பொங்கும் மங்களம் எங்கும் தங்குக!

வைகுண்ட ஏகாதசியன்று பெருமாள் கோயில்களில்சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கும். ஆனால், மைசூரு அருகிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்தில் பொங்கலன்று பெருமாள் சொர்க்கவாசல் கடக்கிறார். பொங்கல் திருநாளில் இந்த

பெருமாளின் தரிசனத்தை இங்கிருந்தே பெறுவோம்

தல வரலாறு: சப்தரிஷிகளில் ஒருவரான கவுதமர், தீர்த்த யாத்திரை மேற்கொண்டபோது இத்தலத்திற்கு வந்தார். பெருமாளின் தரிசனம் வேண்டி தவமிருந்தார். சுவாமி அவருக்கு சயன கோலத்தில் காட்சி தந்தார். கவுதமர் அவரிடம், அதே கோலத்தில் இங்கு எழுந்தருளும்படி வேண்டினார். அவரிடம் ஒரு புற்றைச் சுட்டிக்காட்டிய சுவாமி, அதில் தனது சயன வடிவச்சிலை இருப்பதாகக் கூறினார். அதன்படி சிலையைக்கண்ட கவுதமர், “ரங்கநாதர்’ என திருநாமமிட்டு பிரதிஷ்டை செய்தார். பிரம்மா சுவாமிக்கு “பிரம்மானந்த விமானம்’ அமைத்தார். பிற்காலத்தில் மன்னர்களால் இங்கு கோயில் எழுப்பப்பட்டது. ரங்கநாதர் பள்ளிகொண்ட இத்தலம் “ஸ்ரீரங்கப்பட்டணம்’ என்றே பெயரும் பெற்றது.

ஆதி ரங்கம்: ரங்கநாதர் யோக சயனத்தில் சாளக்ராம மூர்த்தியாக காட்சி தருகிறார். ஸ்ரீதேவி, பூதேவி, நாபிக்கமலத்தில் பிரம்மா என யாரும் இல்லை. பாதத்திற்கு நேரே கவுதமர் நிற்கிறார். கவுதமருக்கு, பெருமாள் காட்சி தந்த நிகழ்ச்சி சித்திரை வளர்பிறை சப்தமியன்று, “ரங்க ஜெயந்தி’ விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்று சுவாமி ரத்தின கிரீடம் அணிந்து உலா செல்வார். இந்நாளிலும், கன்னட வருடப்பிறப்பு மற்றும் தீபாவளி நாட்களில் மட்டுமே மூலவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படும். காவிரி பாயும் வழியில், அதன் மத்தியில் தீவு போல அமைந்த மூன்று தலங்களில் பெருமாள், ரங்கநாதராக காட்சி தருகிறார். அதில் இது முதல் தலம் என்பதால், “ஆதிரங்கம்’ என்கிறார்கள். இங்கிருந்து 70 கி.மீ., தூரத்திலுள்ள ஷிவனசமுத்திரம் கோயில் “மத்திரங்கம்’ (சாம்ராஜா நகர் மாவட்டம்), திருச்சி ஸ்ரீரங்கம் “அந்திரங்கம்’ என்றும் அழைக்கப்படுகிறது. பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மர், கஜேந்திர வரதர், வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயர், கருடாழ்வார் சன்னதிகள் உள்ளன. பெருமாள் சன்னதி முகப்பில் “சதுர்விம்சதி கம்பம்’ எனப்படும் இரண்டு தூண்களில் பெருமாளின் பிரதானமான 24 வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

சொர்க்கவாசல்: பெருமாள் தலங்களில் மார்கழி வைகுண்ட ஏகாதசியன்று தான் சுவாமி சொர்க்கவாசல் கடப்பார். ஆனால், இக்கோயிலில் ரங்கநாதர், மகரசங்கராந்தியன்று மாலையில் சொர்க்கவாசல் கடக்கிறார். சூரியன் உத்ராயண

புண்ணிய கால பயணத்தை துவக்கும் நாள் என்பதால், இந்நாளின் புனிதம் கருதி இவ்வாறு செய்கிறார்கள். வருடத்தில் இன்று ஒருநாள் மட்டும் மூலவர் ரங்கநாதர் வெண்ணெய்க்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவார். நாளை தேரில் எழுந்தருளுவார். ரதசப்தமியை ஒட்டியும் இவருக்கு ஒன்பது நாள் விழா நடத்தப்படும். இவ்வாண்டு பிப்ரவரி 2ல் ரதசப்தமி நிகழ்கிறது. அன்று சூரிய உதய நேரத்தில், பெருமாள் சூரியமண்டல வாகனத்தில் உலா வருவார். பின்னர் தேரில் எழுந்தருளுவார்.

பெருமாளுடன் காவிரி: பூலோகத்திலுள்ள புண்ணிய நதிகள் தங்களிடம் சேர்ந்த பாவங்களை ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடி போக்கிக் கொள்கின்றன. இவ்வாறு பாவங்கள் தன்னில் சேர்ந்ததால், காவிரி கோர வடிவம் பெற்றாள். இதற்கு விமோசனம் கிடைக்க இங்கு பெருமாளை பூஜித்தாள். சுவாமி அவளுக்கு காட்சி தந்து, விமோசனம் கொடுத்தார். மேலும், தனது திருப்பாதங்களை எப்போதும் தரிசிக்கும் வகையில் தன் காலடியில் இருக்கவும் அனுமதித்தார். எனவே, இங்கு சுவாமியின் பாதத்திற்கு அருகில் காவிரி அமர்ந்திருக்கிறாள்.

காவிரி நதி, தன் பாவத்தை போக்கியதற்கு நன்றிக்கடனாக இவ்விடத்தில் மட்டும் ரங்கநாதருக்கு மாலையிட்டதுபோல பிரிந்து ஓடுகிறது. ஆடிப்பெருக்கன்று ரங்கநாதர் காவிரிக்கு எழுந்தருளுவார். அப்போது சுவாமி சார்பில் புடவை, அரிசி, வெல்லம், வளையல், மஞ்சள், குங்குமம், பூ ஆகிய மங்கலப்பொருட்கள் நதியில் விடப்படும்.

இருப்பிடம்: பெங்களூருவில் இருந்து மைசூரு செல்லும் வழியில் 125 வது கி.மீ.,ல் இத்தலம் உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ., சென்றால் மைசூருவை அடைந்து விடலாம். பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் கோயில் உள்ளது.

திறக்கும் நேரம்: காலை 7.30- 1.30 மணி, மாலை 4- 8 மணி.

போன்: 08236- 252 273, 094488 77648.

பொங்கலோ பொங்கல்

தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளை தமிழர் திருநாளாகக் கொண்டாடுகிறோம். இந்நாளில் மக்கள் வீடுமுழுக்க மாக்கோலங்களும், வாசலில் வண்ணப்பொடிகளால் கண்களைக் கவரும் வண்ணக் கோலங்களும் இட்டு சூரியனை வரவேற்கிறார்கள். பொங்கும் மங்களம் எங்கும் நிறைந்திட வாசலில் மாவிலை, ஆவாரம்பூ, வேப்பிலை, கூரைப்பூ என்னும் கண்ணுப்பிள்ளை போன்றவற்றை காப்பாக முடிந்து நிலைப்படியில் கட்டுகிறார்கள். வாசலின் இருபுறமும் தித்திக்கும் கரும்பையும் கட்டி வைப்பர். பொங்கல்பானையில் மங்களத்தை குறிக்கும் வகையில் மஞ்சள் கிழங்கினையும், இலையும் சுற்றுவர். செங்கதிரோன் கீழ்வானில் வரும் இளம் காலைப் பொழுதில் நீராடி, புத்தாடை உடுத்தி வாசலில் பொங்கலிடுவதும், சின்னஞ்சிறு குழந்தைகள் ஆடிப்பாடி மகிழ்ந்து பொங்கல் பொங்கும் போது “”பொங்கலோ பொங்கல்” என்று ஆர்ப்பரிப்பதும் பொங்கலுக்கே உரியவையாகும். சுமங்கலிகள் குலவையிட்டு தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். சிலர் பொங்கல் பொங்கும் போது மங்களச் சின்னமான சங்கினை முழங்குவார்கள். குறிப்பிட்ட சமுதாயத்தினரிடம் இப்பழக்கம் காணப்படுகிறது.

வாசலில் பூ வைப்பது ஏன்

மார்கழியில் கன்னிப்பெண்கள் வாசலில் அதிகாலைப் பொழுதில் கோலமிடும் போது, நடுவில் சாணத்தில் பூசணிப்பூவினை வைப்பர். அக்காலத்தில், பெண்கள் திருமணத்திற்காக காத்திருப்பதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் அடையாளமாக இவ்வாறு செய்தனர். வீட்டில் மங்கள நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்பதற்காகவே வாசலில் காப்பு கட்டினர். மார்கழியில் பூ வைத்தால், தை மாதத்தில் பெண்களுக்கு திருமணயோகம் உண்டாகும் என்பதை “”தை பிறந்தால் வழிபிறக்கும்” என்று சொல்வர். மேலும், அக்காலத்தில் ஆவாரம் பூவையும் பெண்கள் தலையில் சூடினர். இது தங்களது திருமண விருப்பத்தை பெற்றோருக்கும், தங்கள் மாமன்மார்களுக்கும் தெரிவிக்கும் அடையாளமாக இருந்தது. இதேபோல் பொங்கலுக்கு மறுநாள் வீடுகளில் பலவிதமான சித்ரான்னங் களான பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதங்களை எடுத்துக் கொண்டு ஆற்றங்கரைக்குக் குடும்பத்தோடு செல்வர். ஆற்றங்கரையில் கூடியிருந்து பொழுது போக்குவர். அங்கு அவரவர் தகுதிக் கேற்ப மணமகன், மணமகளைத் தேர்ந்தெடுப்பதும் அந்நாளைய வழக்கமாகும். திருமணத் திற்காக காத்திருப்பவர்களுக்கு வாழ்க்கைத்துணையை தரும் தைமகள் வந்து விட்டாள். எங்கும் இனி கெட்டிமேளம் ஒலிக்கட்டும்.

மகர சங்கராந்தி

பன்னிரண்டு ராசி மண்டலத்தில் சூரியன் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசிவீட்டில் சஞ்சாரம் செய்கிறார். இதில் சூரியன் ராசிமண்டலத்தில் மகரராசி வீட்டில் பிரவேசிக்கும் நாளை மகர சங்கராந்தி என்று அழைக்கிறார்கள். இந்நாள் தை முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது. மகரம் என்பது ராசியையும், சங்கராந்தி என்பது “”நகர ஆரம்பிப்பது” என்பதையும் குறிப்பதாகும். இந்த ராசியில் சூரியன் தன் தென்திசைப்பயணத்தை முடித்து விட்டு, வடதிசைப்பயணத்தைத் தொடங்குகிறார். இப்பயணத்தை ஜோதிடத்தில் “”உத்ராயண புண்ணியகாலம்” என அழைக்கின்றனர். பாண்டவர்களின் பிதாமகரான (தாத்தா) பீஷ்மர் மகாபாரத யுத்தத்தில் காயமடைந்தபோது தன் இன்னுயிரை விடுவதற்காக இப்புண்ணியகாலம் வருவதற்காகக் காத்திருந்தார். தேவர்களுக்கு பகல் பொழுதான இக்காலத்தில் இறக்கின்ற உயிர்கள் மோட்ச கதியை அடைகின்றன. இந்நாளில் முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்வதும் நன்மை தரும்.

பொங்கலின் தாத்பர்யம்

பொங்கலுக்கு முதல்நாள் மார்கழி மாதத்தின் கடைசிநாளில் போகிப் பண்டிகை கொண்டாடுகிறோம். இன்றும் சென்னை போன்ற பெருநகரங்களில் புகையில்லா போகியைக் கொண்டாடுவோம் என்று அரசு மக்களுக்கு அறிவுறுத்துகிறது. இந்நாளில் பழைய குப்பைகூளங்கள், பழைய துணிமணிகள், பாய் போன்றவற்றை வீட்டில் இருந்து அப்புறப்படுத்துகிறோம். வீடு முழுவதும் வண்ணம் தீட்டுகிறோம். வாசலில் கோலங்கள் இடுகிறோம், மாவிலைத் தோரணங்கள் வீடெங்கும் அழகு செய்கின்றன. ஒளி தரும் கதிரவனை வணங்கி மகிழ்கிறோம். ஆரோக்கியம், தூய்மை, அழகு என்ற வெளிப்பார்வையோடு இல்லாமல், இவ்விழாவின் தாத்பர்யத்தையும் நாம் உணர வேண்டும். நம் மனதில் இருக்கும் அசுத்தங்களை அகற்றுவதே போகியாகும். மனம் என்னும் வீட்டில் நல்லவற்றைச் சிந்திப்பதே வண்ணக்கோலமும், தோரணமும் ஆகும். அப்போது கீழ்வானில் சூரியன் உதிப்பதுபோல, உண்மை ஒளி உள்ளத்தில் பிறக்கும். அன்பு, தூய்மை, வாய்மை, ஒழுக்கம் போன்ற நற்குணங் களான அரிசி, வெல்லம், நெய், பருப்பினால் செய்த சர்க்கரைப் பொங்கலைப் போல படையல் செய்தால் இறையருளைப் பெறலாம்.

நவக்கிரக நாயகன்

நவக்கிரகங்களில் சூரியனே நவக்கிரக நாயகனாகப் போற்றப்படுகிறார். மும்மூர்த்திகளின் பிரதிநிதியாக கண்கண்ட தெய்வமாக இருப்பவர் சூரியன். ஒருவருக்கு ஆத்மபலம் அமைய வேண்டுமானால் சூரியன் பலமாக அமைய வேண்டும். வேதமந்திரங்களில் காயத்ரி மந்திரத்திற்கு உரியவர் சூரியன். சூரிய நமஸ்காரம் என்னும் இவருடைய வழிபாடு மிகவும் சிறப்புடையது. யோகக்கலையில் இப்பயிற்சிக்கு தனியிடம் உண்டு. அந்தந்த தருணங்களில் செய்ய வேண்டிய கடமைகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்பதை எதிர்மறைப்பொருளில் “”கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்” என்று குறிப்பிடுவார் கள். பிதுர்காரகனாக இருப்பவரும் இவரே. ஆணுக்கு வேண்டிய வீரம், பராக்கிரமம், ஆண்மையை தருபவராகவும், பெண்ணுக்கு கற்புநெறியை அருள்பவராகவும் விளங்குகிறார். இவர் சிம்ம வீட்டில் ஆட்சி பெறுகிறார். மேஷவீடாகிய சித்திரையில் உச்சம் பெறுகிறார். நட்சத்திரங்களில் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் இவருக்கு உரியவை.

“”எங்களைத் தீவினைகளிலிருந்து மீட்பாயாக” என்று சாம வேதம் சூரிய தேவனிடம் வேண்டுகோள் விடுக்கிறது.

ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம்

ராமபிரானுக்கும், ராவணனுக்கும் யுத்தம் நடந்தபோது, ராமன் விடுத்த ராமபாணத்தால் ராவணனின் பத்து தலைகள் அறுபட்டாலும் மீண்டும் மீண்டும் வந்து தலையில் ஒட்டிக் கொண்டன. அந்த சமயத்தில், அகத்தியர் ராமனைத் தேடிவந்தார். ராமனிடம், “ராமா! ராவணன் சிறந்த சிவபக்தன். அளவில்லாத வரங்களைப் பெற்றவன். அவனை வெல்லுதற்குரிய சூரிய மந்திரத்தை உனக்கு உபதேசம் செய்கிறேன். இதனை உச்சரித்து அம்பினை விடுத்தால் ராவணனை எளிதில் சம்ஹாரம் செய்யலாம்’ என்று கூறி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரத்தை உபதேசம் செய்தார். ராமன் ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தை உச்சரித்து அம்பு விட்டதும், ராவணனின் மார்பிலிருந்த அமுத கலசம் உடைந்தது. அதன் பின் தலைகள் மீண்டும் ஒட்டிக் கொள்ளவில்லை. அவனது உயிர் பிரிந்தது. வானர வீரர்கள் வெற்றிக் களிப்பில் “ஸ்ரீராமஜெயம்’ என்று எட்டுத்திக்குகளும் அதிரும் படி கோஷமிட்டார்கள் .

சூரிய வழிபாட்டின் பழமை

ரிக்வேதத்திலேயே சூரிய வழிபாடு பற்றிய குறிப்பு காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே இவ்வழிபாடு நம் நாட்டில் நிலவி வருகிறது. காப்பிய நூல்களில் ஒன்றான சிலப்பதிகாரம் உச்சிக்கிழான் கோட்டம் என்ற பெயரில் காவிரிப்பூம்பட்டினத்தில் சூரியனுக்கு கோயில் இருந்ததாக கூறுகிறது. பிற்காலத்தில் இக்கோயில் கடல்சீற்றத்தால் அழிந்து விட்டது. சிலப்பதிகார மங்கல வாழ்த்துப்பாடலில் இளங்கோவடிகள் “”ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்” என்று இருமுறை சூரியதேவனைப் போற்றுகிறார். கிராமங்களில் இன்றும் சூரியன் மதியவேளையில் நடுவானில் இருக்கும் பொழுதை உச்சிப்பொழுதாக விவசாயிகள் கணிக்கிறார்கள். மக்கள் சூரியனை ஆரோக்கியத்திற்காக மட்டுமில்லாமல், தனிப்பெரும் கடவுளாகவும் வழிபட்டுள்ளனர்.

%d bloggers like this: