Daily Archives: ஜனவரி 8th, 2010

அடடே பூனை!


அமெரிக்காவில் ஒரிகானில் ஒரு பூனைக்குட்டி, 100 கிலோமீட்டர் வேகத்தில் சீறிய காரின் வெளிபுறத்தில் 150 கிலோமீட்டர் வரை தாக்கு பிடித்திருக்கிறது. மார்க் லிச்டி என்பவர் தனது காரில் வாஷிங்டனில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார். வழியில் ஓரிடத்தில் நிறுத்தும்போது `மியாவ்’ என்ற ஓசையை அவர் கேட்டார். காரில் சுற்றும்முற்றும் தேடி பார்த்த அவர், ஒன்றைம் காணாது மறுபடி கிளம்பிவிட்டார். வீட்டுக்கு போய் பார்த்தபோதுதான், தனது காரில் `ஸ்டெப்னி டயர்’ வைக்கும் இடத்தில் ஒரு முன்று மாத வயதிருக்கக்கூடிய பூனைக்குட்டி இருப்பதைக் கண்டார் மார்க். “கார் வந்த 100 கிலோமீட்டர் வேகத்தில், சுமார் 150 கிலோமீட்டர் தூரத்துக்கு, அதுவும் உறைய வைக்கும் குளிரில் அந்த பூனைக்குட்டி எப்படித் தாக்கு பிடித்து வந்தது என்று தெரியவில்லை” என்று வியப்பாகக் கூறும் மார்க், தற்போது அதை வளர்க்கத் தொடங்கிவிட்டார்.

அதிகரிக்கும் அலங்கார மீன் ஏற்றுமதி!


இந்தியாவின் அலங்கார மீன் ஏற்றுமதி மெதுவாக ஆனால் உறுதியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

மொத்தம் 33 ஆயிரம் கோடி ருபாய் மதிப்புள்ள உலக அலங்கார மீன் சந்தையில் இந்தியாவின் பங்கு வெறும் 0.8 சதவீதம். சிறிய நாடான இலங்கையின் பங்கு 8 சதவீதம். எனவே இந்தியாவின் பங்கை 10 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் கேரளா கொச்சி விமான நிலையத்திலிருந்து 4 ஆயிரம் அலங்கார மீன்கள் பாரீஸுக்கு அனுப்பப்பட்டன. புளூ கப்பீஸ், முன்லைட் கப்பீஸ், டால்மேஷியன் மோலீஸ், ரெட் காப்ஸ், ஆரண்டாஸ் மற்றும் பல்வேறு வகை ஏஞ்சல் மீன்கள் அவற்றில் அடக்கம்.

“ஐரோப்பியச் சந்தையில் நமது முதல் பிரவேசம் இது. எல்லாம் சீராக நடந்தால், நமக்குத் தொடர்ந்து அங்கிருந்து `ஆர்டர்கள்’ கிடைக்கும்” என்கிறார், கேரள மீன்வளத் துறை அமைச்சர் எஸ். சர்மா. இவர் `கேரளா அக்வா வெஞ்சர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்’டின் (கவில்) துணைத் தலைவரும் கூட. மாநில அரசு- தனியார் கூட்டு நிறுவனமான `கவில்’, நியார்க்கில் ஓர் இறக்குமதி வட்டத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. சீனாவிலும் அதைப் போன்ற வட்டத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

“நாங்கள் தற்போது மீன்களை ஏற்றுமதி செய்துள்ள நிறுவனம், ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து அலங்கார மீன்களை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் அவர்கள் தற்போது நாம் உற்பத்தி செய்யும் மீன் வகைகள் குறித்துத் திருப்தி தெரிவிக்கிறார்கள்” என்கிறார், கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட `கவில்’ நிறுவனத்தின் இயக்குநர் ஏ. கோபாலகிருஷ்ணன். உலக அலங்கார மீன் சந்தையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“தற்போது அலங்கார மீன் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ள இலங்கையை நாங்கள் முன்மாதிரியாகக் கொண்டுள்ளோம். கேரளாவின் காலநிலையும், நிலவியல் அமைப்பும் ஏறக்குறைய இலங்கையைப் போன்றது தான். ஐரோப்பாவின் குளிரான காலநிலையில் வெப்பமண்டல மீன்களை உற்பத்தி செய்ய முடிவதில்லை. வட இந்தியாவிலும் கூட குளிர்காலத்தில் மீன் உற்பத்தி என்பது இயலாததாக இருக்கிறது. கேரளாவின் சிறப்பான சுற்றுச்சூழல் காரணமாக இங்கு இந்த மீன்களை வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இதற்கிடையில், வெப்பமண்டல மீன் உற்பத்தியில் சிறப்புக் கவனம் செலுத்தும் `அக்வா டெக்னாலஜி பார்க்’, அலுவாவில் வருகிற 18-ம் தொடங்கப்படுகிறது.

“நாங்கள் ஒரு 128 ஏக்கர் பண்ணையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே 20 ஏக்கர் பரப்பளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளுடன் இணைந்த சுமார் 10 ஆயிரம் மீன் பண்ணைகளை மேம்படுத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அவை ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் பாய் மானியம் அளிக்கப்படும். தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து விதைமீன்களைப் பெறவும் கேரளா திட்டமிட்டுள்ளது” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

கேரள அரசு 43 சதவீதப் பங்குகளைக் கொண்ட `கவில் ‘ நிறுவனம், தெற்காசிய நாடுகளில் இருந்து 55 வகை அலங்கார மீன்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

“நாங்கள் அவற்றை இங்கு உற்பத்தி செய்கிறோம். உள்நாட்டு வகைகளுடன் சேர்த்து கலப்பினத்தை உருவாக்குகிறோம். பின்னர் வெளிநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கிறோம். எங்களின் உள்ளூர் வகையான `மிஸ் கேரளா’ போன்றவற்றுக்குக் கூட நல்ல கிராக்கி” என்று கேரள மீன்வளர்ப்புத் துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

உங்களுக்கு தெரியுமா?

வெறும் வயிற்றில் காபி, டீ அல்லது பால் சாப்பிட்டுவிட்டு மாத்திரைகளை சாப்பிடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது. இப்படிச் செய்வது தவறு. மீறி செய்தால், தேவையில்லாத நோய்களை `இன்கமிங்’ கொடுத்து வரவழைத்ததாகிவிடும்.

`ஆண்டி பயாடிக்’ மாத்திரைகளை அடிக்கடி சாப்பிடுவதால் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உடலில் உள்ள `பி காம்ப்ளக்ஸ்’ குறைகிறது. அதைத்தொடர்ந்து வாய் நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. தலைவலியிலும், காய்ச்சலிலும் பல வகைகள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்றால் பாதிக்கப்பட்டு, அது எந்த வகை என்று தெரியாமல் ஒரே மாத்திரையை தொடர்ந்து சாப்பிடுவது தவறு. இந்த பழக்கம் அதிகமானால் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாகிவிடலாம்.

வெற்றிக்கு வழி மகிழ்ச்சி…


2010 பிறந்து விட்டது. ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் ஏதாவது ஒரு சபதத்தை எடுப்பதும், பின்னர் கால ஓட்டத்தில் அதை மறந்து விடுவதும் நாம் வழக்கமாகச் செய்யக்கூடிய காரியங்களில் ஒன்று. எப்போதும் போல் இல்லாமல் இந்த வருடம் நீங்கள் எடுக்கக்கூடிய சபதம், உங்களை அடுத்த 5 ஆண்டுகளில் சூபர் ஸ்டாராக மாற்ற வேண்டும். சபதம் எடுத்தால் மட்டுமே போதாது. அதை சாதிப்பதற்கான கடின உழைப்பும், முயற்சியும் அவசியம்.

வாழ்க்கை இன்பமயமானது. எப்படி பூமியானது பெரும்பங்கு இயற்கையால் சூழபட்டிருக்கிறதோ, அதுபோல வாழ்க்கையும் இன்பங்களால் சூழபட்டிருக்கிறது. ஆனால், அவற்றைக் கண்டுபிடிப்பதில்தான் நம்முடைய திறமை அடங்கி இருக்கிறது. முதலில் தீமைகளை எவ்வாறு நன்மைகளாக மாற்றிக் கொள்வது என்று ஆராய்ந்து, அதன்படி செயல்படுங்கள். பின்னர் வாழ்க்கை முழுவதும் இன்பம்தான்.

காலை முதல் மாலை வரை அலுவலகத்திற்குள் அடைந்து கிடப்பது, மாலையில் அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்குச் சென்று அடைந்து கொள்வது என எப்போதும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை வேண்டாம். இது தொடர்ந்தால் நாளடைவில் நீங்கள் ஒரு நடைபிணம்போல் ஆகிவிடுவீர்கள். மகிழ்ச்சி உங்களை விட்டு வெகுதூரத்திற்குச் சென்றுவிடும். எனவே, சிறிதுநேரத்தை நண்பர்களுடன் செலவழிங்கள். வீட்டுக்குச் சென்றால் மனைவி, குழந்தைகளை அல்லது பெற்றோர்களை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள கோவில் அல்லது பூங்காவிற்குச் சென்று வாருங்கள்.

எல்லா காலகட்டத்திலும், எல்லோராலும் வித்தியாசங்கள் விரும்பப்படுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டவர்கள்தான் இன்றைக்கு உலக அளவில் புகழ் பெற்றுத் திகழ்கிறார்கள். எனவே, வாழ்க்கையை வித்தியாசமாக வாழ பழகுங்கள். நீங்கள் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள்தான் உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். பெரும்பாலும் அது நன்மையாகவே முடியும்; சில நேரங்களில் தீமையாகவும் முடியலாம். ஆனால் முயற்சியே செய்யாமல் அது நன்மையாக முடியுமா அல்லது தீமையாக முடியுமா என்று ஆருடம் பார்பது நல்லதல்ல.

உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, எதை உங்களால் சிறபாகச் செய்ய முடிமோ அதை லட்சியமாகத் தேர்ந்தெடுங்கள். அந்த லட்சியத்தை அடைவதற்காகக் கடுமையாக உழைங்கள். அதிகமான உழைப்பிற்கு இடையே வரும் சிறுபகுதிதான் புகழ். அது எப்போதுமே நிலைத்திருக்க இன்னும் கடுமையான உழைப்பு தேவை. உழைப்பில் மட்டும் எப்போதும் திருப்தி கொள்ளக்கூடாது. வெற்றி மீது ஆசை வைத்து உழைத்தால் தான் நினைத்தது கிடைக்கும்.

வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பொருளாதாரம் பெரும்பங்கு வகிப்பது உண்மைதான். அதற்காக இறக்கும் வரை பணம் பணம் என்று அலையக்கூடாது. இன்று நீங்கள் தவற விடும் ஒரு நிமிட சந்தோஷத்தை அறுபது விநாடிகளாகக் கணக்கிட்டு பாருங்கள். பின்னர் எந்த தருணத்திலும் சந்தோஷத்தை இழக்க மாட்டீர்கள். அவ்வப்போது கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை பிறகு அனுபவித்துக் கொள்ளலாம் என்று தள்ளிபோடாமல், உடனுக்குடன் அனுபவித்து விடுங்கள். நீங்கள் வரும்வரை அந்த சந்தோஷம் உங்களுக்காகக் காத்திருக்காது.

படிபடியாய் திட்டமிட்டு, நல்ல பாதையில் பயணித்தால் நீங்கள் வெற்றியடைய 2015 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்த மாதமேகூட அது நிகழலாம்..!

பசுமை இல்ல வாயுக்களை உறிஞ்சி பெட்ரோல் தயாரிக்கும் `பாக்டீரியா’


எரிபொருள் ஒருபுறம் தீர்ந்து வருகிறது. மறுபுறம் மாசு பெருகி வருகிறது. எரிபொருளின் தேவையையும் பூர்த்திசெய்து, மாசையும் கட்டுப்படுத்துகிறது ஒரு பாக்டீரியா. அதிசயமாக இருக்கிறதா!

காற்றில் கார்பன்-டை-ஆக்சைடு அளவு அதிகரிப்பதால் மாசு பெருகி உள்ளது. இந்த கார்பன்-டை-ஆக்சைடை உறிஞ்சி பெட்ரோலாக வெளியிடுகிறது இந்த பாக்டீரியா. இதனால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் கலிபோர்னியா பல்கலைக்கழக விஞ்ஞானிகள்.

சையனோபாக்டீரியம் என்ற பாக்டீரியாவில் நுண்ணுயிரியில் விஞ்ஞானிகள் செயற்கையாக சில மாற்றங்களை ஏற்படுத்தினர். இதற்காக பாக்டீரியாவில் ருபிஸ்கோ என்னும் நொதி சேர்க்கப்பட்டது. அதன்பிறகு இந்த பாக்டீரியாக்கள் கார்பன்-டை-ஆக்சைடை சுவாசித்து, இசோப்புட்டால்டிகைடு என்ற வாயுவாக வெளியிடுகிறது. இதை எளிமையாக மாற்றி இசோப்புட்டனால் என்ற எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இது பெட்ரோலுக்கு சிறந்த மாற்று எரிபொருளாகும்.

இதுவரை தாவரங்கள் மற்றும் பூஞ்சைகளில் இருந்து மாற்று எரிபொருள் தயாரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு மாற்றங்களைத் தாண்டி எரிபொருள் கிடைக்கும். ஆனால் இந்த பாக்டீரியா முறையில் எளிமையாக குறைந்த செலவில் சிறந்த எரிபொருளை உற்பத்தி செய்ய முடிகிறது.

இதன் மேலும் ஒரு சிறப்பம்சமாக, இந்த பாக்டீரியாக்கள் சூரிய ஒளியை கிரகித்தும் எரிபொருளை உற்பத்தி செய்துவிடும். அதாவது சூரிய ஒளியில் இருந்து கார்பன்-டை-ஆக்சைடை பிரித்து பிறகு அதை இசோப்புட்டால்டிகைடாக மாற்றும்.

எனவே இந்த பாக்டீரியாக்களைக் கொண்டு இரட்டை வழியில் நிறைய பெட்ரோல் தயாரிக்க முடியும். இதனால் கூடுதலான பாக்டீரியாக்களை உற்பத்தி செய்வதில் விஞ்ஞானிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

மிகவும் வித்தியாசமான இந்த முறை, மாசுகளையும் கட்டுப்படுத்த உதவும் என்பதால் விரைவில் உலகம் முழுமைக்கும் பரவிவிடும் என்று எதிர்பார்க்கலாம்!

நெல்லிக்காயின் மருத்துவ குணம்

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி. ஆனால் ஒரு ஆப்பிளில் இருக்கும் முழு சக்தியும் ஒரு நெல்லிக்காயில் இருக்கிறது என்பது அறிவியல் உண்மை.

நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம்.

நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

மேலும், உடலில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கவும், உடலில் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும் நெல்லிக்காய் சாப்பிடலாம். நெல்லிக்காயை பிறை நிலா வடிவத்தில் வெட்டி தேனில் ஊறவைத்து எடுத்து காயவைத்து பத்திரப்படுத்தி தேவைப்படும்போது சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காய் ஊறுகாய் போட்டும் சாப்பிட்டு வரலாம். நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணம் இருக்கிறது என்பது தெரியும். ஆனால் அதில் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரும் விஷயங்கள் இருப்பது பலருக்குத் தெரிவதில்லை.

பு‌ண்களை குணமா‌க்க

பாகற்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வர, வயிற்றில் உள்ள பூச்சிகள் அழியும்.

தேங்காய் பாலுடன் தேன் கலந்து குடிக்க, வாய்ப்புண் மற்றும் வயிற்றுப் புண் ஆறும்.

மணத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வர வாய்ப்புண், வயிற்றுப்புண் குணமாகும்.

அகத்திக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர, குடல் புண்கள் குணமாகும். வாரம் ஒரு முறை உண்பதால், வயிற்றில் காணப்படும் புழுக்கள் அழியும்.

வேப்ப எண்ணெயை காய்ச்சி, சேற்றுப்புண் உள்ள இடங்களில் தட‌விவ‌ந்தா‌ல் குணம் கிடைக்கும்.

விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளைக் குழைத்து, சேற்றுப் புண்களில் தட‌வினா‌ல் ‌தீ‌ர்வு கிடைக்கும்.

உலகத்தின் அதிவேக ரயில் சீனாவில் இயக்கம்

சீனாவில் 350 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன ரயில்கள் கடந்த வாரம் இயக்கி வைக்கப்பட்டது. ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் அதிவேக ரயில்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ஜப்பான் ரயில் 243 கிலோ மீட்டர் வேகத்திலும், பிரான்ஸ் ரயில் 277 கிலோ மீட்டர் வேகத்திலும் இயக்கப்படுகின்றன. ஒலிம்பிக் போட்டியையொட்டி சீனாவில் அதிவேக ரயில்கள் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன. தற்போது, இந்த ரயில்கள் 350 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகின்றன.
சீனாவின் மத்திய பகுதியில் உள்ள உஹான் நகரிலிருந்து தெற்கு பகுதியில் உள்ள குவாங்சு நகர் வரை இந்த அதிவேக ரயில் சென்று வருகிறது. ஆயிரத்து 68 கிலோ மீட்டர் தொலைவுள்ள இந்த பகுதியை அதிநவீன ரயில் நான்கு மணி நேரத்தில் கடக்கின்றன. அதாவது, சென்னையிலிருந்து திருச்சிக்கு இந்த ரயில் இயக்கப்பட்டால், ஒரு மணி நேரத்தில் சென்றடைய முடியும்.
வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் தெற்கு பகுதியில் இந்த ரயில் அறிமுகப்படுத்தப்பட்டதால், பொருளாதார வளர்ச்சிக்கு உதவும், என சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் இரண்டு ஆண்டுகளில் 42 தடங்களில் இந்த அதிநவீன ரயில் இயக்கப்பட உள்ளது. சோதனை ஓட்டத்தின் போது, இந்த அதிவேக ரயில், 400 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.