.
4.கேமரா போன்: டூர் கிளம்புகையில், ஏங்க மறக்காம கேமரா எடுத்துக்கிட்டீங்களா என்ற கேள்வியெல்லாம் மனைவிமார்கள் இப்போது கேட்பதில்லை. ஏனென்றால் ஏறத்தாழ அனைத்து மொபைல் போன்களும் ஒரு கேமராவினை உள்ளடக்கி உள்ளன. தற்போதைக்கு 12 மெகா பிக்ஸெல் அளவிற்கு உள்ள இவை இன்னும் உயர்வான திறனுடன் அடுத்து வரலாம்.
5. பேஸ்புக்: Mark Zuckerberg : என்ற 20 வயது கல்லூரி மாணவரால் 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பேஸ்புக் தளம், பெரும்பாலும் இளைஞர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. 35 கோடிப் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 6.5 கோடி பேர் தங்கள் மொபைல் மூலமாகத் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
6. பைல் பகிர்ந்து கொள்ளல்: 1980 ஆம் ஆண்டிலேயே இந்த பழக்கம் குறித்துப் பேசப்பட்டாலும், பிட் டாரண்ட் போன்றவை தான் இந்த பைல் ஷேரிங் பழக்கத்தை பரவச் செய்தன. மியூசிக் தொழிலில் ஈடுபடுபவர்கள் இது போன்ற தளங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் ஆட்சேபணை தெரிவித்தாலும், மக்கள் பாடல்களைப் பகிர்ந்து கேட்கின்றனர்; ஆட்சேபணைகளைக் கேட்பதே இல்லை.
7. பயர்பாக்ஸ் – குரோம்: நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டரை அடித்து வீழ்த்தி, முடிசூடா மன்னனாக பிரவுசர் உலகில் வலம் வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரை, அசைத்துப் பார்த்தது மொஸில்லாவின் பயர்பாக்ஸ். அதிக வேகம், கூடுதல் வசதிகள், டேப் பிரவுசிங், லைவ் புக் மார்க்கிங், டூல்பார் காட்சி, பல ஹோம் பேஜஸ், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை என நூற்றுக்கணக்கான ஆட் ஆன் தொகுப்புகளுடன் பயர்பாக்ஸ் இன்று தொடர்ந்து தன் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதனைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் குரோம் பின் நாளில் அறிமுகமானாலும், பயர்பாக்ஸின் இடத்தை அது பிடிக்க முடியவில்லை. இன்றும் அதிக அளவில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தப்பட்டாலும், பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ரசிகர்கள் அதிகரித்து வருவதனை மைக்ரோசாப்டால் தடுத்திழுக்க முடியவில்லை.
8.ஜிமெயில்: இமெயில் பயன்படுத்தும் அனைவரும் நிச்சயமாய் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். ஜிமெயில் வருவதற்கு முன்பே, இமெயில் உலகம் பரந்துவிரிந்திருந்தாலும், ஜிமெயில் 2004ல் ஒரு ஜிபி இடம் தருகிறேன் என்று குதித்த போது அனைவரையும் அப்படியே இழுத்துக் கொண்டது. இன்று வரை அதன் விரிவாக்கம் மிக வேகமாகப் பல இலவச வசதிகளுடன் சென்று கொண்டே இருக்கிறது.
9. கூகுள்: கடந்த பத்தாண்டு காலக் கட்டத்தில் இணையத்தில் அதிக அளவில் தரிசனம் செய்யப்படும் இடம் எது என்றால் அது நிச்சயம் கூகுள் தான். லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய இந்த சர்ச் இஞ்சின் தோற்றுவித்த நிலைகளை மற்றவர்கள் எட்ட பல ஆண்டு காலம் பிடிக்கும். உலகில் அதிக அளவில் இணையத்தில் தொடர்பு கொள்ளப்படும் தளம் கூகுள் தான்.
10.இன்ஸ்டண்ட் மெசேஜ்: வீடு, அலுவலகம், ட்ரெயின், பஸ் பிரயாணங்கள் என எந்த இடத்திலும் தங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவதே தொழிலாக மாறிவிட்ட சூழ்நிலையை இன்று பார்க்கிறோம். கூகுள் டாக், ஸ்கைப், யாஹூ மெசஞ்சர், விண்டோஸ் லைவ் மெசஞ்சர் ஆகியவை இந்த வகையில் பிரபலமான சாதனங்களாகும்.
11. ஐபாட், ஐபோன்: 2001ஆம் ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபாட், நாம் பாடல்களைக் கேட்கும் வழியை புரட்டிப் போட்டு மாற்றியது. தொடக்கத்தில் 5,10 ஜிபி என ஆரம்பித்து இன்று 160 ஜிபி வரை சென்றுள்ள இந்த சாதனம் இன்றைய இசை உலகம் போற்றும் சாதனமாக இயங்குகிறது. 2007ல் ஆப்பிள் தந்த டச் ஸ்கிரீன் ஐபோன், மனிதனுக்கும் மெஷினுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தது.
12.மெமரி ஸ்டிக் மற்றும் புளு ரே: 2000 ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியான பிளாஷ் டிரைவ் என்னும் மெமரி ஸ்டிக் 8 ஜிபி திறனுடன் வெளியானது. இன்று 8 ஜிபி ஸ்டிக் எல்லாம் சாதாரணமானதாக ஆன நிலையில், 256 ஜிபி மெமரி ஸ்டிக் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2006ல் வெளிவந்த புளுரே டிஸ்க்குகள், டிவிடியை விரட்டும் பணியில் உள்ளன. டிவிடி அளவே இருந்தாலும் அதனைக் காட்டிலும் 6 மடங்கு கூடுதலாக டேட்டாவினைக் கொள்ளும் புளுரே அடுத்த பத்தாண்டுகளில் எந்த உயரத்திற்கு செல்லப் போகிறது எனக் கூற இயலவில்லை.
13. யு–ட்யூப்: இந்த உலகமே நாடக மேடை என்று ஷேக்ஸ்பியர் கூறியபோது நாம் பக்தியுடன் அந்த தத்துவத்தைக் கேட்டோம். இன்று யு–ட்யூப் உங்கள் நாடகங்களை நீங்கள் பிறர் பார்க்க தரலாம் என இலவசமாக இடத்தைக் கொடுத்த போது, அதனை வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றிக் கொண்டோம். 2005ல் அறிமுகமான யு–ட்யூப், நம்மை உலகம் பார்க்க சந்தர்ப்பம் தரும் ஓர் அரிய தளமாக இயங்குகிறது.
14. விக்கிபீடியா: மானிட அறிவின் அனைத்து சாதனைகளையும் ஒரு சாதாரண மனிதன் வெகு எளிதாகப் படிக்க இது ஒரு சாதனம் என விக்கிபீடியாவினை 2001ல் ஜிம்மி வேல்ஸ் தொடங்கினார். இன்று 1.5 கோடி கட்டுரைகள், பல்வேறு மொழிகளில் பிரிவுகள், தன்னார்வத் தொண்டர்கள் பங்களிப்பு என மானுடத்தின் சொத்தாக விக்கி பீடியா விளங்குகிறது. அண்மையில் இதன் நிறுவனர், நன்கொடை தரும்படி கேட்டுள்ளார். ஆண்டுக்கு ஒரு கோடி டாலர் செலவில், 35 முழு நேர ஊழியர்களுடன் விக்கிபீடியா இயங்குகிறது. வர்த்தக ரீதியாக வருமானம் ஏதும் இல்லை என்பதால், நன்கொடை தேவைப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 35 கோடி பேர் விக்கிபீடியாவினைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் ஒரு சிலர் மனது வைத்தாலும், இதனை சப்போர்ட் செய்திடலாம்.
தகவல் பரிமாற்றத்தில் எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., வை–பி, ட்விட்டர், இன்டர்நெட் கேம்ஸ் ஆகியவையும் பங்களிக்கின்றன. இன்னும் எத்தனை விதமான புதுவித சாதனங்கள் தகவல் தொடர்புக்கு துணை செய்திட வர இருக்கின்றன என்பதே நம் எதிர்பார்ப்பாகும்.

கை அசைவில் இயங்கும் டிவி

மனிதனுக்கு அறிவு அதிகம். அதேபோல சோம்பலும். எல்லா வேலையும் இருந்த இடத்திலேயே நடக்க வேண்டும் என்று பலர் விரும்புவார்கள். இன்னும் சிலர் கை அசைத்தாலே காரியம் நடக்க வேண்டும் என்றும் ஆசைப்படுவார்கள்.

அதுபோல எண்ணம் உடையவர்களின் ஆசையை நிறைவேற்ற புதிய டி.வி. வருகிறது. ஆமாம், இனிமேல் டி.வி.யை இயக்க ரிமோட்டை தேட வேண்டாம். இருந்த இடத்தில் இருந்து கையை அசைத்தால்போதும் டி.வி. இயங்க ஆரம்பித்துவிடும்.

அமெரிக்காவின் டெக்சாஸ் இன்ஸ்ட்ருமென்ட் நிறுவனம் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஆரஞ்சு வேல்லி நிறுவனம் ஆகியவை இணைந்து இதற்கான டி.வி. வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த டி.வி.யில் ஒரு 3டி கேமராவும், சென்சாரும் இணைக்கப்பட்டு இருக்கும்.

டி.வி.க்கான சுவிட்சை ஆன் செய்தால்போதும். மற்றபடி எல்லா வேலைகளையும் ரிமோட் இல்லாமல் கைஅசைவிலேயே செய்யலாம். கேமராவும், சென்சாரும் உங்கள் அசைவுகளுக்கு ஏற்ப டி.வி.யை இயக்கும். விரல்களை அசைப்பதற்கு ஏற்ப சானல் மாற்றவோ, சப்தத்தை (வால்ம்) கூட்டவோ குறைக்கவோ முடியும்.

அதேபோல வீடியோ கேம்ஸ் விளையாட நினைத்தாலும் உடல்அசைவு முலமே விளையாடலாம். `3டி சமிக்ஞை` முறையில் இயங்கும் இந்த டி.வி. தயாரிப்புப் பணிகள் தொடங்கிவிட்டன. அடுத்த கிறிஸ்துமஸ் பண்டிகையை இந்த டி.வி.யுடன் கொண்டாடலாம் என்று இதை தயாரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்

கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப் படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது. அறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன. பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன.
பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன.
மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்பு களுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.
அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப் பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக்கரம் நீட்டுகிறது. இதன் முகவரி : http://www.learnerstv.com/

வளாகத் தேர்வில் `கவனமாகும்’ கம்பெனிகள்!

பொருளாதாரத் தேக்க நிலையானது கம்பெனிகள், ஊழியர்களை மட்டும் பாதிக்கவில்லை, மாணவர்களையும் பாதித்துள்ளது. அவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்த `வளாகத் தேர்விலும்’ (கேம்பஸ் இன்டர்வியூ) பாதிப்பு ஏற்படும் நிலை. காரணம், நிறுவனங்கள் வளாகத் தேர்வில் கவனம் கூட்டி இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளன.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2009-ம் ஆண்டில் வளாகத் தேர்வுகள் குறைவாகவே இருந்தன. வளாகத் தேர்வு விதி
முறைகளை விதிப்பதில் தற்போது நிறுவனங்களுக்குச் சுதந்திரம் உள்ளது. அவை எந்தளவு சரியானவை என்று மாணவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

“அதிக `கட்-ஆப்’ மார்க்கை வலியுறுத்துவது, ஒரு மாணவரைத் தேர்தெடுப்பதற்கான சரியான வழிமுறை அல்ல” என்கிறார், இறுதியாண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவரான யதீஷ்.

“இது, சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அவர்கள், அதிக மார்க் பெறும் மாணவர்களை விட துறை சார்ந்த அறிவு அதிகம் கொண்டிருக்கலாம். ஆனால் அதிகமான `கட்-ஆப் மார்க்’ காரணமாக அவர்களால் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போய்விடுகிறது” என்கிறார் யதீஷ்.

அதே கருத்தை முன்றாமாண்டு கணினியியல் மாணவரான ரங்கநாத்தும் பிரதிபலிக்கிறார், “அதிகமாகப் பிரபலமாகாத `சாப்ட்வேர்’ நிறுவனங்கள் கூட, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சட்டென்று தங்களின் `கட்-ஆப் மார்க்’கை உயர்த்திவிட்டன. தவிர, குறிப்பிட்ட பாடத்தில் சராசரியாக இவ்வளவு மதிப்பெண் இருக்க வேண்டும் என்ற புதிய விதிகளையும் புகுத்தியுள்ளன. காரணம், மிகவும் பிரபலமான கம்பெனிகள் எங்கள் கல்லூரிக்கு இதுவரை வரவில்லை. எனவே பொருளாதார நிலையற்ற நிலையில், இந்த மாதிரியான சிறு நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் ரங்கநாத்.

மற்றொரு கணினியியல் முன்றாமாண்டு மாணவரான நாகதேவ் அதிகமான நிறுவனங்கள் தற்போது வளாகத் தேர்வுக்கு வருவதில்லை என்பதுதான் கவலையளிக்கிறது என்கிறார்.

“அதிக `கட்-ஆப் மார்க்’ என்பதைக் கூட எங்களால் எதிர்கொள்ள முடியும். ஆனால் தற்போது வளாகத் தேர்வுக்கு நிறுவனங்கள் வருவதே அரிதாகிப் போய்விட்டது. அப்படியே வளாகத் தேர்வு இருந்தாலும், எங்கள் சீனியர்களுக்குக் கிடைத்த மாதிரியான வேலைவாய்ப்புகள் கிடைக்குமா என்று உறுதியாகக் கூற முடியாது” என்கிறார் நாகதேவ்.

இருந்தபோதும் இது மற்றொரு வகையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறலாம். மேல்படிப்புக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பிரபல பொறியியல் கல்வி நிறுவனம் ஒன்று, தங்களிடம் முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. போட்டித் தேர்வுகளான `காட்’, `ஜிஆர்இ’, `கேட்’ போன்றவையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

“வளாகத் தேர்வு முலம் எனக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அதிகமான `கட்-ஆப் மார்க்’, போட்டி காரணமாக நான் தொடர்ந்து படிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். நான் தற்போது எனது விடுமுறையை `கேட்’டுக்குப் படிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். `காட்’ தேர்வு எழுதவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் பிரவீண் என்ற மாணவர்.

இந்தப் பொறியியல் மாணவர்கள் அனைவருக்கும் வேலை தேடுவது தற்போது நீண்ட பயணமாகத் தெரிகிறது.

ஈ.சி.ஈ. இறுதியாண்டு மாணவரான அபிலாஷ், “இந்த ஆண்டு எங்கள் கல்லூரிக்கு வளாகத் தேர்வுக்கு வந்த நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதுதான். ஆனால் அதைவிட மோசமான விஷயம், அதிகமான `கட்-ஆப் மார்க்’. உதாரணத்துக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனம் 75 சதவீதமாக `கட்-ஆப்’பை அறிவித்துள்ளது. இது அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை முந்தைய ஆண்டை விட அதிகம். `டிசிஎஸ்’, `இன்போசிஸ்’ போன்ற பிரபல நிறுவனங்கள் இதுவரை எங்கள் கல்லூரிக்கு வரவில்லை. அவர்களின் `கட்-ஆப் மார்க்’ கடந்த ஆண்டு 65 சதவீதமாக இருந்தது இந்த ஆண்டு 70 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.

ப்ரோ பயோட்டிக்…!’

டப்பா உணவுகளில் அடுத்த அவதாரம்
நல்லது தான்; மிஞ்சினால் கெட்டது
“தயிர்…தயிர்…வேணுமா அம்மா…’ என்று இப்போதும் கூட தெருக்களில் பானையில் தயிர் கொண்டு வந்து விற்பது கிராமங்களை ஒட்டிய சில நகரங்களில் இருக்கிறது. அந்த தயிர் வாங்கி சாப்பிட் டிருக்கீங்களா… அவ்வளவு கட்டியாக இருக்கும்; ஒரு வித சுவை உங்களை ஈர்க்கும்.
சென்னை போன்ற நகரங்களில் பானை தயிர் விற்பனை எல்லாம் போய்விட்டது; “மால்’களில் மட்டுமல்ல, சாதா கடைகளிலும் பாக்கெட் தயிர், பால் பொருட்கள் தான் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், மேற்கத்திய அவதாரம் தான் ” ப்ரோ பயோட்டிக்’ உணவுப்பொருட்கள்; பால், பால் பொருட்கள், ஐஸ்கிரீம்களாகத்தான் இந்த வகை டப்பா உணவுப்பொருள் சில ஆண்டு முன் நுழைந்தது. ஆனால், இப்போது இது பலவகை உணவுகளில் உலா வரப்போகிறது. ஆம், வெளிநாட்டு நிறுவனங்கள், இப்படிப்பட்ட டப்பா உணவுகளை இந்தியாவில் குவிக்க தயாராகிவிட்டன.
நல்லதா – கெட்டதா
“ப்ரோ பயோட்டிக்’ உணவு நல்லதா? கெட்டதா? ஒரு வகையில் நல்லது தான்; ஆனால், மிஞ்சினால் கெட்டதும் கூட என்பது தான் நிபுணர்கள் கருத்து. “ப்ரோ ப்யோட்டிக்’ என்பது, உயிருள்ள பாக்டீரியா கலந்த உணவு; மனித உடலுக்கு நல்லது தான்; எளிதில் ஜீரணிக்க உதவும்; எந்த பாதிப்பையும் தராது; நாம் அருந்தும் பாலில், “அசிடோபிலஸ்’ என்ற பாக்டீரியா உள்ளது. இதுபோல, பால் பொருட்கள் முதல் காய்கறி, பழங்கள் வரை உயிருள்ள பாக்டீரியாக்கள் உள்ளன’ என்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால், இட்லி, தோசை , அடை மாவு போன்ற அரைத்து வைக்கும் மாவுகளில் உள்ள புளிக்கும் “ஈஸ்ட்’ போன்றவையும் ஒரு வகை “ப்ரோ பயோட்டிக்’ தான் என்பதும் இவர்கள் கருத்து.
மொறுமொறு வரை
இளைய தலைமுறையினரை வெகுவாக கவர்ந்துள்ள பாக்கெட் “மொறுமொறு’க்களுடன் இப்போது கொடிகட்டிப்பறப்பது “ப்ரோ பயோட்டிக்’ பாக்கெட் உணவுகள் தான். பால், தயிர், இனிப்பு தயிரான யோகர்ட் போன்றவையும் இவர்களின் குளிர்பான பட்டியலில் சேர்ந்து விட்டது.
இந்தியாவில் ” ப்ரோ பயோட்டிக்’ நுழைந்து ஐந்தாண்டாகிவிட்டது என்றாலும், அதன் அளவு மீறிய வர்த்தக ஊடுருவல், இப்போது தான் மத்திய அரசை அசைத்துள்ளது. வெளிநாட்டு மருந்துகளுக்கு கட்டுப்பாடு உள்ளது போல, இதற்கும் கட்டுப்பாடு கொண்டு வர உள்ளது.
ஐரோப்பிய நிறுவனங்கள், இந்தியாவில் “ப்ரோ பயோட்டிக்’குகளுக்கு அதிக மவுசு இருப்பதை அறிந்து மொறு மொறு பொருட்கள் வரை தயாரித்து விற்பனை செய்ய தயாராகி வருகிறது. கோதுமை உட்பட சில தானியங்களில் “ப்ரோ பயோட்டிக்’ சிற்றுண்டிகளை பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்வதே இவற்றின் நோக்கம்.
கல்லீரலை பாதிக்கும்
கல்லீரலில் பாதிப்பு வந்தால் அதற்கு பெயர் “பான்கிரியாட்டிஸ்’ என்பது. அதிக மது குடித்தால் வரும் இது. இந்த பாதிப்பு அதிகமானால், சிறுநீரகத்தை பாதிக்கும்; சர்க்கரை நோயை அதிகரிக்கும்.
“ப்ரோ பயோட் டிக்’ உணவுகளை மிதமாக சாப் பிட்டு வந்தால் அதனால், உடலுக்கு நல்லது தான். மிஞ்சினால் கல்லீரல் பாதிப்பு அதிகரிக்குமாம். ஐரோப்பிய நாடுகளில் பலர் உயிரை பறித்துள்ளது இந்த பாதிப்பு. இப்படிப்பட்ட உணவு தான் இப்போது இந்தியாவில் பல வகையில் விஸ்வரூபம் எடுக்க தயாராக உள்ளது.
கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க, அதில் பாயும் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு சீராக இருக்க வேண்டும். அதிக “ப்ரோ பயோட்டிக்’ உணவுகளால் அதிக பாக்டீரியா சேர்ந்தால், அதுவே கெட்டதாகி விடுகிறது. ஆக்சிஜன் அளவை மேலும் குறைக்கிறது என்று நிபுணர்கள் சொல்கின்றனர்.
பாக்கெட் உணவில் வாழலாமா
பாக்கெட் உணவுகளில் மட்டுமே அன்றாடம் உணவுத் தேவையை கவனித்துக் கொள்ளலாம் என்ற மனப்போக்கு, இளைய தலைமுறையினரிடம் உள்ளது. அதனால் தான், அதிக அளவில் பாக்கெட் உணவுகளை வெளிநாட்டு நிறு வனங்கள், இங்கு கொட்டுகின்றன; அவை விற்பனையும் ஆகின்றன. எதுவும் மிஞ்சினால் விஷம் தான். அதை உணர்ந்து, “படித்த’ இளைய தலைமுறையினர், பாக்கெட் உணவுகளில் உஷாராக இருந் தால் அவர்கள் உடல் நலம் பாதுகாக்கப்படும்; இல்லையேல், சர்க்கரை, இதய பாதிப்பு மட்டுமல்ல, கல்லீரல் போன்றவையும் பாதிக்கப்பட்டு,பெரும் சுகாதார கேட்டை சந்திக்க நேரிடும் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஆக, இளைய தலைமுறையினரே, பாக்கெட் உணவுகளை வாங்கும் போதே யோசியுங்கள்; பாக்கெட் ட்ரிங்குகளை வாங்குவதை விட,பிரஷ் ஜூஸ் சாப்பிடும் போக்கை பின்பற்றுங்கள்; உங்கள் படிப்பும், திறமையும் உங்களுக்கும் உதவும்; நாட்டுக்கும் உதவும்.
மேற்கத்திய மக்களை பாதித்த பாக்கெட் உணவுகள், உங்கள் உயிருக்கு ஆபத்தாக இருக்க வேண்டுமா…?

உங்கள் புத்தாண்டு திட்டம் முழுமையாக!


திட்டமிடுவதில் நாம் சூரர்கள்தான். இந்தப் புத்தாண்டுக்கும் நிறைய திட்டம் போட்டிருப்போம். அந்தத் திட்டம் முழுமையாகவும், வெற்றிகள் கைகூடவும் இதோ சில ஐடியாக்கள்… “இன்னிக்கு 6-ம்தேதி, இப்போ போயி புத்தாண்டு புதுத்திட்டத்தைப் பற்றி சொல்றீங்களேன்னு…” உங்களுக்குத் தோன்றுகிறதா?

முதலில் அந்த எண்ணத்தை மாற்றுங்கள். அந்த எதிர்மறை எண்ணம்தான், நேற்றுவரை உங்களை பின்னுக்குத் தள்ளியது. இன்று இனிய நாள், இந்நேரம் பொன்நேரம். இன்று நான் புதிதாய்ப் பிறந்தேன். இதோ நான் புதுக்காற்றை சுவாசமாக உள்ளிழுக்கிறேன். அது உள்ளே சென்று என் அழுக்குகளை எடுத்துக்கொண்டு வெளியே வர, நான் புத்துணர்ச்சி பெறுகிறேன். எனது செயல்பாடுகளும் புதுமையாக மலர் கிறது.

நேற்றைய நினைவுகள் பாடமாக மட்டுமே நினைவிருக்கட்டும், வடுக்களாக அல்ல. அடுத்த கணம் எனக்கு அகப்படவில்லை. நான் இந்தக்கணத்தை செதுக்கியே அடுத்த கணத்தை (எதிர்காலத்தை) உருவாக்குகிறேன். எனவே இதுவே என் நேரம். இப்போதிருந்து என் காலம் என் கையில். இனி வெற்றிதான் என் வாழ்க்கையில் என்று எண்ணுங்கள். நேர்மறை எண்ணமே நேர்த்தியான எண்ணம். நினைத்தவுடன் செயல்படுவதே நிஜமான வெற்றி. “நாங்கெல்லாம் ரொம்ப அட்வான்சு, நேத்தே திட்டம்போட்டு செயல்பட ஆரம்பிச்சுட்டோம்ல…” என்று சொல்கிறீர்களா?

“ஆமாம் நேற்று என்ன செய்தீர்கள்?”

“7 மணிக்கு எழுந்திருச்சேன். குளிச்சிட்டு புது டிரெஸ் போட்டுகிட்டு பிரண்ட்ஸ்களோட கோவிலுக்கு போய்விட்டு செம ஜாலியா எஞ்சாய் பண்ணி னோம்.”

“ஆனால் 6 மணிக்கெல்லாம் ஜிம்முக்கு போகணும், கராத்தே கிளாசுக்கு போகணும்னு திட்டத்தில் குறிச்சி வச்சிருந்தீங்களே?”

“அதுவா, அது வந்து… முந்தின நாள் புத்தாண்டை வரவேற்க ரொம்ப நேரம் முழிச்சிருந்தோமா, `ஹேப்பி நி இயர்’ கொண்டாடிட்டு தூங்க லேட்டாயிடுச்சி. அதான்…. இன்னும் டைம் இருக்குல்ல, நாளை முதல் கடைபிடிச்சா போச்சு!. நேற்று ஒருநாள்தானே, ஹாலிடேயில சந்தோஷமா இருக்கக்கூடாதா?”

“அது சரிதான். சந்தோஷம் என்பது நிம்மதியைத் தருவதா? வெற்றியைத் தருவதா?”

“இரண்டையும்தான்”

“நேற்று நீங்கள் கொண்டாடிய சந்தோஷம் இன்று எதையாவது தந்திருக்கிறதா? வெற்றிக்கான காலத்தில் ஒரு நாளை விழுங்கிவிட்டது. சோம்பலைக் கொஞ்சம் தந்திருக்கிறது.”

சரி கழிந்தது போகட்டும். மீண்டும் புதிதாய்ப் பிறந்தேன் என்று எண்ணி செயல்படுங்கள். இனியும் வெற்றியைத் தடுக்கும் எதுவும் எனக்கு வேண்டாம் என்று இலக்கை நோக்கி ஓடுங்கள். கொஞ்சம் நில்லுங்கள்… அடுத்த நாள் வரும் முன்பு இதைச் செய்துவிடுங்கள்.

என் திட்டப்படி இன்று இவ்வளவு செய்திருக்க வேண்டும். ஆனால் நான் செய்தது இது, அதனால் செய்யாமல் போன பணிகள் இது என்று திட்டத்தின் அருகே குறித்து வையுங்கள். அப்படிக் குறிக்கவும் முதலில் திட்டத்தில் நேரம் ஒதுக்குங்கள்.

குறித்தபிறகு அந்தக் குறைப் பணிகளை எப்போது நிறைவேற்ற வேண்டும், எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று திட்டமிடுங்கள். மறுநாள் அதைச் செய்து முடிக்க முயலுங்கள். “ச்சே போச்சு, இன்னிக்கு யார் முகத்தில முழிச்சேன்னே தெரியல, எனக்கின்னு இப்படியா நடக்கணும். நான் நெனச்ச மாதிரி ஒண்ணுமே நடக்கலே”

மறுநாள் பெரும்பாலும் இப்படித்தான் சொல்ல வேண்டியதிருக்கும். ஏனென்றால் நாம் முதல்தேதி செய்த செயல்களின் தாக்கம்தான் இது.

நாம் ஏதேதோ காரணம் சொல்லி ஒத்திப்போட்ட பணிகள் கொஞ்சம் சேர்ந்திருக்கும். மறுநாள் திட்டமிட்ட பணிகளைச் செய்யவே நேரம் சரியாக இருக்கும். அத்துடன் கொஞ்சம் கஷ்டப்பட்டு குறை வேலைகளையும் முடித்துவிடலாம் என்று நினைத்தால் உடலும், மனமும் ஒத்துழைக்காது.

ஏனென்றால் நாம் 8 மணி நேரம் வேலை பார்த்துவிட்டு 16 மணி நேரம் கொண்டாட்டம், ஓய்வு தேடுவோம். அப்படி இருக்கையில் கூடுதல் வேலை என்றால் நம்ம மனசு இடம் தருமா? `நான் கொஞ்சம் வித்தியாசமானவன், செய்து காட்டுகிறேன் பாருங்கள்’ என்று விடாப்பிடியுடன் களத்தில் இறங்கி பணியில் ஈடுபட்டால் ன்றாமவர் (நமக்கு முக்கியமானவர்) குறுக்கிடுவார். கடைசியில் அன்றும் நமது திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு இருக்காது. கடைசியில் விதியைத்தான் நொந்து கொண்டு படுப்போம். அந்த உறுத்தலான எண்ணமே மறுநாள் ஊக்கத்தைக் கெடுக்கும். எனவே மீண்டும் முதல் யோசனைக்கே வாருங்கள் “மீண்டும் புதிதாய் பிறந்தேன்.”

எனவே உங்கள் புத்தாண்டுத் திட்டம் வெற்றியில் முடியும் வரை, மீண்டும் மீண்டும் புதியவனாய் அவதாரம் எடுங்கள். செய்ய வேண்டிய பணிகளையும், செய்த பணிகளையும் குறித்து வையுங்கள். குறிப்பாக ரிலாக்ஷேஸனுக்கு நேரம் ஒதுக்கிவிடுங்கள். மற்றபடி சோம்பேறிப் பேயை விரட்டிவிட்டால் வெற்றியெனும் சொர்க்கத்தை தேட வேண்டியதில்லை.