கதறுதே… காது…

இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதர்கள் முன்பெல்லாம் மேகத்தில் ஏற்படும் இடி ஓசைதான் அதிகம் கேட்டுள்ளனர். இந்த ஓசையால் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்தான் நம் முன்னோர்கள் இடி, மின்னலின் போது வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள்.

அன்று இடி ஓசையால் பாதிக்கப்பட்ட மனிதன் இன்று அதைவிட பல மடங்கு சப்தத்தைக் கேட்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

ஒரு பக்கம் யுத்த நாடுகளின் குண்டு சப்தங்கள், மற்றொரு பக்கம் மலை பாறைகளை உடைப்பதற்காக வைக்கப்படும் வெடி சப்தங்கள். வாகனங்களின் இரைச்சல்கள், தொழிற்சாலைகளின் சப்தம் என பலவகையான சப்தங்கள் ….

பொதுவாக காதின் உட்புறச் சவ்வானது மிக மெல்லிய படலமாகும். மனிதனின் காதானது குறைந்த அளவு சப்தத்தையே உள்வாங்கிக் கொள்ளும்.

இப்படி மென்மையான ஒலியை மட்டும் வாங்கும் காதுகளுக்கு அதிபயங்கரமான ஒலிகளை எந்நேரமும் கேட்க நேருவதால் காதுகளின் செவிப்பறை கொஞ்சம் கொஞ்சமாக கேட்கும் சக்தியை இழக்கச் செய்கின்றது.

நம் முன்னோர்கள் காடுகளையும், ஆங்காங்கே மரங்களையும் அதிகமாக வளர்த்தனர். நாட்கள் செல்லச் செல்ல இருப்பிடம் கருதி வனங்களை அழித்து கட்டிடக் காடுகளாக்கிவிட்டனர்.

மரங்கள் அதிக சப்தங்களை உள்வாங்கிக் கொள்ளும் சக்திகொண்டவை. ஆனால் காங்கிரீட் கட்டிடங்கள் சப்தங்களை எதிரொலிக்கும் தன்மை கொண்டவை. இதனால் சாதாரணமாக ஒலிகள் கூட எதிரொலிக்கப்பட்டு மிகையான சப்தமாக வெளிவருகிறது.

மேலும் நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த வாகனங்கள் எப்போதும் ஒருவிதமான இரைச்சலுடனேயே செல்கின்றன.

இந்த சப்தங்களினால் காதுகளின் கேட்கும் சக்தி குறைகின்றது. மேலும் மன அழுத்தம், டென்ஷன், இனம்புரியாத ஒருவித எரிச்சல் ஏற்படுகிறது. அதனால் பித்தம் அதிகரித்து மேல் நோக்கி பாய்ந்து தலைவலியை ஏற்படுத்துகின்றது. இதனால் இரத்தம் சூடாகி இரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்கிறது. ஜீரண மண்டலமும் பாதிக்கப்படுகிறது.

சிலர் இரவில் எந்த விதமான சப்தங்களும் இல்லாமல் தூங்கச் சென்றால் தூக்கமின்றி தவிப்பார்கள். காரணம் அவர்கள் காதுகளில் மின் விசிறி சத்தத்தைக் கேட்டு தூங்கியதால் இந்த சப்தம் இல்லாதபோது சரியான தூக்கம் இருப்பதில்லை. செல்போன்களின் மூலம் காதுகளில் ஒலிவாங்கியை மாட்டிக்கொண்டு பாட்டு கேட்கிறார்கள். இவைகளும் காதுகளுக்கு மேற்சொன்ன பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

சிலர் வாகனங்களில் செல்லும்போது அவசரத்திற்கு உபயோகப்படுத்தும் காற்று ஒலிப்பானை அடிக்கடி உபயோகித்துக் கொண்டே இருப்பார்கள். தேவையில்லாமல் கூட ஒலி எழுப்புவார்கள். இதனால் வாகனங்களில் முன்னும் பின்னும் செல்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் விபத்துக்கள் கூட ஏற்பட நேரிடுகின்றது.

தீபாவளி பண்டிகையின்போதும், அரசியல் கட்சிகளின் ஊர்வலங்களின் போதும் அதிக அளவு பட்டாசுகளை வெடித்து அருகில் உள்ளவர்களுக்கு பல இன்னல்களை ஏற்படுத்து கின்றனர்.

கருவில் வளரும் குழந்தைகளுக்கு இத்தகைய சப்தங்களால் பல பாதிப்புகள் உண்டாகின்றன. அதிக சப்தத்தால் கருவை சுமக்கும் தாய் அதிர்ச்சிக்குள்ளாகும் போது அந்த அதிர்வால் கருவில் வளரும் குழந்தை கேட்கும் சக்தியை இழக்கும் நிலையும் ஏற்படலாம்.

அதிக சப்தங்களை ஏற்படுத்தும் வாகனங்கள், தொழிற்சாலைகள், பட்டாசுகளுக்கு அரசு கடுமையான கட்டுப்பாடு விதிக்க வேண்டும்.

இவ்வாறு ஏற்படும் சப்தங்களால் உருவாகும் பாதிப்புகளைப் பற்றி போதிய விழிப்புணர்வு வேண்டும்.

ஐம்புலன்களில் காதுகளும் மிக முக்கியமான உறுப்பாகும்.

அதிக சப்தமுள்ள பகுதிகளில் குடியிருக்காமலும், காதுகளில் அதிக நேரம் செல்போன் வைத்து பேசாமலும், அதிக சத்தத்துடன் பாடல்களைக் கேட்காமலும் காதுகளுக்கு தீங்கு விளைவிக்காத அளவில் ஒலியைக் கேட்டு வந்தால் மன அழுத்தமும் ஏற்படாது. காதுகளும் பாதுகாக்கப்படும்.

%d bloggers like this: