சுதந்திரத்தையே விற்ற நாடு மொனாகோ

ஆண் வாரிசு இல்லாமலேயே அந்த இளவரசர் இறந்துவிட்டால் மொனாகோ ஃபிரான்ஸுக்குச் சொந்மாகிவிடும்!
சென்னையை விடுங்கள், அதிலுள்ள ஒரு சராசரி தொகுதி அளவுக்குக்கூட இருக்காது மொனாகோ. இரண்வு சதுரகிலோமீட்டரைவிடக் குறைவான பரப்பளவு. அப்படியானால் பிரபல பன்னாட்டு நிறுவனங்கள் மொனாகோவில் தங்கள் கிளைகளைத் திறக்க ஆர்வம் காட்டுவது ஏன்? தெரிந்து கொள்ள மொனாகோவின் சரித்திரப் பக்கங்களைக் கொஞ்சம் புரட்ட வேண்டும்.
சில வருடங்களுக்கு முன் இப்போது இருப்பதைவிடக் குறைவான பரப்பளவு கொண்டதாகத்தான் மொனாகோ இருந்தது. கடல் கொஞ்சம் பின்னடைந்ததால் இலவசமாக 100 ஏக்கர் பரப்பளவு வந்து சேர்ந்திருக்கிறது!
1861க்குப் முன்பு இப்போதைப் போல இரண்டு மடங்கு அதிகமானதாக இருந்தது மொனாகோ. என்ன செய்ய…! நிதி தேவைப்பட, தன்னில் பாதியை ஃபிரான்ஸுக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மொனாகோவுக்கு. இதனால் நிலப்பகுதியை மட்டுமல்லாமல் அதில் உள்ள இயற்கை வளங்களையும் சேர்த்தே இழந்ததனால் மொகாகோவின் பொருளாதாரத்துக்கு மிகவும் பபிதப்பு. அதைச் சரிக்கட்ட அப்போதைய இளவரசர் மொனாகோவில் மாண்டே கார்லோவை உருவாக்கினார். அதற்குப் பிறகு உலகத்து கோடீஸ்வரர் எல்லாம் இங்கு வந்து ஆனந்தமாகத் தங்கள் பணத்தைத் தொலைத்துவிட்டுப் போவது வாடிக்கையாகிவிட்டது.
மாண்டே கார்லோ பகுதியில் உலகப் புகழ்பெற்ற காசினோக்கள் (சூதாட்ட நிலையங்கள்) இருக்கின்றன. (007 ரசிகர்களுக்கு ஒரு கூடுதல் தகவல் – முதல் ஜேம்ஸ்பாண்ட் கதைகூட மொனாகோவில் உள்ள காசினோக்களைப் பின்னணியாகக் கொண்டு உருவானதுதான்)
தனக்கு ராணுவப் பாதுகாப்பு வேண்டும் என்று ஃபிரான்ஸை அணுகியது மொனாகோ. ஒப்பந்தம் போட்டுக் கொள்ளத் தயாரானது ஃபிரான்ஸ். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் உள்ள ஒரு முக்கிய நிபந்தனை மொனாகோவை அதிரவைத்தது!
இனி மொனாகோ தன் சுதந்திரத்தை ஃபிரான்ஸுக்கு விட்டுத் தந்துவிட வேண்டும். மறுத்தது மொனாகோ. மீண்டும் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை, கடைசியில் மிக மிக விநோதமான ஒரு நிபந்தனைக்கு ஒப்புக் கொண்டது மொனாகோ.
அப்போது மொனாகோவை ஆண்டுவந்த இளவரசர் மூன்றாம் ரெய்னியர் திருமணமாகாத இளைஞர். ஆண் வாரிசு இல்லாமலேயே அவர் இறந்துவிட்டால் மொனாகோ ஃபிரான்ஸுக்குச் சொந்தமாகிவிடும்!
இவளரசருக்குத் திருமணம் செய்து கொள்ளும் �ண்ணமே இல்லை என்று தெரிந்தே ஃபிரான்ஸ் இதனை வலியுறுத்தியது.
மனம் மாறியதோ அல்லது உடன்படிக்கை காரணமாக மனத்தை மாற்றிக் கொண்டாரோ தெரியாது; இளவரசர் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானித்தார். அந்தப் பெண் உலகெங்கும் பல ஆண்களின் கனவுநாயகியாக விளங்கிய நடிகை கிரேஸ் கெல்லி.
திருமணம் நடந்தது. குழந்தையும் பிறந்தது. அது ஆண் வாரிசு! விடுதலை என்று ஆனந்த் கூத்தாடினார்கள் மக்கள்.
இன்றுவரை மொனாகோவில் மன்னர் ஆட்சிதான். இதன் அதிகாரப்பூர்வமான பெயர்கூட (பிரின்ஸ் என்ற ஆங்கில வார்த்தையை அடிப்படையாகக் கொண்ட) The Principality of Monaco என்பதுதான். ஏழு நூற்றாண்டுகளாக மொனாகோவை ஆட்சி செய்வது கிரிமால்டி குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்கள்தான்.
1297ல் ஃபிராங்காயில் கிரிமால்டி என்பவர் துறவி வேடத்தில் ஒரு சின்னப் பையனோடு நுழைந்து மொனாகோ கோட்டையைத் தம் வசமாக்கிக் கொண்டதிலிருந்தே அது அவர்கள் ராஜ்ஜியம்தான். (சமீபகாலமாக, போனால் போகிறது என்று ஒரு தேசியக்குழுவுடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்க பெரிய மனது செய்திருக்கிறார் இளவரசர்).
1943ல் இத்தாலிய ராணுவம் மொனாகோவைக் கைப்பற்றியது, ஒருவிதத்தில் கொடுங்கோல் ஆட்சிதான். பின் ஜெர்மனியைச் சேர்ந்த நாஜிக்களின் பிடிக்குள் அது சென்றது இந்த நிலையில்தான் மூன்றாம் ரெய்னியர் பட்டத்துக்கு வந்து ஃபிரான்ஸின் ராணுவ உதவியைக் கோரினார். 56 வருடங்கள் இவர் தொடர்ந்து ஆட்சி புரிந்ததைக் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
மொனாகோவில் இன்று ஐந்தில் ஒருவர்தான் உள்ளூர்வாசி. வெளிநாடுகளிலிருந்து மொனாகோவுக்கு வந்துநிரந்தரமாகத் தங்குபவர்களின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகமாக இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் என்ன தெரியுமா? காசினோக்களா? இல்லை மொனாகோவில் வருமானவரி கிடையாது என்பதுதான் முக்கியக் காரணம். இதனால்தான் பன்னாட்டு நிறுவனங்கள் மொனாகோவில் தங்கள் கிளையைத் திறப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றன.
ஆனால் இதற்கும் வந்தது வேட்டு. பல நாடுகளும் இப்படித் தங்கள் செல்வம் மொனாகோவில் குவிவதைக் குறித்து எதிர்ப்பு தெரிவிக்க, மொனாகோ சமீபகாலமாக ஒரு வித்தியாசமான நடைமுறையைப் பின்பற்றுகிறது.
வெளியூரிலிருந்து வந்து தங்குபவர்களுக்கு வருமானவரி உணடு. காசினோக்களில் தாராளமாக அவர்கள் சூதாடலாம். மண்ணின் மைந்தர்களுக்கு வருமான வரி கிடையாது. ஆனால் அவர்கள் காசினோக்களில் தாராளமாக அவர்கள் சூதாடலாம். மண்ணின் மைந்தர்களுக்கு வருமானவரி கிடையாது. ஆனால் அவர்கள் காசினோக்களில் ஆடக்கூடாது. ஆடுவது மட்டுமல்ல, நுழையவே கூடாது!
சூதாட்டத்துக்கு மட்டுமல்ல வேறொரு சாகச விளையாட்டுக்கும் உலகப்புகழ்பெற்றது. மொனாகோ, இங்கே நடைபெறும் மொனாகோ கிராண்ட் ஃப்ரீ பந்தயம் ஒரு மாபெரும் திருவிழா. உலகின் பல பகுதிகளில் இந்தப் பந்தயம் நடந்தாலும், மொனாகோவில் ஜெயிப்பது தனிப்பெருமைதான். காரணம் இங்கு அமைந்துள்ளது. மிகவும் சவாலான பந்தயப் பாதை. நடுவே மிக மிகக் குறுகுலான கடினமான சந்துகளையேல்லாம் கடக்க வேண்டும்.
1983ல் ஐ.நா.சபையின் உறுப்பினரானது மொனாகோ. 2002ல் ஃபிரான்ஸுக்கும் மொனாகோவுக்கும் இடையே உடன்படிக்கை ஏற்பட்டது. இனி கிரிமால்டியின் வம்சம் மொனாகோவை ஆளக்கூடாது. தனி சுதந்திர நாடாகவே மொனாகோ இருக்கும். ஆனால் அதற்கான ராணுவ பாதுகாப்பை ஃபிரான்ஸ் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்!
ஃபிரான்ஸ் முதலாளியா? முள் முதலாளியா? இப்படி ஒரு கேள்வி அடிக்கடி எழுந்தாலும் மொனாகோ மக்கள் தங்களுக்கு விட்டுவிட்டுக் கிடைத்துவரும் சுதந்திரத்தை அனுபவித்துப் பூரிக்கிறார்கள்தான்.
* மொனாகோவில் இது தலைநகரம், இது நாடு என்று எந்தப் பிரிவுக்கோடும் கிடையாது. அதுவே இது. இதுவே அது! அங்கே தங்கியிருப்பவர்களில் 84 சதவிகிதம் வெளிநாட்டவர்கள்.
* கிரேக்க வார்த்தையான மொனோக்கோஸ் என்ற வார்த்தையிலிருந்து வந்ததுதான் மொனாகோ. அந்த கிரேக்க வார்த்தைக்கு அர்த்தம் ஒரே குடியிருப்பு.
* மொனாகோ கொடியை வரைவது ரொம்ப சுலபம். மேல்பாதி சிகப்பு, கீழ்பாதி வெள்ளை அவ்வளவே.
* ஹெர்குவிஸ் தெரியுமல்லவா? பலத்துக்கு� உதாரணமாகக் கருதப்படும் கிரேக்க வீரன். அவன் ஒரு முறை மொனாகோ வழியாகச் சென்றானாம். அங்கிருந்த தெய்வங்களையெல்லாம் அனுப்பிவிட்டானாம். எனவே ஹெர்குலஸுக்கு என்றே ஒரு ஆலயமும் இங்கு எழுப்பப்பட்டிருக்கிறது.
* புகையிலையிலிருந்து தபால்துறைவரை பலவும் அரசின் பிடியில்தான்.
* ஐரோப்பாவில் இருந்தாலும், ஐரோப்பிய யூனியனில் மொனாகோ உறுப்பினர் அல்ல. எனினும் நாணயம் யூரோதான்! மொனாகோவில் பாரம்பரியச் சின்னங்கள் கலந்த யூரோ நாணயங்களை வெளிவிடுகிறது மொனாகோ.
* அதிகாரபூர்வமான மதம் கத்தோலிக்க மதம்.
* மொனாகோவில் எத்தனை நகராட்சிகள் தெரியுமா? இரண்டுக்கு முந்தைய எண் எது? ஆம், அதுதான் விடை!

%d bloggers like this: