அதிகரிக்கும் அலங்கார மீன் ஏற்றுமதி!


இந்தியாவின் அலங்கார மீன் ஏற்றுமதி மெதுவாக ஆனால் உறுதியாக அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

மொத்தம் 33 ஆயிரம் கோடி ருபாய் மதிப்புள்ள உலக அலங்கார மீன் சந்தையில் இந்தியாவின் பங்கு வெறும் 0.8 சதவீதம். சிறிய நாடான இலங்கையின் பங்கு 8 சதவீதம். எனவே இந்தியாவின் பங்கை 10 சதவீதமாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் கேரளா கொச்சி விமான நிலையத்திலிருந்து 4 ஆயிரம் அலங்கார மீன்கள் பாரீஸுக்கு அனுப்பப்பட்டன. புளூ கப்பீஸ், முன்லைட் கப்பீஸ், டால்மேஷியன் மோலீஸ், ரெட் காப்ஸ், ஆரண்டாஸ் மற்றும் பல்வேறு வகை ஏஞ்சல் மீன்கள் அவற்றில் அடக்கம்.

“ஐரோப்பியச் சந்தையில் நமது முதல் பிரவேசம் இது. எல்லாம் சீராக நடந்தால், நமக்குத் தொடர்ந்து அங்கிருந்து `ஆர்டர்கள்’ கிடைக்கும்” என்கிறார், கேரள மீன்வளத் துறை அமைச்சர் எஸ். சர்மா. இவர் `கேரளா அக்வா வெஞ்சர்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்’டின் (கவில்) துணைத் தலைவரும் கூட. மாநில அரசு- தனியார் கூட்டு நிறுவனமான `கவில்’, நியார்க்கில் ஓர் இறக்குமதி வட்டத்தை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது. சீனாவிலும் அதைப் போன்ற வட்டத்தை உருவாக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

“நாங்கள் தற்போது மீன்களை ஏற்றுமதி செய்துள்ள நிறுவனம், ஏற்கனவே சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியாவில் இருந்து அலங்கார மீன்களை இறக்குமதி செய்து வருகிறது. ஆனால் அவர்கள் தற்போது நாம் உற்பத்தி செய்யும் மீன் வகைகள் குறித்துத் திருப்தி தெரிவிக்கிறார்கள்” என்கிறார், கடந்த ஆண்டில் உருவாக்கப்பட்ட `கவில்’ நிறுவனத்தின் இயக்குநர் ஏ. கோபாலகிருஷ்ணன். உலக அலங்கார மீன் சந்தையில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடிக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

“தற்போது அலங்கார மீன் சந்தையில் ஒரு குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்துள்ள இலங்கையை நாங்கள் முன்மாதிரியாகக் கொண்டுள்ளோம். கேரளாவின் காலநிலையும், நிலவியல் அமைப்பும் ஏறக்குறைய இலங்கையைப் போன்றது தான். ஐரோப்பாவின் குளிரான காலநிலையில் வெப்பமண்டல மீன்களை உற்பத்தி செய்ய முடிவதில்லை. வட இந்தியாவிலும் கூட குளிர்காலத்தில் மீன் உற்பத்தி என்பது இயலாததாக இருக்கிறது. கேரளாவின் சிறப்பான சுற்றுச்சூழல் காரணமாக இங்கு இந்த மீன்களை வருடம் முழுவதும் உற்பத்தி செய்யலாம்” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

இதற்கிடையில், வெப்பமண்டல மீன் உற்பத்தியில் சிறப்புக் கவனம் செலுத்தும் `அக்வா டெக்னாலஜி பார்க்’, அலுவாவில் வருகிற 18-ம் தொடங்கப்படுகிறது.

“நாங்கள் ஒரு 128 ஏக்கர் பண்ணையை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே 20 ஏக்கர் பரப்பளவு மேம்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளுடன் இணைந்த சுமார் 10 ஆயிரம் மீன் பண்ணைகளை மேம்படுத்தவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அவை ஒவ்வொன்றுக்கும் 50 ஆயிரம் பாய் மானியம் அளிக்கப்படும். தமிழகம் மற்றும் மேற்கு வங்காளத்திலிருந்து விதைமீன்களைப் பெறவும் கேரளா திட்டமிட்டுள்ளது” என்கிறார் கோபாலகிருஷ்ணன்.

கேரள அரசு 43 சதவீதப் பங்குகளைக் கொண்ட `கவில் ‘ நிறுவனம், தெற்காசிய நாடுகளில் இருந்து 55 வகை அலங்கார மீன்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளது.

“நாங்கள் அவற்றை இங்கு உற்பத்தி செய்கிறோம். உள்நாட்டு வகைகளுடன் சேர்த்து கலப்பினத்தை உருவாக்குகிறோம். பின்னர் வெளிநாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதி செய்கிறோம். எங்களின் உள்ளூர் வகையான `மிஸ் கேரளா’ போன்றவற்றுக்குக் கூட நல்ல கிராக்கி” என்று கேரள மீன்வளர்ப்புத் துறை வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.

%d bloggers like this: