வெற்றிக்கு வழி மகிழ்ச்சி…


2010 பிறந்து விட்டது. ஒவ்வொரு புத்தாண்டு அன்றும் ஏதாவது ஒரு சபதத்தை எடுப்பதும், பின்னர் கால ஓட்டத்தில் அதை மறந்து விடுவதும் நாம் வழக்கமாகச் செய்யக்கூடிய காரியங்களில் ஒன்று. எப்போதும் போல் இல்லாமல் இந்த வருடம் நீங்கள் எடுக்கக்கூடிய சபதம், உங்களை அடுத்த 5 ஆண்டுகளில் சூபர் ஸ்டாராக மாற்ற வேண்டும். சபதம் எடுத்தால் மட்டுமே போதாது. அதை சாதிப்பதற்கான கடின உழைப்பும், முயற்சியும் அவசியம்.

வாழ்க்கை இன்பமயமானது. எப்படி பூமியானது பெரும்பங்கு இயற்கையால் சூழபட்டிருக்கிறதோ, அதுபோல வாழ்க்கையும் இன்பங்களால் சூழபட்டிருக்கிறது. ஆனால், அவற்றைக் கண்டுபிடிப்பதில்தான் நம்முடைய திறமை அடங்கி இருக்கிறது. முதலில் தீமைகளை எவ்வாறு நன்மைகளாக மாற்றிக் கொள்வது என்று ஆராய்ந்து, அதன்படி செயல்படுங்கள். பின்னர் வாழ்க்கை முழுவதும் இன்பம்தான்.

காலை முதல் மாலை வரை அலுவலகத்திற்குள் அடைந்து கிடப்பது, மாலையில் அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்குச் சென்று அடைந்து கொள்வது என எப்போதும் ஒரே மாதிரியான வாழ்க்கை முறை வேண்டாம். இது தொடர்ந்தால் நாளடைவில் நீங்கள் ஒரு நடைபிணம்போல் ஆகிவிடுவீர்கள். மகிழ்ச்சி உங்களை விட்டு வெகுதூரத்திற்குச் சென்றுவிடும். எனவே, சிறிதுநேரத்தை நண்பர்களுடன் செலவழிங்கள். வீட்டுக்குச் சென்றால் மனைவி, குழந்தைகளை அல்லது பெற்றோர்களை அழைத்துக்கொண்டு அருகிலுள்ள கோவில் அல்லது பூங்காவிற்குச் சென்று வாருங்கள்.

எல்லா காலகட்டத்திலும், எல்லோராலும் வித்தியாசங்கள் விரும்பப்படுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை மேற்கொண்டவர்கள்தான் இன்றைக்கு உலக அளவில் புகழ் பெற்றுத் திகழ்கிறார்கள். எனவே, வாழ்க்கையை வித்தியாசமாக வாழ பழகுங்கள். நீங்கள் எடுக்கும் வித்தியாசமான முயற்சிகள்தான் உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். பெரும்பாலும் அது நன்மையாகவே முடியும்; சில நேரங்களில் தீமையாகவும் முடியலாம். ஆனால் முயற்சியே செய்யாமல் அது நன்மையாக முடியுமா அல்லது தீமையாக முடியுமா என்று ஆருடம் பார்பது நல்லதல்ல.

உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ, எதை உங்களால் சிறபாகச் செய்ய முடிமோ அதை லட்சியமாகத் தேர்ந்தெடுங்கள். அந்த லட்சியத்தை அடைவதற்காகக் கடுமையாக உழைங்கள். அதிகமான உழைப்பிற்கு இடையே வரும் சிறுபகுதிதான் புகழ். அது எப்போதுமே நிலைத்திருக்க இன்னும் கடுமையான உழைப்பு தேவை. உழைப்பில் மட்டும் எப்போதும் திருப்தி கொள்ளக்கூடாது. வெற்றி மீது ஆசை வைத்து உழைத்தால் தான் நினைத்தது கிடைக்கும்.

வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பொருளாதாரம் பெரும்பங்கு வகிப்பது உண்மைதான். அதற்காக இறக்கும் வரை பணம் பணம் என்று அலையக்கூடாது. இன்று நீங்கள் தவற விடும் ஒரு நிமிட சந்தோஷத்தை அறுபது விநாடிகளாகக் கணக்கிட்டு பாருங்கள். பின்னர் எந்த தருணத்திலும் சந்தோஷத்தை இழக்க மாட்டீர்கள். அவ்வப்போது கிடைக்கும் சின்னச் சின்ன சந்தோஷங்களை பிறகு அனுபவித்துக் கொள்ளலாம் என்று தள்ளிபோடாமல், உடனுக்குடன் அனுபவித்து விடுங்கள். நீங்கள் வரும்வரை அந்த சந்தோஷம் உங்களுக்காகக் காத்திருக்காது.

படிபடியாய் திட்டமிட்டு, நல்ல பாதையில் பயணித்தால் நீங்கள் வெற்றியடைய 2015 வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அடுத்த மாதமேகூட அது நிகழலாம்..!

%d bloggers like this: