Daily Archives: ஜனவரி 10th, 2010

`மிஸ்டர்’ கைதி!


கைதியே சிறை ஊழியர் மீது வழக்குத் தொடர்ந்த வினோதம் இங்கிலாந்தில் நடந்திருக்கிறது. பெர்னார்டு பென்னிங்டன் என்பவருக்கு வெட்டுக் கத்தியால் மனைவியைத் தாக்கியதற்காக ஆயுள் தண்டனை விதிக்கபட்டது. போர்ட்ஸ்மவுத்தில் உள்ள கிங்ஸ்டன் சிறையில் அவர் அடைக்கபட்டார். சிறையிலும் அதிரடியாகவே நடந்து வந்த பென்னிங்டன் அதன் உச்சமாக, சிறைவாசிகளின் நடத்தையைக் கவனிக்கும் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த டேவிட் லக்கெட் என்பவர் தன்னை `மிஸ்டர்’ என்று அழைக்காமல் `கைதி’ என்று கூறியதாகக் குற்றஞ்சாட்டினார். `கைதி’ என்பது தன்னை அவமதிப்பதாகக் கூறி, ஏறக்குறைய 26 ஆயிரம் ருபாய் மான நஷ்டஈடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இப்படி கைதி ஒருவர் வழக்குத் தொடர்ந்தது புதியது என்றாலும், இதை ஏற்க முடியாது என்று கூறித் தள்ளுபடி செய்துவிட்டது நீதிமன்றம்.

நீங்களும் ஸ்லிம் ஆகலாம்!

நன்கு பழுத்த பப்பாளி விழுதை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் நான்கு ஸ்பூன் தேன், சிறிது கிளிசரின் சேர்த்து கலந்து, கண்ணைச் சுற்றியுள்ள பகுதி தவிர மீதி இடங்களில் பற்றுப்போட்டு, 15 நிமிடங்கள் கழித்து முகத்தை தண்ணீரால் கழுவிவர முகம் பிரகாசிக்கும். பப்பாளி தோலை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைத்து, அது நன்றாக வெந்ததும் அதை அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கூழை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். இந்த சிகிச்சையை தொடர்ந்து செய்து வந்தால், முகம் மென்மையானதாக மாறிவிடும். ஒரு கப் பப்பாளித் துண்டுகளுடன் சிறிது எலுமிச்சை சாறு, சிறிது சர்க்கரை (சீனி) கலந்து 30 நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் தேகம் மினுமினுக்க ஆரம்பித்துவிடும். காலில் பித்த வெடிப்பா? கவலையே வேண்டாம்! பப்பாளி காயின் பாலை எடுத்து அதில் தேய்க்கவும். சில நாட்களிலேயே பாதவெடிப்பு காணாமல் போய்விடும். மெல்லிடை வேண்டுமா? இதற்கும் பப்பாளி பெஸ்ட் சாய்ஸ்தான்! உடல் எடை குறைய பப்பாளிக்காயினை கூட்டாக செய்து தொடர்ந்து சாப்பிட்டுவர நீங்களும் ஆகலாம் ஸ்லிம்!

உலகிலேயே மிக உயரமான கட்டடம்: நிதி நெருக்கடியிலும் சாதித்தது துபாய்

கடந்த 4ம் தேதி, துபாயின் சரித்திரத்தில் மறக்க முடியாத நாள். அன்று தான், உலகிலேயே மிக உயரமான பர்ஜ் துபாய் என்ற கட்டடம் திறக்கப்பட்டது. மோசமான பொரு ளாதார சூழ்நிலையில் சிக்கித் தவிக்கும் துபாய் அரசுக்கு, கடந்தாண்டின் கசப்பான அனுபவங்களை மறக்கடிக்கும் வகையில், பர்ஜ் துபாயின் திறப்பு விழா, அளவில்லாத உற்சாகத்தை அளித்துள்ளது.

ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்களின் கரகோஷத்துக்கும், கொண்டாட்டங்களுக்கும் நடுவே, துபாயின் பெருமையாக விளங்கும் இந்த கட்டடத்தை துபாய் மன்னர் திறந்து வைத்தார். கண்ணை கவரும் வானவேடிக்கை, அதிர வைக்கும் பட்டாசு சத்தங்கள், லேசர் ஒளிவெள்ளம் ஆகியவற்றுக்கு இடையே திறந்து வைக்கப்பட்ட இந்த கட்டடம், துபாயின் வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் இடம் பெற்று விட்டது.

ஐடியா உருவானது எப்போது? விண்ணைத் தொடும் உயரத்தில், கூம்பு வடிவத்தில், மிதந்து செல்லும் மேக கூட்டங்களுக்கு நடுவில், பிரமாண்டமாக காட்சி அளிக்கும் பர்ஜ் துபாய் கட்டடத்தின் மொத்த உயரம் 828 மீட்டர். அதாவது 2,717 அடி. இந்த கட்டடத்தின் பெயர், தற்போது பர்ஜ் கலிபா என, மாற்றப்பட்டுள்ளது. பிரபல கட்டட வடிவமைப்பு நிறுவனமான “எம்மார்’தான், இந்த வரலாற்று சிறப்பு மிக்க கட்டடத்தை கட்டியுள்ளது. உலகிலேயே மிக உயரமான கட்டடமாக இதை கட்டுவதற்கான ஐடியா, கடந்த 2003ல் தோன்றியது. “எம்மார்’ நிறுவனத்தின் தலைவர் அல் அப்பார் மூளையில் உதித்த இந்த ஐடியா, மன்னரின் காதுக்கு எட்ட, கட்டடத்தை கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
பணிகள் துவங்கின. துபாயில் உள்ள சுட்டெரிக்கும் பாலைவன மணற் பரப்பில், 200 எக்டேர் பரப்பளவில் துபாய் பர்ஜ் கட்டடத்தை கட்டும் பணி, கடந்த 2004 செப்டம்பர் 21ல் துவங்கியது. சிகாகோவின் பிரபல கட்டடவியல் வடிவமைப்பாளர் ஆட்ரியன் ஸ்மித் மற்றும் பில் பார்க்கர் ஆகியோர் தான், இந்த கட்டடத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர்கள். இந்த மெகா திட்டத்திற்கான மொத்த மதிப்பீட்டுச் செலவு, 7,500 கோடி ரூபாய்.

அசத்தலான அஸ்திவாரம்: கட்டடத்தை கட்டுவதற்கான அஸ்திவாரம் அமைக்கும் பணியே மிகப் பிரம்மாண்டமாக நடந்தது. முதலில், 45 ஆயிரம் கன மீட்டர் கான்கிரீட் அமைக்கப்பட்டது. அதன் மீது 10 ஆயிரம் டன் எடையுள்ள அஸ்திவாரம் அமைக்கப் பட்டு, அதன் மீது 50 மீட்டர் உயரமுள்ள 192 பிரம்மாண்ட இரும்பு தூண்கள் அமைக்கப்பட்டன. இந்த இரும்புத் தூண்கள் தான், உலகிலேயே மிக உயரமான கட்டடத்தை தாங்கி நிற்கின்றன.

முறியடிக்கப்பட்ட சாதனைகள்: கட்டடத்தை கட்டும் பணியில், தெற்காசியாவில் உள்ள இந்தியா, பாக்., உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 ஆயிரம் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இரவும், பகலுமாக மிக வேகமாக பணிகள் நடந்தன. இந்த கட்டட பணிகள் ஒவ்வொரு குறிப்பிட்ட உயரத்தையும் அடையும்போது, பல புதிய சாதனைகள் நிகழ்ந்தன. சிகாகோவில் உள்ள ட்ரம்ப் இன்டர்நேஷனல் டவர், ஷாங்காயில் உள்ள மவோ டவர், கோலாலம்பூரில் உள்ள பெட்ரோனாஸ் இரட்டை கோபுரம், ஷாங்காய் சர்வதேச நிதி நிறுவன மையம்,சிகாகோவின் வில்ஸ் டவர், ஆகியவற்றின் உயரத்தை கடந்து, தைவானின் தபே டவரின் உயரத்தை (509.2மீட்டர்) கடந்த போது, உலகிலேயே மிக உயரமான கோபுரம் என்ற பெருமையை பர்ஜ் துபாய் பெற்றது. 500 மீட்டரை கடந்தும், இந்த கோபுரத்தின் உயரம் அதிகரித்துக் கொண்டே போனது. இறுதியில், 828 மீட்டரை அடைந்தபோது, அதன் பணிகள் முடிவுக்கு வந்தன. இதைவிட உயரமான கட்டடத்தை உலகின் ஏதாவது ஒரு நாட்டில் அமைக்க வேண்டும் என்றால், அதற்கு, குறைந்தது இன்னும் பத்தாண்டுகள் ஆகலாம் என, கூறப்படுகிறது. அதுவரை துபாய் பர்ஜ் தான், உலகின் மிக உயரமான கட்டடம் என்ற பெருமையை தாங்கி நிற்க போகிறது.

நவீன தொழில்நுட்பம்: இந்த கட்டடம், கடலுக்கு அருகில் இருப்பதால், இதில் பயன்படுத்தப்பட்டுள்ள கான்கிரீட் இரும்புகள், துருப்பிடிக்காத வகையில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள் ளன. காற்றின் வேகம், அழுத்தம், நில நடுக்கம், நில அதிர்வுகள், ஈர்ப்பு விசை ஆகியவற்றால் கட்டடத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில், அதி நவீன தொழில் நுட்ப வசதிகள் இதில் புகுத்தப் பட்டுள்ளன. பிரதிபலிக்கும் தன்மையுடைய விலை உயர்ந்த கண்ணாடிகள், கட்டடத்தில் ஒரு லட்சம் சதுர மீட்டருக்கு பொருத்தப் பட்டுள்ளன. மேலும், துருப்பிடிக்காத இரும்புகளும், கட்டடத்தின் வெளிப்புற பகுதிக்கு அழகு சேர்க்கின்றன. 15 ஆயிரத்து 500 சதுர மீட்டர் அளவுக்கு இந்த கண்ணாடிகள் அமைக்கப் பட்டுள்ளன. இதற்கு தேவையான பொருட்கள் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்டன. தினமும் 12 ஆயிரத்து 500 டன் ஐஸ் கட்டியை உருவாக்குவதற்கு சமமான “ஏசி’ வசதி இந்த கட்டடத்துக்கு தேவைப்படுகிறது.

என்ன வசதிகள் உள்ளன? இந்த பிரம்மாண்ட கட்டடம் 200க்கும் மேற்பட்ட மாடிகளை கொண்டது. இருந்தாலும், 160வது மாடி வரை மட்டுமே, மனித பயன் பாட்டுக்கென ஒதுக்கப்பட்டுள்ளன. இங்கு மொத்தம் எத்தனை தளங்கள் உள்ளன என்பதில் இன்னும் குழப்பம் தொடர்கிறது. இந்த கட்டத்தின் ஒவ்வொரு குறிப்பிட்ட உயரத்துக்கு செல்லும்போதும், அதன் வெப்ப நிலை குறைந்து கொண்டே செல்லும் வகையிலான வசதிகளும் இதில் உள்ளன. தரை தளத்தில் உள்ள வெப்ப நிலையை ஒப்பிடும் போது, கோபுரத்தின் அருகில் உள்ள மாடியில் 10 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் குறைவாக இருக்கும். அதற்கு ஏற்ப, குளிர்ச்சி தன்மையும் அதிகரிக்கும்.

57 லிப்ட்: இந்த பிரம்மாண்ட கட்டடத்தின் ஒவ்வொரு நிலைக்கும் செல்வதற்காக 57 அதிவேக லிப்ட்களும், எட்டு நகரும் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள லிப்ட்கள், ஒரு வினாடியில், 10 மீட்டர் உயரத்தை கடக்கும் திறன் உடையவை. கட்டடம் முழுவதிலும் 24 ஆயிரத்து 340 ஜன்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.

குடியிருப்பு வீடுகள்: இங்கு மொத்தம் 1,044 அபார்ட் மென்ட்கள் உள்ளன. இவற்றில், 900 அபார்ட்மென்ட்கள் ஏற்கனவே விற்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. 49 தளங்களில் அலுவலகங் கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டடடத்தின் 76வது மாடியில் நீச்சல் குளம், 158வது மாடியில் மசூதி ஆகியவையும் உள்ளன. கட்டடத்தின் முதல் 39 தளங்களில், 19 தளங்களை ஆர்மனி ஓட்டல் நிறுவனம் ஆக்கிரமித்துள்ளது. இத்தாலிய உள்கட்டமைப்பு ஸ்டைலில் வடிவமைக்கப் பட்டுள்ள இந்த ஓட்டல், சர்வதேச தரத்திலான நட்சத்திர ஓட்டலாக விளங்கும். கட்டடத்தில் இருந்து, துபாய் நகரின் அழகை ரசிப்பதற்காகவே, 124வது மாடி, பார்வையாளர் களுக்காக ஒதுக்கப் பட்டுள்ளது. இங்கு வருவதற்கு நுழைவுக் கட்டணமும் வசூலிக்கப்படும்.

கின்னஸ் சாதனை: துவக்கத்தில் இருந்தே, இந்த கட்ட டத்தின் மொத்த உயரம் எவ்வளவு என்பது ரகசியமாக வைத்திருக் கப்பட்டது. திறப்பு விழாவின் போது தான், 828 மீட்டர் என, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது. தைவானில் உள்ள 101 மாடிகள் கொண்ட பொருளாதார கழக கட்டடம் தான், உலகிலேயே மிக உயரமான (509 மீட்டர்) கட்டடம் என்ற பெருமையை பெற்றிருந்தது. தற்போது பர்ஜ் துபாய் அந்த பெருமையை முறியடித்துள்ளது. உலகின் மிக உயரமான கட்டடம் என்பதற்காக பர்ஜ் துபாய் விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெறவுள்ளது.

நூறாவது தளம் இந்தியருக்கு சொந்தம்: துபாய் பர்ஜ் கட்டடத்தின் உச்சியில் உள்ள “அட் தி டாப்’ பகுதியை பொதுமக்கள் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு 1250 ரூபாய் மற்றும் 12வயது கீழுள்ள சிறுவர்களுக்கு 750 கட்டணமாக நிர்ணயிக்கப் பட்டுள் ளது.காத்திருக்க முடியாதவர்கள் மற்றும் அவசரமாக பார்வையிட வேண்டியவர்களுக்காக, கட்டணம் 2,600 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டடத்தின் நூறாவது தளத்தை இந்தியாவைச் சேர்ந்த பி.ஆர். ஷெட்டி என்பவர் வாங்கியுள்ளார். இவர், கர்நாடக மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர். ஐக்கிய அரபு குடியரசு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் யு.ஏ.இ., எக்சேஞ்ச் சென்டர், என்.எம்.சி., என்ற பெயரில் மருத்துவமனை, மருந்து நிறுவனங்கள், ஓட்டல்கள் என பல்வேறு தொழில் களை நிர்வகித்து நடத்தி வருகிறார். இவர், சொந்தமாக்கி உள்ள நூறாவது தளம் 15 ஆயிரம் ச.மீ., பரப்பளவு கொண்டது. சதுரடிக்கு 43 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயிக்கப் பட்டது. ஷெட்டிக்கு 101 வது தளத்திலும் இடம் உள்ளது. இக்கட்டடம் முழுவதுமாக செயல்படத் துவங்கும் போது, இதில் 12 ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் வசிப்பர் என கணக்கிடப் பட்டுள்ளது.

மனித உரிமை மீறல்? உலகின் மிக உயரமான கட்டடமாக பர்ஜ் துபாய் தற்போது கூறப்பட்டாலும், இந்த கட்டம் கட்டப்பட்டதற்கு பின், பல மனித உரிமை மீறல்கள் நடந்துள்ளதாக பி.பி.சி., யின் புலனாய்வு மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த அமைப்புகள் கூறியுள்ளதாவது: கட்டடம் கட்டும் பணியில் இந்தியா, பாக்., உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான கூலித் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தச்சு வேலை செய்பவர்களுக்கு தினமும் 325 ரூபாயும், கட்டட தொழிலாளர்களுக்கு 213 ரூபாயும் கூலியாக தரப்பட்டது. பணிபுரிந்த தொழிலாளர்கள் மிகவும் மோசமான சூழ்நிலையில் தான் தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கான கூலி, பலமுறை நிறுத்தி வைக்கப்பட்டது. பலரின் பாஸ்போர்ட்கள் பறிமுதல் செய்து வைக்கப்பட்டன. இதனால், சில தொழிலாளர்கள் பலியானதோடு, பலர் காயமடைந்தனர். கடந்த 2006 மார்ச் 21ல், பணியை முடித்து விட்டு, தாங்கள் தங்கும் இடத்திற்கு அழைத்துச் செல்லும் பஸ்கள் மிகவும் தாமதமாக வந்ததால், கோபமடைந்த தொழிலாளர்கள் வன்முறையில் இறங்கினர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் சேதப்படுத்தப்பட்டன. அலுவலகத்தில் இருந்து கம்ப்யூட்டர் மற்றும் சாதனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தொழிலாளர்களின் இந்த வன்முறையால் 3.75 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக, துபாய் உள்துறை அமைச்சகம் அறிவித்தது. போராட்டத்தில் ஈடுபட்ட பெரும்பாலான தொழிலாளர்கள் அடுத்த நாளே வேலைக்கு திரும்பினர். இவ்வாறு அந்த அமைப்புகள் தெரிவித்துள்ளன.

பர்ஜ் கலிபா (பயோ-டேட்டா)
மொத்த உயரம்: 828 மீ.,
செலவு: 7,500 கோடி ரூபாய்
இடம்: துபாய், ஐக்கிய அரபு எமிரேட்
பணி துவங்கிய நாள்: 21 செப்டம்பர் 2004
திறப்பு விழா நாள்: 4 ஜனவரி 2010
பயன்பாடு: மல்டிபிளெக்ஸ் காம்ப்ளக்ஸ்
மொத்த தளங்கள்: 160 (மனித பயன்பாட்டிற்கானது)
வடிவமைப்பு: ஸ்கிட்மோர், ஓவிங் அன்ட் மெரில்
கட்டமைப்பு இன்ஜினியர்: பில் பார்கெர்
ஒப்பந்ததாரர்கள்: சாம்சங் சி அன்ட் டி (முதற்கட்ட பணிகள்), பெசிக்ஸ் அண்ட் அராப்டெக்

அன்று பேசவே குட்கா; இன்று பேச்சே இல்லை -21 வயது இளைஞனின் கதி

21 வயது இளைஞனின் கதி
அவன் ஒரு பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞன்; பெயர் நிதின்; மும்பைக்கு ஏழு வயதில் வேலைக்கு வந்து விட்டான்; படிக்கும் வயதில் பிழைப்பு தேடிய அவன், பால் பாக்கெட் போடுவதில் இருந்து கட்டட வேலை வரை பார்த்தான். இப்போது, அவனே தனியாக கேட்டரிங், பால் பாக்கெட் சப்ளை உட்பட சில விஷயங்களில் கான்ட்ராக்ட் எடுத்து செய்யும் அளவுக்கு முன்னேறி விட்டான். ஆனால், விதி, அவன் நாக்கில் விளையாடியது. அவனுக்கு ஏழு வயதில் இருந்தே குட்கா போடும் பழக்கம் ஏற்பட்டது. மும்பை வரும் முன்பே டேஸ்ட் கண்டிருந்தான்; மும்பை வந்த பின், அந்த பழக்கம் அதிகமாகிவிட்டது. காலை எழுந்ததும், குட்கா போட்டால் தான் அவனால் வேலையை ஆரம்பிக்க முடியும்.
போகப்போக, குட்கா பாக் கெட்டை குவித்து வாங்கி வைத்து போட்டுக் கொள்ளும் அளவுக்கு அவன் நிலைமை போய் விட்டது. குட்கா இல்லாவிட்டால், அவனால் பிசினஸ் பேச முடியாது; எந்த வேலையும் செய்ய முடியாது. இப்போது, அவனுக்கு வயது 21; கடந்த இரண்டாண்டில் அவன் அனுபவித்ததை இப்போது சொல்லித்தான் ஆக வேண்டும். குட்கா போட்ட நாக்கு, வேறு எந்த சுவையையும் அறிய மறுத்தது; போகப்போக மரத்துப்போனது.
ஒரு கட்டத்தில், நாக்கில் ஒரு பகுதியில் மரத்துப் போகும் தன்மை அதிகரித்து, வாய்ப்புற்று நோயாக உருவெடுக்கும் அளவுக்கு முற்றிவிட்டது. கடைசியில் வேறு வழியென்ன? டாக்டரிடம் காட்டினார். டாக்டர் பார்த்ததும் கண்டுபிடித்து, உடனே குறிப் பிட்ட மருத்துவமனையை அணுகி பரிசோதனை செய்துகொள்ளும்படி கூறினார். மருத்துவமனை போனவுடன் தான் எந்த அளவுக்கு விபரீதம் ஆகிவிட்டது என்பது தெரிந் தது. வாய்ப் புற்று நோய் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால், நாக்கின் புற்றுநோய் பாதித்த பகுதியை துண்டிக்க வேண்டும்; இல்லாவிட்டால், புற்றுநோய் பரவி விடும் என்று டாக்டர்கள் எச்சரித்தனர்.
வேறு வழி; இப்போது இந்த இளைஞனுக்கு நாக்கில் பாதி இல்லை; விளைவு, எந்த குட்கா போட்டால்தான் பேச்சே வரும் என்று ஒரு காலத்தில் சொன்னானோ, இப்போது அந்த குட்கா போடாமலேயே பேச்சு போய்விட்டது. அவன் எதிர்காலமே பொய்யாகிவிட்டது. இப்போது அவன் எல்லாவற்றையும் சைகையால் தான் பேசுகிறான். வாயில் குட்காவை அடக்கிக்கொள்வதால் ஏற்படும் “ஓரல் கேவிட்டி கேன்சர்’ தீர்க்கக்கூடியது தான். ஆனால், கடும் சிகிச்சை பெற வேண்டும். முதலில் குட்கா போடுவதை நிறுத்த வேண்டும் என்பது டாக்டர்களின் ஆலோசனை. குட்கா போடுவோருக்கு இந்த செய்தி ஒரு சாதாரண உதாரணம் தான். ஆனால், இவரை போன்று பல இளைஞர்கள் கதி, இப்போது கேள்விக்குறியாக உள்ளது என்பது மட்டுமே நிச்சயம்.
விபரீத விளைவுகள்…
* பான் பராக், குட்கா போடுவோர், இப்போது இந்தியாவில் பெருகிவிட்டனர். அதுவும் மாணவர்களில், 70 சதவீதம் அதிகரித்துவிட்டனர் என்பது சர்வே தரும் ஷாக் தகவல்.
* பெருநகரங்களில், மும்பை தான் குட்கா விபரீத களம்; அங்கு தான் பள்ளி மாணவர்கள் அதிகபட்சம் 40 சதவீதம், கல்லூரி மாணவர்களில் 70 சதவீதம் பேர் குட்காவுக்கு பழக்கமாகிவிட்டனர்.
* தென் மாநிலங்களில், கேரளாவில் கடலோர மாவட்டங்களில் தான் அதிக அளவில் குட்கா பழக்கம் பரவி உள்ளது. புகையிலை, குட்கா பழக்கம் 27 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
* மாநிலங்களில் மிக மோசமான நிலையில் உள்ளது மிசோரம்; வடகிழக்கு மாநிலமான இதில், 57 சதவீதம் பேரிடம் குட்கா பழக்கம் உள்ளதாக தெரியவந்துள்ளது.
* வாயில், சுவர்ப்பகுதி, நாக்கு, பற்களின் இடுக்குப் பகுதி, தாடை, உதடு போன்றவற்றில் புற்றுநோய் பரவுவது தான் வாய்ப்புற்றுநோய்.
* தலையில் இருந்து தொண்டை வரை பல வகை புற்றுநோய்கள் உள்ளன. இதில் வாய்ப்புற்று நோய் தான், இளைஞர்களிடம் அதிக அளவில் சமீப காலமாக பரவி வருகிறது.
* சிகரெட் மூலம் புற்றுநோய் வந்து இந்தாண்டு ஒன்பது லட்சத்து 50 ஆயிரம் பேர் வரை இறக்கும் அபாயம் உள்ளதாக சுகாதார சர்வே அபாயச் சங்கு ஊதியுள்ளது.
* பீடி பழக்கத்தால், புற்றுநோய்க்கு ஆளாகி, ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் இறந்து வருகின்றனர். இந்த எண்ணிக்கையில் சில, இப்போது குட்கா பக்கம் திரும்பியுள்ளது.
* நாக்குச் சுவை அறியா நிலை, மரத்துப்போவது, அடிக் கடி வலி ஏற்படுவது, தாடை வலிப்பது, புண் வருவது போன்றவை தான் குட்கா பழக் கத்தின் விளைவுகளின் ஆரம்பக் கட்டம். அப்போதே, விழித்துக் கொண்டு டாக்டரிடம் சென்றுவிட்டால், தவிர்த்து விடலாம் விபரீதத்தை.

கொசுக்கள் ஸ்வரம் போடுவது ஜோடியை கவர்வதற்காக தான்

கொசுக்கள் ரீங்காரம் இட்டு கேட்டிருக்கிறீர்களா? கர்நாடக இசைக்கலைஞர் ஸ்வரம் போடுவது போலவே இருக் கும். ஆனால், இப்படி ரீங்காரம் இடுவது, தனது ஜோடியை கவருவதற்காக தான், என விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர்.

உயிரினங்கள் தங்கள் ஆண் அல்லது பெண் ஜோடியை கவருவதற்கு விதவிதமான யுக்திகளை கையாளுகின்றன. வினோதமான குரல் கொடுத்து இவை தனது ஜோடியுடன் இணைகின்றன.இதே போல கொசுவும் ரீங்காரமிட்டு தனது ஜோடியை கவருவதாக பிரிட்டனை சேர்ந்த க்ரீன்விச் பல்கலைக் கழக விஞ்ஞானி கேப்ரில்லா ஜிப்சன் தலைமையிலான விஞ் ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.இது குறித்து ஜிப்சன் கூறியதாவது:கொசுக்களில் பலவகை உண்டு. இதில், அனோபிலஸ் கேம்பியா என்ற வகை கொசுக் களில் ஏழு வகை இருக்கிறது. இந்த அனோபிலஸ் வகை கொசுக்கள் தனது உட்பிரிவை சேர்ந்த கொசுக்களுடன் தான் உறவு வைத்து கொள்ளும்.

எனவே, இதே வகையை சேர்ந்த மற்ற கொசுவுடன் தவறாக இணைந்து விடக்கூடாது என்பதற்காக இந்த ரீங்கார சிக்னலை கொடுத்து தனது ஜோடியை “கரக்ட்’ பண்ணும்.இந்த கொசுக்கள் குறிப்பாக, பெண் கொசு தனது இறக்கையை வேகமாக அடித்து கொள்வதன் மூலம், ரீங்கார ஓசை எழுகிறது. இதே இனத்தை சேர்ந்த ஆண் கொசுவும் எசப் பாட்டு பாடுவதற்கு இணையாக சீரான அலைவரிசையில் இறக்கையை அடித்து ரீங்காரம் இடும். இந்த டூயட் முடிந்து இரு கொசுக்களும் சேர்க்கையில் ஈடுபடும். அதன் பிறகு ஏராளமான முட்டைகளை இட்டு தனது வம்சத்தை விருத்தி செய்து மனிதர்களையும், கால்நடைகளையும் கடித்து இம்சிக்கும் தொழிலை இந்த கொசுக்கள் செய்கின்றன. இவ்வாறு ஜிப்சன் தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலவசங்கள் : இல்லாத ஊருக்கு போகும் பாதை : உரத்த சிந்தனை

தமிழக அரசின் 2010ம் ஆண்டுக்கான கவர்னர் உரையில், இலவசங்கள் அள்ளித் தெளிக்கப்பட்டதை அகில இந்தியாவும் ஆச்சரியமும், கிண்டலும் கலந்த உணர்வுடன் கவனித்து, கருத்துக்களை வெளியிட்டுள்ளது. பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்று, “தமிழக அரசின் நல்வாழ்வுத் திட்டம் எனும் போர்வையிலான இலவசங்கள், ஒரு கடிதம் அதன் உறையை விட பெரிதான தாளில் எழுதப்பட்டு, அந்த உறையினுள் திணிக்க முடியாத அளவு உள்ளது’ என கிண்டலடித்துள்ளது. அதாவது, பட்ஜெட்டில் பணம் இருக்காது எனக் கூறுகிறது இந்தப் பத்திரிகை.

பொருளாதார நிபுணர்களும், சமூக, அரசியல் ஆய்வாளர்களும், “ஓட்டு வங்கி அரசியலின் உச்சக்கட்டம்’ என, இந்த இலவசங்களை குறிப்பிட்டு, தங்கள் கவலையை வெளிப்படுத்துகின்றனர். மத்திய அரசின் 2001ம் ஆண்டு கணக்குப்படி, தமிழகத்தில் 36 லட்சத்து 32 ஆயிரத்து 119 குடும்பங்கள் தான் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவை. ஆனால், ஜூன் 16, 2008 கணக்குப்படி, தமிழக அரசு, 59 லட்சத்து 55 ஆயிரம் குடும்பங்களுக்கு இலவச, “டிவி’ அனுமதித்துள்ளது. இது மேலும் அதிகரிக்கப் பட்டு, ஏழைகள் மட்டுமின்றி, கலர் “டிவி’ இல்லாத எல்லாருக்கும் இலவச, “டிவி’க்கள் வழங்கப்படும் எனவும் அறிவித்து விட்டனர். தி.மு.க., ஆட்சிக் காலங்களில் அளிக்கப்பட்ட அதிகமான சம்பளம் மற்றும் சலுகைகள் விளைவாக தமிழக அரசின் துண்டு விழும் பட்ஜெட்டில் கணிசமான பகுதி, அரசு ஊழியர் சம்பளம் சார்ந்த செலவுகள். அதாவது, 2008-09ம் ஆண்டுக்கான இறுதி பட்ஜெட் மொத்த செலவினம் 55,402 கோடியே 56 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய். இதில், 24 ஆயிரத்து 358 கோடி ரூபாய், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பல அரசு திட்டங்களில் பணிபுரிபவர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதியம் சார்ந்த செலவினங்கள். இது, பட்ஜெட்டில் 52 சதவீதம். உலகின் எந்த பணக்கார, நடுத்தர நாடுகளிலும் பட்ஜெட்டில் இவ்வளவு சதவீதம் ஊழியர் செலவினங்களுக்கு ஆவதில்லை.

இந்த முறை ஆட்சியமைக்கப்பட்டு, 44 மாதங்களில் தி.மு.க., அரசு அள்ளித் தெளித்த இலவசங்கள், சலுகைகள் அதிகமாகி, நமது பட்ஜெட்டில் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலும் கட்டமைப்பு வசதிகளுக்குத் தேவையான நிதி, அறவே அற்றுப் போகும் சூழ்நிலை உருவாகியுள்ளது. கடன் தள்ளுபடிகள், குறிப்பாக தொழில் தொடங்க வாங்கப்படும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுவது, அடுத்து கடன் பெறுபவர்கள் யாரும் கடனை திருப்பிச் செலுத்தாத மனநிலையை உருவாக்கும். இந்த அடிப்படை உண்மையை அரசு அதிகாரிகள் பல முறை அரசியல் தலைவர்களுக்கு, குறிப்பாக முதல்வர்களுக்கு எடுத்துக் கூறியிருக்கின்றனர். உயர் அதிகாரிகள் பலரும் முதல்வரின் கவனத்தைக் கவர, போட்டி போட்டு இலவசம் மற்றும் நடைமுறைக்கு ஒவ்வாத பல செலவினங்களை உருவாக்கி, நமது மாநில பொருளாதாரத்தை பாழடித்து விட்டனர்.

தமிழக அரசு தனது பட்ஜெட்டை, துண்டு விழாத வகையில் திட்டமிடல் வேண்டும். அரசு கடனுக்கு வட்டியாக, கடந்த ஆண்டு 6,227 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. கடன் தொகை 71 ஆயிரத்து 668 கோடி ரூபாயை தாண்டிவிட்டது. மக்களுக்கு பொது நன்மைகளும், பின்வரும் சந்ததியினருக்கு வளமான வாழ்க்கைத் தரமும் உருவாக, ஏழைகள் நிறைந்த ஒரு நாட்டில் இரண்டு துறைகள் சிறப்பாக கவனிக்கப்பட வேண்டும். அவை, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள். கல்வியில் சமச்சீர் எனும் திட்டத்தை தவறாக புரிந்து கொண்டு, கல்வியின் தரத்தை உயர்த்தாமல், எல்லா பாடத் திட்டங்களையும் சரிசமமாக்கி, தரமான கல்வியை அழித்தொழிக்கும் நடைமுறைகள் ஆரம்பமாகியுள்ளன.

சுகாதாரத்தைப் பொறுத்தவரை, அரசு மருத்துவமனைகள் மற்றும் அடித்தட்டு கிராம சுகாதார மையங்களை வலுப்படுத்தாமல், தனியார் மருத்துவமனைகளை வளப்படுத்தும் காப்பீட்டுத் திட்டத்தை அரசு ஊக்கப்படுத்துகிறது. கிராமப்புறங்களில் 2001ம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின் படி, 21 லட்சம் வீடுகள், “தற்காலம்’ என பெயரிடப்படுகின்றனவாம். அவை கூரை மற்றும் மண் சுவர்களால் ஆன வீடுகளாம். அவற்றை நிலையான குடியிருப்புகளாக ஆறு வருடங்களில் மாற்றப் போவதாக, “கலைஞர் வீட்டு வசதி திட்டம்’ அறிவிக்கிறது. இத்திட்டத்தில் ஒரு கூரை வீட்டிற்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்; கான்ட்ராக்ட் கிடையாது; வீட்டின் சொந்தக்காரரே தனது வீட்டை கான்கிரீட் வீடாகக் கட்டிக்கொள்ள இத் தொகை வழங்கப்படுமாம். நடைமுறைக்கு ஒத்துவராத ஏட்டுச் சுரைக்காய் திட்டம் இது என்பதற்கு, இதை விட சிறந்த காரணம் கிடையாது. மத்திய அரசின் திட்டமான இந்திரா காந்தி குடியிருப்புத் திட்டத்தை பின்பற்றி இத்திட்டம் அமைக்கப்படுகிறது என்பதால், கட்டுமானப் பொருட்களை அரசின் ஊராட்சி அதிகாரிகள் வாங்கி, கூரை வீட்டு ஏழைகளுக்கு கான்கிரீட் வீடுகள் கட்ட அளிப்பார்களாம். இப்பொருட்கள் வாங்க கமிஷன் உண்டல்லவா?

அடுத்து பயனாளிகள் தேர்வு, ஓட்டு வங்கி முறையை பின்பற்றி அடிமட்ட கட்சித் தொண்டர்களால் நடத்தப்படுமா எனும் கேள்வி எழுகிறது. சமத்துவபுரம், காஸ் அடுப்புகள், கலர் “டிவி’ வினியோகம் தந்த அனுபவப்படி, கீழ்மட்ட கட்சியினர் தயாரித்த பட்டியல்படி பயனாளிகள் தேர்வு இருக்கும் என, இப்போதே கிராமத்து மக்கள் முணுமுணுக்கின்றனர். எல்லாவற்றையும் விட, மூன்று ஆண்டுகளில் நடந்த இலவசங்களினாலான செலவுகள், நமது பொருளாதாரத்தை வெகுவாக பாதித்துள்ளதை மத்திய அரசு இந்த மாதம் வெளியிட்டுள்ள, “ஸ்டேட் டொமஸ்டிக் ப்ராடக்ட்’ (குஈக) எனும் மாநில பொருளாதார வளர்ச்சி குறியீடு வெளிப்படுத்துகிறது.

இதற்கு முழுப் பொறுப்பும், வளர்ச்சித் திட்டங்களை வகுக்காமல், ஓட்டு வங்கி அரசியலுக்காக இலவசங்களை அள்ளித் தெளிக்கும் மாநில அரசே! இது பற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல், வரும் நிதி ஆண்டில் 1,800 கோடி ரூபாயில் இலவச கான்கிரீட் வீடுகள், 400 கோடியில் நவீன சட்டசபை வளாகம், புதிய நூலகம் போன்றவற்றை உருவாக்குகின்றனர். “இப்படி நிறைய செலவுகளை செய்த பின்னர், அவைகள் சரியாக நடக்கின்றனவா என்பதை பற்றி விவாதித்து, குறைகளை திருத்துவதற்காகத்தான், மக்களுக்காக மக்கள் பணத்தில் இந்த நவீன சட்டசபை வளாகம் அமைக்கப்படுகிறது’ என, ஜால்சாப்பு வேறு. கிராமப்புறங்களில் திட்டங்கள் நிறைவேறுவதை கிராமப்புறங்களில் நேரடியாக தணிக்கை செய்யாமல், சென்னையில் பளபளக்கும் நவீன அடுக்கு மாடிக் கட்டடங்களில் விவாதித்து மேற்பார்வையிடுவார்களாம். வாழ்க ஓட்டு வங்கி அரசியல்!

– என்.முருகன், சமூகவியலாளர், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி

துன்புறுத்தும் எண்ணங்களை அழிக்கலாம்!


சில நினைவுகள் நம்மை வாட்டி வதைக்கும். பொதுவாக சோகமான சம்பவங்கள், பயம் போன்றவை அடிக்கடி நினைவுக்கு வந்து துன்புறுத்தும்.

மகிழ்ச்சியான சம்பவங்களை நாம் மீண்டும் நினைப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. ஆனால் மனதை வேதனைப்படுத்தும் நினைவுகள் மீண்டும் வந்தால் கலங்கி விடுகிறோம். வாழ்க்கையே பெரும் தொந்தரவாகிவிடுகிறது. அதையே நினைத்து மனநலம் பாதிக்கப்படுவோரும் இருக்கிறார்கள்.

இனி இதுபோன்ற தொந்தரவு தரும் எண்ணங்களைப் பற்றி அச்சப்படத் தேவையில்லை. முளையில் பதிவாகி இருக்கும் அந்த எண்ணப்பதிவை கண்டுபிடித்து அழித்து விடும் விஞ்ஞானமுறை கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. விரைவில் இது சிகிச்சைமுறையாகவும் வரஇருக்கிறது. அமெரிக்காவின் நியார்க் பல்கலைக்கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ள இந்த முறைக்கு பெயர் `பிகேவியர் தெரபி’ என்று பெயரிட்டு உள்ளனர்.

நமது எண்ணங்கள் எல்லாம் முளையில் உற்பத்தி ஆகின்றன. அங்கேயே பதிவு செய்யப்படுகின்றன. இதில் நம்மை துன்புறுத்தும் பயஉணர்வுகளும் பதிவாகி இருக்கும். அது தொடர்பான சம்பவங்கள், சூழல்கள் மீண்டும் அமையும்போது நமக்கு பயம் தொற்றிக் கொள்கிறது.

இதுவரை பயம் (போபியா) தொடர்பான சிகிச்சைக்கு, சம்பந்தப்பட்டவர்களிடமே காரணம்கேட்டு அதுபோன்ற சூழல்வராமல் தடுப்பதன் முலமே பயஉணர்வை கட்டுக்குள் கொண்டு வருவார்கள். ஆனால் மீண்டும் பயத்தை ஏற்படுத்தும் சூழல் அமைந்துவிட்டால் நிச்சயம் பயம் மீண்டும் தோன்றிவிடும்.

ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டு உள்ள புதிய முறையில் பயத்துக்கு உள்ளானவர்களின் முளைப்பதிவுகள் ஸ்கேன் செய்து பார்க்கப்படும். அப்போது வண்ணவண்ண கட்டங்களாக பதிவுகள் காட்டப்படும். அதில் நீலநிற கட்டமாக பதிவாகும் நினைவுகள் பயஉணர்வை குறிக்கும்.

பயத்தை உருவாக்கும் சில சம்பவங்களை ஏற்படுத்தி அதற்கேற்ப பதிவுகள் வேறுபடுத்திக் காட்டும்படியாக இந்த முறை உருவாக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு அந்த பயஉணர்வுகளை அழித்துவிட்டு சோதித்துப் பார்க்கப்பட்டது. இதில் வெற்றி கிடைத்து உள்ளது. அதாவது தேவையற்ற எண்ணங்களை அழிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது.

முதலில் எலிகளுக்கும், பிறகு 3 குழுவினருக்கும் சோதித்துப் பார்க்கப்பட்டது. ஒவ்வொரு குழுவினருக்கும் வேறுவேறு விதமான சிகிச்சை அளிக்கப்பட்டது. பிகேவியர் தெரபி முறையில் சிகிச்சை பெற்றவர்களுக்கு பய ட்டிய சம்பவங்கள் மீண்டும் அச்சுறுத்தவில்லை.

`போபியா’வை போக்கும் சிகிச்சை முறையில் இந்த கண்டுபிடிப்பு மறுமலர்ச்சியை உருவாக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

தும்பைப் பூ

தும்பைப் பூவை அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தும்பையின் பூவைப் பாலில் போட்டுக் காய்ச்சிச் சாப்பிட்டால் ஜலதோஷம் பறந்தோடி விடும். தும்பைப் பூவைச் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து கிராம் வரை எடுத்துக் கொண்டு நல்லெண்ணையில் காய்ச்சித் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் தலைவலி பட்டென்று விட்டுவிடும்.

கனவு கண்டு பயப்படாதீர்கள்!


கெட்ட சொப்பனம் கண்டால் நல்லதில்லை என்பது பொதுவாக மக்களின் `சென்டிமென்ட்’. `ஆனால் கனவுகளை நினைத்து பயப்படாதீர்கள், அவை உதவியே செய்கின்றன’ என்கிறார்கள், ஆய்வாளர்கள்.

21 வயதாகும் இளம்பெண் ஜானுவுக்கு பல மாதங்களாகச் சரியான தூக்கமில்லை. அவருக்குள் எதுவோ ஒன்று சுத்தியல் போலத் தொந்தரவாக அடித்துக்கொண்டே இருந்தது. ஆனால் என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. எனவே மனோதத்துவவியல் நிபுணரின் உதவியை நாடினார் ஜானு. அவர், ஒரு பாம்பு தன்னைச் சுற்றி வளைப்பதை போலவும், பின்னர் அது மறைந்து விடுவதை போலவும் அடிக்கடி கனவு கண்டு வந்திருக்கிறார்.

ஜானுவுடன் சிலமுறை பேசிய மனோதத்துவவியல் நிபுணர் ஸ்ரீதாரா, ஜானுவை பாம்புகளை பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்க்கும்படியும், அவற்றின் இயல்பை புரிந்துகொள்ளும்படிம் கூறினார். அதன் முலம் ஒருவேளை ஜானுவின் `பாம்புக் கனவுகள்’ மறைந்துவிடலாம் என்பது மனோதத்துவவியல் நிபுணரின் எண்ணம்.

“எதிர்காலம் பற்றிய தனது பயத்தின் அடையாளமாக அந்தக் கனவுகள் இருக்கக்கூடும் என்று அந்த பெண் கூறினாள்” என்கிறார், ஸ்ரீதாரா.

ஜானுவின் அம்மா, உள்ளூரில் ஒரு மரத்தடியில் உள்ள நாகர் சிலையைச் சுற்றி தனது மகளை அன்றாடம் வலம் வரச் செய்தார்.

“ஜானுவின் எதிர்காலம் பற்றிய பயம் சீராகும் என்பதன் அடிப்படையில் இந்தச் சடங்கு அமைந்துள்ளது” என்கிறார், ஸ்ரீதாரா. இனி அவருக்கு அந்த மாதிரியான கனவுத் தொந்தரவு இருக்காது என்கிறார் இவர்.

ஜானுவின் `கெட்ட சொப்பனத்தால்’தான் அவருக்குள் உறுத்திக்கொண்டிருந்த பிரச்சினை பற்றி அறிய முடிந்தது என்கிறார் ஸ்ரீதாரா. “அவர் தனது பயத்தை என்னிடம் சொன்னதுமே நிம்மதியாகவும், இலேசாகவும் உணர்ந்தார்” என்று விளக்குகிறார்.

ஒரு கெட்ட கனவு கண்டால் அதை பற்றி உடனே தாளில் எழுதலாம் என்கிறார் ஸ்ரீதாரா. அதன் முலம், பிரச்சினையைத் தூர எறிந்துவிடலாம் என்பது இவரது கருத்து.

“ஒரு கெட்ட கனவு கண்டு விழித்தவுடனே அதை பற்றி எழுதுங்கள். முழுவதும் ஞாபகமில்லாவிட்டாலும், ஞாபகமுள்ளவரை எழுதுங்கள். அதன் முலம், மறுபடி அந்தக் கனவு வராமல் தடுக்கலாம்” என்கிறார்.

மணிபால் மருத்துவமனை மனோவியல் துறைத் தலைவர் டாக்டர் முரளிராஜும் அதை ஆமோதிக்கிறார். `தனிநபர்களுக்கு அவர்களின் மனச்சுமைகளுக்கு வடிகாலாக அமையும் ஒரு நல்ல விஷயம் கனவு’ என்கிறார் அவர்.

“அந்த வகையில் `கெட்ட கனவுகள்’ ஒருவரின் உணர்ச்சிகளை சரிபடுத்திக்கொள்ள உதவுகின்றன. ஒருவர் ஒரு கனவு கண்டால் அந்த உணர்ச்சி அவரிடமிருந்து வெளியேறி விடுகிறது. அவரும் `ரிலாக்சாகி’ விடுகிறார்” என்று விளக்கிக் கூறுகிறார், முரளிராஜ்.

கனவுகள் வடிகாலாக இருப்பது மட்டுமல்லாமல், நிஜவாழ்வின் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ளவும் அவை உதவுகின்றன. பின்லாந்து ஆராய்ச்சியாளரான ஆன்ட்டி ரிவோன்ஸோ செய்துள்ள ஆய்வின்படி, மனிதர்கள் வாழ்வுடன் இயைந்து போக உதவுவதாக கனவுகள் உள்ளன.

“பொதுவாக கெட்ட கனவுகள் அச்சுறுத்தும் நிகழ்வுகளைக் கொண்டிருக்கின்றன, அவற்றைக் கடந்து செல்லும்படி நம்மைத் தள்ளுகின்றன. எனவே, நிஜ வாழ்வில் நாம் அதுமாதிரியான அச்சுறுத்தும் நிகழ்வுகளை எதிர்கொள்ளும்போது, கனவில் நமக்கு `பயிற்சி’ இருப்பதால் தயாராகவே இருக்கிறோம்” என்கிறார் முரளிராஜ்.

“கெட்ட சொப்பனம் என்பது விமர்சனம் அறியாமல் ஒரு படத்தை பார்பது போல. எனவே அதன் அர்த்தம் என்ன என்று சம்பந்தபட்டவருக்கு புரியாது.” என்கிறார் மற்றொரு மனோதத்துவவியல் ஆலோசகரான பி. கபூர்.