சூரியனை வழிபடும் பொங்கல் திருநாள்

சூரியன் ஒரு ராசிக்குள் நுழைகிற நாள் தான் அந்தந்த தமிழ் மாதத்தின் முதல் நாள். சூரியன் ஒரு ராசிக்குள் எத்தனை நாட்கள் இருக்கிறானோ அதுவே அந்த மாதத்தின் மொத்த நாட்கள். இப்படி சூரியன் மகர ராசிக்குள் நுழைகிற நாளே “பொங்கல் திருநாள்’.

தை மாதத்தின் முதல் நாள் அன்று தான் சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடர்கிறான். இதை உத்தராயணம் என்கின்றனர். மிகப் பழங்காலத்திலிருந்து தமிழ் மக்கள் சூரியனை வழிபட்டு வருகின்றனர். முன்னோர் மரபில் நம்பிக்கை உள்ள குடும்பங்களில் பொங்கல் நாளன்று அதிகாலையில், அதாவது சூரியன் உதயமாகும் நேரத்தில் வீட்டில் பொங்கல் இடுவார்கள். கோவில்களில் சூரியனுடைய வடிவம் செதுக்கப்பட்டிருக்கிறது. இவற்றுள் காலத்தால் முந்தியது மாமல்லபுரத்தில் தர்மராஜா ரதத்தில் உள்ளது. 11ம் நூற்றாண்டில் ராஜராஜ சோழன் கிருக்கி மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரத்தில் கட்டிய கலை நுட்பம் நிறைந்த ஒப்பற்ற கோவிலில் சூரிய இயந்திரம் ஒன்றை அமைத்துள்ளான்.

குலோத்துங்க சோழன் தஞ்சை மாவட்டத்தில் சூரியனுக்கு ஒரு கோவில் கட்டி இருக்கிறான். கன்னியாகுமரி கோவிலில் சூரியனுடைய ஒளி அம்மனின் மூக்குத்தியில் படுகிறது. ஆவுடையார் கோவில், திருப்பாதிரிப் புலியூர், கும்பகோணம் கோவில் ஆகியவற்றில் நாள்தோறும் காலையில் சூரிய ஒளி இறைவன் மீது படுகிறது.

இதன் மூலம் கோவில் அமைப்பில் சூரியனுக்கே முதல் முக்கியத்துவம் என்று தெரிகிறதல்லவா. ஒருநாள் என்பது சூரிய உதயம் தொடங்கி மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள காலப் பகுதியாகும். “உதய நாழிகை’ என்பதைக் கொண்டே ஒருநாளின் தொடக்கத்தை கணக்கிடுகின்றனர்.இவ்வாறாக சூரியனை முன்னிலைப் படுத்தியே இந்துக்களின் பண்டிகைகள் கொண்டாடப் படுகின்றன. இதில் முக்கிய பண்டிகை பொங்கல் பண்டிகையாகும்.

அறுவடைத் திருநாள்

*தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை அறுவடைத் திருநாளாக கொண்டாடி மகிழ்கிறோம் அறுவடைத் திருநாள் உலகில் 22 நாடுகளில் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் நன்றி கூறும் திருநாளாக, ஜப்பானில் புதிய சுவை திருநாளாக, சீனாவில் “சங் செய்’ என்ற பெயரில் இப்படி பல்வேறு பெயர்களில் அறுவடைத் திருநாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.

* நாம் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவது போல், ஜப்பானியர்கள் குதிரைக்கு பொங்கல் வைத்து கொண்டாடுகின்றனர்.

%d bloggers like this: