சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு…


இந்தியாவின் பாரம்பரிய உடைகளில் சேலை சிறப்பான இடத்தை பெறுகிறது. பழம்பெரும் இலக்கிய நுலான மகாபாரதத்தில், பாண்டவர்களின் மனைவி பாஞ்சாலியை கவுரவர்கள் துகிலுரியும்போது, கிருஷ்ணர் மிக நீளமான துணியைக் கொடுத்து காப்பாற்றியதாகக் குறிப்பிடபட்டுள்ளது. அதன் பின்னரே சேலை தோன்றியதாக சொல்லபடுகிறது. பாவாடை, பிளவுஸ் அல்லது ரவிக்கை அல்லது சோளி ஆகியவற்றுடன் சேர்த்தே புடவையை அணிய முடியும். பெண்களை அழகாக காட்டக்கூடிய உடைகளுள் முதலிடம் பிடிப்பதும் சேலைதான்.

இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் சேலையை பயன்படுத்தினாலும், தென்மாநிலங்களில் அதன் பயன்பாடு அதிகமாக உள்ளது. முதலில் வேட்டி மட்டுமே நெய்ய பட்டதாகவும், அதை பின்பற்றியே சேலை உருவாக்கபட்டதாகவும் கூறுவர். புகழ்பெற்ற ஓவியரான ராஜா ரவிவர்மாவின் பெரும்பாலான ஓவியங்களில் சேலைகள் இடம்பெற்றிருக்கும். கேரள பாரம்பரிய சேலைகளை அவர் ஓவியங்களில் பயன்படுத்திள்ளார்.

இன்னார்தான் சேலை அணிய வேண்டும் என்ற வரைமுறை ஏதும் கிடையாது. எந்த பெண் வேண்டுமானாலும் புடவை கட்டிக் கொள்ளலாம். அதேபோல் இந்தக் காலகட்டத்துக்கு அல்லது குறிபிட்ட சூழ்நிலைக்கு மட்டும்தான் சேலை ஒத்து வரும் என்ற விதிமுறையும் கிடையாது. எல்லாக் காலங்களிலும், அனைத்துச் சூழ்நிலைகளுக்கும் பொருந்தி வரக்கூடியது சேலைதான் என்பது தனிச்சிறப்பு.

பிளெய்ன், எம்ராய்டரி, பிரிடட் என பலவிதங்களில் டிசைன் செய்யபட்ட சேலைகள் கிடைக்கின்றன. அலங்காரக்கல், மணிகள், ஜமிக்கி, ஜர்தோசி என வேலைபாடுகள் நிறைந்த சேலைகளே தற்போது பெண்களால் அதிகம் விரும்பி வாங்கபடுகின்றன. சேலையின் டிசைனுக்கு பொருத்தமாக சோளி, ரவிக்கைகளும் டிசைன் செய்யபடுகின்றன.

பொதுவாக சேலை 51/2 மீட்டர் நீளமுடையதாக இருக்கும். சேலை கட்டும்போது முந்தானைக்கு நேரெதிர் முனையில் ஒரு முடிச்சு போட்டு இடுப்பில் வலதுபுறம் சொருகிக் கொள்வர். பின்னர் இடதுபுறத்திலிருந்து வலது புறமாக ஒரு சுற்று சுற்றி, நான்கு விரலையும் சற்று விரித்து வைத்துக்கொண்டு 4 அல்லது 5 மடிப்புகள் மடித்து இடுப்பில் சொருகுவர். இந்த மடிப்புகள் `முன்கொசுவம்’ என்று அழைக்கபடும். பின்பு மறுபடியும் இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக ஒரு சுற்று சுற்றி பெரிய மடிப்பாக 3 அல்லது 4 மடிப்புகள் மடித்து இடது தோளில் போட்டுக் கொள்வர். இது `முந்தி’ அல்லது `முந்தானை’ என்று அழைக்கபடும். ஆந்திரா உள்ளிட்ட சில மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் முந்தானையை வலதுபுறம் அணியும் பழக்கம் உடையவர்கள்.

ஒவ்வொரு இடத்திற்கும் ஏற்றவாறு வெவ்வேறான வடிவங்களில், டிசைன்களில் சேலைகள் கிடைக்கின்றன. கச்சார் நிவி என்று அழைக்கபடும் சேலை வகை வேட்டி போலவே ப்ளீச் செய்யபட்டிருக்கும். குஜராத்தைச் சேர்ந்தவர்கள் முந்தானை பின்பக்கத்தில் இருந்து முன்பக்கம் தொங்குமாறு சேலை அணிவர். அதேபோல் வலது தோளில் முந்தானை இருக்குமாறும் அணிவர். மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்களும் பின்பக்கத்தில் இருந்து முன்பக்கமாக சேலை அணிவர். வேட்டி கட்டுவது போன்ற ஸ்டைலில் இது அமைந்திருக்கும்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சாதாரணமான ஸ்டைலிலேயே சேலை அணிவர். குடகு ஸ்டைல் என்பது பின்பக்கம் மடிப்பு வைத்து, அதாவது பின்கொசுவம் வைத்துக் கட்டுவது. கோன்ட் ஸ்டைல் மத்திய இந்தியாவில் உள்ள பெண்களால் பயன்படுத்தபடுகிறது. முதலில் தோளில் முந்தானையை அணிந்த பின்னர் மடிப்பு (கொசுவம்) வைத்துக் கட்டுவதே கோன்ட் ஸ்டைலாகும். `முண்டும் நேரியலும்’ என்ற சேலை வகை இரண்டு விதமான துணிகளைக் கொண்டு அணியபடும். இவை தவிர, சோளி, ரவிக்கை இல்லாமலும் சேலைகள் அணியப்படுகின்றன.

பிளவுஸ் என்று அழைக்கபடும் ரவிக்கைகளும் பலவிதமான டிசைன்களில் கிடைக்கின்றன. சேலை அணிம்போது மட்டுமின்றி சட்டை, டி-சர்ட் அணிம்போது ரவிக்கை பயன்படுத்தும் வழக்கம் உள்ளது. சிவப்பு, மெருன், அடர் பர்பிள், வெள்ளை போன்ற வண்ணங்கள் பெரும்பாலானவர்களால் அதிகம் விரும்பி அணியப்படுகின்றன. அலங்காரக்கல், மணிகள், கோல்டு லேஸ், கண்ணாடி வைத்து தைக்கபடும் ரவிக்கைகளை அணியும்போது நன்கு எடுப்பாகத் தெரியும்.

சேலை அணிவதற்கு பாவாடை இன்றியமையாத ஒன்றாகும். எலாஸ்டிக் பாவாடையைத் தவிர்த்து, நாடா உள்ள பாவாடையை மட்டுமே அணிய வேண்டும். அதையும் இறுக்கமாகக் கட்டாமல் சற்றுத் தளர்வாக இருக்கும்படி கட்ட வேண்டும். காட்டன், சில்க், சாட்டின், பாலியஸ்டர் போன்ற துணிகளால் ஆன பாவாடைகள் பெரும்பாலானவர்களால் விரும்பி அணியப்படுகின்றன.

சேலையைத் தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டியவை:

அணிபவர்களின் நிறத்திற்கும், உருவத்திற்கும் ஏற்ற சேலையாக பார்த்து தேர்ந்தெடுக்க வேண்டும். அதேபோல் உயரத்துக்கு பொருத்தமான சேலையாகவும் இருக்க வேண்டும். அதிக உடல் எடையுள்ளவர்கள் மைசூர் சில்க், ஜார்ஜெட், ஷிபான் போன்ற சேலைகளை அணியலாம். உயரம் குறைவாக இருபவர்கள் பெரிய பார்டர் உள்ள சேலைகளை அணிந்தால் நன்றாக இருக்கும். மெல்லிய உடல்வாகு கொண்டவர்களுக்கு ஆர்கென்சா, காட்டன், டிஷ் சேலைகள் நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.

பார்ட்டி, விழாக்கள், திருமணம் இப்படி எங்கு உபயோகிப்பதற்காக சேலை வாங்குகிறீர்கள் என்பதையும் கவனித்து, அதற்கேற்றார்போல் தேர்ந்தெடுக்க வேண்டும். துணியும் தரமானதாக இருக்க வேண்டும். இளவயதினர்களுக்கு மெலிதாகவும், அடர்த்தியான வண்ணங்களும் உள்ள சேலைகள் நன்றாக இருக்கும். வயதானவர்களுக்கு க்ரே போன்ற வெளிர் வண்ணங்கள் பொருத்தமாக இருக்கும்.

அலுவலகம் போன்ற இடங்களுக்குச் செல்லும்போது முந்தானையை ரவிக்கையுடன் சேர்த்து பின் குத்திக் கொள்வது நல்லது. விழாக்களுக்குச் செல்லும்போது வலதுபுறம் உள்ள பார்டரை மட்டும் ரவிக்கையோடு சேர்த்து பின்குத்தி, மீதமுள்ளவற்றை லேசாக சரியவிட்டுச் சென்றால் அசத்தலாக இருக்கும்.

தற்போது சேலை கட்டத்தெரியாதவர்களுக்காக `ஆட்டோமெட்டிக்` சேலைகள் தயாரிக்கபட்டுள்ளன. கல்லூரி மாணவிகள், வெளிநாட்டினர் போன்ற சேலை கட்டத் தெரியாதவர்கள் இந்த ஆட்டோமெட்டிக் சேலையை எடுத்து அப்படியே அணிந்து கொள்ளலாம். மடிக்கவோ, சுற்றவோ தேவையில்லை. அணிவதற்கு ஒருசில நிமிடங்களே போதுமானது.

சேலை உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வருவதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. ரிவர்சபில் சேலை, பாக்கெட் சேலை, வஸ்திரகலா பட்டு போன்றவை இதற்கு உதாரணங்களாகும்.

%d bloggers like this: