வளாகத் தேர்வில் `கவனமாகும்’ கம்பெனிகள்!

பொருளாதாரத் தேக்க நிலையானது கம்பெனிகள், ஊழியர்களை மட்டும் பாதிக்கவில்லை, மாணவர்களையும் பாதித்துள்ளது. அவர்களுக்கு வரப்பிரசாதமாக வந்த `வளாகத் தேர்விலும்’ (கேம்பஸ் இன்டர்வியூ) பாதிப்பு ஏற்படும் நிலை. காரணம், நிறுவனங்கள் வளாகத் தேர்வில் கவனம் கூட்டி இறுக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளன.

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2009-ம் ஆண்டில் வளாகத் தேர்வுகள் குறைவாகவே இருந்தன. வளாகத் தேர்வு விதி
முறைகளை விதிப்பதில் தற்போது நிறுவனங்களுக்குச் சுதந்திரம் உள்ளது. அவை எந்தளவு சரியானவை என்று மாணவர்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியிருக்கின்றனர்.

“அதிக `கட்-ஆப்’ மார்க்கை வலியுறுத்துவது, ஒரு மாணவரைத் தேர்தெடுப்பதற்கான சரியான வழிமுறை அல்ல” என்கிறார், இறுதியாண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் மாணவரான யதீஷ்.

“இது, சராசரி மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்துகிறது. அவர்கள், அதிக மார்க் பெறும் மாணவர்களை விட துறை சார்ந்த அறிவு அதிகம் கொண்டிருக்கலாம். ஆனால் அதிகமான `கட்-ஆப் மார்க்’ காரணமாக அவர்களால் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போய்விடுகிறது” என்கிறார் யதீஷ்.

அதே கருத்தை முன்றாமாண்டு கணினியியல் மாணவரான ரங்கநாத்தும் பிரதிபலிக்கிறார், “அதிகமாகப் பிரபலமாகாத `சாப்ட்வேர்’ நிறுவனங்கள் கூட, முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது சட்டென்று தங்களின் `கட்-ஆப் மார்க்’கை உயர்த்திவிட்டன. தவிர, குறிப்பிட்ட பாடத்தில் சராசரியாக இவ்வளவு மதிப்பெண் இருக்க வேண்டும் என்ற புதிய விதிகளையும் புகுத்தியுள்ளன. காரணம், மிகவும் பிரபலமான கம்பெனிகள் எங்கள் கல்லூரிக்கு இதுவரை வரவில்லை. எனவே பொருளாதார நிலையற்ற நிலையில், இந்த மாதிரியான சிறு நிறுவனங்களுக்கு விண்ணப்பிப்பதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை” என்கிறார் ரங்கநாத்.

மற்றொரு கணினியியல் முன்றாமாண்டு மாணவரான நாகதேவ் அதிகமான நிறுவனங்கள் தற்போது வளாகத் தேர்வுக்கு வருவதில்லை என்பதுதான் கவலையளிக்கிறது என்கிறார்.

“அதிக `கட்-ஆப் மார்க்’ என்பதைக் கூட எங்களால் எதிர்கொள்ள முடியும். ஆனால் தற்போது வளாகத் தேர்வுக்கு நிறுவனங்கள் வருவதே அரிதாகிப் போய்விட்டது. அப்படியே வளாகத் தேர்வு இருந்தாலும், எங்கள் சீனியர்களுக்குக் கிடைத்த மாதிரியான வேலைவாய்ப்புகள் கிடைக்குமா என்று உறுதியாகக் கூற முடியாது” என்கிறார் நாகதேவ்.

இருந்தபோதும் இது மற்றொரு வகையில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறலாம். மேல்படிப்புக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. பிரபல பொறியியல் கல்வி நிறுவனம் ஒன்று, தங்களிடம் முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை 300 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறது. போட்டித் தேர்வுகளான `காட்’, `ஜிஆர்இ’, `கேட்’ போன்றவையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

“வளாகத் தேர்வு முலம் எனக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று நான் நம்பிக் கொண்டிருந்தேன். ஆனால் அதிகமான `கட்-ஆப் மார்க்’, போட்டி காரணமாக நான் தொடர்ந்து படிக்கலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். நான் தற்போது எனது விடுமுறையை `கேட்’டுக்குப் படிப்பதற்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன். `காட்’ தேர்வு எழுதவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்கிறார் பிரவீண் என்ற மாணவர்.

இந்தப் பொறியியல் மாணவர்கள் அனைவருக்கும் வேலை தேடுவது தற்போது நீண்ட பயணமாகத் தெரிகிறது.

ஈ.சி.ஈ. இறுதியாண்டு மாணவரான அபிலாஷ், “இந்த ஆண்டு எங்கள் கல்லூரிக்கு வளாகத் தேர்வுக்கு வந்த நிறுவனங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறதுதான். ஆனால் அதைவிட மோசமான விஷயம், அதிகமான `கட்-ஆப் மார்க்’. உதாரணத்துக்கு ஒரு குறிப்பிட்ட நிறுவனம் 75 சதவீதமாக `கட்-ஆப்’பை அறிவித்துள்ளது. இது அந்நிறுவனத்தைப் பொறுத்தவரை முந்தைய ஆண்டை விட அதிகம். `டிசிஎஸ்’, `இன்போசிஸ்’ போன்ற பிரபல நிறுவனங்கள் இதுவரை எங்கள் கல்லூரிக்கு வரவில்லை. அவர்களின் `கட்-ஆப் மார்க்’ கடந்த ஆண்டு 65 சதவீதமாக இருந்தது இந்த ஆண்டு 70 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார்.

%d bloggers like this: