தகவல் பறக்கும் பாதை – திரும்பிப் பார்ப்போம்

பத்து ஆண்டுகளுக்கு முன்னால், நமக்கு ஏதேனும் தகவல் வேண்டும் என்றால் மெத்தப் படித்தவர்களைக் கேட்போம்; அல்லது ஏதேனும் ஒரு நூலகம் சென்று அச்சடித்த புத்தகங்களின் பக்கங்களில் தேடுவோம். ஆனால் இப்போது இன்டர்நெட் இணைப்புடன் உள்ள கம்ப்யூட்டர் ஒன்றை அடைந்து விக்கிபீடியா மற்றும் பல ஆன்லைன் என்சைக்ளோபீடியாக்களில் தேடுகிறோம். தேவையான பக்கங்களை அச்செடுத்து வைத்துக் கொள்கிறோம்.
மக்கள் இப்போதெல்லாம் பார்களிலும், டீக்கடைகளிலும் கூடி நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில்லை. கம்ப்யூட்டர் வழியாக பேஸ்புக் மற்றும் பிற சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களை அடைந்து நண்பர்களைப் பெறுகின்றனர்; ஏற்கனவே நண்பர்களானவர்களுடன் கருத்து யுத்தம் நடத்தி நட்பை உடைக்கின்றனர்.
இணையம் அல்லது மொபைல் வழியாக மக்கள் இப்போது வேலை தேடுகின்றனர்; கல்யாணத்தை நிச்சயிக்கின்றனர். ஏன், விவாகரத்தே செய்கின்றனர்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு லீவு என்பதால், ரெயில் டிக்கெட் எடுக்க பணம் எடுத்துட்டு வர, பரக்க பரக்க பேங்குக்கு ஓடிய காலம் எல்லாம் போயே போச்சு. வீட்டில் உட்கார்ந்த படியே இன்டர்நெட் வழியில் டிக்கெட்டும், கூடவே பக்கத்துத் தெரு ஹோட்டலின் இணையதளத்தில் பிரியாணியும் ஆர்டர் செய்து வாங்க முடிகிறது. இவ்வளவு ஏன்! அந்தக் கடவுளையே இன்டர்நெட்டில் பூஜிக்கிறோம். கோவிலில் நடக்கும் பூஜையில் நெட்டில் பார்த்தவாறே கலந்து கொள்கிறோம்.
உலகின் தலைசிறந்த அறிவாளி என்று போற்றப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், இப்போது இங்கு வந்தால், உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை புரிந்து கொள்ள சில நாட்கள் ஆகலாம். இது எப்படி ஏற்பட்டது? இதோ மாற்றத்தின் அடையாளங்கள் அல்லது கருவிகளை இங்கு பட்டியலிடலாம்.
1. பிளாக்பெரி: ரிசர்ச் இன் மோஷன் நிறுவனம் இமெயில், வெப் பிரவுசிங், மொபைல் டெலிபோன், டெக்ஸ்ட் மெசேஜிங், இன்டர்நெட் பேக்ஸிங் ஆகிய வசதிகளை உள்ளடக்கி, 2002 ஆம் ஆண்டில் பிளாக்பெரி போனை அறிமுகப்படுத்தியது. வளர்ந்து கொண்டிருந்த தகவல் தொழில் நுட்பத்தில் இது புது திருப்பத்தை உண்டாக்கியது.
2. பிளாக்: Peter Merholz என்பவர் 1999 ஆம் ஆண்டு Blog என்னும் சொல்லை உருவாக்கினார். We Blog என்பதன் சுருக்கமாக இது கிடைத்தது. பத்தாண்டுகளுக்கு முன்பே பிளாக் உருவாக்கம் குறித்த சிந்தனை இருந்தாலும் 1999 க்குப் பின்பே இது வேகமாக உருவெடுத்தது. கருத்து சுதந்திரம் உள்ள நாடுகளில் ஆட்சியாளர்கள் கண்டு பயப்படும் அளவிற்கு இந்த பிளாக்குகள் வளர்ந்துள்ளன.
3. புளுடூத்: மொபைல் போன், கம்ப்யூட்டர் மற்றும் பிற எலக்ட்ரானிக் சாதனங்களுக்கிடையே குறுகிய தொலைவில் தகவல் பரிமாறும் வழியாக இது அமைந்துள்ளது. பெயருக்கும் செயலுக்கும் எந்த தொடர்பும் இல்லாத இந்த டிஜிட்டல் வழிதான் இப்போது பல நெருங்கிய நண்பர்களிடையே தகவல் பாலத்திற்கு வழி வகுத்து வருகிறது.
4.கேமரா போன்: டூர் கிளம்புகையில், ஏங்க மறக்காம கேமரா எடுத்துக்கிட்டீங்களா என்ற கேள்வியெல்லாம் மனைவிமார்கள் இப்போது கேட்பதில்லை. ஏனென்றால் ஏறத்தாழ அனைத்து மொபைல் போன்களும் ஒரு கேமராவினை உள்ளடக்கி உள்ளன. தற்போதைக்கு 12 மெகா பிக்ஸெல் அளவிற்கு உள்ள இவை இன்னும் உயர்வான திறனுடன் அடுத்து வரலாம்.
5. பேஸ்புக்: Mark Zuckerberg : என்ற 20 வயது கல்லூரி மாணவரால் 2004 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பேஸ்புக் தளம், பெரும்பாலும் இளைஞர்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. 35 கோடிப் பேர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இவர்களில் 6.5 கோடி பேர் தங்கள் மொபைல் மூலமாகத் தொடர்பு கொண்டு வருகின்றனர்.
6. பைல் பகிர்ந்து கொள்ளல்: 1980 ஆம் ஆண்டிலேயே இந்த பழக்கம் குறித்துப் பேசப்பட்டாலும், பிட் டாரண்ட் போன்றவை தான் இந்த பைல் ஷேரிங் பழக்கத்தை பரவச் செய்தன. மியூசிக் தொழிலில் ஈடுபடுபவர்கள் இது போன்ற தளங்களுக்கும், செயல்பாடுகளுக்கும் ஆட்சேபணை தெரிவித்தாலும், மக்கள் பாடல்களைப் பகிர்ந்து கேட்கின்றனர்; ஆட்சேபணைகளைக் கேட்பதே இல்லை.
7. பயர்பாக்ஸ் – குரோம்: நெட்ஸ்கேப் கம்யூனிகேட்டரை அடித்து வீழ்த்தி, முடிசூடா மன்னனாக பிரவுசர் உலகில் வலம் வந்த இன்டர்நெட் எக்ஸ்புளோரரை, அசைத்துப் பார்த்தது மொஸில்லாவின் பயர்பாக்ஸ். அதிக வேகம், கூடுதல் வசதிகள், டேப் பிரவுசிங், லைவ் புக் மார்க்கிங், டூல்பார் காட்சி, பல ஹோம் பேஜஸ், பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை என நூற்றுக்கணக்கான ஆட் ஆன் தொகுப்புகளுடன் பயர்பாக்ஸ் இன்று தொடர்ந்து தன் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இதனைக் காட்டிலும் கூடுதல் வேகத்தில் குரோம் பின் நாளில் அறிமுகமானாலும், பயர்பாக்ஸின் இடத்தை அது பிடிக்க முடியவில்லை. இன்றும் அதிக அளவில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்தப்பட்டாலும், பயர்பாக்ஸ் பிரவுசருக்கான ரசிகர்கள் அதிகரித்து வருவதனை மைக்ரோசாப்டால் தடுத்திழுக்க முடியவில்லை.
8.ஜிமெயில்: இமெயில் பயன்படுத்தும் அனைவரும் நிச்சயமாய் ஒரு ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். ஜிமெயில் வருவதற்கு முன்பே, இமெயில் உலகம் பரந்துவிரிந்திருந்தாலும், ஜிமெயில் 2004ல் ஒரு ஜிபி இடம் தருகிறேன் என்று குதித்த போது அனைவரையும் அப்படியே இழுத்துக் கொண்டது. இன்று வரை அதன் விரிவாக்கம் மிக வேகமாகப் பல இலவச வசதிகளுடன் சென்று கொண்டே இருக்கிறது.
9. கூகுள்: கடந்த பத்தாண்டு காலக் கட்டத்தில் இணையத்தில் அதிக அளவில் தரிசனம் செய்யப்படும் இடம் எது என்றால் அது நிச்சயம் கூகுள் தான். லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் 1998 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய இந்த சர்ச் இஞ்சின் தோற்றுவித்த நிலைகளை மற்றவர்கள் எட்ட பல ஆண்டு காலம் பிடிக்கும். உலகில் அதிக அளவில் இணையத்தில் தொடர்பு கொள்ளப்படும் தளம் கூகுள் தான்.
10.இன்ஸ்டண்ட் மெசேஜ்: வீடு, அலுவலகம், ட்ரெயின், பஸ் பிரயாணங்கள் என எந்த இடத்திலும் தங்கள் நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்புவதே தொழிலாக மாறிவிட்ட சூழ்நிலையை இன்று பார்க்கிறோம். கூகுள் டாக், ஸ்கைப், யாஹூ மெசஞ்சர், விண்டோஸ் லைவ் மெசஞ்சர் ஆகியவை இந்த வகையில் பிரபலமான சாதனங்களாகும்.
11. ஐபாட், ஐபோன்: 2001ஆம் ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபாட், நாம் பாடல்களைக் கேட்கும் வழியை புரட்டிப் போட்டு மாற்றியது. தொடக்கத்தில் 5,10 ஜிபி என ஆரம்பித்து இன்று 160 ஜிபி வரை சென்றுள்ள இந்த சாதனம் இன்றைய இசை உலகம் போற்றும் சாதனமாக இயங்குகிறது. 2007ல் ஆப்பிள் தந்த டச் ஸ்கிரீன் ஐபோன், மனிதனுக்கும் மெஷினுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்தது.
12.மெமரி ஸ்டிக் மற்றும் புளு ரே: 2000 ஆம் ஆண்டில் வர்த்தக ரீதியான பிளாஷ் டிரைவ் என்னும் மெமரி ஸ்டிக் 8 ஜிபி திறனுடன் வெளியானது. இன்று 8 ஜிபி ஸ்டிக் எல்லாம் சாதாரணமானதாக ஆன நிலையில், 256 ஜிபி மெமரி ஸ்டிக் வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல 2006ல் வெளிவந்த புளுரே டிஸ்க்குகள், டிவிடியை விரட்டும் பணியில் உள்ளன. டிவிடி அளவே இருந்தாலும் அதனைக் காட்டிலும் 6 மடங்கு கூடுதலாக டேட்டாவினைக் கொள்ளும் புளுரே அடுத்த பத்தாண்டுகளில் எந்த உயரத்திற்கு செல்லப் போகிறது எனக் கூற இயலவில்லை.
13. யு–ட்யூப்: இந்த உலகமே நாடக மேடை என்று ஷேக்ஸ்பியர் கூறியபோது நாம் பக்தியுடன் அந்த தத்துவத்தைக் கேட்டோம். இன்று யு–ட்யூப் உங்கள் நாடகங்களை நீங்கள் பிறர் பார்க்க தரலாம் என இலவசமாக இடத்தைக் கொடுத்த போது, அதனை வாழ்வின் ஓர் அங்கமாக மாற்றிக் கொண்டோம். 2005ல் அறிமுகமான யு–ட்யூப், நம்மை உலகம் பார்க்க சந்தர்ப்பம் தரும் ஓர் அரிய தளமாக இயங்குகிறது.
14. விக்கிபீடியா: மானிட அறிவின் அனைத்து சாதனைகளையும் ஒரு சாதாரண மனிதன் வெகு எளிதாகப் படிக்க இது ஒரு சாதனம் என விக்கிபீடியாவினை 2001ல் ஜிம்மி வேல்ஸ் தொடங்கினார். இன்று 1.5 கோடி கட்டுரைகள், பல்வேறு மொழிகளில் பிரிவுகள், தன்னார்வத் தொண்டர்கள் பங்களிப்பு என மானுடத்தின் சொத்தாக விக்கி பீடியா விளங்குகிறது. அண்மையில் இதன் நிறுவனர், நன்கொடை தரும்படி கேட்டுள்ளார். ஆண்டுக்கு ஒரு கோடி டாலர் செலவில், 35 முழு நேர ஊழியர்களுடன் விக்கிபீடியா இயங்குகிறது. வர்த்தக ரீதியாக வருமானம் ஏதும் இல்லை என்பதால், நன்கொடை தேவைப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சராசரியாக 35 கோடி பேர் விக்கிபீடியாவினைப் பயன்படுத்துகின்றனர். இவர்களில் ஒரு சிலர் மனது வைத்தாலும், இதனை சப்போர்ட் செய்திடலாம்.
தகவல் பரிமாற்றத்தில் எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., வை–பி, ட்விட்டர், இன்டர்நெட் கேம்ஸ் ஆகியவையும் பங்களிக்கின்றன. இன்னும் எத்தனை விதமான புதுவித சாதனங்கள் தகவல் தொடர்புக்கு துணை செய்திட வர இருக்கின்றன என்பதே நம் எதிர்பார்ப்பாகும்.

%d bloggers like this: