Daily Archives: ஜனவரி 14th, 2010

ஹா.. ஹா..!-சிரிப்பே மருந்து

டிவியில் காமெடிக் காட்சிகளை பார்க்கும்போதும் கூட சிலர் சீரியசாக இருப்பார் கள். சிலர் எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். ஆனால் உண்மையில் எதையும் `ஸ்போர்ட்டிவ்’வாக எடுத்துக் கொள்ளவேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும் அதை கொஞ்சம் லகுவாக, நகைச்சுவையாக அணுகுங்கள். வாழ்க்கையை எப்போதும் ரொம்ப இறுக்கமாகக் கழிக்காதீர்கள். அருகில் இருபவர்கள் நகைச்சுவை சொன்னால் சிரிங்கள். தினமும் இரண்டு, முன்று நபர்களையாவது சிரிக்க வையுங்கள்.   மனத்தில் உற்சாகம் வேண்டும் என்றால் உடலும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். உடலில் வலி உள்ளவர்களால் சிரிக்க முடியாது. ஆதலால் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவும் உங்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும். உடலின் சக்தி உங்களின் தேவையை நிறைவேற்றும். உடல் உற்சாகமாக இருக்கும்போது உங்கள் மனதும் உற்சாகமாக இருப்பதை உணர்வீர்கள். உடற்பயிற்சியின் போது உடலில் சுரக்கும் `எடோர்பின்’களால் மனது புத்துணர்வு பெறும் என்கிறார்கள் மருத்துவ ஆய்வாளர்கள்.   அணிந்து கொள்ளும் உடையும் உங்களை உற்சாகபடுத்தும். திருத்தமாக உடையணிந்து நேர்த்தியாக இருந்தால், உங்களையும் அறியாமல் முகம் சிரிக்கும். மனோரீதியாக அது உங்களை தன்னம்பிக்கையாகவும், ஆரோக்கியமாகவும், ஆனந்தமாகவும் வைத்திருக்கும். குழந்தைகளுடன் செலவிடும் மகிழ்ச்சியான தருணங்கள், நல்ல காமெடி திரைபடங்கள், நிகழ்ச்சிகள் ஆகியவை உங்களை ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும் என்கின்றனர் உளவியல் ஆராய்ச்சியாளர்கள்.

வீடியோ கட்டர்

வீடியோ காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கையில் அல்லது திரைப்படங்களை ரசிக்கையில், சில காட்சிகளை மட்டும் தனியே ஒரு பைலாக எடுத்து வைத்தால் நல்லது என்று எண்ணுவோம். குறிப்பாக ஒரு நடனக் காட்சி அல்லது காமெடி நம்மைக் கவரலாம். அப்போது எப்படி ஒரு குறிப்பிட்ட அளவில் உள்ள காட்சியை மட்டும் தனியே பிரித்து பைலாகக் கொள்வது என்ற பிரச்சினை உங்களுக்கு ஏற்படும். இந்த பிரச்சினயைத் தீர்க்க வீடியோ கட்டர் http://www.freevideocutter.com/ என்ற புரோகிராம் இலவசமாக என்ற முகவரியில் உள்ள தளத்தில் கிடைக்கிறது. இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்த பின் புரோகிராமினை இயக்கவும். பின் “Open Video” என்ற கட்டளையைக் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் வீடியோ பைலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த புரோகிராம் அந்த வீடியோவின் பார்மட், பிட் ரேட், பிளே ஆக எடுத்துக் கொள்ளும் நேரம் ஆகியவற்றைப் படித்தறிந்து, வீடியோ தம்ப்நெயில் படங்களை ஸ்லைடுகளாக உருவாக்கும். ட்ரேக் பாரில் இடது பக்கம் எந்த ஸ்லைடிலிருந்து கட் செய்திட வேண்டும் என்பதனைக் குறிக்கவும். வலது பக்கம் முடிந்திடும் ஸ்லைடைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் செய்திட விரும்பும் பார்மட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின் சேவ் வீடியோ கட்டளை கொடுக்கவும். MPEG4, DivX, MP3, FLV, WMV என்ற பார்மட்கள் அனைத்தையும் இது கையாள்கிறது. நீங்கள் பதிய விரும்பும் பார்மட்டினையும் இதில் முடிவு செய்திடலாம். பின் நீங்கள் குறிப்பிடும் பைல் பெயரில், தேர்ந்தெடுத்த பார்மட்டில் வெட்டப்பட்ட வீடியோ காட்சி பைலாகக் கிடைக்கும். ஆடியோ மட்டும் வேண்டும் என்றாலும், அதனை எம்பி3 பைலாக சேவ் செய்திடலாம்.

இடுப்பை பாருங்க… சர்க்கரை நோய் வராது!


ஒரு மனிதனின் அழகு, ஆரோக்கியம்தான். அதைக் காப்பதற்கு உதவும் சில குறிப்புகள் இங்கே… உங்கள் இடுப்பை விட வயிற்றில் அதிகமான கொழுப்பு இருந்தால், உங்களின் செல்கள் அனேகமாக இன்சுலினை எதிர்க்கலாம். அதனால் உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற அபாயங்கள் ஏற்படலாம். ஆண்களுக்கும், பெண்களுக்கும் சர்க்கரை நோயை வரவழைப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை போதுமான உடற்பயிற்சியின்மையும், உடல் பருமனும். சர்க்கரை நோய்க்கு முக்கியமான அளவீடு `தொந்தி’தான். வயிற்றில் அதிகமான கொழுப்புச் சேருவது, ஈரலிலும் அதிகமான கொழுப்பைச் சேர வைக்கிறது. அது, ரத்த ஓட்டத்திலிருந்து இன்சுலினை நீக்கும் அதன் பணியை பாதிக்கிறது. நீங்கள் உணவுஉண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை அதிகமாகாமல் தடுபதற்காக கணையம் `இன்சுலினை’ சுரக்க வேண்டும். இன்சுலினுக்கு செல்கள் போதுமான அளவு எதிர்வினையாற்ற முடியவில்லை என்றால் அது இன்சுலின் எதிரப்பு நிலை எனப்படுகிறது. அப்போது ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரிக்கிறது. உடனே கணையமானது பெருமளவிலான இன்சுலினைச் சுரக்கிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் அதிகரித்தால், அது செல்களுடன் ஒட்டிக்கொள்கிறது. அப்படி ஒருமுறை ஒட்டிக்கொண்டால் மீண்டும் அது நீங்குவதில்லை. கடைசியில் அது `சார்பிட்டால்’ என்ற நஞ்சாகிவிடுகிறது. அது செல்களைச் சிதைத்து, உங்கள் உடம்பின் நரம்புகள், ரத்த நாளங்கள், திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதிகமான இன்சுலின் சுரப்பு, உங்களை அதிகமாகச் சாப்பிட வைத்து மாரடைப்பை ஏற்படுத்துகிறது. அதிகமான எடை அல்லது தொந்தியும் தொப்பையுமாக இருப்பவர்களுக்கு, சராசரியான எடை கொண்டவர்களை விட `விசரால்’ கொழுப்பு அபாயம் அதிகம். அடிவயிற்று பகுதியில் ஆழமாக உறுப்புகளைச் சுற்றி அமைந்திருப்பதுதான் `விசரால்’ கொழுப்பு. தோலின் மேலடுக்கை ஒட்டிள்ள `சகுட்டேனியஸ்’ கொழுப்பை விட இது அதிக நோய் அபாயத்தை ஏற்படுத்தும். `விசரால்’ கொழுப்பு, சர்க்கரை வியாதி போன்றவற்றுடன் தொடர்புடையது. பெண்களுக்கு இடுப்பளவு 35 இஞ்சுகளுக்கு மேலும், ஆண்களுக்கு இடுப்பளவு 40 இஞ்சுகளுக்கு மேலும் இருந்தால் அபாயத்தின் அறிகுறி. தொந்தியைக் கரைக்க கொழுப்பை எரிக்கும் உணவுகளைச் சாப்பிடலாம். அவற்றில் புரதங்கள், நார்ச்சத்துச் செறிந்த மாவுச்சத்து உணவுகள் மற்றும் முழுத் தானியங்கள் அடங்கும். பூரிதக் கொழுப்பு அளவைக் குறையுங்கள். `விசரால்’ கொழுப்பிலிருந்து நீங்க, உங்கள் அத்தியாவசியமான `பேட்டி ஆசிட்களை’ எடுத்துக்கொள்ளலாம். தினமும் 35 சதவீதம் புரதம் (பீன்ஸ், கொட்டை வகைகள், பச்சைக் காய்கறிகள், மீன், கோழி இறைச்சியில் உள்ளது), 35 சதவீதம் அதிக நார்ச்சத்து கொண்ட மாவுச்சத்து பொருட்கள், 30 சதவீதம் ஆரோக்கியமான கொழுப்பு (ஆலிவ் எண்ணை போன்றவை) என்று எடுத்துக்கொள்ளலாம். இதய பகுதிக்கு வலுவளிக்கும் பயிற்சிகள் உள்ளிட்ட உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். அவற்றைத் தவற விடாதீர்கள். நீங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதை உணரும் வகையில், வியர்க்கும் வகையில் தீவிரமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால் இடையிடையே உங்களால் பேச முடிகிற அளவுக்கு இருக்க வேண்டும். தொந்தியைக் கரைப்பதற்கு சற்று அதிக காலம் ஆகும். ஆனால் அது முடியாத காரியமல்ல. சரியான அணுகுமுறையின் முலம் நீங்கள் அதிலிருந்து விடுதலை பெறலாம்.

உலகின் மிகப்பெரிய `சோலார்’ அலுவலகம்


சூரிய ஒளியை மின்சக்திக்கு பயன்படுத்திக் கொள்ளும் சோலார் தொழில்ட்பம் வேகமாகப் பெருகி வருகிறது. சோலார் கப்பல், விமானம், கட்டிடம், விளக்கு, அடுப்பு என்று இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

பல்வேறு நாடுகளில் சோலார் கட்டிடங்கள் இருக்கின்றன, கட்டப்படுகின்றன. தற்போது சீனாவில் ஷாங்டாங் நகரில் டெலு பகுதியில் உலகின் மிகப்பிரம்மாண்டமான சோலார் கட்டிடம் கட்டப்படுகிறது. 8 லட்சம் சதுர அடி கொண்ட கட்டிடத்தின் மேற்பகுதியில் சோலார் தகடுகள் பதிக்கப்படுகிறது. இது அந்தப்பகுதியின் மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அலுவலக கட்டிடம் இன்னும் ஒரு ஆண்டுக்குள் செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது.

வருங்காலத்தில் கட்டிடங்களில் அலங்கார கண்ணாடிகளுக்குப் பதிலாக சோலார் தகடுகளை பதிக்கும் பழக்கம் அதிகரிக்கும் என்றால் ஆச்சரியமில்லை.

கோ பூஜை

பசுவின் உடலில் சகல தெய்வங்களும் உறைவதால் ஆண்டுக்கு ஒருமுறையாவது கோ பூஜை செய்ய வேண்டும். பால், தயிர், நெய், போன்றவற்றை ஆண்டு முழுவதும் தருகின்ற பசுவிற்கு மரியாதை செய்து பூஜித்து பொங்கல் வைத்து அன்னமிட வேண்டும். தை முதல் நாளை அடுத்து வரும் சப்தமி திதி. ரதசப்தமி என்று அழைக்கப்படுகிறது. அன்று சூரிய பகவானின் திருத்தேர் வடக்கு நோக்கித் திரும்புவதாக ஐதீகம். அன்று எருக்க இலையுடன் அட்சதை, அருகம்புல், கோமியம் இவற்றை தலையில் வைத்து ஸ்நானம் செய்தால் பாவங்கள் நீங்கும். மறுநாள் அஷ்டமி திதியில் பீஷ்ம தர்ப்பணம் செய்ய வேண்டும்.

பொங்கல் பூவின் சிறப்பு

பொங்கல் பண்டிகையின் போது கரும்பு, மஞ்சள் குலை இவற்றுடன் நாம் படைப்பது, “பொங்கல் பூ’ என்று அழைக்கப்படும் “கண்ணுப் பிள்ளை செடி’. காடுகளிலும், தோட்டங்களிலும் எங்கும் வெள்ளைப் பூக்களுடன் நிறைந்து காணப்படும் இச்செடியை வீட்டு வாசல்களிலும் தொங்க விடுவார்கள். இச்செடியின் சாறு, கரையாத கற்களையும் கரைத்துவிடும். இச்செடிகளை வேருடன் பிடுங்கி உரலில் போட்டு நன்றாக இடித்து, அதை வென்னீரில் போட்டு கொதிக்க வைத்து சாறு எடுக்க வேண்டும். இச்சாறு நாம் வீட்டில் பயன் படுத்தும் அரைக்கீரை தண்ணீர் போல் நல்ல ருசியுடன் இருக்கும். இச்சாற்றை தினசரி இரண்டு தடவை ஒரு மாதம் வரைக் குடித்து வந்தால் நீர் நன்றாகப் பிரியும். சிறுநீரகக் கோளாறு வராது.

மேலும், சிறுநீரகக் கற்களை கரைத்து வெளியேற்றும் ஆற்றல் இதற்கு உண்டு. இதை யாரும் காபி, டீ போன்று பானமாக அருந்தலாம். சிறுநீரகக் கற்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இறைவன் கொடுத்த நன்கொடை தான் இந்த கண்ணுப் பிள்ளைச் செடி. இவ்வளவு சிறப்பு மிக்க கண்ணுப் பிள்ளைச் செடியை நாமும் சிறுநீரகக் கற்களுக்கு பயன்படுத்தலாமே!

பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில்சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கும். ஆனால், மைசூரு அருகிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பொங்கலன்று பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். பொங்கல் திருநாளில் இந்த

பெருமாளின் தரிசனத்தை இங்கிருந்தே பெறுவோம்

தல வரலாறு: சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்திற்கு வந்தார். பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். சுவாமி அவருக்கு சயன கோலத்தில் காட்சி தந்தார். கவுதமர் அவரிடம், அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டினார். அவரிடம் ஒரு புற்றைச் சுட்டிக்காட்டிய சுவாமி, அதில் தனது சயன வடிவச்சிலை இருப்பதாகக் கூறினார். அதன்படி சிலையைக்கண்ட கவுதமர், “ரங்கநாதர்’ என திருநாமமிட்டு பிரதிஷ்டை செய்தார். பிரம்மா சுவாமிக்கு “பிரம்மானந்த விமானம்’ அமைத்தார். பிற்காலத்தில் மன்னர்களால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ரங்கநாதர் பள்ளிகொண்ட இத்தலம் “ஸ்ரீரங்கப்பட்டணம்’ என்றே பெயரும் பெற்றது.

ஆதி ரங்கம்: ரங்கநாதர் யோக சயனத்தில் சாளக்ராம மூர்த்தியாக காட்சி தருகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மா என யாரும் இல்லை. பாதத்திற்கு நேரே கவுதமர் நிற்கிறார். கவுதமருக்கு, பெருமாள் காட்சி தந்த நிகழ்ச்சி சித்திரை வளர்பிறை சப்தமியன்று, “ரங்க ஜெயந்தி’ விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி ரத்தின கிரீடம் அணிந்து உலா செல்வார். இந்நாளிலும், கன்னட வருடப்பிறப்பு மற்றும் தீபாவளி நாட்களில் மட்டுமே மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படும். காவிரி பாயும் வழியில், அதன் மத்தியில் தீவு போல அமைந்த மூன்று தலங்களில் பெருமாள், ரங்கநாதராக காட்சி தருகிறார். அதில் இது முதல் தலம் என்பதால், “ஆதிரங்கம்’ என்கிறார்கள். இங்கிருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள ஷிவனசமுத்திரம் கோயில் “மத்திரங்கம்’ (சாம்ராஜா நகர் மாவட்டம்), திருச்சி ஸ்ரீரங்கம் “அந்திரங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கஜேந்திர வரதர், வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் சன்னதிகள் உள்ளன. பெருமாள் சன்னதி முகப்பில் “சதுர்விம்சதி கம்பம்’ எனப்படும் இரண்டு தூண்களில் பெருமாளின் பிரதானமான 24 வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சொர்க்கவாசல்: பெருமாள் தலங்களில் மார்கழி வைகுண்ட ஏகாதசியன்று தான் சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், மகரசங்கராந்தியன்று மாலையில் சொர்க்கவாசல் கடக்கிறார். சூரியன் உத்ராயண

புண்ணிய கால பயணத்தை துவக்கும் நாள் என்பதால், இந்நாளின் புனிதம் கருதி இவ்வாறு செய்கிறார்கள். வருடத்தில் இன்று ஒருநாள் மட்டும் மூலவர் ரங்கநாதர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவார். நாளை தேரில் எழுந்தருளுவார். ரதசப்தமியை ஒட்டியும் இவருக்கு ஒன்பது நாள் விழா நடத்தப்படும். இவ்வாண்டு பிப்ரவரி 2ல் ரதசப்தமி நிகழ்கிறது. அன்று சூரிய உதய நேரத்தில், பெருமாள் சூரியமண்டல வாகனத்தில் உலா வருவார். பின்னர் தேரில் எழுந்தருளுவார்.

பெருமாளுடன் காவிரி: பூலோகத்திலுள்ள புண்ணிய நதிகள் தங்களிடம் சேர்ந்த பாவங்களை ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி போக்கிக் கொள்கின்றன. இவ்வாறு பாவங்கள் தன்னில் சேர்ந்ததால், காவிரி கோர வடிவம் பெற்றாள். இதற்கு விமோசனம் கிடைக்க இங்கு பெருமாளை பூஜித்தாள். சுவாமி அவளுக்கு காட்சி தந்து, விமோசனம் கொடுத்தார். மேலும், தனது திருப்பாதங்களை எப்போதும் தரிசிக்கும் வகையில் தன் காலடியில் இருக்கவும் அனுமதித்தார். எனவே, இங்கு சுவாமியின் பாதத்திற்கு அருகில் காவிரி அமர்ந்திருக்கிறாள்.

காவிரி நதி, தன் பாவத்தை போக்கியதற்கு நன்றிக்கடனாக இவ்விடத்தில் மட்டும் ரங்கநாதருக்கு மாலையிட்டதுபோல பிரிந்து ஓடுகிறது. ஆடிப்பெருக்கன்று ரங்கநாதர் காவிரிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமி சார்பில் புடவை, அரிசி, வெல்லம், வளையல், மஞ்சள், குங்குமம், பூ ஆகிய மங்கலப்பொருட்கள் நதியில் விடப்படும்.

இருப்பிடம்: பெங்களூருவில் இருந்து மைசூரு செல்லும் வழியில் 125 வது கி.மீ.,ல் இத்தலம் உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ., சென்றால் மைசூருவை அடைந்து விடலாம். பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

திறக்கும் நேரம்: காலை 7.30- 1.30 மணி, மாலை 4- 8 மணி.

போன்: 08236- 252 273, 094488 77648.

பொங்கலோ பொங்கல்

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் மக்கள் வீடுமுழுக்க மாக்கோலங்களும், வாசலில் வண்ணப்பொடிகளால் கண்களைக் கவரும் வண்ணக் கோலங்களும் இட்டு சூரியனை வரவேற்கிறார்கள். பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திட வாசலில் மாவிலை, ஆவாரம்பூ, வேப்பிலை, கூரைப்பூ என்னும் கண்ணுப்பிள்ளை போன்றவற்றை காப்பாக முடிந்து நிலைப்படியில் கட்டுகிறார்கள். வாசலின் இருபுறமும் தித்திக்கும் கரும்பையும் கட்டி வைப்பர். பொங்கல்பானையில் மங்களத்தை குறிக்கும் வகையில் மஞ்சள் கிழங்கினையும், இலையும் சுற்றுவர். செங்கதிரோன் கீழ்வானில் வரும் இளம் காலைப் பொழுதில் நீராடி, புத்தாடை உடுத்தி வாசலில் பொங்கலிடுவதும், சின்னஞ்சிறு குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து பொங்கல் பொங்கும் போது “”பொங்கலோ பொங்கல்” என்று ஆர்ப்பரிப்பதும் பொங்கலுக்கே உரியவையாகும். சுமங்கலிகள் குலவையிட்டு தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். சிலர் பொங்கல் பொங்கும் போது மங்களச் சின்னமான சங்கினை முழங்குவார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் இப்பழக்கம் காணப்படுகிறது.

வாசலில் பூ வைப்பது ஏன்

மார்கழியில் கன்னிப்பெண்கள் வாசலில் அதிகாலைப் பொழுதில் கோலமிடும் போது, நடுவில் சாணத்தில் பூசணிப்பூவினை வைப்பர். அக்காலத்தில், பெண்கள் திருமணத்திற்காக காத்திருப்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் அடையாளமாக இவ்வாறு செய்தனர். வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவே வாசலில் காப்பு கட்டினர். மார்கழியில் பூ வைத்தால், தை மாதத்தில் பெண்களுக்கு திருமணயோகம் உண்டாகும் என்பதை “”தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று சொல்வர். மேலும், அக்காலத்தில் ஆவாரம் பூவையும் பெண்கள் தலையில் சூடினர். இது தங்களது திருமண விருப்பத்தை பெற்றோருக்கும், தங்கள் மாமன்மார்களுக்கும் தெரிவிக்கும் அடையாளமாக இருந்தது. இதேபோல் பொங்கலுக்கு மறுநாள் வீடுகளில் பலவிதமான சித்ரான்னங் களான பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதங்களை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குக் குடும்பத்தோடு செல்வர். ஆற்றங்கரையில் கூடியிருந்து பொழுது போக்குவர். அங்கு அவரவர் தகுதிக் கேற்ப மணமகன், மணமகளைத் தேர்ந்தெடுப்பதும் அந்நாளைய வழக்கமாகும். திருமணத் திற்காக காத்திருப்பவர்களுக்கு வாழ்க்கைத்துணையை தரும் தைமகள் வந்து விட்டாள். எங்கும் இனி கெட்டிமேளம் ஒலிக்கட்டும்.

மகர சங்கராந்தி

பன்னிரண்டு ராசி மண்டலத்தில் சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிவீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதில் சூரியன் ராசிமண்டலத்தில் மகரராசி வீட்டில் பிரவேசிக்கும் நாளை மகர சங்கராந்தி என்று அழைக்கிறார்கள். இந்நாள் தை முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. மகரம் என்பது ராசியையும், சங்கராந்தி என்பது “”நகர ஆரம்பிப்பது” என்பதையும் குறிப்பதாகும். இந்த ராசியில் சூரியன் தன் தென்திசைப்பயணத்தை முடித்து விட்டு, வடதிசைப்பயணத்தைத் தொடங்குகிறார். இப்பயணத்தை ஜோதிடத்தில் “”உத்ராயண புண்ணியகாலம்” என அழைக்கின்றனர். பாண்டவர்களின் பிதாமகரான (தாத்தா) பீஷ்மர் மகாபாரத யுத்தத்தில் காயமடைந்தபோது தன் இன்னுயிரை விடுவதற்காக இப்புண்ணியகாலம் வருவதற்காகக் காத்திருந்தார். தேவர்களுக்கு பகல் பொழுதான இக்காலத்தில் இறக்கின்ற உயிர்கள் மோட்ச கதியை அடைகின்றன. இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதும் நன்மை தரும்.

பொங்கலின் தாத்பர்யம்

பொங்கலுக்கு முதல்நாள் மார்கழி மாதத்தின் கடைசிநாளில் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம். இன்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் புகையில்லா போகியைக் கொண்டாடுவோம் என்று அரசு மக்களுக்கு அறிவுறுத்துகிறது. இந்நாளில் பழைய குப்பைகூளங்கள், பழைய துணிமணிகள், பாய் போன்றவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துகிறோம். வீடு முழுவதும் வண்ணம் தீட்டுகிறோம். வாசலில் கோலங்கள் இடுகிறோம், மாவிலைத் தோரணங்கள் வீடெங்கும் அழகு செய்கின்றன. ஒளி தரும் கதிரவனை வணங்கி மகிழ்கிறோம். ஆரோக்கியம், தூய்மை, அழகு என்ற வெளிப்பார்வையோடு இல்லாமல், இவ்விழாவின் தாத்பர்யத்தையும் நாம் உணர வேண்டும். நம் மனதில் இருக்கும் அசுத்தங்களை அகற்றுவதே போகியாகும். மனம் என்னும் வீட்டில் நல்லவற்றைச் சிந்திப்பதே வண்ணக்கோலமும், தோரணமும் ஆகும். அப்போது கீழ்வானில் சூரியன் உதிப்பதுபோல, உண்மை ஒளி உள்ளத்தில் பிறக்கும். அன்பு, தூய்மை, வாய்மை, ஒழுக்கம் போன்ற நற்குணங் களான அரிசி, வெல்லம், நெய், பருப்பினால் செய்த சர்க்கரைப் பொங்கலைப் போல படையல் செய்தால் இறையருளைப் பெறலாம்.

நவக்கிரக நாயகன்

நவக்கிரகங்களில் சூரியனே நவக்கிரக நாயகனாகப் போற்றப்படுகிறார். மும்மூர்த்திகளின் பிரதிநிதியாக கண்கண்ட தெய்வமாக இருப்பவர் சூரியன். ஒருவருக்கு ஆத்மபலம் அமைய வேண்டுமானால் சூரியன் பலமாக அமைய வேண்டும். வேதமந்திரங்களில் காயத்ரி மந்திரத்திற்கு உரியவர் சூரியன். சூரிய நமஸ்காரம் என்னும் இவருடைய வழிபாடு மிகவும் சிறப்புடையது. யோகக்கலையில் இப்பயிற்சிக்கு தனியிடம் உண்டு. அந்தந்த தருணங்களில் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதை எதிர்மறைப்பொருளில் “”கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்” என்று குறிப்பிடுவார் கள். பிதுர்காரகனாக இருப்பவரும் இவரே. ஆணுக்கு வேண்டிய வீரம், பராக்கிரமம், ஆண்மையை தருபவராகவும், பெண்ணுக்கு கற்புநெறியை அருள்பவராகவும் விளங்குகிறார். இவர் சிம்ம வீட்டில் ஆட்சி பெறுகிறார். மேஷவீடாகிய சித்திரையில் உச்சம் பெறுகிறார். நட்சத்திரங்களில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவருக்கு உரியவை.

“”எங்களைத் தீவினைகளிலிருந்து மீட்பாயாக” என்று சாம வேதம் சூரிய தேவனிடம் வேண்டுகோள் விடுக்கிறது.

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்

ராமபிரானுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடந்தபோது, ராமன் விடுத்த ராமபாணத்தால் ராவணனின் பத்து தலைகள் அறுபட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து தலையில் ஒட்டிக் கொண்டன. அந்த சமயத்தில், அகத்தியர் ராமனைத் தேடிவந்தார். ராமனிடம், “ராமா! ராவணன் சிறந்த சிவபக்தன். அளவில்லாத வரங்களைப் பெற்றவன். அவனை வெல்லுதற்குரிய சூரிய மந்திரத்தை உனக்கு உபதேசம் செய்கிறேன். இதனை உச்சரித்து அம்பினை விடுத்தால் ராவணனை எளிதில் சம்ஹாரம் செய்யலாம்’ என்று கூறி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்தார். ராமன் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்து அம்பு விட்டதும், ராவணனின் மார்பிலிருந்த அமுத கலசம் உடைந்தது. அதன் பின் தலைகள் மீண்டும் ஒட்டிக் கொள்ளவில்லை. அவனது உயிர் பிரிந்தது. வானர வீரர்கள் வெற்றிக் களிப்பில் “ஸ்ரீராமஜெயம்’ என்று எட்டுத்திக்குகளும் அதிரும் படி கோஷமிட்டார்கள் .

சூரிய வழிபாட்டின் பழமை

ரிக்வேதத்திலேயே சூரிய வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இவ்வழிபாடு நம் நாட்டில் நிலவி வருகிறது. காப்பிய நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரம் உச்சிக்கிழான் கோட்டம் என்ற பெயரில் காவிரிப்பூம்பட்டினத்தில் சூரியனுக்கு கோயில் இருந்ததாக கூறுகிறது. பிற்காலத்தில் இக்கோயில் கடல்சீற்றத்தால் அழிந்து விட்டது. சிலப்பதிகார மங்கல வாழ்த்துப்பாடலில் இளங்கோவடிகள் “”ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்று இருமுறை சூரியதேவனைப் போற்றுகிறார். கிராமங்களில் இன்றும் சூரியன் மதியவேளையில் நடுவானில் இருக்கும் பொழுதை உச்சிப்பொழுதாக விவசாயிகள் கணிக்கிறார்கள். மக்கள் சூரியனை ஆரோக்கியத்திற்காக மட்டுமில்லாமல், தனிப்பெரும் கடவுளாகவும் வழிபட்டுள்ளனர்.

சூரியனை வழிபடும் பொங்கல் திருநாள்

சூரியன் ஒரு ராசிக்குள் நுழைகிற நாள் தான் அந்தந்த தமிழ் மாதத்தின் முதல் நாள். சூரியன் ஒரு ராசிக்குள் எத்தனை நாட்கள் இருக்கிறானோ அதுவே அந்த மாதத்தின் மொத்த நாட்கள். இப்படி சூரியன் மகர ராசிக்குள் நுழைகிற நாளே “பொங்கல் திருநாள்’.

தை மாதத்தின் முதல் நாள் அன்று தான் சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடர்கிறான். இதை உத்தராயணம் என்கின்றனர். மிகப் பழங்காலத்திலிருந்து தமிழ் மக்கள் சூரியனை வழிபட்டு வருகின்றனர். முன்னோர் மரபில் நம்பிக்கை உள்ள குடும்பங்களில் பொங்கல் நாளன்று அதிகாலையில், அதாவது சூரியன் உதயமாகும் நேரத்தில் வீட்டில் பொங்கல் இடுவார்கள். கோவில்களில் சூரியனுடைய வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் காலத்தால் முந்தியது மாமல்லபுரத்தில் தர்மராஜா ரதத்தில் உள்ளது. 11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் கிருக்கி மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய கலை நுட்பம் நிறைந்த ஒப்பற்ற கோவிலில் சூரிய இயந்திரம் ஒன்றை அமைத்துள்ளான்.

குலோத்துங்க சோழன் தஞ்சை மாவட்டத்தில் சூரியனுக்கு ஒரு கோவில் கட்டி இருக்கிறான். கன்னியாகுமரி கோவிலில் சூரியனுடைய ஒளி அம்மனின் மூக்குத்தியில் படுகிறது. ஆவுடையார் கோவில், திருப்பாதிரிப் புலியூர், கும்பகோணம் கோவில் ஆகியவற்றில் நாள்தோறும் காலையில் சூரிய ஒளி இறைவன் மீது படுகிறது.

இதன் மூலம் கோவில் அமைப்பில் சூரியனுக்கே முதல் முக்கியத்துவம் என்று தெரிகிறதல்லவா. ஒருநாள் என்பது சூரிய உதயம் தொடங்கி மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள காலப் பகுதியாகும். “உதய நாழிகை’ என்பதைக் கொண்டே ஒருநாளின் தொடக்கத்தை கணக்கிடுகின்றனர்.இவ்வாறாக சூரியனை முன்னிலைப் படுத்தியே இந்துக்களின் பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன. இதில் முக்கிய பண்டிகை பொங்கல் பண்டிகையாகும்.

அறுவடைத் திருநாள்

*தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம் அறுவடைத் திருநாள் உலகில் 22 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் நன்றி கூறும் திருநாளாக, ஜப்பானில் புதிய சுவை திருநாளாக, சீனாவில் “சங் செய்’ என்ற பெயரில் இப்படி பல்வேறு பெயர்களில் அறுவடைத் திருநாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

* நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல், ஜப்பானியர்கள் குதிரைக்கு பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.

மாம்பழம்

எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். மாம்பழம் சூடானது, அதிகமாக சாப்பிட்டால் உஷ்ணம் உடம்பில் ஏறி தொல்லை தரும் என்பார்கள். இதனை மருத்துவ விஞ்ஞானம் ஏற்கவில்லை.
100கிராம் மாம்பழத்தில் 12.2 முதல் 42.2 மில்லி கிராம் வரை வைட்டமின் ஏ யும், 13.2 முதல் 80.3 மில்லி கிராம் வரை வைட்டமின் சியும் உள்ளது. தினமும் ஒரு மாம்பழம் சாப்பிட்டால் இந்த இரண்டு வைட்டமின்களும் எளிதாக நமது உடலை வந்தடையும். பல பேர்கள் மாம்பழத்தை முழுதுமாக சாப்பிடாமல் தோல் பகுதியை தூர எறிந்துவிடுவார்கள்.

மாம்பழத்தின் மேல் தோல் பகுதியில்தான் வைட்டமின் சி சத்து அதிகமாக உள்ளது. மனிதர்களின் உடலுக்கு அதிக முக்கிய தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவைகள் நாம் சுவையாக சாப்பிடுகின்ற மாம்பழத்தில் அதிகமாக இடம் பெற்றுள்ளது. வெண்ணெயில் அளவுக்கு அதிகமான வைட்டமின் ஏ இருப்பதை நாம் அறிவோம். இதே போன்றே மாம்பழத்திலும் அளவுக்கு அதிகமான வைட்டமின ஏ இருப்பதால் விலை கூடுதலான வெண்ணெயை உண்பதைவிட விலை மலிவான மாம்பழத்தை உண்ணலாமே. நாம் சாப்பிடாமல் தூக்கி எறியும் மாங்கொட்டையிலும் கால்சிய சத்தும், கொழுப்பு சத்தும் இருக்கின்றது.

மாம்பழத்தின் பூர்வீகம் இந்தியாதான். இப்போதும் அதிகமாக இங்குதான் மாம்பழம் உற்பத்தி ஆகிறது.
உத்திரப்பிரதேசத்தில்- சப்போட்டா, துஷேரி போன்ற வகையான மாம்பழங்களும், தென்னிந்தியாவில் அல்போன்சா, பகனப்பள்ளி, ராஸ்புரி, நீலம், ஒட்டு, மல் கோவா, கிளிமூக்கு என்று பல்வேறு வகையான மாம் பழங்கள் கிடைக்கின்றது. அதிகமாக சாறும், நாறும் உள்ள பழங்களில் இருந்து பழச்சாறு, ஒருவகை சட்னி, பழ ஊறுகாய், ஜாம் ஆகியவை தயாரிக்கப்படுகிறது.

பயனுள்ள தகவல்கள் தரும் பாதுகாப்பான தளம்

அண்மையில் இணையத்தில் உலா வந்த போது பார்த்த ஒரு தளத்தின் மீது நான் தீராத ஆசை கொள்ளும் அளவிற்கு அது என்னைக் கவர்ந்தது. கம்ப்யூட்டர் மலருக்கான பல டிப்ஸ்களை மட்டுமின்றி, பல பயனுள்ள தகவல்களையும் அது தந்தது. மேலும் நம்மை உற்சாகப்படுத்த கேம்ஸ்கள் பலவற்றையும் அது கொண்டுள்ளது. இந்த தளத்தின் முகவரி: http://www.safesurfer.org/ இந்த தளம் பல பிரிவுகளைக் கொண்டு அழகாக நம்மைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றவுடன் தளம் அமையும் விதம் பாராட்டத்தக்கதாய் அமைகிறது. இதன் பிரிவுகளைப் பார்க்கலாம்.
Forum: இதில் இந்த தளத்தைக் காண வருபவர்கள் கூறும் கருத்துக்களைப் படிக்கலாம். நீங்களும் உங்கள் கருத்தை எழுத வேண்டும் என எண்ணினால், இதில் பதிந்து கொள்ள வேண்டும். அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்பதால், இந்த தளம் வரும் அனைவரும் இதில் தங்களைப் பதிந்து கொள்வார்கள்.
2� Blog: நாம் சில கருத்துக்களை பைசாவுக்கு புண்ணியம் இல்லாதது என்று வேடிக்கையாகவும் (சில வேளைகளில் சீரியசாகவும்) கூறுவோம் அல்லவா! அது போல்தான் இதுவும். இங்கு நீங்களும் உங்களைப் பதிந்து கொண்டு எழுதலாம். டிப்ஸ், ட்ரிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் குறித்த தலைப்புகளில் தகவல்கள் ஆகியவற்றைத் தரலாம்.
The Buzz : இந்தப் பிரிவில் நாம் ஆர்வம் கொண்டுள்ள பல தலைப்புகளில் அண்மைக் காலத்திய செய்திகளையும் தகவல்களையும் படிக்கலாம். ஸ்போர்ட்ஸ், சயின்ஸ், உடல்நலம், தொழில் நுட்பம் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
Lingo: இன்டர்நெட் குறித்த ஸ்லாங் என்னும் வழக்குச் சொற்கள் மற்றும் சுருக்குச் சொற்களைக் காணலாம். மேலே உள்ள ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் உள்ள எழுத்து ஒன்றில் அழுத்தினால், அந்த எழுத்தில் தொடங்கும் சொற்கள் குறித்த விளக்கங்கள் கிடைக்கும்; அல்லது ஸ்குரோல் செய்து கீழாக இதன்பக்கங்களைக் காணலாம்.
Tips’n’Trix: நான் அதிகம் விரும்பும் பிரிவு. கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் குறித்த பல டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் இந்தப் பிரிவில் தரப்படுகிறது. அது மட்டுமின்றி நீங்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் என்று ஒரு பட்டியல் காட்டப்படுகிறது.
மேற்கண்ட பிரிவுகளுடன் இன்னும் சில பயனுள்ள பிரிவுகள் உள்ளன. அவற்றை நீங்களே இந்த தளம் சென்று அறிந்து கொள்ளலாம்.

அர்த்த மத்ச்யேந்திராசனம்

உட்கார்ந்து இடது காலை மடக்கி இடது குதியை தொடைகள் சந்திற்குக் கொண்டு வரவும். வலது முழங்காலை மடக்கி நிறுத்தி, இடது முழங்காலருகே வலது பாகத்தைக் கொண்டு வந்து தூக்கி இடது தொடையைத் தாண்டி பக்கத்தில் சித்திரத்தில் காட்டியவாறு நிறுத்தவும். உடலை வலது பக்கம் திருப்பவும். இடது கையை வலது முழங்காலுக்கு வெளியே வீசி, பின்புறமாய் முழங்காலை அமர்த்திட இடது கையால் இடது முழங்காலையும் பிடித்துக் கொள்ளவும். முதுகை வலது பக்கம் திருப்பி, வலது கையைப் பின்னால் வீசி மூச்சை வெளியேவிட்டு வலது விரல்களால் வலது காலில் மாட்டிக் கொக்கி போல் உடலை நன்றாகத் திருப்பி இழுக்கவும். ஆசனத்தைக் கலைத்து இடது பக்கம் மறுபடியும் அம்மாதிரி மாற்றிச் செய்யவும்.

பலன்கள்:

முதுகெலும்பு திருகப்பட்டு புத்துணர்ச்சி ஏற்படும். நாடி மண்டலம் நன்கு வேலை செய்யும்.இளமை மேலிடும், முகக்கவர்ச்சி உண்டாகும். விலா எலும்பு பலப்படும். தொந்தி கரையும்.