மோனாலிசாவின் சிரிப்புக்கு கொழுப்பே காரணம் : இத்தாலி பேராசிரியர் கண்டுபிடிப்பு

உலகப் புகழ்பெற்ற ஓவியமான மோனாலிசாவின் மயக்கும் புன்னகையின் பின்னணியில், “கொழுப்பு’ இருக்கிறது; இப்படிசொல்லியிருக்கிறார் பிரபல இத்தாலி மருத்துவ பேராசிரியர் ஒருவர்.

மோனாலிசா – இத்தாலியை சேர்ந்த பிரபல ஓவியர் லியானார்டோ டாவின்சி தலைமையில் ஓவியர்கள் குழு, 1503 -1506க்கு இடையே வரைந்தது. ஆயில் பெயின்ட் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ஓவியம், 1519 ல் லியானார்டோ இறந்த பின் , பலர் கைக்கு மாறியது. பல லட்சத்துக்கு கைமாறிய இந்த ஓவியம், கடைசியில் பிரான்ஸ் மியூசியத்துக்கு வந்து சேர்ந்தது. அதற்கு முன், பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் படுக்கை அறையில் கூட, சில காலம் வைக்கப்பட்டு இருந்தது. யாரை வைத்து இந்த ஓவியத்தை லியானார்டோ வரைந்தார் என்பது இன்றளவும் மர்மம் தான்.

இத்தாலியிலுள்ள பலெர்மோபல்கலைக் கழகத்தில், நோய் உடற்கூறியல் பேராசிரியராக இருப்பவர், விட்டோ பிரான்கோ. இவர், உலகப் புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்களைப் பற்றி மருத்துவக் கண்ணோட்டத்தில் ஆராய்ச்சி செய்து வருகிறார். “ஓர் ஓவியன், ஓவியத்தைப் பார்க்கும் கண்ணோட்டத்திலிருந்து வித்தியாசமானது எனது பார்வை. அது, இசையை ஒரு கணித வல்லுனன் பார்க்கும் பார்வையோடு ஒத்தது. உலகப் புகழ் பெற்ற ஓவியங்களில் தீட்டப்பட்டுள்ள கதாநாயகர்கள், தேவதைகள், புராண புருஷர்கள் அந்த ஓவியங்களைத் தீட்டியவர்களின் உடற்கூறுகளையும், அதில் புதைந்துள்ள நோய் அறிகுறிகளையும் பிரதிபலித்து உள்ளனர்’ என்கிறார், விட்டோ பிரான்கோ.

பியாரோ டெல்லா வரைந்த ஓவியங்களில் சிலவற்றில், குரல்வளை வீக்கம் இருப்பதாக இவர் கண்டறிந்துள்ளார். அதேபோல், டாவின்சியின் சமகாலத்தவரான மிக்கேல் ஏஞ்சலோ சிறுநீரகக் கல் கோளாறு, கீல்வாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர். ஏஞ்சலோவின் புகழ்பெற்ற “ஏதென்ஸ் ரபேலின் பள்ளி’ ஓவியத்தில், இந்த நோய்கள் கொண்டவர்களாக சித்திரங்கள் தீட்டப் பெற்றிருப்பதாக பிரான்கோ குறிப்பிடுகிறார். ஓவிய உலகத்தின் உன்னதம் பெற்றவரான இத்தாலியை சேர்ந்த லியானார்டோ டாவின்சி வரைந்து, இன்றளவும் உலகையே தனது மோகனப் புன்னகையால் மயக்கிக் கொண்டிருக்கும், மோனாலிசாவின் அந்த மயக்கும் புன்னகைக்கு என்ன காரணம் தெரியுமா..? அவளது கண்களின் கீழ்ப் பகுதியில் திரண்டுள்ள கொழுப்புச் சத்துதான் என்கிறார் பிரான்கோ. மற்றொரு ஓவியரான டியாகோவின் ஓவியங்களில், குள்ளத் தன்மை, எலும்புகள் வளர்ச்சியின்மை, பருவத்துக்கு முன்பே பூப்படைதல் போன்ற நோய்கள் தென்படுவதாகவும் பிரான்கோ கூறுகிறார்.

%d bloggers like this: