Daily Archives: ஜனவரி 19th, 2010

பயர்பாக்ஸ் பிரவுசருக்கான புதிய பயனுள்ள ஆட் ஆன் தொகுப்பு

இப்போது அறிமுகமாகிப் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசர்கள் அனைத்திலும் டேப் பயன்பாடு தான் அடிப்படையாக உள்ளது. டேப் ஒவ்வொன்றிலும் ஒரு தளம் காணப்படுவதும், அதனைத் தேவைப்படுகையில் கிளிக் செய்து பயன்படுத்துவதும் நம் வாடிக்கையாகிவிட்டது. ஆனால் எத்தனை டேப்கள் திறக்கப்படுகின்றனவோ, அந்த அளவிற்கு ராம் மெமரி இடம் எடுக்கப்பட்டு காலியாகும். அண்மையில் பார்த்த டூ மெனி டேப்ஸ் (TooManyTabs) என்னும் ஒரு ஆட் ஆன் தொகுப்பு இந்த பிரச்னைக்கும் வழி காட்டுகிறது. தொடர்ந்து பயனபடுத்தாத, ஆனால் தேவைப்படும் டேப்களை, காத்திருக்கும் இடம் ஒன்றை உருவாக்கி அதில் போட்டு வைக்கிறது இந்த புரோகிராம். அவை நம் கண்ணில் படும்படி இருக்கும். ஆனால் செயல்படும் நிலையில் இருக்காது. எனவே ராம் மெமரி காலியாகாது. இந்த ஆட் ஆன் தொகுப்பு வழக்கமான டேப்களுக்கு மேலாக ஒரு புதிய டூல்பாரினை உருவாக்குகிறது. காத்திருப்பில் போட்டு வைக்க வேண்டிய டேப்பினை இழுத்து வந்து இந்த டூல்பாரில் விட்டுவிடலாம். அல்லது அப்போது திறக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் டேப்பில் இடது பக்கம் உள்ள மேல் நோக்கி உள்ள ஸ்டைலான அம்புக் குறியில் கிளிக் செய்திடலாம். அப்படி கிளிக் செய்தால் அந்த டேப் இந்த டூல்பாருக்கு இழுத்துச் செல்லப்பட்டு வைக்கப்படும். இவ்வாறு இழுக்கப்பட்டு இந்த டூல்பாரில் வைக்கும் டேப் சும்மா இருக்கும். ராம் மெமரியில் இடம் பிடிக்காது. அதற்குப் பதிலாக அந்த டேப்பிற்கான முகவரி ஒரு புதிய புக்மார்க் போல்டரில் அமைக்கப்படும். இதன் மீது கிளிக் செய்தால் அந்த டேப்பிற்கான தளம் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இது போல ஆறு வரிசைகளில் இந்த டேப்களைக் கொண்டு சென்று வைக்கலாம். இந்த ஆட் ஆன் புரோகிராம் கிடைக்கும் தளத்தில் இது குறித்த சிறிய வீடியோ பைல் ஒன்றும் உள்ளது. இதனைக் கிளிக் செய்தால், இந்த ஆட் ஆன் தொகுப்பின் முழு பயன்பாட்டினையும் அறிந்து கொள்ளலாம். இது இலவசம். இதனைப் பெற நீங்கள் செல்ல வேண்டிய தள முகவரி: https://addons.mozilla. org/enUS/firefox/addon/9429

தமிழகத்தில் மக்களாட்சி வரலாறு

முடியாட்சி காலத்திலேயே ஜனநாயகத்தின் மீதான பார்வை தமிழகத்திற்கு இருந்துள்ளது. சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் அறிமுகப் படுத்தப்பட்ட குடவோலை முறை என்பது இன்றைய தேர்தல் முறைகளுக்கு ஒரு முன் னோடியாக இருந்திருப்பதை கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது. ஐம்பெருங் குழு, எண்பேராயம் போன்ற அரசவை நிறுவனங் கள் முடியாட்சிக்குள் முளைவிட்ட ஜனநாயகக் குருத்துகள் எனலாம்.

பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டிருந்த காலத்தில் தமிழகம் தேர்தலை சந்தித்தது. இதில் வாக்களிக்கும் உரிமை கொண்ட குடிமக்களாக வரிசெலுத்துவோர், பட்டம் பெற்றோர் உள்ளிட்டவர்கள் இருந்தனர். வெள்ளையர்கள் ஆட்சியில் மாண்டேகு-செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்கள் காரணமாக 1919Š-ஆம் ஆண்டில் இரட்டையாட்சி முறை கொண்டு வரப்பட்டது. அரசியல் சட்டமாக நடை முறைக்கு வந்தது. இதன்படி ஆளுநருக்கு மட் டுமே பதிலளிக்கக்கூடிய உயரதிகாரிகள் ஒரு பக்கம் ஆட்சி செய்வார்கள். அதே நேரத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்ட மன்றத்திற்குக் கட்டுப்பட்ட அமைச்சர்கள் கொண்ட அவை இன்னொரு பக்கம் ஆட்சி செய்யும் .

அப்போது நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் கிடையாது. தமிழர்கள் வாழும் பகுதியுடன் ஆந்திரா, கர்நாடகா ஆகியவற்றின் சில பகுதிகளும் இணைந்து சென்னை மாகாணம் என அழைக்கப்பட்டு வந்தது. 1920-ஆம் ஆண்டு முதல் மாகாணத் தேர்தல் நடந்தது. இரட்டையாட்சி முறையை ஏற்க வில்லை என காந்தியடிகள் அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி இத்தேர்தலில் போட்டியிட வில்லை. இத்தேர்தலில் நீதிகட்சி வெற்றி பெற்றது. சென்னை மாகாணத்திற்கான முதல் அமைச்சரவையில் ஏ.சுப்பராயலு ரெட்டியார் முதலமைச்சராக (அப்போது அதற்கு பிரிமியர் எனப் பெயர்) பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் சில நாட்களில் சுப்பராயலு மரண மடைந்ததால், பனகல் அரசர் என அழைக்கப் பட்ட இராமராய நிங்கார் முதலமைச்சரானார். 1923-ல் நடைபெற்ற இரண்டாவது தேர்தலிலும் இவரே முதல்வரானார்.

மருத்துவக் கல்லூரியில் (எம்.பி.பி.எஸ்) ஒரு மாணவன் படிக்க வேண்டுமென்றால் சமஸ் கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை அப்போது இருந்தது. இதனை உடைத்தெறிந்த வர் பனகல் அரசர். இதன் மூலமாக பிற்படுத்தப் பட்ட-தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந் தவர்களும் பெண்களும் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு உருவானது பனகல் அரசரின் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப் பட்ட மிக முக்கியமான சீர்திருத்தம், அற நிலையப் பாதுகாப்புச் சட்டம். சரியான பராமரிப்பின்றி தனிப்பட்டவர்களால் ஆண்டு அனுபவிக்கப்பட்டு வந்த கோவில் சொத்து களை இச்சட்டத்தின்கீழ் அரசாங்கத்தின் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தார்.

சென்னை மாகாணத்திற்கான மூன்றாவது தேர்தல் 1927-ஆம் ஆண்டு நடைபெற்றது. இத் தேர்தலில் நீதிக்கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் தோல்வியடைந்தனர். அக்கட்சியின் ஆதர வுடன் சுயேட்சைகளின் ஆட்சி நடைபெற்றது. முதலமைச்சர் சுப்பராயனுடன் எஸ்.முத்தையா முதலியாரும் எஸ்.ஆர். சேதுரத்தினமய்யரும் அமைச்சரானார்கள். முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ வேலைவாய்ப்பு முறையை சட்டமாகக் கொண்டு வந்தார். 1929-ல் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஒவ் வொரு சமுதாயத்தின்மக்கள்தொகையின் அடிப்படையில் வேலையினை பங்கீட்டு அளிக்கும் சட்டமாக இது அமைந்தது. 1937 வரை நீதிக்கட்சி ஆட்சி நீடித்தது.

1937-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் பங்கேற்று வெற்றி பெற்றது. ஜூலை 17-ஆம் நாள் சென்னை மாகாணத்தின் முதல மைச்சராகப் பொறுப்பேற்றார் சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ராஜாஜி என அழைக்கப்படுவருமான ராஜாஜியின் ஆட்சிக்காலத்தில் அனைத்து சமுதாயத்தினரும் கோவிலுக்குள் நுழைந்து வழிபடுவதற்கான ஆலயப் பிரவேசச் சட்டம் நிறைவேற்றப் பட்டது. உழவர் கடன் நிவாரணச் சட்டம், கைத்தொழில் பாதுகாப்புச்சட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டங்களாகும்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாணவர் களுக்கும் இந்தியைக் கட்டாயப் பாட மாக்கினார் ராஜாஜி. இந்த மொழியாதிக் கத்தை எதிர்த்து பெரியார்-அண்ணா தலை மையில் தமிழகத்தில் முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. பலர் சிறை சென்றனர். இரண்டாம் உலகப்போரில் இந்தி யாவை பிரிட்டிஷ் அரசு வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தியதைக் கண்டித்து காங்கிரஸ் அரசு ராஜினாமா செய்தது.

1946-ஆம் ஆண்டு நடைபெற்ற சென்னை மாகாண தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. டி.பிரகாசம் 1946 ஏப்ரல் 30-ஆம் நாள் முதலமைச்சரானார். இவரையடுத்து, ஓமந்தூர் ராமசாமி ரெட்டி யார் முதல்வரானார். இந்தியா சுதந்திரமடைந்த போது சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் ஓமந்தூரார்தான். அவர் ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டம் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றைக் கொண்டு வந்தார். 1949-ல் சென்னை மாகாண கவுன்சிலுக் கான தேர்தல் நடந்தது. இதிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெற்றது. குமாரசாமி ராஜா முதல்வரானார். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெறுகிறவரை இவரே முதல்வர் பொறுப்பினை வகித்தார்.

இந்திய நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் 1952-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரசுக்கு பெரும்பான்மை இல்லாதபோதும், பல கட்சி களின் ஆதரவுடன் 1952-ஆம்ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் சென்னை மாகாண முதல்வராக ராஜாஜி பதவியேற்றார். தன்னுடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாகாணத்தில் நிலவி வந்த உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதில் ராஜாஜி அக்கறை செலுத்தினார். பண்ணையாள் பாது காப்பு சட்டத்தின் மூலமாக விவசாயத் தொழி லாளர்களுக்குநலன் விளைவித்தார் ராஜாஜி. அவருடைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட குலக்கல்வித் திட்டம் பெரும் சர்ச்சையையும் போராட்டத்தையும் உண்டாக் கியது. இதனால் 1954-ஆம் ஆண்டு மார்ச் 25-ஆம் நாள் முதல்வர் பதவியிலிருந்தும் காங் கிரஸ் கட்சியிலிருந்தும் ராஜாஜி விலகினார்.

அவரைத் தொடர்ந்து தமிழகத்தின் முதல் வராகப் பொறுப்பேற்ற காமராஜர் 1954 முதல் 1963 வரை தமிழகத்தின் முதல்வராகப் பணி யாற்றினார் 1957, 1962 தேர்தல்களில் இவ ரது தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியே வெற்றி பெற்றது. இலவச கல்வி, மதிய உணவுத் திட்டம், தமிழ் ஆட்சிமொழி சட்டம்,. வைகை நீர்த்தேக்கம், அமராவதி- சாத்தனூர் -கிருஷ்ண கிரி -மணிமுத்தாறு-ஆரணியாறு நீர்த்தேக்கங் கள் உருவாக்கம், குந்தா நீர் மின்திட்டம் ஆகியவை இவரது ஆட்சியில் உருவானவை யாகும். மத்திய அரசுடன் வாதாடி,நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கம், பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை, திருச்சி பாரத் மிகுமின் நிலையம், ஆவடி கனரக வாகன தொழிற் சாலை, ஊட்டி கச்சா பிலிம் தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவரது ஆட்சிக்காலம் தமிழகத்தின் பொற்காலம் எனப்படுகிறது.

மூத்தவர்கள் பதவி விலகி, புதியவர்களுக்கு வழிவிடுவது என்ற அவரது திட்டத்தின்படி முதல்வர் பதவியிலிருந்து காமராஜர் விலகிய தால் 1963-ல் பக்தவத்சலம் முதல்வரானார். இவ ரது ஆட்சிக்காலத்தில் இரண்டாவது இந்தி எதிர்ப்பு போராட்டம் தீவிரமடைந்தது. மாண வர்கள் போர்க்கோலம் பூண்டனர். இவரே காங்கிரசின் கடைசி முதல்வர்.

1967-ஆம் ஆண்டு நடந்த நான்காவது பொதுத்தேர்லில் தி.மு.க வெற்றிபெற்று தமிழகத்தின் முதல்வராக அண்ணா பொறுப் பேற்றுக் கொண்டார். இரண்டாண்டுகளுக் கும் குறைவாகவே ஆட்சி செய்த அண்ணா, நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயரைச் சூட்டினார். சீர்திருத்த திருமணச் சட்டம், இரு மொழித் திட்டம், ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி, போக்குவரத்து நாட்டுடைமை, இரண் டாம் உலகத்தமிழ் மாநாடு ஆகியவை இவரது ஆட்சியின் சாதனைகளாகும். 1969 பிப்ரவரி 3-ஆம் நாள் அண்ணா காலமானார்.

அண்ணாவின் மறைவையடுத்து 1969-ல் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் மு.கருணாநிதி, 1969-1971, 1971-76, 1989-91, 1996-2001, 2006 முதல் தற்போது வரை என 5 முறை தமிழக முதல்வராகப் பொறுப் பேற்றுள்ளார். இதில் இரண்டு முறை அவரது ஆட்சி கலைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, பெண்களுக்கு சொத்துரிமை, சமத்துவபுரங்கள், கலைஞர் காப்பீட்டுத் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழு, மிகபிற் படுத் தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, பெண்கள் திருமண உதவித்திட்டம், குடிசை மாற்று வாரியம், கைரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட பல திட்டங்கள் இவரது ஆட்சிக்காலத்து சாதனை களாகும். தொழில்வாய்ப்புகள் பலவற்றை இவர் உருவாக்கியுள்ளார். தமிழகத்தில் முதல் முறையாக மதுவிலக்கைத் தளர்த்தியது இவரது ஆட்சியே. மாநிலத்தில் உள்ள பல பாலங்கள், கட்டிடங்கள் இவரது ஆட்சியில் கட்டப் பட்டவை. வள்ளுவர்கோட்டம், பூம்புகார் கலைக்கூடம், குமரிமுனையில் வள்ளுவர் சிலை ஆகியவை இவர் படைத்த பண்பாட்டுச் சின்னங்களாகும்.

தி.மு.கவிலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். தனது தலைமையில் அ.தி.மு.க என்ற கட்சியைத் தொடங்கினார். 1977-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தின் முதல்வரானார். 1977-1980, 1980-1984, 1984-1987 எனத் தொடர்ச்சியாக 3 முறை வெற்றி பெற்று 11 ஆண்டுகள் முதல்வர் பொறுப்பை வகித்து இயற்கையெய்தும் வரை அதே பொறுப்பில் இருந்தவர். சத்துணவுத் திட்டம், ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், புகளூர் காகித தொழிற் சாலை ஆகியவை இவரது ஆட்சியின் சாதனை களாகும். சுயநிதி தொழிற்கல்லூரிகள் இவரது ஆட்சிக்காலத்தில்தான் தோன்றின. ஏழை- எளிய மக்களின் நலனை மனதிற்கொண்டு இவர் ஆட்சி செய்தார்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பின் அவரது துணைவியார் வி.என்.ஜானகி முதல்வரானார். இவரால் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை. ஆட்சி கலைக்கப் பட்டது. 1991-ல் நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் வெற்றி பெற, செல்வி ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வரானார். 1991-96, 2001-2006 என இருமுறை முதல்வராகி 10 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி செய் துள்ளார். இடையில், சட்டச்சிக்கல் காரண மாக இவரது பதவி பறிபோனதால் 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் வரை ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தார். வழக்குகளில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார் ஜெயலலிதா. அனைத்து மகளிர் காவல்நிலையம், கோவில் களில் அன்னதானம், மழை நீர் சேகரிப்பு திட்டம், லாட்டரி சீட்டு ஒழிப்பு, சென்னைக்கு வீராணம் குடிநீர் ஆகியவை இவரது ஆட்சியில் நிறைவேற்றப் பட்ட திட்டங் களாகும். சந்தன கடத்தல் வீரப்பன் சுட்டுக் கொலை, காஞ்சி சங்கராச் சாரியார் கைது ஆகியவை ஜெயலலிதா ஆட்சியின் அதிரடி நடவடிக்கைகளாகும். பொடா சட்டத்தைப் பயன்படுத்தி நக்கீரன் ஆசிரியர் கோபால், அரசியல் தலைவர்கள் வைகோ, நெடுமாறன் ஆகியோரை கைது செய்தது, அரசு ஊழியர் கள் மீதான நடவடிக்கைகள், ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீச்சு, ஆளுநர் மீது தாக்குதல், மகாமக குளத்தில் ஏற் பட்ட பலிகள், விவசாயிகளின் பட்டினிச் சாவு, நெசவாளர்கள் கஞ்சித் தொட்டி திறந்த அவலம், வளர்ப்பு மகன் ஆடம்பரத் திரு மணம் ஆகியவை இவரது ஆட்சி மீது கடும் விமர்சனத்தை உண்டாக்கின.

தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி அமைந்ததால் பல திட்டங்கள் நிறைவேற்றப் பட்டுள்ள அதே வேளையில், காவிரி பிரச் சினை, முல்லைப்பெரியாறு பிரச்சினை, பாலாற்று விவகாரம் , கச்சத்தீவு ஒப்பந்தம் என தமிழகத்தின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்பது சாத்தியமற்றதாகவே உள்ளது. ஜன நாயகத்தில் ஆளுங்கட்சியின் செயல்பாடு களுக் குத் தூண்டுகோலாக அமைவது எதிர் கட்சி களின் செயல்பாடுகளேயாகும். காங்கிரஸ் அரசில் கொண்டுவரப்பட்ட பண்ணையாள் பாதுகாப்பு சட்டம், ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம், தி.மு.க ஆட்சியில் கொண்டுவரப்பட்ட கூலி உயர்வுச் சட்டம், நில உச்சவரம்பு சட்டம் ஆகியவை விவசாயிகளின் நலனுக்காக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தொடர்ந்து நடத்தி வரும் போராட்டங்களின் விளைவுகளே. மிக பிற்படுத்தப்பட்டோருக்கு 20% இடஒதுக்கீடு கிடைத்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சி (வன்னியர் சங்கம்) நடத்திய போராட்டங்களே அடிப்படை. தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமைகளைப் பெறுவதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட் டவை தொடர்ந்து போராடி வருகின்றன. சிறு பான்மை அமைப்புகள், சமுதாய இயக்கங் கள் ஆகியவை நடத்தும் போராட்டங்களின் தாக்கம் அரசின் திட்டங்களை விரைவுபடுத்து கின்றன. எனவே, ஆட்சியில் பங்கு பெற முடியா விட்டாலும் மக்களுக்கானப் போராட்டங் களை நடத்தும் கட்சிகள் தங்கள் கொள்கை களில் வெற்றி பெறுகின்றன.

நீதிக்கட்சி-காங்கிரஸ் – தி.மு.க- அ.தி.மு.க ஆகிய கட்சிகள் தமிழகத்தை இதுவரை ஆட்சி செய்துள்ளன. இந்த ஆட்சிகளில் நிறைவேற்றப் பட்ட திட்டங்களினால் சமூகநீதி-சமுதாய நல்லிணக்கம்- தனிநபர் வளர்ச்சி- புதிய தொழில்நுட்பம்- ஏழைகளுக்கான நலத் திட்டங்கள்- புதிய முதலீடுகள்-பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றில் தமிழகம் இந்தி யாவின் பல மாநிலங்களுக்கும் முன்னோடி யாகத் திகழ்கிறது. பரவலான தொழில் வாய்ப்பு கள், நீராதாரங்களைப் பெருக்குதல், சிறு தொழில் வளர்ச்சி, வேளாண் உற்பத்தி போன்ற துறைகளில் பல படிகள் முன்னேற வேண்டி யுள்ளது. சுயநலன், ஊழல், அரசியல் காழ்ப் புணர்ச்சி, தனிநபர் மீதான தாக்குதல் இவற் றைப் பின்தள்ளி மாநில நலனை ஆளுங் கட்சியும் எதிர்க்கட்சிகளும் மனதில் கொண்டு செயல்பட்டால் தமிழகம் அனைத்து துறைகளிலும் முதலிடம் பெற்ற மாநிலமாகத் திகழும்.

370 பாஸ்வேர்டுகளுக்கு ட்விட்டர் தடை

சோஷியல் நெட்வொர்க் தளமான ட்விட்டர் 370 பாஸ்வேர்டுகளுக்குத் தடை விதித்துள்ளது. எளிதாக யாரும் கண்டுகொள்ளத்தக்க வகையில் உள்ள பாஸ்வேர்டுகளாகச் சிலவற்றை ஒதுக்கியுள்ளது. எடுத்துக்காட்டாக 123456 மற்றும் Password என்பவை எல்லாம் மற்றவர்கள் எளிதில் கண்டுகொள்ளத்தக்க சொற்களாகும். இதே போல பிரபலமான கார்களின் பெயர்கள் மற்றும் மக்கள் அன்றாடம் சந்திக்கும் சொற்களையும் இந்த பட்டியலில் கொடுத்துள்ளது. நல்ல பாஸ்வேர்ட் ஒன்று எழுத்துக்கள், இலக்கங்கள் மற்றும் சிறப்புக் குறியீடுகள் ஆகியவை கலந்ததாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

சிஸ்டத்தைச் சரிப்படுத்த எம்.எஸ்.கான்பிக்

கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்படுகையிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையிலும், நமக்குக் கிடைக்கும் அறிவுரை எம்.எஸ். கான்பிக் மூலம் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே. அது மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆக அதிக நேரம் ஆகின்றதா? ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் இயங்கத் தொடங்குவதைக் காண நீங்கள் வெகுநேரம் மானிட்டர் திரையை உற்று நோக்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதா? காத்திருத்தல் என்பது மனத்தளவில் ஒரு சித்திரவதை என்று ஆல்டஸ் ஹக்ஸ்லி என்ற அறிஞர் கூறியது அப்போது தான் எவ்வளவு உண்மை என்று புரிகிறதா? இதற்கெல்லாம் ஓர் அருமருந்தாக நமக்குக் கிடைத்திருப்பதுதான் எம்.எஸ். கான்பிக் (MSConfig) என்னும் செயல்பாடு. இந்த பயன்பாட்டில் அடங்கியுள்ள செயல்பாடுகளை இங்கு பார்க்கலாம்.MSConfig என்பது Microsoft System Configuration Utility ன்பதன் சுருக்கமாகும். இதுவே விண்டோஸ் விஸ்டாவில் System Configurationஎன்று அழைக்கப் படுகிறது. இது ஒரு டூல்; சிஸ்டத்தைச் சரிப்படுத்த விண்டோ நமக்கு தரும் சாதனம். விண்டோஸ் 98, எக்ஸ்பி, விஸ்டா ஆகிய சிஸ்டங்களில் இது இணைந்தே கிடைக்கிறது. விண்டோஸ் 2000 சிஸ்டம் வைத்திருப்பவர்கள், இந்த டூலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இப்போது இந்த சிஸ்டத்தினை சிலர் இன்னும் பயன்படுத்தி வருவதால் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.

எம்.எஸ். கான்பிக் விண்டோவினைத் திறக்க, ஸ்டார்ட் அழுத்தி ரன் பாக்ஸில் msconfig என டைப் செய்து என்டர் அழுத்த வேண்டும். உடனே ஐந்து டேப்கள் அடங்கிய விண்டோ ஒன்று கிடைக்கும்.

ஜெனரல் டேப் General): இது முதலில் காணப்படும் டேப். இதில் மூன்று Normal Startup, Diagnostic Startup மற்றும் Selective Startup – பிரிவுகள் உண்டு. நாம் எதிர்பார்த்தபடி சிஸ்டம் இயங்குகையில் நார்மல் ஸ்டார்ட் அப்பினைப் பயன்படுத்துகிறோம். டயக்னாஸ்டிக் ஸ்டார்ட் அப் பிரிவினை நாம் எதிர்பாராத வகையில் சிஸ்டம் இயங்குகையில், அதனை ஆய்வு செய்திடப் பயன்படுத்துகிறோம். நாம் தேர்ந்தெடுத்த சில புரோகிராம்களின் இயக்கத்துடன், சிஸ்டம் இயக்கத்தினைத் தொடங்கிட செலக்டிவ் ஸ்டார்ட் அப்பிரிவைப் பயன்படுத்துகிறோம்.

பூட் (Boot):இந்த டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில், நாம் கம்ப்யூட்டரில் அப்போது இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டுகிறது. அத்துடன் அந்த சிஸ்டங்களை, நாம் விரும்பும் வகையில் இணைந்து செயல்பட வைத்திட வழி தருகிறது. Safe Boot, Boot Log, Time out Delay ஆகியவற்றை இங்கு மாற்றி அமைக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து அவ்வளவாகத் தெரியாதவர்கள், இந்த பிரிவினைக் கவனமாகக் கையாள வேண்டும். எதனையும் தேவையின்றி மாற்றுவதனைத் தவிர்க்க வேண்டும்.

சர்வீசஸ் (Services) : நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் இங்கு பட்டியலிடப்படும். மேலும் அப்போது அவை இயங்குகிறதா, நிறுத்தப்பட்டுள்ளதா (Running, Stopped) என்றும் காட்டப்படும். எந்த சர்வீஸ் பிரிவினையும் தேர்ந்தெடுத்து, அந்த இயக்கத்தினை தொடங்கவும், முடக்கவும் (Enable or Disable) செய்திடலாம். “Hide all Microsoft services” என்பதன் முன் டிக் அடையாளம் அமைத்துவிட்டால், மற்றவர்கள் இவற்றில் தேவையில்லாமல் மாற்றங்கள் செய்வதனைத் தடுத்துவிடலாம். மேலும் தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கி நம் மெமரியில் இடம் பிடிப்பதனை, இந்த பட்டியலில் அதன் இயக்கத்தினை முடக்கி வைத்து தவிர்க்கலாம்.

ஸ்டார்ட் அப் (Startup) : இந்த டேப்பில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில், கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கத் தொடங்கும் பட்டியல் கிடைக்கும். சிஸ்டம் ட்ரேயில் இருக்கும் புரோகிராம்களும், சிஸ்டம் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களும் இந்த பட்டியலில் இருக்கும். பொதுவாகப் பலரின் கம்ப்யூட்டர்களில் போன்ற புரோகிராம்களை ஸ்டார்ட் அப் புரோகிராம்களாகப் பார்க்கலாம். இவற்றில் தேவை இல்லாததை நீக்கினால், கம்ப்யூட்டர் பூட் ஆவது விரைவில் நடக்கும்.

டூல்ஸ் (Tools) இயக்கத்தினுள்ளாக பல்வேறு டூல்ஸ்களை (எ.கா. System Information, Programs, System Restore போன்றவை) இயக்கு வதற்கான தளம் இது. சரி, அடுத்து எப்படி எம்.எஸ். கான்பிக் இயக்கி, சிஸ்டம் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்கலாம் என்று பார்க்கலாம். இதனை ஓரளவிற்கு சிஸ்டம் இயங்கும் தன்மையினை அறிந்தவர்கள் மட்டுமே செய்திட வேண்டும். (நமக்கா தெரியாது! என்று முடிவு செய்து பின் சிக்கலில் சிக்கி, கம்ப்யூட்டர் மலர் மீது பழி போட வேண்டாம்.)

முதலில் ஸ்டார்ட் அப் தொடங்கும்போதே தேவையான சர்வீசஸ் எவை எவை என தெரிந்து கொள்ளவும். அதே போல ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் என்ன என்ன வேண்டும் என்பதனையும் முடிவு செய்திடவும். இதனை ஓரளவு எண்ணிக்கை குறைவாகவே வைத்துக் கொள்ளவும். அடிப்படையில் மிகவும் முக்கியத் தேவைகளையும், கட்டாயம் பயன்பாட்டிற்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்ளவும். அடுத்து ரன் மெனு சென்று எம்.எஸ்.கான்பிக் டைப் செய்து பெறவும். சர்வீசஸ் டேப் கிளிக் செய்து தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்களை முடக்கி (Disable) வைக்கவும். “Hide all Microsoft Services” என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ள தனை உறுதி செய்திடவும். அடுத்து ஸ்டார்ட் அப் டேப் கிளிக் செய்து தேவையற்ற அப்ளிகேஷன் புரோகிராம்களை நீக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும் என்ற செய்தி கிடைத்தவுடன், அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடி, விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது ஸ்டார்ட் அப் நேரம் கணிசமாகக் குறைந்திடும். எந்த அளவிற்கு புரோகிராம்களை நீக்கி, குறைந்த எண்ணிக்கையில் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் தொடங்கும்போது ஆரம்பிக்கும் வகையில் வைத்துள்ளீர்களோ, அந்த அளவிற்கு நேரம் குறையும். மீண்டும் ஏதேனும் புரோகிராம், ஸ்டார்ட் அப் செய்திடும்போதே தேவை என்றால், எம்.எஸ். கான்பிக் சென்று, ஸ்டார்ட் அப் போல்டரில் அந்த புரோகிராம்களின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்.

பாக்கெட் உணவுகளில் கலோரி மிக அதிகம்

வர்த்தக ரீதியாக தயாரித்து, பேக் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் உணவுப் பொருட்களில், அதன் லேபிள்களில் குறிப்பிட் டுள்ளதை விட அதிகளவு கலோரிகள் இருப்பதாக, அமெரிக்காவில் நடைபெற்ற ஆய்வில் கண்டறிந் துள்ளனர்.

இதுகுறித்து, அமெரிக்க உணவு முறையாளர் கூட்டமைப்பின், பத்திரிகை ஒன்றில் வெளியிட்டுள்ள செய்தி:உடல் எடையை குறைக்க விரும்பும் மக்கள், குறைந்த கலோரிகள் நிறைந்த உணவை சாப் பிட பரிந்துரைக்கப்படுகின்றனர்.அதற்காக, மக்கள், பேக்கேஜ் உணவுப் பொருட்களில் லேபிள் களில் கொடுக்கப்பட்டிருக் கும், கலோரி அளவுகளை பார்த்து வாங்குகின்றனர். இதில், வர்த்தக ரீதியாக தயாரித்து விற்கப்படும் உணவுப் பொருட்களின் லேபிள்களில் அளிக்கப் பட்டிருக்கும் தகவல்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும்.

ஆனால், இது தொடர் பாக, சில உணவகங்களில் மேற்கொள்ளப் பட்ட ஆய்வில், அனைத்து உணவுப் பொருட்களிலும், குறிப்பிட்டுள்ள அளவை விட, 18 சதவீதம் அதிகமாக இருப்பது கண்டுபிடிக் கப் பட்டது.இதிலிருந்து, ரெஸ்டாரன்ட்டுகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் இருந்து வாங்கப்படும், பேக்கேஜ்உணவுப் பொருட் களில், குறிப்பிட்டுள்ள அளவை விட, அதிகளவில் கலோரிகள் இருப்பது தெரியவந்துள்ளது.இவ்வாறு, மக்கள் தங்களுக்கு தேவைப்படும் அளவை விட கூடுதல் கலோரி நிறைந்த உணவை சாப்பிடும் போது, அவர்கள் உடல் எடை அதிகரிக்க வழி வகுக்கிறது. இவ்விவகாரம், ஒருவர் தங்கள் உடல் எடையை கட்டுப்படுத்த, உண்ணும் உணவால் கிடைக்கும் ஆற்றலை கணக்கிட முடியாததோடு, அதனால் கிடைக்கும் ஆதாயமும் பாதிக்கப்படுகிறது.இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

எலுமிச்சையின் மருத்துவ குணம்

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும்.

குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும்.
குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும். தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்களை நீக்கி சுத்தப்படுத்தும்.
எலுமிச்சை ஒரு ஜீவக் கனி என்று கருதப்படுகிறது. பல்வேறு அரிய சக்திகளைக் கொண்டது எலுமிச்சை. அப்படிப்பட்ட எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் பற்றி அறியலாம்.
தினமும் ஒரு எலுமிச்சை பழம் சாப்பிட்டுவந்தால் அதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள ரத்தத்தை சுத்தப்படுத்துவதோடு உடல் திறனை வலுப்படுத்துகிறது.
தொற்று வியாதிகளை எதிர்த்துபோரிடும் திறன் கொண்டது.
சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு உடலில் இருக்கும் புண்கள் அழுகிப் பெரிதாகாமல் இருக்க உதவுகிறது. இதற்கு தோலின் மேற்பரப்பில் எலுமிச்சை பழச்சாற்றை தேய்த்தாலோ, அல்லது பருகினாலோ பலன் கிடைக்கும்.
காயம் ஏற்படும்போது ரத்தம் வடிவதையும் எலுமிச்சம் பழம் கட்டுப்படுத்தும்.

குறுக்குத் தையல்

தேவையானப் பொருட்கள்
அய்டா ஃபேப்ரிக்(aida fabric) – 3″ X 3″ அளவானது
சிறிய ஃபிரேம் – 1 ஊசி எம்பிராய்டரி நூல்கள் – டார்க் பிங்க், லைட் பிங்க், டார்க் பச்சை, லைட் பச்சை, இலை பச்சை
இதற்கு தனி குறுக்குத் தையல் (Single Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும்.

இதற்கு வரி குறுக்குத் தையல் (A row of cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். பின்னர் பின்புறமாக நூலை நேராக இறக்கி எண் 3 ன் வழியே வெளிக் கொண்டு வரவும். அதன்பின்னர் அடுத்த கட்டத்தில் குறுக்கே எண் 4 நோக்கி செல்லவும். இப்படியே தேவையான வரை தொடர்ந்து பின்னர் அதே முறையில் பின்னோக்கி வரவும். படத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்களை வரிசைப்படி தொடரவும்.

இதற்கு அரை குறுக்குத் தையல் (Half Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி (எண் 2) செல்லவேண்டும். அவ்வளவுதான். இதையே மேலிருந்து ஆரம்பித்து கீழ்நோக்கி கொண்டு வரலாம்.

இதற்கு கால் குறுக்குத் தையல் (Quarter Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் இடப்பக்கம் கீழ் (எண் 1) இருந்து ஆரம்பித்து குறுக்கே மேல்நோக்கி சதுரத்தின் மையம் (C) வரை செல்லவேண்டும். அதாவது பாதி தூரம் (எண் 2) வரை சென்றால் போதும்.

இதற்கு முக்கால் குறுக்குத் தையல் (Three-quarters Cross stitch) என்று பெயர். படத்தில் காட்டியுள்ளவாறு, ஒரு சதுரத்தின் ஏதேனும் ஒரு கீழ் பக்கத்தில் (எண் 1) இருந்து தொடங்கி, குறுக்கே மேல்நோக்கி எண் 2 வரை செல்லவும். அதன்பின்னர் பின்புறமாக, நேரே கீழாக எடுத்து வந்து, எண் 3 வழியே வெளிக்கொணரவும். அதில் இருந்து குறுக்கே சதுரத்தின் மையம் வரை செல்லவும்.

தையலுக்கு BASEஆக பிளாஸ்டிக் பாட் (Palstic Pad), அய்டா ஃபேப்ரிக்(Aida Fabric), லினன் ஃபேப்ரிக் (Linan Fabric) போன்றவற்றைப் பயன்படுத்தலாம். பெரிய படங்கள் செய்து ஃபிரேம் செய்வதாயின் அய்டா ஃபேப்ரிக்தான் மிகவும் வசதியானது. இதில் தைப்பதும் மிக இலகு. முதன் முதலில் தைக்கத் தொடங்குபவர்கள் இதில் ஆரம்பிப்பது நல்லது. இந்த பேப்ரிக்கிலும் 11Count, 14 Count, 16 Count, 18 Count, 22 Count என வகைகள் உண்டு. Count என்பது ஒரு அங்குலத்தில் எத்தனை குறுக்கு நூல்கள் ஓடுகின்றன என்பதைக் குறிக்கும்.

தைப்பதற்கு எம்பிரொய்டரி நூல்(Embroidery floss), வூல் நூல்(Wool thread), யார்ன் (yarn) ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இந்த தையலை தைப்பதற்கென்றே முனை மழுங்கிய, நீண்ட கண்(துளை) உள்ள ஊசிகள் (tapestry needle) இருக்கின்றன.

முதலில் மாதிரிக்கு தையல் (கார்னேஷன் பூ) விளக்கப் படம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். படத்தில் காட்டியவாறு துணியில் மார்க் செய்துவிட்டு அதன் மீதும் தைக்கலாம் அல்லது தையலை எண்ணி அதற்கேற்றவாறு தைக்கலாம்.

முதலில் பூ இதழ்களை குறுக்குத் தையலால் தைக்கவும். தைப்பதற்கு இரட்டை நூலைப் பயன்படுத்தவும்.

தைத்துக்கொண்டிருக்கும் போது இடையில் நூல் முடிந்துவிட்டால் முடிச்சு போட வேண்டாம். பதிலாக பின்னால் திருப்பி, ஏற்கனவே தைத்த தையலினூடாக கோர்த்து எடுத்து விடவும்.

பூவை முழுவதும் தைத்து சிறிய ஃபிரேமில் போட்டு பிளைன்ட் (Blind)கயிறில் கட்டிவிட்டால் பார்ப்பதற்கு கைப்பிடி போல மிகவும் அழகாக இருக்கும். இதே பூவை லேடீஸ் பான்ட் பாக்கட்டில், தலைகாணி உறையில் அல்லது சிறுவர்களின் ஆடைகளிலும் போடலாம். மிகவும் அழகாக இருக்கும்.

மனதில் உறுதி வேண்டும்! (ஆன்மிகம்) -ஜன., 23 – பீஷ்மாஷ்டமி!

வாழ்வில் வெற்றி பெற மனிதனுக்கு மனஉறுதி வேண்டும். இதற்கு, உதாரண புருஷனாகத் திகழ்ந்தவர் பீஷ்மர். இவரது மறைவு தினத்தை பீஷ்மாஷ்டமி என்ற பெயரில் அனுஷ்டிக்கின்றனர். இது ஒரு முக்கிய தினம். பொதுவாக, தாய், தந்தையை இழந்தவர்கள் தான், அவர்கள் இறந்த திதியன்று தர்ப்பணம் செய்வது வழக்கம்; ஆனால், பீஷ்மர் மறைந்த நாளில், அனைவருமே அவருக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது விதி. காரணம், அவர் பெற்ற தந்தையின் சுகத்துக்காக, தன் சுகங்களை அர்ப்பணித்தவர். தந்தைக்காக திருமணம் செய்யாமல் காலம் கழித்தவர். அந்த பிதாமகருக்கு பிள்ளைகளாக இருந்து தர்ப்பணம் செய்வது நமது கடமை.
கங்காதேவியை விரும்பி திருமணம் செய்தான் சந்தனு என்னும் மன்னன். திருமணத்தின் போது, “நான் என்ன செய்தாலும் எதிர்த்து கேள்வி கேட்கக்கூடாது; அந்த மனதிடம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து கொள்வேன்!’ என நிபந்தனை விதித்தாள் கங்காதேவி. கங்காதேவியின் அழகில் லயித்த சந்தனுவும் இதற்கு சம்மதித்தான். பெற்ற குழந்தையை ஆற்றில் வீசினாள் கங்காதேவி. சந்தனுவுக்கோ, நிபந்தனையால் அவளைத் தட்டிக் கேட்க முடியவில்லை.
எட்டாவது பிள்ளையை அவள் ஆற்றில் எறிய முயன்ற போது, அவளைத் தட்டிக் கேட்டான். நிபந்தனையை மீறியதால், குழந்தையுடன் வெளியேறினாள் கங்காதேவி. தான் எறிந்த குழந்தைகள் தேவலோகத்தைச் சேர்ந்தவை என்றும், ஒரு சாபத்தால் அவர்கள் தன் வயிற்றில் பிறந்து, பிறவியை உடனே முடித்துக்கொண்டனர் என்றும் கூறிய அவள், எட்டாவது குழந்தையை தன் பொறுப்பிலேயே வளர்த்து, வாலிபனானதும் சந்தனுவிடம் ஒப்படைப்பதாகக் கூறி தண்ணீரில் மறைந்தாள். அந்தக்குழந்தை, தேவவிரதன் எனப்பட்டான்.
வாலிபனானதும் தந்தையிடம் திரும்பினான். வயதாகி விட்டாலும், சந்தனுவுக்கு இளமை வேகம் குறையவில்லை. அவன் யோஜனகந்தி என்ற பெண்ணை விரும்பினான். பெண்ணின் தந்தையோ, தன் மகளுக்கு பிறக்கும் குழந்தைக்கே பட்டம் சூட்ட வேண்டுமென்றும், தேவவிரதனுக்கு பட்டம் சூட்டக் கூடாதென்றும் நிபந்தனை விதித்தான்.

ஒருவேளை, தேவவிரதனுக்கு திருமணமாகி குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை பதவிக்கு முயற்சிக்கலாம் என்ற பேச்சு எழுந்த போது, தன் தந்தைக்காக திருமணமே செய்ய மாட்டேன் என்றும், யோஜனகந்திக்கு பிறக்கும் மகனே அரசன் ஆவான் என்றும் உறுதியளித்தான். தன் தந்தையின் சுகமே தன் சுகம் என்று, வயதான காலத்திலும் காதல் கொண்ட தந்தைக்காக தன் சுகங்களைத் தியாகம் செய்தான். இப்படிப்பட்ட தியாக உள்ளம் கொண்ட பிள்ளையின் மீது தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர்; “பீஷ்மன்’ என்ற பட்டத்தை வழங்கினர். பீஷ்மன் என்றால், மனஉறுதி கொண்டவன் எனப்பொருள். அவர் நினைத்தால் மட்டுமே மரணம் வரும் என்ற வரத்தையும் கொடுத்தனர்.
இந்த தியாகச் செம்மல், பாரதப்போரில் கவுரவர்களுக்காக போரிட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. முடிவில், அர்ஜுனனின் பாணத்துக்கு அடிபட்டு அவர் மரணப்படுக்கையில் இருந்தார். மனிதனாகப் பிறந்தவன் மரணமடைய வேண்டும் என்ற நியதிக்கு கட்டுப்பட்டு, வடக்கு நோக்கி சூரியன் பயணத்தைத் துவங்கும் தை மாதத்தில் உயிர்விட தீர்மானித்தார். தை மாதம் வளர்பிறை அஷ்டமி திதியன்று மறைந்தார் என்பதால், பிள்ளையற்ற இவருக்கு, பிள்ளைகளாக இருந்து நாமெல்லாம் அந்நாளில் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
அன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம், பாபநாசம் போன்ற தீர்த்தக்கரைகளுக்குச் சென்று அனைவரும் தர்ப்பணம் செய்து, அந்த பிதாமகரின் தியாக உள்ளம் நமக்கும் வர பிரார்த்திப்போம்.