Daily Archives: ஜனவரி 18th, 2010

எ‌ந்த நகையை‌ப் போடுவது

ஆக்ஸிடைஸ்ட் நகைகள்
எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல்
இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.

உயரமான பெண்கள் சின்னச் சின்ன நகைகளை அணிந்தால் எடுப்பாக தெரியாது.

இரு வேறு விதமான நகைகளை (வெள்ளி மற்றும் தங்க நகைகளை ஒன்றாக அணிவது) ஒன்றாய்ச் சேர்த்து எப்பொழுதும் அணிவதைத் தவிர்க்கவும்).

காலை நேரங்களில் நகைகளைக் குறைவாக அணிய வேண்டும். இரவில் அதிகமான நகைகளை அணியலாம்.

வெளிர் சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுக்கு வெள்ளி நகைகளும், சிவப்பு, மஞ்சள் நிற ஆடைகளுக்கு தங்க நகைகளும் கச்சிதமாகப் பொருந்தும்.

நீங்கள் அயல்நாட்டுத் துணி வகைகளை அணிபவராக இருந்தால் அதிகமான நகைகளை அணியவேண்டாம். அவற்றுடன் மெல்லிய செயின், சின்ன சின்ன ஜிமிக்கிகளை அணியலாம்.

விரதம் இருக்கலாமா?

நல்லது தான்… ஆனால், கெட்டதும் கூட
பார்த்தால் நோஞ்சானாக இருப் பார்; கேட்டால்,” நான் இன்னிக்கு விரதம்; பச்சை தண்ணிகூட குடிக்க மாட்டேன்’ என்பார். நம்பிக்கை தேவை தான்; ஆனால், உடல் ஆரோக்கியத்துக்கு உலை வைக்கும் அளவுக்கு, கண்மூடித்தனமாக விரதம் இருப்பது பெரிய விபரீதத்தில் கொண்டு விடும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.
தனியாக உண்ணா நோம்பு இருப்பதாக சொல்பவர்கள் ஒன்றை கவனிக்கத் தவறி விட்டனர். ஒவ்வொருவரும், தினமுமே விரதம் தான் இருக்கிறோம் என்பதை. ஆம், இரவு தூங்கும் போது யாராவது சாப்பிடுகின்றனரா… இல்லையே? அதுவும் விரதம் தானே. அதுவே போதும் என்பது தான் டாக்டர்களின் கருத்து.

நல்லது தான்
உண்ணாமல் இருப்பது நல்லது தான்; இதோ கீழ் கண்ட வகையில் இருந்தால்…
* குறைந்த பட்ச உண்ணா நோன்பு தான் உடலுக்கு நல்லது. அதுவும் டாக்டர்களின் ஆலோசனைப்படி செய்தால் உடல் ஆரோக்கியத்துக்கு கைகொடுக்கும்.
* உடலில் உள்ள இன்சுலின் சுரப்பது சீராவது, கொழுப்பு சத்து குறைவது, எடை குறைவது ஆகியவை இதனால் ஏற்படும் நன்மை.
* இதய நோய், மூட்டு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உட்பட சில வகை நோய்கள் தீர, மருந்துகளுடன் இப்படி சில சமயம் குறைந்தபட்ச நோன்பு இருக்க டாக்டர்களே யோசனை சொல்கின்றனர்.
* மனஅழுத்தம், சோர்வு நீங்க குறைந்த பட்ச அளவில் வயிற்றை காயப்போடுவது நல்லது தான்.
* உண்ணா நோன்பால், சில செல்கள் வளர்ச்சி அடையும்; பழுதடைந்த செல்கள் புத்துயிர் பெறும்; அதனால், இளமையுடன் இருக்க முடியும்.

கெட்டது எப்போது?
சாப்பிடாமல் வயிற்றை காயப் போடுவதால் கெடுதலும் உள்ளது. நம்பிக்கை அடிப்படையில், எதையும் பொருட்படுத்தாமல் மாதத்தில் சில நாட்கள் சாப்பிடாமல் இருப்பதும், தண்ணீர் கூட குடிக்காமல் இருப்பதும் தேவையில்லாத உடல் உபாதைகளை ஏற்படுத்தும்.
* உடலுக்கு தொடர்ந்து போக வேண்டிய சத்துக்கள், வைட்டமின்கள் மறுக்கப்படுகிறது. அதனால், மூளை உட்பட முக்கிய உறுப்புகள் செயல்பாடு பாதிக்கும்.
* தண்ணீர் கூட குடிக்காமல் இருப் பதால், சிலருக்கு வயிற்றில் பிரச்னை உருவாகும். அதுவே, பெரிய கோளாறில் விட்டு விடும்.
* கழிவுகளை அகற்றும் பணியை தண்ணீர் செய்கிறது. அது குடிக்காமல் இருந்தால், உடலில் கழிவுகள் சேர்ந்து விடும்.
* பெண்கள் அடிக்கடி உண்ணாமல் நோன்பு இருப்பது, அவர்கள் உடலில் ரத்த சோகை ஏற்பட வழி வகுத்துவிடும்.
* சர்க்கரை நோய் வரவும் இது ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.

டாக்டரை கேளுங்க
விரதம் இருப்பதற்கெல்லாம் டாக்டரை கேட்பதா என்று நினைக்கலாம்; ஆனால், கண்டிப்பாக ஒருவரின் உடல் நிலையை கருத்தில் கொண்டு டாக்டர் உரிய முறையில் ஆலோசனை வழங்குவார். நாள் முழுக்க உண்ணாமல் இருப்பதால், உடலில் உள்ள கழிவுகள் நீங்கி, கொழுப்பு சீராகிறது என்றாலும், அதை அடிக்கடி செய்யக்கூடாது.
ஒருவருக்கு எத்தனை மணி நேரம், சாப்பாடில்லாமல் உடல் தாங்கும் என்பதை டாக்டர் தான் சொல்ல முடியும்.
விரதம் இருந்தாலும், அடிக்கடி தண்ணீர் குடிப்பது முக்கியம். அப்போது தான் உடலில் உள்ள கழிவுகள் நொறுங்கி, வெளியேற வழி கிடைக்கும்; உடலில் சோர்வும் ஏற்படாது. விரதம் முடிந்ததும், உடனே “புல்’ கட்டு கட்டக்கூடாது; ஜூஸ் குடித்து விட்டு, படிப்படியாக அளவை அதிகரித்து சாப்பிடவேண்டும்.

இப்படியும் ஆபத்து
குண்டாக இருப்பவர்கள், யாரோ சொல்வதை கேட்டு, சாப்பிடுவதை குறைத்துக் கொண்டாலோ, சாப்பிடாமல் விட்டாலோ உடல் எடை குறையும் என்று தவறான போக்கை கையாள்கின்றனர். கேட்டால்,
“டயட்’டில் இருக்கிறேன் என்பர். இது தான் மகா கெடுதல்.
சாப்பிடாமல் இருந்தால் கொழுப்பு குறையும் என்பது உண்மை. அதேசமயத்தில் தவறான போக்கால், கொழுப்பு தவிர, உடல் பலவீனம் அடைய வாய்ப்பு உண்டு. இந்த இழப்பால், கொழுப்பு அதிகமாகி, மாறான விளைவை தான் ஏற்படுத்தும்.
இப்படி நிலைமை ஏற்பட்டால், சாப்பிடாமல் இருக்கும் ஒருவர், மேலும் குண்டாகி விடும் ஆபத்தும் உண்டு.

பிரஷ் ஜூஸ் போதும்
ஒரு நாளைக்கு இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது டாக்டர்களின் கருத்து. தண்ணீர் குடிப்பதுடன், பிரஷ் ஜூஸ் குடிப்பது மிகவும் நல்லது என்பது பலருக்கு தெரிந்தும், இன்னமும் பாட்டில் கூல்டிரிங்க்கை தான் குடிக்கின்றனர்.
நம் உடலுக்கு 13 வைட்டமின்கள் தேவை. இந்த வைட்டமின்கள், ஆரஞ்சு உட்பட பல பழங்களில் உள்ளன.
வீட்டில் தயாரிக்கப்படும் பழரசங்களில் தான் அதிக வைட்டமின் சத்துக்கள் உள்ளன. பழங்களை அழுகவிட்டு குப்பையில் போடுவதை விட, அவற்றை ரசமாக பிழிந்தெடுத்து சாப்பிட்டு வந்தாலே, உடலில் எடை குறைந்து விடும்.

மொபைல் போன் பேசினால் ஞாபக மறதி நோய் வராது

மொபைல்போனை பயன்படுத்துவதால், ஞாபக மறதி நோய் வராது, என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மொபைல்போனை அதிகம் பயன்படுத்துவதால் காது வலி, மூளை புற்றுநோய் ஆகிய பாதிப்புகள் வரும் என முந்தைய ஆய்வு முடிவுகள் அச்சுறுத்தின. இருப்பினும் மொபைல் போன் பேசுபவர்களுக்கு இந்த நோய் வந்ததாக நிரூபிக்கப்படவில்லை. இதற்கிடையே அமெரிக் காவின் ப்ளோரிடாவை சேர்ந்த விஞ்ஞானிகள் மொபைல்போனிலிருந்து வெளிவரும் மின்காந்த அலைகள் மூளை மழுங்கு நோய்(அல்சீமர்) வராமல் காக்கும் என தெரிவித்துள்ளனர்.மொபைல்போனிலிருந்து வரும் மின்காந்த அலைகளை செலுத்தி எலிகளை பரிசோதித்தில் இந்த உண்மை தெரிய வந் துள்ளது.இன்னும் மனிதர்களிடத்தில் இந்த சோதனை நடத்தப்படவில்லை. எனவே, இந்த சோதனை மனிதர்களுக்கு எந்த விதத்தில் உதவுகிறது, எவ்வளவு காலத்துக்கு இந்த நடைமுறை பலனளிக்கும் என்ற சோதனைகள், முடிவு பெறவில்லை.எனவே, அதிகாரபூர்வமாக இந்த ஆய்வு முடிவை விஞ்ஞானிகள் வெளியிட மறுத்து விட்டனர்.

நாவல் பழத்தின் மருத்துவ குணங்கள்

நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை மற்றும் விதை என அனைத்துமே மருத்துவ குணங்கள் கொண்டவை.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயால் பலரும் பாதிக்கப்பட்டு அவதியுறுகிறார்கள். இதை கட்டுப்படுத்த நாவல் பழத்தின் விதைகள் சிறந்த மருந்து. இதன் விதைகளை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு கிராம் அளவு தூளை, காலை, மாலை வேளைகளில் சாப்பிட்டு வந்தால் போதும். படிப்படியாக நீரிழிவு நோய் கட்டுப்படும்.

ரத்தப்போக்கு:

பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும் குணமும் நாவலுக்கு உண்டு. இதற்காக, 10 சென்டி மீட்டர் நீளமும், 5 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த பட்டையை நன்கு நசுக்கி, 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். அந்த தண்ணீரை ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி, பின் ஆற வைத்து குடிக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை வீதம் 10 நாட்கள் இவ்வாறு குடித்து வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கை கட்டுப்படுத்தலாம்.
சிறுநீர் எரிச்சல்:

சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் ஏற்படும். இன்னும் சிலர் சிறுநீர்க்கட்டால் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், நாவல் பழங்களை பிழிந்து வடிகட்டிய சாற்றை 3 தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன், ஒரு தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்க வேண்டும். தினமும் காலை, மாலை ஆகிய இரு வேளைகள் வீதம் 2 நாட்களுக்கு சாப்பிட்டாலே போதும். சிறுநீர் எரிச்சல் தீர்ந்து விடும். நீர்க்கட்டும் பறந்தே போய்விடும்.

பேதி:

நாவல் மரத்தின் இலைக் கொழுந்தை நசுக்கி சாறு எடுத்து, ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட வேண்டும். காலை, மாலை என இரு வேளை 3 நாட்களுக்கு தொடர்ந்து இவ்வாறு சாப்பிட்டு வந்தால் பேதியை கட்டுப்படுத்தலாம்.

தொண்டைப் புண், தொண்டை அழற்சி:

10 சென்டிமீட்டர் நீளமும், 5 சென்டிமீட்டர் அகலமும் கொண்ட முற்றிய நாவல் மரத்தின் பட்டையை சேகரித்துக் கொள்ள வேண்டும். இதை 1/2 லிட்டர் தண்ணீரில் இட்டு கொதிக்க வைக்க வெண்டும். கொதிக்கும் நீரை 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய பின்னர், பொறுத்துக் கொள்ளும் சூட்டில் வாய் கொப்பளித்து வர வேண்டும். தொடர்ந்து ஓரிரு நாட்கள் இவ்வாறு செய்தால் தொண்டைப் புண், தொண்டை அழற்சி குணமாகும்.

பிற பயன்கள்:

* நாவல் பழத்திற்கு சிறுநீர் பெருக்கம், பசியை தூண்டும் தன்மை உண்டு. மேலும், நாக்கு மற்றும் பல் ஈறுகளை சுத்தம் செய்யும் தன்மையும் இதற்கு உண்டு.

* தொடர்ந்து நாவல் பழங்கள் சாப்பிட்டு வந்தால் குடல், இரைப்பை இதயத்தின் தசைகள் வலுவாகும்.

* நாவல் பழச்சாற்றுக்கும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் குணம் உண்டு.

* நாவல் மரத்தின் பட்டைக்கு நரம்பை பலப்படுத்தும் சக்தியும், மூச்சுக்குழல் அழற்சி, காசநோய், குடல் புண்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவற்றை குணமாக்கும் சக்தியும் உண்டு.

* இரத்தம் சுத்தப்படுத்துதலிலும் நாவல் முக்கிய இடம் பெறுகிறது.

அறத்திற்கு அழிவுண்டா? (ஆன்மிகம்)

உண்மையே பேசு; அறமே செய் என்கிறது வேதம். இந்த கலிகாலத்தில் உண்மையே பேசினால் ஊரெல்லாம் எதிரி; உலகெல்லாம் பகை என்று பலர் பயப்படுகின்றனர். உண்மையைப் பேசுகிறவர்கள், உண்மை பேசினால் மட்டும் போதாது; அறவழியில் வாழ்கிறவர் களாகவும் இருக்க வேண்டும். உங்கள் வாழ்வு, அறவழியில் இல்லாமல் உண்மை பேசுகிறேன் என்று பிறரைப்பற்றி பேசினால் துன்பம் தான் மிஞ்சும்.
பழைய வைத்திய முறையில் மருந்துகள் கொடுக்கும் போது, மருந்து மட்டும் சாப்பிட்டால் போதாது; பத்திய உணவுகள் சாப்பிட்டு, சில மோசமான உணவுகளை சாப்பிடாமல் இருந்தால்தான் மருந்து வேலை செய்யும் என்று சொல்வர். சிலசமயம், பத்தியமற்ற உணவுகள் சாப்பிட்டால் மருந்து விபரீதமாகக் கூட வேலை செய்யும்; அதே மாதிரிதான் உண்மை பேசுவது என்பது மருந்து மாதிரி. அறவழியில் வாழ்வது பத்திய உணவு மாதிரி. இரண்டும் இணைந்து நிகழ வேண்டுமே ஒழிய, உண்மை மட்டும் பேசி அறவழியில் நாம் நடக்கா விட்டால் அடி, உதைதான் கிடைக்கும்.
அறவழியில் நடக்கக் கூட பலர் பயப்படுகின்றனர். அறவழியில் நடந்த ராமர், தருமர் கஷ்டப்பட்டனர். அயோக்கியர்கள் சுகவாழ்வு வாழ்கின்றனர் என்று பலர் புலம்புகின்றனர். இது மாயை; பெரிய பொய். அவர்கட்கு நேர்ந்த சோதனை களைத் துன்பங்களாக கருதுகின்றனர்; ஆனால், அவர்கள் அப்படி இல்லை. நெருப்புக்குக் காகிதம் அஞ்சும்… தங்கம் பயப்படுமா? நீங்கள் அறவழியில் நடந்தால் வரும் அனுபவங்களைத் துன்பம் என்று முத்திரை குத்தாதீர்கள்; அறவழியில் நடப்பவருக்கு ஒருநாளும் துன்பம் வராது. “இன்பமே எந்நாளும்… துன்பம் இல்லை’ என்கிறது நாவுக்கரசர் தேவாரம்.
ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு திருட்டுப் போய்விட்டது. அரசனுக்குக் கடுங்கோபம். சிலம்பைக் கண்டுபிடிக்க ஒற்றர்களை ஏவினான்; பயன் இல்லை.”ஒரு மாதத்திற்குள் சிலம்பைக் கொண்டு வந்து தருபவர்கட்கு பெரும் பரிசுத் தொகை…’ என்று அறிவித்தான். கூடவே, மக்களை மிரட்ட, அதற்கு பிறகு, அது யாரிடம் இருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்று அறிவித்தான்.
அந்த ஊருக்குத் தம் சீடர்களோடு வந்து கொண்டிருந்தார் துறவி ஒருவர். வழியில் கீழே கிடந்த சிலம்பு இவர் கைக்கு அகப்பட்டது. விசாரித்தபோது, “இது ராஜாவின் சொத்து; அதை உடனே கொண்டு போய் கொடுத்தால் பரிசு உண்டு. குறிப்பிட்ட நாளுக்குப் பிறகு கொடுத் தால், மரண தண்டனை!’ என்று துறவிக்குத் தகவல் கிடைத்தது.
அதை கொடுக்கவில்லை துறவி; வைத்துக் கொண்டார். சீடர்களுக்கு ஒன்றும் புரியவே இல்லை. சரியாக எந்த நாளுக்குப் பிறகு, கொடுத்தால் மரண தண்டனை என்று ராஜா அறிவித்தாரோ, அதற்குப் பிறகு, அரசரிடம் சிலம்பைக் கொடுத்தார். “இப்போது உமக்கு மரண தண்டனை நான் விதிக்க வேண்டி இருக்குமே, ஏன் கிடைத்ததும் தரவில்லை?’ என்று சீறினான் அரசன்.
“ஒன்று… கிடைத்ததும் ஓடோடி வந்திருந்தால் பரிசுக்கு நான் ஆசைப்பட்டதாக அர்த்தம்; நான் பரிசை விரும்பவில்லை. இரண்டு, மரண தண்டனை கிடைக்கும் என்று அஞ்சி கொடுக்காமலேயே வைத்திருந்தால் நான் சாவுக்குப் பயந்தவன் என்று அர்த்தம்; நான் மரணத்திற்குப் பயப்படுபவன் இல்லை. சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்படுபவன் என்று ஆகிவிடும்; நான் பிறர் பொருளை விரும்புவதே இல்லை. அதனால், இப்போது கொடுத்து விட்டேன்!’ என்றார் துறவி. “இப்போது உமக்கு மரணதண்டனை கிடைக்குமே!’ என்றான் அரசன். அவனைப் பார்த்து, “அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. தர்மம், உன் சட்டத்தை விட மேலானது… விடு வழியை…’ என்று கூறியபடி கம்பீரமாக நடந்தார் துறவி. தலை வணங்கி வழிவிட்டான் அரசன்.
அறம் அழிவற்றது.